Followers

Wednesday, December 9, 2020

 

"நீ குருவை தேடி அலையாதே.  குரு உன்னைத் தேடி வருவார்.



உங்களைத் தேடி அவன் வருவான். எப்போது?


உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
 
இந்தப் பாடலை அருஞ்சொற் பொருளை பார்த்து விடுவோம்.
 
பொருள் / கருத்து.
 
உருவாய் = உருவத்துடன்
 
அருவாய் = உருவம் இல்லாமல்
 
உளதாய் = இருக்கக் கூடியதாய்
 
இலதாய் = இல்லாததாய்
 
மருவாய்  = மலரின் வாசமாக
 
மலராய் = மலராக
 
மணியாய் = மணியாக
 
ஒளியாய்க் = மணியில் இருந்து வரும் ஒளியாக
 
கருவாய்  = கருவாக
 
உயிராய்க்  =உயிராக
 
கதியாய் =  வழியாக  
 
விதியாய்க் = விதியாக
 
குருவாய் = குரு வடிவில்
 
வருவாய் = வருவாய்
 
அருள்வாய் = அருள் செய்வாய்
 
குகனே. = முருகா
 
கடினமான சொல் ஒன்றும் இல்லை.
 
இதில் என்ன புதிதாக கண்டுவிட்டேன் என்று கேட்கிறீர்களா?
 
"குருவாய் வருவாய்"
 
நாம் இறைவனை, உண்மையை தேடி அலைகிறோம். நிறைய புத்தகங்கள் வாசிக்கிறோம். பலர் சொல்வதைக் கேட்கிறோம். நமக்கு இவர் தான் குரு, ஆச்சாரியார்  என்று ஒருவரை ஏற்றுக் கொண்டு அவர் சொல்கிற படி கேட்கிறோம். துறவிகள், சாமியார்கள், உபன்யாசம் செய்பவர்கள் என்று எவ்வளவோ பேர்.  இப்போதெல்லாம், youtube வந்து விட்டது. வீட்டில் இருந்த படியே  அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்ள முடியும்.
 
இருந்தும் ஒன்றும் ஆன மாதிரி தெரியவில்லை. அது ஒரு பாட்டுக்கு போகிறது. வாழ்க்கை இன்னொரு பக்கம் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.
 
#அருணகிரிநாதர் சொல்கிறார்.
 
"நீ குருவை தேடி அலையாதே.  குரு உன்னைத் தேடி வருவார். நீ எப்போது பக்குவப் படுகிறாயோ அப்போது  குரு உன்னைத் தேடி வருவார்" என்று.
 
ஆங்கிலத்தில் சொல்லுவார்கள், "The teacher will appear when the student is ready" என்று.
 
நீங்கள் தேடி கண்டுபிடிக்கும் யாரும் உங்கள் குரு அல்ல. உங்களுக்கு எப்படித் தெரியும், அவர் தான் குரு என்று?
 
"வருவாய்" அவனே வருவான்.
 
வருவான் என்று எப்படி சொல்ல முடியும்? என்ன உத்தரவாதம் இருக்கிறது?
 
'கதியாய் விதியாய்"
 
"உன் விதிப்படி அவன் வருவான். உனக்கு எப்போது விதித்து இருக்கிறதோ, அப்போது வருவான். வந்து உன்னை நல்ல கதிக்கு கொண்டு செல்வான். "
 
சரி, எப்படி வருவான்?  எந்த வடிவில் வருவான் ?
 
எனக்கு எத்தனையோ குரு மார்கள். பாடம் சொல்லித் தந்தவர்கள் சிலர். வாழக்கையை சொல்லித் தந்தவர்கள் சிலர்.  வழி கட்டியவர்கள் சிலர். அவன் எப்படி  வேண்டுமானாலும் வருவான்.
 
புரியலையே !
 
"உருவாய்"
 
அவன் மானிட உருவில் வருவான்.
 
"அருவாய்"
 
உருவம் இல்லாமல் வருவான். அது எப்படி உருவம் இல்லாமல் வருவான்? அப்படி வந்தால்  நாம் எப்படி அவனை அறிய முடியும்?
 
ஒரு உயர்ந்த புத்தகத்தை வாசிக்கிறீர்கள், நல்ல சொற்பொழிவை கேட்கிறீர்கள், நாள் எழுத்தை வாசிக்கிறீர்கள்...உங்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்கிறது. 'சே, இது தெரியாமல் இத்தனை நாள் வாழ்ந்து விட்டேனே..இனியாவது  கொஞ்சம் மாற வேண்டும் " என்று நினைக்கிறீர்கள் அல்லவா....அந்த எழுத்துதான் உங்கள் குரு. அதற்கு மானுட வடிவம் இல்லை. ஒளி வடிவம், ஒலி வடிவில் வந்து அருள் தருவான்.
 
ஏதோ ஒரு வழியில். அருவமாக வந்து அருள் தருவான்.
 
மருவாய், மலராய்
 
மலர் தெரியும், அதன் வாசம் தெரியுமா? சில சமயம் வாசம் மட்டும் வரும், எங்கிருந்தோ.  அது போல, ஆள் தெரியாது, எங்கிருந்து, எப்படி வருகிறது என்று தெரியாது.  அவன் அருள் வந்து சேரும்.
 
மணியாய் ஒளியாய்
 
மணி தெரியும். அதன் உள்ளே ஆடும் அதன் நா தெரியும். அது ஆடுவது தெரியும். ஒலி தெரியுமா?  காதில் வந்து விழும்.  ஒரு வார்த்தை. ஒரு சொல். ஒரு வாக்கியம் ,
 
"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே"
 
என்று ஒரு வாக்கியம், பட்டினத்தாரை மாற்றிப் போட்டது.
 
அந்த வாக்கியம் தான் அவருக்கு குரு.
 
அந்த வாக்கியம் நமக்கு கிடைத்து இருந்தால், "சரி, வராட்டி போகட்டும், அதனால் என்ன" என்று ஓலையை தூக்கி குப்பையில் போட்டு விட்டு வேலையை பார்க்க போய் விடுவோம்.   பட்டினத்தாரின் மனம் பக்குவப் பட்டிருந்தது. ஒரு வாக்கியம், அருள் செய்தது.
 
"அருள்வாய் குகனே"
 
அது அருள்தான்.  காசு கொடுத்து வாங்க முடியாது. வண்டி வண்டியாக புத்தகங்களை படித்து  அறிய முடியாது. அந்த அருள், grace, வர வேண்டும்.
 
அவனே அருள்வான்.
 
ஞான சம்பந்தருக்கு மூன்று வயதில் வந்தான்.
 
திருநாவுக்கரசருக்கு 80 வயதில் வந்து அருள் தந்தான்.
 
என்ன சொல்லுவது?
 
யார் குரு என்று எப்படி அறிவது?
 
ஆதி சங்கரருக்கு புலையனாக வந்தான்.
 
சங்கரர் அறிந்தார் இல்லை.
 
அவர் பாடு அப்படி என்றால், நாம் எம்மாத்திரம்?
 
மாணிக்க வாசகருக்கு அருள் புரிய குருந்த மரத்தடியில்  ஈசர் காத்து கிடந்தார்...
 
அவன் உருவாய், அருவாய், உளதாய், இலதாய் , மருவாய், மலராய், மணியாய், ஒளியாய் எப்படி வேண்டுமானாலும் வருவான்.
 
அவன் வந்தால்தான் உண்டு. நாம் போய் கண்டு பிடிக்க முடியாது.
 
மனம் பக்குவப் பட வேண்டும்.
 
நீங்கள் தேடிப் பிடித்த எந்த குருவும் உங்கள் உண்மையான குரு அல்ல என்று தெரிகிறது அல்லவா? அவர் வேண்டுமானால் வழி காட்டலாம், அவர் ஒரு படியாக இருந்து உதவி செய்யலாம்....உண்மையான குரு, அவர் உங்களைத் தேடி வருவார். 




--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
courtesy; வாத்தியார் ayya tq
========================================

துறவறம்......................

தமது எட்டாம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

மனீஷா பஞ்சகம்..................

தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற போது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.

அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். அப்போது அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுந்து பணிகிறார் என சங்கர விஜயம் கூறுகின்றது.

உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.

இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.



==============================
ஆதி சங்கரர்...........

மே 8 சங்கர ஜெயந்தி

சங்கரர் - பெயர்க்காரணம்
ஞானபூமியான கேரளாவிலுள்ள காலடியில் தெய்வத்தம்பதியரான சிவகுரு, ஆர்யாம்பாள் சிவபெருமானிடம் குழந்தை வரம் கேட்டனர். சிவபெருமான் ஒருநாள் அவர்களுடைய கனவில் தோன்றி, ""பேர் சொல்ல பிள்ளை வேண்டுமா? அல்லது முட்டாளாக பலபிள்ளை வேண்டுமா?'' என்றார். ""இறைவா! உம் சித்தம் எம் பாக்கியம்'' என்று பதிலளித்தனர். ஒரு தெய்வீகக்குழந்தையை வைகாசி வளர்பிறை பஞ்சமியன்று ஆர்யாம்பாள் பெற்றெடுத்தார். சிவனின் திருநாமங்களில் "மங்கலத்தை அருள்பவன்' என்னும் பொருளில் "சங்கரன்' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். ஐந்துவயதில் உபநயனம் செய்வித்தனர். ஏழுவயதிற்குள் சங்கரர் வேதம், வேதாந்தம், புராணங்கள், காவியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

அம்மா கொடுத்த அனுமதி
காலடியில் இருந்த ஆற்றில் சங்கரரின் தாய் ஆர்யாம்பாளும், சங்கரரும் நீராடிக் கொண்டிருந்தனர். திடீரென, ""அம்மா! முதலை என் காலை கவ்வி விட்டதே!'' என்று கத்தினார் சங்கரர். அம்மா பதறிப் போய் நின்றார். ""தாயே! நீ என்னை சந்நியாசம் ஏற்க அனுமதித்தால், இந்த முதலை என்னை விட்டு விடும், இல்லாவிட்டால் அதற்கு இரையாகி விடுவேன்,'' என சங்கரர் கதறினார். பிள்ளை உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அம்மாவும் சந்நியாசத்திற்கு அனுமதித்தார். அந்த முதலை அழகான கந்தர்வனாக (தேவர் நிலைக்கு அடுத்த நிலையிலுள்ளவன்) மாறியது. அவன் சங்கரரை வணங்கினான். அன்று முதல் வீட்டைத் துறந்து ஞானியாகக் கிளம்பினார்.

ஜாதியில்லை பேதமில்லை
ஒருமுறை சங்கரரை புலையன் ஒருவன் பின்தொடர்ந்து வந்தான். அவன் பின்னால் நான்கு நாய்கள் வந்து கொண்டிருந்தன. அவனது கையில் கள் குடம் இருந்தது. கருப்பான அவன், குளித்து பலநாள் ஆனதால் நெடியடித்தது.
மாமிசத்தைச் சுவைத்தபடி சங்கரரை நெருங்கினான். இதைக் கண்ட சங்கரர், ""டேய், விலகிப்போடா!'' என்று எச்சரித்தார். அவன் உடனே,""நீயும் கடவுள். நானும் கடவுள். எனக்குள்ளும் உனக்குள்ளும் ஒரே ஒளியே இருக்கிறது. நான் ஏன் உன்னைக் கண்டு விலகவேண்டும்?'' என்று எதிர்கேள்வி கேட்டான். அப்போது சங்கரரின் உள்ளத்தில் ஞானஒளி தோன்றியது. "மநிஷா பஞ்சகம்' என்னும் பாடலைப் பாடினார். அப்போது அங்கிருந்த புலையன், காசிவிஸ்வநாதராக மாறி காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியின் மூலம், ஜாதியும் பேதமும் கூடாது என்ற உண்மையையும், உருவத்தைக் கண்டு யாரையும் இகழக்கூடாது என்ற உண்மையையும் சங்கரர் மூலமாக இறைவன் உலகுக்கு உணர்த்தினார்.

தங்கமழை பொழிய வேண்டுமா?
ஆதிசங்கரர் குருகுலத்தில் படித்த போது, மாணவர்கள் அன்றாடம் பிச்சை எடுத்து வந்து அதை இறைவனுக்கு நைவேத்யம் செய்து உண்பது வழக்கம். ஒருமுறை, சங்கரர் ஏகாதசி விரதம் முடித்து விட்டு, மறுநாள் துவாதசி நாளில் பிச்சைக்குப் புறப்பட்டார். அயாசகன் என்னும் ஏழை அந்தணர் வீட்டில் நின்று "பவதி பிக்ஷõம் தேஹி' (எனக்கு பிச்சையிடுங்கள்) என்று அழைத்தார். பிச்சை எடுக்கும்போது, மூன்று முறை கூப்பிட சாஸ்திரம் அனுமதிக்கிறது. அதனால் மீண்டும் இருமுறை சப்தமிட்டார். வாசலை எட்டிப்பார்த்தாள் அந்தணரின் மனைவி. பால் வடியும் முகத்துடன் பச்சிளம் பாலகனான சங்கரர் பிச்சை பாத்திரத்துடன் நின்றதைக் கண்டாள். ஏழையான அவள், தன் கணவர் ஏகாதசி விரதமிருந்து விட்டு துவாதசியன்று விரதம் முடிப்பதற்காக சாப்பிட வைத்திருந்த நெல்லிக்கனியை பிச்சைப்பாத்திரத்தில் இட்டாள். கணவனுக்கு கூட வைக்காமல், நல்ல மனதுடன் தர்மம் செய்த அவளது ஏழ்மை கண்டு கண்டு குழந்தை சங்கரரின் மனம் உருகியது. திருமகளை வேண்டி "கனகதாராஸ்தவம்' பாடினார். அவர்களின் முன்வினைப் பாவம் தீர்ந்து முற்றம் எங்கும் தங்க நெல்லிக்கனிகள் சிதறி விழுந்தன. தனக்கென இல்லாமல் பிறர்க்கென வாழும் அனைவர் இல்லத்திலும் லட்சுமி கடாட்சத்தால் தங்கமழை பொழியும்.


========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...