Followers

Tuesday, December 15, 2020

 

குணம் - க. காந்தி முருகேஷ்வரர்

 

ருவரின் குணத்தைக் கணிப்பதென்பது சாதாரணமானதல்ல. இன்று நல்லவராக இருப்பவர் நாளை கெட்டவராகவும், இன்று கெட்டவராக இருப்பவர் நாளை நல்லவராகவும் மாறலாம். ஒரு ராசிக்காரர் இப்படிதான் இருப்பார் என்று உறுதியாகச் சொல்ல முடியாதென்றா லும், சில குறிப்பிட்ட அடிப்படையான குணம் ராசி அடிப்படையில் இருக்கும்.

மேஷம்

மேஷம் முதல் ராசி என்பதால், எதிலும் முதன்மையாக இருக்கவேண்டுமென நினைப்பர். ராசி அதிபதி செவ்வாய் என்பதால் பிடிவாதம் இருக்கும். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். கிரகங்கள் நல்ல நிலையில் அமைந்தவர்கள் திறமையை வளர்த்துக்கொண்டு எதிலும் முதன்மையாய் நற்குணங்களுடன் திகழ்வர். பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நற்சிந்தனையின்றி, திறமையில்லாமலும், திறமையை வளர்க்க விரும்பாமலும் குறுக்குவழியில் முன்னேற விரும்புவர். தான் என்கிற அதிகாரத் தோரணை இருக்கும். தன்னைப் பிறர் மதிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பர். வீம்பு, வீண் கௌரவம் பார்ப்பவர். கேது ஆதிக்கம் பெற்ற அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதல் பாதியில் ஆணவமாக நடந்துகொண்டு பிற்பாதியில் ஞானிபோல் பேசுவர். சுக்கிர ஆதிக்கம் பெற்ற பரணியில் பிறந்தவர்கள் சுகவாசியாக வாழ எண்ணுவர். சூரிய ஆதிக்கம் பெற்ற கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் முன் கோபியாக இருப்பர். முதன்மையைத் தேடுவர்.

rasi



ரிஷபம்

ரிஷப ராசியானது சுக்கிரன் ஆதிக்கம் பெற்றிருப்பதால், ஆடம்பர, அலங்கார நாட்ட மிக்கவர். எல்லாம் தூய்மையாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பர். பொறாமை உள்ளம் கொண்டவர். தமக்கு எதிரி தாமாகவே இருப்பர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைத் தவிர்த்தால் அனைவராலும் விரும்பப்படுவார். சுபகிரக இணைவு, பார்வை பெற்றவர்கள் கலைஞானம் கொண்டு, நகைச்சுவையாகப் பேசி பிறரை வசீகரிப்பர். பெரிய பதவிகளில் இருப்பர். பாவகிரகப் பார்வை பிறரைக் குத்திக்காட்டிப் பேசும் பழக்கத்தைக் கொடுக்கும். வஞ்சகம், சூழ்ச்சியில் கைதேர்ந்தவர். நன்றிமறந்து துரோகம் செய்வர். சூரிய ஆதிக்கம் கொண்ட கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தலைமை விரும்பி. சந்திர ஆதிக்கம் கொண்ட ரோகிணியில் பிறந்தவர்கள் நிலையற்ற எண்ணம், செயல் கொண்டவர். செவ்வாய் ஆதிக்க மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் சுயநலமாய், தேவைக் கேற்ப பேசிப் பழகும் வல்லமை கொண்டிருப்பர்.

மிதுனம்

ராசி அதிபதி புதன் என்பதால், இரட்டை வேடம் போடுவதில் வல்லவர். யாரிடம் எப்படிப் பேசவேண்டு மென்பது தெரிந்து வேலை வாங்கும் சாதுர்யம் மிக்கவர். காரியம் ஆகவேண்டு மெனில் காலில் விழவும் தெரியும். முடிந்ததும் காலை வாரிவிடவும் தெரியும். நம்பிக்கை துரோகிகள் என்பதைக் கண்டறிய முடியாதபடி நடந்து கொள்வர். அறிவாளிகள். சுபகிரகம் வலுத்தால் உண்மை யாய் நன்றி யுடன் நடந்து கொள்வர். பாவகிரகம் தாக்கம் பெற்றவர் ஏமாளி யாய் இருந்து ஏமாற்றும் திறமை யைக் கற்றுக்கொள்வர். செவ்வாய் ஆதிக்க மிருகசீரிடக்காரர்கள் சுயநல பிடிவாதக்காரர்கள். ராகு ஆதிக்க திருவாதிரைக்காரர்கள் ஊமைக் குசும்பர். குரு ஆதிக்க புனர்பூசக்காரர்கள் அறிவுரைகளை அள்ளி வீசுவர். ஆனால் அதன்படி அவர்கள் நடக்கமாட்டார்கள். பாவ, சுபகிரக வலுவைப் பொருத்து நல்லவராகவோ கெட்டவராகவோ இருப்பர்.

கடகம்

தனக்கு எல்லாம் தெரியும் என்னும் மமதை கொண்டவர். ராசி அதிபதி சந்திரன் என்பதால், கற்பனையிலேயே வாழக்கூடியவர். பேசுவதற்கும் நடந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். தானே ராஜா, தானே மந்திரி என்றிருப்பர். தவறான முடிவுகளை எடுத்து பாதிக்கப் பட்டாலும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். எதார்த்தத்தை தாமதமாகவே உணர்வர். உணர்ந்தாலும் வெளிக்காட்ட மறுக்கும் வீண்கௌரவக்காரர். குருவின் புனர்பூசக்காரர்கள் பிறர்மீது அக்கறையாய் அறிவுரைகளை அள்ளி வீசுவர். பூச நட்சத்திர அதிபதி சனி பார்வையால் மனநிலை பாதிப்புண்டு. பின்னர் நடப்பதை முன்பே சொல்லும் ஆற்றலிருக்கும். புதன் வலிமை கொண்ட ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் நடுநிலை யாகப் பேசுவதாய் எண்ணி சுயநலமாய் நடந்துகொள்வார்கள். சொல்பேச்சு கேட்பவர் களாய்க் காட்டிக்கொண்டு தான் நினைத்ததை சாதிக்க எண்ணுபவர். திமிராகப் பேசத் தெரியாத வராகக் காட்டிக்கொண்டு திமிராக நடப்பர். பாசத்தைப் பொழியும்போதே காரியத்திற்காகப் பேசுவர். பட்டும் திருந்தாதவர்களாகவே நடந்து கொள்வர். சுபகிரகப் பார்வை பலம்பெற்றவர்கள் சொக்கத் தங்கமாக இருப்பர்.

சிம்மம்

சூரிய ஆதிக்கத்தால் தனிச் சிறப்பான குணம் கொண்டவர்கள். இவர்களைப் புகழ்ந்துபேசினால் தான் காரியத்தை சாதிக்கமுடியும். எளிதில் ஏமாறக்கூடியவர். வெளிப்பார்வைக்கு கர்வமானவராகத் தெரிந்தாலும், நெருங்கியவர்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்கக்கூடியவர். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். குரு பார்வை பெற்றவர்கள் மக்கள் போற்றும் நல திட்டங்களை செயல்படுத்தக்கூடியவர். அரசாங்க அதிகாரப் பதவி பெறுவர். சுபர் பார்வை இல்லை யென்றால் எந்த நிலையிலிருந்தாலும் அங்கு அதிகாரம் செய்யக்கூடியவர். முன்கோபத்தால் கஷ்டங்களைப் பெற்று மூர்க்கத்தனமாகப் போராடக்கூடியவர். தனக்குக்கீழ் எல்லாரும் தன் சொல்படி செயல்பட வேண்டுமென விரும்புவர். கேதுவின் மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பட்டுத் திருந்தக்கூடியவர். ஊருக்கு உபதேசம் செய்வர். சுக்கிரனின் பூர நட்சத்திரர் கலையுணர்வு கொண்டவர். அழகுடன் அதிகாரம் கொண்டவர். நடிக்கக்கூடியவர். பாவகிரக பலம்பெற்றால் நடிப்பது தெரிந்துவிடும். சூரியனின் உத்திர நட்சத்திரக்காரர்கள் அதிகாரமிருந்தால் எடுத்தெறிந்து பேசி விடுவார்கள். அனுசரித்துப் போக யோசிப்பர். பிடிவாதம், எதிர்வாதம் கொண்டவர்கள். மிகச்சிறந்த நிர்வாகிகள்.

கன்னி

புதன் பலத்தால் அனைத்து துறைகளிலும் அனுபவமிக்கவர். எல்லாம் தெரிந்தாலும் பிடித்தவர்களுக்கு உதவுவர். பிடிக்காதவரைப் பழிவாங்குவர். சிரித்துகொண்டே பேசி அழிப்பதில் வல்லவர். எல்லாரிடமும் நல்லபெயர் எடுக்க ஆசைப்பட்டு ஏமாந்து போவர். இரட்டை வேடம் போடுவதால், பாவகிரக வலிமை பெறும்போது அகப்பட்டுக் கொண்டு அனைத்தையும் இழப்பர். கெடுக்கும் எண்ணத்தைக் குறைத்தால் எல்லாரும் இவர்களுக்கு உதவுவர். பொறாமை குணம் கொண்டவர்கள். வெளியே பரந்த நோக்க மானவராகக் காட்டிக்கொண்டாலும் உள்ளே சுயநலவாதிகள்தான். சூரியனின் உத்திர நட்சத் திரக்காரர்கள் ஏமாந்தவரை ஏமாற்றுவதில் அதிகாரம் செலுத்துவர். நன்றி இல்லாத வர். சந்திரனின் அஸ்த நட்சத்திரக்காரர் குழப்பமான மனநிலை கொண்டவர். அடிமையாக வாழ்ந்தாலும் அதட்டக் கூடியவர். தன்னளவில் சந்தோஷம் கொள்பவர். பிறர் வாழ்வதைப் பொறுக்காத வர். செவ்வாயின் சித்திரைக்காரர்கள் பிடிவாதத்துடன் பழிவாங்கத் தயங்காதவர்கள். சுபகிரக, சுபதசை நடக்கப் பெற்றவர்கள் நன்றியோடு, பிறருக்கு உதவும் உத்தமர் களாக இருப்பர்.

துலாம்

சுக்கிர ஆதிக்கத்தால் நீதி, நியாயம் பேசக்கூடியவர்கள். பிறரின் மனநிலை அறிந்து உதவக்கூடியவர்கள். சுத்தமான எண்ணம், செயல் கொண்டவர்கள். கொஞ்சம் பொறாமையுள்ளம் கொண்டவர். நல்ல நிலையிலிருந்தால் நல்லவற்றையும், தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் கெட்ட எண்ணங்களையும் அதிகம் கொண்ட வர்களாக இருப்பர். சுய உழைப்பில் உயர்ந்தவர் களாகக் காட்டிக்கொள்பவர்கள். உதவி செய்பவர்களிடம் மறைமுகமாக நன்றி தெரிவிப்பர். யாரையும் எடைபோடுவார்கள். குடும்பத்திற்குள்ளேயே கௌரவம் பார்ப்பவர். உடல்ரீதியாக வலுக் குறைந்தவர். செவ்வாயின் சித்திரை நட்சத்திரக்காரர்கள் பிடிவாதத்தால் கிடைக்க வேண்டியதையும் கெடுத்துக் கொள்வார்கள். அகங்காரம் கொண்டவர்களாக இருந்தாலும் அமைதி யானவராகக் காட்டிக்கொள்வர். அடிமை சிக்கினால் அரட்டிவிடுவர். ராகுவின் சுவாதி நட்சத்திரக்காரர்கள் சுதந்திரப் பிரியர்கள். புகழுக்கு அடிமையாய் இருந்து ஏமாந்து விட்டு, ஏமாற்றியவரிடம் புலம்பக்கூடியவர். நினைத்து நினைத்துப் பேசுவர். காரியக்காரர். ஏமாளி. குருவின் விசாக நட்சத்திரக்காரர் சோம்பல் நிறைந்தவர்கள். தானாக நடக்கவேண்டுமென எதிர்பார்ப்பவர். நற்குணம் இருந்தாலும் நடைமுறைப் படுத்த முடியாது. தனக்குப் பின்தான் எல்லாம் என்கிற எண்ணத்தில் கோள்மூட்டும் பழக்கம் கொண்டவர்கள். சுப பலமிக்க துலா ராசிக் காரர்கள் நேர்மை தவறாதவர்களாக, போற்றக்கூடிய குணம் படைத்தவர்களாக இருப்பர்.

விருச்சிகம்

செவ்வாய் அதிபதி என்பதால், எதையும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவர். சுறுசுறுப்பானவர். அதேநேரம், தான் என்கிற எண்ணம் அதிகம் கொண்டவர். சொன்னால் சொன்னபடி நடந்துகொள்ளக்கூடியவர். வெளிப்படையாகப் பேசுவதால் பலரையும் பகைத்துக்கொள்வர். கோபத்தில் பேசும் வார்த்தைகள் தேள் கொட்டுவதுபோல் இருக்கும். குருவின் விசாக நட்சத்திரக்காரர்கள் நிதானத்துடன் நடந்துகொள்வர். யோசித்து செயல்படுவர். நேரடியாக மோதாமல் மறைமுகமாகப் பழிதீர்ப்பர். சனியின் அனுஷ நட்சத்திரக்காரர்கள் கிரிமினலாக யோசித்து செயல்படுவர். தவறை தைரியமாகச் செய்வர். சுபகிரக சம்பந்தம் பெற்றவர்கள் ஆன்மிக நாட்டத்தால் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக்கொள்வர். புதனின் கேட்டை நட்சத் திரக்காரர்களில் கோட்டை கட்டுபவர்களும் உண்டு; மனக்கோட்டை கட்டுபவர்களும் உண்டு. சொல்வதைச் செய்யவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு கொண்டவர்கள். பொறுமையாக இருப்பவர்கள் வரலாற்று சாதனை புரிவர். இளகிய மனம் கொண்டவர்கள்.

தனுசு

குரு ஆதிக்கமிக்க தனுசு ராசிக்காரர்கள் ஒன்றை குறிவைத்துவிட்டால் அதை அடையாமல் ஓயமாட்டார்கள். நியாய வழியில் செயல்படக்கூடியவர்கள். பிறருக்கு உபதேசம் செய்வதில் வல்லவர். ராகு- கேதுக்களால் பாதிக்கப்பட்டவர்கள். எதிரி யிடம் நேரடியாக மோதாமல் அடுத்த வரைத் தூண்டிவிட்டு காரியம் சாதிக்க விரும்பு வர். விட்டுக்கொடுப்பதில்கூட காரியம் இருந்தால்தான் செய்வர். துரோகிகள்மீது அன்பையும், அன்பானவர்கள்மீது அலட்சியத் தையும் காட்டுவர். கேதுவின் மூல நட்சத்திரக் காரர்கள் நெருங்கிய சொந்தங்களை இழந்தவர்கள். இளம்வயதிலேயே ஞானம் பெறுவர். கோபம் கொண்டவர். சுக்கிரனின் பூராடக்காரர்கள் தன் சுகத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நன்றி மறந்த வர்களாகவும், மறைமுக எதிரிகளாகவும் வாழக்கூடியவர்கள். சொகுசான வாழ்க்கை உண்டு. சூரியனின் உத்திராடத்தினர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள். இருக்க இடம்கொடுத்தால் படுக்கப் பாய்கேட்பர். தன் காரியமே கண்ணாகக் கொண்டவர். எதிலும் தான் என்கிற அதிகாரமிக்கவர். சுபவலுப் பெற்றவர்கள் மக்கள் பணி, அன்னதானம், பிறருக்கு உதவுவதில் வல்லவர்.

மகரம்

சனியின் ஆதிக்கத்தால் எதையும் சந்திக்கும் ஆற்றல் மிக்கவர். பொறுப்புகளை அசாதரண மாகக் கையாளும் அதிர்ஷ்டசாலி. பிறரிடம் வேலைவாங்குவதில் வல்லவர். அழுதுகூட காரியம் சாதிப்பர். எவ்வளவு பெற்றாலும் பற்றாக்குறை மனநிலை கொண்டவர். பிள்ளைகள்மீது பற்றுக் கொண்டவர். பாசத் திற்குக் கட்டுப்பட்டவர். சுபவலு மக்கள் சேவையைத் தரும். சனிபலம் பெற்றவர்கள் நீண்ட ஆயுளும் எதிர்காலத்தை உணரும் ஆற்றலும் மிக்கவராக இருப்பர். சூரியனின் உத்திராடத்தினர் தலைமைப் பதவி தேடிவரும் தகுதிமிக்கவராகவும், மக்களுக்குப் பிடித்தவராகவும் இருப்பர். சுயநலம் கொண்டாலும் பொதுநலவாதியாகக் காட்டிக்கொள்வர். சொல்வதையெல்லாம் நம்பவைக்கும் ஆற்றல்மிக்கவர். சந்திரனின் திருவோணக்காரர்கள் நினைத்து நினைத்து செயல்படுவதால் முன்னேற்றத் தடையுண்டு. உறுதியான முடிவெடுத்தால் உயரலாம். குழப்பத்தை விடுவது நலம். கற்பனைகள் தான் எதிரி. அமைதியாக இருந்தாலும் பாதிக்கப்படும்போது கொடூரமாகப் பழி தீர்ப்பர். செவ்வாயின் அவிட்ட நட்சத்திரக் காரர்கள் உணர்ச்சிமிக்கவர். எப்போது எப்படி நடந்தால் சமாளிக்கலாம் என்பதை உணர்ந்தவர். சுறுசுறுப்பாகவும் சோம்பேறி யாகவும் இருக்கத் தெரிந்தவர். சனி வலுப்பெற் றால் இரக்கமில்லால் நடந்துகொள்வர். ஏமாளி. பெற்ற பிள்ளைகளிடம் கவனமாக இருக்கவேண்டும்.

கும்பம்

சனியின் வலுக்கொண்டவர்கள்; ஆனால் எதார்த்தவாதிகள். உடனிருப்பவர்களால் ஏமாறக்கூடியவர். ஆரம்பகாலத்தில் பாசத்திற்குக் கட்டுப்பட்டும், ஏமாந்தபின் காரியவாதி எனவும் நெருங்கியவர்களால் சொல்லப்பட்டாலும் ஏமாளிகளே. வயதிற் கேற்ற விவரம் இல்லாதவர்கள். அன்பிற்காக எதையும் இழப்பார்கள். நல்லவருக்கு நல்லவர்களாகவும், கெட்டவர்களைவிட்டு விலகியும் இருப்பர். கடைசி நேரத்திலாவது காப்பாற்றப்படுவர். செவ்வாயின் அவிட்ட நட்சத்திரர் எதிர்த்துப் பேசத் துணியாதவர். ஏதோவொரு கூச்சம் இருந்துகொண்டே இருக்கும். பிறர் சொல்கேட்டு ஆரம்பத்தில் கெட்ட பழக்கவழக்கத்திற்குப் போனாலும் திருந்திவிடுவர். கிரிமினலாக சித்தரிக்கப் படுவர். தவறைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். ராகுவின் சதய நட்சத்திரக் காரர்கள் மந்தமானவர்கள். எதுவும் தாமத மாகவே புரியும். குருட்டு அதிர்ஷ்டத்தாலும் பூர்வபுண்ணியத்தாலும் காப்பாற்றப் படுவர். சனியின் பூரண அருள்பெற்றவர். துணைவருக்கேற்றவர். அன்புள்ளம் கொண்ட ஏமாளிகள். குருவின் பூரட்டாதிக்காரர்கள் பிறருக்கு உபதேசம் சொல்லுமளவு பாதிக்கப் பட்டவர்கள். நியாயவாதிகள். கஞ்சனாகத் தெரிந்தாலும் வள்ளல் மனம் கொண்டவர்கள். பிறரைக் கெடுக்க எண்ணாதவர்கள். சுயநலம் குறைந்தவர். பாவகிரக பாதிப்பற்றவர்கள் மிகப் பெரிய நேர்மையான சாதனையாளர்கள்.

மீனம்

கடைசி ராசியாக குருவின் ஆதிக்கத்தால், அடுத்தவரைத் திருத்தி நல்வழிப் படுத்துவதிலேயே கவனம் செலுத்தித் தன் வேலைகளைத் தள்ளி வைக்கும் சுயநலமற்றவர். எவ்வளவு செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. யாருக்காகவும் தன் குணத்தை மாற்றிக்கொள்ளாத ஏமாளிகள். தனக்காக வாழத்தொடங்கினால் பெரும் பணம், புகழ் பெறுவர். ஏதாவது தடை இருந்துகொண்டே இருக்கும். கெட்டவர்கள் எனத் தெரிந்தே உறவாடுவதைத் தவிர்த்தாலே முன்னேறிவிடுவர். குருவின் பூரட்டாதிக்காரர்களுக்கு எதிரி யால் லாபம் உண்டாகும். அவர்கள் கொடுக் கும் தொல்லையாலேயே முன்னேறிப் புகழ்பெறும் அதிர்ஷ்டம் மிக்கவர். தாமத மானாலும் நிலையான வெற்றி பெறுவர். போராட்டத்தைக் கண்டு அஞ்சாமல் பொறுமையாக சாதிப்பர். அன்பைத் தூக்கிப் பிடிக்காமல் இருந்தால்தான் உருப்படுவர். சனியின் உத்திரட்டாதிக்காரர்கள் குறுக்குவழி யில் வெற்றி கண்டால் நிலைக்காது. போராட்ட குணம் கொண்டவர். கஷ்டங்களை வெளிக் காட்டிக் கொள்ளாதவர். கடுமையாக உழைக் கக்கூடியவர். பாவகிரக பலம் சந்தோஷத்தைக் கெடுக்கும். வெற்றியைத் தாமதப்படுத்தும். புதனின் ரேவதி நட்சத்திரக்காரர்கள் எவ்வளவு போராடினாலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் வருத்தப்படுவர். சுபபலம் பெற்றால் சுயபுத்தியால் பிறரை ஆட்டிப் படைப்பர். பலம் குறைந்தால் அடிமையாக வாழநேரும். பொதுவாக மீன ராசிக்காரர்கள் நல்லதற்காகப் பொறுமை காக்கவேண்டும். மேற்கண்ட ராசி அல்லது லக்னத்தில் எது வலுப்பெற்றுள்ளதோ அதன் பலன்களே ஜாதகரின் குணமாக இருக்கும். எந்த ராசி, லக்னமாக இருந்தாலும் லக்ன, ராசி அதிபதிகள் கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் கெட்ட குணங்கள் குறைந்தவராக இருப்பர். நடப்பு கோட்சாரம் கெடுத்தாலும், தீய தசையே நடந்தாலும், நேர்மையான வகையில் சிந்திக்கக்கூடியவராகவும், கஷ்டத்தை எதிர்கொண்டும், கஷ்டத்தை ஏற்றுக்கொண்டும், மனம் அலைபாயாமல் நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் பெற்றவராக விளங்குவார்கள். பரிகாரம் செய்து தீயவற்றைப் பெற நினைப்பதைவிட, நல்ல குணங்களுக்கு மாறினாலே வெற்றிமேல் வெற்றி வாழ்வில் வந்துசேரும்.

செல்: 96003 53748

courtesy;balajothidam/nakkiran

============================================================

 

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...