12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்!
இன்பம்
எப்படியிருக்கும் என்பதை நுகரும் முன்பே, வலி எப்படியிருக்கும் என்பதை உணர்த்திவிடுகிறது வாழ்க்கை. பலரின் வாழ்க்கை
இப்படித்தான் இருக்கிறது.
வாழ்நாள் லட்சியத்தை எட்டிப் பிடித்துவிட்டோமென பெருமூச்சு விடுவதற்குள், ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமான வலியை வாழ்க்கை பரிசாகத் தருகிறது. சிலருக்கு வாழ்க்கை ஓட்டத்தில்
வலிக்கு நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு வலியே வாழ்கையாகிவிடுகிறது.
வாழ்வியலில் ஏற்படும் வலி அனுபவப்பாடமா? அல்லது வாழ்நாள் முழுவதும் ஆறாத ரணமா என்பது அவரவரின் சுய ஜாதகத்தைப்
பொருத்தது.ஒருவரின் ஜாதகத்தில் பாதகாதிபதி அமர்ந்த நிலையே பல பிரச்சினைகளுக்கும்
காரணமாகவும் அமைகிறது.
ஜாதகத்திலும், பிரசன்னத்திலும் ஒருவருக்கு பலன் சொல்லும் முன்பு, பாதகாதிபதிக்கும், அஷ்டமாதிபதிக்கும்
முக்கியத்துவம் கொடுத்துப் பலன் சொல்லவேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் பாதகாதிபதி
வலுப்பெறக் கூடாது. பாதகாதிபதி சுபருடன் சேர்ந்தால் சுபத்தைக் கட்டுப்படுத்துவார்.
அசுபர்களுடன் சேர்ந்தால் அசுபத்தை மிகுதிப்படுத்துவார்.
பாதகாதிபதிகள் அசுப வலிமை பெற்று எந்த பாவகத்தில் நின்றாலும் சுபப் பலன்
கிட்டாது. பாதகாதிபதி சுபவலிமை பெற்றால் தசையின் ஆரம்பத்தில் அனைத்து
சுபப்பலன்களையும் நடத்தி, தசையின் முடிவில் பெரும் பாதகத்தைச் செய்வார். பாதகாதிபதி அல்லது பாதகத்தில்
நின்ற கிரகத்தின் தசை நடந்து, கோட்சார ராகு- கேது சம்பந்தம் பெற்றால், பாதகாதிபதிகள் ஜாதகரை உருத்தெரியாமல் ஆக்கிவிடும். பாதகாதிபதிகள் மற்றும் பாதக
ஸ்தானத் தில் நின்ற கிரகங்கள்- அதாவது மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான துன்பம்
இரண்டிலொன்றை வலுப்பெற்ற பாதகாதிபதி நிச்சயம் தனது தசை, புக்திகளில்
செய்யாமல் போகாது.
கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று
பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்திருக்கி றார்கள்.
சரம்
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும். சரம் என்பதற்கு வெகு
சலனமுடையது எனப் பொருள். சர லக்னத்திற்கு சுபமோ அசுபமோ எளிதில் வந்தடையும்.
ஒருவரின் வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழிநடத்தும்.வந்த தடமும்
இருக்காது; போன சுவடும் தெரியாது. சர லக்னங்களுக்கு 11-ஆம் அதிபதி பாதகத்தைச் செய்வார்.
அதன்படி, மேஷத்திற்கு சனியும், கடகத்திற்கு
சுக்கிரனும், துலாத்திற்கு சூரியனும், மகரத்திற்கு செவ்வாயும் பாதகாதிபதிகள்.
சர லக்னத்திற்கு 11-ஆம் அதிபதியான லாபாதிபதியே பாதகாதிபதியாக வருவதால்
தொழில், வேலை ஆகியவற்றில் இயல்பாக வரக்கூடிய லாபம் வெகுவாக
அடிபடும். நூறு ரூபாய் சம்பாதிக்க ஆயிரம் ரூபாய் செலவுசெய்யும் சூழ்நிலை அல்லது
அடிக்கடி பொருளாதார இழப்பு போன்றவை இயற்கையாக அமைந்துவிடும். எனவே, சர லக்னத்தினர் சுய ஜாதக வலிமைக்கேற்ப சுய தொழிலை நடத்துவது நல்லது. சர
லக்னங்களுக்கு பாதகாதிபதி வலுத்தால் லாபத்தைக் கொடுத்து, வருமான வரி, விற்பனை வரி சிக்கலில் மாட்டிவிடும்.
ஸ்திரம்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னத்தில் அடங்கும். ஸ்திரம் என்பதற்கு
சலனமற்றது எனக் கூறலாம். சுபமோ, அசுபமோ எதிர்பாராத
விதத்தில் வந்தடையும். வந்தால் நீண்டகாலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும்கூட வழிநடத்தும்.
ஸ்திர லக்னங்களுக்கு 9-ஆம் அதிபதி பாதகத்தைச் செய்வார். அதன்படி
ரிஷபத்திற்கு சனியும், சிம்மத்திற்கு செவ்வாயும், விருச்சிகத்திற்கு சந்திரனும், கும்பத்திற்கு
சுக்கிரனும் பாதகத்தைச் செய்பவர்கள்.
ஸ்திர லக்னங்களுக்கு பாக்கியாதிபதியே பாதகாதிபதியாக இருப்பதால்- பாதகாதிபதி
பலமிழந்தால் பாக்கியம் மிகைப்படுத்தலான நன்மைகளை தன் தசாபுக்திக் காலங்களில்
வாரிவழங்கும். பாதகாதிபதி பலம்பெற்றால் மிகுதியான அசுபத் தையும், மீளமுடியாத கண்டத் தையும் தருவார்.
ஸ்திர லக்னங்களுக்கு பாதகாதிபதி பலமிழந்தால், தந்தை சமுதாய
அங்கீகாரம் பெற்றும், செல்வாக்கு மிகுந்தவராகவும், அதிகாரப் பதவியில் இருப்பவரா கவும் இருப்பார். ஜாதகருக்கு தந்தையின் அன்பும்
ஆசியும் நிறைவாக இருக்கும். ஆனால், அதீத
சுதந்திரத்தால் ஜாதகர் கெடுவதற்கு தந்தையே காரணமாக இருப்பார். இதிலிருந்து பாதகம்
கலந்த பாக்கியத்தையே கொடுப்பார் எனப் புரிந்திருக்கும்.
ஸ்திர லக்னத்திற்கு பாதகாதிபதி வலிமை பெற்றால், தந்தைவழி செல்வம், செல்வாக்கு மிகவும் மோசமான நிலையிலிருக்கும். தந்தையால் பயனற்ற
நிலையிருக்கும். ஜாதகர் பிறந்தபிறகு பலபடிகள் கீழே இறங்கிவிடுவார்கள். இளமையில்
வறுமை, கல்வித் தடை என சோதனைகள் மாறிமாறி
வரும்.பூர்வீகத்தைவிட்டு வெளியேறி வெளியூரில், வெளிநாட்டில்
வசிக்கும் நிலை ஏற்படும்.
உபயம்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய லக்னத்தில் அடங்கும்.உபய லக்னம் சர, ஸ்திர லக்னங்களின் தன்மைகளை உள்ளடக்கியது.
உபய லக்னத்திற்கு 7-ஆமிடமே பாதக, மாரக, கேந்திர ஸ்தானமாக இருப்பதால், சுபத்தைவிட அசுபமே
மிகுதியாக இருக்கும். சுபமோ, அசுபமோ
விருந்தினர்போல வரும்; போகும். மீண்டும் வரும்; மீண்டும் போகும். அதன்படி, மிதுனம் மற்றும்
கன்னி லக்னங்களுக்கு குரு பாதகத்தைச் செய்வார். தனுசு மற்றும் மீன லக்னங் களுக்கு
புதன் பாதகத்தைச் செய்வார்.
உபய லக்னத்திற்கு களத்திராதிபதியே பாதகாதிபதியாக வருவதால், வாழ்க்கைத் துணையால்- வாழ்க்கைத்துணையின் உறவினர் களால் பிரச்சினை
இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு காலம் தாழ்த்தி திருமணம் நடக்கும். சிலருக்கு
திருமணமே நடக்காது. நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களால் அதிருப்தியே நிலவும்.
ஆக, மேஷம், ரிஷபத்திற்கு
சனியும்; மிதுனம், கன்னிக்கு குருவும்; கடகம், கும்பத்திற்கு சுக்கிரனும்; சிம்மம், மகரத்திற்கு செவ்வாயும்; தனுசு, மீனத்திற்கு புதனும்; துலாமிற்கு
சூரியனும்; விருச்சிகத்திற்கு சந்திரனும் பாதகாதிபதியாவார்கள்.
பாதகாதிபதி என்னும் பெயரே, பாதக ஸ்தானத்தில்
நிற்கும் கிரகங்கள் நடத்தும் பாதகம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும். கீழே
பன்னிரண்டு பாவகங்களில் பாதகாதிபதிகள் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
கொடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் பொதுப் பலன்கள். அதேபோல் , பாதகாதிபதிகள் வாழ்நாள் முழுவதும் பாதகத்தைத் தந்துகொண்டே இருக்க மாட்டார்கள்.
அன்றாடம் சந்திக்கும்- அனுபவித்து வரும் பிரச்சினைகளின் தொகுப்பு.இது.
இதுபோன்ற பாதிப்பை சந்திப்பவர்கள் இங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பரிகாரத்தைக்
கடைப்பிடித்து வர, பாதகம் நீங்கி சாதகமாகும்.
பாதகம் வேலை செய்யும் கால கட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
பாதகாதிபதியால் நன்மை நடைபெற வேண்டுமெனில், பாதகாதிபதி நீசம், அஸ்தங்கம் பெற்று பலம் குறையவேண்டும்.
ஜாதகத்தில் லக்னம், ஐந்து, ஒன்பதாமிடங்கள்
வலிமை பெற்றவர் களை பாதக தோஷம் பாதிக்காது.
பாதகாதிபதிக்கு, பாதக ஸ்தானத் திற்கு அல்லது பாதகத்தில் நின்று தசை
நடத்தும் கிரகத்திற்கு குரு பார்வை அல்லது லக்ன சுபரின் பார்வை இருந்தால், ஜாதகரை பாதக தோஷம் பாதிப்பதில்லை.
பெரும்பான்மையாக, பாதகாதிபதி, பாதகாதிபதியின்
நட்சத்திர சாரம் மற்றும் பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகத்தின் தசை, புக்திக் காலங்களில் மட்டுமே பாதிப்பிருக்கும். மற்ற காலங்களில்
பாதிப்பிருக்காது.
பாதகாதிபதிகள் தனது தசாபுக்திக் காலங்களில் நன்மை செய்யும் வாய்ப்பு குறைவு.
முதலில் சாதகமாக இருந்தால் முடிவில் பாதகத்தையே தரும் அல்லது பாதகமும் சாதகமும்
கலந்தே இருக்கும்.
ஜனன ஜாதகத்தில் பாதகாதிபதி மற்றும் பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகங்களுக்கு ஜனன
மற்றும் கோட்சார சனி, ராகு- கேதுக்களின் சம்பந்தம் ஏற்படும்போது அசுப
விளைவுகள் ஜாதகரை நிதானமிழக்கச் செய்யும்.
பாதகாதிபதி உச்சம் பெறக்கூடாது. பாதகாதிபதி அல்லது பாதக ஸ்தானத்தில் நிற்கும்
கிரகம் சுயசாரம் பெறக்கூடாது.
ஜனன, கோட்சாரரீதியாக அஷ்டமாதிபதி, பாதகாதிபதி இணைவு ஏற்படும் காலங்களில் பாதிப்பிருக்கும்.
குரு பார்வைக்கு பாதகத்தை மட்டுப் படுத்தும் சக்தியுண்டு.
பாதகாதிபதி நின்ற பாவகப் பலன்கள்
லக்னத்தில் பாதகாதிபதி பாதகாதிபதி லக்னத்தில் நின்றால் தோற்றப் பொலிவு
குறையும். அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும். புகழ், அந்தஸ்து மற்றும்
கௌரவம் மட்டுப்படும். இனம் புரியாத பயவுணர்வு இருந்துகொண்டே இருக்கும். முன்கோபம்
மிகுதியாக இருக்கும்.
உள்ளுணர்வின் தூண்டுதல் இருக்காது. தன் நடவடிக்கையால் தனக்குத்தானே பாதகம்
செய்துகொள்வார்கள். அவ நம்பிக்கையும், தாழ்வு
மனப்பான்மையும் இருக்கும். எல்லாரையும் சந்தேகப்படுவார்கள். கடின முயற்சிக்குப்
பிறகே வெற்றி கிட்டும். சோம்பல் மிகுதியாக இருக்கும். சிற்றின்ப நாட்டம் மனதை தீய
எண்ணங்களில் வழிநடத்தும். செய்வினை மற்றும் திருஷ்டி தோஷம் எளிதில் தாக்கும்.
எதிர்மறை எண்ணம் அதிகமாக இருக்கும். பூர்வீகத்தில் வாழும் பாக்கியம் குறைவு
படும். சிலருக்கு இளம்பருவத்திலேயே தாய்- தந்தையைப் பிரிந்து அல்லது இழந்து வாழும்
நிலை ஏற்படும்.
திருமணத்தடை மிகுதியாக இருக்கும் அல்லது தம்பதிகளிடையே ஒற்றுமைக்குறைவு
இருக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் வாழ்நாள் முழுவதும் அவமானம் இருக்கும்.
கூட்டுத்தொழில், வாடிக்கையாளர்கள், நண்பர்களால் பயன்
இருக்காது. உடலால் அதிகம் உழைக்கநேரும். இவர்களின் இயலாமையை மற்றவர்கள் தங்களுக்கு
சாதகமாகப் பயன்படுத்துவார்கள். மொத்தத்தில் வாழ்க்கை "ஸ்பீடு பிரேக்' இல்லாத வண்டியாக இருக்கும்.
ஜாதகத்தில் லக்னம் வலிமையாக இருந்தால் மட்டுமே, எத்தகைய பாதகமான
பிரச்சினையாக இருந்தாலும் எளிதில் மீண்டுவரமுடியும். லக்னத்தில் பாதகாதி இருப்பது
சுபித்துச்சொல்லும் பலனல்ல.
பரிகாரம்
அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியை அதிகரிக்க யோகாசனம் மிக
அவசியம்.
கல்லுப்பு இட்ட நீரில் குளித்துவர எதிர்மறை ஆற்றல் மட்டுப்படும்.
பாதக தோஷத்தால் மிகுதியான
அசுபப் பலனை அனுபவிப்பவர்கள் தினமும் ஆஞ்சனேயர் கோவில் செந்தூரத்தை
நெற்றியிலிட்டுவர சுபப் பலன் கிடைக்கும்.
வெள்ளியிலான ஆபரணத்தை உடலில் அணிய, எதிர்மறை சிந்தனை
குறைந்து, சிந்தித்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.
ஜென்ம நட்சத்திர நாளில் துர்க்கை, காளி மற்றும்
பிரத்தியங்கரா தேவி போன்ற உக்ர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து
வழிபடவும்.
இரண்டில் பாதகாதிபதி
இரண்டாமிடமான தன ஸ்தானத் தில் பாதகாதிபதி நின்றால், சிலருக்கு குறுக்குவழியில் பொருள் வரவு இருக்கும். அதிர்ஷ்டக்குறைவு அதிகம்
இருக்கும். சிலருக்கு அடிப்படைத் தேவையை நிறைவு செய்யமுடியாத சூழ்நிலையும்
ஏற்படும்.
பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை குறைவுபடும். உற்றார்-
உறவினர், குடும்ப உறவினர்கள், அண்டை அயலார்
மத்தியில் வாக்கால் நிதானமற்ற நிலையும், வம்புவழக்கும்
தேடிவரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாது.
குழந்தைகள் காலதாமதமாகப் பேசத் தொடங்குவார்கள் அல்லது சிலருக்கு திக்குவாய்
குறைபாடிருக்கும். குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியில் தடை, தாமதமிருக்கும். எடுத்ததற்கெல்லாம் சத்தியம்செய்து சத்திய தோஷத்தை
அதிகப்படுத்திக்கொள்வார்கள்.
பார்வைக் குறைபாடிருக்கும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் கண், பல் தொடர்பான பிரச்சினைக்கு வைத்தியம் செய்யநேரும்.
சுபகாரியத் தடையிருக்கும். வாழ்நாளில் பாதியை விரதமிருந்து கழிப்பார்கள்.
சிலருக்கு நேரத்திற்கு உண்ணமுடியாது.
பெண் ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் நிற்கும் பாதகாதிபதி எட்டாமிடத்தைப்
பார்ப்பதால் கால தாமதத் திருமணம் நடக்கும். ஆண்களுக்கு எட்டாமிடத்திற்கு
பாதகாதிபதி சம்பந்தமிருந்தால் அடிக்கடி அறுவை சிகிச்சை நடைபெறும் அல்லது ஆயுளை
அச்சுறுத்தும் நோய் தொந்தரவிருக்கும். விரயச் செலவு மிகுதியாக இருக்கும்.
வாராக்கடன் மற்றும் ஜாமின் கடன் இருக்கும். அடிமைத் தொழிலே சிறப்பு.
பரிகாரம்
மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கு தனமே ஆதாரம். இரண்டாமிடத்தோடு சம்பந்தம் பெறும்
பாதகாதிபதியால் அடிப்படைத் தேவையை நிறைவு செய்வதில் சிரமமிருப்பவர்கள் பச்சைக்
கற்பூரம், லவங்கம், ஏலக்காய்
மூன்றையும் பச்சைத் துணியில் மடித்து பர்ஸ் அல்லது பீரோவில் வைக்க, பணவரவு அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை விரதமிருந்து மகாலட்சுமியை வழிபட, தனதானிய விருத்தி
ஏற்படும். மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும்.
வாயில்லா ஜீவன்களுக்கு உணவு தானம் வழங்க, சத்திய தோஷம், வாக்கு தோஷம் தீரும்.
ஆயுள் பயமுள்ளவர்கள் சிவ வழி பாட்டைக் கடைப்பிடிக்கவேண்டும்.
மூன்றில் பாதகாதிபதி
நிலையாக ஓரிடத்தில் வசிக்கமுடியாது. அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்யநேரும்
அல்லது அலைச்சல் மிகுந்த பயணத்தைத் தரும் வேலை அல்லது தொழில் செய்யநேரும்.
முடிவெடுக்கும் தன்மை குறையும். முறையாக திட்டமிட்டு செயல்படும் தன்மை
குறைவுபடும்.
உடன்பிறந்தவர்களால் பாதகம் மிகுதியாக இருக்கும். உடலாலும், மனதாலும் பலவீன உணர்வு மிகுதியாக இருக்கும். தைரியம், வீரம் குறைவுபடும். நினைப்பது ஒன்று, நடப்பது வேறொன்றாக
இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்காது.
சிற்றின்பக் குறைபாடிருக்கும். செவித்திறன் குறைபாடு மற்றும் ஞாபக சக்தி
குறையும். காது, மூக்கு, தொண்டைப்
பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்வார்கள். இடதுகைப் பழக்கம் அதிகரிக்கும்.
போனில் நெட்வொர்க் பிரச்சினை இருக்கும். அடிக்கடி நெட்வொர்க்கை மாற்றுவார்கள்.
கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டால் பிரச்சினை
இருக்கும்.
கமிஷன் அடிப்படையான தொழில், தகவல் தொடர்பு, ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு தொழில்ரீதியான நெருக்கடி இருக்கும் அல்லது
அவப்பெயர் மிஞ்சும். உழைப்பவர் இவர்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக
இருப்பார்கள். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். நவீன தகவல் தொடர்பு
சாதனங்களான வாட்ஸ் அப், பேஸ் ஃபுக் போன்றவற்றால் வம்பு, வழக்கு வரும்.
தங்க ஆபரணங்களைக் கவனக்குறைவாகக் கையாளுவார்கள். அடிக்கடி கைமறதியாக
எங்கேயாவது நகைகளை வைப்பது, தொலைப்பது, திருடப்படுவது
போன்றவை இருக்கும். மத நம்பிக்கை குறைவு படும்.பூர்வீகத்தைவிட்டு வெகு தொலைவில்
சென்று குடியேறும் நிலையிருக்கும்.
பரிகாரம்
வயது முதிர்ந்த பெரியோர்களுக்கு உணவு, உடை தானம் தந்து, நல்லாசி பெறவேண்டும்.
புரோகிதர்கள், அந்தணர்களுக்கு சனிக்கிழமைகளில் கறுப்பு முழு உளுந்து
தானம்தர, உடனடிப் பலன் கிடைக்கும்.
சனிக்கிழமை வன்னிமரத்தை வலம் வரவேண்டும்.
தினமும் சிவபுராணம் படிக்க வேண்டும்.
நான்கில்
பாதகாதிபதி
லக்னத்திற்கு நான்கில் நிற்கும்
பாதகாதிபதியால் தாயன்பு கிடைக்காது. மாற்றாந்தாயிடம் அல்லது தாத்தா- பாட்டியால்
வளர்க்கப்படுவார்கள். பள்ளிப் படிப்பில் பாதிப்பிருக்கும். பள்ளிப் பருவத்தில் பல
பள்ளிகள் மாறிப் படிப்பார்கள். கல்லூரிக்குச் சென்றபிறகு கல்வியில் முன்னேற்றமிருக்கும்.
சுக ஸ்தான பாதிப்பிருக்கும்.
கால்நடை மற்றும் உயிரின வளர்ப்பில் ஆதாயமிருக்காது. சிலர் கால்நடை வளர்ப்பு என்ற
பெயரில் உயிரினங்களை முறையாகப் பராமரிக்காமல் வதைப்பார்கள். நாய் வளர்ப்பவர்கள்
சிலர் நாய்க்கு கருத்தடை செய்து, பாலுணர்வைக்
கட்டுப்படுத்தி தீராத பாவத்தைச் சேர்ப்பார்கள்.
எளிதில் வீடு, வாகன யோகம்
கிட்டாது. அப்படிக் கிடைத்தாலும் வாஸ்துக் குற்றமுள்ள வீடு, விருத்தி யில்லாத சொத்து, பயன்படுத்தமுடியாத
பழைய வீடு, சொத்து கிடைக்கும். வீட்டில் நிலத்தடி
நீர் வற்றும். சொத்து தொடர்பான வம்பு, வழக்கால்
மன உளைச்சல் இருக்கும். சொத்து வாங்கும்போது பத்திரத்தை பலமுறை சரிபார்க்க
வேண்டும்.
அடிக்கடி வாகன விபத்து நடக்கும்.
நான்காமிடத் திற்கு சனி, ராகு- கேது
மற்றும் அஷ்டமாதிபதி, பாதகாதிபதி
சம்பந்தமிருப்பவர்கள் பலருக்கு வாகனப் பதிவு எண்ணில் ராகுவின் 4-ஆம் எண், கேதுவின் 7-ஆம் எண்ணின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும். உதாரணமாக, 4477, 7744, 4774, 7447 போன்றவாறு இருக்கும். இதுபோன்ற வாகனங்
களில் அடிக்கடி நாய் குறுக்கே வந்து விபத்து நடக்கும். கிராமப்புரங்களில்
இருப்பவர்களுக்கு பன்றி குறுக்கே விழும். ஏன், சிலர் "ஸ்பீடு பிரேக்'கிலும்
விழுந்து காயம் ஏற்படும். பலமுறை விபத்து நடந்தாலும் வாகனத்தை மாற்றமாட்டார்கள்
அல்லது மாற்றமுடியாத சூழல் நிலவும்.
நான்கில் பாதகாதிபதி இருக்கும்
விவசாயி களுக்கு வாழ்நாள் போராட்டமாகவே இருக்கும். போதிய நீராதாரம் இருக்காது.
பரிகாரம்
அரசுப் பள்ளி மாணவர்களின்
படிப்பிற்குத் தேவையான ஜியாமெட்ரிக் பாக்ஸ், கலர்
பென்சில், நோட்- பேனா, பென்சில் போன்றவற்றை வழங்கலாம்.
மாணவர்கள் கண்டிப்பாக ஹயக்ரீவரை
வழிபடவேண்டும்.
வீட்டில் துளசி வளர்க்க, மன அமைதி தேடிவரும்.
அமாவாசை நாட்களில் பசுவை 27 முறை வலம்வந்து வணங்கி, காய்கனிகளை
தானம் தரவேண்டும்.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
வயதானவர்களிடம் அன்பாக, ஆதரவாக
பேசி, வேண்டிய உதவிகளைச் செய்துவர நன்மை
கிடைக்கும்.
ஐந்தில் பாதகாதிபதி
ஒரு மனிதனுக்கு ஐந்தாமிடமான பூர்வ
புண்ணிய ஸ்தானம் மிக முக்கியம். ஐந்தாமிடம் பலம்பெற்றால் அதிர்ஷ்டத்தை நம்பியே
வாழ்நாளைக் கடத்திவிடலாம்.
நடக்காததை நடப்பதாகக்
கற்பனையையும் கனவையும் வளர்ப்பவர்கள். அதிர்ஷ்டக் குறைவு மிகுதியாக இருக்கும்.
புகழ், அந்தஸ்து, கௌரவம் மட்டுப்படும்.
மனதளவில் ஆன்மிகவாதியாகவும், வெளியுலகத்திற்கு நாத்திகவாதியாகவும் இருப்பார்கள். சாஸ்திர
நம்பிக்கை இல்லாதவர் கள். குலதெய்வக் குற்றம் இருக்கும் அல்லது குலதெய்வம்
தெரியாது. பூர்வீகத்திற்குச் சென்று வருவதில் தடை, தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தால் பயனற்ற நிலையிருக்கும். பல
தலைமுறையாக பூர்வீகச் சொத்தை வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். "கூடா நட்பு
கேடில் முடியும்'
என்பதற்கிணங்க தவறான காதலால்
கௌரவம் குறைவுபடும் விரும்பிய பதவி மற்றும் பதவி உயர்வு கிடைக்காது. பதவியில்
இருந்தாலும் திறமைக் கேற்ற பாராட்டும் பரிசும் கிடைக்காது. புதிய சிந்தனைகளை
செயல்படுத்த முடியாது. பணிச்சுமை அதிகரிக்கும். ஊதியம் குறைவாக இருக்கும்.
சிலருக்கு, தனக்குக்கீழ் பணிபுரிபவர் களை
வழிநடத்தும் திறமை இருக்காது.
கல்லுரிப் படிப்பில் விரும்பிய
பாடம் மற்றும் விரும்பிய கல்லூரி கிடைக்காது. பள்ளிப் பருவத்தில் நன்றாகப்
படித்தவர்கள் கல்லுரியில் அரியர்ஸ் வைப்பார்கள். வெகு சிலருக்கு கல்லூரிப் படிப்பு
தடைப்படும்.
பங்குச் சந்தையில் பெரும் பண
இழப்பை சந்திப்பார்கள். அதிர்ஷ்டத்தைத் துரத்தி உழைப்பை மறப்பவர்கள். ஐந்தில்
நிற்கும் பாதகாதிபதி புத்திர தோஷத்தால் வாழ்க் கையை வெறுக்க வைப்பார். தன் குழந்தை
யைத் தவிர, மற்ற எல்லா குழந்தைகளையும் கொஞ்ச
வைப்பார்.
ஐந்தாமிடத்தில் நிற்கும் எந்த
கிரகமும் பெரிய பாதிப்பைத் தராது என்பது நாமறிந்த உண்மை. பாக்கியத்தோடு கலந்த
பாதகத் தைத் தரும் என்பதே இதன் சூட்சுமம்.
அதாவது, பாக்கியத்தையும் தருவார்;
அதை அனுபவிக்க முடியாத
பாதகத்தையும் தருவார். உதாரணமாக, ஐந்தில்
பாதகாதிபதி நின்று தசை நடத்தினால், பங்குச்
சந்தை, யூக வணிகத்தில் பெரும் லாபத்தை காலையில்
கொடுப்பார். அன்றைய பொழுது முடிவதற் குள் வேறு தொழில் அல்லது ஏதாவதொரு வழியில்
கிடைத்த வருமானத்திற்குமேல் இழப்பையும் கொடுப்பார். கைக்கு எட்டியது வாய்க்குக்
கிடைக்காது. கிடைத்ததை அனுபவித்தால் மட்டுமே கொடுப்பினை. கிடைத்ததை அனுபவிக்கும்
முன்பே தட்டிப்பறிப்பதே பாதகாதிபதியின் சித்து விளையாட்டு. இது பாக்கியமா? பாதகமா?
பரிகாரம்
பௌர்ணமி திதியில் சத்திய நாராயணர்
பூஜை நல்ல பலன் தரும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள்
சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.
குலதெய்வ வழிபாட்டை முறைப்படுத்த
வேண்டும்.
ஆறில் பாதகாதிபதி
மறைவு ஸ்தானங்களில் நிற்கும்
பாதகாதி பதி பாதகத்தைச் செய்யமாட்டார் என்பது சிலரின் நம்பிக்கை. மறைவு
ஸ்தானத்தில் நின்ற பாதகாதிபதி எத்தகைய பாதகத்தைச் செய்தார் என்பதை
அனுபவித்தவர்களிடம் கேட்டால், இரண்டு
சினிமாப் படம் அல்லது இரண்டு மெகா சீரியல்கள் எடுக்குமளவிற்கு கதை சொல்வார்கள்.
காது கொடுத்துக் கேட்கமுடியாத பாதகம் உண்டு.
6-ல் நிற்கும் பாதகாதிபதி வேலை
இல்லாமல், வேலை கிடைக்காமல் அவதிப்படுத்துவார்.
சிலருக்கு குறைந்த ஊதியத்திற்கு அதிகம் உழைக்கும் சூழ்நிலையைத் தருவார். அதீத உடல்
உழைப்பால்- சோர்வால் உடல் ஆரோக்கி யம் கெடும். உயரதிகாரி களிடம் இணக்கமற்ற சூழல்
அல்லது உடன் பணிபுரிபவர்களால் மன உளைச்சல் இருக்கும். சிலருக்கு தகுதிக்கு மீறிய
பதவியைத் தந்து,
கிடைத்த பதவியை திறம் படச்
செய்துமுடிக்க முடி யாத அவஸ்தையையும் தருவார். தீராத கடன், அடுத்தவர்களுக்காக கடன்படுதல், கொடுத்த கடன் திரும்பி வராது போதல் போன்ற பிரச்சினை இருக்கும்.
வாழ்நாள் முழுவ தும் மருந்து
சாப்பிட வேண்டிய நோயால் கவலை உண்டு. அடி வயிறு தொடர்பான உடல் உபாதைகள் இருக்கும்.
எதிரிகள் எப்பொழுதும் கூடவே இருப்பார்கள். சரியான நேரத்தில் உணவு சாப்பிட இயலாது.
முழுமையான அசுபத் தன்மையோடு
இயங்கி னால் நீதிமன்ற பிரச்சினை, சிறைப்
படுதல், அதிர்ச்சி தரும் சம்பவங்கள் மன வருத்
தத்தைத் தரும். தாய்மாம னின் ஆதரவின்மை, தொந்தரவுகள்
இருக்கும்.
பரிகாரம்
திருச்செந்தூர் முருகனை சரணடைந்து
வழிபட, கடன், உத்தியோகம், நோய் தொடர்
பான பிரச்சினைகள் இருந்த சுவடு தெரியாது.
உணவில் நல்லெண்ணெய்
சேர்க்கவேண்டும்.
அரசு மருத்துவமனையில்
சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு, இயன்ற
தானம், உதவி செய்யவேண்டும்.
செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரையிலான சனி ஓரையில் விநாயகரை
ஒன்பதுமுறை வலம் வரவேண்டும்.
உடன்பணிபுரிவர்களுக்கு
உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை; உபத்திரவம்
செய்யாமலிருந்தால் பல நன்மைகள் தேடிவரும்.
ஏழில் பாதகாதிபதி
ஒரு மனிதனின் வாழ்க்கையில்
திருமணம் என்பது மிக முக்கியமான அத்தியாயம். அதன்படி, ஏழாமிடத்தில் எந்த பாதிப்பும் இல்லாவிடில், உரிய வயதில் திருமணம் நடந்து முடியும். ஏழில் நிற்கும்
பாதகாதிபதி மொத்த வம்பு வழக்கின் குத்தகைதாரர் என்பதால், திருமணம் சற்று காலதாமதமாகும். திருமணமான தம்பதி களுக்குள்
கருத்து வேறுபாடு இருக்கும். மன நிறைவான மணவாழ்க்கை அமையாது. சில தம்பதிகள் தொழில், உத்தியோகம் நிமித்தமாக ஆளுக்கொரு ஊரில் அல்லது நாட்டில்
வாழ்வார் கள். வெகு சிலருக்கு கருத்து வேறுபாட்டால் பிரிவினை நடக்கும்.
சிலருக்குத் திருமணமே நடக்காது.
தொழில் கூட்டாளி களால் பணப்
பரிவர்த்தனை யில் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழில் ஒப்பந்தம், கூட்டாளிகள் பிரச்சினை அல்லது வாழ்க்கைத்துணையால் ஏற்படும்
மனக்கசப்பு என்று ஏதாவதொரு காரணத்திற்காக வம்பு, வழக்கு உருவாகும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவது கடினம்.
நண்பர்கள் விலகிச்செல்வது போன்ற
உணர்வு மனதை வாட்டும். பொதுநலச் சேவையில் ஆர்வம் அதிகரிக்கும். பொது நலச் சேவை
பிறருக்காகச் செய்யும்போது, அனைத்தும்
தன்னலமற்ற சேவையாகி பரிபூரணமாக முடிந்து பாராட்டு கிடைக் கும். சுயநலத்திற்காகச்
செய்யும்போது வம்பு, வழக்கு, குற்றம் பதிவாகும்.
பரிகாரம்
பாதகாதிபதி தோஷத்தால் திருமணத்
தடையை சந்திப்பவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்
வரும் பிரதோஷத் தன்று விரதமிருந்து சிவபெருமானையும் நந்தியையும் வழிபடுவதுடன், உளுந்து, சுண்டல்
தானம் தரவேண்டும்.
தொடர்ந்து பன்னிரண்டு பௌர்ணமி
யன்று கிரிவலம் வரவேண்டும்.
வாழும் ஊரின் சிறப்பு வாய்ந்த
அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் குங்கு மார்ச்சனை செய்து, ஆறு நெய் தீபமேற்றி வழிபடவும்.
எட்டில் பாதகாதிபதி
எட்டாமிடம் என்பது துன்பம், வேதனை, சிக்கல், அவமானம், ஆபத்து
போன்ற விரும்பத்தகாத செயல்களைப் பற்றிக் கூறுமிடம். மறைவு ஸ்தானம் என்பதால், விரும்பத்தகாத செயல்கள் நடந்துகொண்டே இருக்கும். ஆயுள், ஆரோக்கியம் பற்றிய பயவுணர்வு இருந்துகொண்டே இருக்கும். நித்திய
கண்டம், பூரண ஆயுள் என ஆயுள்பயத்தை அதிகரிக்கும்.
எந்த வைத்தியத்திற்கும்
கட்டுப்படாத- வெளியே தெரியாத மர்மநோய் இருக்கும். அடிக்கடி கைகால்களில் அடிபட்டுக்
கொண்டே இருக்கும்.
நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாமல் வெறுமை உணர்விருக்கும். மன நிறைவிருக் காது.
தனியாக, அமைதியாக இருப்பதை மனம் விரும்பும்.
சிலர் பூர்வீகத்தைவிட்டு வெகுதொலைவில் சென்று குடியேறுவார்கள். பாதகாதிபதி ராகு-
கேதுவுடன் சம்பந்தம் பெறும்போது சட்டத்திற்குப் புறம்பான குற்றத்தில் ஈடுபட்டு
சிறைதண்டனை அனுபவிக்கநேரும்.
எட்டாமிடம் என்பது பெண்களுக்கு
மாங்கல்ய ஸ்தானம் என்பதால், சிலரின்
வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிப்படையும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் வேதனை
தரும் நீடித்த வம்பு, வழக்கு-
அதனால் வரும் அசிங்கம், அவமானம் என
வாழ்வே வெறுப்பாக இருக்கும். சிலருக்கு இயற்கைக்கு மாறான மரணம் ஏற்படும்.
வெகுசிலருக்கு தவறானவழியில் திடீர் பணக்கார யோகம் கிடைக்கும்.
பரிகாரம்
திருவாரூர் மாவட்டம், திருவாஞ்சியம் கிராமத்திலுள்ள வாஞ்சிநாதரை வழிபட, எட்டாமிட பாதகாதிபதியால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதி
கிடைக்கும்.
சனிக்கிழமை எட்டுபேருக்கு எள்ளு
ருண்டை தானம் தரவேண்டும்.
"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம்
புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்
முக்ஷிய மாம்ருதாத்'
என்னும் மகா மிருத்யுஞ்ஜய
மந்திரத்தை தினமும் 108 முறை
ஜபிப்பதன்மூலம் மரண பயம் நீங்கும்; ஆயுள்
அதிகரிக்கும்;
இறைவழிபாட்டில் நாட்டம் ஏற்படும்; தீராத நோய் தீரும்.
தீராத வம்பு, வழக்கை சந்திப்பவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் காலபைரவரை
வழிபடவேண்டும்.
============================================================
ஒன்பதில்
பாதகாதிபதி
ஒன்பதாமிடத்தில் நிற்கும்
பாதகாதிபதியால் பாக்கிய ஸ்தான வலிமை குறையும். தந்தை மற்றும் தந்தைவழி
உறவினர்களின் ஆதரவிருக்காது. தந்தை- மகன் உறவில் விரிசல் ஏற்படும். தந்தையின்
அன்பு, ஆசியைப் பெறுவது கடினம்.
தந்தையும் மகனும் பிரிந்து
வாழநேரும் அல்லது தந்தைக்கு ஆரோக்கியம் குறைவுபடும். பித்ருக்களின் நல்லாசிகள்
கிடைக்காது. பல தலைமுறையாகத் தீர்க்கமுடியாத பித்ரு தோஷம் தொடர்ந்துகொண்டே
இருக்கும். பித்ருக்கள் வழிபாட்டைக் கடைப்பிடிக்க முடியாது.
பூர்வீகச் சொத்தால் பயனற்ற நிலை
பல தலைமுறையாகத் தொடரும். வம்பு, வழக்கு
இருக்கும். வெகுசிலருக்கு பூர்வீகம், குலம், கோத்திரம், குலதெய்வம்
தெரியாது. சிலர் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வாழ்வார்கள்.
தந்தை மற்றும் தந்தைவழியில்
இரண்டு திருமணம் செய்தவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
உயர்கல்வி கற்கும் வாய்ப்பு
குறைவுபடும் அல்லது எளிதில் தேர்ச்சிபெற முடியாத "அரியர்ஸ்' பாடத்தால் பிரச்சினை இருக்கும். சிலருக்கு, படித்த படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்காது. படித்த
படிப்பைப் பயன்படுத்த முடியாது. முறையான அங்கீகாரமின்மை, மரியாதைக் குறைவிருக்கும்.
மத நம்பிக்கை குறைவுபடும் அல்லது
ஆன்மிகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு தடைப்படும். ஆன்மிகப் பெரியோர்களின் நல்லாசி
கிடைக்காது.
நீதி, தர்மம், சட்டத்தை
அலட்சியம் செய்வார்கள். அரசியல் ஈடுபாடு இருக்கும்.
ஆனால், அரசியலால் ஆதாயமிருக்காது. குழந்தை பாக்கியம் ஏற்படுவதில்
காலதாமதமாகும். பெண்களுக்கு கருப்பை பிரச்சினையிருக்கும்.
பரிகாரம்
வயது முதிர்ந்த அந்தணர்களுக்கு
உணவு, உடை தானம் தந்து, காலில் விழுந்து நல்லாசி பெறவேண்டும்.
ஜென்ம நட்சத்திர நாளில் ஆன்மிகப்
பெரியோர்கள், மத குருமார்களின் நல்லாசி பெறவேண்டும்.
கோதானம் செய்ய பல தலைமுறையாகத்
தீராத பித்ரு சாபம் தீரும்.
சனிக்கிழமை காக்கைக்கு எள்சாதம்
வைக்கவேண்டும்.
சனிக்கிழமையன்னு தேனி மாவட்டம், குச்சனுர் சனி பகவானை வழிபடவேண்டும்.
பத்தில் பாதகாதிபதி
பத்தில் பாதகாதிபதி
இருப்பவர்களுக்கு பிரம்மாண்டமான தொழில் சிந்தனை இருக்கும். ஆனால், செயல்படுத்த முடியாத வகையில் தடையிருக்கும்.
படித்த படிப்புக்குத் தகுந்த வேலை
கிடைத்தால் மட்டுமே வேலைக்கு செல்வேன் என்று, "வேலையில்லா
பட்டதாரி' தனுஷ்போல் அடம்பிடித்து பெற்றோரை
நோகடிப்பார்கள். சிலர் அரை நூற்றாண்டு வயதானாலும், ஆறு மாதத்திற்கொருமுறை வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் ஒரு
மனிதன் தனக்கென்று பிடித்த தொழில் அல்லது வேலையில் நிலைத்திருக்க வேண்டும்.
இவர்கள் ஆறு மாதம் வேலை பார்ப்பார்கள். பிறகு, வேலைபிடிக்கவில்லை என்று ஒரு வருடம் சொந்தத் தொழில் செய்வார்கள்.
மறுபடியும் தொழில் சரியில்லை என்று வேலைக்குச் செல்வார்கள்.வாழ்க்கையில் பார்க்காத
தொழில் கிடையாது,
செய்யாத வேலை கிடையாது
என்கிறரீதியாக தொழில் மற்றும் வேலையில் மாறிமாறி இருப்பார்கள். இவர்களுக்கு தொழில்
செட்டாகுமா? வேலை செட்டாகுமா என்ற கேள்வியுடன்
பெற்றோர் ஜோதிடரைத் தேடி அலைந்துகொண்டே இருப்பார்கள். சிலருக்கு சிறப்பான தொழில்
அல்லது வேலை அமையும்.பாதகாதிபதியின் தசை ஆரம்பமானவுடன் தொழில் அல்லது வேலையில்
நிரந்தரமற்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். சிலர் "ஃபிரீலேன்ஸர் ஜாப்' என்ற பெயரில், வருடம்
ஒருமுறை சொற்பப் பணம் சம்பாதிப்பார்கள்.
அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு
பதவியில் உட்கார்ந்த நாள்முதல் தினமும் பாதகமான சூழ்நிலையை சந்தித்து, அரசியலே வெறுக்கும் வகையிலான பாதகம் தொடரும்.
பத்தில் நிற்கும் பாதகாதிபதி, நெருங்கிய ரத்த சம்பந்த உறவுகளின் கர்மாவில் கலந்துகொள்ள
முடியாத நிலையைத் தருவார். சிலர், அங்காளி பங்காளி
வீட்டின் கர்ம காரியத்திற்குச் செல்லும் போதெல்லாம் மனக்கசப்பை சந்திக்கநேரும்.
பரிகாரம்
சனிக்கிழமை சனி ஓரையில் சிவ
தரிசனம் செய்துவர, தொழில்
மற்றும் உத்தியோகம் தொடர்பான இன்னல்கள் அகலும்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்கேஸ்வரரை வழிபட, நிலையான- நிரந்தரமான தொழில், உத்தியோகம் கிடைக்கும்.
துப்பரவுத் தொழிலாளிகள், தினக்கூலிகள், கடினமான
வேலை செய்யும் கீழ்நிலைத் தொழிலாளிகளைத் தரக்குறைவாகப் பேசக்கூடாது. பேரம் பேசக்
கூடாது. உழைத்த கூலியை உடனடியாகக் கொடுக்கவேண்டும்.
அரசியல் வாழ்க்கை, பதவியில் பிரச்சினை இருப்பவர்கள் திருவண்ணாமலை சென்று
அண்ணாமலையரை வழிபட, பதவியிலுள்ள
இடர்ப்பாடுகள் அகலும்.
பதினொன்றில் பாதகாதிபதி
தொழிலோ உத்தியோகமோ- வருமானம், லாபம் இருந்தால் மட்டுமே உழைக்கும் ஆர்வமிருக்கும்.
பதினொன்றில் பாதகாதிபதி இருப்பவர்களுக்கு தொழில் சிறப்பது போல் வாடிக்கையாளர்கள்
அதிகமாக இருப்பார்கள். கூட்டம் கூடும்; கல்லா
களைகட்டாது அல்லது பெரிய தொழில் செய்வதுபோல் போன் பேசிக்கொண்டே இருப்பார். ஆனால்
லாபம் கிடைக்காது. சிலர் நல்ல புத்திசாலியாக திட்டம் போட்டு தொழில்செய்து, பரிவு மிகுதியால் லாபத்தைக் கூட்டாளிக்கு விட்டுக்கொடுத்து
பாதகத்தைத் தேடிக்கொள்வார்கள். இவர்களின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி பலர் இவர்களை
ஏமாளியாக்குவார்கள்.
சிலர் தொழில், லாபம் என உபரியாக சம்பாதித்து, சட்டப்படியான அன்பான மனைவியிடம் வருமானத்தைக் கொடுக்கா மல், சட்டத்திற்குப் புறம்பான இரண்டாவது மனைவியிடம் கொடுத்து
ஏமாறுவார்கள். கூட்டுத்தொழில் செய்யும் சகோதரர்களில் தம்பியின் லாபம் அண்ணனால் ஏமாற்றப்
படும். பதினொன்றில் பாதகாதிபதி இருப்பவர் களின் பாகப்பிரிவினைச் சொத்து குடும்ப
உறுப்பினர்களால் ஏமாற்றப்படும். ஏமாறு பவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள்
காட்டில் அடைமழைதான்.
வயோதிகக் காலத்தில்
பதினொன்றிலிருக்கும் பாதகாதிபதியின் தசை வந்தால், உடல் உபாதைகள் மிகுதியாக இருக்கும்.
பரிகாரம்
உடன்பிறந்தவர்களிடையே லாபப்
பங்கீட்டில் கருத்து வேறுபாடிருந்தால், விநாயகரும்
முருகனும் இணைந்த படத்தை வைத்து வழிபட, சகோதர
ஒற்றுமை மேலோங்கும்.
சொத்துப் பங்கீட்டில்
குடும்பத்தில் குழப்பமிருப்பவர்கள், சென்னை
செங்குன்றம் அருகிலுள்ள சிறுவாபுரி முருகனை வழிபட, சுபமான முடிவு கிடைக்கும்.
தினமும் வில்வாஷ்டகம் படித்து வர, தொழிலில் லாபம் பெருகும்.
பன்னிரண்டில் பாதகாதிபதி
பன்னிரண்டாமிடத்துடன் சம்பந்தம்
பெறும் பாதகாதிபதி, சிலருக்கு
தூக்கக் குறைவைத் தருவார். சிலரை துக்கத்திலும் தூக்கத்திலுமே வாழ்நாளைக் கழிக்கச்
செய்வார்.
வாழ்நாள் முழுவதும் சேமிப்பே
இல்லாமல் பற்றாக்குறை பட்ஜெட்டில் வாழ்வார்கள். வரவுக்குமீறிய செலவால் அவஸ்தை
யிருக்கும். கையில் பணம் தங்காது.
சிலருக்கு இல்வாழ்க்கை ஈடுபாடு
இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு அல்லது பிரிவினை ஏற்படும். வெகுசிலர்
தவறான சிற்றின்பத்தால் அசிங்கப்படுவார்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் மீளமுடியாத
தண்டனையை அனுபவிப்பார்கள்.
சிலர் அதிர்ஷ்டத்தின்மேல்
நம்பிக்கை வைத்து எந்திரம், மந்திரம், தந்திரம் என அலைந்து, மிகுதியான
பொருள் விரயத்தை விலைகொடுத்து வாங்குவார்கள். 10, 11, 12-ஆமிடத்துடன் சம்பந்தம்பெறும் பாதகாதி பதியால், தொழிலில் தவறான முதலீடு, மீளமுடியாத
இழப்பை சந்திக்கநேரும். மிகுதியான பொருள் லாபத்திற்கு ஆசைப் பட்டு, சட்டத்திற்குப் புறம்பான செயல் அல்லது அரசுக்கு விரோதமான
தொழில் செய்து அகப்படுவார்கள்.
வாழ்நாளில் அதிக
துன்பமடைந்தவர்கள் மோட்சமடையும் மார்க்கத்தைத் தேடியலை வார்கள். சிலர் துக்க
மிகுதியால் தலைமறைவாவார்கள். வெகுசிலர் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வார்கள்.
உடல் அயர்ச்சி, உடல் உபாதைகள் மிகுதியாக இருக்கும். பன்னிரண்டாமிடத்துடன்
சம்பந்தம்பெறும் பாதகாதிபதியின் தசா, புக்திக்
காலங்களில் அறுவை சிகிச்சை யால் உடலுறுப்புகள் அகற்றப்படும் அல்லது செயற்கை
உறுப்பு பொருத்தப்படும். கோட்சாரத்தில் பன்னிரண்டாமிடத்துடன் பாதகாதிபதி
சம்பந்தம்பெறும் காலங்களில் சிலர் மூட்டு மற்றும் கால்களில் அவசிய மற்ற அறுவை
சிகிச்சையால் பின்னாளில் அவஸ்தையை அனுபவிப்பார்கள்.
சிலர் வெளிநாட்டுக் குடியுரிமை
பெற்று சொந்த மண்ணிற்குத் திரும்பமுடியாமல் வெளிநாட்டில் செட்டிலாகிவிடுவார்கள்.
பரிகாரம்
வீண்விரயத்தைத் தவிர்க்க
ஆதரவற்றவர்களுக்கு இயன்ற தானம் தரவேண்டும்.
நேரம் கிடைக்கும்போது கோவில்களில்
உழவாரப் பணிகளைச் செய்யவேண்டும்.
உடல் ஊனமுற்றவர்களுக்குத் தேவையான
உபகரணங்களை வழங்கவேண்டும்.
சனிக்கிழமைகளில் கருவேப்பிலை
துவையல் சாப்பிடவேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பதாம்
அதிபதி பாக்கியாதிபதி என்பதாலும், பதினொன்றாம்
அதிபதி லாபாதிபதி என்பதாலும் எந்த பாதகத்தையும் செய்யமாட்டார்கள் என்பது பலரின்
நம்பிக்கை. அத்துடன், உபய லக்னத்
திற்கு ஏழாமதிபதியே பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வருவதால், உபய லக்னத் திற்கு மட்டுமே பாதகாதிபதி அசுபத்தைத் தருவாரென
சிலரிடம் தவறான நம்பிக்கை இருந்துவருகிறது.
இனி, சர லக்னத்திற்கு லாபாதிபதி பாதகத்தைச் செய்வாரா? லாபத்தைத் தருவாரா? ஸ்திர
லக்னங்களுக்கு முழு யோகத்தைச் செய்யக்கூடிய ஒன்பதுக்குடையவர் பாதகாதிபதியாக
வருவதால் யோகத்தைத் தருவாரா? பாதகம்
செய்வாரா? உபய லக்னத்திற்கு பாதகம் மிகுதியாக
இருக்குமா? மாரகம் மிகுதியாக இருக்குமா என்பது போன்ற
பல சந்தேகங்களை பன்னிரண்டு லக்னங்களுக்கும் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் சர லக்னம். பாதகாதிபதி சனி.
பதினொன்றாமிடமான லாப ஸ்தானமே பாதக ஸ்தானமாகும். லக்னாதிபதி செவ்வாயே
அஷ்டமாதிபதியாக வருவதால், சுபமும்
அசுபமும் கலந்தே இருக்கும். மேலும், லக்னாதிபதி
செவ்வாயும், பாதகாதிபதி சனியும் கடும்பகை கிரகங்கள்
என்பதால், செவ்வாய், சனி சம்பந்தம் எவ்வகையில் இருந்தாலும் பாதகம் கடுமையாக இருக்கும்.
ராசிக்கட்டத்தில் சனி எந்த
இடத்தில் நின் றாலும், சனிதசை
மற்றும் புக்திக் காலங்களில் பாதகத்தைச் செய்வார். சனிதசையில் ஜாதகர் சுபப் பலனை
எதிர்பார்க்க முடியாது.
மேலும், சனி, செவ்வாய்க்கு
ராகு- கேது சம்பந்த மிருந்தால் பாதிப்பு வீரியமுடையதாக இருக் கும். அத்துடன்
பதினொன்றாமிடமான கும்ப ராசியில் எந்த கிரகம் நின்று தசை நடத்தினாலும், தசையின் ஆரம்பக் காலத்தில் லாபத்தைத் தந்தாலும், தசைமுடிவில் பாதகமே மிஞ்சும். ஆனாலும், மேஷம் சர லக்னம் என்பதால், பெரிய பாதிப்பிருந்தாலும் பிரச்சினை வெளியே தெரியாது. எளிதில்
மீண்டுவரும் வாய்ப்பு தேடிவரும்.
பரிகாரம்
சனி, செவ்வாய் சம்பந்தத்தால் பாதகத்தை அனுபவிப்பவர்கள், சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் 9.00 மணிவரையான செவ்வாய் ஓரையில் சிவப்புத் துவரையை தானம்தர பாதகம்
குறையும்.
ஜென்ம நட்சத்திர நாட்களில் ஊரின்
எல்லை மற்றும் காவல் தெய்வத்தை வழிபட நிம்மதி அதிகரிக்கும்.
====================
ரிஷபம்
இது ஸ்திர ராசி
என்பதால், ஒன்பதாம்
அதிபதியான சனி பாதகாதிபதி.லக்னாதிபதி சுக்கிரனே ஆறாமதிபதியாக இருப்பதால், பொருள் கடனைவிட பிறவிக்கடன் அதிகமாக இருக்கும்.
அதாவது, தன் முன்ஜென்ம
வினையால் அல்லது நீத்தாருக்குரிய வழிபாட்டை முறையாகச் செய்யாத முன்னோர் கடன்
தாக்கமிருக்கும். சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால், பெரும் பாதகத்தைச் செய்ய மாட்டார்கள் என்னும்
கருத்தை ஏற்றுக் கொள்ளலாம். சனி பாக்கியாதிபதி என்பதால் முழுமையாக பாதகம் செய்ய
மாட்டார். சாதகமும், பாதகமும் கலந்தே
இருக்கும். ஆனால், ஒன்பதாமிடத்திற்கு
ராகு- கேது, குரு
சம்பந்தமிருந்தாலும், குருவுக்கும்
சனிக்கும் சம்பந்தம் எவ்வகையில் இருந்தாலும், பாதகம் ஜாதகரை நிலையிழக்கச் செய்யும். ஸ்திர
லக்னம் என்பதால்- பாதிப்பு எளிதில் விட்டுவிலகாதென்பதால், குரு மற்றும் சனி தசைக் காலங்களில் சுயஜாதகத்தை
சரிபார்ப்பது மிகமிக அவசியம்.
பரிகாரம்
குரு, சனி சம்பந்தத்தால் பாதகத்தை சந்திக்கும் ரிஷப
லக்னத்தினர், ஜென்ம நட்சத்திர
நாளில் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர்
மகாலிங்கேஸ்வரரை வழிபட தோஷத்தின் வீரியம் குறையும். அமாவாசை நாட்கள் மற்றும் மகாளய
பட்ச காலங்களில் முன்னோர் வழிபாட்டை முறைப்படுத்த, பாக்கியப் பலன் அதிகரிக்கும்.
12
மிதுனம்
இது உபய லக்னம்
என்பதால், ஏழாமதிபதியான
குருவே பாதகாதி பதி, மாரகாதிபதி
மற்றும் கேந்திராதிபதி யாக இருப்பதால், குரு சுபவலுப் பெறக் கூடாது. மிதுன லக்னத்திற்கு ஆட்சி, உச்சம் பெற்ற குரு தன் தசாபுக்திக் காலங்களில்
மீளமுடியாத பாதகம் மற்றும் மாரகத்தை நிச்சயம் கொடுப்பார். லக்னத்திற்கு இரண்டில்
குரு உச்சம் பெற்றால், 2, 10 சம்பந்தம்-
பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழில் நல்ல லாபம் பெற்றுத்தருமென பலர் கூறுவார்கள்.
குருதசை நடக்காதவரை இவரே ராஜா! குருதசை, புக்தி வந்தால், லாபத்தைவிட
பன்மடங்கு பாதகமும், மாரகமும்
இருக்கும். ஆட்சி பலம்பெற்ற குரு திருமணத்தில், திருமண வாழ்க்கையில், தொழிலில், கூட்டாளி கள் மற்றும் நண்பர்களால் சுபத்தைவிட
அசுபத்தையே மிகுதிப்படுத்துவார். குருவுக்கு சனி மற்றும் ராகு- கேதுக்களின்
சம்பந்தமிருந்தால், ஜாதகருக்கு
பாதகமும், மாரகமும்
கண்டமாகப் பின்தொடர்ந்து துயரம் தரும். மிதுனம் உபய லக்னம் என்பதால் பிரச்சினை
தீவிரமடையுமா? வலுவிழக்குமா
என்பதை கோட்சார குரு, சனி, ராகு- கேதுக் களே முடிவுசெய்யும். பாதகாதிபதி
குருவே மாரகாதிபதியாக இருப்பதால், கொடிகட்டிப்
பறந்த பல மிதுன லக்னத்தினர் குருதசைக் காலங்களில் கடுமையான பாதகம் கலந்த மாரகத்தை
சந்தித்திருக்கிறார்கள். லக்னம் மற்றும் ஏழாமிடத்தில் ஆட்சி பலம்பெற்ற குரு பல
மிதுன லக்னத்தினருக்குத் திருமணம் என்னும் அத்தியாயத்தைத் தரவில்லை என்பது
நிதர்சனமான உண்மை. பல மிதுன லக்னத்தினர் திருமண வாழ்க்கையில் தோல்வியைத்தான்
சந்தித்திருக் கிறார்கள். குரு, சனி சம்பந்தம் பல
மிதுன லக்னத் தாருக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவைத் தந்தாலும், திருமண வாழ்க்கையில் தோல்வியையும்
விரக்தியையும்தான் சந்திக்க வைத்தது. சிலருக்கு நண்பர்களால் ஏற்பட்ட சாதகத்தைவிட
பாதகம் கலந்த மாரகமே அதிகம். எனவே, குருதசை, புக்திக் காலங்களில் மிதுன லக்னத்தினர் கவனத்
துடன் செயல்படவேண்டும்.
பரிகாரம்
பாதக தோஷத்தால்
தொழிலில் இடர்ப் பாடுகளை சந்திப்பவர்கள் வியாழக்கிழமை மதியம் 1.30 மணிமுதல் 3.00 மணிவரையான ராகு வேளையில் பைரவரை வழிபட,
உடனே பலன் தெரியும்.
திருமணத்தடையை சந்திப்பவர்கள் வியாழக் கிழமை வரும் பிரதோஷ வேளையில் நந்திக்கு
கரும்புச்சாறு அபிஷேகம் செய்துவர தடையகலும்.
கடகம்
சர ராசியான
கடகத்திற்கு பதினொன்றாம் அதிபதியான சுக்கிரன் பாதகத்தைச் செய்வார். கடகத்திற்கு
அஷ்டமாதிபதி சனியின் சம்பந்தமானது பாதகாதிபதி சுக்கிரனுக்கு எவ்விதத்தில்
இருந்தாலும், பாதகத்தின்
விளைவு ஜாதகருக்கு மோசமான கஷ்டத்தைத் தரும். சனி, சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றாலும் ராகு- கேதுக்களின்
சம்பந்தமிருந்தாலும் திருமண வாழ்க்கை மனநிறைவைத் தராது. பதினொன்றாமிடமான பாதக
ஸ்தானத் தில் எந்த கிரகம் இருந்தாலும், நின்ற கிரகத்தின் தசையின் ஆரம்பத்தில் லாபத்தைக் கொடுத்தாலும் தசையின்
முடிவில், கொடுத்ததைவிட
பன்மடங்கு அழிவு, ஏமாற்றம் மற்றும்
வம்பு, வழக்குண்டு. கடகம் சர
லக்னம் என்பதால் பிரச்சினையிவிருந்து மீள்வது எளிது. எனினும், சுக்கிர தசைக் காலங்களில் சுக்கிரன் நின்ற
இடத்திற்கேற்ப பலன் மாறுபடும்.
பரிகாரம்
பாதக தோஷத்தால்
திருமணத்தடையை சந்திக்கும் கடக லக்னத்தினர் திருச்சி திருவானைக்காவல்
ஜம்புகேஸ்வரர் மற்றும் அகலாண்டேஸ்வரியை வழிபட திருமணத்தடை அகலும். ரிஷபத்தில்
நின்ற கிரகத்தின் தசைக் காலங்களில், தொழில் இடர்ப்பாடுகளைத் தவிர்க்க, தசைக்காலம் முழுவதும் பிரதோˆ நாட்களில்
நந்திக்கு பச்சரிசி மாவில் அபிúˆகம் செய்துவர
பாதிப்பு குறையும்.
சிம்மம்
சிம்மம் ஸ்திர
லக்னம். பாதகாதிபதி செவ்வாய். சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள்.
சிம்மத்திற்கு ஏக யோகாதிபதி செவ்வாய். இங்கே செவ்வாய் சிம்மத்திற்கு பாக்கியத்தைத்
தருவாரா? பாதகத்தைத்
தருவாரா என்னும் கேள்வி எழும். சிம்மம் ஸ்திர லக்னமாக இருந்தாலும், சூரியனை லக்னாதிபதியாகக் கொண்ட சிம்ம
லக்னத்தவர்களுக்கு அனுபவத்தில் செவ்வாய் பெரும் பாதகத்தைத் தருவது கிடையாது.
செவ்வாய்க்கு குருவின் சம்பந்தமிருந்தால் சிறிய பாதகம் உண்டு. கடும் பகைவர்களான
ராகு- கேது, சனியின்
சம்பந்தம் சூரியன் மற்றும் செவ்வாய்க்கு இருந்தால், பாதக தோஷத்தைத் தரும். குரு, செவ்வாய் சம்பந்தமிருக்கும் சிம்ம லக்னத்தினர்
உபரிப் பணத்தை அரசுடைமை வங்கியில் சேமிக்கவேண்டும். தங்க நகைகளை லாக்கரில்
வைக்கவேண்டும். பூர்வீக சொத்தைப் பிரித்துப் பத்திரம் எழுதும்போது கவனமாக
இருந்தால் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
பரிகாரம்
ஆந்திர மாநிலம்,
காளஹஸ்தி சென்று
காளத்தியப்பரையும் ஞானப் பிரசுனாம்பி கையையும் வழிபட பாக்கியப் பலனுண்டு. குரு-
செவ்வாய் சம்பந்தத்தால் பாதகத்தை சந்திப்பவர்கள், செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணிமுதல் 1.00 மணிவரையான குரு ஓரையில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்பான உணவை தானம்
தருவது சிறப்பு.
கன்னி
உபய லக்னமான
கன்னிக்கு பாதகாதிபதி, கேந்திராதிபதி
மற்றும் மாரகாதிபதி குரு. இவர்களுடைய ஜாதகத்தில் பாதகாதி குரு, அஷ்டமாதிபதி செவ்வாய் சம்பந்தம் எவ்வகையில்
இருந்தாலும் பாதகம் மிகுதியாக இருக்கும். ஏழில் ஆட்சி பலம்பெறும் குருவும்,
கன்னி யில் நிற்கும்
குருவும் தன் தசை, புக்திக் காலங்
களில் திருமணத்தில், திருமண
வாழ்க்கையில் பாதகத்தையும் மாரகத்தையும் செய்யத் தவறுவதில்லை. ராகு- கேதுக்களின்
தாக்கத் தைக்கூட வழிபாட்டால் சரிசெய்கிறோம். பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக
வரும் கிரகங்கள் விசாரணையே செய்வது கிடையாது. நேரடியாக எதிர்பாராத தண்டனையைக்
கொடுத்துவிடுவதுதான் விபரீத விளைவு. உபய லக்னம் என்பதால் பிரச்சினையின் தீவிரத்தை
உணரும் முன்பே தண்டனையே கிடைத்துவிடும். மேலும், அனைத்துப் பிரச்சினைக்கும் ஜோதிடரீதியான
தீர்வுண்டு என்பதால் பயப்படவேண்டிய அவசியமில்லை. ஏழில் மீனத்தில் குரு ஆட்சி
பலம்பெற்று, குருதசை
நடப்பவர்கள் கவனமாகச் செயல்பட்டால் பாதகத்தைக் குறைக்க முடியும். பல கன்னி
ராசியினர் குருதசைக் காலங்களில் கனக புஷ்பராகக் கல்லை அணிந்தே மாரகத்தைத் தேடிக்
கொள்கிறார்கள்.
பரிகாரம்
திருச்செந்தூர்
முருகனை வழிபட்டு, கடற்கரையிலுள்ள
மூவர் சமாதியில் உள்ள சித்தர்களை வழிபட வளம் பெருகும். மிகுதியான மாரகம், பாதகத்தை அனுபவிப்பவர்கள் வசதிவாய்ப்பிருந்தால்
அந்தணர்களுக்கு பசுமாட்டை தானம் தரலாம். வசதியில்லாதவர்கள் கோபூஜை செய்யவேண்டும்
அல்லது பசுவுக்கு உணவு தரவேண்டும்.
துலாம்
துலாம் சர
லக்னம். பாகாதிபதி சூரியன். துலாம் சூரியனின் நீச வீடு என்பதால் பெரிய பாதகத்தைச்
செய்வதில்லை. எனினும், 7-ல் உச்சம் பெறும்
சூரியன் திருமண விஷயத்தில் ஜாதகருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும்
ஏமாற்றத்தையும் தருகிறது. சூரியன், கேது சாரத்தில்
இருந்தால், திருமணத்தால்
வம்பு, வழக்கையும், சுக்கிரன் சாரத்தில் இருந்தால் மிகக்
காலதாமதமான திருமணத்தையும், சுய சாரத்தில்
இருந்தால் திருமணமே கேள்விக்குறியாகும் நிலையையும் தரும். அத்துடன் 1969,
1970-களில் மேஷத்தில் சனி
நீசமாக இருந்த காலகட்டத்தில் பிறந்த துலா லக்னத்தினர்- குறிப்பாக, சனிக்கு சூரியன் சம்பந்தம் பெற்ற பல துலா
லக்னத்தினர்- திருமணத்தடைக்கான காரணம் தெரியாமல் ஜோதிடர்களை அணுகுவதே இதற்கு
சாட்சி. பொதுவாக, சூரியனுக்கு
அஷ்டம பாதக தோஷம் கிடையாதெனினும், சூரியனுக்குப்
பகை கிரகங்களான சனி, ராகு- கேது
சம்பந்த மிருந்தால் சூரியதசை, புக்திக்
காலங்களில் பாதகம் தன் கடமையைச் செவ்வனே செய்கிறது.
பரிகாரம்
திருநெல்வேலி
மாவட்டம், சங்கரன் கோவிலில்
அருள்பாலித்து வரும் சங்கர நாராயணர் மற்றும் கோமதியம்மனை வழிபட, பாதகம் சாதகமாகும். தொடர்ந்து 18 வெள்ளிக்கிழமை சிவன் கோவிலிலுள்ள அம்பிகைக்கு
குங்குமார்ச் சனை செய்து வழிபட திருமணத்தடை அகலும்.
விருச்சிகம்
காலபுருஷ அஷ்டம
ஸ்தானம். ஸ்திர லக்னம். இதன் அதிபதி செவ்வாய்.ஒன்பதாமதிபதியான சந்திரன்
பாதகாதிபதி. சந்திரனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், விருச்சிக லக்னத்திற்கு சந்திரன்
பாக்கியாதிபதியா? பாதகாதிபதியா?
ஒன்பதாம் அதிபதி சந்திரன்
என்பதால் தாய்வழியில் பாதகமா? பாக்கியமா?
ஒன்பதாம் அதிபதி என்பதால்
தந்தைவழியில் பாக்கியமா? பாதகமா என்னும்
சந்தேகம் எழும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமடைகிறார். கடகத்தில் செவ்வாய்
நீசமடைகிறார். அதாவது, சர (கடகம்)
லக்னத்தின் அதிபதி யாக வரும் சந்திரன் ஸ்திர லக்னமான விருச்சிகத்தில்
நீசமடைகிறார். ஸ்திர லக்னத்தின் அதிபதியான (விருச்சிகம்) செவ்வாய் சர லக்னமான
கடகத்தில் நீசம்பெறுகிறார். லக்னாதிபதி செவ்வாயின் நீசவீடு கடகம் என்பதால்,
சந்திரன் தன் தசை,
புக்திக் காலங்களில்
விருச்சிகத்திற்குக் கடுமையான பாதகத்தை மட்டுமே தருகிறது. ஏழரைச்சனி மற்றும்
அஷ்டமச்சனிக் காலங்களில் சந்திர தசை நடக்கும் விருச்சிக லக்னத்தினர் மிகுதி யான
கர்மவினைப் பதிவை அனுபவிக்கிறார்கள். சந்திரன் உடல்காரகன் மற்றும் மனோ காரன்
என்பதால், உடல் உபாதைகள்
மற்றும் மன உளைச்சல் ஜாதகரை மனநோயாளியாக மாற்றிவிடுகிறது. லக்னத்தில் சந்திரன் நீசம்பெற்றவர்கள்
மனசஞ்சலம் தாளாமல் உயிரைக்கூட மாய்க்கத் தயாராகிவிடுகிறார் கள். ஏழில் சந்திரன்
உச்சம்பெற்ற விருச்சிக லக்னத்தினர் திருமணம் ஏன் நடந்தது என்று வருந்தும் வகையில்
வாழ்க்கை இருக்கிறது. பாக்கிய ஸ்தானம் வலிமையிழப்பதால், பெற்றோரின் அன்பும் ஆதரவும் குறைவுபடும்.
ஜாதகரின் சந்திர தசைக் காலங்களில் விருச்சிக லக்னத்தவரின் தாய்- தந்தையின்
ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் என அனைத்தும்
பாதிப்படைகிறது. பொதுவாக, விருச்சிக லக்னம்
காலபுருஷ எட்டாமிடம் என்பதால், எளிதில் எந்தப்
பிரச்சினையையும் வெளியில் தெரிவிக்காது. பிரச்சினை தீவிரமடைந்த பின்பே வெளியில்
தெரியும். சந்திரனுக்கு சனி சம்பந்தமிருந்தால் புனர்பூ தோஷத்தால் கடுமையான பாதகம்
உருவாகும். சந்திரனுக்கு ராகு- கேது சம்பந்தமிருந்தால் புத்தித் தடுமாற்றம்
மிகையாக இருக்கும். மிகச்சுருக்கமாக, சந்திர தசைக் காலங்களில் ஜாதகரின் உடலில் உயிரைமட்டும் விட்டுவைத்து மனிதனை
நிர்கதியாக்குகிறது. பன்னிரண்டு லக்னங்களுள் பாதக தோஷத்தால் கடுமையான பாதகத்தைச்
சந்திப்பவர்கள் விருச்சிக லக்னத்தார்களே.
பரிகாரம்
சந்திர தசையில் பாதகத்தை அனுபவிப்பவர்கள் திருப்பதி வேங்கடாசலபதியை வழிபட மாற்றமும் ஏற்றமும் உண்டு. பௌர்ணமி திதியில், வயது முதிர்த்தவர்களுக்கு உணவு தருவது மிகச்சிறப்பு. பிரதோˆ காலத்தில் பச்சரிசிமாவில் நந்திக்கு தீபமேற்றி வழிபட புத்தித் தடுமாற்றம் மற்றும் மன சஞ்சலம் நீங்கும்.
உபய லக்னம். லக்னாதிபதி குரு.
தனுசுக்கு புதனே பாதகாதி பதி, மாரகாதிபதி
மற்றும் கேந்திராதிபதி.
இந்த லக்னத்தவரின் ஜாதகத் தில்
புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் பாதகத்தைச் செய்வார்.
குரு வுக்கு புதன் சம கிரகம். ஆனால், புதனுக்கு
குரு பகை கிரகம் என்பதால்- குருவின் 5, 9-ஆம்
சிறப்புப் பார்வை புதனுக்கு இருந்தால் பாதிக்காது. குரு, புதன் சமசப்தமப் பார்வை இருந் தாலும், புதனுக்கு அஷ்டமாதிபதி சந்திரனின் சம்பந்தமிருந்தாலும், புதனுக்கு ராகு- கேதுக்கள் சம்பந்தமிருந்தாலும் புதன் தசைக்
காலத்தில் பாதகம் ஜாதகரை பதம்பார்க்கும். புதன் ஆட்சி, உச்சம்பெற்றால், ஏழாம்
அதிபதி ஆட்சி,
உச்சம் சுபப் பலன் என்றே பலர்
பலன் கூறுகிறார்கள். பாதகாதிபதி ஆட்சி, உச்சம்
எனப் பலனு ரைத்து, அதற்குரிய
வழிபாட்டு முறைகளைப் பரிந்துரைக் கும்போது பாதகத்தை சாதகமாக்க முடியும்.
உபய லக்னத்தினருக்கு
பாதகாதிபதிகள் வலுப்பெறக் கூடாது. புதன் ஆட்சி, உச்சம் பெற்ற மிதுன லக்னத்தினர் திருமணத்திற்கு பெரிய
எதிர்பார்ப்பின்றி வரன் பார்த்தால், திருமணம்
சுலபமாக நடைபெறும். திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் அனுசரித்து, விட்டுக்கொடுத்துச் சென்றால் வாழ்நாள் இனிமையாகும்.
புதன், சந்திரன் சம்பந்தமிருக்கும் பல தனுசு லக்னத்தினர் நரம்பு
சம்பந்தப்பட்ட நோய், மனநோய்
மற்றும் சரும நோயை சந்திக்கிறார்கள். புதன் நீசம், அஸ்தமனம் பெற்ற மிதுன லக்னத்தினர் கமிஷன் அடிப்படையிலான சொந்தத்
தொழில் செய்வது சிறப்பான பலன் தரும்.
பரிகாரம்
மதுரை மீனாட்சியம்மனை புதன்கிழமை
களில் வழிபடுவது சிறப்பு. குரு, புதனின்
சமசப்தமப் பார்வையால் திருமணத்தடையை சந்திக்கும் தனுசு லக்னத்தினர் வியாழக்கிழமை
காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையான குரு ஓரையில் ஆலமரத்தடியில் அமர்ந்து பிரார்த்தனை
செய்தால் காரிய சித்தி கிட்டும்.
மகரம்
லக்னாதிபதி சனி. சர லக்னம்.
பதினொன் றாமிடம் பாதக ஸ்தானம். பாதகாதிபதி செவ்வாய். அஷ்டமாதிபதி சூரியனுக்கு
பாதகாதிபதி செவ்வாயின் சம்பந்தம் எவ்வகையில் இருந்தாலும், சூரியன், செவ்வாய்
தசைக் காலங்களில் பாதிப்பு உறுதி. உத்தியோகத் தடை, உத்தியோக உயர்வில் தடை, தொழில்
முடக்கம், கடன்தொல்லைகளால் பாதிப்பு ஏற்படும்.
செவ்வாய்க்கு சனி, ராகு- கேது
சம்பந்தமிருந்தால் பாதிப்பு இரட்டிப்பாகும். லக்னாதிபதி சனிக்கு சூரியன்
சம்பந்தமிருந்தாலும் பாதிப்பிருக்கும். மேலும், மகரம் சர லக்னம் என்பதால், பாதிப்பு
ஏற்பட்டாலும் நிலைமை வெகு விரைவில் சீராகும்.
பரிகாரம்
முருகனே குருவாக இருந்து
தந்தைக்கு பிரணவ மந்திரம் உபதேசம் செய்த சுவாமிமலை முருகனை வணங்குங்கள். சிவப்பு
நிற ஸ்வஸ்திக் சின்னத்தை சட்டைப் பை அல்லது பர்ஸில் வைத்துக் கொண்டால் துன்பங்கள்
விலகும். தொட்டது துலங்கும்.
கும்பம்
கும்பம் ஸ்திர லக்னம். ராசி
அதிபதி சனி. பாதகாதிபதி சுக்கிரன். சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்பதால்
கும்பத்திற்கு பாதக தோஷம் பாதிப்பைத் தராது கும்பம் காலபுருஷ பாதக ஸ்தானம்
என்பதால், மீனத் தில் சுக்கிரன் உச்சம் பெறும்
கோட்சார காலங்களில் பாதகம் பாதிப்பைத் தரும். பாதகாதிபதி சுக்கிரனுக்கும் அஷ்டமாதி
பதி புதனுக்கும் சம்பந்தமி இருந்தாலும், ராகு-
கேதுக்கள் சம்பந்தமிருந்தாலும் சுக்கிர தசை மற்றும் புக்திக் காலங்களில் பாதகம்
பாதிப்பைத் தரும். மிகக்குறிப்பாக, தந்தைக்கு
உடல்நலக் குறைவு,
தந்தையுடன் கருத்து வேறுபாடு, சுபப் பலன்கள் நடப்பதில் தடை, விரும்பமில்லாத இடப்பெயர்ச்சி ஏற்படும். சிலருக்கு இரண்டாவது
திருமணம் நடக்கும். மேலும், கும்பம்
ஸ்திர லக்னம் என்பதால் சாதகமும் பாதகமும் கலந்தே நடக்கும்.
பரிகாரம்
சென்னை, மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலில் விற்றிருக்கும்
கற்பகாம்பாளை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டுவர சுபப் பலன் தேடிவரும். வெள்ளிக்கிழமை
நெய் தீபமேற்றி மகாலட்சுமி அஷ்டோத்திரம் படித்துவர பாதக தோஷம் விலகும்.
மீனம்
காலபுருஷ பன்னிரண்டாமிடம். இதன்
அதிபதி குரு. மீனம் உபய லக்னம். பாதகாதிபதி புதன். இவரே கேந்திராதிபதி பாதகாதிபதி
மற்றும் மாரகாதிபதியாவார். மீனத்தில் உச்சம் பெறும் கிரகம் சுக்கிரன். நீசம்
பெறும் கிரகம் புதன். பாதக ஸ்தானமான கன்னியில் புதன் உச்சம் பெறுகி றார்.
சுக்கிரன் நீசம் பெறுகிறார். புதன் புத்தி அறிவுக்கு காரககிரகமாகும். சுக்கிரன்
ஆசைக்கு காரக கிரகமாகும் புத்தி தெளிந்த இடத்தில் காமத்திற்கு இடமில்லை. அளவில்லாத
ஆசையே மனிதர்களின் துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்த்துகிறது. லக்னம் மற்றும்
பாதக ஸ்தானம் இரண்டுமே உபய லக்னம் என்பதால் தம்பதிகளிடையே புரிதலின்மை மிகுதியாக
இருக்கும். லக்னத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவதால் கணவனுக்கு அழகு, ஆடம்பரம் மற்றும் இல்வாழ்க்கை நாட்டம் மிகுதியாக இருக்கும்.
ஏழாமிடத்தில் சுக்கிரன் நீசம் பெறுவதால் மனைவி எளிமையாகவும் கணவரின் உணர்வுகளை
புரிந்து கொள்ளும் தன்மை குறைந்தவராகவும் இருப்பார். லக்னத் தில் புதன் நீசம்
பெறுவதால் கணவனுக்கு முடிவெடுக்கும் திறன், திட்டமிட்டு
செயல் படும் தன்மை, புத்திக்
கூர்மை, கல்வி அறிவின்மை போன்ற குறைபாடுகள்
இருக்கும். ஏழில் புதன் உச்சம் பெறுவதால் மனைவிக்கு கல்வி அறிவு, எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை, திட்டமிட்டு செயல்படும் புத்திக் கூர்மை, சிறப்பான முடிவெடுக்கும் திறன் இருக்கும்.தம்பதிகளுக்கு
வாழ்க்கைத் துணையைப் பற்றிய எதிர்பார்ப்பு, மனக்
கற்பனை அதிகம் இருக்கும். ஒருவரின் எதிர்பார்ப்பை மற்றவர் புரிந்து கொள்ளாமல்
இருப்பது தம்பதிகளுக்குள் இணக்கமற்ற மனநிலையை உருவாக்கும்.லக்னத்தில் சுக்கிரன்
உச்சம் பெற்றவர்களுக்கும், புதன்
நீசம் பெற்றவர்களுக்கு கால தாமத திருமணம் அல்லது திருமண மற்ற நிலை இருக்கும்.
அதேபோல் மீன லக்னம் கால புருஷ பன்னிரன்டாமிடம் என்பதால் அடிக்கடி கால், பாதம் தொடர்பான உடல் உபாதைகள் இருக்கும். மனித வாழ்க்கையில்
ஒவ்வொருவருக்கும் பல விதமான கஷ்டங்களும் பிரச்சினைகளும் இருக்கும். ஒருவருக்கு
இருக்கும் பிரச்சனை கஷ்டம் மற்றொருவருக்கு இருப்பதில்லை. ஏதோ உலகத்தில் நாம் தான்
கஷ்டப்படுகிறோம் மற்றவர்கள் எல்லாம் நன்றாக தான் இருக்கிறார்கள் என்று
நினைக்கிறார்கள் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் கஷ்டம், பிரச்சனை இருக்கும். அது மற்றவர் களுக்கு தெரிய வாய்ப்பில்லை
அவ்வளவு தான். மனிதர்களுக்கு கஷ்டம், பிரச்சனை
வருவதற்கு காரணம் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிட பாதிப்பும் முன் ஜென்ம
முன்னோர்கள் வழி சாபம் மற்றும் கோபத்திற்கு காரணமான ஒன்பதாமிட பாதிப்புமே காரணம்.
வாழ்வில் தடை, போட்டி, பொறாமை
தீராத கஷ்டம்,
குடும்பத்தில் சண்டை, வருமானம் இல்லாமை போன்ற பல்வேறு விதமான பிரச்சனையை மட்டுமே
எதிர்கொண்டு வாழும் சூழ்நிலை போன்றவைகளுக்கு கர்ம வினைகள் தான் காரணம். வினைப்
பதிவுகளே தோஷங்களாக மாறி ஒருவரின் ஜனன ஜாதகத்தில் கிரகங்களாக அமர்கின்றன.
மனிதர்கள் வாழ்க்கையில் நிம்மதி இழக்கும் போது இறைவனை நாடுகிறார் கள். மனம்
அமைதியை தேடும் போது ஆன்மீகத்தை நாடுகின்றனர். தன்னுள் இருக்கும் ஆன்மாவே இறைவன், ஆன்மீகம் என்பதை உணராமல் எதிர்மறையான எண்ணங்களை தனது ஆன்மாவில்
புகுத்தி விடுகிறார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நம்மால் மீண்டு வர முடியும்
என்ற நேர்மறையான எண்ணம் வலுப்பெரும்போது எதிர்மறை எண்ணங்கள் வலுவிலக்கும். சொல், செயல் அத்தனையும் நேர்மறையாக இருக்க வேண்டும். நான் நன்றாக
உள்ளேன், நான் நலமாக உள்ளேன், நான் செல்வ செழிப்பாக உள்ளேன் எனது உழைப்பு உயர்வான நிலையை
எனக்கு தந்து கொண்டு இருக்கின்றது என்ற நேர்மறை எண்ணத்தை ஆன்மாவிடம் புகுத்தும்
போது எந்த கிரக தோஷமும் எளிதில் அண்டாது. உங்கள் தேவைகளை, ஆசைகளை பிரபஞ்சத்திடம் ஆத்மார்த்தமாக பதிவிடும் போது அனைத்து
விருப்பங்களும் பிரபஞ்சத்தால் நிச்சயம் நிறைவேற்றப் படும்.
உங்கள் தேவைகள் நடந்ததும் பிரபஞ்ச
சக்திக்கு நன்றி சொல்ல வேண்டும். தினமும் அன்றைய நல்ல நிகழ்வுகளுக்கு
பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். அசுப நிகழ்வுகளை உடனே மறக்க
வேண்டும்.இவ்வாறு ஆத்மார்த்தமாக பிரபஞ்சத்துடன் ஒன்றும் போது மனிதர்களால் அடைய
முடியாத வெற்றியே கிடையாது. பல வெற்றியாளர்கள் மற்றும் சாதனை மனிதர்கள் வாழ்வில்
கடைபிடித்து வரும் அனுபவ உண்மை. உங்கள் வாழ்க்கையில் இதை செயல் படுத்தி வெற்றி
மேல் வெற்றி பெற பிரபஞ்சத்திடம் மண்டியிடுகிறேன்.
=======================
=========================================
தொடர்ச்சி அடுத்த இதழில்...
-பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
செல்: 98652 20406
courtesy;
Balajothidam/Nakkiran.
======================================
No comments:
Post a Comment