Followers

Friday, July 24, 2020


திருவாசகம் - சில சிந்தனைகள் ;-




அன்றே என்தன் ஆவியும் 
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அணையாய் என்னை 
ஆட் கொண்டபோதே கொண்டிலையோ

இன்று ஒர் இடையூறு எனக்கு உண்டோ 
எண் தோள் முக்கண் எம்மானே 
நன்றே செய்வாய் பிழை செய்வாய் 
நானோ இதற்கு நாயகமே.





இப்பாடலின் முதலடி திருப்பெருந்துறை நிகழ்ச்சியை நினைவூட்டுவதாகும். 'அன்றே என்ற சொல் திருப்பெருந் துறையில் குருந்தமரத்தடியில் இருந்து குருநாதர் இவரை ஆட்கொண்ட செயலைக் குறிப்பதாகும். அப்படி ஆட்கொண்டபோது அடிகளாரின் உடல், பொருள், ஆவி மூன்றையும் அவர் எடுத்துக்கொண்டார் என்று பேசுகிறார் அடிகளார். குருவினிடத்துச் செல்கின்ற ஒருவர் நிவேதனப் பொருள்களாகச் சிலவற்றை எடுத்துச் செல்வர். அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று குருவினிடம் விண்ணப்பம் செய்வர். அந்த நிவேதனத்தில் ஒரு சிறு பகுதியைக் குரு ஏற்றுக்கொண்டு, எஞ்சியதைப் பிரசாதமாகக் கொண்டுவந்தவருக்கே திருப்பித் தந்து விடுவார். இதுவே மானிட குருமார்களின் இயல்பாகும். ஆனால், குருந்த மரத்தடியில் இருந்த குருநாதர் மானிடர் அல்லர். எனவே, அவரை அடிகளார் வணங்கியபோது இவர்பாலுள்ள உடல், பொருள், ஆவி என்ற மூன்றையும் அவரே எடுத்துக்கொண்டார். எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாவா என்ற வினாக்களைக் குருநாதர் எழுப்பவில்லை; அடிகளாரின் மனநிலை என்ன என்றும் கேட்கவில்லை. திருவடிகளில் வீழ்ந்த திருவாதவூரரின் உடல், பொருள், ஆவி அனைத்தும்,

குருநாதரால் எடுத்துக்கொள்ளப்பெற்றன. இதனையே அடிகளார் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ?” என்று இப்பாடலிலும் தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை (திருவாச:397) என்று பிறிதோர் இடத்திலும் பாடியுள்ளமையால் அறியலாம். r இவருடைய விருப்பத்தை அறிந்துகொள்ள ஒரு சொல்லைக்கூடச் சொல்லாமல் உடல், பொருள், ஆவி மூன்றையும் குருநாதர் எடுத்துக் கொண்டார் என்றால், மணிவாசகர் என்ற பெயருக்குரிய, தற்போதத்தோடு கூடிய ஒருவர், அங்கு இல்லை என்பதுதானே பொருள்? எனவேதான், ‘இன்று ஒர் இடையூறு எனக்குண்டோ? என்று பேசுகின்றார். தன் பரிசு, வினை இரண்டு, சாரும் மலம் மூன்றோடு இருந்த திருவாதவூரரைத் தம் திருவடிகளில் இணைத்துக் கொண்டு, அவரை மணிவாசகராக மாற்றினார் குருநாதர். இந்நிலையில் திருவாதவூரரிடம் இருந்த தன் பரிசு, இரு வினை, மும் மலம் ஆகியவற்றைத் தாங்கி, ஏற்று, அவற்றை அழிக்கும் கடமை குருநாதரிடம் வந்துவிட்டது. ஒரே விநாடியில் குருநாதர் இவற்றைச் செய்துவிட்டார். இது இயலுமா என்று வினவுவார்க்கு விடை கூறுவார்போல, அந்தக் குருநாதர் எட்டுத் தோள்களும், மூன்று கண்களும் உடையவர் என்கிறார். இரண்டு தோள்களையுடைய திருவாதவூரர் இதுவரைக்கும் சுமந்த வினை, மலம் ஆகியவற்றை எட்டுத் தோள்களையும், நெற்றிக்கண்ணையும் உடைய ஒருவர் எடுத்துச் சாம்பலாக்குவது எளிது என்பதைக் குறிக்கவே எண்தோள் முக்கண் எம்மானேஎன்றார். உடல், பொருள், ஆவி மூன்றும் எடுத்துக் கொள்ளப் பெற்ற பிறகு, அந்த உடலுக்கும் ஆவிக்கும் நல்லது கெட்டது எது நேர்ந்தாலும் அதற்குப் பொறுப்பு,

குருநாதரைச் சார்ந்ததாகும். ஆகவேதான், 'நன்றே செய்வாய் பிழை செய்வாய்நான் இதற்குத் தலைவனல்லன் என்கிறார் அடிகளார். இப்பாடலின் பொருளை இம்முறையில் விளங்கிக் கொள்ள, உலக வழக்கில் இன்று நடைமுறையில் உள்ள ஓர் உதாரணத்தை அறிந்துகொள்வது நலம். மாடு விற்க வருபவர், விலை முதலியவற்றைப் பேசி முடித்தவுடன் ஒரு காரியத்தைச் செய்வார். விற்பவர் மாட்டின் இடப்புறம் நின்றுகொள்வார். வாங்குபவர் வலப்புறம் நின்றுகொள்வார். விற்பவர், மாட்டின் மூக்குக் கயிற்றை மாட்டின் முதுகு வழியாக, வாங்குவோரிடம் கொடுத்துவிடுவார். வாங்குபவர் அந்தக் கயிற்றைக் கையில் பெற்ற விநாடிமுதல் மாடு அவருக்குச் சொந்தமாகிவிடும். அடுத்த விநாடியே அந்த மாடு கீழே விழுந்து இறந்துவிட்டால்கூட அந்த நஷ்டம் வாங்கியவரையே சாரும். இது தமிழ்நாட்டு மரபு. + குதிரைகளை விற்க வந்த குதிரைச் சேவகன், குதிரையின் சேணைக்கயிற்றை, வலப்புறம் இருந்த பாண்டியனிடம் குதிரையின் முதுகின் வழியாகக் கொடுத்துவிட்டான். இதனைக் 'கயிறுமாறிய படலம் என முன்னோர் கூறினர். அந்த விநாடியிலிருந்து குதிரைகளின் சாவும் வாழ்வும் பாண்டியனைச் சேர்ந்ததே தவிர, விற்றவனைக் கேட்க உரிமையில்லை. அப்படிக் கயிறு மாற்றிய குதிரைச் சேவகன், திருவாதவூரரிடம் தந்த பொன்னிற்குப் பதிலாக இந்தக் குதிரைகள் விற்கப்பட்டன என்று கூறிவிட்டான்; பாண்டியனும் அதனை ஏற்றுக்கொண்டான். மறுநாள் பரிகள் நரிகளாயின என்றால், அதற்குப் பொறுப்புப் பாண்டியனே தவிர, குதிரைச் சேவகனோ, திருவாதவூரரோ அல்லர்.,

இந்த நுணுக்கம்தான் மேலைப் பாடலில் பேசப்பெற்றுள்ளது. "குன்றே அனையாய்! எந்தன் ஆவியும் உடலும்  எல்லாம் ஆட்கொண்டபோதே கொண்டிலையோ? இடையூறு எனக்கு உண்டோ? நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகம்? என்ற முறையில் பாடல் அமைந்துள்ளது. .


========================================== 

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...