Followers

Tuesday, April 28, 2020

அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக...
ஆமோதித்து மறுக்கும் அரிய கலை!
எவர் ஒருவரிடமும் எப்பேர்ப்பட்ட விஷயங்களையும், பலமான வாதங்களையும், எதிர்மறை கருத்துகளையும் முன்னெடுத்து வைத்து விட முடியும். ஆனால், இதற்கென்று சில அணுகுமுறைகள் உள்ளன.
நீதிபதியின் முன் விரல் நீட்டிப் பேச மண்ணில் எவருக்கும் உரிமையோ, திராணியோ இல்லை. மறுப்பாரும், எதிர்ப்பாரும் இல்லாதிருக்கும் இவர்களிடம் கூட, 'கனம் நீதிபதி அவர்களே...' என ஆரம்பித்து, அவர் கடந்து வராத வழக்குகளையும், அறிந்திராத சில தீர்ப்புகளையும் ஒரு இளம் வழக்கறிஞர், தம் திறமையான அணுகுமுறையால் நீதிபதியையே கேட்க வைத்து, தம் கட்சிக்காரருக்கு எதிராக திரும்ப இருந்த தீர்ப்பை, சாதகமாக வாங்கி விடுகிறார் என்றால், நாம் சந்திக்கிற மற்ற மனிதர்கள் நம் முன் எம்மாத்திரம்?
'நீங்க சொல்றது கரெக்ட் முதலாளி; அப்படியே ஆகட்டும் முதலாளி...' என்று ஆரம்பித்து, 'அதில் ஒரு கஷ்டம் இருக்கு முதலாளி; அது என்னன்னா முதலாளி...' என்று ஆரம்பிக்கிற தொழிலாளி, புத்திசாலி.
உடன்பட்டு மறுக்கிற கெட்டிக்காரத்தனம் என்னமாய் வேலை செய்யும் தெரியுமா?
'அதெப்படி முடியும்... இதெல்லாம் நடக்கிற காரியமா... நீங்க இறங்கிப் பாத்தால் தான் உங்களுக்கு அதில் உள்ள கஷ்டம் தெரியும்....' என்று எதிர்மறையாக ஆரம்பித்து, சீட்டுக்கிழிந்து விடும் என்கிற பயம் வந்த பின், ஜகா வாங்கும் ஊழியர் பத்தாம்பசலி.
பட்டிமன்றத்தில் சிலர் கையாளுகிற உத்தி, நடுவரை கவர்கிறதோ இல்லையோ, பார்வையாளர்களை ஏகமாய் கவர்ந்து விடும். அது, 'மாற்று அணியை சேர்ந்த அம்மையார், அருமையான வாதம் ஒன்றை முன் வைத்தார்; நானே அசந்துபோய் விட்டேன். ஆனால், இந்த வாதம் யாருக்குப் பொருந்தும் என்கிறீர்கள்...' என ஆரம்பித்து, ஆணித்தரமாக பேச ஆரம்பித்ததும், அது, பார்வையாளர்களையும், நடுவரையும் வெகுவாக கவர்ந்து விடும். அக்கணமே தீர்ப்பின் போக்கும் மற்றவர்களுக்கு பிடிபட்டு விடும்.
'என்ன அறிவுகெட்ட வாதம் இது... ஏன் இப்படி உளர்றீங்க, இதெல்லாம் ஒரு வாதமா, நீங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்க, எனக்கென்ன கிறுக்கா பிடிச்சுருக்கு...' என்று ஆரம்பிக்கிற எதிரணி மறுப்பாளர், பார்வையாளர்கள் மதிப்பில், 'சரசர'வென்று மைனஸ் மதிப்பெண் வாங்கி விடுகிறார்; நடுவரும் கடுப்பாகி விடுவார்.
இப்படிப்பட்ட வார்த்தைகள், தனிப்பட்ட இருவரின் வாதத்தின் போது, காயப்படுத்தி விடவும், இதன் விளைவாக, நட்பும், உறவும் கெட்டு விடவும் வாய்ப்புகள் உண்டு. அத்துடன், இது, கவுரவப் போராக மாறி, கை கலப்பில் முடிந்து விடக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.
'நீங்க சொல்ற கோணம் ரொம்ப வித்தியாசமா இருக்கு; ஆனா பாருங்க...' என ஆரம்பித்தால், அங்கே அனலுக்கு வேலையில்லை; அப்புறம், புனல்(நீர்) தான்.
வாக்குவாதங்கள், எதிர்வாதங்கள் ஏனோ இந்த மண்ணில் ஆரோக்கியமாக நிகழ்வதில்லை. வாத, பிரதிவாதங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே நடக்குமானால், அவற்றை அறிவின் விருத்திக்கே என்று மேலை நாட்டவர்கள் ஆக்கப்பூர்வமாக பார்க்கின்றனர்.
இங்கு என்ன நடக்கிறது... 'மூஞ்சியில கரியப் பூசிட்டான், அவமானப்படுத்திட்டான், எல்லார் முன்னாலயும் அசிங்கப் படுத்திட்டான்...' என்று தனிப்பட்ட விஷயமாகவும், கவுரவப் போராகவும் எடுத்துக் கொண்டு விடுகின்றனர்.
தவறான செய்திகளை, ஆதாரமற்ற, ஊகமான விஷயங்களை ஆணித்தரமான குரலில் எதிராளி பேசுகிறார் என்றால், மனிதர் சூடாகி விட்டார் என்பதை எளிதில் கண்டு விடலாம்.
'நீங்க சொல்றதை இந்தக் கோணத்திலிருந்தும் பார்க்கலாமான்னு கொஞ்சம் பரிசீலனை செய்யுங்க...' என்று பொய் மூட்டைகளை அவிழ்ந்தோட வைக்கும் வெளிச்சக் கீற்றினை, மென்மையாக பற்ற வையுங்கள்.
எதிர்வாதமாக இருந்தாலும், இதை ஏற்றுக் கொள்ள முன்வருவர். ஆமோதித்து மறுக்கும் கலை, அரிய கலை; இது கைவரப் பெற்றால், உறவுகளுக்குள் துறவு வர வாய்ப்பு இல்லை.
நன்றி சகோ;-- லேனா தமிழ்வாணன்

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...