"பெண்கள் செய்யும்
செயல்களால் குடும்பத்திற்கு பாவ- சாப வினைகள் ஏற்படுமா? வம்சத்தை
பாதிக்குமா?'
"பாலஜோதிடம்' பெண் வாசகிகள்
பலர் கேட்டுள்ள கேள்வி இது.
18 புராணங்கள், உப புராணங்கள், அதில் ஏராளமான
உட்கதைகள், இராமாயணம், பாரதம் போன்றவை
யெல்லாம்- இந்த பூமியில் மக்கள் செய்யும் செயல்களால் பாவவினைகள் உண்டாகி, வம்ச சந்ததிகளை
எப்படி சிரமமடையச் செய்துவிடும் என்பதை நாம் அறிந்துகொள்ள எழுதப்பட்டவையாகும்.
இராமர், கிருஷ்ணர், கௌரவர், பாண்டவர்களைப்
பற்றிய புராண, இதிகாசங்களை
எழுதியவர்கள், இவர்களின்
வாழ்க்கையைப் பற்றி மட்டும் எழுதவில்லை. இவர்களின் வம்ச முன்னோர்கள் செய்த
செயல்களைப் பற்றியும் விவரமாக எழுதியுள்ளார்கள். புராண இதிகாசங்கள் மனிதனின் விதி, வினைப்பதிவை
தெளிவாகக் கூறும் ஜோதிட பொக்கிஷங்களாகும். வாழ வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகும்.
மகாபாரதம் கூறும் குருவம்சத்து பெண்கள் செய்த
பாவச்செயல்கள், வம்சத்தில்
வாழவந்த பெண்களையும், வாரிசுகளையும் எப்படி சிரமமடையச் செய்தன என்பதை அறிவோம்.
சந்தனு
குரு வம்சத்தில் தோன்றிய பிரதீபன் என்ற
மன்னனுக்கு தேவாபி,
சந்தனு, பாகிலிகன் என்று மூன்று மகன்கள். மூத்தவன்
தேவாபி இளம்வயதிலேயே காட்டிற்குச் சென்று வசித்ததால், இளையவன் சந்தனு
அரசனானான்.
சந்தனு மன்னன் தேவநதியான கங்கையை மணந்துகொள்ள
முயற்சித்தான். தான் எதைச் செய்தாலும் கணவன் சந்தனு அதனைத் தடுக்கவோ, மறுக்கவோ கூடாது
என்று கங்கை நிபந்தனை விதித்தாள். அதற்கு ஒப்புக்கொண்டு சந்தனு கங்கையை மணந்தான்.
பீஷ்மர்
குடும்ப வாழ்வில் கங்கைக்கு ஏழு குழந்தைகள்
பிறந்தன. குழந்தைகள் பிறந்தவுடன், நதியில் வீசி ஏழு குழந்தைகளையும் கங்கை
கொன்றுவிட்டாள். எட்டாவது குழந்தையைக் கொல்லமுயன்ற போது சந்தனு தடுத்தான். மன்னன்
நிபந்தனையை மீறிவிட்டான் என்று கூறி, தான்பெற்ற கைக்குழந்தையுடன் கணவனைப் பிரிந்து
சென்றுவிட்டாள். ஒரு ஆசிரமத்தில் வசித்து, குழந்தை பெரியவனானதும் அவனை தந்தையிடம்
ஒப்படைத்துச் சென்றுவிட்டாள் கங்கை. அந்த மகன்தான் பிதாமகன் பீஷ்மர் ஆவார்.
விசித்திரவீரியன்
கங்கை தன்னைவிட்டுப் பிரிந்த பின்பு சந்தனு
சத்தியவதி என்பவள்மீது ஆசைகொண்டு, "இவளுக்குப் பிறக்கும் குழந்தையை அரசனாக்குவேன்' என்று உறுதி கூறி, சத்தியவதியை
மணந்தான். இவளுக்கு சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.
சித்திராங்கதன் இளம் வயதிலேயே ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டான். மூத்தவர் பீஷ்மர்
இருக்க, நிபந்தனைப்படி
இளையவன் விசித்திரவீரியன் அரசனானான்.
திருதராஷ்டிரன்- பாண்டு
விசித்திரவீரியன் அம்பிகை, அம்பாலிகை என்ற
இருவரை மணந்தான். இவன் இளம்வயதிலேயே காம போகங்களில் ஈடுபட்டு, தொழுநோயால்
பீடிக்கப்பட்டு சரீரம் கெட்டதால், வம்சத்தை விருத்தி செய்யமுடியாத நிலையில்
வாழ்ந்தான். இதனால் இவன் மனைவிகள் இருவரும் குலகுரு வேதவியாசரிடம் உறவுகொண்டு
கர்ப்பமடைந்தனர்.
அம்பிகைக்கு திருதராஷ்டிரன், அம்பாலிகைக்கு
பாண்டு ஆகிய மகன்கள் பிறந்தனர்.
கௌரவர்கள்
திருதராஷ்டிரன் காந்தாரி என்பவளை மணந்தான்.
இவள் கர்ப்பமாக இருந்த போது கருக்கலைவு ஏற்பட்டது. கலைந்த கருப் பிண்டத்தை குலகுரு
நூறு மண்கலயங்களில் இட்டு வளரச்செய்து, துரியோதனன் முதலான நூறு மகன்கள் பிறந்தனர்.
இவர்கள் கௌரவர்கள் எனப்பட்டனர்.
பாண்டவர்கள்
பாண்டு குந்தி, மாத்ரி என்ற
இருவரை மணந்தான். பாண்டு தன் மனைவியுடன் உறவுகொள்ளும்போதே இறப்பான் என முனிவரின்
சாபம் இருந்ததால்,
பாண்டு தன் மனைவிகளுடன் உறவுகொள்ளாமலே வாழ்ந்து வந்தான்.
இதனால் இவன்மூலம் பிள்ளைகள் பிறக்க வழியில்லாமல் போனது.
ஒரு முனிவர் குந்தியின் திருமணத்திற்கு முன்பே
அவளுக்கு ஒரு மந்திரம் உபதேசித்து, தேவர்களில் யாரை விரும்பி இந்த மந்திரத்தை
ஜெபிக்கின்றாளோ, அந்த தேவன்
இவளுடன் கலந்து, அதனால் கர்ப்பம்
தரித்து, அவன் அம்சத்துடன்
ஒரு மகனைப் பெறுவாள் என வரம் கொடுத்திருந்தார்.
புத்திரர்கள் வேண்டும் என விரும்பி, குந்திதேவி
எமதருமனை நினைத்து மந்திரம் ஜெபித்து தருமனையும், வாயு தேவன்மூலம்
பீமனையும், சந்திரனுடன்
இணைந்து அர்ச்சுனனையும் பெற்றாள்.
குந்தி, மாத்ரிக்கும் இந்த மந்திரத்தை
உபதேசித்தாள். மாத்ரியும் மந்திரத்தை
ஜெபித்து நாசத்தியன் என்ற தேவனை இணைந்து நகுலனையும், தசிரன் என்ற
தேவன் மூலம் சகாதேவனையும் பெற்றாள். இந்த ஐவரும் பாண்டவர்கள் எனப்பட்டனர்.
(திருமணத்துக்கு
முன்பே குந்தி சூரியனை நினைத்து, அவர் அம்சமாகக் கர்ணனைப் பெற்று, அவமானத்துக்கு
அஞ்சி அக்குழந்தையை பெட்டியில் வைத்து ஆற்றில்விட்டது தனிக்கதை.)
பாண்டவ குமாரர்கள்
பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் போட்டியில்
வென்று திரௌபதி என்பவளை அழைத்து வந்தான். தாய் குந்தியின் கட்டளையை ஏற்று
பாண்டவர்கள் ஐவரும் இவளை மணந்துகொண்டனர். திரௌபதி தருமன் மூலம் பிரதிவிந்தியனையும், பீமனின் உறவால்
ஸுதசோமனையும், அர்ச்சுனன்
இணைவால் ஸ்ருதகர்மாவையும், நகுலன் மூலம் ஸ்தானீகனையும், சகாதேவன் உறவால்
ஸ்ருதசேனனையும் பெற்றாள்.
குரு வம்சப் பெண்களையும், வாரிசுகளையும்
பற்றி சுருக்கமாக அறிந்தோம். சந்தனு மனைவி கங்காதேவி செய்த பாவச் செயல்களால், இந்த
வம்சவாரிசுகள் எவ்வாறு வினை பாதிப்புகளை அடைந்தனர் என்பதைக் காண்போம்.
புத்திர தோஷம்
கங்கை தான் பெற்ற ஏழு குழந்தைகளைக் கொன்றதால்
உண்டான சிசுக்கொலை- பாவதோஷம் வம்சத்தில் பீஷ்மருக்குப் பிறகு வாரிசுகளே பிறக்காமல்
செய்துவிட்டது. காந்தாரியைத் தவிர அனைத்து பெண்களும் தங்கள் கணவர்கள் மூலம்
கர்ப்பமடையாமல் வேறு ஆண்கள் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர். "புத்திர
தோஷம்' உள்ளவர்கள் எதைச்
செய்தாலும் குழந்தை பிறக்காது. கங்கை செய்த பாவம் வம்சத்தை முடித்தது.
புத்திர சாபம்
கங்காதேவி தான் பெற்ற மகன் பீஷ்மரை பாதியிலேயே
பிரிந்து சென்றதால் உண்டான புத்திர சாபம் காந்தாரியின் கருவைக் கலைத்தது.
குந்தி தேவி பெற்ற மகன்கள் கருவிலேயே தங்கள்
தந்தையரை (தேவர்களை) இழந்து, தந்தை பாசம் அறியாமல் அலைந்து திரிந்து தங்கள்
சுயமுயற்சியால் வாழ்ந்தனர்.
பூர்வீக சொத்துகளை அனுபவிக்கும் பாக்கியமும்
இல்லை. தந்தைவழி உறவுகளால் நன்மையில்லை. இவர்கள் உயிருடன் இருக்கும்போதே, பெற்ற பிள்ளைகள்
அற்ப ஆயுளில் இறந்தார்கள்.
புருஷ சாபம்
கங்கை தன் கணவன் சந்தனுவை விட்டுச் சென்றதால், மனம் கலங்கிய
கணவனின் சாபத்தால் இந்த வம்சத்தில் வாழவந்த பெண்களில் காந்தாரியைத் தவிர மற்ற
அரசிகள் அனைவரும் கணவனுடன் ஒரே வீட்டில் வசித்த போதும், கணவனால்
தாம்பத்திய சுகம் அடையவில்லை. பாஞ்சாலியும், குந்தியும் பல உறவுகளைக் கொண்டனர்.
இருவரும் பல சிரமங்கள், கஷ்டங்கள், அவமானங்களைச்
சந்தித்தனர். இந்த புருஷ சாப தோஷத்தைத்தான் நாம் செவ்வாய்தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம்
எனக் கூறுகிறோம்.
குரு வம்சத்தில் நான்கு தலைமுறையாக
மூத்தவனிருக்க இளையவன் அரசனாகி மூத்தவனுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு வந்ததால், சகோதரர்களிடையே
சொத்துத் தகராறு ஏற்பட்டு, ஐந்தாவது தலைமுறையில் போரினால் வம்சம் அழிந்தது.
பாண்டவர்கள், பாண்டுவுக்கோ
குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுக்கோ பிறக்கவில்லை. தேவர்களுக்கு மகன்களாகப் பிறந்
தார்கள். இதனால் பாண்டவர்களுக்கும், குரு வம்சத்திற்கும் சம்பந்தமில்லை.
திருதராஷ்டிரன் குலகுரு மூலம்
பிறந்தவன். துரியோதனன் திருதராஷ்டிரனுக்கு
முறையாகப் பிறந்தவன் என்பதால், குலகுரு வியாசர், பீஷ்மர், துரோணர் போன்ற
பெரியோர்கள் முடிவுசெய்து இளையவன் துரியோதனனுக்கு அரசனாகப் பட்டம் சூட்டி, இறுதிவரை துணையாக
இருந்தார்கள். இந்த உண்மையை உணர்ந்துதான் கிருஷ்ணரும், பாண்டவர்களுக்கு
ஐந்து வீடுகளையாவது தாருங்கள் எனக் கேட்டார்.
கங்கை என்ற பெண் செய்த பாவச் செயல்கள், வம்சத்தில் வாழ
வந்த பெண்களையும்,
வாரிசுகளையும் இவ்வளவு சிரமம், கஷ்டம் அடையச்
செய்தது. சகல பாவங்களையும் தீர்க்குமென நாம் கூறும் கங்கையினால், தான் செய்த
பாவத்தையே தீர்க்கமுடியவில்லை.
எந்த யுகமாக இருந்தாலும் சரி; தான் என்ற
அகம்பாவம், ஆணவத்தால், "எதைச் செய்தாலும்
தவறில்லை; இந்தப் பாவத்தை
பணத்தால், பதவியால், பரிகாரத்தால், தான தர்மத்தால்
தீர்த்துக்கொள்ளலாம்' என எண்ணி வாழ்ந்தால், அவள் செய்யும் பாவம் வளர்ந்து, வம்சம்
பாதிக்கும் என்பதே உண்மை. நல்வழி நடந்து முன்வினைகளைத் தீர்த்துக்கொண்டால் வம்சம்
நல்லபடி வாழும்!
courtesy;Balajotidam.
=============================================
No comments:
Post a Comment