Followers

Thursday, January 30, 2020



விநாயகர் அகவல் பொருளுடன்.......
ஔவையார்/அவ்வையார் நூல்.

பக்திக்கால இறுதியில் வெளியான நூல். இந்த நூலைத்தான் விநாயகரை வழிபடுபவர்கள் முதல் நூலாகக் கொள்வர். இது மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்தபொருளுடையது. இதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர். 

நூல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல்லிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப். 4

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும். 8

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்னும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமும் புரிநூல் திகழ்ஒளி மார்பும். 12

குளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின் நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான அரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற, பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப் பொட்டும், ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்த புயங்களும், மூன்று கண்களும், மூன்று மதங்களின் கசிவினால் உண்டாண சுவடு போன்ற அடையாளங்களும், இரண்டு காதுகளும், ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும், மூன்று நூல்கள் சேர்த்து திரித்து செய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய ஒளிவீசுகின்ற மார்பும்.

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிரே!
முப்பழம் நுகரும் மூஸிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித். 16

தாயாய் எனக்குத் தானெழந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து. 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே. 24

சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி.

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக். 28

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே. 32

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே. 36

வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து.

இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக். 40

குண்டலி அதனில் கூடிய அசபை
லிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காளால் எழுப்பும் கருத்தறி வித்தே. 44

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச். 48

இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி.

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட் எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி. 52

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து. 56

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெலிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் செவியில். 60

உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி. 

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. 64

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி. 68

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே. 72

அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன் என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை எனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம். 






=======================================

விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. இது தமிழ்ச் சைவர்களின் நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழர்கள் கைக்கொண்டொழுகிய வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த நூல் தமிழருக்கு அறிவிக்கும் அரிய செய்திகளை இக்கட்டுரை திரட்டித் தருகின்றது. இக்கருத்துக்கள் சைவசித்தாந்தப் பேராசிரியர் திரு இரா.வையாபுரியார் அவர்கள் விநாயகர் அகவலுக்கு எழுதியுள்ள பேருரையினின்றும் திரட்டப் பட்டது.

‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார்’. விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது இப்பொருள்கள் நினைவுக்கு வந்து பாராயணத்தைப் பயனுடையதாக்கும்.

இந்நூல் 15ஆவது வரி ‘அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று கூறுவதால் இந்நூலில் கூறப்படும் விநாயகப் பெருமானின் திரு நாமம் ‘கற்பக விநாயகர்’ என்பது.

அவர் தன் நிலையில்,

• சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாதவர்.
• துரியநிலையில் இருப்பவர்.
• ஞானமே சொரூபமாக இருப்பவர்.

இது அவருடைய சொரூப நிலை அல்லது உண்மை நிலை எனப்படும். இது பரசிவமாக இருக்கும் நிலை.

ஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை அடியவர்கள் வழிபட்டு உய்வதற்காகவும் அடியவர்களுக்கு அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளும். அத்தகைய அற்புதக் கோலங்களில் ஒன்று விநாயக வடிவம். ( அற்புதம் – அற்புதம் என்பது உலகில் எங்கும் காணப்படாது இயற்கைக்கு மாறாக நிகழ்வது. இது திருவருளால் மட்டுமே நிகழ்வது.)

அவ்வற்புத வடிவமானது:

• தாமரை மலர்போன்ற மென்மையும் அழகும் மலர்ச்சியும் உடைய திருவடிகள்.
• அத்திருவடிகளில் இனிய ஒலியெழுப்பும் சிலம்பு.
• பொன்னரைஞாண்.
• அழகிய பட்டாடை அணிந்த இடுப்பு
• பேழை (பெட்டி) போன்ற வயிறு.
• பெரிய வலிமை மிக்க தந்தம்.
• யானைமுகம்.
• முகத்தில் அணிந்த சிந்தூரம்.
• ஐந்துகைகள்.
• அங்குசம், பாசம் என்னும் ஆயுதங்கள்.
• நீலமேனி (நீலம் – கருமை)
• தொங்குகின்ற வாய்.
• நான்கு தோள்.
• மூன்று கண்.
• கன்னத்தில் மதநீர் வடிந்த சுவடு.
• இருபெரிய செவிகள்.
• பொற்கிரீடம்
• பூணூல் புரள்கின்ற மார்பு.

இது குணங்குறி அற்ற பரசிவம் உயிர்களுக்கு அருளும் பொருட்டு மேற்கொள்ளும் வடிவங்களுள் ஒன்று. அதனால் தடத்த வடிவம் அல்லது தடத்த நிலை எனப்படும். இறைவடிவங்களைத் தரிசித்துத் தொழும்போது திருவடியிலிருந்து தொடங்கி உச்சிவரைக் கண்டு திருமேனியில் விழியைப் பதித்தல் முறை. திருவடி என்பது திருவருள்.  திருவருளால் இக்காட்சி நடைபெறுகின்றது என்பது பொருள்.

•  அவருக்கு நிவேதனப் பொருள்கள் முப்பழம்.
•  ஊர்தி மூஷிகம்
•  அவர் தன்னை வழிபடும் அடியவர்களுக்குத் தாய்போன்ற அன்புடையவர்.
•  எப்பொழுதும் அடியவர்களைப் பிரியாமல், அவர்களுடைய அறிவுக்கு அறிவாய், அறிவினுள்ளே இருந்து அவர்களுக்கு வாழ்வில் வழிகாட்டுவார்.
•  அடியவர்களுக்குப் பக்குவம் வந்த காலத்தில் குருவடிவாக வெளிப்பட்டு வந்து, முன் நின்று தீக்கை செய்து உண்மை ஞானம் புகட்டுவார்.
•  அடியவர்களை யோகநெறியிலும் ஞானநெறியிலும் நிற்கச் செய்வார்.
•  ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலப் பிணிப்பிலிருந்து விடுபடச் செய்வார்
•  நின்மல அவத்தை (அருளுடன் கூடிநிற்கும் நிலை) யில் நிற்கச் செய்வார்.
•  அளவில்லாத ஆனந்த அனுபவம் விரியச் செய்வார்.
•  இறுதியில் தன்னைப்போலத் தன் அடியவர்களையும் என்றும் மாறாத அழியாத நிலையில் (தத்துவநிலை) நிற்கச் செய்வார்.

விநாயகப் பெருமான் உணர்த்தும் ஞானநெறி

•  குருவாக வந்து தீக்கை அருளுகின்றார்

•  இதுவரையிலும் அவ்வுயிர் செத்துப் பிறந்து உழல்வதற்குக் காரணமான மயக்க அறிவைப் போக்குகின்றார்.

•  திருவைந்தெழுத்தை (‚ பஞ்சாக்கரம்) நெஞ்சில் பதிவிக்கின்றார்.

•  உள்ளத்தில் வெளிப்பட்டு விளங்கி நிற்கின்றார்.

•  பதி, பசு, பாசம் எனும் அனாதியான முப்பொருள்களின் இயல்பினை விளக்கி உரைக்கின்றார். சஞ்சிதம் எனும் பழவினையைப் போக்குகின்றார். ஞானோபதேசம் செய்கின்றார்.

•  உபதேசித்த ஞானப்பொருளில் ஐயம்,  திரிபு ஆகியன நேரிடாமல் தெளிந்த உணர்வு உண்டாமாறு அருளுகின்றார்.

•  ஐம்புலன்கள் விடயங்களை நோக்கி ஓடி விருப்பு வெறுப்புக் கொண்டு துன்புறாதபடி புலனடக்கம் உண்டாவதற்குரிய வழியினைக் காட்டியருளுகின்றார்.

•  உடம்பில் உள்ள தத்துவக் கருவிகள் எவ்வாறு ஒடுங்குகின்றன என்பதை அறிவிக்கின்றார்.

•  பிராரத்த வினை தாக்காதவாறு காப்பாற்றுகின்றார்.

• ஆணவம லத்தால் வரும் துன்பத்தைப் போக்குகின்றார்.

•  ஆன்மாவை நின்மல நிலைக்கு உயர்த்தி நின்மலதுரியம் நின்மலதுரியாதீதம் என்னும் நிலைகளில் திருவருளுடனும் சிவத்துடனும் கலந்து நிற்கச் செய்கின்றார்.

குருவாக வந்த விநாயகப் பெருமான் இவ்வாறு ஞானநெறியை அருளி, இந்த ஞானநெறியில் நெகிழ்ந்து விடாது உறுதியாய் நிற்பதற்குரிய யோகநெறியினையும் அறிவித்தருளுகின்றார்.

•  ஒன்பது வாயில்களை உடைய உடம்பில் உள்ள ஐம்புலன்கள் ஆகிய கதவுகளை அடைத்து மனம் உள்ளே (அகமுகப்பட்டு) நிற்கச் செய்கிறார்.

•  இதனால் ஆதாரயோகம் மேற்கொள்ளும் முறையினைத் தெளிவிக்கின்றார்.

•  மவுனசமாதி நிலையினை அடையச் செய்கின்றார்.

•  இடநாடி, வலநாடி, சுழுமுனா நாடி என்னும் நாடிகளின் வழியாய் மூச்சுக்காற்று இயங்கும் முறையினைத் தெரிவிக்கின்றார்.

•  சுழுமுனா நாடி மூலாதாரத்திலிருந்து கபாலம் வரையிலும் (தலையுச்சி) சென்று நிற்கும் நிலையினைத் தெரிவிக்கின்றார்.

•  அவ்வாறு செல்லும் வழியில் உள்ள அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்னும் பகுதிகளின் இயல்பைத் தெரிவிக்கின்றார்.

• மூலாதாரத்தில் உள்ள ஹம்ச மந்திரம், குண்டலினி சத்தி, பிரணவ மந்திரம் என்பனவற்றின் இயல்பினைத் தெரிவிக்கின்றார்.

•  இடகலை, பிங்கலை என்னும் மூச்சுக்காற்ரினால் குண்டலினி என்னும் சத்தியை எழுப்பிச் சுழுமுனைநாடி வழியாக மேலே கபாலம் வரையிலும் பிரணவமந்திரத்துடன் ஏற்றும் முறையினையும் தெரிவிக்கின்றார்.

•  இவ்வகையில் பிரணவமந்திரம் பலகலைக்களாகப் பிரிக்கப்பட்டு, (மூன்று, ஐந்து, பன்னிரண்டு, பதினாறு) உடம்பில் அங்கங்கே நிறுத்தித் தியானிக்கப்படுவதாகிய பிராசாத யோகம் என்னும் நெறியினையும் கற்பிக்கின்றார்.

•  இப்பிராசாத யோகத்தினால் ஆன்மா பிரமரந்திரம் (தலையுச்சி) என்னும் இடத்தையும் கடந்து மேலே துவாதசாந்தப் பெருவெளி என்னும் இடம்வரையிலும் சென்று சிவத்துடன் கலந்து நின்று சிவானந்தம் அனுபவிக்கச் செய்கின்றார்.

• இவ்வாறு ஆறாதார யோகம், அட்டாங்க யோகம், பிராசாத யோகம் என்னும் முறைகளில் நிற்கச் செய்து மனோலயம் அடையச் செய்கின்றார்.

•  இதனால் உண்டாகும் அகக் காட்சியினால் ஆன்மாவின் இயல்பு,  உடம்பின் இயல்பு,  மாயாமலம் கன்மமலம் ஆணவமலம் என்பனவற்றின் உண்மையியல்பு ஆகியவற்றை அறிய வைக்கின்றார்.

•  சப்தப்பிரபஞ்சம் (ஒலியுலகம்) அர்த்தப்பிரபஞ்சம்(பொருளுலகம்) என்பனவற்றினியல்பையும் அவற்றில் பரம்பொருள் சிவலிங்கரூபமாகக் கலந்திருக்கும் முறையினையும் அறியச் செய்கிறார்.

•  இத்தகைய பரம்பொருள் மிகச் சிறிய பொருள்களுக்கெல்லாம் மிகச் சிறியதாகவும், மிகப் பெரிய பொருள்களுக்கெல்லாம் மிகப் பெரிய பொருளாகவும் இருக்கும் நிலையை உணரச் செய்கின்றார்.

•  இத்தகைய பரம்பொருள்சை உலகவாழ்வில் இருந்துகொண்டே அறிவதும் அப்பொருளுடன் கலந்து ஆனந்தம் அனுபவிப்பதும் கரும்பினைக் கணுக்கணுவாகச் சுவைத்துச் செல்லும் அனுபவம் போன்றது.

• இந்த அனுபவம் நீடித்திருக்கத் திருநீறு உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிய வேண்டும்.
•  அவற்றையும் அவற்றை அணிந்துள்ள அடியார்களையும் சிவமெனவே கண்டு வழிபடுதல் வேண்டும்.

•  எப்பொழுதும் அடியார் கூட்டத்துடன் கலந்திருத்தல் வேண்டும்.

•  திருவைந்தெழுத்து மந்திர செபத்தைக் கைவிடலாகாது.

இவ்வாறு விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார். அந்நிலையிலிருந்து அவ்வான்மா தன்னைவிட்டு நீங்காமல் தனக்கே அடிமையாய் இருக்கும் நிலைமையினையும் விநாயப் பெருமான் அருளுகின்றார் என்னும் அரிய செய்திகளை விநாயகர் அகவல் என்னும் இந்த நூல் கூறுகின்றார்.

ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்):  அட்டாங்கயோகம், பிராசாத யோகம் சிறப்புக் கட்டுரைகளுடன்
உரை: முனிவர் ர. வையாபுரியார்.
சைவசித்தாந்த சபை, 9 – பி, முத்துசாமி சந்து, இரண்டாவது தளம், கைக்கோளன் தோட்டம், ஈரோடு 638 001

ஔவையார் அருளிய விநாயகர் அகவல், குகஸ்ரீ. பு.பா. ரசபதி அவர்களின் விரிவுரை & பி.என்.குமார் அவர்களின் உரைக் குறிப்புகளுடன் – இங்கு படிக்கலாம்.

==================

Vinayagar Agaval

Seetha kallabha chenthamaraippum,
Paatha chilambhu pala isai paada,
Pon araijnanum, poonthugil aadaiyum,
Vanna marungil valarindu azhakerippa,
Pezhai vayirum, perum paara kodum,
Vezha mukhamum, vilangu chindooramum,
Anju karamum , angusa paasamum,
Nenjir kudi konda neela meniyum,
Naandra vaayum, naaliru puyamum,
Moondru kannum, mummatha chuvadum,
Irandu cheviyum, ilangu Pon mudiyum,
Thiranda muppiri nool thigazh Oli maarbum,
Chor padam kadantha thuriya mey jnanam,
Arpudham nindra karpaga kallire

While the anklets on the cool sandal anointed feet
Which has the colour of the red hibiscus flower,
Sings various songs, while the golden waist belt,
And his clothes as soft as flower,
Shine in pretty and beautiful colours of the rainbow,
While his box like paunch, weighty tusks
Elephant like face, the saffron dot applied on it,
Five hands and the goad and rope that he has,
His blue body which attracted our mind,
Hanging mouth, his four sets of shoulders,
His three eyes, three trails of his feet’s,
His two ears, his shining golden hair,
His glowing broad chest wearing the holy thread,
His divine knowledge of Thuriya, his mastery over words,
Stood in awe at the wish giving elephant.

Muppazham nugarum Mooshiga vahana,
Ippothu yennai aat kolla vendi,
Thayay yenakku, thaan yezhundaruli,
Mayaa piravi, mayakkam aruthu,
Thirundhiya mudal aindu ezhthum thelivaay,
Porundave vanthu yen ullam thannil pugundhu,
Guru Vadivagi, kuvalayam thannil,
Thiruvadi vaithu thiramidhu porul yena,
Vaadaa vagaithaan magizhndena karuli,

OH god who rides on an elephant and eats three fruits,
Now for taking me and making me yours,
You come in the shape of my mother,
Cut off the trance like feeling of this illusory birth,
Make clear to my mind the meaning of the
Five lettered Namasivaya, enter then in to my mind,
Step in to this world in the form of a teacher in this world of ours,
And tell me with happiness that this is its real meaning

Kodaayudathaal Peru (kodu) vinai kallainthe,
Uvatta upadesam pugatti yen cheviyil,
Thevittatha jnana thelivaiyum kaatti,
Iym pulan thannai adakkum upaayam,
Inburu karunaiyin inithena kkaruli

After removing my great fate by the weapon of his tusk,
After giving me very sweet and not boring advices in my ears,
After showing sweetest clarity in the case of Jnana,
After teaching me the trick to control my five senses,
After sweetly telling me about mercy which gives happiness,

Karuvigal odukkum karuthinai arivithu,
Iru vinai thannai aruthu irul kadinthu,
Thalamoru nangum thandu yenakku aruli,
Malam oru moondrin mayakka maruthe,
Onbathu vayil oru mandhirathaal,
Iym pula kathavai adaippathum kaatti,
Aaraathaarathu angula nilaiyum,
Pera niruthi pechurai aruthe,
Idai pingalaiyin ezhuthu arivithu

After teaching me the knowledge of subjugating the senses,
After cutting of this birth as well the next and removing darkness,
After granting me mercifully the four stages of salvation,
After cutting off the trance created by the three types of ignorance,
After showing me how by one chant the five senses
Can be controlled and the nine gates of the body closed,
After teaching me how to control the chakras of the body using the goad,
After cutting off talk and making me stand firm,
After teaching me the alphabets of Ida and Pingala Nadi,

Kadayir chuzhu munai kapaalamum kaatti,
Moondru mandalthin mootiya thoonin,
Nandrezhu pambin navil unarthi,
Kundali adanir koodiya asabai,
Vindezhu mandiram velippada uraithu,
Mooladharathu moondezhu kanalai,
Kaalal ezhuppum karuthu arivithe,
Amudha nilaiyum aadithan iyakkamum,
Kumuda sagaayan gunathaiyum koori,
Idai chakkarathin eerettu nilaiyum,
Udar chakkarathin urappayum kaati,
Chanmuga thoolamum , chatur mukha sookshmamum,
Yen mugamaaga indhenakkaruli

After showing that the end of circle’s edge is in the head,
After making me realize that the snake keeps on hanging,
On the pillar that is at the junction of three realms,
After showing the silence at the junction of Kundalini,
After clearly telling me the chant to waken it up,
After pointing out the raging fire in the Mooladhara,
After telling me the idea of waking it up,
After telling me about the deathless state and the position of the Sun,
After telling me about properties of moon, the helper of lotus,
After teaching me the sixteen positions of the intermediate Chakra,
After showing me the position of wheels in the body,
After sweetly teaching me , the secret of Shanmuga,
And the principle behind the subtle four faces,

Puriyatta kaayam pulappada yenakku,
Theriyettu nilaiyum derisana paduthi,
Karuthinir kapaala vaayil kaatti,
Iruthi mukthi inithenakku aruli,
Yennai arivithu, yenakkarul cheydhu,
Munnai vinaiyin mudalai kalainthu,
Vaakkum manamum illa manolayam,
Thekkiye yendan chindhai thelivithu,
Irul veli irandukku ondridam yenna,

After making it clear about the eight subtle principles,
And making me see the real meaning of them,
After showing in my mind the gateway to the skull,
After telling me that the salvation is sweet,
After informing me, after showering his grace on me,
After removing the assets earned in the previous births,
After showing me the mental state where mind and words are absent,
After awakening my mind which was asleep,
After showing me the places of light and darkness in me,

Arul tharum aanandathu azhuthi yen cheviyil,
Yellai illa Aanandham allithu,
Allal kalainthe, Arul vazhi kaatti,
Sathathinulle Saada Shivam kaatti,
Chithathinulle Shiva Lingam kaatti,
Anuvirkku anuvaai appaalukku appaalaai,
Kanu muthi nindra karumbulle kaatti,
Vedamum neerum vilanga niruthi,
Koodumey thondar kuzhaathudan kooti,
Ancha karathin Arul porul thannai,
Nenja karuthin nilai arivithu,
Thathuva nilayai thanthu yenai aanda,
Vithaga vinayaga virai kazhal charane.

After giving me limitless happiness by pressing me down in ecstasy in my ear,
After removing all problems, after showing me the way of grace,
After showing lord Shiva in the sound “Om”,
After pointing out the Shiva Linga within my mind,
After showing atom within atom and distance beyond distance,
In the joints of the well ripened sugar cane like body,
After clarifying the role of Vedas and sacred ash.
After making me one with the crowd of realized devotees,
After pointing out the principle of five letters “Namashivaya”,
After showing me the state of my mind,
After giving me the philosophic state and after ruling me,
My wise Vinayaka ruled me and I seek refuge in his feet.

===============================================
Sources:

http://goo.gl/8Prjfq

http://goo.gl/hJ8Tff

http://goo.gl/kEM0g0
Posted by Selvam P at 10:01 PM    http://spiritualaffairs.blogspot.com/2014/11/vinayagar-agaval_99.html
====================================================
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமால் வேறொன்றறியேன் பராபரமே!

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

===================================

================================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...