Followers

Thursday, January 30, 2020




கந்த சஷ்டி கவசம்........... கந்த சஷ்டி கவசத்தை சொல்லுவதால் கிடைக்கும் மகிமை...........



கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.
'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர்.

·         நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. [1]
கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் சிரகிரி வேலவன்எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.

இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் [3] ஒளிபரப்புகின்றனர். பெரும்பாலும் சூலமங்கலம் சகோதரிகள் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் பாடிய கந்த சஷ்டி கவசம் பிரபலமாக உள்ளது. ஆபேரி, கல்யாணி, சுபபந்துவராளி, சிந்து பைரவி ஆகிய ராகங்களை உள்ளடக்கிய ராகமாலிகையாக பாடப்படுகிறது.


Kanda Shasti Kavasam

Kanda Shashti Kavacham or Skanda Sashti Kavasam (Tamilகந்த சஷ்டி கவசம்) is a Hindu devotional song composed in Tamil by Devaraya Swamigal (born c. 1820), a student of Meenakshi Sundaram Pillai, on Lord Muruga, the son of Lord Shiva, in Chennimalai near Erode. Tamil contains many ancient hymns in praise of deities. Kanda Sashti Kavasam was composed in the 19th century.[1] The song has been composed in praise of the Lord, seeking to shower His grace.
The song consists of a total of 244 lines, including four introductory lines known as "Kaappu," followed by a couple of meditational lines and the main song portion consisting of 238 lines known as the "Kavacham." The grammar employed in the introductory part is the Naerisai venba and that of the meditational part is the Kural venba, widely known to the Western world for its exclusive usage in Tirukkural. The "Kavacham" part follows the grammar of Nilai Mandila Aasiriyappaa.

கந்த சஷ்டி கவசத்தை சொல்லுவதால் கிடைக்கும் மகிமை...................


கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காப்பாற்றுகிறது. தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.


ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், ச ர வ ண ப வ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது, வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்றால் அமைதிதானே.

இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரஹங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் முகத்தில் தெய்வீக ஒளி வீசும். கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறி வகுத்தளித்தனர். கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

 

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

 

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க.

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

 

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது. இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

===================================

சஷ்டி கவசம் பிறந்த கதையை தெரிஞ்சுக்கோங்க! - வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

லகம் முழுவதும் உள்ள தமிழ் அறிந்த பெரும்பாலான இந்து மக்கள் இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் தினமும் ஒலிக்கும் திருமுருகனின் தெய்வீகத் தமிழ்ப்பாடல் அது. படிப்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் மந்திர மறை நூல்! அது என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே!

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட...
என்று தொடங்கி கேட்கும் இடங்களிலெல்லாம் நம்மைத் திரும்ப உச்சரிக்கவைக்கும்; உள்ளத்திலும் உடலிலும் அதிர்வு தரும் ஆற்றல் மிக்க அழகு முருகனின் அருந்தமிழ்ப் பாமாலை. அதுதான் அனைவரும் அறிந்த கந்தர் சஷ்டி கவசம். இதனைப் பாடியவர் தேவராய சுவாமிகள் என்னும் அருளாளர். அவர் இக்கவசத்தைப் பாடிய பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

 ஒருமுறை, பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் சென்றார் தேவராயர். மலையைச் சுற்றி கிரிவலம் வந்தார். அங்குள்ள மண்டபங்களில் உடல்நோயால் பீடிக்கப்பட்டவர்கள். மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற் றோர் எனப் பலர் அழுவதும் அரற்றுவதும் கண்டு மனம் வருந்தினார். அவர்கள் அனைவரும் நலம்பெற ஞானபண்டிதன் வழிகாட்ட வேண்டும் என்று மனத்தில் உறுதிகொண்டார். பழநியாண்டவர் கோயில் மண்டபத்தில் துயில் கொண்டார். அன்றிரவு அவரது கனவில் பழநியப்பரமன் பிரசன்னமானார்.

‘‘உன் எண்ணம் ஈடேற அருளினோம்.பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகிலுள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு!’’ என்று ஆசியளித்து கந்தவேள் மறைந்தார்.
உடனே பரவசத்துடன் எழுந்தார் தேவராயர். ‘‘அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!’’ என்று ஆடிப்பாடி மகிழ்ந்தார். மயில்மேல் வலம் வரும் அயில் வேலனைப் போற்றுவோர்பால் மறலியும் அணுகமாட்டான் என்று முருகன் திருவருளை வியந்து போற்றி பாமாலை சூட்டியருளினார். அதுதான் 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம் என்னும் புகழ்பெற்ற தோத்திரம்.

பாலதேவராய சுவாமிகள்
கந்தர் சஷ்டி கவசம் பாடிய தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர், அவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை என்றும், அவர் கணக்கர் வேலை பார்த்தவர் என்றும் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.

வீராசாமிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாமல் முருகன் திருவருளால் தேவராயர் பிறந்தார். நன்கு கல்வி கற்று வியாபார நிமித்தமாக பெங்களூரு சென்று அங்கு தமது வணிகத் தொழிலை மேற்கொண்டார். திருவாவடுதுறை ஆதினத்தில் பெரும் புலவராகத் திகழ்ந்த திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பெங்களூர் வந்தபோது தேவராயர் அவரைத் தமது இல்லத்துக்கு அழைத்து உபசரித்து மகிழ்ந்தார்.

பிள்ளையவர்களிடம் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாம் இயற்றிய கவிதைகளை மகாவித்வானிடம் காட்டி பிழை திருத்தம் செய்துகொள்வாராம். தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேட மலை மாலை முதலிய நூல்களை தேவராயர் இயற்றியதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் எழுதியுள்ள மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வரலாற்றில் தேவராயர் அவரது மாணவர் என்பதற்கான குறிப்பு எதுவும் காணப்பெறவில்லை.

சஷ்டிக்கவசம் பாடப்பட்டது எந்த ஊரில்?
தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார் என அறிய முடிகிறது. தற்போது அனைவரும் பாராயணம் செய்யும் கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது என்று கூறிகிறார்கள். ஆயினும் இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் பழநிமலையின் மீதுகோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறு  குழந்தை வடிவாகிய முருகப் பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்’ (பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்று பாடியுள்ளார். எனவே இக்கவசம் பழநியில் பாடப்பெற்றது என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றையும், இவ்வரிகளையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.
மேலும் எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய் (156, 157) மைந்தன் என்மீது உன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்! (198, 199) எனைத்தடுத்து ஆட்கொள் எந்தனது உள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி’ (227,228) என்ற வரிகள் மூலம் பழநிப் பரமன் ஆட்கொண்டு இக்கவசம் பாட வைத்ததை உறுதியாகக் கூறலாம். இப்பாமாலையை சிரகிரி எனப்படும் சென்னிமலையில் அரங்கேற்றியதாகச் சிலர் கூறுவர். ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் காணப்பெறவில்லை.

கவலைகள் தீர்க்கும் கந்தசஷ்டி கவசம்
இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறு முறை ஓதி ஜபம் செய்து திருநீறணிய எல்லா நோயும் நீங்கும்; நவக்கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்வர்; என்றும் இன்பமுடன் வாழ்வர் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் தேவராயர்.

சரவணபவஎனும் திருநாமம் இந்த கந்தர்சஷ்டி கவசத்தின் மூல மந்திரமாகும். இந்நூலின் முதல், இடை, கடை (1, 16, 162, 237) பகுதிகளில் இந்த மூலமந்திரத்தைப் பொருத்தி இதனைப் பாடியுள்ளார் என்று கருத முடிகிறது. முருகனடியார்கள் அனைவரும் விரும்பிப் படிக்க வேண்டும் என்பதற்காக வள்ளியம்மையாரின் குழந்தையாகிய தேவராயன் இயற்றியதாகக் (கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை) குறிப்பிடுகிறார். கவசத்தின் ஒவ்வோர் அடியும் கந்தசுவாமியின் திருக்கையிலுள்ள வேலைப் போன்றது.

ஞானாசாரியார் ஒருவரின் மூலம் அந்த அடிகளின் உண்மைப் பொருள்களைத் தெளிவாக உணரலாம். உடல், உள்ளம், உயிர் அனைத்துக்கும் வேலே கவசமாக உள்ளது. கந்தர் சஷ்டி கவசம் மந்திர மறை நூல் என்பது, பாராயணம் செய்து பலன் அடைந்தவர்களது அனுபவ உண்மையாகும்.

 

===================================



காப்பு:
நேரிசை வெண்பா


துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற்
பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்து ஒங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை.



குறள் வெண்பா

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி






மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சண்முகா......... சரணம்!






கந்த சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ர ர ர ர ர ர ர
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென

வசர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தார்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேலே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!




courtesy Maalaimalar. Vikatan.
courtesy Posted by Hanan Daner.

From Wikipedia,..............

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
====================================================
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமால் வேறொன்றறியேன் பராபரமே!
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.
=======================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...