மனமே, உனக்குத் தங்கத்தால்
கோயில் கட்டித் தருவேன்!
விநாயகத்தேவனாய், வேல்உடைக் குமரனாய்,
நாராயணனாய், நதிச்சடைமுடியனாய்,
பிறநாட்டுஇருப்போர் பெயர்பலகூறி
அல்லா! யெஹோவா! எனத்தொழுது அன்புஉறும்தேவரும்தானாய், திருமகள், பாரதி,
உமைஎனும் தேவியர் உகந்த வான்பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
பொதுவாக எந்தவோர் இலக்கியத்துக்கும் காப்புச்செய்யுள் என ஒன்றை எழுதுவார்கள். தான் எழுதவிழையும் இலக்கியம் சிறப்பாக நிறைவேற தெய்வம் துணைசெய்யவேண்டும் என வேண்டுவார்கள். பெரும்பாலும் அந்தக் காப்புச்செய்யுள் விநாயகப்பெருமான்மீது எழுதப்பட்டிருக்கும். விநாயகரைப் பற்றியே ஓர் இலக்கியம் எழுதினால்?
‘அதற்கும் அவரேதான் காப்பு’ என்றார் பாரதியார். புதுவை மணக்குள விநாயகரைக் குறித்த அவரது ‘விநாயகர் நான்மணிமாலை’யின் முதல் பாடலில்:
‘(சக்திபெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதுஎனினும் சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா, அத்தனே, (நின்)தனக்குக் காப்புஉரைப்பார், நின்மீது செய்யும்நூல்
இன்றுஇதற்கும் காப்பு நீயே.’
(குறிப்பு: இந்த அத்தியாயத்தில் உள்ள அனைத்து மேற்கோள் பாடல்களிலும் அடைப்புக்குறியில் உள்ள சொற்கள் பாரதி எழுதியவை அல்ல, அந்தப் பகுதிகள், கிடைத்தபோதே சிதைந்திருந்தன. பின்னர், அந்தப் பாடல்களை முழுமை செய்வதற்காக, பிற சொல் அமைப்புகளைப் பார்த்து வேறு கவிஞர்களால் இவை சேர்க்கப்பட்டன!)
விநாயகப்பெருமானே, எங்கள் தந்தையே, சிறந்த பாடல்களை இயற்றுகிறவர்கள், யாரைப் பற்றிப் பாடினாலும், உன்னுடைய அருளை, வாக்குவல்லமையை வேண்டி உன்னைப் பற்றிக் காப்புச் செய்யுள் பாடுவார்கள். இன்றைக்கு, உன்னைப் பற்றி நான் பாடுகிற இந்த நூலையும் நீயே காப்பாய், எனக்கு வாக்குவல்லமையை வழங்கி அருள்வாய்! அடுத்து, ‘உன் அருளுக்கு நான் தகுதியானவன்தானா?’ என்று கேட்டுக்கொள்கிறார் பாரதி. ‘பல தவறுகள் செய்திருக்கிறேன், அதனால் மிஞ்சியது வெறும் களைப்புதான். இன்றைக்கு உன்னை நாடி வந்துவிட்டேன். தீபோல ஒளிவீசும் தமிழ்ப் பாடல்களால் உன்னைப் போற்றவுள்ளேன். நீயே சரணம், உன்னுடைய அருளே சரணம்!’
‘நீயே சரணம், நினதுஅருளே சரணம்,சரணம்,நாயேன் பலபிழைசெய்து, களைத்து உனைநாடிவந்தேன், வாயே திறவாத மௌனத் திருந்துன் மலர்அடிக்குத் தீயே நிகர்த்து ஒளிவீசும் தமிழ்க்கவி செய்குவனே.’
செய்கிற தொழில் எதுவானாலும், அது இறைப்பணிதான், அதற்கு இறைவன் அருள்வேண்டும். காரணம், அனைத்தையும் படைத்தவன் அவனே, அனைத்துத் தெய்வங்களும் அவனே:
‘செய்யும் தொழில் உன்தொழிலே காண்;
சீர்பெற்றிட நீ அருள்செய்வாய்,
வையம்தனையும் வெளியினையும்
வானத்தையும்முன் படைத்தவனே!
ஐயா! நான்முகப்பிரமா,
யானைமுகனே, வாணிதனைக்
கையால் அணைத்துக் காப்பவனே,
கமலாசனத்துக் கற்பகமே!’
விநாயகரைப் பிரம்மன் என்றே சொல்லி விடுகிறார் பாரதி. அதேசமயம் யானை
முகன் எனவும் வர்ணிக்கிறார், தாமரை
ஆசனத்தில் யானைமுகன் அமர்ந்து
உலகைப் படைக்கும் திருக்காட்சியை
எண்ணிப் பாடுகிறார்! அடுத்தப் பாடலில் அதை மீண்டும் வலியுறுத்துகிறார்:
‘கற்பகவிநாயகக் கடவுளே போற்றி,
சிற்பர மோனத்தேவன் வாழ்க,
வாரணமுகத்தான் மலர்த்தாள் வெல்க,
ஆரணமுகத்தான் அருள்பதம் வெல்க,
படைப்புக்கு இறைஅவன், பண்ணவர் நாயகன்,
இந்திரகுருஎன இதயத்து ஒளிர்வான்,
சந்திரமவுலித் தலைவன் மைந்தன்,
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்!’
தலையில் சந்திரனைச் சூடிய சிவபெருமான் மகனாகிய கணபதியின் திருவடியைக் கருத்தில் வைத்தால் என்ன கிடைக்கும்? அதையும் பாரதியே சொல்கிறார்:
‘உட்செவி திறக்கும், அகக்கண் ஒளிதரும்,
அக்கினி தோன்றும், ஆண்மை வலியுறும்,
திக்குஎலாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்,
கட்செவிதன்னைக் கையில் எடுக்கலாம்,
விடத்தையும் நோவையும் வெம்பகைஅதனையும்
துச்சம்என்று எண்ணித் துயர்இலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்,
அச்சம் தீரும், அமுதம் விளையும்,
வித்தை வளரும், வேள்வி ஓங்கும்,
அமரத்தன்மையும் எய்தவும்
இங்குநாம் பெறலாம்!’
வெளிச்செவி எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால், கேட்பதன் உண்மையை அறியும் அகச்செவி, ஆனைமுகனை வணங்கினால் திறக்கும். அதேபோல் அகக்கண்ணிலும் ஒளிபரவும், உள்ளே ஞானச்சுடர் எரியும், ஆளுமை வலிமையாகும். அவனை வணங்குவோர் எந்தத் திசையில் சென்றாலும், அவர்களுக்கு வெற்றிதான். பாம்பைக் கையில் பிடித்தாலும், அவர்களுக்குத் துன்பம் வராது. விஷமோ, நோயோ, பகையோ எல்லாம் சிறுதுரும்பாகிவிடும். துயரமில்லாமல் என்றென்றும் வாழலாம், முன்னேறலாம். விநாயகன் பக்தர்களுக்கும் அச்சமில்லை. அவர்கள் நெஞ்சில் அமுதம் பெருகும். அவர்களது திறமைகள் வளரும். ஞானவேள்வி நடத்தி சிறப்பார்கள். அமரத்தன்மை பெறுவார்கள். எல்லாம் அவனருளே!
பெருமானை வணங்கினால் போதுமா? நாம் என்ன செய்யவேண்டும்? ‘காலைப்பிடித்தேன் கணபதி, நின்பதம் கண்ணில்ஒற்றி நூலைப் பலபலவாகச் சமைத்து நொடிப்பொழுது(ம்) வேலைத்தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துஉன் கோலை மனம்எனும் நாட்டின் நிறுத்தல் குறிஎனக்கே.’கணபதியே, நான் உன் திருவடிகளை வணங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, நூலெழுதத் தொடங்குகிறேன். பலவிதமான நூல்களை எழுதுகிறேன்.நான் என்ன செய்தாலும், அதில் நொடிப்பொழுதும் பிழைகள் நேராமல் பார்த்துக்கொள்கிறேன். நல்லவற்றை மட்டுமே செய்கிறேன். என்னுடைய மனமாகிய நாட்டில் உன்னுடைய ஆட்சிதான் நடக்கவேண்டும், அதுவே என் லட்சியம்! மனத்தை ஆள்கிறான் மணக்குளவிநாயகன். அரசனிடம்தானே குறைகளைச் சொல்ல இயலும்? பாரதி கேட்கிறார்:
‘எனக்குவேண்டும் வரங்களை
இசைப்பேன், கேளாய் கணபதி!
மனத்தில் சலனம்இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும்பொழுது நின்மவுன
நிலைவந்திட நின் செயல்வேண்டும்.
கனக்கும் செல்வம், நூறுவயது
இவையும் தரநீ கடவாயே.’
மனத்தில் சலனமே கூடாது, எந்த வேலை எடுத்துக்கொள்கிறோமோ அதில் முழு கவனம் இருக்கவேண்டும், கண்டதில் புத்தி ஓடக்கூடாது. அதேபோல், புத்தியில் இருள் கூடாது. எப்போதும் ஒளியோடு சிந்திக்கவேண்டும், செயல்படவேண்டும். நினைத்த நேரத்தில் மோனநிலை பெற்று சிந்தனையைக் கூர்மைப்படுத்திக்கொள்ள இயலவேண்டும். இதெல்லாம் சொன்னபிறகு, நிறைய செல்வம், நூறு வயது போன்ற லௌகிக விஷயங்கள், இவையனைத்தையும் குடிமக்களுக்கு, அதாவது, பக்தர்களுக்குத் தருவது அரசனான தெய்வத்தின் கடமை அல்லவா! அரசனின் கடமைகள் சரி, குடிமக்களுக்கு என்ன கடமை? அடுத்த பாடலில் அதைச் சொல்கிறார் பாரதி:
‘கடமையாவன, தன்னைக் கட்டுதல்,
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்.’
பக்தர்களின் கடமைகள் நான்கு. முதலாவதாக, தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு நடத்தல், அடுத்து, பிறருடைய துயரத்தைக் கண்டால் ஓடிச்சென்று உதவுதல், மூன்றாவது, அவர்கள் நலத்துடன் இருக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுதல். இதனை ஒவ்வொருவரும் செய்தால், அனைவரும் நலமாக இருப்பார்கள்!
நிறைவாக, நான்காவது கடமையை விவரிக்கத் தொடங்குகிறார் பாரதி. முன்பு விநாயகனைப் பிரம்மன் என்றவர், இப்போது இன்னும் பல தெய்வங்களைச் சொல்லி அனைத்தும் நீயே என்கிறார்:
‘விநாயகத்தேவனாய், வேல்உடைக் குமரனாய்,
நாராயணனாய், நதிச்சடைமுடியனாய்,
பிறநாட்டுஇருப்போர் பெயர்பலகூறி
அல்லா! யெஹோவா! எனத்தொழுது அன்புஉறும்தேவரும்தானாய், திருமகள், பாரதி,
உமைஎனும் தேவியர் உகந்த வான்பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்’
விநாயகன், வேல்முருகன், நாராயணன், சிவபெருமான், பிறநாட்டவர் தொழுகிற அல்லா, யெஹோவா என அனைத்துத் தேவர்களும் நீயே. லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என முப்பெரும் தேவியரும் மகிழ்ந்து போற்றுகிற உயர்ந்த பொருள் நீயே. உலகையெல்லாம் காக்கும் தனித்துவமானவன் நீயே! உன்னைப் போற்றுவது எங்களுடைய நான்காவது கடமை.
இந்த நான்கு கடமைகளையும் செய்தால், என்ன கிடைக்கும்?
நான்கு பலன்கள் கிடைக்கும் என்கிறார் பாரதி:
‘பயன்இதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடுஎனும்முறையே.’
அறம், பொருள், இன்பம் ஆகியவை இவ்வுலக இன்பங்கள். வீடுபேறு என்பது முக்திநிலை. தங்கள் கடமையை முறைப்படி செய்யும் பக்தர்களுக்கு இறைவன் இந்தப் பலன்களை வழங்குவான். தவம் செய்தவர்களுக்குதான் முக்தி கிடைக்கும் என்பார்களே. இந்த நான்கு கடமைகளில் தவம் வரவில்லையே! இதற்கும் பாரதி பதில் சொல்கிறார்:
‘துறந்தார் திறமை பெரிது, அதனினும் பெரிதுஆகும் இங்கு குறைந்தாரைக் காத்து, எளியார்க்கு உணவு ஈந்து, குலமகளும் அறம்தாங்கு மக்களும் நீடுஊழி வாழ்கஎன அண்டம்எலாம் சிறந்துஆளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயும்தவமே.’ இந்த உலக இன்பங்களையெல்லாம் துறந்துவிட்ட துறவிகள் செய்யும் தவம் பெரிய விஷயம்தான். ஆனால், அதைவிடப் பெரிய தவம் ஒன்று இருக்கிறது.
சாதாரண மனிதனாக வாழ்ந்து, தன்னைச் சுற்றி சிரமப்படுகிறவர்களைக் காப்பாற்றி, எளியவர்களுக்கு உணவு தந்து, எல்லாரும் நன்கு வாழவேண்டும் என்கிற எண்ணத்துடன் உலகைக் காத்து ஆட்சிசெய்கிற நாதனைப் போற்றுகிற தொண்டர்களின் தவம் இருக்கிறதே, அது மிகப் பெரியது!
ஆனால், இந்தத் தவத்தைச் செய்ய ஒருவருடைய ஒத்துழைப்பு தேவை: மனம். அதன் ஒத்துழைப்பைக் கோருகிறார் பாரதி:
‘சக்திகுமாரனை, சந்திரமவுலியைப்
பணிந்து, அவன்உருவிலே பாவனை நாட்டி,
ஓம்எனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய்
வாழ்ந்திட விரும்பினேன், மனமே! நீஅதை
ஆழ்ந்து கருதி, ஆய்ந்துஆய்ந்து பலமுறை
சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க்கெல்லாம்
கூறிக்கூறி குறைவுஅறத் தேர்ந்து
தேறித்தேறி நான் சித்திபெற்றிடவே
நின்னால்இயன்ற துணைபுரிவாயேல்,
பொன்னால் உனக்குஒரு கோயில் புனைவேன்,
மனமே! எனைநீ வாழ்வித்திடுவாய்,
வீணே உழலுதல் வேண்டா,
சக்திகுமாரன் சரண்புகழ்வாயே!’
மனமே, சக்திகுமாரனான விநாயகனை, சந்திரனை அணிந்தவனைப் பணிந்து, அவனுடைய திருவுருவத்தைச் சிந்தித்து, ஓம்காரப் பொருளை உள்ளத்திலே நிறுத்தி, சக்தியைக் காக்கும் கலையை அறிந்து, எல்லாரையும்விட எளியவனாக, எல்லாரையும்விட வலியவனாக, எல்லார்மீதும் அன்பு வைத்திருக்கும் இனியவனாக வாழ விரும்பினேன். அதை நீ புரிந்துகொள். சிந்தித்துப்பார். தெளிவாகிக்கொள். சுற்றியுள்ள எல்லாருக்கும் சொல். நான் சித்திபெற உன்னால் இயன்ற உதவியைச் செய். உனக்குத் தங்கத்தால் கோயில் கட்டித்தருவேன்! நான் வாழ்வது உன் கையில்தான் இருக்கிறது, மனமே. கண்ட விஷயங்களை எண்ணிக் குழப்பிக்கொள்ளாதே, சக்திகுமாரனுடைய திருவடிகளைப் போற்று! ஆனால், இப்படி எந்நேரமும் இறைவனை எண்ண இயலுமா? ஏதாவது பிரச்னை வந்தால் மனம் தடுமாறுவது இயல்புதானே? பாதுகாப்புக்கு இறைவன் இருக்கும்போது ஏன் தடுமாறவேண்டும் என்று மனத்துக்கு இடித்துரைக்கிறார் பாரதி. ‘துளியும் வருந்தாதே, முறைப்படி நட, தொண்டருக்கு விநாயகன் துணைநிற்பான்!’
‘முறையே நடப்பாய், முழுமூட நெஞ்சே,
இறையேனும் வாடாய் இனிமேல், கறைஉண்ட
கண்டன்மகன், வேதகாரணன், சக்திமகன்
தொண்டருக்குஉண்டு துணை.’
சொல்லப்போனால், பயந்து எந்தப் பயனும் இல்லை. இடியே விழுந்தாலும் இறைவன் அருளிருக்க ஏன் பயம்?
‘மனமே! கேள்,
விண்ணின் இடிமுன்விழுந்தாலும்,
பான்மை தவறி நடுங்காதே,
பயத்தால்ஏதும் பயன்இல்லை,
ஆன்மாவான கணபதியின்
அருள்உண்டு, அச்சம் இல்லையே.’
ஆகவே, இறைவனைப் போற்றி, நற்செயல்களைச் செய்வோம், அதுவே வெற்றிதரும் வழி:
‘விதியே வாழி! விநாயகா வாழி!
பதியே வாழி! பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே, போற்றி!
வெற்றி வாழி! வீரம் வாழி!
பக்தி வாழி! பலபல காலமும்
உண்மை வாழி! ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை அமரர்
பதங்களாம், கண்டீர்! பார்இடை மக்களே,
கிருதயுகத்தினைக் கேடுஇன்றி நிறுத்த
விரதம்நான் கொண்டனன், வெற்றி
தரும்சுடர் விநாயகன் தாள்இணை வாழியே!’
===========================
courtesy; http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=3102&id1=52&id2=0&issue=20160216
===========================
No comments:
Post a Comment