முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய கருட புராணம் சொல்லும் உபாயம்!...............
பித்ருக்களுக்கு செய்யும் உதவிகளில் மிகவும் முக்கியமானது, நிறைய பொருள்களை தானம் செய்வதுதான். ஒருவர் இறக்கும்போது அவருடன் யாரும் கூடச் செல்வதில்லை. ஆனால் இந்த உலகில் இறந்தவரை உத்தேசித்து செய்யப்படும் தானங்களே இறந்தவருக்கு- நண்பனாக - உறுதுணையாக மறு உலகத்திலும் வந்து காப்பாற்றும். ஆகவே பித்ருக்களுக்கு தானமே சிறந்த நண்பன் என்கிறது சாஸ்திரம்.
பித்ருக்கள் மேல் உலகில் படும் கஷ்டங்களிலிருந்து காப்பாற்றவே, பூலோகத்தில் நமஸ்காரம் செய்யும் நபரால், இறப்பவரின் நலனுக்காக என்று கூறி நிறைய தானங்கள் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு தானங்கள் செய்யாமல் இருந்தால் ,பித்ருக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என கூறுகிறது ஸ்ரீ வேத வ்யாஸ மஹரிஷியால் இயற்றப்பட்ட கருட மகாபுராணம்.
இறக்கும் ஜீவன் மேல் உலகம் செல்லும் வழி முழுவதும், அதிகமான சூட்டினால், கொதிக்கின்ற மணலும், புழுதிகளும், கூறான முட்களும் இருக்கும்.
அதன் மேல்தான் எமதூதர்கள் ஜீவனை நடந்து வரச்செய்து அழைத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் எமதூதர்களுக்கு எந்த ஒரு சிரமும் ஏற்படாது. ஆனால் அந்த ஜீவன், கால் சூட்டினாலும், பசி தாகத்தினாலும் அதிகமான வெப்பத்தாலும், மிகவும் கஷ்டப்படும்.
செல்லும் வழியில் தங்கி இளைப்பாறுவதற்கு மரமோ, மரத்தின் நிழலோ, வீடுகளோ, காடுகளோ, ஆசிரமமோ, தோட்டங்களோ, அல்லது தாகத்தைத் தணிக்க ஓடையோ, கிணறோ எதுவும் கிடையாது. அந்த சமயத்தில் நம்மை இந்த கஷ்டத்திலிருந்து யார் காப்பாற்றுவார்கள்? என்று ஜீவன் ஏங்கித் தவிக்கும்.
அப்போது பூலோகத்தில், இறந்தவருக்கு கர்மா செய்யும் நபர், பித்ருக்காக அன்னதானம் உள்பட பற்பல தானங்களைச் செய்தால் தானம் செய்யப்பட்ட அந்த அனைத்து பொருட்களும், மேல் உலகத்தில் எமலோகம் நோக்கி அழைத்துச் செல்லும் ஜீவனிடம், உடனுக்குடன் தரப்பட்டு, அந்த கஷ்டங்களிலிருந்து பித்ருக்களை காப்பாற்றும்.
அப்போது அந்த பித்ரு மிக்க சந்தோஷத்தோடு, தனக்காக தானங்களைச் செய்த மகன் முதலிய வாரிசுகள் அனைவரும் நல்லா இருக்கட்டும் என்று அனுகிரகம் செய்யும். குறிப்பாக, நாம் இருக்கும்போதே இல்லாதவர்களுக்கும், தேவை இருப்பவர்களுக்கும் நம்மால் முடிந்த வரை தானம் செய்ய வேண்டும்.
நாம் செய்த தானங்களின் பலனே நம்மை அடுத்த பிறவியில் உயர் நிலைக்கு அழைத்து செல்லும். நம் முன்னோர்களையும் நற்கதி அடைய செய்ய தான தர்மங்கள் செய்ய வேண்டும் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment