07.06.2021 திங்கட்கிழமை வைகாசி பரணி
Karai பேப்பர்
சுவாமிகள் குருபூசை தினம்.........
பேப்பர் சுவாமிகள்
(எஸ்.கே.சதாசிவம்)
பேப்பர்
சுவாமிகள் என மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற இவர் வீரவாகு வேலுப்பிள்ளை
முருகேசு (V.V.முருகேசு) எனும் இயற்பெயர் கொண்டவர். 1900 ஆம் ஆண்டு தங்கோடையில் பிறந்தவர். சுவாமிஜி முதலில் இல்லற
வாழ்வில் ஈடுபட்டிருந்தார். மனைவி இறந்ததும் துறவறத்தை மேற்கொண்டவர்.
கடல் வழியாகப்
பயணிக்கும் மரக்கலங்களுக்கு ஒளி பாய்ச்சி கரைகாட்டும் வெளிச்ச வீட்டுக்கு (கோவளம்)
அருகே இருந்து மானிடப்பிறவி எனும் பெருங்கடற் துயரில் இருந்து கரையேறி மானிடர் தம்
வாழ்வில் ஈடேற்றம் பெற முருகேசு சுவாமிகள் 1940 “ஆலவாய்
ஆச்சிரமம்” ஆரம்பித்தார்.
வெளிச்ச வீட்டு பங்களாவில் முதலில் இருந்து விட்டு 1944 ஆம் ஆண்டளவில் மால் போட்டார். தனித்திரு, பசித்திரு, விழித்திரு எனும்
ஞான நிலையில் எட்டு வருடங்கள் இருந்த பொழுது ஆச்சிரமத்தைத் தொடங்கினார். ஆச்சிரமம்
தொடங்க முன்பு வட இந்தியாவில் இருந்து இலங்கை வரையுமான சிவபூமியின் கண் யாத்திரை
செய்தவர். பரத கண்ட யாத்திரையின் போது இந்தியப் பெருந்தலைவர்களுடன் தொடர்பை
ஏற்படுத்தினார்.
வெளிச்ச வீட்டு
வளவில் பர்ணசாலை அமைந்து இருத்தல் பொருத்தமானது ஆகாது எனக் கருதிய சுவாமிஜி 1970 களில் வெளிச்ச வீட்டு ஆச்சிரமத்தைக் கைவிட்டு நண்டுப்பாளி
எனும் குறிச்சியில் கொல்லங்கலட்டி வளவில் ஆச்சிரமத்தை ஸ்தாபித்தார்.
திருஞான சம்பந்த
சுவாமிகள் திருவீழிமிழலையில் வீற்றிருந்து இறைவன் புகழ் பாடி பதியங்கள் பாடியவர்.
பேப்பர் சுவாமிகள் வாழ்ந்த ஆச்சிரமத்திலும் திருவீழி மரம் இருந்தது. திருவீழி
மரத்தின் கீழ் இருந்து சுவாமிகள் ஆன்மீகச் செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை. அவரின்
கலந்துரையாடல்கள், சிந்தனைகள் யாவும் இம்மரத்தின் கீழே நடைபெற்றது.
இம்மரத்தின் கீழ் அமர்ந்து செயற்படுவதன் மூலம் ஆன்மீக இன்பத்தை அனுபவித்தார்.
ஆன்மீக உள் உணர்வுகள் வெளிப்படுவதற்கு இம்மர நிழல் சுவாமிகளுக்கு உந்துசக்தியாக
அமைந்தது.
கடல் அலைகள்
தாலாட்டும் இயற்கை எழில் மிக்க அமைதியான சூழலில் ஆச்சிரமம் அமைத்து தவ வாழ்வு
வாழ்ந்த ஞானி பேப்பர் சுவாமிகள் தன்னை நாடி வருபவர்களின் எண்ண ஓட்டங்களைச்
சொல்லும் வல்லமை மிக்க ஞானம் கைவரப் பெற்றவர். தன் முன் அமர்ந்து இருப்பவரின்
சிந்தனையில் உள்ளவற்றை எடுத்துச் சொல்லி அவர் தம் மனத்தில் குடி கொண்டிருக்கும்
சஞ்சலத்தில் இருந்து விடுபடும் வழியைக் காட்டுவார்.
சுவாமிஜி இயற்றிய
“வள்ளி கும்மி” எனும் நூலில்
முப்பொருள் விளக்கம், சைவ நாற் பாத
நெறிகள் குரு தத்துவம், ஆலய வழிபாட்டின்
முக்கியத்துவம் ஆகியன பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். தன் ஆச்சிரமத்தில்
பல்லாயிரக்கணக்கான பாடல்களை சுவாமிஜி பாடியுள்ளார். நன்னெறி போதிக்கும் கருத்துக்கள்
சுவாமிஜின் பாடல்களில் பொதிந்து காணப்படுகின்றது. சமய குரவர் நால்வர் இல்லையேல்
சைவசமயம் இல்லையென்று சிறப்பித்துக் கூறியுள்ளார். இது தவிர குறிப்புக்கள் Sayings என ஏராளம் உண்டு. தனது சரித்திரத்தை சுவாமிஜி ஆங்கிலத்தில்
எழுதி வைத்துள்ளார். ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்குத் தூய்மையான மனமும், களங்கமில்லா பக்தியும் தேவை என்பதைத் தமது நூல்களில்
வலியுறுத்திக் கூறியுள்ளார்.
உடற் பிணியால்
வருந்தியவரின் நோய்களை நீக்கிய மருத்துவராகவும் சுவாமிகள் திகழ்ந்தார். காரைநகரில்
வாழ்ந்த மக்கள் மட்டுமன்றி வெளியூர்களிலும் இருந்து ஏராளமான மக்கள் சுவாமிகளைத்
தரிசிப்பதற்கு வருகை தந்தனர். சுவாமிகள் சைவ ஆகம முறைப்படி தயாரிக்கப்பட்ட
திருநீற்றைத் தவிர வேறு விபூதி பாவிப்பதில்லை. ஞானசம்பந்தர் வழியிலே சுவாமிஜி
திருநீற்றின் பெருமையை வளர்த்தவராவர். சைவ சமயப் பண்பாட்டின்படி வேட்டி கட்டினால்
அன்றி விபூதி வழங்குவதில்லை. நோயறிந்து திருநீறு போடுதல், வேப்பம் குழையினால் பார்வை பார்த்தல், சமுத்திர தீர்த்தம் ஆடுதல், பிரசாதம் கொடுத்தல் போனற் பல்வேறு முறைகளைக் கையாண்டு தன்னை
நாடி வருபவர்களின் நோய்களை நீக்கினார். சுவாமிகளின் ஆச்சிரமம் ஆன்ம விடுதலைக்கு
வழி காட்டும் நிலையமாக இருந்ததோடு உடற்பிணி போக்கும் “தெய்வீக வைத்திய ஆலயமாகவும்” திகழ்ந்தது.
பாரத தேசத்தின்
சுதந்திரப் போராட்ட வீரர் திரு. J.C.குமரப்பா நோயுற்ற
வேளை சுவாமிகளின் ஆச்சிரமத்தில் தங்கியிருந்து ஆசி பெற்றுக் குணமாகியவர். திரு.
குமரப்பா நோயின் நிமித்தம் தனியான குடிசையில் வசிக்க வேண்டிய தேவை இருந்தமையால்
தனியான குடிசையில் வசித்தார். அவர் வாழ்ந்த குடிசை ஆச்சிரமத்திற்கு அயலில்
இருந்தது.
அக்குடிசைக்கு குமரப்பா குடிசை (Kumarappa Cottage) என அழைக்கப்பட்டது.
சுவாமிகள் தவ
வாழ்வின் முற்பகுதியில் வெளிச்ச வீட்டு பங்களாவில் அன்னதானம், பூசை முதலியவற்றை நடாத்தி வந்தார். மாதந்தோறும் பௌர்ணமியில்
இயந்திர பூசை, விசேட பூசையாக நடைபெறும். பௌர்ணமி கூடும் நேரத்தில்
சமுத்திர தீர்த்தம் ஆடி விட்டு இயந்திர பூசை நடாத்தி நைவேத்தியம் வைப்பார். குரு
பூசை தினங்கள், சிவராத்திரி, நவராத்திரி, கந்தசஷ்டி, திருவம்பா, தைப்பொங்கல், வருடப்பிறப்பு
போனற் திருநாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
பல அடியார்கள்
விசேட தினங்களில் ஆச்சிரமத்திற்கு வருகை தந்து சுவாமிகளுடன் இணைந்து சென்று
சமுர்த்திர தீர்த்தத்தில் தீர்த்தமாடி வருவார்கள். நோயாளிகளின் பிணிகளை நீக்கும்
தீர்த்தமாகவும், விதவையர்களுக்கு விரத பலன்களைக் கொடுக்கும் விசேட
தீர்த்தமாகவும், ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு அவர்களின் மனங்களைக்
கழுவும் விசேட தீர்த்தமாகவும் இப்புனித தீர்த்தம் அமைந்திருந்தது.
வெளிச்ச வீட்டு
பங்களாவில் அன்னதானம் நடக்கும் காலத்தில் இறை பூசையுடன் கோ பூசையும் தவறாது
நடைபெறும். அடியார்கள் அனைவரும் உணவு அருந்துவதற்கு முன்பு இலையில் இருந்து ஒரு
பிடி அன்னம் பசுவிற்கு வழங்கி விட்டே உணவு அருந்துவார்கள் சுவாமிஜி ஆச்சிரமத்தில்
பசுக்கள் வளர்ப்பதில் அக்கறை செலுத்தினார். ஆச்சிரம அபிஷேகத்திற்குப் பால்
கொடுத்தனர். ஒவ்வொரு நாளும் பசுவைக் கும்பிட்டவர் அன்றன்று செய்யும் பாவங்கள்
அன்றன்றே தீரும் என்று சுவாமிஜி கூறியருளினார். அபிஷேகத்திற்கும்
நெய்வேத்தியத்திற்கும் பால் தரும் பசுக்கள் கண்ட இடங்களில் மேயக்கூடாது.
ஆச்சிரமத்திற்குள்ளேயே அவற்றை வைத்து வளர்ப்பது சுவாமிஜி இன் வழக்கம். 1970 களில் கொல்லங்கலட்டியை ஆச்சிரமத்திற்காகத் தெரிவு செய்தமை
பசுக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை அங்கு அமைந்திருந்தமையே காரணமாகும். பட்டிப்
பொங்கல் திருநாளில் எல்லா பசுக்களிற்கும் அர்ச்சனை, தூப, தீப ஆராதனை
நடைபெறும். மாட்டுக் கொட்டகையில் மாட்டுப் பொங்கல் நடைபெற்று பசுக்களுக்கு
நெய்வேத்தியம் படைக்கப்படும்.
சுவாமிஜி
சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய
மூன்று மொழிகளிலும் வல்லவர். சமஸ்கிருதம் எழுதிப் படிக்காமல் இயற்கையாகவே
உணர்ந்தவர். சைவ சமயப் பிள்ளைகள் சைவ சமய சூழலில் கற்க வேண்டும் என விரும்பினார்.
அன்றைய கால கட்ட த்தில் காரைநகர் சிறார்கள் கல்வி கற்பதற்கு முனைப்புடன்
செயற்பட்டார். தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை, களபூமி சுந்தரமூர்த்திநாயனார் ஆகிய பாடசாலைகளை அப்பகுதி
மக்களின் ஆதரவுடன் ஆரம்பித்து வைப்பதில் இணைந்து செயற்பட்டார். பாடசாலைக்குச்
செல்லாமல் மாடு மேய்த்துக் கொண்டு திரிந்த சிறுவர்களை அழைத்து பாடம் கற்பித்தார்.
ஆச்சிரமத்தில் தொண்டு செய்யும் சிறுவர்களுக்கும், ஆச்சிரமத்தில் படிக்கும் சிறுவர்களுக்கும் திருக்குறள்
சொல்லிக் கொடுத்து மனனம் செய்விப்பது சுவாமிஜிஇன் வழக்கம். மனனம் செய்து
ஒப்புவிக்கும் சிறுவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி ஊக்குவித்தார். ஆன்மீக
ஈடேற்றத்திற்கான ஆன்மீகக் கல்வியை வழங்கியதோடு ஆன்மீக வழிகாட்டலையும் செய்து
வாழ்விற்கு ஆதாரமான ஆங்கிலக் கல்வியையும் புகட்டினார்.
சுவாமிஜி ஆரம்ப
காலத்தில் வெளிச்ச வீட்டு பங்களாவிற்கு அருகில் வசித்து வந்தார். அங்கே அவர் ஆண்
பிள்ளைகளுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய
பாடங்களை இலவசமாகக் கற்பித்தார். சுவாமிகளிடம் ஆங்கிலம், கணிதம் பயின்ற இளைஞர்கள் பிற்காலத்தில் அப்பாடங்களைக்
கற்பிக்கும் திறமை மிக்க ஆசான்களாகத் திகழ்ந்தார்கள். ஒரு நாள் ஆச்சிரமத்தில்
உணவுப் பொருட்கள் இல்லாமையை சுவாமிகளிடம் தெரிவிக்கத் தயங்கி நின்ற மாணவர்களைப்
பார்த்து சுவாமிகள் உணவுப் பொருட்கள் பாதி வழிக்கு வந்து விட்டது உணவைச்
சமைப்பதற்கான பாத்திரங்களைத் தயார் செய்யுமாறு கூறினார். சிறிது நேரத்தில்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரின் வாகனம் ஆச்சிரமத்திற்குத் தேவையான சமையல்
பொருட்களுடன் வந்து சேர்ந்தது. சுவாமிகளின் அருட்பேற்றை ஏற்கனவே உணர்ந்திருந்த
மாணவர்கள் இச்சம்பவத்தின் பின் மேலும் பயபக்தியுடன் நடக்கலாயினர்.
ஆச்சிரமத்தில்
அதிக எண்ணிக்கையான தோசைகள் சுட வேண்டி இருந்தமையால் அடுப்பின் வெப்பத்தில் இருந்து
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தோசை சுடுபவர் ஈரப்பசுமை மிக்க துணியை நெஞ்சில்
கட்டிக் கொண்டு தோசை சுடுவது வழக்கம் என அன்றைய காலத்தில் சுவாமிகளிடம் கணிதம், ஆங்கிலம் கற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின்
தாவரவியல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் விஞ்ஞான பாட செயலமர்விற்கு
யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வருகை தந்த போது பேப்பர் சுவாமிகளைச் சந்திப்பதில் ஆர்வம்
கொண்டிருந்தார். பேப்பர் சுவாமிகளைத் தரிசித்த பின் கலந்து கொண்ட ஆசிரியருடன்
பின்வருமாறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக அவ்வாசிரியர் தெரிவித்தார்.
சுவாமிகள் தான் அறிந்திராத பல பத்திரிகைகள் பற்றி தன்னிடம் வினவியதாகவும் மேலும்
பல முக்கியமான உலக விடயங்களைப் பற்றி தன்னிடம் தெரிவித்தமை தன்னை ஆச்சரியத்திற்கு
உள்ளாக்கியதாகவும் உங்கள் கிராமத்தில் மிகப் பெறுமதியான சுவாமிகள் வாழ்ந்து கொண்டு
இருப்பதையிட்டு நீங்கள் பெருமை அடைய
வேண்டும் எனக் குறிப்பிட்டதாக அவ்வாசிரியர் தெரிவித்தார்.
திரு.
ஆ.தியாகராசா அவர்கள் காலையில் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று சுவாமிகளுக்குரிய
கடிதங்களைப் பெற்று வந்து சுவாமிகளிடம் கையளித்த பின்னரே பாடசாலைக்குச் செல்வதை
வழக்கமாகக் கொண்டிருந்தவர்.
பாரத தேசத்தின்
தேச பிதா மகாத்மா காந்திஜி பாரத தேசத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்கு
மேற்கொண்ட முயற்சிகளுக்கு சுவாமிஜி இன் அருளாசி வலுச்சேர்த்தது. பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின்
மகாராணியை காந்திஜி சந்திக்கச் செல்லும்பொழுது சுவாமிஜி தன் கையினால் காந்திக்கு
திருநீற்று காப்பிட்டு விபூதியுடன் (நெற்றியில்) போனால் தான் வெற்றி கிட்டும் எனத்
தெரிவித்து சுவாமிஜி திருநீற்று காப்பிட்டு வழியனுப்பினார். மகாத்மா காந்தியின் மரணத்தை
எதிர்வு கூறி தபாலட்டை ஒன்றில் காந்திக்குக் காலம் நன்றாயில்லை. (கவனம்! கவனம்!
கவனம்!) Caution! Caution! Caution! என்று எழுதி Dr.J.C.குமரப்பாவிற்கு நடுத்தெருவைச் சேர்ந்த விதானையார் ந.அருளையா
மூலம் தபாலில் சேர்ப்பித்தார். தபாலட்டை கிடைத்த சில தினங்களில் விநாயகராம்
கோட்சேயினால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார். காந்திஜி இன் இறுதிக்
கிரியைகளில் சுவாமிஜியும் கலந்து கொண்டார். சுவாமிஜி அனுப்பிய தபாலட்டை (Post Card) இந்தியாவிலுள்ள அருங்காட்சியகம் (Museum) ஒன்றில் பேணப்படுவதாக செய்திகள் இருந்த போதிலும் உறுதி
செய்து கொள்ள முடியவில்லை.
இலங்கையில்
இந்தியாவின் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய திரு.V.V. கிரி தனது பதவிக் காலத்தில் பேப்பர் சுவாமிகளின்
தரிசனத்திற்காக வருகை தந்தார். இவர் இந்திராகாந்தியின் ஆட்சிக் காலத்தில்
இந்தியாவின் ஜனாதிபதியாகப் பணியாற்றியவர். பேப்பர் சுவாமிகளுக்குச் சமஸ்கிருத
மொழியில் இருந்த ஆர்வத்தை அறிந்த காஷ்மீர் முதலமைச்சர் சுவாமிகளுக்கு ஒரு தொகுதி
சமஸ்கிருத நூல்களை அன்பளிப்புச் செய்தார். யாழ்ப்பாணத்தின் சட்டத்தரணிகள், கல்விமான்கள், அரச அதிகாரிகள்
என பல தரப்பட்ட மனிதர்கள் சஞ்சலம் மிக்க வேளைகளில் சுவாமிகளைத் தரிசிப்பது வழமை.
சுவாமிகளின்
செழுமையும், புலமையும் மிக்க ஆங்கில எழுத்தாற்றல் அறிவு சார்ந்த
சமூகத்தின் மத்தியிலும் அரசியல் வாதிகளின் மத்தியிலும் சுவாமிஜிக்கு உயர்
அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது. இலங்கை, இந்தியப்
பத்திரிகைகளில் அன்றைய உலக விவகாரங்கள் தொடர்பான கட்டுரைகளை எழுதினார்.
சுவாமிகள்
நயினாதீவு நாகபூசணி அம்பாளை குல தெய்வமாக வணங்கியவர். அடிக்கடி நயினாதீவு சென்று
அம்பாளை வழிபடும் வழக்கத்தை வழக்கமாகக் கொண்டவர். கோவளத் துறையிலிருந்து கட்டு
மரங்களில் ஏறி நயினாதீவுக்கு அடியார் கூட்டத்துடன்
சுவாமிஜி செல்வார். அம்பாளைப் பூசிக்கும் நாகபாம்பினை
தன்னுடன் வரும் மக்களுக்கு சுவாமிஜி காட்டியிருக்கின்றார். பௌர்ணமி காலத்தில்
நயினாதீவில் சந்திர பூசையை சுவாமிஜி தொடக்கி வைத்தார்.
சுவாமிஜி இன்
ஆச்சிரமத்திற்கு அப்பால் அமைந்துள்ள பிரதேசத்தில் இருந்து கடற்றொழில் செய்பவர்கள்
மாலையில் தரையில் இருந்து தொழிலுக்காகக் கடலை நோக்கி நகர்வது வழமை. சுவாமிஜி
சாயங்கால பூசை நேர சங்கு ஊதும் பொழுது கடற்றொழிலாளரும் படகில் ஏறி கோயிலுக்கு
நேராக வருகை தந்து “அரோகரா” “அரோகரா” என்று அம்பாளை வணங்கித் தம் தொழிலுக்கு இடையூறும்
உயிராபாத்தும் வராமல் காக்கும்படி அருள் கேட்டுப் படகிற்குச் செல்வது வழக்கம்.
தான் பத்து வயது
சிறுவனாக இருந்த போது தந்தையாருடன் பேப்பர் சுவாமிகளின் வெளிச்ச வீட்டு
ஆச்சிரமத்திற்குச் சென்றிருக்கின்றேன். அமைதியான சூழலில் இருந்த ஆச்சிரமம்
நினைவில் இருக்கின்ற பொழுதும் எழுதுவதற்காக எதுவும் ஞாபகத்தில் இல்லை.
தன் இறுதிக்
காலத்தில் நண்டுப்பாளி கொல்லங்கலட்டி எனும் வளவில் அமைந்திருந்த பர்ணசாலையில் தவ
வாழ்வு வாழ்ந்து சமாதியாயினார். சுவாமிஜி சமாதி கூடிய காலத்திற்கு 1976க்கு முன்பு சில காலமாகவே மோன நிலை இருக்கத் தொடங்கி
விட்டார். ஒரு சில வசனங்கள் தேவையான பொழுதில் மாத்திரம் கதைப்பார். மற்றப்படி மோன
நிலையே. 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பரணி நட்சத்திர தினத்தில்
பிரதோஷ காலத்திலேயே சுவாமிஜி பூரண சமாதி நிலை கூடினார்.
பேப்பர்
சுவாமிகள் சமாதி அடைந்த பின்னர் 1990 வரை சுவாமிகளின்
சமாதியைத் தரிசிக்க வருகை தருகின்ற வலிகாமத்தைச் சேர்ந்த தியாகராஜ சுவாமிகள்
பேப்பர் சுவாமிகளின் சமாதி காரைநகரிற்குப் பெரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்படாமல்
பாதுகாக்கும் சக்தி உடையது எனக் கூறினார்.
வளமான
நண்டுப்பாளி காடு மண்டிக் கிடக்கின்றது. கைவிடப்பட்ட வீடுகள், ஒற்றையடிப் பாதையூடாக சுவாமியின் சமாதிக்குச் சென்று
அடையலாம். மழை காலத்தில் நீர் நிரம்பிப் பாய்ந்து ஓடும் அறுமனா ஓடை ஒரு புறம், மறுபுறம் அமைதியான கடல், தென்னந்தோப்புக்கள், வயல்கள் சூழ்ந்த
அமைவிடத்தில் தாமரைத் தடாகத்தைத் தன்னகத்தே கொண்ட கொல்லங்கலட்டி வளவில் சுவாமிஜி
இன் சமாதி அமைந்துள்ளது. தரிசிப்பவர் மனத்தை தன்பால் ஈர்க்கும் வல்லமை கொண்டது
சமாதியும் சமாதியின் அமைவிடமும். ஞானியர் சித்த வரிசையில் நமது கிராமத்திற்குப்
பெருமை சேர்த்தவர் வரிசையில் பேப்பர் சுவாமிகள் முதன்மையானவர்.
===========================================
===============================================
No comments:
Post a Comment