Followers

Saturday, June 5, 2021

 


திருமண தோஷங்களும் தீர்வுகளும்! - க. காந்தி முருகேஷ்வரர்..............

 

 

தோஷங்களில் மிக முக்கியமாகக் கருதப் படுவது திருமணத் திற்கான தோஷங்களே.  நல்ல அழகான, ஒழுக்கமான, படித்த, பண்புள்ள, வருமானம் ஈட்டக் கூடியவர் பிள்ளையாக இருந்தாலும், திருமணத்திற்கான வயதில் முறையாக வரன் பார்த்துத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யும்போது, தகுதியான வரன் அமையாமல் பலரின் பெற்றோருக்கு கவலை யைத் தந்துவிடு கிறது. அதன்பிறகு ஜாதகத்தை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமான காரணங் களையும், ஜாதகருக்கு தோஷம் இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்தால்தான் திருமணம் நடக்குமெனவும் பரிகாரங்கள் சொல்லி பல கோவில்களுக் கும் அனுப்புகிறார் கள்.

சிலருக்கு கோவிலுக்குப் போய்வந்ததும், சிலருக்கு பரிகாரம் செய்த பின்னரும் வரன் அமைந்திருக்கிறது. சிலருக்கு மட்டும் என்ன செய்தா லும் திருமணத்தில் தடை இருந்து கொண்டு குடும்பத்தையே கவலைக் குள்ளாக்கி விடுகிறது. சிலரது வீட்டில் வெறுத்துப் போய், "நீ யாரையாவது காதல் செஞ்சுகூட கல்யாணம் பண்ணிக்க'' என்றெல்லாம் பெற்றோரே சொல்லும் நிலை வந்துவிடுகிறது.

 



ஜாதகரும், "கெட்ட பழக்க வழக்கம், வேலையில்லாமல் இருக்கிற பசங்களுக்கெல்லாம் கல்யாணமாகிவிட்டது. நமக்கு மட்டும் ஏன் தாமதம்'' என நொந்துகொள்கிறார்கள்.                              

ஒரு சிலருக்குத் தவிர, "இன்னாருக்கு இன்னார்' என்று கண்டிப்பாகப் பிறந்திருப்பார்கள். சிலருக்கு மட்டுமே திருமணம் தாமதமாகும். அதனால் ஜாதகத்தில் திருமணத்திற்கான நேரத்தைத் தெரிந்து அதுவரை பொறுத்திருப்பதே நன்று. சிலர் அவசரப்பட்டு, அவசரகதியாகத் திருமணம்செய்து அவதிப்படுகிறார்கள். "உன்னைத் திருமணம் செய்ததால்தான் கஷ்டப்படுகிறேன்' என நொந்துகொள்பவர்களும் உண்டு. ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். தோஷமுள்ளவர்கள் யாரைத் திருமணம் செய்தாலும் அப்படி தான் நடந்துகொள்வார்கள் அல்லது அப்படிதான் அமையும். "வேறு யாரையாவது திருமணம் செய்தால் நான் அப்படி ஆகியிருப்பேன்; இப்படி ஆகியிருப்பேன்' என்பதெல்லாம் வெறும் கற்பனையே. இருப்பதை ஏற்றுக்கொண்டு வாழத் தெரிந்தவனால்தான் குடும்பத்தை நல்லபடி நடத்தமுடியும். திருமணம் நடக்கும்வரை அதற்கான கால அவகாசம் இருக்கிறது.

அப்போது தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டு அடுத்தவரை குறைசொல்-லி யார் வாழ்க்கையும் மாறப்போவதில்லை. அதனால் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை அறிந்து, அதற் கேற்றாற்போல் பொறுமையாக, நிதானமாக இருந்து திருமணம் செய்தால் நிம்மதியான இல்வாழ்க்கையைப் பெறலாம்.

திருமண தோஷங்கள் செவ்வாய் தோஷம்                

பலருக்குத் திருமணமென்றாலே முதலில் தடையாக இருப்பது செவ்வாய் தோஷம்தான். "செவ்வாய் தோஷமா? என் பிள்ளை ஜாதகம் சுத்த ஜாதகம். செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரமெல்லாம் பண்ணிட்டோம்'' என, ஏதோ கடுமையான வியாதி வந்ததுபோல் பலர் அலறுகிறார் கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தைக் கண்டறிந்து, அதே தோஷமுள்ளவர்களைப் பார்த்துத் திருமணம் செய்துவைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. செவ்வாய் என்றால் ரத்தத்தைக் குறிக்கும். தோஷமென்பது குறை. ரத்தத்திலுள்ள குறையைதான் செவ்வாய் தோஷம் என்கிறார்கள். அறிவியல்ரீதியாகப் பார்த்தால் நெகடிவ் ரத்த வகையைச் சேர்ந்தவர்கள்தான் செவ்வாய் தோஷக்காரர்கள். ஒவ்வொரு ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு குணமுண்டு. நெகடிவ் ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். கோபமோ, சந்தோஷமோ- உடனே வெளிக் காட்டிவிடுவார்கள். தான் சொன்னதே சரியென வாதாடக் கூடியவர்கள். உடனே உடனே எல்லாம் நடக்கவேண்டுமென பிடிவாதம் கொள்வர். இருப்பதைவிட்டுப் பறப்பதற்கு ஆசைப்படுவர். தன் இஷ்டப்படி எல்லாம் நடக்கவேண்டுமென நினைப்பார்கள். துணைவருடன் ஒத்துப்போகமாட்டார்கள். இப்படி இருப்பவர்களுக்கு தனக்கு வாழ்நாளில் இனி திருமணம் நடக்காமல் போய்விடுமோ என்கிற நிலையிலோ அல்லது இனியும் நம் குணத்தை மாற்றவில்லையென்றால் நம்முடன் வாழ்க்கைத்துணை இருக்கமாட்டார்கள் என்கிற நிலையிலோதான் தன்னை மாற்றிக் கொள்வார்கள். இல்லறம் வேண்டுமென்றால் அடங்கிப்போகத்தான் வேண்டும் என்னும் மனமாற்றம் வந்தால்தான் தோஷம் நிவர்த்தி யாகிவிட்டதென்று அர்த்தம்.                                      

லக்னம், சந்திரன், சூரியனுக்கு 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம். பெரும்பாலானவருக்கு செவ்வாய் தோஷமிருக்கும். அதேபோல் பலருக்கு செவ்வாய் தோஷ நிவர்த்தியும் இருக்கும். செவ்வாய் தோஷத்தைப் பற்றிச் சொன்னா லும் சட்டைசெய்யாமல் பேசுபவர்கள்கூட திருமணம் தாமதமானால் தன்னால் பயம் வந்துவிடும். செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரம் செய்துவிட்டால் சரியாகி திருமணமாகிவிடும் என்றாலும், செவ்வாய் நின்ற இடத்திற்கான பலனைச் செய்தே தீருவார். 2-ல் உள்ள செவ்வாய் குடும்பத்தில் துணைவருடன் வீண் வாக்குவாதங்களை அடிக்கடி செய்வார். பொருளாதாரப் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வாய்ப் பேச்சால் வம்பு வளர்ப்பர். பிடிவாதம், எதிர்வாதம் செய்வர். ஜாதகர் பேசும்போது எரிச்சலும், கோபமும் வரும். உழைப்பிற்கேற்ற ஊதியமின்றித் தவிப்பர்.

4-
ல் செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருப்பதால் சுகத்தைக் கெடுக்கும். தாயார், வீடு, வாகனத்தில் ஏதாவது இழப்பு, தடை ஏற்படும். 7-ல் செவ்வாய் களத்திர நஷ்டம்திருமணத் தடை, தாமதத்தை உண்டாக்கும். பெண்களுக்கு களத்திரகாரகரான செவ்வாய் இருப்பது தோஷத்தை அதிகப்படுத்தவே செய்யும். 8-ல் செவ்வாய்- பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமென்பதால் திருமணத் தடை, தாமதம், துணைவரின் பிரிவு, பிரச்சினையை உண்டாக்கும். 12-ல் செவ்வாய்- நிம்மதியற்ற உறக்கம், சந்தோஷக் குறைவை ஏற்படுத்தும். துணைவர் பிரிவு, வெளிநாட்டு வாழ்க்கை யைத் தருவார்.

1, 6-
ல் செவ்வாய் இருப்பதுகூட தோஷ பாதிப்பை ஏற்படுத்தும். 1-ல் செவ்வாய் இருந்தால் பிறருக்குப் பிடிக்காத செயல் களைச் செய்வர். 6-ல் செவ்வாய் நோய், எதிரி, கடனைத் தரும்.                     

பெண்களுக்கு மாங்கல்ய அதிபதி செவ்வாய் கன்னியில், செவ்வாய் 6-ல் மறைவு பெறுவது,................. பெண்களுக்கு மாங்கல்ய அதிபதி செவ்வாய் கன்னியில், செவ்வாய் 6-ல் மறைவு பெறுவது, விரயாதிபதி குருவுடன் இணைவது, கணவர் விரயத்தைத் தரும். கன்னிச் செவ்வாய் கடலையும் வற்ற வைக்குமளவு நஷ்டம்- அதாவது களத்திர தோஷத்தையும் சிலருக்குத் தரும். திருமணம் நடக்காமல், திருமணத்தைத் தடுத்து விரக்தியடைய வைப்பதும் செவ்வாய் தோஷத்தால்தான்.

செவ்வாய் தோஷமென்பது ஜாதகத்தின் குறையல்ல. குண வேறுபாடுதான். எல்லாம் உடனே நடக்கவேண்டுமென நினைப் பவர்களுக்கு தாமதத் திருமணமே தீர்வு. செவ்வாய் லக்ன அடிப்படையில் ஒரே குணம்  கொண்டவர்களை இணைத்து வைப்பது சிறப்பு. சுப கிரகப் பார்வைகள் செவ்வாய் தோஷத்தைத் தணிக்கும். திருமணத் தடை, தாமதம், பிரிவு போன்றவற்றைத் தடுக்கும். பாவகிரகப் பார்வை, சேர்க்கை செவ்வாய் தோஷத்தை மேலும் சிக்கலாக்கிவிடும். என்ன இருந்தாலும் சுப தசைக் காலங்களில் தோஷ பாதிப்பு குறைவாகவே இருக்கும். செவ்வாய் தோஷத்திற்கு செவ்வாய் தோஷக்காரர்களை மணப்பதே சிறந்த பரிகாரம் என்பதற்குக் காரணம், ஒத்த குணம் கொண்டவர்களை இணைத்துவைத்தால்தான் இல்லறத்தில் சிக்க-லின்றி சந்தோஷமாக வாழ்வார்கள். நெகடிவ் ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு அதே வகையைச் சேர்ந்தவர்களை இணைத்தால்தான் ஆரோக்கியமான குழந்தைப் பிறப்பு உண்டாகும். இல்லை யென்றால் அதற்கான மருந்து, மருத்துவம் பார்க்க நேரிடும். குண வேறுபாட்டால் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வர். குடும்பம் கலகத்திலேயே செல்லும். ஆன்மிகப் பரிகாரமென்பது, அரசமரத்தைச் சுற்றுவதுதான் குழந்தைப் பிறப்பை உண்டாக்கும். அரசமரத்தின் அறிவியல் மருத்துவ காரணங்களால் முன்னோர்கள் சொன்னபடி விரதமிருந்து கடைப்பிடித்தால் தோஷங்கள் தீர்ந்து திருமணம், குழந்தை பாக்கியம் பெறுவர்.

ராகு- கேதுவால் உண்டாகும் நாகதோஷம்              

லக்னத்திற்கு 1, 2, 4, 5, 7, 8, 12 ஆகிய ஸ்தானத்தில் ராகு- கேது இருப்பது கடுமையான நாகதோஷம். லக்னத்தில் ராகு- கேது இருந்தாலே 7-ல் ராகு- கேது இருக்கும். இதனால் திருமணவாழ்க்கை பாதிப்பு, தடை, பிரிவு, வேதனைகள் நிறைய உண்டாகும். நாகதோஷம் இருந்தால் படுக்கையில் பாம்பு இருப்பதுபோல்தான். கணவன்- மனைவி பகலெல்லாம் நன்றாகப் பேசி மகிழ்ச்சியாய் இருந்தாலும், இரவு நேரங்களில் சண்டை சச்சரவு, ஏதாவது காரணத்தால் தம்பதியர் பிரிவு, தொழில் விஷயமாக பிரிவு, உடல்நிலை பாதிப்பால் பிரிவு என அடிக்கடி நிகழும். லக்னம், 7-ல் ராகு- கேது இருப்பது களத்திர தோஷத்தை உண்டாக்கும். 2-ல் ராகு- கேது இருந்தால் பொய் பேசுவது, அடிக்கடி வாக்குவாதம் செய்வது, வாக்கு கொடுத்தால் காப்பாற்றமுடியாமல் தவிக்கநேர்வது போன்ற கெடுபலன்களையே தரும். குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு, பிரிவுண்டு. 4-ல் ராகு, கேது தாம்பத்ய சந்தோஷத்தைக் கொடுக் காது. தேவையற்ற முறையற்ற உறவு, சந்தோஷத் தைத் தந்து அவப்பெயரையும் தரும். 5-ல் ராகு- கேது இருப்பது புத்திர தோஷம், புத்திர சேதம், புத்திர இழப்பு, புத்திர நஷ்டம், புத்திரர்களால் தொல்லை என வம்ச பாதிப்பைத் தந்துவிடும். 8-ல் ராகு- கேது இருந்தால், அது மாங்கல்ய ஸ்தானமென்பதால் பெண்களுக்கு பாதிப்பையே தரும். கணவர் பிரிவு, பிரச்சினை, வழக்கு, இழப்பு என இல்லற வாழ்க்கையை முழுதும் கெடுக்கும். சிலரது கணவர் வெளிநாடு களிலேயே இருப்பார். 12-ல் ராகு- கேது இருந்தால் நிம்மதியற்ற வாழ்க்கை- ஏக்கங்களுடனேயே வாழ்நாள் கழிந்துபோகும். சில நேரங்களில் கொடுத்தும் கெடுப்பார். நாகதோஷம் சந்தோஷமற்ற வாழ்க்கையையே தரும். லக்னத்திற்கு 8-ல் சந்திரன், ராகு இணைவென்பது மாங்கல்ய ஸ்தானத்தில் கிரகண தோஷமாகும். திருமணம், குடும்ப வாழ்க்கை, வருமானத்தைக் கெடுக்கும்.

பொதுவாக 2, 4, 7, 8-ஆமிடங்களில் ராகு- கேதுக்கள் இருப்பது, இருக்குமிடத்தைக் கெடுத்து தீயபலன் தரும். குரு பார்வை மட்டுமே கெடுபலன் தராமல் தாமதத் திருமணத்தைத் தந்து தோஷ நிவர்த்தியைத் தரும். சுபகிரகப் பார்வைகள் சிலருக்குத் தவறான பழக்க வழக்கங்களைத் தந்தாலும், மாட்டிக்கொண்டு அவமானப் படாமல் பார்த்துக்கொள்ளும். தீயகிரகப் பார்வை பெற்று பாவகிரகம் வலுப்பெற்றால், துணிந்து தெரிந்தே தீய பழக்க வழக்கத்தில் ஈடுபட்டு, துணைவருடன் தொல்லையுடனேயே காலத்தைக் கடத்துவார். சிலர் நன்றிகெட்டவர்களால் ஏமாற்றப்படுவார். நாக தோஷம் உள்ளவர்களுக்கு அதே தோஷம் கொண்டவர்களை மணம் முடித்து வைத்தால், ஜாடிக்கேத்த மூடி போலவும், கெட்டவர் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போலவும், "கேடிகள் ஒன்று சேர்ந்து கேடியாக' வாழ்ந்துகொள்வர்.  

நாக தோஷம் கொண்டவர்களை தோஷமில்லாதவர்களுக்கு மணம்முடித்துக் கொடுத்தால், குணம் ஒத்துப்போகாதது மட்டுமல்லாமல், பிடிக்காத செயல்கள் செய்து வெறுப்பாகி பிரச்சினை, பிரிவுக்கு ஆளாக நேரிடும். ஆதலால் தோஷமுள்ளவர்களுக்கு தோஷமுள்ளவர்களை மணம்முடித்து வைப்பதே மிகச் சிறந்த பரிகாரம்.

காலசர்ப்ப தோஷம்                                          

ராகு- கேதுகளுக்குள் சுபகிரகங்கள் அடை பட்டால், காலசர்ப்ப தோஷத்தால் சுபப்பலன்கள் அனைத்ததையும் தாமதப்படுத் தும். வாழ்வின் முதல் பாதியில் ராகு- கேதுக்கள் தசை வந்தால் பல சோதனைகளைத் தந்து, குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கும். குறிப்பாக திருமண காலத்தில் ராகு தசையோ, கேது தசையோ வந்தால் திருமணத்தைத் தாமதப்படுத்தும். திருமண வாழ்க்கையை சேதப்படுத்தி வலியையும், வேதனையையும் தந்துவிடும். காலசர்ப்ப தோஷம் களத்திர ஸ்தானத்தோடு இருந்தால் திருமண வாழ்க்கையைக் கெடுப்பதோடு, திருமணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக்கிவிடும். சிலருக்கு திருமணத்திற்கு முன்பு மறைமுகமான முறையற்ற சுகத்தைத் தரும். திருமணத்திற்குப் பிறகு கஷ்டத்தைத் தருகிறது. காலசர்ப்ப தோஷம் யோகமாக மாறியவர்களுக்கே இரண்டாவது பாதி வாழ்க்கை மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் வாரி வழங்குகிறது.

களத்திர தோஷங்கள்                          

இரண்டாமிடம் குடும்ப ஸ்தானத்தில் உள்ள கேது குடும்பத்தைக் கெடுக்கும். நான்காமிட சுக்கிரன் சுகத்தைக் கெடுக்கும். ஐந்தாமிட சூரியன் புத்திர தோஷத்தையும், ஆறாமிட குரு குழந்தை பாக்யத்தையும் கெடுக்கும். ஏழாமிட சுக்ரன், நான்கில் கேந்திராதிபதி தோஷத்தால் தாமதத் திருமணமும், எட்டில் இருக்கும் சந்திரன், ராகு மாங்கல்ய தோஷத்தையும், சந்திரனுக்கு ஏழில் கேது சந்நியாசி யோகத் தையும், திருமண விரக்தியையும், பாக்கியாதிபதி குரு ஆறில் மறைந்தால் தாமத நன்மையையும் தருகிறது.

அனைத்து தோஷமும் திருமண வாழ்க் கைக்கு பாதிப்பைத் தரும். ஏழாமிடம், ஏழாமதி பதி ஏதாவதொரு வகையில் பாதித்தாலும் களத்திர தோஷம் உண்டாகும். 8-ல் மாங்கல்ய ஸ்தானத்தில் சுக ஸ்தானாதிபதி சந்திரன் நீசம்பெற்று மறைந்தால் பருவ வயதில் சந்தோஷம் கிடைக்காது. திருமணத்தை தாமதப் படுத்தி, குரு பலமிக்க கோட்சாரத்தில் திருமணம் முடித்துவைத்தால் ஓரளவு பாதுகாக்கமுடியும்.


 
பிதுர் தோஷம்                              

லக்னம், சந்திரன், சுக்கிரனுக்கு 2 அல்லது 7-ல் சூரியன் இருப்பது பிதுர் தோஷமாகி, தந்தையில்லா திருமணம், கடமைக்காக, காலதாமதத் திருமணத்தை ஏற்படுத்தும். தந்தைக்குப் பிடிக்காத வரன், பிடிக்காத இனத்தில் திருமணம் நடக்கும். சிலருக்கு பிள்ளையின் வருமானம் கைவிட்டுப்போகும் என்ற கவலையில், வருகிற நல்ல வரனையெல்லாம் தந்தை தட்டிவிட்டுத் திருமணத்தைத்  தடுத்தல் போன்றவற்றால் திருமணத்தடை ஏற்படும். சிலருக்கு தந்தை இறந்துவிடுவார்.

சிலருக்குத் திருமணக் காலங்களில் தந்தையுடன் சண்டை ஏற்பட்டு தந்தை திருமணத்தில் கலந்துகொள்ள மாட்டார். அல்லது காலச் சூழ்நிலையால், வரன் பார்ப்பதுமுதல் திருமணம் நடைபெறும்வரை தந்தை கண்டுகொள்ளாமலோ, கலந்துகொள்ளாமலோ இருப்பார். சிலரின் தந்தை வேறு திருமணம் செய்துகொண்டு பிரிந்துவிடுவார். அதனால் பிள்ளையின் திருமணத்தில் கலந்துகொள்ள மாட்டார். பிதுர்தோஷம் என்றால், தந்தைவழி முன்னோர்கள் செய்த பாவத்தால் பிள்ளைகள் திருமணத்தில் கலந்துகொள்ளாமல் போவதும்பிள்ளைகள் திருமண வாழ்க்கையை பாதிக்கும் என்பதும்தான்.

 

மேலும் 2, 7-ல் சூரியன் இருந்தால், ஜாதகரின் துணைவர் முன்கோபக்காரராகவும், தான் சொல்வதே சரி என்னும் மனநிலை கொண்டவராகவும், தான் சொல்வதைச் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவராகவும் அமைவார். எடுத்தெறிந்துப் பேசுபவராகவும், தீய வார்த்தைகள் பேசுபவராகவும் அமைவார். அதற்குப் பரிகாரம், அதேபோன்ற ஜாதக அமைப்பு கொண்ட வரைத் திருமணம் செய்துவைத்தால் ஒத்துப்போய்விடுவார்கள். மேலும் பிதுர்தோஷம் கொண்டவரின் திருமணத்தில் தந்தை தலையிடாமலிருந்தால் தந்தை ஆயுளையும் பாதிக்காது; திருமண வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

பாவகிரகங்களின் பார்வை, சேர்க்கையை சூரியன் பெற்றால், திருமண வாழ்க்கையில் அதிக பிரச்சினைகள் பிதுர்தோஷத்தால் உண்டாகும். சுபகிரகப் பார்வை இருந்தால் தந்தையைக் காப்பாற்றி திருமணத்தையும் சிறப்பாக நடத்தும். தினமும் காலையில் குளித்தவுடன் கிழக்குதிசை பார்த்து சூரியனை வழிபட தந்தையின் வாழ்க்கையும், ஆயுளும், ஜாதகரின் இல்லற வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

சுக்கிர தோஷம்                             

ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன் 7-ஆமிடத்தில் நின்று, கேந்திராதிபத்ய தோஷம் பெற்று சுக ஸ்தானத்தில் பலமடைவது கடுமையான களத்திர தோஷமாகும். 7-ல் சுக்கிரன் நின்று பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றால் ஒருவருடன் திருமணம் நடக்காது. பெண்களால் அவபெயர், அவமானம், மனைவி பிரிவு பிரச்சினைகளையே தரும். 7-ல் உள்ள சுக்கிரன் அழகான களத்திரத்தைத் தந்து களங்கத்தையே தரும். பாவகிரகச் சேர்க்கை, பல காதலையும் காம சிந்தனைகளையும் தந்து முறையற்ற உறவுகளால் தொல்லையை அனுபவிக்கச் செய்யும். சுபகிரகப் பார்வையானது ஓரளவு நன்மை தரும்.

திருமணத்திற்கு முன்னும் பின்னும் பெண்கள் தொடர்பு ஏற்படும். நல்ல தசாபுக்தி இருப்பவர்கள் அகப்பட்டுக் கொள்ளாத யோக்கியர்களாகவும், பாவ கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தூற்றும் பாவிகளாகவும் இருப்பர். பெண்களுக்கு 7-ல்  சுக்கிரன் இருப்பது பெருமளவு பாதிப்பு தராது.

புத்திர தோஷம்              

ஐந்தில் சூரியன் ஆட்சிபலம் பெறுவது கடுமையான புத்திர தோஷம். தாமத குழந்தை பாக்கியம் தரும். தாமதமாக ஆண்வாரிசு ஏற்படும். புத்திரகாரகன் குரு ஆறில் மறைவது புத்திர தோஷம். நான்கில் கேது, ஐந்தாமதிபதி சூரியனுடன் தொடர்பு, சூரிய சாரம் பெறுவது போன்றவை கருக்கலைப்பு நடைபெற்று தாமதமாக குழந்தை பாக்கியம் தரும். ஐந்தாமிடத்திற்கு பாவகிரகங்களின் பலமிருப்பது புத்திர தோஷத்தை மட்டும் தருவதில்லை; திருமண தோஷத்தையும் தரும். முறையற்ற திருமணம்- அதாவது ஜாதி, மதம், கலாச்சாரம் மீறி திருமணம் செய்பவர்களுக்கு ஐந்தாமிடம் கெட்டுப்போயிருக்கும். ஐந்தாமிட பாதிப்பும் களத்திர தோஷத்தை சிலருக்குத் தரும். திருமணத்திற்குப் பின்பு மறுதாரம் ஏற்படுவது ஐந்தாமிட பாதிப்பாலும் உண்டாகிறது.

அதாவது முதல் தாரத்திற்கு பிள்ளை பிறக் காமல், இரண்டாவது திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்ளும் நிலை அல்லது திருமணமாகி குழந்தை பெற்றவரைத் திருமணம் செய்துகொள்ளும் நிலையும் ஐந்தாமிட களத்திர தோஷத்தால் நிகழ்கிறது.

மாங்கல்ய தோஷம்

லக்னம்ராசிக்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம். மாங்கல்ய கிரகமான செவ்வாய், எட்டாமதிபதி எட்டில் இருப்பது, செவ்வாய் எட்டில் இருப்பது, செவ்வாய் எட்டாமிடத்துடன் சேர்க்கை, பார்வையானது மாங்கல்ய தோஷத்தைத் தரும். எட்டாமிடத்திற்கு சூரியன், சனி, ராகு- கேதுக்கள் பார்வை, இணைவு தோஷத்தைத் தரும். 12-ஆமதிபதி 8-ல் இருப்பது மாங்கல்ய நஷ்டத்தைத் தரும். 8-ஆமதிபதி 6-ல் பரிவர்த்தனை அல்லது பலம்பெற்றால் களத்திர நஷ்டம், பிரிவைத் தந்துவிடும். இரண்டாம் அதிபதி 6, 8 ல் இருந்தாலும் மாங்கல்ய நஷ்டத்தைத் தந்துவிடும். மாங்கல்ய கிரகமான செவ்வாய் சூரியனுடன் எந்த இடத்தில் சேர்ந்தாலும் இல்லற வாழ்க்கையை பாதிக்கும். ராகு 4, 8-ல் இருந்து, 5-ல் சூரியன், செவ்வாய் இணைந்து,செவ்வாய் எட்டாமிடத்தைப் பார்ப்பதும்; சனி ஏழாமிடத்தைப் பார்த்து, குரு பார்வை பெறாவிட்டால், ராகு தசை அல்லது 6, 8-ஆமிட தசை, செவ்வாய் புக்தியில் எதிர்பாராத நேரத்தில் கணவர் மாரடைப்பால் மரணமடைவார்.

நீச தோஷம்

ஆண்களுக்கு களத்திர கிரகமான சுக்கிரன் நீசம்பெற்றால் சுக்கிலக் குறையைத் தந்து ஆண்மையைக் கெடுத்து இல்லறத்தை சுகமற்றதாக்கிவிடும். சுக்கிரன் ஏழில் இருத்தல், சுக்கிரன் பாதகாதிபதியாகி வலுப்பெறுதல், பாவகிரகத்தால் சுக்கிரன் தொடர்புபெறுதல் போன்றவை சுக்கிலத் தன்மையை இழக்கச் செய்து சுகவாழ்வைக் குறைக்கும். குரு நீசம்பெறுவது, போக விஷயத்தில் ஆண் தன்மையைக் குறைத்து இல்லற நாட்டத்தைக் கெடுக்கும். ஏழாமிடம் குருவாகி, குரு நீசம்பெற்றால் கணவன்- மனைவிக்குள் சுகமிருக்காது. பெண்களுக்கு களத்திரகிரகமான செவ்வாய் நீசம்பெற்றால், கணவன் ஆண்தன்மை குறைந்தவனாக வும், மனைவி இல்லற நாட்டமில்லா இல்லாளாகவும் இருப்பாள். செவ்வாய், சுக்கிரன் பார்வை, சேர்க்கையுடன் சனி பார்வை, சேர்க்கை ஏற்பட்டு, சுபகிரக, குரு பார்வையின்றி இருந்தால் அடுத்தவரிடம் இல்லறசுகம் தேடிச்செல்ல நேரும்.

தார தோஷங்கள்

ஏழாமிடம் கெட்டு களத்திர தோஷமிருந்தால் தார தோஷம் ஏற்படும். ஏழாமிடத்தில் சனி, சனிக்கு 5, 9-ல் சூரியன் இருந்தால், முதல் களத்திரம் கெட்டவரைத் திருமணம் செய்ய நேரும். சுக்கிரன் 7, 8-ல் இருந்து சனி பார்வை ஏற்பட்டு, சந்திரன் 7-ல் இருந்தால் இருதார யோகத்தைத் தரும். குரு ஏழாமதிபதியாகி சனியால் பார்க்கப்பட்டு, செவ்வாயும் ஏழாமிடமும் பார்த்தால், வேறொருவரின் மனைவியை மணப்பார். ஏழாமதிபதி ஐந்தில்- ஐந்தாமதிபதி நீசம்- சனி, சுக்கிரன் இணைவு- நீசம் பெற்ற சுக்கிரன் பாதிப்பு பல தாரத்தைத் தரும். மனைவி இருக்கும்போதே இன்னொருவரை மணப்பது, விதவையை மணப்பது போன்றவை ஏற்படும். சுக்கிரன், ஏழாமிடம் கெட்டு செவ்வாய், சனி, ராகு- கேது பார்வை பெறுவது தார தோஷத்தைத் தந்துவிடுகிறது.

பரிகாரம்                        

ஜாதகரின் 2, 4, 5, 7, 8, 9-ஆமிடங்களை ஆய்வுசெய்து, ஜாதகப் பொருத்தம், தோஷங்கள் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும். அனைத்துவிதமான களத்திர தோஷங்களுக்கு தாமதத் திருமணமே மிகச்சிறந்த பரிகாரம். தவிர்க்கமுடியாத காரணத்தால் முன்னதாக அமைந்து விட்டால், திருமணம் முடிந்தபின் நல்லநாள் பார்த்து, சம்பந்தப்பட்ட தசை நடக்கும் கிரகத்தின் தலம் அல்லது குரு ஸ்தலத்திற்குச் சென்று மறுமாங்கல்யம்- அதாவது மறுமணம் செய்துகொண்டால் கடுமையான களத்திர தோஷத்தைத் தவிர்க்கலாம். தாமதத் திருமணம் செய்பவர்களில் பலர், 'இருந்திருந்து செய்கிறோம்; வயது குறைந்த- அழகான பெண்ணை மணக்கவேண்டும்' என்று சொல்வது, இன்றைய சமூகப் பெண்களின் வாழ்க்கையில் திருமணத்திற்குப்பின் பலவகை பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிடுகிறது. கிடைத்த பெண்ணோடு சந்தோஷமாக வாழ்வதைவிட்டு, ஏக்கம், எதிர்பார்ப்பின்படி திருமணம் செய்வது பாதிப்பையே தரும். வாழ்வின் ஒருமுறை செய்யவேண்டிய திருமணத்தை, பலமுறை யோசித்து முடிவெடுத்துச் செய்வதுதான் வாழ்க்கையை சுபிட்சமாக்கும்.

செல்: 96003 53748
=====================

திருமணத்தடை உடைக்கும் திருத்தல வழிபாடுகள்! courtesy;-பரணிதரன்



ன்றைய நாளில் ஜோதிடர் களை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு பகுதி யினர் அவர்களுடைய பிள்ளை களின் திருமணத்திற்காக ஆண்டுக் கணக்கில் வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்.

திருமணத்திற்காக செய்யாத முயற்சி யில்லை; பதிவுசெய்து வைக்காத இட மில்லை. ஆனால் எதிர்பார்த்தபடி ஜாதகம் வருவதில்லை. சிலருக்கு எப்படியோ பேசி முடித்து நிச்சயம்செய்து, திருமணம் நடக்கும் நேரத்தில் தடைப்பட்டு விடுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணமென்று தெரிந்துகொள்ள முடியாமல், இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி ஏதேதோ கோவில்களுக்குப் போய்வருபவர்களும், சொல்பவர்களின் பேச்சையெல்லாம் கேட்டு பரிகாரம், பூஜையென்று செலவழித் துக் கொண்டிருப்பவர்களும் பலர் இருக்கின்றனர்.

அடித்தட்டிலிருந்து உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் வரையில், நாற்பது வயதைக் கடந்தபின்னும் திருமணமாகாமல் வரன் தேடித்தேடி அலுத்துப் போனவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நோக்கமே இப்பதிவு.




ஒவ்வொருவரின் ஜாதகத்திற்குள்ளும் அவரவருடைய வாழ்க்கைக்குரிய வழி மட்டுமல்ல; அவர்களுடைய வாழ்க்கையில் தடைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தோஷங்களும் மறைந்திருக்கின்றன. இந்த தோஷங்கள்தான் வேலைவாய்ப்பில் தடை, தொழிலில் தடை, திருமணத்தில் தடை, குழந்தை பிறப்பில் தடை, தீராத நோய் என்று வாழ்க்கையில் சோதனைகளுக்குமேல் சோதனைகளை உண்டாக்கி வருகின்றன.

பூஜைசெய்தால் சரியாகிவிடும்; கழிப்பு கழித்தால் சரியாகிவிடும் என்று சொன்னவர்களை நம்பி, ஆயிரம் ஆயிரமாய் செலவுசெய்தும் எந்தப் பலனும் கிட்டாமல் மனம் உடைந்து போனவர்களும் இங்கே உண்டு.

திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் ஜாதகத் திற்குள்ளும் இருக்கும் தோஷங்கள் பற்றி யும், அதற்குரிய மிகமிக எளிய பரிகார முறைகள் பற்றியும் இக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.

பதினெட்டு வயதில் திருமணம் செய்து கொண்டு இருபது வயதில் குழந்தை பாக்கியம் காண்பவர்களாக பலர் இருக்கும் நிலையில், ஒரு சிலருக்கு மட்டும் நாற்பது வயது கடந்த நிலையிலும் திருமணம் நடக்காமல் இருப்பது ஏன் என்ற ஆராய்ச்சிக்குக் கிடைத்த விடைகள்தான் கிரக தோஷங்கள் என்பது.

திருமணம் நடத்துவதைத் தடுத்துக் கொண்டிருக்கும் தோஷங்களில் பிரதானமானவை... பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம், காலசர்ப்ப தோஷம், புனர்பூ தோஷம், ராகு- கேது தோஷம் என்னும் நாகதோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவையாகும்.

பித்ரு தோஷம்

ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது? இதற்காக ஜோதிடரிடம்தான் போகவேண்டும் என்பதில்லை. உங்களுடைய ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஜாதகத்தில் உங்களுடைய லக்னம் எதுவோ அந்த வீட்டில் ல/ என்று போட்டிருக்கும். யார் எந்த லக்னமாக இருந்தாலும், ல/ என்று குறிப்பிட்டுள்ள வீட்டையே ஒவ்வொருவரும் தங்களுடைய முதலாவது வீடாக எடுத்துக்கொள்ள வேண்டும். லக்ன வீட்டை முதல்வீடாக வைத்து அடுத்தடுத்த வீடுகளை எண்ணி வரும்போது கடைசி வீடாக பன்னிரண் டாவது வீடு வரும். லக்னம் என்ற 1-ஆவது வீட்டில் ராகு இருந்தால் 7-ஆவது வீட்டில் கேது இருப்பார். 1-ஆவது வீட்டில் கேது இருந்தால் 7-ஆவது வீட்டில் ராகு இருப்பார். இப்படி கிரகங்கள் அமைந்துள்ள ஜாதகமென்றால் அது பித்ரு தோஷமுள்ள ஜாதகமாகும்.

இதேபோல், 3 மற்றும் 9-ஆவது வீடுகளில் ராகு- கேது இருந்தாலும், 5 மற்றும் 11-ஆம் வீடுகளில் ராகு- கேது இருந்தாலும் இந்த வகையான ஜாதகங்கள் எல்லாம் பித்ரு தோஷமுடைய ஜாதகங்களாகும்.

இதேபோல், உங்கள் ராசிக்கட்டத்தில் சூரியன் அமர்ந்துள்ள வீட்டில், சூரியனுடன் ராகுவோ கேதுவோ இணைந்திருந்தாலும் அது பித்ரு தோஷமுடைய ஜாதகமாகும்.

அடுத்து, உங்கள் ராசிக்கட்டத்தில் சந்திரன் அமர்ந்துள்ள வீட்டில் சந்திரனுடன் ராகுவோ கேதுவோ இணைந்திருந்தால் அதுவும் பித்ரு தோஷமுடைய ஜாதகம்தான்.

தாய்லி தந்தை வம்சாவளியாக வருவதாகக் கூறப்படும் இந்த தோஷம், ஜாதகரின் பித்ருக்களினுடைய ஆன்மா சாந்தியடையாமல் போனதாலும், முற்பிறவியில் நம் முன்னோர்களோ அல்லது நாமோ கருச்சிதைவு செய்ததாலும், உடன் பிறந்தவர்களுக்குப் பாதகம் இழைத்ததாலும் உண்டாவது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இத்தகைய செயல்களால் உண்டாகும் பித்ரு தோஷத்தினால் ஜாதகரின் திருமணத் தில் தடையுண்டாகும். திருமணம் நடந்தா லும் அது விவாகரத்துவரை செல்லும். தம்பதியரிடையே ஒற்றுமை இருக்காது. குடும்ப வாழ்க்கை எப்போதும் பிரச்சினையாகவே இருக்கும். ஒருசிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், ரகசிய உறவு, கலப்புத் திருமணம், பெற்றோர்களுக்குத் தெரியாமல் ரகசிய வாழ்க்கை என்ற நிலை உண்டாகும்.

ஜாதகருக்குக் கிடைக்கவேண்டிய நன்மைகள், முன்னேற்றம், வெற்றி, இறையருள் என்று எல்லாவற்றையும் இந்த தோஷமானது தடுத்துவிடும்.

இதற்கு என்னதான் பரிகாரம் என்று பார்க்கும்போது, முதன்மையான பரிகார மாகக் கூறப்படுவது புண்ணிய ஸ்தலமான இராமேஸ்வரத்திற்குச் சென்று, ஆலயத்திற்கு எதிரிலுள்ள (கடல்) அக்னி தீர்த்தத்தில் மூழ்கி நீராடியபின், ஆலயத் திற்குள் உள்ள இருபத்திரண்டு புண்ணிய தீர்த்தங்களில் நீராடிவிட்டு திலஹோமம் செய்து, தனுஷ்கோடிக்குச் சென்று பிண்டத்தைக் கரைத்துவிட்டு வந்து இராமநாதசுவாமியையும் அம்பாளையும் அர்ச்சித்துவந்தால் பித்ரு தோஷம் அகலும். அதன்பிறகு திருமணத்தில் இருந்த தடைகள் முதல் மற்ற அனைத்து தடைகளும் அகலும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

காளஹஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம் போன்ற தலங்களிலும் பித்ரு தோஷத்திற்குப் பரிகாரம் செய்யப்படுகிறது என்றாலும், இதற்குரிய பரிகாரத்திற்கு இராமேஸ்வரமே முதன்மையானதும் சிறப்பு மிக்கதாகவும் கூறப்படுகிறது.

பிரம்மஹத்தி தோஷம்

ஜாதகத்தில் குரு பகவான் எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதேவீட்டில் அவருடன் சனி பகவான் இணைந்திருந்தால் அந்த ஜாதகம் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. குருவுடன் சனி இணைந்து ஒரேவீட்டில் இருந்தாலும், குரு- சனி ஆகிய இரண்டு கிரகங்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும், ஒருவரின் நட்சத்திர சாரத்தில் மற்றவர் இருந்தாலும் அந்த ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகமாகும்.

கடந்த பிறவியில் குருவை ஏமாற்றியதால் அவரால் உண்டான சாபம், தெய்வ நிந்தனை, ஆலயத்தை இடித்தது, ஆலய சொத்தை அபகரித்தது, திருமணம் செய்வதாக ஆசைகாட்டிக் கெடுத்துவிட்டு ஏமாற்றியது, உழைத்தவரை ஏமாற்றியதால் அவர்கள் கொடுத்த சாபம், வெள்ளிக்கிழமைகளில் நல்லபாம்பைக் கொன்றது, ஒருவரை ஏதோவொரு காரணத்தால் கொன்றது போன்ற காரணங்களால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இராமாயணப் போரில், சிறந்த தெய்வ பக்தனான இராவணனைக் கொன்ற காரணத்தினால் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானதை உணர்ந்த இராமன், அப்போதே அதற்குரிய பரிகாரம் செய்து கொண்டதை இன்றும் புராணம் கூறிக் கொண்டுள்ளது. இத்தகைய காரணங்களால் உண்டான பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகர்களுக்கு, திருமண முயற்சிகளில் தொடர்ந்து தடை, கிடைக்கவேண்டிய ஒவ்வொன்றும் கூடிவரும் நேரத்தில் கடைசியில் தட்டிக்கொண்டு போவது, எந்த வகையான சிகிச்சை அளித்தாலும் குணமாக்கிட முடியாத நோயினால் அவதி, மனக்குழப்பம், தொழிலில் வீழ்ச்சி, செய்யாத தவறுக்கு தண்டனை, குழந்தை பாக்கியத்தில் தடை என்று தொடர்ந்துகொண்டிருக்கும்.

ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள தேவி பட்டினத்திற்குச் சென்று, அங்கு கடலுக் கடியில் இருக்கும் நவகிரகங்களை வழிபாடு செய்து, கடலில் நீராடி பெருமாளை மனமுருகி வழிபட்டுவர பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும்.

தேவிபட்டினம் செல்ல இயலாதவர்கள், கும்பகோணத்திற்கு அருகில் திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் ஆலயம் செல்லலாம். இந்த ஆலயம் பிரம்மஹத்தி தோஷத்திற்குரிய பரிகாரத்தலமாகவே கூறப் படுகிறது. இங்கு சென்று பிரம்மஹத்தி தோஷத்திற்குப் பரிகாரம் செய்து, ஒரு வாசல் வழியே சென்று மறுவாசல் வழியே வருவது மரபாகும்.

தேவிபட்டினம், திருவிடைமருதூர் என்று இரண்டு தலங்களுக்குமே செல்ல இயலவில்லையா... அமாவாசை நாளில் அருகிலுள்ள சிவாலயத்திற்கு மாலை ஐந்து மணிக்குச் சென்று, சிவனை ஐந்துமுறை வலம்வந்து வணங்குங்கள். இதேபோல் தொடர்ந்து ஒன்பது அமாவாசை நாட்களில் செய்துவர பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகி, திருமணத்தில் இருந்த தடை நீங்கும். தீராத நோய் அகலும். வேலைகளில் இருந்த தடைகள் அகலும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் விலகும். தொடர்ந்து கொண்டிருக் கும் பிரச்சினைகளும் மனக்குழப்பங்களும் விலகும்.


 காலசர்ப்ப தோஷம்


ராசிக்கட்டத்தில் ராகு- கேது ஆகிய கிரகங்களுக்குள்ளாகவோ அல்லது கேது- ராகுவிற்கு உள்ளாகவோ மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டிருக்கும் ஜாதகம் காலசர்ப்ப தோஷம் கொண்ட ஜாதகமாகும்.

பாம்பை அடித்து, அது சாகும்போது தன்னைக் கொல்பவரைப் பார்த்துப் பழிப்பதால் இந்த தோஷம் உண்டாவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

cc

காலசர்ப்ப தோஷமுடைய ஜாதகர்களுக்கு முப்பத்துமூன்று வயதுவரை வாழ்க்கையில் போராட்டம் என்ற நிலையே இருக்கும். திருமணத்தில் தொடர்ந்து தடைகள் இருந்துகொண்டே இருக்கும். ஒருசிலர் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டு, திருமணத்திற்குப்பின் பிரச்சினை பிரச்சினை என்று பிரச்சினையிலேயே காலத்தைத் தள்ளி, ஒரு கட்டத்தில் ஒருவரை விட்டு ஒருவர் விலகவேண்டிய நிலைக்கு வந்துவிடுவார்கள். வாழ்க்கை, தொழில் என்று எல்லாவற்றிலும் தொடர்ந்து சங்கடமான நிலையையே சந்திக்கவேண்டி வரும். குழந்தை பிறப்பதிலும் தாமதம், தடை உண்டாகும். அதற்குப்பின் பிறக் கும் குழந்தையும் உடல்நலக்குறைவுடனே பிறக்கும். தொடர்ந்து அதன் உடல்நிலையில் சங்கடம் இருந்துகொண்டே இருக்கும்.

காலசர்ப்ப தோஷத்திற்கு சிறந்த பரிகாரத் தலமாக காள ஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ் வரர் ஆலயம் விளங்குகிறது. இங்கு நடைபெறும் பரிகாரப் பூஜையில் பங்கேற்று வழிபட்டபின், பூஜையில் வைத்த வெள்ளியால் செய்யப்பட்ட ராகு- கேது உருவங் களை எடுத்துக்கொண்டு ஆலயத் திற்குள் சென்று, சிவபெருமானை யும், அவருடைய மூச்சுக்காற்றி னால் அசைந்துகொண்டிருப்ப தாகக் கூறப்படும் தீபச் சுடரையும் தரிசித்து வணங்கி, கையிலுள்ள ராகு- கேது உருவங்களை வலது இடதாக, இடது வலதாக தலையை மூன்று சுற்று சுற்றி, அங்குள்ள உண்டியலுக்குள் அதைப் போட்டுவிட்டுவர தோஷம் நீங்கும்.

காலசர்ப்ப தோஷத்திற்கு காளஹஸ்திக்கு அடுத்த பரிகாரத் தலங்களாக திருப்பாம்புரமும், திருநாகேஸ்வரமும் விளங்கு கின்றன.

அரச மரத்துடன் இணைந்து வளரும் வேம்பு மரங்களை யும், அதனருகில் கல்லினால் ஸ்தாபனம் செய்துவைக்கப்பட் டுள்ள நாகர் சிலைகளையும் தொடர்ந்து வழிபட்டுவர, தோஷம் நீங்கி நன்மைகள் நடப்பதாக சிலருடைய அனுபவத்தில் தெரிந்துகொள்ளமுடிகிறது. என்றாலும் காளஹஸ்தி சென்று பரிகார பூஜை செய்துவருவதே சிறப்பென்பது நம்பிக்கையாக உள்ளது.

புனர்பூ தோஷம்

ராசிக்கட்டத்தில் சந்திரனுடன் ஒரே வீட்டில் சனி பகவான் இணைந்திருக்கும் அமைப்புடைய ஜாதகம் புனர்பூ தோஷம் கொண்ட ஜாதகமாகும். சந்திரனை ஏழாம் பார்வையாக சனி பார்ப்பதும், சனியை ஏழாம் பார்வையாக சந்திரன் பார்ப்பதுமான அமைப்பைக் கொண்ட ஜாதகமும் புனர்பூ தோஷம் கொண்டதாகும். சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் சந்திரனைப் பார்ப்பதும், பத்தாம் பார்வையால் சந்திரனைப் பார்ப்பதுமான அமைப்பைக்கொண்ட ஜாதகமும் புனர்பூ தோஷம் உடையதாகும்.

இந்த தோஷத்திற்கும் கிரக வாயிலாகவே ஒரு பரிகாரம் உண்டு. அது... சந்திரன், சனியுடன் சூரியன் இணைந்துவிட்டாலும் அல்லது சந்திரன், சனியை சூரியன் பார்த்தாலும், குரு பகவானின் பார்வையோ சேர்க்கையோ பெற்றாலும், குரு பகவானின் வீட்டில் சந்திரன், சனி இணைந்திருந் தாலும் புனர்பூ தோஷம் ஜாதகத்திலேயே நிவர்த்தியாகி விட்டது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

புனர்பூ தோஷமுடைய ஜாதகர்களுக்கு திருமணத்தில் தடையுண்டாகும். திருமணம் முடிவுசெய்யப் பட்ட நிலையில் ஆணோ பெண்ணோ- வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ளக்கூடியவர்களாக மாறுவார் கள். ஒருசிலருக்கு திருமணம் நிச்சயமான நிலையில் நின்றுபோகும், சிலருடைய திருமணங்கள் காவல் நிலையம்வரை சென்று பிரச்சினைக்கு வழிவகுக்கும். ஒருசிலருக்கு திருமணம் நிச்சயம் செய்த நிலையில் பெற்றோர்களில் யாராவது ஒருவர் மரணிப்பதால், திருமணத்தில் தடை உண்டாகும். இத்தகைய நிலைகளுடன் தலைவலி, அச்ச உணர்வு, படபடப்பு போன்றவையும் புனர்பூ தோஷத்தால் உண்டாகுமென ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

நாம் தெரிந்தோ தெரியாமலோ யாருடைய திருமணத்திலாவது சங்கடங்களை ஏற்படுத்தி, அவர்களுடைய திருமணம் நடைபெறாமல் செய்தாலும், விவாகரத்து செய்வதற்குத் துணையாக இருந்தாலும் அவர்களுடைய சந்ததிக்கு புனர்பூ தோஷம் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இதற்குரிய பரிகாரங்களில் பிரதானமானது, குலதெய்வத்திற்கு முடி காணிக்கை செய்து, படையலிட்டுப் பூஜை செய்வதாகும்.

தொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங் களில் விரதமிருந்து, திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவருவதுடன், மூன்று துறவிகள் வீதம் மூன்றுமுறை ஒன்பது துறவிகளுக்கு வஸ்திரதானம் செய்தால் தோஷம் பரிகாரமாகி திருமணம் கூடிவரும்.

சந்திர தலமான திருப்பதிக்கு திங்கட் கிழமையிலோ சனிக்கிழமையிலோ அல்லது சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திர நாட்களிலோ, சனிபகவானின் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களிலோ சென்று தரிசனம் செய்துவருவதும் புனர்பூ தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகக் கூறப் படுகிறது.

திருமணஞ்சேரிக்குச் சென்று அங்கு நடைபெறும் பரிகாரப் பூஜையில் பங்கேற்பதும் புனர்பூ தோஷத்திற்குப் பரிகாரமாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இந்தப் பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் திருமணத் தடைகள் அகலும்.

நாக தோஷம் என்னும் ராகு- கேது தோஷம்

நம்முடைய ஜாதகத்தில் ஒன்று மற்றும் ஏழாம் இடத்திலும், இரண்டு மற்றும் எட்டாம் இடத்திலும், மூன்று மற்றும் ஒன்பதாம் இடத்திலும், நான்கு மற்றும் பத்தாம் இடத்திலும், ஐந்து மற்றும் பன்னிரண்டாம் இடத்திலும் ராகு- கேதுவோ, கேது- ராகுவோ இருந்தால் அந்த ஜாதகருக்கு சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுவால் தோஷம் உண்டாகிறது.

முன்ஜென்மத்தில் ஆண் நாகமும் பெண் நாகமும் இணைந்திருந்தபோது அதைத் துன்புறுத்தியவர்களுக்கு இந்த ஜென்மத்தில் லக்னத்திற்கு ஏழாமிடத்தில் ராகு அமர்ந்து மாங்கல்யத்திற்கு தோஷத்தை உண்டாக்கும் என்றும்; பாம்பு இரையைத் தேடிச்செல்லும்போது அதைத் துன்புறுத்தியவர்களுக்கு இந்த ஜென்மத்தில் அவருடைய தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ராகுவோ கேதுவோ அமர்ந்து தொழிலில் பிரச்சினைகளை உண்டாக்கும் என்றும்; பாம்பு முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் காலத்திலும், அதன் குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும்போதும் அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் ராகுவோ கேதுவோ அமர்ந்து புத்திர தோஷத்தை உண்டாக்கும் என்றும் கூறப் படுகிறது.

ஜாதகத்தில் நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஸ்தானங்கள்- ஜென்ம ஸ்தானமெனும் லக்ன வீடான முதல் வீடும், குடும்ப ஸ்தானமெனும் இரண்டாவது வீடும், தைரிய, வேக ஸ்தானமெனும் மூன்றாவது வீடும், சுகஸ்தானம் மற்றும் பெண்களின் கற்பு ஸ்தானமெனும் நான்காவது வீடும், புத்திர ஸ்தானமெனும் ஐந்தாவது வீடும், களத்திர ஸ்தானமெனும் ஏழாவது வீடும், மறைவு ஸ்தானம் மற்றும் பெண்களின் மாங்கல்ய ஸ்தானமெனும் எட்டாவது வீடும், பாக்கிய ஸ்தானமெனும் ஒன்பதாவது வீடும், தொழில் ஸ்தானமெனும் பத்தாவது வீடும், கட்டில் சுகத்திற்குரிய அயன சயன ஸ்தானமான பன்னிரண்டாவது வீடுகளுமாகும்.

கிரகங்களில் மிகமிக வலிமையுடையவை சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும்தான். மேற்கண்ட வீடுகளில் நமது பிறப்பு ஜாதகத் தில் ராகு- கேது அமர்ந்திருக்கும் ஜாதகர் களுக்கு அந்த ஸ்தானங்கள் பாதிக்கப்படும் என்பது ஜோதிட விதியாகும். கடந்த பிறவிகளில் பாம்புகளுக்கு நாம் செய்த இன்னல்களினால் இந்த ஜென்மத்தில் இத்தகைய நாகதோஷத்திற்கு நாம் ஆளாகிறோம் என்று கூறப்படுகிறது.

நாகதோஷமுடைய ஜாதகர்கள், காளஹஸ்தி சென்று நாகதோஷப் பரிகாரம் செய்துவந்தாலோ, இராமேஸ்வரம் சென்று மூன்று நாட்கள் அங்கு தங்கி கடலில் நீராடி இராமநாதரை வணங்கிவந்தாலோ, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கீழப் பெரும்பள்ளம் ஆகிய ஊர்களில் உள்ள ராகு- கேது தலங்களுக்குச் சென்று பரிகார பூஜை செய்துவந்தாலோ சர்ப்ப கிரகங்களால் உண்டான நாக தோஷம் நீங்கி திருமணத்தில் உண்டான தடைகள் அகலும். கணவன்- மனைவிக்கிடையே உண்டான சங்கடங்கள் விலகும். குழந்தைப் பிறப்பில் இருந்த தடைகள் அகலும் என்பது பலரின் அனுபவத்தின் வழியாக தெரியவந்துள்ளது.

செவ்வாய் தோஷம்

ஜாதகத்தில் இப்படி சில தோஷங்கள் திருமணத்தடைக்கு காரணமாக இருந்தாலும், அனைவருக்கும் தெரிந்த ஒரு தோஷம் இருக்கிறதென்றால் அது செவ்வாய் தோஷம்தான். மற்ற தோஷங்கள் எல்லாம் முற்பிறவிகளில் நாம் செய்த செயல்களாலும், நம் முன்னோர்கள் செய்த பாவங்களாலும் நமக்கு உண்டானவை. ஆனால், செவ்வாய் தோஷமென்பது அப்படியல்ல. நம்முடைய பிறப்பு ஜாதகத்தில், அவர் அமர்ந்துள்ள இடத்திற்கேற்ப அவர் நம் உடலுக்குள் செலுத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கத்தையே செவ்வாய் தோஷம் என்கிறோம்.

நம்முடைய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரன் அல்லது சுக்கிரனுக்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகளில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷமென்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கு சூரியனுடனோ குருவுடனோ சனியுடனோ சம்பந்தம் இருந்தால் தோஷம் பரிகாரமானதாகவும் சொல்லப்படுகிறது.

பொதுவாக செவ்வாய் தோஷமென்பது தோஷமே அல்ல. ஆனால், அது தோஷ மென்று கூறப்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.

செவ்வாய் என்பது ஒரு நெருப்பு கிரகம், யுத்த கிரகம், ரத்த கிரகம். இரண்டு என்ற குடும்ப ஸ்தானத்திலும், நான்கு என்ற சுகஸ்தானத்திலும், ஏழு என்ற களத்திர ஸ்தானத்திலும், எட்டு என்ற மறைவு ஸ்தானத் திலும், பன்னிரண்டு என்ற படுக்கை ஸ்தானத் திலும் செவ்வாய் அமர்ந்திருக்கும் ஜாத கருக்கு உடலுறவில் ஆசையும், அதன் மீதான தேவையும் மிக அதிகமாக இருக்கும் என்பதால், இதை மறைமுகமாக தோஷமென்று சொல்- வைத்திருப்பதுடன், இதுபோன்ற அமைப்புகொண்ட ஜாதகருக்கு இதுபோன்ற தோஷமுடைய ஜாதகரை இணைத்துவைத்தால் மட்டுமே ஒருவருக்கேற்ற வகையில் மற்றவரால் ஈடுகொடுத்து வாழமுடியும் என்பதற்காகவும் நம் முன்னோர்கள் கூறிவிட்டுச் சென்றுள் ளனர்.

செவ்வாய் மேற்கண்ட வீடுகளில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்துள்ள ஜாதகனுக்கோ, ஜாதகிக்கோ வேக, காம உணர்ச்சி அதிகமாக இருக்கும். தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடன் செவ்வாய் ஆதிக்கமில்லாத ஜாதகரை சேர்த்துவைத்தால், ஒருவரின் ஆசையைப் புரிந்துகொண்டு மற்றவரால் வாழமுடியாமல் போய், சண்டை, சச்சரவு, பிரிவு என்ற நிலை உருவாகிவிடும்.

செவ்வாய் தோஷமுடைய ஜாதகருக்கு செவ்வாய் நீச நிலையிலுள்ள ஜாதகரை இணைத்துவைத்தாலும், தாம்பத்திய உறவில் திருப்தியடையமுடியாத நிலையை உண்டாக்கிவிடும். இதனால் ஒருவருக்கு வேண்டிய சுகம் கிடைக்காத நிலையையும், அடுத்தவர் தனது துணையைத் திருப்திப் படுத்தமுடியாத நிலையையும் அடைந்து விடுவார்கள்.

இதன்காரணமாகவே சம ஆசை, வேகம், ஆர்வம், செயல்பாடு கொண்டு, தம்பதிகள் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு, செவ்வாய் தோஷமுடைய ஜாதகருக்கு செவ்வாய் தோஷமுடைய ஜாதகரை மட்டுமே இணைக்கவேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து செந்தூரானை அர்ச்சித்து வருவதாலும், செவ்வாய்க்குரிய தலமான வைத்தீஸ்வரன் கோவில் சென்று வணங்கி அர்ச்சனை செய்துவருவதாலும் செவ்வாய் தோஷமுடைய ஜாதகருக்கு அதே தோஷமுடைய துணை விரைவில் கிடைத்தி டும் என்பது அனுபவப்பூர்வமான உண்மை யாகும்.



 

=====================================
courtesy; balajothidam/ nakkiran tq
======================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...