Followers

Friday, May 7, 2021

 
திருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை!
By - ஜோதிட சிரோன்மணி தேவி  





“ மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸபகே ஸஞ்ஜிவசரதசம்”

“ஓம்! பாக்கியவதியே, யான் சிரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக! என்ற மந்திரத்தை மனதில் கொண்டு திருமாங்கல்யத்தின் முடிச்சில் குங்குமம் இட்டு மணமக்களின் நெற்றியில் திலகம் இட வேண்டும்.

 



ஒரு திருமணம் நடப்பது என்பது கடவுள் பிராப்தம் என்றால் அதைவிட முக்கியம் சரியான சுபமுகூர்த்த வேளையில், மும்மூர்த்திகள், தேவர்கள், முன்னோர்கள் மற்றும் சுற்றம் சூழ சாட்சியாகக் கொண்டு, மணமகன் மணமகளின் திருமாங்கல்ய சரடை (மாங்கல்ய தாரணம்) மூன்று முடிச்சு கட்டும் நேரம் அமையவேண்டும். அப்பொழுதுதான் திருமணம் என்னும் வாழ்க்கை நீடித்து சுபிக்ஷ்மாக இருக்கும். சுபமுகூர்த்தம் குறிப்பது பற்றித் தெரிந்துகொள்ளலாம் 


திருமணம் என்றவுடன் இருவீட்டாரின் பெற்றோர்களின் ஒப்புதலுக்கு ஏற்ப திருமண சடங்குகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செய்யவேண்டும். முதலில் நல்ல ஜோதிடர்கள் மூலமாக ஆண், பெண் இருவரின்  திருமணப்பொருத்தம் என்னும் 12 நட்சத்திர பொருத்தத்தைப் பார்த்துவிடவேண்டும், இருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷம் (பாப தோஷ சாம்யம்) எந்த அளவில் உள்ளது, இருவரின் தசா புத்திகள் சரியாக உள்ளதா என்பதைத் துல்லியமாக ஒப்பிட்டு திருமணம் செய்ய முற்படவேண்டும். 


இதில் முக்கிய குறிப்பு.. ஆணின் தோஷம், பெண்ணை விட அதிகமாகவோ அல்லது சமமாக இல்லை எனில் திருமணம் செய்யக்கூடாது/ முக்கியமாக திருமணம் முகூர்த்தம் குறிப்பதை நல்ல ஜோதிடர் அல்லது புரோகிதரிடம் சரியான நாழிகையைக் கொண்டு அவரவர் முறைப்படி திருமணம் செய்ய வேண்டும். 
முகூர்த்தம் குறிக்கப் பெண்ணின் ஜாதகம் அவசியம் தேவை. சுபமுகூர்த்தம் என்ற நாழிகை குறிக்க, நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல திதி, நல்ல யோகம், தசா புத்திகள், அன்றைய கோட்சர நிலவரம் சரியாக உள்ளதா, குருபலம் மற்றும் சந்திர பலம் எவ்வாறு இருக்கிறது என்று மணமக்களின் ஜாதகம் கொண்டும் அலசி பார்க்கவேண்டும்.   


நாம் தமிழ் காலண்டரில் குறிப்பிடும் சுப முகூர்த்தத்தை எடுக்காமல் ஜாதகப்படி முகூர்த்தம் குறிக்கவேண்டும். முகூர்த்தம் குறிக்க முக்கியமானது பெண்ணின் நட்சத்திரத்தை கொண்டு தாராபலன், சந்திரபலன், பஞ்சாங்கம் கணித்துப் பார்க்கவேண்டும். முகூர்த்த லக்னம் என்றழைக்கப்படும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மாசி மாதத்தில் வரும் கும்பம் லக்னம் உத்தமமாக இருக்கும். முகூர்த்த லக்னத்திற்க்கு 2,7,8ம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். லக்னத்திற்கும் பாப கர்த்தாரி கூடாது. 2, 7, 11-ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம். 


முகூர்த்தம் குறிக்க தவிர்க்க வேண்டியவை
ஆண் பெண் இருவருக்கும் ஜென்மம் நட்சத்திர நாள் அன்று, திரிதின ஸ்பிரிக், சந்திராஷ்டம நாட்களில், மற்றும் ராகு காலம் எமகண்டம், குளிகை போன்ற நேரங்களில் திருமணம் செய்யக்கூடாது.
 
முடிந்தவரை கிருஷ்ணபக்ஷம் காலங்களில் மற்றும் குருட்டு நாட்களான சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் முகூர்த்தம் குறிப்பதைத் தவிர்க்கலாம்.
 
அஷ்டமி, நவமி, அமாவாசை, சதுர்த்தசி திதிகளை மற்றும் கரிநாள், மரண யோகம் இவற்றையெல்லாம் தவிர்க்கலாம். 
 
தீதுறு நட்சத்திரம் (பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம்), உடைபட்ட நட்சத்திரம் முகூர்த்த நாட்களைத் தவிர்க்க வேண்டும்.
 
சனீஸ்வரன் பிடியில் இருக்கும்பொழுது திருமணம் செய்யக்கூடாது என்று சிலர் கூறுவர். ஆனால், ஜாதகரீதியாக சனியினுடைய தசையோ புத்தியோ, கோச்சார சனி வரும் காலத்தில் திருமணம் கட்டாயம் நடைபெறும் என்பது நிதர்சனமான உண்மை. சனி என்பவர் திருமணத்தை முடித்துக் கொடுக்கும் கர்மகாரகன் ஆவர்.
 
இருவரது ராசி/ லக்னமும் ஒருவருக்கொருவர் 6, 8, 12ல் மறையக்கூடாது. களத்திரகாரகன் சுக்கிரன், தேவ குரு அஸ்தமனம் ஆகக்கூடாது. 
 
எண்ஜோதிடத்தில் எட்டு என்பது மோசமான எண். திருமண தேதி எட்டாக இருக்கக் கூடாது. முக்கியமாக ஆண் பெண் பிறந்த தேதி கூட்டுத்தொகை 8 ஆனால் திருமண தேதி 8 ஆக இருக்கக் கூடாது. திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது. எட்டாம் வீட்டு தசையின் சுயபுத்தி நடைபெறும் காலம் பிரச்னை கொடுக்கும்.
 
ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்கள் மற்றும் சில மாதங்கள் மலமாதம் வரும் அக்காலங்களைத் திருமண முகூர்த்தம் குறிக்கக்கூடாது.
 
சந்திர, சூரிய, கிரகண காலங்களில் மற்றும் வியதீபாதம், வைதிருதி, பத்ரா கர்ணம், சூரிய சங்ரமண நாட்களில் தவிர்க்கவேண்டும்.


முகூர்த்த நாட்களைத் தள்ளிப்போடலாம் 

சிலருக்கு ஜாதக ரீதியாக திருமண பொருத்தம் சரியாக இருந்தாலும் முகூர்த்தம் அன்று பெண்ணிற்கு குரு பலன் பெற்றிருக்க வேண்டும். திருமண நாளன்று ஜாதக ரீதியாக பெண்ணிற்கு ஏற்ற தசா புத்தி, அந்தரம், சூட்சமங்கள் நடைபெற்றிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சந்திரன் பலன் சரி இல்லையென்றால் திருமண முகூர்த்தத்தைத் தள்ளிவைக்கவும். சத்திர பலம் என்பது ஜென்ம நட்சத்திரம் முகூர்த்தம் குறிக்கக்கூடிய அன்றைய தினம் சந்திரன் நிற்கும் ராசி வரை எண்ணி வந்த கூட்டுத் தொகை உத்தமமா அசுபமா என்று பார்க்க வேண்டும். 

தேய் பிறைசந்திரன் வளர்பிறைச் சந்திரன் இவற்றையும் பிரித்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் . குரு பலமும், சந்திரன் பலமும், தசா புத்திகளும் சரியாக அமையாதவர்கள் திருமண முகூர்த்தம் நாட்களைத் தள்ளிப்போடலாம். சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களில் திருமணம் செய்ய நாட்கள் முன்பின் இருப்பதால் குலதெய்வ வழிபாடு மற்றும் நாந்தி சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். திருமண முகூர்த்தம் குறிப்பது என்பது பற்றிய விவரம் அனைத்து பெற்றோர்களும், பெரியோர்களும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
 
குருவே சரணம் 
- ஜோதிட சிரோன்மணி தேவி
தொலைபேசி : 8939115647
நன்றி;---

==============================
எத்தகைய சுபமுகூர்த்தமாக இருந்தாலும் ஆங்கிலத் தேதி 4, 7, 8 அமையக்கூடாது. அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். 1, 3, 6-ஆம் தேதி அல்லது கூட்டுத்தொகை உத்தமம்.
====================================

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

=============================

இந்து திருமண வைபவங்கள்

இந்து திருமண வைபவங்கள் எண்ணற்ற சடங்குகளும், சம்பிரதாயங்களும் கொண்டவை. 
இவை அனைத்தும், புதிதாக வாழ்க்கையை தொடங்க இருக்கும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்வியல் நெறிமுறைகளாகிய குடும்ப அமைதி, வளர்ச்சி, தர்மத்தின் வழியில் பொருளீட்டல், அன்னியோன்யம், இன்பம் துய்தல், உறுதியான உறவுகளின் அவசியம், சமுதாய பொறுப்புணர்வு, பெற்றோர் மற்றும் சான்றோர்களின் ஆசீர்வாதம் ஆகியவற்றை வலியுறுத்தி சொல்லும் முகமாக அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

 

விஷ்வத்ஸேன ஆராதனை

மணமகன் மற்றும் மணமகள் அவரவரது தந்தை, தாயாருடன் இணைந்து திருமண சடங்கானது தடையின்றி இனிதாக நிறைவேற திருவேங்கட பெருமாளை பிரார்த்தனை செய்து பூஜை செய்வர்.

 

கும்ப பூஜை, புண்யாகவசனம்

மணமகன், மற்றும் மணமகள் இருவரும் கங்கை, யமுனை போன்ற ஸ்ப்த ஜீவ நதிகளை கும்பத்தில் எழுந்தருளச் செய்து புண்யாக வசனம் என்று சொல்லக் கூடிய வேத மந்திரங்கள் செய்து பூஜை செய்வர்.

கும்ப பூஜை – நீரின்றி அமையாது உலகு. ஆகையால் மணவறையில் கும்பத்தில் நீர் வைத்து வழிபடுகின்றனர்.

 

கங்கணம் கட்டுதல்

மணமகன், மணமகள் இருவருக்கும் திருமணத்தின் போது எந்த துஷ்ட சக்திகளும் அணுகா வண்ணமும், கண் திருஷ்டி போன்ற கோளாறுகள் ஏற்படா வண்ணமும் திருமணம் இனிது நடைபெறவும் தாய் மாமாவை வைத்து காப்பு கட்டுவர்.

 

ஓதியிடுதல்

வேத மந்திரம் ஓதி, இறைவனை வணங்கி, புத்தாடைகளை மணமக்களுக்கு வழங்கிடும் வழக்கமாகும்.

 

காசி யாத்திரை

மணமகன் பாரம்பரிய முறைப்படி திருமண உடை அணிந்து கொண்டு தனது கல்வி அறிவை மேலும் விருத்தி செய்து கொள்வதற்காக கல்விக் கூடங்கள் நிறைந்த காசி (வாரணாசி) போன்ற தலங்களுக்கு செல்வதாகவும், அப்போது அவரை மணமகளின் சகோதரர் இடைமறித்து இல்லறத்தின் மாண்பினை எடுத்துரைத்து மணப்பந்தலுக்கு, தங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து தருவதாகச் சொல்லி, அழைத்து வருதல். இந்நிகழ்ச்சியில் மைத்துனர் மணமகனுக்கு கால் விரலில் மெட்டி அணிவிப்பார்.

 

கௌரி பூஜை, விளக்கு பூஜை

மணமகள் திருவிளக்கில் கௌரி அம்பிகையை எழுந்தருளச் செய்து திருவிளக்கு பூஜை செய்வாள். கௌரி அம்பிகை சிவ பெருமானை வேண்டி தவம் இருந்து அவரை அடைந்தார். அதே போன்ற நல்வரன் அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த மணப்பெண்ணுக்கு நல்ல வரன் அமைந்ததால் நன்றி செலுத்தும் பொருட்டு கௌரி பூஜை செய்தலாகும்.

 

பாலிகை பூஜை

அங்குரார்ப்பணம் என்று சொல்லக் கூடியது, பாலிகை பூஜை செய்தல் ஆகும். மண் கலயங்களில் வளமான உரமிட்ட மண்ணைப் பரப்பி அதில் முளைக்கும் திறனுள்ள பயறு வகைகளை முளைக்க வைத்து அதில் சுமங்கலி பெண்கள் பால் கலந்த நீரைத் தெளிப்பர். விதையானது எவ்வாறு முளைத்து வெளிவருகிறதோ, அதே போன்று வம்சம் விருத்தியடைய பிரார்த்தனை செய்வர்.

 

அரசாணி கால் நடுதல்

அரச மரத்தின் வேரில் பிரம்ம தேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் உள்ளதால் சுமங்கலிகள் அரச மரத்தின் கிளையைப் பாலும் பன்னீரும் விட்டு, பூசித்து மும்மூர்த்திகளை அங்கு எழுந்தருளச் செய்கின்றனர்.

 

சம்மந்தி மரியாதை
மணமகன், மணமகள் இருவரின் தந்தை மற்றும் தாயார் ஒருவருக்கொருவர் சம்மந்திகள் மரியாதை செய்து கொள்வர்.

 

பெற்றோருக்கு பாத பூஜை

மணமகன், மணமகள் இருவரும் அவர்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்து அவர்களது ஆசீர்வாதம் பெறுவர்.

 

திருமாங்கல்ய பூஜை

மணமகன், மணமகள் இருவரும் இறைவன், இறைவியின் பேரருள் பெற வேண்டி திருமாங்கல்ய பூஜை செய்வர்.

 

கன்னிகா தானம்

கன்னிகா தானம் என்பது மணமகளை அவரின் பெற்றோர் தாரை வார்த்துக் கொடுப்பதாகும். மணமக்களின் பெற்றோர் இருபகுதியினரும் சங்கற்பம் செய்து, பெண்ணின் பெற்றோர், மணமகனின் பெற்றோர்க்கும், மணமகனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோர்க்கும் திலகமிட்டு, பன்னீர் தெளித்து, மரியாதை செய்வர்.

பின் பெண்ணின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம் பழம், தங்கக் காசு அல்லது நடைமுறை நாணயம் ஒன்றை கையில் கொடுத்து பெண்ணின் தந்தை தனது இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் பெண்ணின் கையை சேர்த்துப் பிடித்து பின் குருக்கள், மணமகளின் மூன்று தலைமுறைப் பெயர்களையும், மணமக்களின் பெயர்களையும் உரிய மந்திரத்துடன் மூன்று முறைகள் சொல்லி, இரு வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பயன்களை பெற வேண்டியும் கன்னிகா தானம் செய்து தருகின்றனர்.

எல்லாவித செல்வமும் பெற்று எனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வர். மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர் விட்டு தாரை வார்க்க, தந்தையார் மணமகனின் கரங்களில் ஒப்படைப்பர். அப்போது மங்கள வாத்தியம் முழங்க, மணமகன், பெண்ணை தானம் எடுப்பார்.

தொடர்ந்து மணமகன் கொண்டு வந்த திருமாங்கல்யம் கூடிய கூறைத் தட்டத்தை ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்த பின் அச்சபையில் உள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறுவர்.

 

திருமாங்கல்ய தாரணம்

குறித்த சுபமுகூர்த்த நேரத்தில் மணமகனின் சகோதரி மணமகளுக்கு பின்புறம் லட்சுமி விளக்கு ஏந்தி நிற்க மணமகன் மணமகளின் வலப்புறத்தில் இருந்து மேற்கு திசை நோக்கி திரும்பி பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்

“ மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸபகே ஸஞ்ஜிவசரதசம்”

“ஓம்! பாக்கியவதியே, யான் சிரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக! என்ற மந்திரத்தை மனதில் கொண்டு திருமாங்கல்யத்தின் முடிச்சில் குங்குமம் இட்டு மணமக்களின் நெற்றியில் திலகம் இட வேண்டும்.

• முதலாவது முடிச்சு – கணவனுக்கு கட்டுப்பட்டவள்

• இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்கு கட்டுப்பட்டவள்

• மூன்றாவது முடிச்சு – தெய்வத்திற்கு கட்டுப்பட்டவள்

 

மாலை மாற்றுதல்

மணமகன், மணமகள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ளுதல், மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல் ஆகும்.

 

கரம் பிடித்தல்

“நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட, ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கரத்தைப் பிடிக்கிறேன்!” என்று கூறி, மணமகன் மணமகளின் கரம் பிடிக்க வேண்டும்.

ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும். பின்பு ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள். வலம் வரும்போது தோழனும் தோழியும் சேர்ந்து வருவார்கள். பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதாகப் பொருள்.

 

ஸப்தபதி

பெண்ணின் வலது காலை, மணமகன் கைகளாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும்படி செய்ய வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும்.
மணமகன் மகாவிஷ்ணுவாகவும், மணமகள் மகாலட்சுமியாகவும், உருவகப்படுத்தப்பட்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சுமூகமான, இன்பமான, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, இணக்கமான உறவு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, நிறைவான செல்வம் ஆகியவற்றுடன் பரிபூரண திருப்தியுடன் கூடிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஏழு நெறிமுறைகளை உறுதி மொழிகளாக மணமக்கள் உச்சரிக்கும் முகமாக இந்நிகழ்ச்சி அமைகிறது.

 

முதல்படி

மணமகன்: “கண்ணுக்கும், மனதிற்கும் அழகான என் மனைவியே! எனக்கும், என் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உணவளித்து, விருந்தோம்பல் செய்து மகிழ்விப்பாயாக!”

மணமகள்: “ என் பெருமதிப்பிற்குரியவரே! என் கைப் பிடித்த தங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன்” என உறுதி மொழி ஏற்றல்.

 

இரண்டாம் படி:

மணமகன்: “புத்தி கூர்மையான எனது அழகிய வாழ்க்கை துணையே!” நமது தூய்மையான எண்ணமும், உன்னதமான வாழ்க்கை நெறியும், நமது குடும்ப வாழ்க்கையை சக்தி மிகுந்ததாகவும், எழுச்சி உடையதாகவும், மகிழ்ச்சி மிக்கதாகவும், அமைத்திட நாம் உறுதி கொள்ளல் வேண்டும்.”

மணமகள்: “ என் மணாளனே! அப்படிப்பட்ட ஆனந்தமான குடும்பத்தை உருவாக்குவதில் முழுமையாக என்னை அர்ப்பணித்துக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்.”

 

மூன்றாம் படி:

மணமகன்: “திறமையும் அழகும் ஒருங்கே அமையப் பெற்றவளே! நேர்மையான தர்மத்தின் வழியில் எனது திறமையை செலுத்தி பொருளீட்டி குடும்ப வாழ்க்கையை நடத்துவேன் என உறுதி அளிக்கிறேன்.”

மணமகள்: “ என் இதயம் கவர்ந்தவரே! நமது குடும்ப வரவு செலவுகளை மேலாண்மை செய்வதில் தங்களோடு சேர்ந்து உழைப்பேன். நல்வழியில் நாம் சேர்க்கும் செல்வம் நம் சந்ததிகளை காத்திடும் என்ற அசைக்க முடியாக நம்பிக்கையோடு தங்களோடு ஒத்துழைப்பேன் என உறுதி அளிக்கிறேன்.”

 

நான்காவது படி:

மணமகன்: “எனக்கு சொந்தமானவளே! நம் குடும்ப பராமரிப்பிலும் நம் சமூக முன்னேற்றத்திலும்  பொறுப்புடன் நீ எடுக்கக் கூடிய தீர்க்கமான முடிவுகளுக்கு என்னை நான் அர்ப்பணித்துக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன். நமது இந்த வாழ்வியல் முறை நமக்கு சமுதாயத்தில் நன் மதிப்பை ஈட்டுத் தரும் என்பதை நாம் அறிவோம்”

மணமகள்: “ என் அன்புக்கினியவரே! தங்களுக்கு சிறப்பான குடும்பச் சூழ்நிலை மற்றும் உயர்வான உலகியல் வாழ்க்கை அமைந்திட என்னை அர்ப்பணித்துக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்.”

 

ஐந்தாவது படி:

மணமகன்: “ அற்புதமான திறமைகளையும், தூய்மையான, நினைவலைகளையும் வெளிப்படுத்துபவளே! நம் குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சிக்கும் நாட்டின் செழிப்பான எதிர்காலத்திற்கும் வழி வகுக்கக் கூடிய செல்வத்தைப் பெருக்குவதில் உன்னையும் என்னுடன் இணைத்துக் கொள்வேன் என உறுதி கொள்கிறேன்.”

மணமகள்: “ என் இனிய மணாளனே! தங்களுடைய வழியில் தங்களைப் பின் தொடர்வேன் என உறுதி அளிக்கிறேன்.”

 

ஆறாவது படி:

மணமகன்: “ எனக்கு நேசமானவளே! நாம் இருவரும் இணைந்து அறம், பொருள், இன்பம் நிறைந்த குடும்பத்தை உருவாக்கி நன் மக்களையும் பெற்றெடுப்போம். வீடு பேறு காண்போம் என்பதை நமது அந்தரங்கமாக்கிக் கொள்வோம்.”

மணமகள்: “ என் அன்பிற்குரியவரே! தங்களை என் இதயத்தில் வைத்து வணங்குகிறேன். முழுமையான இன்பம் துய்க்க என்னை அர்ப்பணிக்கிறேன். தங்களில் கரைகிறேன்.”

 

ஏழாவது படி:

மணமகன்: “என் இனியவளே! நம்முடைய இந்த உறுதி மொழியை இணைந்தே எடுப்போம். இதுவரை நாம் கொண்ட உறுதி மொழிகளை இமையளவும் விலகாது மேற்கொள்வோம். நாம் சேர்ந்தே இணைபிரியா நண்பர்களாக இருப்போம்.”

மணமகள்: “என் இனியவரே! இன்று தங்களை எனது வாழ்வின் இனிய நண்பராக பெற்றதில் பெருமை அடைகிறேன். இது வரை நாம் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகளை காப்பாற்றுவேன். எனது இதயத்தில் வைத்து பூஜிக்கிறேன்.”

இவ்வாறு மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து நல் இல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும் விதமாக அமைகிறது இந்நிகழ்ச்சி.

 

அம்மி மிதித்தல், மெட்டி அணிவித்தல்

வேள்வியின் இரண்டாம் சுற்றில் மணமகன் கையால் பெண்ணின் வலது காலை தூக்கி  அம்மி மீது வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவிப்பர். “இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள்” என்று கூறுவதான கருத்தினைக் கொண்டது.

இது பெண்ணிற்கு கற்பையும், ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அது போல் வாழ்க்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைபிடித்து நடக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

திருமணமான பெண்ணைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் மணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது.

 

அருந்ததி பார்த்தல்

வேள்வியை சுற்றும் மூன்றாம் சுற்றில், அருந்ததி பார்த்தல் நடைபெறும். மணமகள், “நான் நிரந்தர கற்பு நட்சத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவதாகும்.

வசிட்டரின் மனைவி அருந்ததி சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததியும் இருப்பதாகப் பண்டைய புராணங்கள் கூறுகின்றன.

அருந்ததியோடு சேர்த்து துருவ நட்சத்திரத்தையும் காட்டுவாள். துருவர் விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்குக் காரணமாகவும்  இருப்பதால், “எங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவீராக!” என்று தரிசிப்பதாகும். இவர்கள் எம் வாழ்கையில் வழிகாட்டியாக அமைகிறார்கள்.

துருவரைப் போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல மணமகளுக்குப் பதிவிரதத் தன்மையும் இருத்தல் வேண்டும் என்பதாகும்.

 

பொரி இடுதல்

மணமக்கள் கிழக்கு நோக்கி நிற்க,மணமகனின் சகோதரன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மணமகனின் கையில் கொடுக்க, மணமகன் மணமகளின் கையில் கொடுத்து மணமகளின் கைகளை தன் கைகளால் தாங்கி அக்கினி பகவானே சகல செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டு ஹோம குண்டத்தில் இடுவார்கள். நெல், பொரியாக மலர்வது போல் நம் வாழ்வு மலர வேண்டும் என்பதே தத்துவமாகும்.

 

கோ தரிசனம்

இல்லற வாழ்வு தொடங்கும் மணமக்கள் வாழ்விற்கு வேண்டிய அஷ்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி, பசுவை இலட்சுமி தேவியாக வணங்குவர்.

 

ஆசீர்வாதம், நலங்கு

திருக்கோயில்களில் இருந்து மாலைப் பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்தல், வாரணமாயிரம் மற்றும் பிரபந்தம் சேவித்து ஆசீர்வதித்தல், மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பர்.

 

நலங்கு

நலங்கு என்பது மணமக்களுக்கிடையே அன்யோன்யத்தை வளர்த்திடும் பொருட்டு விளையாட்டு விளையாட வைத்தல் ஆகும். மணமக்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டுதல், மலர்ப்பந்து உருட்டுதல், அப்பளம் உடைத்தல், மஞ்சள் நீர் நிறைந்த குடத்தில் உள்ள கணையாழியை தேடி எடுத்தல் போன்றவை, அதற்குரிய வாய்பாட்டுடன் நடத்தப்படும்.

 

மடிமாற்றுதல்

திருமாங்கல்ய தரிசனத்திற்கு முன்பும், அதற்கு பின்பும் மணமகள் மற்றும் மணமகனின் சகோதரி, மங்கல பொருட்கள் (மஞ்சள், தேங்காய், மலர், குங்குமம், பனை வெல்லம்) அடங்கிய சிறு முடிச்சினை சேலையின் மடி விரித்து பெற்று மாற்றிக் கொள்வார்கள்.

 

அட்சதை

அறுகரிசி என்பது முனை முறியாக பச்ச‌ரிசி. அருகம்புல், மஞ்சள் கலந்த கலவையே ஆகும். பெரியோர் இரண்டு கைகளாலும் எடுத்து “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்று பெருவாழ்வு வாழ்க!” என வாழ்த்தி உச்சியில் மூன்று முறை இடுவர்.

 

நிறைவு

மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புகளை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் சேர்த்து வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுப்பர்.

 

ஆரத்தி

மணமக்கள் தரப்பில் இருந்து இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப்படுகின்றன. பிறகு விருந்து உபச்சாரமும் நடைபெறும்.

 

சம்ம‌ந்தி பாட்டு

சம்ம‌ந்திகளையும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைத்து விருந்தினர்களையும் பாட்டிசைத்து விருந்துண்ண அழைப்பதாகும்.

“பொங்கும் மங்களம் என்றும் தங்குக”


================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...