Followers

Tuesday, November 10, 2020

 

காரைநகரின் அபிவிருத்தியில் மலாய் நாட்டு ஓய்வூதியர்களின் பங்களிப்பு

 

காரைநகரின் அபிவிருத்தியில் மலாய் நாட்டு ஓய்வூதியர்களின் பங்களிப்பு

எஸ். கே. சதாசிவம் 

காரைநகர் புதுறோட்டை சேர்ந்த Mr. Arulyah Barnabas  அவர்களின் தலைமையில் The Karai Union Of Malaya 1919ம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  ஸ்தாபிக்கப்பட்டு Societies of Enactment F.M.S Gazette No.2390 of 2nd June 1920  பதிவுசெய்யப்பட்டது காரை யூனியன் ஓவ் மலாயா 100வது ஆண்டினை நிறைவு செய்வதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.

1855ம் ஆண்டளவில் காரைநகருக்கு வருகை தந்த அமெரிக்க மிஷனரிமாரால் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்கன் மிஷன் ஆங்கில பாடசாலை (சாமி பள்ளிக்கூடம்) சயம்பு உபாத்தியாயரின் காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கற்று ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மலேசியா நாட்டிற்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள பயணமானார்கள். காரைநகரில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற அறிவு சார் சமூகத்தின் முன்னோடிகள் இவர்கள்.

யாழ்ப்பாண துறைமுகங்களில் இருந்து பாய் கப்பல்கள் மூலம் நாகபட்டினம் சென்று அங்கிருந்து நீராவிக் கப்பல்கள் மூலம் மலாயாவுக்குச் சென்றனர். ஆரம்பக் காலங்களில் சென்றவர்கள் தங்கள் உறவினர்களையும், ஊரவர்களையும் அங்கு அழைப்பதில் ஆர்வம் காட்டினர். முதலில் சென்றவர்கள் தங்களுக்குப் பின்னர் வருகை தருபவர்களுக்கு ஆதரவு காட்டி வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

அங்கு சென்றவர்களின் மொழித் தேர்ச்சி, இயலுமைக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றன. அரச சேவையிலும் இறப்பர் தோட்டங்களிலும் இலிகிதர்களாகவும், மொழி பெயர்ப்பாளர்களாகவும் பணியாற்றினர். மேலும் சிலர் தொழில் நுட்பக் கல்வியைக் கற்று நில அளவையாளர்களாகவும், புகையிரதப் பகுதி, பொது வேலைப் பகுதிகளில் தொழில் நுட்ப அலுவலர்களாகப் பணியாற்றினர். இத்துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் துறைசார் திணைக்களங்களில் உயர் பதவிகளை வகித்தனர். நம் ஊரவர்களில் அரச பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றபொழுது மலேசியா நாட்டில் ஐஅpநசயைட ளுநசஎiஉந அநனயட வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

அரச சேவையில் பணியாற்றிய பின்னர் ஓய்வூதியம் பெற்று தமது பூர்வீக மண்ணுக்குத் திரும்பினர். ஆங்கிலம் கற்று, ஆங்கிலேயரின் கீழ் பணியாற்றி, ஆங்கிலேய வாழ்க்கை முறையில் வாழ்ந்திருந்தாலும் ஊர் திரும்பிய பின்னர் தமிழர் பண்பாட்டினையும் அவர்களின் கலாச்சாரத்தையும் பின்பற்றி வாழத் தலைப்பட்டனர். தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சால்வை சட்;டை அணியும் வழக்கத்தை கொண்டிருந்தனர். தங்களுடன் சிங்கப்பூரில் பணியாற்றியவர்களுடன் தமிழில் உரையாடினர். ஓய்வூதியர்களின் பண்பு சார்

நடத்தையால் ஓய்வூதியர்களின் குடும்பத்தவர்களுக்கு சமூகத்தில் உயர் மதிப்பு இருந்தது. இலங்கையில் வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையான  Ceylon Daily News பத்திரிகையை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உரும்பிராய்க்கு அடுத்த படியாக அதிக எண்ணிக்கையான மலாய் நாட்டு ஓய்வூதியர்கள் காரைநகரில் வசித்தனர். ஓய்வூதியர்கள் காரைநகரில் ஊரவர்களாக, சாமானியர்களாக வாழ்ந்தனர். இதுவரை காலமும் விவசாயம் சார்ந்த சமூகமாகவும் அதன் வருமானமுமே காரைநகரின் பொருளாதாரமாகக் காணப்பட்டது. மலாய் நாட்டில் இருந்து வருகை தந்த ஓய்வூதியர்களின் ஓய்வூதியமும் அவர்களின் சேமிப்பும் காரைநகரை வந்தடைந்தது. ஓய்வூதியர்களின் வருகை சமூக மேம்பாட்டில் அவர்களின் பங்களிப்பு, பண உள்ளீடு என்பனவற்றின் காரணமாக யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய கிராமங்களை விட காரைநகர் சமூக பொருளாதார மேம்பாட்டில் விரைவான உயர்வு நிலையை அடைந்தது.

அன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கையில் வர்த்தகம் செய்து பொருள் சம்பாதித்தவர்கள் ஏனைய வேலை வாய்ப்புக்கள் மூலம் செல்வம் தேடியவர்களை விட உயர்ந்த நிலையில் மலாய் நாட்டு ஓய்வூதியர்கள் இருந்தனர். இந்த நிலைமை தொடர்ந்து வந்த காலங்களில் மாற்றம் பெற்றது.

கிராமத்தில் வாழ்ந்த ஏனைய மக்களை விட வசதியான வாழ்க்கை வசதிகள் பெற்றிருந்தனர். வசதியான கல்வீடுகளைக் கட்டினர். தமது பிள்ளைகளுக்கு ஆங்கில மொழி மூலமான கல்வியை வழங்குவதில் ஆர்வம் காட்டினர். ஓய்வூதியர்களின் பிள்ளைகள் பல்கலைக்கழகங்கள் சென்றனர். அரச சேவையில் உயர் பதவிகளைப் பெற்றனர். தங்கள் உறவினர்கள் நல்வாழ்வு பெற்றிட உதவிகள் வழங்கினர். கடன் அடிப்படையில் நிதி வழங்கும் ஸ்தாபனங்களை நடத்தினர். கடன் பெறுபவர்களுடன் மனச்சாட்சியுடன் நடந்து கொண்டனர். கடன் பெறுபவர்களை நம்பி தம் பெரும் பொருளை இழந்து இன்னல் உற்றவர்களும் உள்ளனர்.

ஓய்வூதியர்களிடத்தில் பொதுமைப் பண்புகள் காணப்பட்டன. அனைவரிடமும் சிநேகப் பூர்வமான உறவு முறை பேணினார்கள். மனித நேயமும் மனச்சாட்சியும் மிக்கவர்களாக வாழ்ந்தார்கள். காரைநகரில் வயல் நிலங்களில் விவசாயம் செய்து விவசாயிகளாக வாழ்ந்தனர். காரைநகரின் சமூக ஸ்தாபனங்களில் பொறுப்பான பதவிகளை வகித்து தாம் பெற்ற அறிவை அந்நிறுவன வளர்ச்சிக்குப் பயன்படுத்தினர். பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், ஆலய திருப்பணிச் சபைகள் போன்ற சபைகளிலும் பாடசாலை முகாமையாளர்களாகவும் பணியாற்றினர். மூளாய் வைத்தியசாலை இயக்குநர் சபை யாழ்ப்பாணத்தில் இயங்கிய மலாயர் இலங்கையர் சங்க நிர்வாகம் என்பனவற்றில் அங்கம் வகித்தனர். சமூக சேவையில் வெளிப்படைத் தன்மை உடையவர்களாக விளங்கியமையால் வெற்றி கண்டனர்.

ஓய்வூதியர்கள் உள்ளுர் அரசியலிலும் தேசிய அரசியலிலும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். காரைநகரின் முதலாவது கிராம சபைத் தலைவராக மலாய் நாட்டிலிருந்து வருகை தந்தவர் தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து வந்த காலங்களிலும் மலாய் நாட்டு ஓய்வூதியர்கள் கிராம சபைத் தலைவராகளாகவும், கிராம சபை உறுப்பினர்களாகவும் பதவி வகித்தனர். தமிழ் தேசிய அரசியல் வாதிகளுடன் நெருக்கமான உறவினைப் பேணினர். தேர்தல்களில் வாக்களிப்பதில் வாக்காளர் மத்தியில் காத்திரமான செல்வாக்குச் செலுத்தக் கூடிய வல்லமை பெற்றிருந்தனர்.

காலப்போக்கில் மலாய் நாட்டு ஓய்வூதியர்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது எவரும் இல்லை என்கின்ற நிலையை அடைந்துள்ளது. மலாய் நாட்டு ஓய்வூதியர்களின் வாழ்க்கை முறையை அறிந்தவர்கள், அவதானித்தவர்கள், அவர்களோடு பழகியவர்கள் மட்டுமே ஓய்வூதியர்களின் வாழ்வின் பண்புகளையும், பெறுமானங்களையும் அறிந்தவர்களாவர். மலாய் நாட்டு ஓய்வூதியர்கள் காரைநகர் கிராமத்தின் மேன்மைக்கு கால் நூற்றாண்டுக்கு மேல் வலுவான பங்களிப்பை வழங்கினர். மலாய் நாட்டு ஓய்வூதியர்கள், கிராமத்தவர்கள் இணைந்து ஆற்றிய பணிகளைப் பதிவிடல் இளைய தலைமுறையினருக்கு ஒரு திறவுகோலாக அமைந்ததில் ஐயமில்லை.

 ==============================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...