Followers

Monday, September 7, 2020

 

கடன் பிரச்னை, வாஸ்து தோஷம், கண் திருஷ்டி, பகை விரட்டும் வலம்புரிச் சங்கு!


கடன் பிரச்னை, வாஸ்து தோஷம், கண் திருஷ்டி, பகை விரட்டும் வலம்புரிச் சங்கு!

லம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில், எந்தத் தீய சக்தியும் நம்மை அணுகாது! பிரபஞ்சமே நாதத்தால் எழுந்ததுதான். ஓம்கார பிரணவ மந்திரத்தால்தான் சகல லோகங்களும் இயங்குகிறது என்பதே வேதத்தின் சாரம். பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தபோது கூடவே தோன்றியது இந்தச் சங்கு. இதை எடுத்து தமது கரத்தில் தாங்கிக்கொண்டார் திருமால்.

'பாஞ்சஜன்யம்' என்னும் அந்தச் சங்கு உயிர்களின் சலனங்களை எடுத்துக்கூறும் சின்னமாக இருந்து வருகிறது. கடலில் தோன்றும் சங்கு கிளிஞ்சலின் பாதுகாப்புக் கவசமாக விளங்குகிறது. சாதாரணமாக இடப்புறமாக வளைந்திருக்கும் சங்குகளே அதிகம் விளையும். ஆயிரம் இடம்புரிச் சங்கில் ஒரே ஒரு வலம்புரிச் சங்குதான் இருக்கும். ஆயிரம் வலம்புரிச் சங்கில் ஒரே ஒரு 'சலஞ்சலம்' என்னும் விசேஷ சங்கு தோன்றும். ஆயிரமாயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு இடையேதான் ஒரே ஒரு 'பாஞ்சஜன்யம் சங்கு' தோன்றும் என்பார்கள்.

கடலில் பிறக்கும் ஒரு சங்கில் சுருண்டிருக்கும் வரிகள் வாய்ப் பகுதியில் ஆரம்பித்து வலதுபுறமாக சுழன்று முடிந்தால், அது வலம்புரிச் சங்கு. காதில் வைத்துக் கேட்டால் அது 'ஓம்' என்ற சப்தத்தை எழுப்பும். இதுவே அந்தச் சங்கு வழிபாட்டுக்குரியது என்பதைத் தெரிவித்து விடும். வலம்புரிச் சங்கு, 'தட்சிணாவர்த்த சங்கம்' என்றும் இடம்புரிச் சங்கு 'வாமாவர்த்த சங்கம்' என்றும் சொல்லப்படுகிறது.

தமக்கு வில்வித்தை கற்றுத்தந்த 'சாந்தீபனி' முனிவரின் மகனை மீட்க கடலில் வாழ்ந்த 'பாஞ்சஜன்யன்' என்ற அசுரனை ஸ்ரீகிருஷ்ணர் கொன்றார். சாகும் தருவாயில் கிருஷ்ணரைப் பணிந்த அந்த அரக்கனின் வேண்டுகோளின்படி, அவனது சாம்பலைத் திரட்டி சங்காக மாற்றி அவனது பெயராலேயே ஏந்திக்கொண்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது.

பூஜையில் ஒலிக்கவும், போரைத் தொடங்கவும், வெற்றியைப் பறைச்சாற்றவும், நல்லனவற்றின் வருகையை அறிவிக்கவும் ஆதிகாலம் தொட்டே சங்கு முழங்கப்பட்டு வந்துள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து விதமான சங்குகளைத் தாங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

யுதிஷ்டிரர் (தர்மர்) 'அனந்த விஜயம்' எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ஜுனன் 'தேவதத்தம்' எனும் தேவ சங்கையும், பலவான் பீமன் 'மகாசங்கம்' எனும் பெரிய சங்கையும், நகுலன் 'சுகோஷம்' எனும் அதிர்ஷ்ட சங்கையும் சகாதேவன் 'மணிபுஷ்பகம்' எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.

சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். இது இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது. வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.

வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால், அதில் நீராட்டி சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.

வலம்புரிச் சங்கை ஒருபோதும் கீழே வைக்கவே கூடாது. தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி, மந்திரங்கள் கூறி வணங்க வேண்டும். சங்குக்கு வெள்ளியாலான பூண் இடுவது விசேஷமானது. வலம்புரிச் சங்கை வணங்கும் எந்த இடத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நிச்சயம். தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது. கணபதி, வலம்புரிச் சங்கு, சாளக்கிராமம், ருத்ராட்சம் இந்த நான்கும் இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது ஆன்றோர்கள் வாக்கு.

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே

பவமானாய தீமஹி

தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்

என்பது சங்கின் காயத்ரி மந்திரம்.

ஆடி மாத பூரம், புரட்டாசி மாத பவுர்ணமி, ஆனி மாத சுக்லபட்ச அஷ்டமி, சித்திரை மாத பவுர்ணமி எல்லாம் சங்கு பூஜை செய்வதற்கு உரிய நாள்கள். திருமகளின் அம்சமாகவே இருக்கும் வலம்புரிச் சங்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் அற்புத சின்னமாகவே விளங்கி வருகிறது.

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...