கேன்சர் செல் எப்படி உருவாகிறது?
2020
00:00
உடம்பில் உள்ள இயல்பான செல்லின் வளர்ச்சி, குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் இருக்கும். அபரிமிதமாக ஒரு செல் வளர்ந்தால், அதை கேன்சர் செல் என்று சொல்கிறோம். கேன்சர் என்ற ஒரு செல்லுக்கு இரண்டு குணாதிசயங்கள் உள்ளன.
ஒன்று, எந்த இடத்தில் உருவாகி உள்ளதோ, அதே இடத்தில், கட்டுப்பாடு இல்லாமல் வளரும்; மற்றொன்று, உருவான உறுப்பை விட்டு, வேறு எந்த இடத்திலும் வளர்வது.
உதாரணமாக, மார்பக செல்கள், மார்பகத்திலும், மூளை, எலும்பு என்று, எந்த உறுப்பிற்கும் பரவி வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பரவும் விதம்
கேன்சர் என்று உறுதியானதும் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டியது, எவ்வளவு வேகமாக வளர்கிறது, எந்த அளவிற்கு பரவியிருக்கிறது என்பது தான்.
அது பரவும் விதத்தை வைத்து அவற்றை, 'லோ கிரேடு, ஹை கிரேடு' என்று பிரிக்கலாம். குறிப்பிட்ட இடைவெளியில், பரிசோதனைக்கு வரும்போதெல்லாம், வளர்ந்து காணப்படுவது, 'ஹை கிரேடு' கேன்சர்; மிக மெதுவாக, பல மாதங்கள், ஆண்டுகள் என்று வளர்வது, 'லோ கிரேடு' கேன்சர்.
அடுத்தது, நிலை!
எவ்வளவு துாரம் பரவியிருக்கிறது என்பதை குறிப்பதே நிலை. செல்களின் வளர்ச்சியை வைத்து, நான்கு நிலைகளாக பிரித்து சொல்கிறோம்.
முதல் இரண்டு நிலைகளில் சிகிச்சை, பராமரிப்பு குறைவாக இருக்கும். மூன்று மற்றும் நான்காம் நிலையில் இருந்தால், அதற்கேற்ப சிகிச்சை அதிகமாக தேவைப்படும். இந்த அடிப்படை விஷயங்களை, தெளிவாக அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
கேன்சர் ஏன் வருகிறது?
காரில் பிரேக், ஆக்சிலேட்டர் உள்ளது. எதிரில் வண்டி வந்தால், பிரேக்கை போட வேண்டும்; ஆக்சிலேட்டரை மிதிக்கக் கூடாது. வண்டி வருவது தெரிந்தும், பிரேக் போடாமல் ஆக்சிலேட்டரை மிதித்தால் விபத்தில் முடியும்.
அது போன்று, ஒவ்வொரு செல்லின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, அதற்கேற்ற மரபணு உள்ளது. 'வளர்ந்தது போதும்; இத்துடன் நிறுத்திக் கொள்' என்று, சில மரபணுக்கள், செல்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும். இவை, 'டியூமர் சப்ரசன்ட்' மரபணுக்கள்.
சில மரபணுக்கள், 'இது போதாது; இன்னும் வளர வேண்டும், இன்னும் இன்னும்...' என்று, செல்களை வளரத் துாண்டும். இவை, 'புரோட்டோ ஆன்கோ' மரபணு. எனவே, மரபணுக்கள் சமநிலையில் இருந்தால், பிரச்னை இல்லை.
வாய், குடல் சுவர்களில் உள்ள செல்கள் எல்லாம், தினமும் புதிதாக உற்பத்தி ஆகும். ஆனால், மூளையில் உள்ள செல்கள், ஏழு - எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் புதுப்பிக்கப்படும்.
'புரோட்டோ ஆன்கோ' ஜீன் அதிகமாக வேலை செய்தாலும், 'டியூமர் சப்ரசன்ட்' ஜீன், சரிவர வேலை செய்யாவிட்டாலும், கேன்சர் செல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு மரபணுக்களுமே, நம் பெற்றோரிடம் இருந்து வரக்கூடிய மரபணு கிடையாது.
பெற்றோரிடம் இருந்து வரக் கூடிய மரபணுக்கள் வேறு; இது வேறு. அதனால், பொதுவாக மரபியல் காரணிகளால், கேன்சர் வருவது இல்லை. 100 கேன்சர் வகைகளில், நான்கைந்து கேன்சர் வகைகள் மட்டும் தான், மரபியல் காரணங்களால் வரக் கூடியது.
குழந்தைகள்
குழந்தைகளை பொறுத்தவரை, கண்களின் விழித்திரையில் வரக்கூடிய, 'ரெடினோ பிளாஸ்டோமா' எனப்படும் கேன்சர், பெற்றோரிடம் இருந்து வரக்கூடியது. அம்மாவிற்கு இருந்தால், குழந்தைக்கு வரும் வாய்ப்பு, 50 சதவீதம் உள்ளது; ஆனால், இது அரிதானது.
வளரும் குழந்தைகளுக்கு எப்போதும் கால் வலி இருக்கும்; இது வளர்ச்சியால் ஏற்படுவது.
ஆனால், நடக்கவே முடியாத அளவிற்கு வலி, மூக்கு, வாயிலிருந்து ரத்தம் கசிவது, உடம்பில் வலி இல்லாமல் கட்டி இருப்பது, சிறுநீர், மலம் கழிப்பதில் பிரச்னை, சாப்பிடுவது, விளையாடுவதில் பிரச்னை, பசியின்மை, எடை குறைவது, இடைவிடாத தலைவலி, வாந்தி, எதிர்பாராத வலிப்பு, எலும்பு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், கேன்சர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மார்பக, நுரையீரல், சிறுநீரக, பெருங்குடல், மலக்குடல் போன்ற வளர்ச்சி அடைந்த உறுப்புகளில், குழந்தைகளுக்கு கேன்சர் வருவதில்லை. குழந்தைகளுக்கு, 'லுகேமியா' என்ற ரத்தப் புற்றுநோயும், மூளை புற்றுநோயும் தான், அதிகம் பாதிக்கிறது.
கடந்த, 60 ஆண்டுகளாக ஒவ்வொரு, 10 ஆண்டுகளின் முடிவிலும், கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டு, இயல்பாக வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிக ஆறுதலான செய்தி!
குழந்தைக்கு கேன்சர் பாதிப்பு
குழந்தைக்கு கேன்சர் பாதிப்பு உறுதியானதும், தங்களிடம் இருந்த மரபணு தான் குழந்தையை பாதித்து விட்டது என்ற குற்ற உணர்வு, பெரும்பாலான பெற்றோருக்கு வந்து விடுகிறது; இது அவசியம் இல்லை.
கேன்சரை உண்டாக்கும் பழுதடைந்த மரபணு யார் உடலிலும் இருக்கலாம்; ஆனால், அதை துாண்டக் கூடிய வெளிப்புற காரணிகள் இருந்தால், கேன்சராக வெளிப்படும். உதாரணமாக, மார்பக கேன்சரை உண்டாக்க கூடிய மரபணு உள்ளவர்கள், தொடர்ந்து ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வது, கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது போன்றவை, மார்பக கேன்சரை உண்டாக்கும். குறிப்பிட்ட மரபணுவை துாண்டி, அபரிமிதமான வளர்ச்சியை ஏற்படுத்தச் செய்யும்.
எத்தனை குழந்தைகள் பெற்றாலும், அனைவருக்கும் குறிப்பிட்ட வயது வரை தாய்ப்பால் கொடுக்கும் போது, 'புரோஜஸ்ட்ரோன்' ஹார்மோன் போதுமான அளவு சுரந்து, மார்பக கேன்சரில் இருந்து பாதுகாப்பைத் தரும்.
டாக்டர் ரேவதி ராஜ்,
குழந்தைகள் நல கேன்சர் சிறப்பு மருத்துவர்,
அப்பல்லோ கேன்சர் சிறப்பு மருத்துவமனை, சென்னை.
No comments:
Post a Comment