ராகுகாலம்
ராகு காலம் பற்றித் தெரிந்து கொள்ளுமுன் ராகு, கேது எனும் நிழல் கிரகங்களைப் பற்றி சிறிது அறிவோம் –
பூமி வருடம் ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகின்றது. சந்திரனோ 29 நாட்களுக்கு ஒரு முறை பூமியைச் சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றி வருகின்றது. பூமி, சந்திரன், சூரியன் இவைகளின் இயக்கங்களை ஒட்டி
அமாவாசை, பௌர்ணமி, கிரகணங்கள் ஏற்படுவது பற்றி பள்ளியில் படித்துள்ளோம்.
சூரியனைச் சுற்றும் சந்திரனின் பாதை எப்படி இருக்குமெனப் பார்த்தால் ஒரு ஜாங்கிரி போலத் தோன்றும். இப்பாதையை சூரியனின் தோற்றப்
( apparent path ) பாதையின் மீது வைத்துப் பார்த்தால் பாம்பு போல வளைந்து
( sine wave ) தெரியும். இந்த வளைவின் ஆரம்பப் பகுதி அல்லது தலை பகுதி ‘ராகு’ எனவும் வால் பகுதி ‘கேது’ எனவும் அழைக்கப்படுகின்றது
( ascending & descending nodes ).
சூரியனிலிருந்து இருபுறமும் வெளிப்படும் கண்ணுக்குப் புலப்படாத கருப்பு நிற காந்தப் பாதைகளை ஒரு புறம் ராகு என்றும் மறுபுறம் கேது என்றும் மகரிஷி கூறுவார்கள்.
சூரியனிலிருந்து வெளிப்படும் காந்த அலைப்பாதைகளான ராகு, கேது எனப்படும் நிழல் கிரகங்களுக்கு நேர்ப்பாதையில் பூமி, சந்திரன் வருகின்றபோது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இந்த நிழல் காந்த அலைகளினால் ( ராகு, கேது ) சூரிய ஒளி மற்றும் சந்திர ஒளி பாதிக்கப்பட்டு நம் பூவுலகில் ரசாயன மாற்றங்கள் மிக அதிகமாகின்றது. இதனால் நம் உடலிலும், மற்ற உயிரினங்களிலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால்தான் ஜாதகங்களிலும் இந்த நிழற் கிரகங்கள் இடம் பெற்றன.
சில பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காகவே கிரகண காலத்தில் சாப்பிடக்கூடாது, உடலுறவு கூடாது, சுப காரியங்கள் கூடாது என்றனர். அதே நேரத்தில் உண்டாகும் ரசாயன மாற்றங்கள் மனதிற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதைக் கண்டு கிரகண நேரத்தை ஆன்மீக சாதனைகள் செய்வதற்கு சிறந்த நேரமாக அமைத்தனர். கிரகண நேரத்தில் செய்யப்படும் தியானங்கள், பூஜைகள், மந்திர வழிபாடுகள் பலமடங்கு அதிக பலன்கள் தருவதாகக் கண்டனர். கிரகண நேரத்தை விரத நேரமாக அனுஷ்டிக்கச் செய்து ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி செய்தனர்.
(கிரகண நேரத்தில் வயிறு காலியாக இருந்தால், வான்காந்த ஆற்றல் நமக்கு அதிகமாகக் கிடைக்கும்)
கிரகணத்தின்போது கிடைக்கும் இந்த நன்மைகள் தினம்தோறும் ஏற்படுகின்றதா என்ற ஆராய்ச்சியில் மூழ்கிய நம் முன்னோர்கள் கண்டுபிடித்ததுதான் ராகுகாலம். ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரத்திற்கு கிரகண சாயை உள்ள ஒரு நேரம் உள்ளதாக உணர்ந்தார்கள். இந்த கிரகண சாயை உள்ள ஒன்றரை மணி நேரம் ஒவ்வொரு நாளும் ஒரு வரிசைக்கிரமத்தில் அமைந்து, இந்த வரிசைக்கிரமம் ஏழு நாட்களுக்கு ஒருமுறை அதே வேளைகளில் வரிசையாக அமைவதையும் கண்டனர்.
கிரகண நேரத்தில் செய்யக்கூடிய ஆன்மீக சாதனைகளை, இந்த கிரகண சாயல் உள்ள நேரத்தில் செய்தால் அதே போன்ற நன்மைகள் விளைவதைக் கண்டனர். இந்த கிரகண சாயை நேரத்தைத்தான் ” ராகு காலம் ” எனப்பெயரிட்டு ராகுகாலப் பூஜைகளையும், விரதங்களையும் ஏற்படுத்தினர்.
ராகுகால நேரத்தை ஆன்மீக முன்னேற்றத்திற்கு பயன்படுத்தாமல் மக்கள் வீணாக்கியதைக் கண்டு ராகுகாலத்தில் லௌகீக வாழ்க்கைக்கான சுப காரியங்கள் செய்யக்கூடாது, அப்படி மீறி செய்தால் நன்மைகள் விளையாது எனப் பயமுறுத்தினர். இதனால் வேறுவழியின்றி மக்கள் இந்த நேரத்தில் பூஜையிலும், தியானத்திலும் ஈடுபடுவார்கள் என நம்பினர்.
ஆனால் நடந்ததோ – ராகுகாலத்தில் எதையம் செய்யக்கூடாது என்ற மூடநம்பிக்கை வளர்ந்து இன்று ராகுகாலம் என்பது இயலாமைகளுக்கும், சால்ஜாப்புகளுக்கும், சமாளிப்புகளுக்குமே பயன்படுகின்றது.
இன்றைய தினம் என்ன கிழமை என்பதே உறுதி செய்யப்படாத நிலையில் கிழமையைக்கொண்டு கடைப்பிடிக்கப்படும் ராகுகால நேரம் உண்மையில் சரிதானா என்பதை யார் உறுதிபடுத்த முடியும்..!
இதே வாதம்தான் எமகண்டம், ஹோரை, குளிகை, சூலை போன்ற நேரங்களுக்கும்..!
courtesy; gnanavayal.worldpress.com
========================================
No comments:
Post a Comment