Followers

Thursday, May 7, 2020

சிலரின் பேச்சு வியக்க வைக்கும், சிலரின் பேச்சு வியர்க்க வைக்கவும், சிலரின் பேச்சு மலைக்க வைக்கும். எப்படி இருப்பினும் நம் பேச்சானது பிறரை காயப்படுத்தாமல் இருந்தால் அதுவே சிறப்பு. வள்ளுவர் தனது குறளில், பயனுள்ள சொற்களை பேச வேண்டும் என்பதை'சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லில் பயனிலாச் சொல்' என்றார்.
எல்லோர்க்கும் என்றும் அன்பான வணக்கம்...
ஒருமுறை பேச இருமுறை யோசி..................
பேசுவது என்பது இறைவன் கொடுத்த வரம். விலங்கு, பறவைகள் பேசுவதில்லை. மனிதனுக்கு மட்டுமே பேசும் சக்தி உண்டு. மனிதன், சக மனிதனிடம் தன் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் காலக்கண்ணாடி இந்த பேச்சு. எந்த ஒரு காரியமும் வெற்றியா, தோல்வியா
என்பதை பேசுகிற பேச்சை வைத்துதான் முடிவு செய்ய முடியும்.சிலரின் பேச்சு வியக்க வைக்கும், சிலரின் பேச்சு வியர்க்க வைக்கவும், சிலரின் பேச்சு மலைக்க வைக்கும். எப்படி இருப்பினும் நம் பேச்சானது பிறரை காயப்படுத்தாமல் இருந்தால் அதுவே சிறப்பு.
வள்ளுவர் தனது குறளில், பயனுள்ள சொற்களை பேச வேண்டும் என்பதை'சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லில் பயனிலாச் சொல்' என்றார்.
பேச்சின் அவசியம்
கல்லை மனிதன் ஆயுதமாக பயன்படுத்திய காலம் - கல்லாயுத காலம். பிறரை கொல்ல பயன்படும் கொலை ஆயுதமாக பயன்படுத்திய காலம் - கோலாயுத காலம், எட்டும் துாரம் வரை தாக்க பயன்படும் வில்லை பயன்படுத்திய காலம் - வில்லாயுத காலம், இன்றோ நாம் சொல்லைப் பயன்படுத்த சொல்லாயுத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
'வில்லில் இருந்து புறப்பட்ட அம்புஅருவியில் இருந்து விழும் நீர்வாயில் இருந்து புறப்பட்ட வார்த்தை'ஆகிய இவை மூன்றும் உலகில் என்றும் திரும்பாது.அதனால்தான் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், நல்ல வார்த்தைகளாக இருக்கட்டும் என்பதற்காகவே நாக்கை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள, அதில் ஈரம் இருக்குமாறு கடவுள் படைத்திருக்கிறான்.
வாய்க்கு போகும் உணவு பொருட்களில் அறுசுவையை எதிர்பார்க்கும் நம் நாக்கு, அதே வாய் வழியே வெளியே வரும் வார்த்தைகளையும் சுவையாக பேசினால், தேவையில்லாத பல சங்கடங்கள் தவிர்க்கப்படும்.
சொல்லாத வார்த்தை நாவுக்கடிமைசொல்கின்ற வார்த்தைக்கு நாம் அடிமைஎனவே, எந்த பேச்சையும் சூழ்நிலைக்கேற்ப அறிந்து பேசுவது சிறப்பு.
கல்லுாரியில் போட்டி
மாணவர்கள் திறனை மேம்படுத்த ஒரு கல்லுாரியில் 'பேசாதவை பேசினால்' என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடந்தது. அதில் பல மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் மிருகங்கள் பேசினால், பறவைகள் பேசினால், மரங்கள் பேசினால் எப்படி இருக்கும் என சிந்தித்து கவிதை எழுதினார்கள். இவர்களுக்கு எல்லாம் பரிசு கிடைக்கவில்லை.
ஆனால், ஒரு மாணவனுக்கு மட்டும் முதல் பரிசு கிடைத்தது. காரணம், அவன் எழுதிய கவிதை உணர்த்திய பொருள். அது என்னவென்றால், பேசாதவை பேசினால் பெருமைதனை இழப்பர், பெரும் செல்வாக்கு, புகழை இழப்பர். உறவுகள், நல்ல வேலையை இழப்பர். இப்படி வரிசையாக அடுக்கிக்கொண்டே போனதால் அக்கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
வாழ்வில் வெற்றி பெற விவேகானந்தர் சொல்வார்,
'உன்னை தாழ்த்தி பேசும்போது
ஊமையாய் இரு
உன்னை உயர்த்தி பேசும்போது
செவிடனாய் இரு'.
பேச்சு உணர்த்தும் அனுபவம்
இன்றைய காலத்தில் பேச்சு என்பது சுற்றி வளைத்து, நீட்டிப்பேசும் காலமல்ல. சுருக்கி, மடக்கி பேசும் காலம். மேடையிலே ஒருவர் கூட்டத்தினரிடம், சிங்கத்தை பார்த்து வீரத்தை கற்றுக்கொள்ள வேண்டும். புலியைப் பார்த்து வேகத்தை கற்றுக்கொள்ள வேண்டும். காக்கையை பார்த்து ஒற்றுமையை கற்றுக்கொள்ள வேண்டும், என்றார். பேச்சை கேட்ட ஒருவர், தனது கைக்கடிகாரத்தை சைகை மூலம் காண்பித்து, நேரத்தை பார்த்து பேசக்கற்றுக்கொள்ளுங்கள், என்றார்.
ஒருவர் மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கினார். வேகமாக ஒருவர் ஓடிவந்து, உங்கள் பேச்சு சிரிக்கவும் வைக்குது. சிந்திக்கவும் வைக்குது என்றார். உடனே பேசியவர், எப்போது சிரிக்க வைத்தது, எப்போ சிந்திக்க வைத்தது என்றார். 'நீங்கள் மேடையில் பேசும்போது, சிரிச்சு சிரிச்சு கேட்டோம். பிறகு ஏண்டா சிரித்தோம் என்று சிந்தித்தோம்' என்றார்.
ஒரு பள்ளி விழாவில் பேசிவிட்டு ஒருவர் பஸ் ஸ்டாப் வந்தார். அருகில் நின்ற, அதே பள்ளியில் படிக்கின்ற மாணவரை பார்த்து, 'என் பேச்சு எப்படி இருந்தது' என்றார். உடனே அந்த மாணவர், 'எங்கள் பள்ளியில் ஒரு மணி நேரம் பேசினீர்கள். கடைசியாக சொன்ன இரண்டு வார்த்தைகள் அற்புதம்' என்றான். 'அவை என்ன' என பேச்சாளர் கேட்க, 'இத்துடன் பேச்சை முடித்துக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்' என்று சொன்னீர்களே. அதுதான்' என்றான் அந்த மாணவன்.
குடும்பங்களில் காணும் இன்பம்
ஒரு குடும்பத்தின் வெற்றியும், சந்தோஷமும், கணவன், மனைவி புரிதலில் உள்ளது. இருவரும் மாறி மாறி பேசும் அன்பான பேச்சுக்கள் கால ஓட்டத்தில் நிலைத்து நிற்கும். தங்களது திருமண நாளன்று வாழை இலை போட்டு விருந்து படைக்கிறாள்
மனைவி. விதவிதமான
உணவுகள் மத்தியில் ஒரு நீளமான தலைமுடி. அதை கணவன் எடுக்க, 'என்ன சொல்ல போகிறாரோ' என மனைவி பயந்து நிற்கிறாள். இந்நேரத்தில் கணவன், 'இந்த முடி உன் தலையில் இருந்தாலும் அழகு. இந்த இலையில் இருந்தாலும் அழகு' என்றான். மனைவி முகத்தில் மகிழ்ச்சி.
பெண்கள் தங்கள் குடும்பங்களில் பேசும்போது, அப்பாவிடம் குரலை உயர்த்தி பேசக்கூடாது. அது அவருக்கு கோபத்தை உண்டாக்கும். அம்மாவிடம் குரலை தாழ்த்தி பேசக்கூடாது. அது அம்மாவுக்கு பயத்தை உண்டாக்கும். கணவனிடம் பேசவே கூடாது. அது அவருக்கு அதிக ஆயுளை உண்டாக்கும் என வேடிக்கையாக சொல்வார்கள்.
வள்ளுவரும் தனது குறளில்'யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு' என்கிறார்.
எதை அடக்காவிட்டாலும், தீய சொற்கள் வராமல் நாக்கை அடக்கியாள வேண்டும். இல்லையெனில், பேச்சில் பிழை ஏற்பட்டு பெரும் சொற்குற்றத்திற்கு ஆளாகி பெரிதும் துன்பப்படுவர்' என்கிறார். தேவையான விஷயத்தை, தேவையான அளவு, தேவையான இடத்தில் பேசியே தீர வேண்டும். பேசாதவர்கள் தோல்வி அடைகிறார்கள். அதிகம் பேசுபவர்களும் தோல்வி அடைகிறார்கள்.
பேச வேண்டிய இடங்களில் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவது நலம்.நல்ல பேச்சு நமது மூச்சுநம் உடலில் ஏற்படும் எல்லா காயங்களும் ஆறும். ஆனால் ஆறாத காயம், பேச்சின் மூலம் ஏற்படும் காயம்.
'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்- ஆறாதேநாவினால் சுட்ட வடு'என்கிறார் வள்ளுவர்.
மனிதன் சில நேரங்களில் கோபப்பட்டு பேசுகிறான், சிரித்து பேசுகிறான், சிந்தித்து பேசுகிறான், நினைத்து பேசுகிறான், நினைத்ததை பேசுகிறான். ஆனால் பேச்சில் கனிவு இருக்க வேண்டும். காயம் இருக்கக்கூடாது.
பாரதியார் கவிதையில்,'மனதில் உறுதி வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்'என்பார்.
ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் பெரிய மனிதர்கள் அல்ல. யார் நியாயமாக பேசுகிறாரோ, அவரே உண்மையான பெரிய மனிதர் என்று அழைப்பார்கள். சாலையில் நடக்கும்போது எதிரில் ஒரு பழகிய நபரை பார்க்கும்போது, 'ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்' என்று கேட்டால், அவர் இன்னும் சோர்வாகிவிடுவார். அதேநேரம் 'வழக்கத்தைவிட இன்று கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே' என்று கேட்டு பாருங்கள். அவரிடம் உள்ள உண்மையான சோர்வே காணாமல் போய்விடும். உற்சாகம் பெருக்கெடுக்கும்.
ஒரு தத்துவம் உண்டு. இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேசக் கற்றுக்கொள்கிறோம்.
ஆனால், எத்தனை வயது ஆனாலும் எப்படி பேச வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். ஆனால், எத்தனை வயது ஆனாலும் எப்படி பேசவேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோமா என்பது சந்தேகம்.
வாழ்க்கையில் சாதனை படைத்தேன்என்பதைவிட யாரையும் பேச்சால்வேதனை படுத்தவில்லை என்பதே சிறந்தது.
எனவே, சிந்தித்து பேசப்படும் பேச்சு, சிக்கல்களை களைகிறது. சீரழிவை தடுக்கிறது. சிறப்பான பலன்களை தருகிறது. உள்ளத்தில் இருந்து வரும் பேச்சு உறவுக்கு கை கொடுக்கிறது. இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது. நம்மை உயர்வான நிலைக்கு கொண்டு செல்கிறது. எனவே, பொருள்பட பேசுவோம். பொழுதை நம்வசமாக்குவோம்.
- ச. திருநாவுக்கரசுபட்டிமன்ற பேச்சாளர்மதுரை. 98659 96189---
அன்பு நன்றி ஐயா.
==============================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...