Followers

Thursday, April 16, 2020

குருவை சரணடை!.......





குருவும், சீடனும், அடர்ந்த காட்டின் வழியே நடந்து சென்றனர். இரவு நெருங்கவே, உறங்கி, காலையில் பயணத்தை தொடர முடிவு செய்து, ஒரு மரத்தடியில் உறங்கினர்.

பொழுது விடிந்ததும், ஆற்றில் நீராடினர். சூரியனை வணங்கினார், குரு.
அப்போது, 'வேத குருவே... உங்கள், வணக்கத்தை ஏற்றுக் கொண்டேன். ஆனால், இன்று, சூரியனாகிய நான் மறைவதற்குள், உங்கள் சீடன், ராஜ நாகத்தால் தீண்டப்பட்டு, இறக்க நேரிடும். முடிந்தால், உங்கள் தவ வலிமையால் அவனை காப்பாற்றுங்கள்...' என, அசரீரி ஒலித்தது.
பின், இருவரும், பழங்களை பறித்து பசியாறி, காடு வழியே நடந்து சென்ற போது, களைப்பு ஏற்படவே, ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். கண் அயர்ந்தான், சீடன்.

அவனின் உயிரை காப்பாற்ற எண்ணி, விழித்திருந்தார், குரு. அப்போது, படமெடுத்தபடி, சீடனை கொல்ல வந்தது, ராஜ நாகம்.
'ராஜ நாகமே, நில்...' என்று, குரு ஆணையிட, அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது.

'நீ, சீடனின் உயிரை எடுக்க வந்துள்ளதை அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது, என் கடமை. அதனால், இதற்கு அனுமதிக்க மாட்டேன்...' என்றார்.

'வேத குருவே... சீடனின் ரத்தத்தை உறிஞ்சி எடுக்க வேண்டும் என்பது, எனக்கு, காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே, கடமையை செய்ய விடாமல், தடுக்கலாமா...' என்று முறையிட்டது, ராஜ நாகம்.

'சீடனின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே, உனக்கு, காலன் இட்ட கட்டளை... நானே, அவன் ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும், நீ, உன் கடமையை செய்துவிட்ட பலனை பெறுவாய்...' என்று கூறி, கத்தியால், சீடனின் கழுத்தில் லேசாக கீறினார்.
தன் கழுத்தில், குரு, கீறுவதை உணர்ந்தும், சிறிதும் அசையாமல், கண் மூடி படுத்திருந்தான், சீடன்.

சீடனின் ரத்தத்தை எடுத்த குரு, அதை, ராஜ நாகத்துக்கு ஊட்டி விட, மகிழ்வோடு, ரத்தத்தை உறிஞ்சி, வந்த வழியே சென்றது.
சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு, தான் எடுத்து வந்த பச்சிலை சாற்றை பிழிந்து, அவனது கழுத்து பகுதியில் பற்று போட்டு, உறங்க சென்றார், குரு.

சிறிது நேரத்துக்கு பின், கண் விழித்த சீடன், 'குருவே... நம் பயணத்தை தொடரலாமா...' என்றான்.

'சீடனே... சற்று முன் நீ உறங்கும்போது, கழுத்தில் கத்தி வைத்தேனே... உனக்கு பயம் இல்லையா...' என்று, கேட்டார்.

'குருவே... கழுத்தில் ஏதோ ஊறுவதை உணர்ந்து, விழித்தேன்; கையில் கத்தியுடன் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால், குருநாதராகிய தாங்கள், எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை அறிவேன். அதனால், நான் நிம்மதியாக உறங்கினேன்.
'குருநாதராகிய உங்களுக்கு, என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால், எனக்கு அதில் எவ்வித கவலையும் இல்லை...' எனக் கூறி, பணிந்து நின்றான், சீடன்.

சீடனை ஆற தழுவி, அவனோடு நடக்கலானார், குரு.
நண்பர்களே... நமக்கு விதித்தபடி நடக்கும் நல்லது, கெட்டது அனைத்திற்கும் இறைவனே பொறுப்பு என்று, அவனை சரணடைந்தால், நடக்க இருக்கும் தீமையும், இறைவன் அருளால் நன்மையாக மாறும்.

ஏ. எஸ். ஜி.,

==========================================
* சூரியதேவனே! கிரகமண்டலத்தின் நாயகனே! ஒளிக்கும் ஒளியாக திகழ்பவனே! பொன் நிறமானவனே! எல்லோரும் துதிக்கப்படுபவனே! ஆகாயத்தில் சஞ்சரிப்பவனே! உன்னை வணங்குகிறோம்.


*பகல் பொழுதின் அதிபதியே! வெற்றியை வழங்குபவனே! ஆயிரமாயிரம் ஒளிக் கிரணங்களை கொண்டவனே! அதிதியின் புத்திரனே! உன்னைப் பணிகிறோம்.

* வெயிலாய் காய்பவனே! பகைவர்களை அழிப்பவனே! பிரகாசம் நிறைந்தவனே! அன்பு கொண்டு உயிர்களைக் காப்பவனே! மூவுலகையும் தோற்றுவித்தவனே! துன்பத்தை பனி போல மறையச் செய்பவனே! உன்னைத் துதிக்கிறோம்.

* ஆகாச சமுத்திரத்தில் யாத்திரை செல்பவனே! வேதங்களில் கரை கண்டவனே! உஷ்ணம் மிக்கவனே! மாலையில் மஞ்சளாய் ஒளிர்பவனே! உன்னைப் போற்றுகிறோம்.

* தங்கம் போல் ஜொலிப்பவனே! மும்மூர்த்திகளுக்கும் தலைவனே! தேவாதி தேவனே! ஆரோக்கியம் அருள்பவனே! உன்னைச் சரணடைகிறோம்.
 courtesy;Dinamalar. tq.

=========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...