மலைகளையும் காடுகளையும் பாடிக்கொண்டே இருப்பேன்: வைரலான பழங்குடிப் பாடகி...............

சமீப காலமாக புதிய திறமைகளை பிரபலமாக்குவதில் சமூக வலைத்தளங்கள் பெரும்பங்கு வகித்துவருகின்றன. அந்த வகையில் அட்டப்பாடியில் வசித்து வரும் 60 வயது நஞ்சம்மா என்ற பழங்குடிப் பெண் தனது ஒரு பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.
பிப்ரவரி மாதம் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' என்ற மலையாள மொழி படத்தில் இவர் பாடியுள்ள 'கலக்காத்த சந்தனமேரா' என்ற இருளர் மொழி பாடலை யூடியூபில் 80 லட்சம் பேருக்கு மேல் இதுவரை பார்த்துள்ளனர்.
"கலக்காத்த சந்தனமேரா, என்ற பாடல் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது தாய்மார்கள் பாடும் பாட்டு. இந்தப் பாடலை எந்தப் படத்திற்காக பாடினேன் என்று கூட எனக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. எங்கள் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தான் அழைத்து சென்று பாடவைத்தார். பாடிக்கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்துவிட்டோம். பின்னர், என்னை பார்ப்பதற்காக பலர் வந்தபோது தான் நான் பாடிய பாடல் பிரபலமானது தெரியவந்தது" என்கிறார் நஞ்சம்மா.
அட்டப்பாடியில் உள்ள நாக்குபதி பிரிவு எனும் பகுதியில் மகள், மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோரோடு வசித்து வரும் நஞ்சம்மா, கால்நடை வளர்ப்பின் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

"நான் பிறந்து வளர்ந்தது தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள ஆனகண்டிபுதூர் எனும் மலைப்பகுதி. திருமணமாகி கேரளாவின் அட்டப்பாடியில் வந்து தங்கிவிட்டோம். 13 வயது முதலே நான் பாடல்கள் பாடி வருகிறேன். இருளர் மக்களின் எல்லா நிகழ்வுகளிலும் இசை இருக்கும். சோகத்திலும், மகிழ்ச்சியிலும், கோவில் விழாக்களிலும் பாட்டும் ஆட்டமும் இருக்கும். சிறுவயது முதலே அதையெல்லாம் பார்த்து ரசித்து வளர்ந்தவள் நான். எனது தந்தை கூத்துக்களில் வேஷம் கட்டி ஆடுவார். அதனால், எனக்கும் கலை மற்றும் இசையின் மீது அதிக ஆர்வம் உண்டு. திருமணத்திற்கு பிறகும் அந்த ஆர்வம் தொடர்ந்தது. பழங்குடியின கலைக்குழுவில் சேர்ந்து பயிற்சிபெருமாறு என் கணவர் ஆலோசனை கூறினார். நானும் குழுவில் சேர்ந்து பாடத்துவங்கினேன். கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். அதன்மூலம் தான் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பும் உருவானது" எனக்கூறுகிறார் நஞ்சம்மா.
'அய்யப்பனும் கோஷியும்' என்ற படத்தில் இரண்டு பாடல்களை பாடியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் இவர்.

"சிறுவயது முதலே தமிழ்ப் படங்களை ரசித்துப் பார்ப்பேன். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி ஆகியோரது படங்களை விரும்பி பார்ப்பேன். நகைச்சுவை நடிகர் வடிவேலுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். தொலைக்காடசி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக வடிவேலு அட்டப்பாடிக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவருடன் ஒரு சில காட்சிகளில் நடித்தேன். அந்த தைரியத்தில் 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் நடிக்க அழைத்தபோதும் ஒப்புக்கொண்டேன். எனக்கான காட்சிகள் அனைத்தையும் ஒரே டேக்கில் நடித்து கொடுத்தேன். சில சோகக் காட்சிகளில் என்னை அறியாமலே அழுது நடித்தேன். அந்த அளவிற்கு ஆழமான கதை அது. படத்தை பார்த்த பிரபலங்கள் பாட்டுக்கும் நடிப்புக்கும் சேர்த்து என்னை பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது" என புன்னகைத்தார் நஞ்சம்மா.
'இவர் பாடிய 'கலக்காத்த சந்தனமேரா' பாடல், படத்தின் தலைப்புக்கான பிரத்யேக பாடலாக பயன்படுத்தப்பட்டு வீடியோவாக வெளியிடப்பட்டது. மற்றோரு பாடலான 'தெய்வமகளே' பாடல் படத்தின் சோகக் காட்சிகளில் இடம்பெற்றுள்ளது.
"பாடல்களை எழுதி வைத்து என்னால் பாட இயலாது. மனதில் தோன்றும் எண்ணங்களையம் வார்த்தைகளையும் வைத்து பிடித்த ராகத்தில் பாடல்களை பாடிவிடுவேன். 'தெய்வமகளே' பாடலையும் அப்படித்தான் பாடினேன். எனது மனதில் இருந்த மொத்த சோகத்தையும் உருக்கி வார்த்தைகளை யோசித்து பாடலாக பாடினேன். பாசமாக வளர்த்த மகளை இழந்த பழங்குடியின தாய் பாடும் பாடல் அது. எனக்கு பன்னிரெண்டு வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்து மகள் பிறந்தாள். அந்த சோகத்தில் பாடலை பாடியபோது நான் அழுதுவிட்டேன். பாடி முடித்து வெளியில் வந்து பார்த்தால் எனது இசைக் குழுவினரும், படக்குழுவினரும் அழுது கொண்டிருந்தனர்" என கூறினார் நஞ்சம்மா.
தனது பாடல் ஹிட் ஆனதை தொடர்ந்து, பல படங்களில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறார் இவர்.

"மலையும் காடுகளும் தான் எங்கள் வாழ்க்கை. எல்லா ஊர்களிலும் சுற்றி வந்தாலும் இங்கு வந்தால் தான் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். இங்கு இருப்பதில் தான் எங்களுக்கு மகிழ்ச்சி. எனவே, எனது பாடல்களும் இவைகளைப் பற்றிதான் இருக்கும். இங்குள்ள குழந்தைகளுக்கு எங்களின் இசையை கற்றுக்கொடுத்து வருகிறேன். அடுத்தடுத்து படங்களில் பாடி அனைவரையும் மகிழ்விப்பேன். குழந்தைகளுக்காக ஏங்கிய எனது பாடலுக்கு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் ஆடிப்பாடுகின்றனர். இதுவே எனக்கு மிகப்பெரிய திருப்தியை அளிக்கிறது" எனக்கூறி நிறைவாக புன்னகைக்கிறார் நஞ்சம்மா.
courtesy;BBCTAMIL. tq.
===============================================================================
No comments:
Post a Comment