Followers

Sunday, March 22, 2020

நடிகர், இயக்குநர் விசு காலமானார்


visu-passed-away

திரையுலகில் வரவேற்பு பெற்ற பல்வேறு படங்களை இயக்கியவரும், பல படங்களுக்குக் கதாசிரியராகப் பணிபுரிந்தவருமான விசு காலமானார். அவருக்கு வயது 74.
திரையுலகில் கதாசிரியராக அறிமுகமாகி, பின்பு நடிகர், இயக்குநர் எனத் தன்னை நிரூபித்தவர் விசு. 2016-ம் ஆண்டு வெளியான 'மணல் கயிறு 2' படத்தின் கதாசிரியராக இருந்து, அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு அவருடைய வயோதிகம் காரணமாகவும், தொடர்ச்சியாக டயாலிசிஸ் செய்து வந்ததாலும் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
வாரத்துக்கு 2 முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தவருக்கு, 3 முறை செய்யக் கூடிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை கடந்த 10 நாட்களாகவே மோசமடைந்து இருந்தது. இன்று (மார் 22) மிகவும் சோர்வாகக் காணப்பட்டவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். விசுவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். அவருக்கு வயது 74
இவருடைய மனைவியின் பெயர் சுந்தரி. இவருக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என 3 மகள்கள் இருக்கிறார்கள். அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது.
விசு கடந்து வந்த பாதை
நாடகத்திலிருந்து 1977-ம் ஆண்டு 'பட்டினப் பிரவேசம்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாசிரியராக அறிமுகமானவர் விசு. அதனைத் தொடர்ந்து 'சதுரங்கம்', 'அவன் அவள் அது', 'மழலை பட்டாளம்' என கதாசிரியராகவே பல படங்களுக்குப் பணிபுரிந்து வந்தார். அவற்றில் 'தில்லு முல்லு', 'நெற்றிக்கண்', 'குடும்பம் ஒரு கதம்பம்', 'மணல் கயிறு', 'மிஸ்டர் பாரத்', 'சம்சாரம் அது மின்சாரம்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

'மணல் கயிறு 2' படப்பிடிப்பு தளத்தில் விசு

ரஜினி நடிப்பில் பெரும் வரவேற்பு பெற்ற 'தில்லு முல்லு' படத்தில் கதாசிரியராகப் பணிபுரிந்தது மட்டுமன்றி, அதன் மூலமாகத் தான் நடிகராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தான் இயக்கிய படங்கள் மட்டுமல்லாது, பிற படங்களான 'சின்ன மாப்ளே', 'மன்னன்', 'வனஜா கிரிஜா', 'இரட்டை ரோஜா', 'அரவிந்தன்', 'ஜி', 'அலெக்ஸ் பாண்டியன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
'கண்மணி பூங்கா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பிறகு 'மணல் கயிறு', 'புதிய சகாப்தம்', 'கெட்டி மேளம்', 'சிதம்பர ரகசியம்', 'சம்சாரம் அது மின்சாரம்', 'திருமதி ஒரு வெகுதி' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் 'சம்சாரம் அது மின்சாரம்' என்ற படத்துக்காகச் சிறந்த பொழுதுபோக்குப் படம் என்பதற்கான தேசிய விருதை வென்றார். மேலும், 1992-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நீங்க நல்லா இருக்கணும்' படத்துக்காக சமூகப் பிரச்சினைகள் குறித்த சிறந்த படம் என்பதற்கான தேசிய விருதினை வென்றார். தமிழக அரசு விருதினையும் வென்றுள்ளார்.
திரையுலகில் நுழையும் முன்பு பல நாடகங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே இருக்கும். அதனாலே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமன்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அரட்டை அரங்கம்', ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'விசுவின் மக்கள் அரங்கம்' ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம்.
விசுவின் இழப்பு கண்டிப்பாக நாடக உலகிற்கும், திரையுலகிற்கும் பேரிழப்பு. இவரது இயக்கத்தில் நடித்த பலரும் இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
courtesy;https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/545603-visu-passed-away-2.html

மலரின் மகள்"விசுத்தனம்" என்று ஒரு இலக்கணத்தையே வசனத்திற்குள் ஒரு வகையாக சேர்த்திட்டவர் இவர். தனக்கென ஒரு பாணி. கணீரென்ற குரல் வளம். தெளிவான உச்சரிப்பு. வசனங்கள் அனைவருக்கும் புரிவதாக, குடும்பத்துடன் சென்று கண்டு அறிவதாக திரைக்காவியம் படைத்தவர். என்பது தொண்ணூறுகளில் நிறைய காவியங்களை படைத்தளித்திருக்கிறார்.
விரசம் என்ற ஒன்று இல்லாத படம் எடுத்தவர். கவர்ச்சி என்று எதுவும் இவரது படத்தில் கிடையவே கிடையாது. நாடக மேடையை வெள்ளித்திரையில் அப்படியே தந்தவர். நாடகவியலின் தந்தை பம்மல் சம்பந்த முதலியாரின் நாடக உத்திகளை கடைபிடித்து தான் திரைப்படங்கள் பொதுவாக எடுக்கப்படுவது வழக்கம். அதை இவர் சிறப்பாக்கியவர். நெஞ்சை கணமாக்கும் ஒரு நிகழ்வு சோகமான காட்சிகளை தொடர்ந்து தரமாட்டாமல், உடனே அதை தொடர்ந்து ஒரு நகைச்சுவையை வைத்து பார்ப்பவர்களின் மனதின் சோகத்தை குறைப்பது நாடக வழக்கமாம். அத்தகு இலக்கணங்கள் உண்டு இவரின் படைப்புக்களில். கூட்டு குடும்பமாய் வாழ்ந்த தன் அனுபவத்தை திரைப்படத்தில் காண்பித்தவர்.

நடுத்தர வர்க்கம் படும் பாடு பிரச்சினைகளிலுருந்து விடுபட சமுதாயம் தரும் உதவி, அதே சமுதாயத்தில் இருந்து வரும் ஏச்சுக்கள் ஏளனங்கள் அனைத்தும் சிறப்பாக வெளிக்காட்டியவர். அரட்டை அரங்கத்தை நகைச்சுவையாக்கி அதில் சமூக கண்ணூட்டங்களை வெளிப்படுத்தி இளைஞர்களை நல்வழி படுத்தியவர். இவரின் சினிமாவில் காட்சிகள் பட மாக்கப்பட்டவைகள் அன்றைய சிறு குறு நகரங்களின் முழுப்பரிமாணங்கள் தான். பிரிட்டிஷ் இந்தியாவில் ஜூலை திங்கள் முதல் நாளில் நாற்பத்தைந்தாம் வருடம் ஜனனம் கொண்டு நேற்றைய தினம் தனது பரிபூரண வாழ்வை நிறைவாக்கி கொண்டு இன்று தகனமாகி பூவுலகிற்கு அனுப்பியவனிடமே செல்கிறார்.

நாடகம் இயற்றுவது ஒரு கடினமான செயல். இயலும் இசையும் விரைந்து காணப்படும் நமது இலக்கியத்தில் நாடகத்தமிழ் பெருமளவில் தமிழறிஞர்களால் வளர்க்கப்படவில்லை. முத்தமிழ் மூன்றாம் தமிழ் பிந்தைய காலகட்டத்தில் தான் வளர்ச்சி காணப்பட்டது. அதை பெருமளவில் வளர்க்காமல் தமிழறிஞர்கள் பள்ளி கல்லூரி பாடத்திட்டங்கள் நின்று போன குறைகளை ஓரளவு கலைந்தவர்களில் விசுவிற்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு.
மீனாட்சி சுந்தரம் ராமசாமி விசுவநாதன் விசுவாக தமிழுக்கு தொண்டாற்றியவர் எனபதை நிச்சயம் தமிழ் ஞாபகம் வைத்திருக்கும் தனது அணிகலன்களில் முத்தாய்ப்பாக. சிறுநீரக கோளாறால் உச்ச காட்சியை நிறைவு செய்து நாடகம் முற்று பெற்றது. பூவுலகின் வாழ்க்கையை சுபமாக்கி நிறை கொண்டாலும், தமிழன்னையின் அணிகலன்களில் இவர் வீற்றிருப்பார் நிரந்தரமாக. பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஆன்மா சாந்தியடையட்டும். பிரார்த்திப்போம்.

ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

====================================
courtesy;Dinamalar.
===================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...