Followers

Wednesday, March 11, 2020

சிமெண்ட் இல்லை, கம்பி இல்லை: மேகாலயப் பழங்குடிகள் உருவாக்கிய வேர்ப் பாலம் - பிரபலப்படுத்திய தமிழர்...........

மேகாலயாவின் வேர்ப் பாலம்.படத்தின் காப்புரிமைA.D.BALASUBRAMANIYAN
Image captionமேகாலயாவின் வேர்ப் பாலம்.
இயற்கை தந்த பசுமையான உலகத்துக்கு நடுவே மனிதன் உருவாக்கிய நாகரிக உலகம் முழுவதும் சிமெண்டால் ஆனது. பருவநிலை மாற்றமும், புவி வெப்பம் அடைதலும், உலகின் உயிர்ச் சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், அதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாக உள்ளது இந்த சிமெண்ட்.
சிமெண்ட் இல்லாமல் எந்தக் கட்டுமானமும், வளர்ச்சியும் சாத்தியமில்லை என்ற பாதையில் இன்றைய உலகம் நடைபோடுகிறது. ஆனால், பரபரப்பான இந்த நாகரிக உலகத்துடன் தொடர்பில்லாமல் ஒதுங்கி வாழும் மேகாலயாவின் பழங்குடிகள் சிமெண்ட்டும், ஜல்லியும், இரும்பும் இல்லாமல் பாலம் கட்டும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி, அதனை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தியும் வருகிறார்கள்.
உயிரோடு இருக்கும் மரத்தின் வேர்களைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய இந்த 'வாழும் பாலங்கள்', நூற்றாண்டுகள் நிலைத்து நின்று அதன் வீரியத்தையும், மாற்று வழியையும் காட்டுகின்றன. பல நூற்றாண்டுகளாக மலையின் அமைதியில் புதைந்து கிடந்த இந்த ரகசியத்தை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து பிரபலப்படுத்தியுள்ளார் தமிழர் ஒருவர்.
அப்படி ஒரு வேர்ப்பாலம் அமைந்த மேகாலயச் சிற்றூர் ஒன்றுக்கு செல்வோம் வாருங்கள்:
பெரணையும், துடைப்பப் புல்லும், மந்தாரை மரங்களும், இன்னும் பெயர் தெரியாத பல செடி, கொடிகளும், மரங்களும் பாசியைப் போல அப்பிக் கிடக்கும் மேகாலயாவின் கிழக்கு காசி மலை.
வங்கதேச எல்லை நோக்கிச் செல்லும் ஒரு மலைச் சாலையில் இருந்து கோபித்துக் கொண்டு பிரிகிறது ஒரு மண் பாதை. மடிப்பு மடிப்பாக பிரிந்து கீழிறங்கும் அந்த மண் பாதையில் தொடர்ந்து தொடர்ந்து சுமார் 20 கி.மீ. பயணித்தால் சுற்றிலும் மலை சூழ்ந்திருக்கும் ஒரு தரைப்பகுதியில் கால் பதிக்க முடியும்.
அங்கே மலை தனது சுருக்குப் பையில் பொதித்து வைத்திருக்கும் சிறுவாடாக கிடக்கிறது ஓடைக் கரையோர மலைக் கிராமம் ரிவாய்.
வைரமுத்து எழுதிய 'சிகரங்களை நோக்கி' கவிதை நாவலை நீங்கள் படித்திருந்தால் மலையூத்து கிராமத்தை நேரில் பார்த்துவிட்டதாய் புளகாங்கிதம் அடைவீர்கள்.
மேகாலயாவின் வேர்ப் பாலம்.படத்தின் காப்புரிமைA.D.BALASUBRAMANIYAN
Image captionமேகாலயாவில் இரண்டு ஊர்களை இணைப்பதற்காக ஓடையின் குறுக்கே பழங்குடிகள் அமைத்த வேர்ப் பாலம்.
உடலையும், உள்ளத்தையும் சிலிர்ப்பூட்டும் சில்லென்ற இயற்கை மட்டுமே அந்த ஊரின் அடையாளம் அல்ல. இயற்கையைக் காயப்படுத்தாத ஓர் அழகிய, பாரம்பரிய தொழில் நுட்பம்தான் உண்மையில் அந்த ஊரின் அடையாளமாகியுள்ளது.
ரிவாய் கிராமத்தையும் அருகில் உள்ள நொவீட் கிராமத்தையும் பிளந்துகொண்டு ஓடும் ஓர் ஓடையைக் கடக்க சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரின் பழங்குடி முன்னோர்கள் அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
மேகாலயாவின் வேர்ப் பாலம்.படத்தின் காப்புரிமைA.D.BALASUBRAMANIYAN
ஓடைக்கரையோரம் 1840ல் நடப்பட்ட ஒரு ரப்பர் மரத்தின் வேரை கொஞ்சம் கொஞ்சமாக பின்னி, ஓடையைக் கடக்கும் ஒரு பாலத்தையே உருவாக்கிவிட்டார்கள் அந்த பழங்குடி முன்னோர்கள். காலம் போகப் போக அந்த வேர்கள் தடித்து, திரண்டு அந்தப் பாலம் ஒரு வலிமையான, மனிதர்கள் நடந்து செல்லக்கூடய ஒரு பாலமாக உருவெடுத்துவிட்டது.
இந்த ஊரில் மட்டுமல்ல, மேகாலயாவின் வேறு சில ஊர்களிலும் காணப்படும், இத்தகைய வேர்ப்பாலங்கள் ஒரு அமைதியான தொழில்நுட்பமாக மலையின் ஏகாந்தத்தில் பல காலம் உறங்கிக் கிடந்தன. ஆனால், சுமார் 10 ஆண்டுகளாக இந்த வேர்ப் பாலங்கள் மேகாலயாவின் சுற்றுலா அடையாளமாகவே உருவாகிவிட்டன.
பாலம் அமைத்த பழங்குடிகள் பெயர்கள் - ஒரு கல்வெட்டு.படத்தின் காப்புரிமைA.D.BALASUBRAMANIYAN
நொவீட் - ரிவாய் இடையில் அமைந்துள்ள இந்த பாலத்தை கட்டிய பழங்குடி மூதாதையரின் பெயர்களை தற்போது இந்த ஊர்க்காரர்கள் கல்வெட்டாகப் பொறித்து, தாய்லாந்து இளவரசி மஹாசக்ரி சிறிந்தோர்ன் கரங்களால் 2016ம் ஆண்டு திறந்து வைத்துள்ளனர்.

நில வாழ்வின் பரபரப்புகள் தீண்டாத ஏகாந்த வெளியில் அமைந்துள்ள இந்த ஊர்களுக்கு தினமும் தற்போது நூற்றுக் கணக்கான சுற்றுலா கார்கள் வந்து செல்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரியப் பொருள்களை விற்கும் கடைகள் முளைத்துவிட்டன.

உலகத்தின் கண்களுக்கு கொண்டு சென்ற தமிழர்

ஆனால், இயற்கையையும் - மனித படைப்பாற்றலையும் பின்னி செய்யப்பட்ட இந்த அதிசய வேர்ப்பாலங்களை, மேகாலய மலைகளின் சுற்றுலா அடையாளமாக மாற்றியதன் பின்னணியில் இருப்பவர் ஒரு தமிழர் என்பது, இந்த வேர்ப்பாலங்களைப் போலவே ஓர் ஆச்சரியம்.
டென்னிஸ் பி.ராயன், அவர் மனைவி.படத்தின் காப்புரிமைSHEIKH A.RAHMAN
Image captionடென்னிஸ் பி.ராயன் மற்றும் அவரது மனைவி கார்மெலா ஷதி.
டென்னிஸ் பி.ராயன். மதுரைக்காரர். வங்கி அதிகாரியாக பணியாற்றியவர், மேகாலயாவின் காசி பழங்குடிப் பெண் கார்மெலா ஷதி என்பவரை திருமணம் செய்துகொண்டவர்.
ஒரு கட்டத்தில் தனது வங்கிப் பணியை விட்டு விலகி, சிரபுஞ்சி விடுமுறை சுற்றுலா விடுதியை கட்டினார். அந்த விடுதிக் கட்டுமானத்தின்போது மலைநடைப் பாதைகளை சுற்றுலாப் பயணிகளுக்காக கண்டுபிடிப்பதற்காக அவ்வப்போது இவர் பயணிப்பது வழக்கம். 2000ம் ஆண்டில் அப்படி ஒரு காட்டுப் பயணத்தின்போது இந்த வேர்ப்பாலங்களை கண்டுபிடித்தார் ராயன். இப்போது மேகாலயச் சுற்றுலாவின் மந்திரச் சொல்லாக மாறிவிட்ட 'லிவிங் ரூட் பிரிட்ஜ்' என்ற ஆங்கிலச் சொல்லை, இந்த உயிர்ப் பாலங்களுக்கு வழங்கியதும் தாம்தான் என்கிறார் அவர். "இது போல மேகாலயாவில் 80 உயிர் வேர்ப் பாலங்கள் உள்ளன" என்கிறார் ராயன்.
தமது ஓய்வு விடுதி கட்டி முடிக்கப்பட்ட பிறகு, தாம் முதல் முதலாகப் பார்த்த வேர்ப்பாலத்தின் புகைப் படங்களை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கான ஆல்பங்களில் வைத்தார் இவர். "இது டார்ஜான் நிலம், வேர்களாலும், கொடிகளாலும் கட்டப்பட்ட பாலம்" என்ற அழகிய அடிக்குறிப்புகளும் தரப்பட்டன.
இந்தப் பாலங்களைப் பார்க்கவேண்டுமானால் அதற்கென பல மணி நேரம் பயணிக்கவேண்டும். எனவே, ஆல்பத்தில் இந்தப் படங்களைப் பார்த்து வியந்த சுற்றுலாப் பயணிகள், இதற்கென பல மணி நேரங்களை செலவிடும் அளவுக்கு இந்தப் படங்களால் கவரப்படவில்லை. நீண்ட முயற்சிகளுக்குப் பிறகே, இந்தப் பாலங்கள், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் தொடங்கின என்கிறார் அவர்.
உயிர் வேர்ப் பாலத்தில் நடந்து வரும் ஒரு பெண் சுற்றுலாப் பயணி.படத்தின் காப்புரிமைA.D.BALASUBRAMANIYAN
Image captionஉயிர் வேர்ப் பாலத்தில் நடந்து வரும் ஒரு பெண் சுற்றுலாப் பயணி.
நோங்கிரியாட் என்ற இடத்தில் இரண்டடுக்கு (டபுள் டெக்கர்) வேர்ப்பாலம் ஒன்றும் அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
ரப்பர் மரங்களுக்கு வருகிற, இரண்டாம் நிலை வேர்கள், அதாவது தண்டுப்பகுதியில் முளைக்கிற வேர்களே இத்தகைய பாலங்களை அமைக்க உதவியாக இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். 20-25 ஆண்டுகளுக்கு அந்த வேர்களைப் பின்னுவதன் மூலமாகவே ஒரு பாலத்தை உருவாக்க முடியும் என்கிறார் அவர்.
courtesy;BBCTAMIL. tq
============================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...