சினிமா: சகலகலாவல்லவனைத் தந்த படம் எது தெரியுமா?
![Image result for oru thalai ragam](https://rukminim1.flixcart.com/image/704/704/av-media/movies/7/a/h/oru-thalai-ragam-original-imadcyk2ttysgqpn.jpeg?q=70)
*ஒரு தலை ராகம்* 1980 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வெளியாகி ஒவ்வொரு உள்ளத்தையும் உலுக்கிய மாபெரும் காவியம் ஒரு தலை ராகம் .
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் … பின்னர் அவற்றோடு நடிப்பு, ஒளிப்பதிவு தயாரிப்பு என்று பல்வேறு துறைகளில் ஈடுபட்டு… வெகு ஜன மக்களின் பேராதரவையும் பெற்ற டி.ராஜேந்தர் என்ற சகலகலாவல்லவனை தந்த படம் அது .
நாயகன் ராஜாவாக சங்கரும், நாயகி சுபத்ராவாக ரூபாவும் "ஒரு தலை ராகம்' படத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார்கள் என்றால் அது மிகையாகாது. மற்றும் உடன் பயின்ற நண்பர்களாக உஷா, தியாகு, சந்திரசேகர்,ரவீந்தர், தும்பு கைலாஷ் போன்ற புதுமுகங்கள் அனைவரும் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திற்கு அருமையாக பொருந்தியதால் படம் மிக யதார்த்தமாக அமைந்தது.
படத்தின் கதை வசனம் பாடல்களை எழுதிய டி.ராஜேந்தரே பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தார். "கடவுள் வாழும் கோவிலிலே', "வாசமில்லா மலரிது', "நான் ஒரு ராசியில்லா ராஜா', "இது குழந்தை பாடும் தாலாட்டு', "என் கதை முடியும் நேரமிது', "கூடையிலே கருவாடு' போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் அந்தக் கால இளைஞர்களை பல மாதங்களுக்கு முணுமுணுக்க வைத்த பாடல்களாகும்.
படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஆண் குரல்தான். பெண் குரல் பாடல் ஒன்றுகூட படத்தில் கிடையாது. காதல் என்ற பெயரில் நாயகனும் நாயகியும் பின்னிப் பிணைவதுபோன்ற காட்சிகளைக் கொண்ட படங்களுக்கு மத்தியில் நாயகனின் சுண்டு விரல்கூட நாயகியைத் தீண்டாத வகையில் காட்சிகள் அமைக்கப்பட்ட "ஒரு தலை ராகம்' படத்தை ரசிகர்கள் உச்சியில் வைத்துதான் கொண்டாடினார்கள்.
அந்தப் படத்தில் நடித்த ஷங்கர் ஒருதலை ராகம் ஷங்கர் என்ற பெயரிலேயே இன்றும் அறியப்படுகிறார் .
"ஒரு தலை ராகம்' முதலில் ரிலீசானபோது தியேட்டர்கள் காற்று வாங்கியது. முதல் ஒரிரு நாட்களில் மிகச் சிலரே வந்து படம் பார்த்தார்கள். படம் பார்த்தவர்களின் வாய்வழி விமர்சனத்தால் கூட்டம் வர ஆரம்பித்தது. இரண்டாவது வாரத்தில் திரையரங்கை விட்டே தூக்குவதாக இருந்த படத்துக்கு மூன்றாவது வாரத்திலிருந்து டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்பட்டது. கல்லூரி மாணவ மாணவியர் திருவிழாபோல் கூட்டம் கூட்டமாக "ஒரு தலை ராகம்' ஓடும் திரையரங்குகளுக்கு வர ஆரம்பித்ததன் விளைவு, முதல் வாரம் நொண்டியடித்த படம் ஏராளமான திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து ஓடியதுடன் சில அரங்குகளில் வெள்ளி விழாவும் கொண்டாடியது. ஒரு வருடம் ஓடிய மிகச் சில தமிழ்ப்படங்களின் பட்டியலில் முற்றிலும் புதியவர்கள் பங்கு கொண்ட "ஒரு தலை ராகம்' படமும் இடம் பிடித்தது.
-------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
courtesy வாத்தியார் ayya.
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
==================================
No comments:
Post a Comment