Followers

Friday, January 31, 2020




Brahma is the only 'Reality' and no one in this world, be he a son, father or wife, is really ours.

விபூதியை பாபா எந்த உள்நோக்கத்தோடு அளித்தார்? இவ்வுலகில் கண்ணுக்குத் தெரியும் சிருஷ்டியெல்லாம் சாம்பல்தான் என்பதை அனைவரும் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே அவருடைய உள்ளக்கிடக்கை. மனித உடலும் பஞ்சபூதங்களாலான ஒரு மரக்கட்டையே. சுகதுக்கங்களை அனுபவிப்பதற்காகவே வாழ்கிறது. அனுபவம் முடிந்தவுடன் பொத்தென்று கீழே வீழ்கிறது; சாம்பலாக்கப்படுகிறது. இதற்கு விதிவிலக்கே கிடையாது.

நீரும் நானும் இந்த நிலையில்தான் இருக்கிறோம். இதை உமக்கு ஞாபகப்படுத்தவும் இது விஷயமாக நீர் இரவுபகலாக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காகவுமே நான் இந்த விபூதியை அளிக்கிறேன். உதீயைப் பூசிக்கொள்வதால் ஆதிவியாதி (பிறவிப்பிணி) தொலைந்துபோகிறது. உதீயின் மிக உயர்ந்த தத்துவார்த்தம் என்னவென்றால், 'விவேகத்தால் விளைந்த பற்றற்ற நிலை.ஃ

அகில உலகமும் மாயையால் நிரம்பியது. பிரம்மமே சத்யம்; பிரம்மாண்டம் நிலையற்றது. உதீயே இவ்வுண்மைக்கு அற்புதமான அடையாளம். இது நிச்சயம் என்றறிக. மனைவி, மக்கள், மாமன், மருமகன் -- இவர்கள் யாரும் யாருக்கும் சொந்தமில்லை. அம்மணமாக இவ்வுலகுக்கு வருகிறோம்; அம்மணமாகவே இவ்வுலகி¬ருந்து வெளியேறுகிறோம். உதீயே இதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

நம்மால் முடிந்த தக்ஷிணை கொடுத்துப் பிரவிருத்தி மார்க்கத்தி­ருந்து (உலகியல் உழற்சியி­ருந்து) விடுபட முடிந்தால், கொஞ்சங்கொஞ்சமாக நிவிர்த்தி மார்க்கத்தின் (விடுதலையடையும் பாதையின்) குறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

பற்றற்ற நிலை கைக்குக் கிடைத்தாலும் விவேகம் இல்லாதுபோனால் அது பயனின்றிப் போகும். ஆகவே உதீயை மரியாதையுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.

விவேகத்தையும் பற்றற்ற மனப்பான்மையையும் இணைப்பது விபூதியையும் தக்ஷிணையையும் இணைப்பது போலாகும். இவ்விணைப்பு ஏற்படவில்லையெனில், பிறவியென்னும் நதியின் அக்கரை சேர்வது இயலாத காரியம்.

பெரியவர்களும் சிறியவர்களும் பாபாவை தரிசனம் செய்ய வந்தனர். பாபாவின் பாதங்களில் விநயத்துடன் வணங்கிவிட்டு வீடு திரும்புமுன், பாபா அவர்களுக்கு விபூதி அளித்தார்.

மசூதியில் தினமும் இரவுபகலாகக் குன்றாது துனீ எரிந்துகொண் டிருந்தது. பாபா பிடிப்பிடியாக ரட்சையை எடுத்து பக்தர்கள் விடைபெறும்போது அளித்தார்.

பக்தர்களின் தலைமேல் கைவைத்து, அதே சமயம் நெற்றியில் கட்டைவிரலால் ரட்சை இட்டு மங்கள வாழ்த்தும் கூறி, துனீயின் சாம்பல் பிரசாதமாக அளிக்கப்பட்டது.

சாம்பல், ரட்சை, விபூதி, உதீ இவை நான்கும் வெவ்வேறு சொற்களாக இருப்பினும் வஸ்து (பொருள்) ஒன்றே. பாபா குறைவேதுமின்றி அபரிமிதமாக தினமும் அளித்த பிரசாதம் இதுவே.

சம்சார வாழ்க்கையும் உதீயைப் போன்றதே. நாமும் விபூதியாகிவிடும் நாள் வரத்தான் செய்யும். இதுதான் உதீயின் மஹிமை. இதை ஒருநாளும் மறக்க வேண்டா.

தாமரையிலைத் தண்ணீரைப்போல், இந்த தேகம் ஒருநாள் கீழே விழும். ஆகவே, தேகாபிமானத்தை விட்டுத்தொலையுங்கள். இதைத்தான் பாபா உதீ அளிப்பதன் மூலம் தெரிவித்தார்.

இவ்வுலகமனைத்தும் சாம்பலால் போடப்பட்ட ஒரு கோலமே என்பதை உறுதியாக அறியவும். உலகமே ஒரு மாயை என்பதுபற்றிச் சிந்தித்து, உதீயின் ஸத்தியத்துவத்தை மட்டும் நம்புக.

உதீ, மண்ணே என்று தெரிந்துகொள்ளவும். உருவமும் பெயரும் உள்ள வஸ்து பொருள் எதுவாக இருந்தாலும் சரி, கடைசியில் மண்ணாகத்தான் ஆகவேண்டும். மாறுபாடில்லாத, என்றும் அழியாத மண்ணைப் பார்த்து, இவ்வுலகில் மற்ற பொருள்கள் அடையும் வளர்ச்சியும் மாறுபாடுகளும் தேய்மானமும் வெறும் பெயரளவிற்கே என்பதை அறியவும்.
==========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...