Followers

Thursday, January 16, 2020

150 ஆண்டுகளை அடைந்துள்ள பொன்னாலை தாம்போதி காரைநகர் மக்களின் வளமான வாழ்வுக்கு வழி தந்த வழி – (எஸ்.கே.சதாசிவம்)

150 ஆண்டுகளை அடைந்துள்ள பொன்னாலை தாம்போதி காரைநகர் மக்களின் வளமான வாழ்வுக்கு வழி தந்த வழி
எஸ்.கே.சதாசிவம்
காரைநகர் பொன்னாலை தாம்போதி அமைக்கப்பட்டதன் பயனாக காரைநகர் மக்கள் பொருளாதார, சமூக வலுவில் வலுவுள்ளவர்களாக மிளிர்வதற்கு வழி பிறந்தது. காரைநகர் துறைமுகத்தின் செயற்பாடுகள் தாம்போதி அமைக்கப்பட்டதன் பலனாக அதிகரித்துக் காணப்பட்டது. காரைநகர் மக்கள் வன்னிப் பிரதேசத்திற்கும்இ தென் இலங்கைக்கும், பூகோளத்தின் பல் தேசங்களையும் நோக்கி பசுமை தேடி நகரலாயினர். காரைநகரில் செயற்பட்ட அமெரிக்கன் மிசன் பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்கள் உயர் கல்விக்காக யாழ்ப்பாணக் கல்லூரியிலும், யாழ் குடாநாட்டின் ஏனைய பிரபல பாடசாலைகளிலும் இணைந்து கொண்டனர். ஆங்கிலக் கல்வியை கற்றோர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு அரசு அலுவலர்களாக பணியாற்ற புறப்பட்டுச் சென்றனர். வன்னிப் பிரதேசத்திற்கு விவசாயஇவர்த்தக முயற்சிகளுக்காகவும், தென்இலங்கைக்கு வர்த்தக முயற்சிகளுக்காகவும்,அரசபணிக்காகவும் பயணமாகினர்.

“Sir.W.துவைனம் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக பணியாற்றிய (1867-1884) காலப்பகுதியில் தீவையும் குடாநாட்டையும் இணைக்கும் 4 K.M நீளமான தாம்போதி கட்டப்பட்டது. காரைநகர் இந்துக்கல்லூரியின் சயம்பு மண்டபத்தில் செதுக்கப்பட்டு பதிக்கப்பட்டு இருந்த நினைவுக் கல்லில்(Plaque) தாம்போதியின் ஆண்டு 1869 என குறிக்கப்பட்டுள்ளது.”
A 4 K M long causeway linking the island to the mainland was built during the period when Sir.W.Twynham was the Government Agent of Jaffna (1867-1884)An engraved stone plaque in the Sayambu hall ( Karainagar Hindu College ) gives the date of the bridge as 1869.
The Changing Character of The Identity issue for Tamils Page 12 Mr.V.Siva Subramanaimam
“காரைநகர் ஏழு கிலோ மீற்றர் நீளமும் நான்கு கிலோ மீற்றர் அகலமும் உடைய சிறிய தீவாக இருந்ததால் சனநெருக்கமுடையதுமானதால் 1869ம் ஆண்டு அப்போது இருந்த துவைந்துரையால் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் 4 மைல் தூரமுள்ள (Cause way)ரோட்டுப்பாலமும் அமைக்கப்பட்டு பொன்னாலைக் கடலூடாக யாழ்ப்பாணத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு சான்றாக அன்று ஸ்தாபிக்கப்பட்ட சயம்பு பாடசாலையில் உள்ள சயம்பு மண்டபத்தில் Sir W.Twynham என நினைவுப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.”
Your Country and your college பக்கம் 03 திரு ஆசைப்பிள்ளை அரசரத்தினம்
1977ம் ஆண்டு காலப்பகுதியில் காரைநகர் இந்துக்கல்லூரியில் நான் பணியாற்றிய போது மேலே குறிப்பிடப்பட்ட கல்லினைக் கண்டுள்ளேன். இக்காலப்பகுதியில் இக்கட்டிட தொகுதியில் நடைபெற்ற திருத்த வேலைகள் காரணமாக இக் கல் அகற்றப்பட்டு பேணப்பட்ட பொழுதிலும்; தொடர்ந்து வந்த ஆண்டுகளில் புதிய கட்டிட தொகுதிகள் அமைக்கப்பட்டமையால் தற்போது இக்கல்லினை காணமுடியவில்லை.
“இலங்கைத்தீவிற்கு கொழும்பு மைய புகையிரதப்பாதை தேயிலைத் தோட்டங்களுடன் வந்த பொழுது, இப்பாதை யாழ்ப்பாணம் வருவதை துவைனம் விரும்பவில்லை. யாழ்ப்பாணத் துறைமுகங்களை மையமாகக்கொண்ட உள்ளுர் வணிகம் கொழும்புத்துறைமுக வளர்ச்சி புகையிரதப்பாதையால் பாதிக்கப்படும் என்று அவர் கருதினார். மாற்றாக, உள்ளுர் துறைமுகங்கள் குறிப்பாக ஊராத்துறை பலப்பட்டு, இந்தியாவுடனான வணிகம் யாழ்ப்பாணத்திற்கூடாக தென்னிலங்கை செல்லவேண்டும் என்று அவர் சிந்தித்தார். அதன் விளைவே 1869 இல் தொடங்கி 1879 இல் முடிக்கப்பட்ட புன்னாலைப்பாலம்” “புன்னாலை என்பதே பழைய பெயர் பொன்னாலை அல்ல” 2500 ஆண்டுகால வரலாற்றில் காரைநகர் சயம்பு– 125ஆவது ஆண்டு மலர் 2013 பக்கம்.78 பேராசிரியர் .பொ.ரகுபதி.
“1878 இல் யாழ்ப்பாணத்தில் இஞ்சினியர் வேலையில் அமர்ந்திருந்த முதலியார் F.M ஆம்ஸ்றோங் Mudaliyar F.M.Armstrong அவர்கள் பொன்னாலைக் கடலுக்கூடாகக் கற்றெருவும் பாலங்களும் தொப்பிக் கட்டும் அமைத்துக் காரைதீவினைக் குடா நாட்டுடன் இணைத்தனர். இவர் செய்து முடித்த பொதுக் கட்டு வேலைகளில் இதனையே பெரும் பணியாக மக்கள் கருதினர்.” காரைநகர் மான்மியம் பக்கம் – 56 -வித்துவான் F.X.C நடராஜா
“1878 ஆம் ஆண்டு காரைநகர் – பொன்னாலை கற்பாதை அமைக்கப்பட்டதனால் அத்தீவில் வாழ்ந்து வந்த மக்கள் குடாநாட்டுடன் இலகுவாகத் தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.” தீவகம் தொன்மையும் மேன்மையும் பக்கம் – 244 பேராசிரியர் கா.குகபாலன்
“குடாநாட்டில் அமைந்திருந்த பொன்னாலைக்கும் தீவுக்கும் இடையிலான தாம்போதி 1869ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டமை பழைய காலத்தில் காரைதீவு என அழைக்கப்பட்ட இடம் காரைநகர் என அழைக்கப்படுவதற்கு பெரும்பாலும் காரணமாக அமைந்திருக்கலாம்.அன்றைய ஆங்கிலேய அரசாங்க அதிபரான Sir.W.துவைனம் அவர்களின் பெரும் முயற்சியால் இத்தாம்போதி அமைக்கப்பட்டது.” செப்டம்பர் 2007 இல் வெளியிடப்பட்ட தமிழ் இணையம் பிரசுரம்.
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் மாகாண ரீதியில் நடைபெற்று வந்த நிருவாக நடவடிக்கைகள் ஆண்டு தோறும் அறிக்கைகளாக தொகுக்கப்பட்டு (Administration Report)யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக ஆவணக் காப்பகத்தில் (Archives) பேணப்பட்டு வருகின்றது. 1869ம் ஆண்டு தொடக்கம் 1884ஆம் ஆண்டு வரையிலான நிருவாக அறிக்கைகளில் பொன்னாலை தாம்போதி தொடர்பாக பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண அரசாங்க அதிபர் Sir.W.துவைனம் அவர்கள் தனது 1871ஆம் ஆண்டு அறிக்கையில் பொன்னாலை தாம்போதி தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“பொன்னாலை தாம்போதி கட்டப்படவேண்டியதன் அவசியத்தை முதன் முதலில் அரசுக்கு திரு.டைக் (Mr.Dyke)எடுத்துரைத்ததாகவும் தாம்போதியின் ஆரம்பகர்த்தா திரு.டைக்(Mr.Dyke) எனவும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு.ரசல் (Mr.Russel) தனது 1867ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டதாக குறிப்பிடுகின்றார்.
1867ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேன்மை தங்கிய தேசாதிபதி இங்கு வருகை தந்த போது பொன்னாலை தாம்போதி அமைப்பதால் ஏற்படும் உள்ளுர் நலன்கள் பற்றி அரசாங்க அதிபரால் எடுத்துரைக்கப்பட்டு மேன்மை தங்கிய தேசாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பொது வேலைப் பகுதி பணிப்பாளர் வருகை தந்து தாம்போதி அமைக்கப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு மாகாண உதவியாளரிடம் மதிப்பீடு(Estimate) தயாரிக்குமாறு பணித்தார்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1868ம் ஆண்டு அறிக்கையில் அரசாங்க அதிபர் “திரு.H.S.O.ரசல் 1867ம் ஆண்டு மாகாணத்திற்கு அவசியமான வேலைத் திட்டங்களை முன் வைத்ததாகவும் அவற்றை நடைமுறை படுத்துவதில் கால தாமதங்கள் அல்லது காலத்தை பின் தள்ளுதல் நடைபெறுவதனால் உள்ளுர் மக்கள் துன்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அவற்றில் பொன்னாலை தாம்போதி வேலை திட்டமும் ஒன்றாகும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
1878ஆம் ஆண்டு அறிக்கையில் “மேன்மை தங்கிய தேசாதிபதி Hon.A.Birch,Colonial Secretary Dr.Kynsey and Captain Hayne A.D.C ஆகியோருடன் ஐனவரி 11ஆம் திகதி வடமாகாணத்துக்கு வருகை தந்த போது ஐனவரி 16ஆம் திகதி பொன்னாலை தாம்போதியையும் பார்வையிட்டு சென்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.
1883ஆம் ஆண்டு அறிக்கையில் திரு. துவைனம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “பொன்னாலை தாம்போதியில் காணப்பட்ட கற்கள், தார் (Metal) என்பன கடலினால் அரிக்கப்பட்டு ஒரு பக்கமாக ஒதுக்கப்பட்டமையால் வீதி முழுக்க உடைந்து காணப்படுகின்றது.எனது முன்னைய குறிப்புக்களில் இத்தாம்போதியில் நீரோட்டத்திற்க்;கு ஏற்ற வசதிகள் செய்யப்படல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளேன்.ஆரம்பத்தில் தாம்போதி முழுவதும் உறுதியான பொருட்களால்(Solid thorought) அமைக்கப்பட்டது, எனவும், 1880ஆம் ஆண்டு மேன்மை தங்கிய தேசாதிபதிக்கு கடற்தொழிலில் ஈடுபட்டுள்ள காரைநகர் மீனவர்களால் தங்களின் கடற்றொழில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுஇ என சுட்டிக் காட்டப்பட்டதைத் அடுத்து ஒரு சிறிய பாலம் அமைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் பெருமளவு உண்மை இருப்பதாக தான் நம்பவேண்டி இருப்பதால் 20அடி அகலமுள்ள ஆகக் குறைந்தது மூன்று Buckeled Plate Bridges கட்டப்பட்டு தாம்போதி அமைத்தல் மக்களின் நலன்களுக்கும், தாம்போதியின் பாதுகாப்புக்கும் அவசியம் என்பதை தான் முன்வைப்பதாக குறிப்பிட்டுள்ளார். சுழல் காற்று காலங்களில் பொன்னாலை தாம்போதி கடலினால் அள்ளிச் செல்வதை தடுப்பதற்கு வடக்குப் பக்கமாக பாதுகாப்பு சுவர் (Parapet Wall) அமைக்கப்படல் வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
1884ஆம் ஆண்டு அறிக்கையில் திரு.துவைனம் அவர்கள் “அக்டோபர் 16ஆம் திகதி வீசிய சூறாவளிக் காற்றினால் பொன்னாலை தாம்போதி பெருமளவில் அள்ளிச் செல்லப்பட்டதால் தற்போது போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் உள்ளது. மீள அமைப்பதற்கான உத்தேச செலவீன மதிப்பீடு 100,000/= ஆகும். நீரோட்ட வசதிகள் அற்ற உறுதியான தாம்போதி (Solid Causeway Way) அமைக்கப்பட்டது தவறானது எனும் கருத்தினை எனது முன்னைய அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளேன். பலமான அலைகளை எதிர்கொள்ளும் பொன்னாலை தாம்போதி அதிகளவான நீரோட்ட வசதிகள் கொண்ட பாலங்களை உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும். அக்டோபர், டிசம்பர் மாத சூறாவளியின் தாக்கம் இக்கருத்திற்கு வலுச் சேர்ப்பதாகவும், உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது. பொன்னாலை தாம்போதி நீண்ட பாலங்களை (Long Bridge) உடையதாக அமையாவிடின் மீளக்கட்டுவதனை சிபார்சு செய்ய முடியாது” எனக்குறிப்பிட்டுள்ளார்.
“1884ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வீசிய சுறாவளிக் காற்றினால் பெரும் சேதம் ஏற்பட்டது.காற்றினாலும் மழையினாலும் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.வாழைத்தோட்டங்கள் அழிந்து போயின.வயல்கள், மக்கள் வாழும் குடியிருப்புக்கள் வெள்ளத்தால் நிரம்பியது. தபால் தந்தி சேவை பாதிக்கப்பட்டது. இதே ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி நாடு பூராகவும் வீசிய சுறாவளிக் காற்றினால் யாழ்ப்பாணத்தில் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டது.”பக்கம் 45
“1869ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் திகதி Sir W.C.துவைனம் வடமாகாண அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டடார்.” பக்கம் 33
“1878ம் ஆண்டு மே மாதம் ஆம்ஸ்றோங் முதலியார் யாழ்ப்பாண மாவட்ட பொறியிலாளராகவும் மேற்பார்வை அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டார்.” பக்கம் – 40
ஆம்ஸ்றோங் தன் பணிக்காலத்தில் ஹஹமன்ஹீல் கோட்டையை திருத்தி அமைத்ததுடன் குடாநாட்டில் பல்வேறு கட்டுமானங்களையும் கட்டினார். ஆம்ஸ்றோங் ஆற்றிய பணிகளில் நீடித்து நிலைத்து நிற்கக் கூடியதும், பயனுறுதியுமான பணி பொன்னாலை தாம்போதியை அமைத்து வீதியால் காரைதீவையும் குடாநாட்டையும் இணைத்தமை அற்புதமானது. (Splendid) பக்கம் -230.
பக்கம் 45 பக்கம் 33 பக்கம் 40 பக்கம் 230 John H.Martin யாழ்பாணம் பற்றிய குறிப்புக்களில் குறிப்பிட்டுள்ளார்.
மேலே குறிப்பிட்ட நூல்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், பிரித்தானியர் கால நிருவாக அறிக்கைள் என்பனவற்றை அவதானிக்கும் பொழுது 1869இல் உறுதியான பொருட்களால் தாம்போதி முழுவதும் (Solid Causeway)அமைக்கப்பட்டு, 1884ஆம் ஆண்டு சுறாவளிக்கு பின்னர் தற்போது புனரமைக்க முன்னர் அமைந்திருந்த தாம்போதியும் பாலங்களும் அமைக்கப்பட்டு இருக்கலாம் என கருத இடமுண்டு மேலும் இப்பணியில் திரு.துவைனம், திரு.ஆம்ஸ்றோங் ஆகியோரின் பங்களிப்பு இருந்தமையையும் இக்காலப்பகுதியில் இவ்விருவரும் யாழ்ப்பாணத்தில் பணியாற்றியமையும் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
2008-2010 காலப்பகுதியில் பொன்னாலை தாம்போதி புனரமைக்கப்பட்டது. இதற்கு முற்பட்ட காலப்பகுதியில் அமைந்திருந்த தாம்போதி பாலங்கள் பற்றிய சில தகவல்கள்.பொன்னாலை தாம்போதி ஒருபாதையாக (Single Lane) அமைந்திருந்தது. ஒன்பது பாலங்களை கொண்டிருந்தது. முதலாம், இரண்டாம் பாலங்கள் அண்மிய தூரத்தில் அமைந்திருந்தது. “பாலங்கள் வளைவு (Arch) வடிவில் கட்டப்பட்டு இருந்தது. முருகைகற்கள் அளவுப் பிரமாணத்திற்கு (Blocks) சரிவக வடிவில் (Trapezium) வெட்டப்பட்டு ஒன்றுடன் ஒன்று செருகப்பட்டு முகட்டில் வளைவு வடிவில் வைக்கப்பட்டு முடிவில் இறுதிக்கல்லினால் (Key Stone) பொருத்தப்பட்டது”.
திரு.மு. தில்லைநாதன் பொறியிலாளர் ஆலோசகர் 2008-2010 கட்டுமானம்.
பாலத்திற்கு வெளியே தாம்போதியில் இருவாகனங்கள் பயணிக்கக் கூடியதாக இருந்த போதிலும் பாலத்திற்கூடாக ஒருவாகனம் மாத்திரம் செல்லக் கூடியதாக இருந்தது. ஒரு வாகனம் பாலத்தைக் கடக்கும் போது எதிர்த் திசையில் இருந்து வரும் வாகனம் பாலத்திற்கு வெளியே தரித்து நிற்க வேண்டும். பாலப் பகுதி வளைவு வடிவில் அமைக்கப்பட்டு இருந்தமையால் தாம்போதியில் வரும் அதே வேகத்தில் வாகனத்தில் பாலத்தை கடக்க இயலாது. வாகனத்தின் வேகத்தைக் குறைத்;தே பாலத்தைக் கடக்க வேண்டும். பாலங்கள் உயரமாக கட்டப்பட்டு இருந்தமையால் அதன் கீழ்ப்பகுதி ஊடாக வள்ளங்கள், கட்டுமரங்கள் இருபக்கமும் போய் வரக்கூடிய வாய்ப்பு இருந்தது.
பாலங்களின் இருபக்கங்களிலும் பாதுகாப்பு சுவர்கள் (Safety Wall) அமைக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்புச் சுவர்களில் அமர்ந்திருந்து தூண்டிலில் மீன் பிடிப்பதற்கு சந்தர்ப்பம் இருந்தது. பாதுகாப்புச் சுவர்கள் இருந்த போதிலும் பாதுகாப்புச் சுவர்களை இடித்துத் தள்ளி கடலுக்குள் வாகனங்கள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவங்களும் உண்டு.
“பழைய பாலங்கள் மாமுருகைக் கற்களால் கட்டப்பட்டு இருந்தது எனவும், சீமெந்து கம்பிகள் பாவிக்கப்படாமல் கற்கள் ஒன்றுடன் ஒன்று செருகப்பட்டு கட்டப்பட்டு இருந்தது எனவும், மாமுருகைக் கற்கள் கீரிமலையில் பொழியப்பட்டு மாட்டு வண்டில்களில் எடுத்து வரப்பட்டதாகவும் தங்கள் மூதாதையர்கள் தாம்போதி கட்டுமானப் பணிகளில் வேலை செய்ததாகவும் தமது பாட்டனார் மூலம் அறிந்து கொண்டதாக” தாம்போதி புனரமைக்கப்பட்ட போது தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றிய திரு செல்வரத்தினம் செல்வநாயகம் தெரிவித்தார்.
பொன்னாலை தாம்போதி 2008 – 2010 காலப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 420 ரூபா மில்லியன் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது. பொன்னாலை தாம்போதி யாழ்குடா நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது இருபாதை அகலமுடைய(Double Lane) இருவழிப்பாதையாகும். கடந்த காலங்களில் ஒன்பது பாலங்களை கொண்டு இருந்த தாம்போதியில் முதலாம் இரண்டாம் பாலப்பகுதியில் மேலும் ஒரு பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் பத்து பாலங்களை உடைய தாம்போதியாக மாற்றம் பெற்றுள்ளது. தற்போதைய பாலங்கள் சதுர வடிவில் (Beam) அமைக்கப்பட்டுள்ளது. தாம்போதியின் தெற்குப் பக்கமாக தடுப்புச் சுவர்கள் (Retaining Wall) அமைக்கப்பட்டு தாம்போதி அகலமாக்கப்பட்டது. வடக்குப் பக்கமாக போர்த்தி சுவர்கள் (Jacket Wall) மூலம் புனரமைக்கப்பட்டது.
பொன்னாலையிலும் மண்ரோட்டுக்கு அண்மிய பகுதியிலும் காணப்படுகின்ற தொப்பிக் கட்டுகளுக்கு இடைப்பட்ட பகுதி தாம்போதியாக இருந்த போதிலும், தாம்போதி புனரமைக்கப்படும் பொழுது காரைநகர் இந்துக் கல்லூரி வரையிலான வீதி இருவழிப் பாதையாக புனரமைக்கப்பட்டது. புனரமைப்பு பணிகள் ஈரோவில் (Euroville) எனும் கட்டுமான நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. தாம்போதி புனரமைப்பு பணிகளின் போது வலந்தலை சந்தியில் அமைந்துள்ள தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தை தங்கள் கட்டுமானத் தேவைகளுக்கு பயன்படுத்தினர்.
1869 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் மக்கள் பரவைக் கடல் (நீர் வற்றுக் கடல்) ஊடாக நடந்து செல்வார்கள். காரைநகர் மக்கள் “வெள்ளைக் கடற்கரை” எனவும் அழைப்பர். சில காலங்களில் நீர் வெள்ளம் போல் பரந்து காணப்படும். ஆழம் குறைந்த இக்கடல் கோடை காலங்களில் வற்றி ஆங்காங்கே மணல் திடல்கள் காணப்படும்.
“தற்போதைய தாம்போதிக்கு தெற்குப் பக்கமாக 50-60 அடி தூரத்தில் நடந்து செல்லும் பாதையை அடையாளப்படுத்துவதற்காக 6 அடி உயரமான பாலைக் குற்றிகள் நடப்பட்டு இருந்ததாகவும் அவற்றை அடிபாட்டுக்கட்டை (அடிபாடு – போகும் வழியை அடையாளப்படுத்தம் கட்டை) என அழைப்பர் எனவும் அண்மைக் காலம் வரை இக் கட்டைகள் காணப்பட்டதாகவும் தற்போது இல்லாமற் போனாலும் இதனை அடையாளப்படுத்த முடியும்” என இப்பகுதிக்கு பரீட்சையமான இலகடியை சேர்ந்த சிரேஸ்ட்ட பிரசை திரு.முருகேசு விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
“தம்பாட்டிக்கும் அராலித் துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் அகலமாக காணப்படுகின்ற கடல் பகுதி வடக்கு நோக்கி வருகின்ற பொழுது புனல் வடிவத்தில் ஒடுங்கி பத்தி வடலி முனங்கு கழிக்கரை பகுதியில் 600 மீற்றர் அகலமான ஒடுங்கிய பகுதியாக காணப்படுகின்றது. அகண்ட பரப்பில் இருந்து வருகின்ற நீர் ஒடுங்கிய பாலங்களுக்கு ஊடாக செல்கின்ற பொழுது பாலங்களின் கீழ்பகுதி ஆழமாகின்றது. மேலும் பாலத்தின் கீழ் பகுதியில் சேரும் சுருதி நீரோட்டம் அதிகரித்த காலப்பகுதியில் அள்ளிச் செல்லப்படுவதால் பாலப் பகுதி ஆழமாகக் காணப்படுகின்றது எனவும் ஏனைய பகுதிகள் வைர நிலமாக (உறுதியான ) இருந்தமையால் தான் தாம்போதி அமைக்கப்பட முன்னர் மக்கள் கால் நடையாக செல்லக் கூடியதாக இருந்தது” என திரு.செல்வரத்தினம் செல்வநாயகம் தெரிவித்தார்.
பொன்னாலை தாம்போதியும் கடற்றொழிலும்
“கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் தொழில் செய்யும் இடத்தை அடையாளப்படுத்துவதற்காக ஒவ்வொரு பாலத்திற்கும் பெயர் இட்டு இருந்தார்கள். இறவி மதவு, மேடை மதவு (ஆழம் குறைந்த பாலம்) மாவடி மதவு (ஆழம் கூடிய தாழ்வான பாலம்) பொன்னாலையில் இருந்து வருகின்ற பொழுது முதலாம் பாலம் கழுவடிப்பாலம் (ஆழம் கூடிய பாலம்) என அழைக்கப்பட்டது. கடந்த காலங்களில் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தை மாதம் முதல் புரட்டாதி மாதம் வரை இலுப்பைக் கடவை , மூன்றாம் பிட்டி ஆகிய இடங்களில் கடற்தொழிலில் ஈடுபடுவர். ஐப்பசி மாதத்தில் அங்கிருந்து புறப்பட்டு பண்ணைப்பாலம் ஊடாக ஆற்றுப்பாதை வழியாக கழுவடிவப்பாலம் ஊடாக சுழிபுரம் சவுக்கடி பகுதிக்குச் செல்வர். அங்கு பிடிக்கப்பட்டு பதனிடப்பட்ட கருவாட்டையும் தங்கள் 40 அடி நீளமான வள்ளங்களில் எடுத்து வந்து யாழ்ப்பாண பகுதியில் சந்தைப்படுத்துவர்” என காரைநகர் ஆலடியை பிறப்பிடமாகவும் தற்போது பொன்னாலையில் வசிப்பவருமான திரு. அம்பலம் சின்னையா தெரிவித்தார்.
“கழுவடிப்பாலத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியால் சென்ற கள்வர்கள் மீன்களை கொள்ளையிட்டுச் சென்ற போது கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த செல்லையா சாமியார் பின்வருமாறு பாடியதாக இலகடியைச் சேர்ந்த திரு. கார்த்திகேசு நவரத்தினராசா தெரிவித்தார்.
கள்வர்கள் கொள்ளையடி
கழுவடி பாலத்திலே
காரில் வந்து கடைகெட்ட வழுசல்கள்
கூடையில் கை ஓட்டி
கரும்திரளி மூன்றை கொள்ளை கொண்டு போயினர்”
பொன்னாலை தாம்போதிப்பகுதியில் பிடிபடும் (கயல் மீன்கள், கிளாக்கன்,கரும் திரளி, மழைக்காலங்களில் பிடிபடும் ஓரா மீன்கள்) கடல் உணவுகள் சுவைமிகுந்தவை எனும் மகிமையுடையவை. தற்போது கடலின் தெற்கு பகுதியில் அதிகளவான இறால் கூடுகள் அமைக்கப்பட்டதால் கடல் தொழிலிலுக்கு சாதகமற்ற தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. சிறிய மீன்கள் அழிந்து போகும் நிலைமை காணப்படுகின்றது.
“1970ம் ஆண்டு காலப்பகுதியில் இழுவை வலை மூலம் இறால் பிடிப்பதில் காரைநகர் கடல் தொழிலாளர்களுக்கும் பொன்னாலை பகுதி கடல் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக காரைநகர் பகுதி கடற்தொழிளார்கள் காரைநகரில் இருந்து செல்லுகின்ற பொழுது நான்காம் ஐந்தாம் பாலங்களுக்கு இடையில் காணப்படும் பத்தாம் கட்டையடி வரைக்கும், பொன்னாலை பகுதி கடற் தொழிலாளர்கள் பொன்னாலையில் இருந்து பத்தாம் கட்டையடி வரைக்கும் இறால் பிடிக்க உடன்பாடு எட்டப்பட்டது.”என இலகடியை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலர் திரு.கைலாயபிள்ளை நாகராஜா தெரிவித்தார்.
காரைநகரில் இருந்து சிவகாமி அம்மன் கோவிலடி, காரைநகர் வட கிழக்கு பகுதிகளில் வசிக்கும் கடற்தொழிலாளர்களும், பொன்னாலை நிற்சாமம், சில்லாலை, பண்டதரிப்பு பகுதி கடற்தொழிலாளர்களும் வருடம் புராகவும் இரவு வேளைகளில் இறால் பிடிப்பதில் ஈடுபடுவர்.பொன்னாலை தாம்போதியில் இரவு வேளைகளில் கடற்தொழிலாளர்களின் பிரசன்னம் அதிகரித்து காணப்படும்.வீதியோரங்களில் துவிச்சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும், சிலர் நித்திரை கொள்வர்.பிடிக்கப்பட்ட இறால் வகைப்படுத்தப்படும்.இதனால் இரவு வேளைகளில் தாம்போதியில் செல்லும் வாகனங்கள் மெதுவாக ஒலி எழுப்பி ஒளி பாச்சி செல்லும்.
“இங்கு பிடிக்கப்படும் இறால்கள் பொன்னாலை சந்தியில் அமைந்திருத்த இறால் கொள்வனவு செய்யும் முகவர்களால் கொள்வனவு செய்யப்படும்.இறால்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படும்.கருவாடு ஆக்கப்படும் இறால்களும் பொதி செய்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படும்.பொன்னாலை தாம்போதியில் இறால் பிடித்தல் அன்றைய கால கட்டத்தில் வருமானம் மிக்க தொழிலாக அமைந்திருந்தது.ஏனைய கடல் உணவுகளும் பொன்னாலை தாம்போதியில் அதிகளவு பிடிக்கப் படுவதனால் பொன்னாலை தாம்போதியை நம்பி கடல் தொழில் செய்த கடற்தொழிலாளர்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடியதாக இருந்தது.”என திரு செல்வரத்தினம் செல்வநாயகம் தெரிவித்தார்.
இரவு வேளைகளில் இறால் பிடிக்கும் தொழில் நின்று போய் உள்ளது.எங்களை சுற்றி உள்ள கடல் வளம் பறிபோய் கொண்டிருக்கின்றது.உரிய நியமங்கள் கடைப்பிடிக்காமையால் கடல் வளமும், கடல் வாழ் உயிரினங்களும் அழிக்கப்படுகின்றன.தலைமுறை தலைமுறையாக போசிக்கப்பட்டு வந்த கடல் தொழில் பற்றிய அறிவு இல்லாமல் போய் விட்டது.கடல் சார்ந்த வாழ்வு சுருங்கி விட்டது.இதனால் இன்று பொன்னாலை பகுதியில் கடற்தொழிலில் ஈடுபடுவது வருமானம் மிக்க தொழிலாக அமையவில்லை.
பழைய பாலத்தில் தடுப்புச் சுவர்களில் இருந்து தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் தொழில் வெகுவாக அருகிப் போய்விட்டது. பாலத்தில் பிடிக்கப்படும் கிளாக்கன் மீன்கள் பத்திய கறி சமைப்பதற்கு சிறந்தது. வலந்தலை சந்திக்கு அண்மிய பகுதியில் வாழ்ந்த மக்களில் பெண்கள் பலர் ஒன்று சேர்ந்து கீளிவலையின் துணையுடன் சிறிய மீன்கள் இறால், நண்டு பிடித்தல் நின்று போயிற்று. இவர்களால் பிடிக்கப்படும் கரும்திரளி சுவையானது. சமைக்கும் போது வாசனை தரும். இவர்கள் கடற்தொழிலை முடித்து திரும்பி வருவதை எதிர்பார்த்து பெண்கள் காத்திருப்பர்.
இது போன்று பொன்னாலைப்பகுதி பெண்கள் கயிறு இழுத்தல் மூலம் கடற்தொழிலில் ஈடுபடுவது நின்று போயிற்று கடந்த காலங்களில் மாரி காலங்களில் கடல் பெருக்கு எடுக்கும் கச்சான் காற்று காலத்தில் ஊரிப்பகுதிப் பாறைகளில் காணப்படுகின்ற ஓரா மீன்கள் தாம்போதி பகுதியில் வந்து அடையும் காலங்களில் நீருடன் தாம்போதிக்கு மேலாக மீன்கள் அடித்துச் செல்லப்படும் வேளைகளில் தடியால் மீன்களை அடித்துப் பிடிக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தது.
தாம்போதியும் நிலமேடுகளும்
பொன்னாலைக்கும் காரைநகருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் நிலமேடுகள் காணப்படுகின்றன. பொன்னாலையில் இருந்து வரும்போது தாம்போதிக்கு வடக்குப் பக்கமாக நான்காம் பாலப்பகுதியில் நீள்சதுர வடிவில் காணப்படுகின்ற நிலமேடு துருத்திபிட்டி என அழைக்கப்படுகின்றது. இந்நிலப்பரப்பு சங்கானை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்டது. துருத்திப்பிட்டி காரைநகர் ஆலடியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை அரி என்பவருக்கு சொந்மானது. திரு அரி அவர்களின் குடும்பத்தவர்கள் உரிமைக்கான ஆவணத்தை ( உறுதி) தாங்கள் வைத்திருப்பதாக தெரிவித்தனர். காரைநகர் பொன்னாலைப் பகுதிகளில் வாழ்கின்ற சிரேஸ்ட்ட பிரசைகள் இதனை உறுதிப்படுத்துகின்றனர்.

துருத்திப்பிட்டி

1990க்கு முற்பட்ட காலங்களில் காரைநகரில் இருந்து நூற்றுக் கணக்கான மாடுகள் இளவாலை, மாதகல் மாதியப்பட்டி, பொன்னாலை போன்ற இடங்களுக்கு பராமரிப்புக்காக பொன்னாலை தாம்போதி வழியாக எடுத்துச் செல்லப்படுவது வழமை. பொன்னாலையில் பராமரிக்கப்படும் மாடுகள் துருத்திப் பிட்டியில் செழித்து வளரும் புற்களை மேய்வதற்காக கடல் வழியாக துருத்திப்பிட்டிக்கு செல்லும். இவ்விடத்தை மாட்டு இறக்கம், மாட்டு வாய்க்கால் என அழைப்பர். இப்பகுதி நிலம் வைரத்தன்மையாக இருப்பதனால் துருத்திப் பிட்டியில் சேரும் மாட்டு எரு வண்டில்கள் மூலம் ஏற்றி வரும் வழக்கம் இருந்தது. தற்போது இந்நிகழ்வுகள் இல்லாமல் போயிற்று.
“கடந்த காலங்களில் துருத்திப் பிட்டியில் கற்றாளை செடிகள் நிறைந்து காணப்பட்டதாகவும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் பூக்கும் கற்றாளை பூக்களை கடற் தொழிலுக்குச் செல்பவர்கள் மீன்கள் இடும் கூடைகளில் கொழுவி வருவார்கள் எனவும் பூக்களை இறாலுடன் வறுத்து சாப்பிடுவது சுவைமிக்கதுடன் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது” எனவும் இலகடியை சேர்ந்த திரு முருகேசு பரமானந்தம் தெரிவித்தார்.
தாம்போதியின் தெற்குப் பக்கமாக காரைநகரில் இருந்த செல்கின்ற பொழுது முதலாம் இரண்டாம் பாலங்களுக்கு அண்மிய பகுதியில் காணப்படும் மணற்திட்டுக்கள் கண்ணாப்பிட்டி (கண்ணா பத்தை) என்று அழைக்கப்படுகின்றது. வருடம் முழுவதும் பச்சை நிறமாக காணப்படும் இச்செடிகளின் இலை நறுமணம் மிக்கது.
கண்ணாப்பிட்டி

பொன்னாலை தாம்போதி ஊடாக காரைநகருக்கான சேவைகள்
பொன்னாலை தாம்போதியின் தெற்குப் பக்கமாக நாட்டப்பட்டுள்ள தொலை தொடர்பு கம்பங்கள் ஊடாக காரைநகருக்கும் தீவகத்திற்குமான தொலை தொடர்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.1970ம் ஆண்டு காரைநகருக்கான மின்சாரம் வழங்கல் ஆரம்பமான பொழுது தாம்போதியின் வடக்குப் பகக்கமாக கம்பங்கள் நடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு 2018ம் ஆண்டில் இருந்து தெற்குப் பக்கமாக கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்படுகின்றது.காரைநகருக்கான குடிநீர் விநியோக குழாய்கள் 2018ம் ஆண்டு தாம்போதியின் வடக்கு பக்கமாக நிறுவப்பட்டுள்ளது.
பொன்னாலை தாம்போதியும் கடல்வெளி மாற்றுப் பாதையும்
1983ஆம் ஆண்டு யூலை மாதம் 23ம் திகதி திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலைத் தொடர்ந்து அசாதாரண நிலைமை காணப்பட்டது. 24ம் திகதி அதிகாலை சங்கானை சித்தன்கேணிப் பகுதிகளுக்கு சென்ற மக்கள் காரைநகருக்கு திரும்பி வருவதற்க்கு பிரதான வீதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து உள்ளக வீதிகளால் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்;கு பின் புறம் அமைந்துள்ள பெரியவர் கோவிலடி சமாதிப்பகுதியில் அமைந்துள்ள கழிக்கரைப் பகுதியில் இறங்கி நேராக நடந்து சோனகன் பங்கிற்கு அண்மிய பகுதியில் பத்தி வடலி முனங்கு எனும் இடத்தில் கரையேறி காரைநகருக்கு வந்து சேர்ந்தனர்.
1991ம் ஆண்டு மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து தொடர்சியாக வெளியேறிய மக்களை விட மேலும் சில மக்கள் காரைநகரில் தரித்து இருந்தனர். 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி காரைநகரில் இடம்பெற்ற ராணுவ நடவடிக்கை காரணமாக பொன்னாலை தாம்போதி ஊடாக குடா நாட்டுக்கு செல்வது மதியம் 1.00 மணியுடன் தடைப்பட்டது. காரைநகரில் தங்கி இருந்து குடா நாட்டுக்குச் செல்ல விரும்பிய நூற்றுக்கணக்கான மக்கள் பத்தி வடலி முனங்குப் பகுதியில் கடலுக்குள் இறங்கி நேராக நடந்து பொன்னாலை கழிக்கரை பகுதியை சென்றடைந்தனர். இவ்வழியே வெளியேறியவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி வெளியேறினர். இப்பகுதியால் செல்லுகின்ற பொழுது ஆழங்குறைந்த நடைபாதையை சரியாக இனங்கண்டு நடத்தல் வேண்டும் .வடக்குப் பக்கத்தில் ஆழம்கூடிய ஆற்றுப்பகுதியும் தெற்கே காவாட்டியும் காணப்படுகின்றது.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் பொன்னாலை தாம்போதியும்
தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் பொன்னாலை தாம்போதியில் காணப்பட்ட பாலங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டும், விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டுகளால் தகர்க்ப்பட்ட சம்பவங்களும் உண்டு 1981 ஆம் ஆண்டு ஆனி மாதம் கண்ணாபிட்டியில் இருந்து இயக்கப்பட்ட தரைக் கண்ணிவெடியினை வெடிக்க வைத்த முயற்சி இலக்கை அடையவில்லை.
1985 ஆம் ஆண்டு காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலை தொடர்ந்து காரைநகரில் வாழ்ந்த மக்கள் காரைநகருக்கு உள்ளும், காரைநகருக்கு வெளியேயும் இடம் பெயரவும், பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயரவும் ஆரம்பித்தனர். 1991ம் ஆண்டு மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து சிறிது சிறிதாக இடம் பெயர ஆரம்பித்து மார்ச் மாத இறுதிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் பொன்னாலை தாம்போதி ஊடாக மக்கள் வெளியேறினர். தங்களிடமிருந்த துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் வண்டிகள், மாட்டு வண்டில்களில் பொன்னாலை தாம்போதியால் சாரை சாரையாக நடந்து சென்று குடாநாட்டை அடைந்தனர். தங்கள் குடும்பத்தினருடன் எடுத்துச் செல்லக்கூடிய உடமைகளுடனும்இ வளர்ப்புப் பிராணிகளுடனும் வெளியேறினர்.
மக்கள் கையில் அகப்பட்ட பொருட்களுடன் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் சிந்தனை ஒன்றுடன் சேருமிடம் தெரியாத வெளியேற்றம் ஒன்றுக்கு உள்ளாயினர். பரம்பரையாக தம் மூதாதையர் வாழ்ந்த மண்ணில், தாம் வாழ்ந்த மண்ணில் வேரோடு பிடுங்கப்படுகின்றோம் என்பதனை விளங்கிக் கொள்ள மனதளவில் இம்மியளவும் இடம் இருக்கவில்லை.
1991ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி காரைநகரில் இருந்து இறுதியாக வெளியேறிய மக்களை 1996ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி காரைநகரில் மீளக் குடியமர்வதற்கு ஊர்காவற்றுறை வழியாக அரசினால் அழைத்து வரப்பட்டனர்.
ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் 1998ம் ஆண்டு நடுப்பகுதியில் பொன்னாலை தாம்போதி பொது மக்கள் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. காரைநகரில் இருந்து செல்லும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து குடாநாட்டிலிருந்து வருகை தந்த பயணிகளை பொன்னாலை சந்தியில் இருந்து ஏற்றி வரும். இக்காலப்பகுதியில் பொது மக்கள் மோட்டார் சைக்கிளில் சென்று வருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பொன்னாலை தாம்போதியில் 54 காவல் அரண்கள்; அமைந்திருந்தது எனவும் அன்றய காலகட்டத்தில் மீளக் குடியேறிய மக்கள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது. 2000ம் ஆண்டில் பொன்னாலை தாம்போதி ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
1986ம் ஆண்டு ஏப்ரல் மாத பிற்பகுதியில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட இரண்டு போராளிக் குழுக்களுக்கிடையே மோதல் நடைபெற்றது. ஏப்ரல் 28ம்திகதி வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மோதலில் இறந்த போராளிகளின் பூதவுடல்களை காரைநகருக்கு எடுத்து வரவேண்டிய நிலை காரைநகரில் காணப்பட்டது. இதன் காரணமாக மறுதினம் 9 பூதவுடல்கள் காரைநகருக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் நின்றிருந்த 90 போராளிகளும் அழைத்துவரப்பட்டனர். பொன்னாலைச் சந்தியில் தரித்திருந்த போராளிக் குழுவிற்கும் காரைநகரில் தரித்திருந்த மற்றைய போராளிக் குழுவிற்கும் இடையில் நான்கு தினங்களாக தினம்தோறும் மூன்றுக்கு மேற்பட்ட சந்திப்புக்களை நடாத்திய சமூக ஆர்வலர்களின் முயற்சி வெற்றி அளிக்கவில்லை. தொடர்ந்து வந்த நாட்களில் தாய்மார்கள் பொன்னாலை தாம்போதி ஊடாக கால்நடையாக சமாதான முயற்சிகளை மேற்கொண்டனர். மே மாதம்; 5ம் திகதி பெரும் எண்ணிக்கையான தாய்மார்கள், பொது மக்கள் பொன்னாலை தாம்போதி ஊடாக நடந்து சென்று பொன்னாலை சந்தியில் அமர்ந்தனர். இறுதியாக பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஆயுதங்களை பொறுப்பேற்றுஇ 90 போராளிகளையும் தத்தமது வீடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் அவலத்தை தந்த சம்பவம் காரைநகரில் நடைபெறாது இருப்பதற்கு பொன்னாலை தாம்போதி ஊடாக சோர்வின்றி மேற்கொண்ட பயணங்களே காரணமாகும்.
பொன்னாலைச் சந்தியும் அதன் முக்கியத்துவமும்
பொன்னாலை நாற் சந்தியில் இருந்து பிரிந்து செல்லும் பெருந் தெருக்கள் யாழ்ப்பாணம், வடமராட்ச்சி, வலிகாமம் ஆகிய பகுதிகளுக்கு காரைநகர் மக்கள் இலகுவில் சென்றடைய வழி செய்கின்றன . சட்டபூர்வமற்ற வழிகள் மூலம் காரைநகர் ஊடாக இலங்கைக்கு வருபவர்களை கண்காணிக்கவும், பாதுகாப்பிற்காகவும் 1980 இற்கு முற்பட்ட காலத்தில் பொன்னாலைச் சந்திப் பகுதியில் காவல்துறையின் சோதனை சாவடி அமைந்திருந்தது. தேவைப்படும் சந்தர்ப்பங்களிலும், சந்தேகத்திற்கு இடம் ஏற்படும் பொழுதும் பயணிகள் சோதனைக்கு உள்ளாவர், வாகனங்கள் நிறுத்திப் பரிசோதிக்கப்படும்.
பொன்னாலை தாம்போதி வரவேற்பு வளைவுக்கு அண்மையில் அமைந்துள்ள தொப்பி கட்டில் இருந்து பொன்னாலை சந்தியில் அமைந்துள்ள கடற்படைசோதனை சாவடிக்கு அண்மையில் அமைந்துள்ள தொப்பி கட்டு வரைக்கும் 03KM நீளமுடையது.பொன்னாலை சந்தியில் அமைந்துள்ள சுற்று வட்டத்தில் இருந்து வரவேற்பு வளைவு வரைக்கும் 3189M நீளமுடையது.வரவேற்ப்பு வளைவில் இருந்து 1175 மீர்ரரும் பொன்னாலை சுற்று வட்டத்தில் இருந்து 2014 மீர்ரரும் சந்திக்கும் இடம் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கும் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இடையிலான எல்லை பகுதி ஆகும்.கடல் காடு போன்ற இடங்களின் எல்லைகள் எல்லைபடுத்ப்தபடாத பகுதிகளாக கணிக்கப்படும். அவ்வகையில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கும் எல்லையாக துருத்திப்பிட்டியின் மேற்க்கு பக்கத்தின் இறுதி பகுதி எல்லையாக கணிக்கப்படுகிறது.இதன்படி காரைநகர் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லை நான்காம் ஐந்தாம் பாலங்களுக்கு இடைப்பட்ட பகுதியாக கொள்ளலாம்.
1954ல் புங்குடுதீவுக்கும் வேலணை தீவிக்கும் இடையிலான தாம்போதியும்(வாணர் தாம்போதி), 1961ல் பண்ணைப் பாலமும் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டன.இவ் இரு பாதைகளும் திறந்து வைக்கப்பட முன்னர் ஏனைய தீவுகளிற்கான போக்குவரத்தில் பொன்னாலை தாம்போதி முக்கிய பங்கினை வகித்தது.
காரைநகரிற்க்கு வரவேற்கும் வரவேற்பு வளைவு
 அன்பும் நன்றியும்;---http://www.karainagar.com/pages/150-

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...