Followers

Tuesday, January 19, 2021

 

மனநலத்தை மேம்படுத்தும் மந்திரப் பரிகாரம்! -வி. விஜயராகவன்.........

 

 

மாறிவரும் சமூகப் பொருளாதாரச் சூழலில், மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழல் அதிகரித்துவருகிறது. ஆண்- பெண் உறவுகள், குடும்ப உறவுகள், அலுவலகம், தொழில் என்று எத்தனையோ தளங்களில் மனிதர்கள் இயங்கவேண்டியுள்ளது. இவற்றில் ஏற்படும் பிரச்சினைகளால் மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பலவகையான பாதிப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. "டிப்ரஷன்' என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் மனச்சோர்வு, இன்று ஏதுமறியா குழந்தைகள்முதல் எல்லாவற்றையும் அனுபவித்து முடித்த பெரியவர்வரை காணப்படுகிறது. ஒருவரையொருவர் சார்ந்துவாழும் இன்றைய சூழலில் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதன் தாக்கம் அதிகரிக்கும்போது சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். சிலர் வன்முறை போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இன்னும் சிலர் தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்குச் செல்கின்றனர்.

 

இதுதவிர, தனக்குத்தானே பேசிக் கொள்வது; இருவேறு நபர்கள்போல தன்னை உணர்வது (bipolar disorder); எப்போதும் காமம் அல்லது வன்முறை பற்றியே சிந்திப்பது; இயற்கைக்கு மாறான உறவுகளில் நாட்டம்; தன்னைவிட வயதில் மூத்த அல்லது இளைய ஆண் அல்லது பெண்மீது காதல்கொண்டு, அதை நிறைவேற்றும் வழிதெரியாமல் மனதிற்குள் அழுத்திக்கொண்டு, அதனால் புறவுலகைப் பற்றிய எண்ணமே இல்லாமல் எங்கோ வெறித்தபடி இருப்பது போன்றவற்றையும் காண முடிகிறது.

காதல் சார்ந்த மன அழுத்தம் ஏற்பட்டு, அதனால் ஒரு ஆணும் பெண்ணும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்றால், அவர்களது ஜாதகத்தில் புதனும் கேதுவும் இணைந்திருப்பார்கள். இந்த அமைப்புடைய வர்கள் காதல் வலையில் வீழ்வார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் குரு, சூரியன், சனி ஆகிய கிரகங்கள் ஆறாமிடத்து அதிபதியுடன் கூடியிருந்தாலும், மனதளவில் சில பாதிப்புகள் இருக்கும். சிலருக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். சிலருக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளும் இருந்தாலும் எதையோ இழந்தது போன்று அல்லது ஏதோவொன்று தன்னிடம் இல்லாதது போன்று தோன்றும். அதீத கோபம் அல்லது வெறுப்பும் சிலர்மீது ஏற்படும். தெளிவான சிந்தனையும் கட்டுக்கோப்பான நடைமுறைகளும் இல்லாமல், சற்று வித்தியாசமாக எதற்கெடுத்தாலும் எரிந்துவிழுவார்கள். யாருடனும் ஒட்டாமல் இருப்பார்கள். தன்னை உயர்வாகக் கருதிக்கொண்டு மற்றவர்களைக் கேவலமாக மதிப்பார்கள். இதே போல தன்னைத் தாழ்வாகக் கருதிக்கொள்ளும் தாழ்வுமனப்பான்மையும் ஆழ்மனதில் ஏற்பட்டுள்ள அழுத்தமான பிம்பங்களின் பிரதிபலிப்புகளே.

மன அழுத்தம் இரண்டு வகையாக ஏற்படுமென்று மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சிலருக்கு மூளையின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது மன அழுத்தம் ஏற்படலாம். ஆண்- பெண் உறவு களில் ஏற்படும் பிரச்சினைகள், அலுவலகம் மற்றும் வெளியிடம் சார்ந்த அழுத்தங்களால் மன அழுத்தம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மன அழுத்தமென்பது எப்போதும் காலத்தோடு தொடர்புடையது. கடந்தகால நிகழ்வுகள், நிகழ்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலை, "எதிர்காலம் என்னாகுமோ' என்ற அச்சத்தின் காரணமாக பொதுவாக மனஅழுத்தம் ஏற்படுகிறது.

மனம் எண்ணங்களால் ஆனது.

எண்ணம்போல்தான் வாழ்க்கை. தான் விரும்பியது நடக்காதபோதும், விரும்பாதது நடக்கும்போதும் மனம் குழம்பி, "இனி எதிர்காலமே இல் லையோ' என்ற குழப்பத்துக்கு ஆளாகி விடுகிறது.

 



ஜோதிட சாஸ்திரம் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்குக் காரணமாக பல்வேறு கிரக அமைப்புகளைக் கூறியிருக்கிறது. பொதுவாக ஒருவருக்கு மனம் நல்ல நிலையிலும், எண்ணியதை எண்ணியபடி நடத்தும் துணிவும், அதற்குண்டான ஆற்றலும் இருக்க வேண்டுமானால் லக்னம், மூன்றாமிடம், மனோகாரகன் சந்திரன், சூரியன் ஆகியவை நல்ல நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு பிறந்த ஜாதகர் இயல்பிலேயே நினைத்ததை சாதிக்கும் திறமையுள்ளவராகவும், குழப்பமில் லாமல் தீர்க்கமாக முடிவெடுக்கும் மனமுள்ளவராகவும் இருப்பார். அவர் விரும்பியது கிடைக்கும்வரை ஓய மாட்டார்.

சிலர் தன்னால் முடிகிறதோ இல்லையோ- எந்த திட்டமிடலும் இல்லாமல் துணிந்து செயலில் இறங்கி வெற்றிபெறுவதும் உண்டு. இதற்கு பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய் மூன்றாமிடத்தில் இருப்பதும் காரணம். மாறாக மூன்றாமிடத்தில் சுப கிரகங்கள் இருக்கப் பிறந்தவர்கள், சிறிய விஷயத்தைக்கூட தேவைக்குமீறி யோசித்து, சிலசமயம் தள்ளிவைத்து, தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிவிடுவார்கள். இன்னும் சிலர் மனக்குழப்பத்தோடும் எந்தவொரு செயலையும் செய்யமுடியாத தைரியக்குறைவோ டும் இருப்பார்கள். இதற்கு அவர்களுடைய ஜாதகத்தில் 3-க்குடையவர் நீசமடைவதோடு மறைந் தும், 5-க்குடையவரோடு சேர்ந்திருப்பதும் காரணம் என்று ஜோதிடப் பெரியோர்கள் கூறுகின்றனர்.

சிலர் எப்போதும் விரக்தியுடனும், எதிலும் ஈடுபாடில்லாமலும், வாயைத் திறந்தாலே எதிர்மறைப் பேச்சுகளோடும் இருப்பார்கள். எப்போதோ ஒருமுறை இவர்கள் விரும்பியபடி நடக்காமல் இருந்திருக்கலாம். இவர்களுக்கு ஜோதிடம் கூறுவது என்னவென்றால், இவர்களது ஜனன ஜாதகத்தில் ஆழ்மனதைக் குறிக்கும் ஆன்மகாரகன் சூரியன், கரும்பாம்பென்னும் ராகு அல்லது செம்பாம்பென்னும் கேது மற்றும் காரியாம் சனியுடன் சேர்ந்து காணப்படுவதே என்கிறது.

பொதுவாக சூரிய சந்திரர்கள் நன்கு வலிமையுடன் இருந்தாலே ஜாதகர் வாழ்க்கையில் பிரகாசிக்கமுடியும். குறிப்பாக சூரியன் கெடாமல்- அதாவது லக்னத்திற்கு பாவியாகவோ, ஆதிபத்திய ரீதியாக பாதகம் செய்பவராக இல்லாமலோ, மறைவு ஸ்தானங்களான 6, 8, 12 ஆகிய இடங் களில் மறையாமலோ இருக்கவேண்டும். துரதிர்ஷ்ட வசமாக மேற்கூறிய அமைப்புகளில் ஏதாவது ஒன்றில் சூரியன் இருந்தால் ஜாதகர் மனவிரக்தி உடையவராக இருப்பார்.

அடுத்தபடியாக சந்திரனின் நிலையும் ஆராயப் பட வேண்டும். காரணம்- சந்திரன்தான் மனதிற்கு அதிபதி. ஜாதகத்தில் சந்திரன் வலுவில்லாமல் இருப்பது- உதாரணமாக சந்திரனுடன் சனி, ராகு, கேது சேர்ந்திருப்பது அல்லது ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியாக அமைந்த கிரகத்துடன் சேர்ந்திருப்பது, எட்டாமிடம் என்னும் துர்ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் காணப்பட்டால் ஜாதகர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவார்.

பொதுவாக கர்மகாரகன் சனியுடன் சேர்ந்திருப்பது, ஒருவருக்கொருவர் சமசப்தம நிலையில் சஞ்சரிப்பது ஆகிய நிலைகளில் சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் காணப்பட்டால், அந்த ஜாதகருக்கு எதிலும் பிடிப்பிருக்காது. எப்போதும் எதையாவது விபரீதமாக கற்பனை செய்துகொண்டு கடும் மனக்குழப்பத்திற்கு ஆளாவார். யாருடனும் பேசப் பழகப் பிடிக்காமல் கடுமையாகவும் நடந்து கொள்வார். இதேபோல கோட்சாரரீதியாக ராகு, கேது, சனி இருக்கும் ராசிகளில் சஞ்சரிக்கும் அந்த இரண்டரை நாட்களும் ஜாதகருக்கு டென்ஷன், மன அழுத்தம் போன்றவை ஏற்படும்.


ஒருவரது ஜாதகத்தில் அதிக கிரகங்கள் வக்ரம் பெற்றால், ஜாதகருக்கு எதிலும் எதிர்மறை சிந்தனைகள், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் இருக்கும். மேலும் நான்காமிட அதிபதி, நான்காமிடத்தில் அமர்ந்த மற்றும் பார்த்த கிரகங்களின் நிலையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

ஜோதிட சாஸ்திரம், "கர்மவினைகளை அடிப்படையாகக் கொண்டே ஒருவரது வாழ்க்கை அமைகிறது' என்று கூறுகிறது. முற்பிறவிகளில் செய்த வினைப்பயனையே இப்போது அனுபவிக்கிறோம். பொதுவாக ஒருவரது வாழ்க்கையில் கடுமையான மன பாதிப்புகள் ஏற்படுவதற்கு ஸ்த்ரீ சாபம், பித்ரு சாபம், பிரம்ம சாபம், மித்ர சாபம் என்று பல காரணங்கள் உண்டு. இவற்றை சரியாகக் கண்டறிந்து, உரிய நிவர்த்தி ஹோமம், பரிகாரங்களைச் செய்வது; மந்திர உபதேசம் பெற்று முறையாக ரட்சாதாரணம் ஏற்று ஜெபித்து வருவது; உரிய மந்திரத்தைப் பெற்றுப் பூஜிப்பது போன்றவற்றால் அவரவர் மன பாதிப்புகளால் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

மன பாதிப்புகள் மட்டுமல்ல; எவ்வளவு முயன்றும் திருமணம் கைகூடாமல் தள்ளிப் போவது; எல்லா தகுதிகள் இருந்தும் குழந்தை பிறக்காமல் போவது; நியாயமாகக் கிடைக்கவேண்டிய சொத்து கைக்கு வராமல்போவது; ஆண்- பெண் உறவுகளில் சிக்கல்- அதனால் நீதிமன்ற வழக்கு என்று அவமானங்களை சந்திப்பது; கணவன்- மனைவியுடன் பிரச்சினை போன்ற அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கலான பிரச்சினைகளுக்கும் மந்திர சாஸ்திரரீதியான பரிகாரங்களைச் செய்து நிம்மதியாக வாழலாம் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
courtesy; Nakkiran/balajothidam.
செல்: 95660 27065

 

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...