காரைநகரில் உள்ள மடங்கள்
காரைநகரில் உள்ள மடங்கள்
(எஸ்.கே.சதாசிவம்)
காரைநகரில் அண்ணளவாக 20 மடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எமது முன்னோர்களின் சமூக சிந்தனைக்கு சான்று பகரும் பண்பாட்டுச் சின்னங்கள் மடங்கள். தொல்லியல் பெறுமானம் மிக்க மடங்கள் அழிவடைந்தும், அழிவடையும் நிலையிலும் காணப்படுகின்றது, இம்மடங்களைப் பேணிப் பாதுகாத்தல் வரலாற்றுத் தேவையாகும்.
பிள்ளை மடம்
1780 இல் காரைக்காலில் இருந்து வருகை தந்து காரைதீவில் குடியேறிய கனகசபைபிள்ளை என்பவரால் காரைநகர் துறைமுகப் பகுதியில் இம்மடம் அமைக்கப்பட்டது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்தில் காரைநகர் துறைமுகம் முதன்மை நிலை பெற்றிருந்த காலப்பகுதியில் வர்த்தகப் பணிகளுக்காக இம்மடம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் நயினாதீவு நாகபூசணி அம்மனைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களும் வழிப்போக்கர்களும் தங்கிச் செல்லும் இடமாக அமைந்தது. 1990 களில் அரசின் தேவைக்காக இம்மடம் அமைந்திருந்த பகுதி சுவிகரிக்கப்பட்டது. இன்று பிள்ளை மடம் இல்லை. காரைநகரில் அமைந்துள்ள மடங்களில் பிள்ளை மடம் பழமை வாய்ந்தது.
வியாவில் மடம்
சைவ மகா சபையின் அனுசரணையுடன் 1923 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வியாவில் கடற்கரையில் ஒரு மடாலயம் கட்டுவதற்கு ஆரம்பிக்கப்பட்டது. இம்மடாலயம் சம்பந்தமான வேலைகளை கருங்காலி, பலகாடு எனும் குறிச்சிகளில் உள்ளவர்கள் செய்ய சம்மதித்திருந்தனர். இம்மடாலயத்தில் ஒரு சைவ ஆசிரியரைக் குடியிருத்தவும், புத்தகசாலை நடாத்தவும் பிரசங்கம் முதலானவைகளை நடாத்தவும் சபையினர் எண்ணியிருந்தனர்.
சுப்பர் மடம்
ஸ்ரீமான் சி. சுப்பிரமணியபிள்ளை தீனாப்பிட்டி வயலின் மத்தியில் கிணறும், மடமும் கட்டினார். (1821 – 1902) இம்மடம் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் ஓய்வெடுக்கும் மடமாகவும், தாம் எடுத்து வரும் உணவை அருந்தும் இடமாகவும், சிறுதானியப் பயிர்ச்செய்கைக் காலங்களில் பயிர்களுக்குக் காவல் செய்பவர்கள் தங்குமிடமாகவும், கிணற்றில் குளிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் காத்திருக்கும் இடமாகவும் அமைந்திருந்தது.
சிவகாமி மடம்
மேற்கு வீதியில் இருந்து சுப்பிரமணியம் வீதி வழியே செல்லும் பொழுது வயல் பிரதேசம் ஆரம்பிக்க முன் கொட்டையடி என அழைக்கப்படும் பிரதேசத்தில் இம்மடம் அமைந்திருந்தது. இவ் அயலில் வாழ்ந்த திரு. இராமநாதன் வீரகத்தி அம்பலவாணர் என்பவர் தனது முதல் மனைவி பிரசவத்தின் போது மரணமடைந்தமையால் மனைவியின் நினைவாக இந்த மடத்தைக் கட்டினார். பனையோலையினால் வேயப்பட்ட 20 X 15 அளவு விஸ்தீரணமுள்ள மடம். வுழிப்போக்கர்கள் அதிகரித்த வெயில், மழை ஆகிய காலநிலைகளில் மடத்தில் தங்கிச் செல்வர். வயல் வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஒன்றுசேரும் இடமாகவும், இளைப்பாறும் இடமாகவும் இருந்தது. ஆரம்ப காலத்தில் ஆவூரோஞ்சி, சுமைதாங்கி என்பன கட்டப்பட்டிருந்தது. இம்மடம் 1920 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியது.
அக்காலத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் பிரசவத்தின் போது இறந்தால் அவர்களின் நினைவாக சுமைதாங்கி கற்கள் அமைப்பது வழக்கம். அதாவது வயிற்றில் சுமையுடன் அவர்கள் இறந்தால் அதனைக் குறிக்கும் விதமாகவும் மற்றவர்கள் தங்கள் சுமையினை இறக்கி வைக்க உதவ வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு செய்வதுண்டு. தமது சுமைகளை மற்றொருவரின் உதவியின்றி இறக்கி வைக்கவும் திரும்ப தலையில் ஏற்றவும் இது மிகவும் உதவியாக இருந்தது.
அழிவடைந்த நிலையில் காணப்படும் சிவகாமி மடமும்
அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்ட சுமைதாங்கியும்
No comments:
Post a Comment