Followers

Wednesday, June 10, 2020

காரைநகருக்கான குழாய் மூலமான குடிநீர் விநியோகம்
                         காரைநகர் வடக்குப் பிரதேசம்
 எஸ்.கே.சதாசிவம்

திரு. ஆ. தியாகராசா அவர்கள் கல்லூரி அதிபராக பணியாற்றிய காலத்தில் இருந்து காரைநகருக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டார். தெரிவு செய்யப்பட்ட கிணறுகளில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட கால இடைவெளிகளில் நீரினைப் பெற்று நீரியல் ஆய்வாளர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் காரைநகருக்கான குழாய் மூலமான குடிநீர் விநியோகத்தை காரைநகர் வடக்குப் பிரதேசத்திற்கு 1976 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்தார். சுப்பிரமணியம் வீதியில் அமைந்துள்ள செட்டியார் வயல் கிணற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு மேற்கு வீதிக்கு அண்மிய சுப்பிரமணியம் வீதியில் அமைந்துள்ள தண்ணீர்த் தாங்கியில் நீர் சேமிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. காலை 6.00 மணி முதல் 7.00 மணி, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் நீர் விநியோகம் செய்யப்பட்டது. வலந்தலைச் சந்தியில் இருந்து ஆலடி வரையிலான பகுதியில் மேற்கு வீதியின் வடக்குப் பக்கத்தில் பிரதான சந்திகளில் அமைக்கப்பட்ட பைப்புகளில் (Stand Pipe) இருந்து மக்கள் நீரிணைப் பெற்றனர். பழையகண்டி சிவன் கோவில் வீதியில் அப்பர் கடை சந்தி வரைக்கும் குழாய் மூலம் நீர் பெறும் வசதி இருந்தது. கோடை காலங்களிலும், மழை வீழ்ச்சி குறைந்த காலங்களிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய நீர் விநியோகம் நடைபெற்றது. இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் குழாய் மூலம் நீர் பெறக் கூடியதாக இருந்த வேளையிலும் வழமை போல் குடங்களில் நீர் அள்ளி வருவதனையும் தண்ணீர் வண்டில்களில் நீர் ஏற்றி வருவதனையும் கைவிடவில்லை. தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் வழிகாட்டலுடன் காரைநகர் வடக்கு கிராம சபையினால் நீர் விநியோக செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இடப்பெயர்வு வரை நீர் விநியோகம் நடைபெற்று வந்தது.

சுப்பிரமணியம் வீதியில் அமைந்துள்ள தண்ணீர் தாங்கி



செட்டியார் வயல் கிணறும் இயந்திர அறையும் – Pump House


ஆலங்கன்றடி கிணற்றில் இருந்து குழாய் மூலமான குடிநீர் விநியோகம்
திரு. தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் இந்து கலாச்சார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மேற்படி குடிநீர் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான நிதியை ஒதுக்கினார்.   தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் வழிகாட்டலுடன் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆலங்கன்றடி கிணற்றில் இருந்து குடிநீர் பெறப்பட்டு சிவகாமி அம்மன் கோவிலுக்கு அண்மிய பிரதேசத்தில் அமைந்துள்ள தண்ணீர்த் தாங்கியில் நீர் சேமிக்கப்பட்டு மாலை. 4.00 மணி முதல் 4.30 மணி வரை நீர் வழங்கப்படுகின்றது. வேதரடைப்பு, சிவகாமி அம்மன் கோவிலடி, பொன்னம்பலம் வீதி, வெடியரசன் வீதி, தங்கோடை, செம்பாடு ஆகிய இடங்களுக்கு நீர் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த காலங்களில் பயரிக்கூடல், மணற்காட்டு அம்மன் கோவில் பிரதேசத்திற்கும் நீர் வழங்கல் விஸ்தரிக்கப்பட்டது. தற்போதும் இயங்கு நிலையில் உள்ளது.


 சிவகாமி அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள ஆலங்கன்றடி கிணற்றில் இருந்து வழங்கப்படும் குழாய் மூலமான குடிநீர் விநியோகத்திற்கான தண்ணீர் தாங்கி


தோப்புக்காட்டு கிராமத்திற்கான குழாய் மூலம் குடிநீர் விநியோகம்
தோப்புக்காட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டம் 1972 இல் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. விமல் அமரசேகரா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தம்பன் வயல் பகுதியில் குடிநீர் விநியோகத்திற்கான கிணறும் தண்ணீர்த் தாங்கியும் அமைக்கப்பட்டது. Times சங்கரப்பிள்ளை அவர்களால் இச்செயற்றிட்டத்திற்கான காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அரசாங்கமும் சீனோர் நிறுவனத்தில் பணியாற்றியவர்களும் இணைந்து இக்குடிநீர் விநியோகத்தினைச் செயற்படுத்தினர். குடிநீர் விநியோகத்திற்கான சில வேலைத் திட்டங்கள் சிரமதான அடிப்படையில் நடைபெற்றது. துறைமுகப் பகுதியில் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக இச்செயற்றிட்டம் நின்று போய் விட்டது.


தோப்புக்காட்டு கிராமத்திற்கான குடிநீர் விநியோகத்திற்கான
தண்ணீர் தாங்கியும் கிணறும்



தோப்புக்காட்டு கிராமத்திற்கான குடிநீர் விநியோகத்திற்கான இயந்திர அறை (Pump House)




வியாவில் ஐயனார் தேவஸ்தான குழாய் மூலமான குடிநீர் விநியோகம்

வியாவில் ஐயனார் தேவஸ்தான குழாய் மூலமான குடிநீர் விநியோகத்திற்கான நிதியினை லண்டன் வர்த்தகர் திரு. நட்டுவானி வழங்கினார். இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோக சேவையாகும். வருடம் முழுவதும் வயலில் அமைந்துள்ள தண்ணீர்த்தாங்கி சூழலிலும், வியாவில் ஐயனார் தேவஸ்தான சூழலிலும் கால்நடைகள் நீர் அருந்துவதற்கான தொட்டிகள் அமைக்கப்பட்டு நீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வியாவில் சைவ வித்தியாசாலைக்கும் நீர் வழங்கப்படுகின்றது. குடிநீர் தட்டுப்பாடான காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஐயனார் தேவஸ்தான சூழலில் குழாய் மூலம் குடிநீர் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் ஐயனார் தேவஸ்தான குடிநீர் விநியோகத்திற்கான தண்ணீர் தாங்கி





ADB/AFB/GOSL நிதி உதவியுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான காரைநகரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தாங்கி







No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...