Followers

Sunday, May 10, 2020


ஷேர் மார்க்கெட் யோகம் யாருக்கு?


ஒரு ஜாதகத்தில் கேந்திரம் என்பது லக்னத்திலிருந்து நான்கு, ஏழு, பத்து. த்ரிகோணம் என்பது லக்னத்திலிருந்து ஐந்து, ஒன்பது. பணபரம் என்பது இரண்டு, மூன்று, ஐந்து, எட்டு, பதினொன்று. ருணம், ரோகம், சத்ரு ஆறாம் இடம். விரயம் பன்னிரெண்டாம் இடம். ஆதாயம் எனும் தனவரவு, பணம் வரும் வழிகள் பற்றி பேசும் இடம் தனஸ்தானம் எனும் லக்னத்திற்கு இரண்டாம் இடம். தனம், வாக்கு சாதுர்யம், உடல் உழைப்பு இல்லாமல் மூளையைப் பயன்படுத்தி வாய், வார்த்தை ஜாலம், பேச்சு, எழுத்து மூலம் பணம் சேரும் வழியைச் சொல்கிறது.

ஐந்தாம் இடம் யோசனை, சிந்தனை, பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம், உழைப்பில்லாத செல்வம், யோசனை சொல்வது திட்டங்கள் தீட்டிக் கொடுப்பது. நான்காம் வீட்டிற்கு இரண்டாம் இடம் கற்ற கல்வியின் மூலம் பணம் சம்பாதிப்பதைக் குறிக்கும். எட்டு, இரண்டு, பதினொன்றாம் வீட்டுத் தொடர்புகள் மூலம் உழைப்பில்லாத செல்வம், மறைமுக பண வரவு, ரேஸ், லாட்டரி, பங்குத்தொகை திடீர் ஏற்றம் என எதிர்பாராத வருமானத்தைக் குறிக்கும். பங்கு மார்க்கெட் வர்த்தகம் பற்றித் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லாருக்கும் கிரக பலம்தான் முக்கியம். தனபாக்கிய யோகம், குருட்டு அதிர்ஷ்டம் காரணமாக பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டிவிடும். பணம் என்றவுடன் முதலில் முந்திக்கொண்டு நிற்பது தனஸ்தானம் எனும் இரண்டாம் இடம்.

சிலமணி நேரங்களில் பல ஆயிரங்களை, லட்சங்களை மொத்தமாக அள்ளித்தரும் தொழில். உங்களுக்கு பங்குச்சந்தையில் அதாவது ஷேர் மார்க்கெட்டில் பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, விற்று அல்லது பங்கு பத்திரங்களில் முதலீடு செய்து அதிலிருந்து லாபம் கிடைக்குமா? உங்களுக்கு அதிக உழைப்பில்லாத மூலதனத்தைக் கொண்டு திடீர் அதிர்ஷ்டம் மூலம் செல்வம் சேருமா அல்லது ஏற்ற இறக்கம் இருக்குமா என்பதை உங்கள் ஜாதகக் கட்டங்களில் உள்ள கிரக அமைப்புக்கள், கோரிக்கைகள், தற்காலம் நடைபெறும் தசாபுக்திகளின் பலம்தான் தீர்மானிக்கும். தற்கால கிரக சஞ்சார பெயர்ச்சிகள் மூலமும் சில அனுகூலங்கள் கிடைக்கும். லாட்டரி, ரேஸ், போட்டிகள், உயில் சொத்து, தான சொத்து, எதிர்பாராத வருமானம், பினாமி யோகம் என நாம் அனுபவிக்க ஜாதகத்தில் அனுபவிக்கின்ற பாக்கிய யோகம் இருக்கவேண்டும்.

கிரக அமைப்பு அம்சங்கள்

ஷேர் மார்க்கெட்டில் நுழைந்து பங்கு வர்த்தகப் பரிவர்த்தனை செய்து பணம் சம்பாதிக்க கொஞ்சம் கணக்கு, புள்ளி விவரங்கள், சிறிது சாதுர்யம், நிதானம், நிறைய அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கு எளிதான வகையில் பணத்தை வாரித்தரும்.

புதன் சுக்கிரன் குரு சந்திரன்

ஜாதகத்தில் புதனின் அமைப்பு மிகவும் முக்கியம். வர்த்தக வியாபார கிரகம் புதன். புதனுக்கு இன்னொரு பெயர் கணக்கன். புத்திசாலித்தனம், திறமை, சமயோசிதமாக கணிப்பது எல்லாம் புதன் தரும் வரமாகும். சுக்கிரனும் பொன், பொருள், செல்வ வளத்தை அருள்பவன். குரு தனகாரகன் நிதி, வங்கி, பணப் பரிவர்த்தனைக்கு அதிகாரம் செலுத்துபவர். சந்திரன் தினக்கோள் இவரின் சஞ்சாரம் காரணமாக வர்த்தகம் ஏற்றம், இறக்கம், ஸ்திரத்தன்மை போன்றவற்றை தன் கையில் வைத்திருப்பவர். ஆக இந்த நான்கு கிரகங்கள் நமக்கு அனுகூலமாக இருந்தால் நிச்சயமாக பண மழையில் நனையலாம். பொதுவாக ஜாதக கிரக அமைப்புக்கள் யோகமாக இருந்தாலும் நடைபெறும். தசா புத்திகள்தான் ஒருவருக்கு ஐஸ்வர்யத்தைத் தந்து பணத்தில் புரள வைக்கிறது.

ராகு தசையில் யோகாதிபதிகளின் புக்திகளில் பெருமளவு பொன், பொருள் சேரும். கேது தசை நல்ல யோக அம்சத்தில் இருந்தால் ஒருவரை கோடிகளில் புரள வைக்கும். தர்மகர்மாதிபதி எனும் 9, 10க்கு உடையவர்களின் தசையில் பங்கு வர்த்தகத்தில் பணம் சேரும். எட்டாம் இடம் மறைவு ஸ்தானம், விபரீத ராஜயோகத்தைத் தரும். எட்டாம் இடத்திற்கும், தனஸ்தானமான இரண்டாம் இடத்திற்கும் சம சப்தம பார்வை தொடர்பு உண்டு. இந்த இடத்து சம்பந்தமான தசைகளில் கோடி, கோடியாய் பணம் புரளும். பத்தாம் அதிபதி ஐந்தாம் இடத்திலும், ஐந்தாம் அதிபதி பத்தாம் இடத்திலும் இருந்து தசா புக்திகள் நடைபெறும்போது பிரபலமான வணிக வர்த்தக யோகம் அமையும். ஒருவருக்கு சனி நடைபெறும்போது திடீர் ராஜயோகத்தைக் கொடுத்துவிடும். விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் வந்து அமரும் சனி ஒருவருக்கு பண வரவைத் தந்து சுப விரயத்தை ஏற்படுத்தும். இரண்டாம் வீட்டில் பொங்கு சனியாக அமரும்போது அளப்பரிய தனத்தையும் பொன், பொருள் யோகத்தையும் கொடுக்கும்.

நன்றி;தினகரன்.
================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...