Followers

Saturday, May 2, 2020

வட்டிப் பணம், சேரச் சேர, என் மனைவியின் ஆணவமும், கர்வமும் வளரத் துவங்கியது.
இந்நிலையில் தான், இன்று நான், பதற்றப்படுவதற்கு காரணமான, அந்த சம்பவம், நிகழ்ந்தது...................
என்றும் அன்பான வணக்கம் சகோ / தோழமையே.................
நண்பேன்டா!...............
சாமிநாதன், இறந்து விட்டதாக, அவனது கடைசி மகள் வந்து சொல்லி விட்டு போனாள்; எனக்கு ஒரே பதற்றமாக இருந்தது.
நானும், சாமண்ணா என்று அழைக்கப்படும் சாமிநாதனும் ஒரே வகுப்பில், ஒரே டெஸ்க்கில் அமர்ந்து படித்து, வளர்ந்தவர்கள்.
நான், பள்ளி செல்லாத நாட்களில், வகுப்பில் நடந்த பாடங்களை, அவன் தான் எனக்கு விளக்குவான்.
இருவருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் அப்பா, வளையல் வியாபாரி; அவன் அப்பா, சிறிய சீட்டுக் கம்பெனியில், குமாஸ்தா. சொற்ப வருமானம்; இவன் தான் முதல் பிள்ளை; மற்ற மூவரும், பெண்கள். இளமையிலேயே வறுமை.
அதனால், அவன் என்னை போல, பத்தாம் வகுப்பு வரை படிக்க முடியவில்லை. எட்டாம் வகுப்போடு படிப்புக்கு, 'குட்பை' சொல்லி, மளிகை கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து விட்டான்.
நான், என் தந்தையின் கடையை விஸ்தரித்து, வியாபாரத்தை விருத்தி செய்தேன்.
எல்லார் வாழ்விலும் வருவது போல, எங்கள் வாழ்விலும், திருமணம் வந்தது; அவன் திருமணத்திற்கு பின் தான், என் திருமணம் நடந்தது.
அவனுக்கு வாய்த்தவள், உத்தமி; ஏழையானாலும், அடக்கமானவள்; பரம சாது. அவனுக்கு, மூன்று பெண் குழந்தைகள்; ஆண் வாரிசு இல்லை.
எனக்கு, குடி, புகை பிடிக்கும் பழக்கத்தோடு, கொஞ்சம் பொய் சொல்லும் பழக்கமும் ஒன்றன் பின் ஒன்றாக, தொற்றிக் கொண்டது.
எப்போதாவது, சந்தோஷமாகவோ அல்லது துக்கமாகவோ இருந்தால், மதுபான கடைக்கு செல்வேன்.
வழியில், அவன் எங்காவது தென்பட்டால், கம்பெனி கொடுக்க சொல்வேன். சில சமயம் வருவான்; பல சமயம் மறுப்பான். இப்படி எங்கள் நட்பு தொடர்ந்தது.
இதினிடையே, எனக்கு, குடல் இறக்க ஆபரேஷன் நடந்ததால், திருமணம் செய்விக்க தயங்கினர், என் பெற்றோர்.
சாமண்ணா தான், அவர்கள் பயத்தை போக்கி, எனக்கு திருமணம் செய்து வைக்க, அவர்களை வற்புறுத்தி, சம்மதிக்க வைத்தான்.
எனக்கு வாய்த்த மகராசி பெயர் ராதா; அந்த காலத்து, எம்.ஆர்.ராதாவை நினைவுபடுத்தும், வில்லத்தனம் நிறைந்தவள். வீட்டிற்கு ஒரே பெண் என்பதால், கட்டுப்பாடு குறைவு; செல்லம் அதிகம். யாரையும் உதாசீனமாக பேசுவாள். என் வியாபாரம் சரிந்திருந்த நிலையில், அவள் தந்தை பணம் கொடுத்து, ஸ்திரபடுத்தியதால், நானும், அவள் சொல்லுக்கு அடிபணிய நேரலாயிற்று.
பற்றாக்குறைக்கு, வீட்டிலேயே, லேவா தேவி வியாபாரம் செய்ய துவங்கினாள். வீட்டில் வேலை செய்தபடியே சம்பாதிக்கட்டுமே என்று நானும் கண்டுகொள்ளாமல் இருந்தேன்.
வட்டிப் பணம், சேரச் சேர, என் மனைவியின் ஆணவமும், கர்வமும் வளரத் துவங்கியது.
இந்நிலையில் தான், இன்று நான், பதற்றப்படுவதற்கு காரணமான, அந்த சம்பவம், நிகழ்ந்தது.
அன்று, வியாபாரம், 'டல்'லடித்ததாலும், மழை வரும் போல் இருந்ததாலும், சீக்கிரமே கடையை பூட்டி, வீட்டிற்கு வந்தேன். வழக்கம் போல் என் மனைவி வட்டி வசூலுக்கு எங்கோ சென்றிருந்தாள்.
சாப்பிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில், கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, விழித்தேன். 'இந்த நேரத்தில், ராதா வர வாய்ப்பில்லயே... சாயந்திரம், 5:00 மணிக்குத் தானே வருவா; மணி, 3:00 தானே ஆகுது; யாராக இருக்கும்...' என, எண்ணியபடி, கதவை திறந்தேன்.
வாசலில் சாமண்ணா தான் நின்றிருந்தான்.
'வாடா சாமா... என்ன இந்த நேரத்தில; உள்ளே வா...' என்றேன்.
'ராதாம்மா இல்லயா?'
'ஏன் அவள கேட்கிறே... அப்போ என்னை பாக்க வரலயா...' என்று கேட்டு, சீண்டி, 'சரி... என்ன விஷயம்ன்னு சொல்லு... அவ, 5:00 மணிக்கு தான் வருவா; வெளியே போயிருக்கிறா...' என்றேன்.
'ஒண்ணுமில்ல; உனக்கு தான் தெரியுமே... என் மூத்த மக, பிரசவத்துக்கு வந்துருக்கா. இது, அவளுக்கு தலை பிரசவம்; நாங்க தான் செய்யணும்... நாலு நாளைக்கு முன், மீனாட்சி நர்சிங் ஹோம்ல சேர்த்தேன்; 'நார்மல் டெலிவரி' ஆகும்ன்னு நினைச்சேன். கடைசியில், 'சிசேரியன்' செய்து தான், குழந்தைய எடுத்தாங்க. மருத்துவச் செலவு, எக்கச்சக்கமா ஆயிருச்சு. குழந்தையையும், பொண்ணையும் காப்பாற்றியே ஆகணும்ன்னு நினைச்சதுல, அப்போ பணத்தை துச்சமாக நினைச்சுட்டேன். எப்படியோ கஷ்டப்பட்டு, 20 ஆயிரம் ரூபாய் கட்டிட்டேன்.
'மீதம், 50 ஆயிரம் ரூபாய் கிடைச்சா, 'டிஸ்சார்ஜ்' செய்து, கூட்டி வரலாம்; அதான், ராதாம்மாவிடம், வட்டிக்கு வாங்கலாம்ன்னு வந்தேன்...' என்றான்.
'டேய் பைத்தியகாரா... அவள பற்றி தான் உனக்கு தெரியுமே... மீட்டர் வட்டி, ஆட்டோ, ஸ்பீடு வட்டின்னு ஆளுக்கு தகுந்த மாதிரி, வட்டி வாங்கும் கில்லாடி; சரியான பொம்பள ரவுடி. வட்டி வரா விட்டால், ரோட்ல நின்னு அசிங்க அசிங்கமா பேசுவா... அவ கிட்ட போயி, கடன் கேட்டு வந்திருக்கீயே... சரி... நீ அசல் மட்டும் தந்தா போதும்; இப்போ, என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல; 10 ஆயிரம் ரூபா தான் இருக்கு; அதை வைச்சுக்க. நாளைக்கோ அல்லது மறுநாளோ நான் ஏற்பாடு செய்றேன் கவலைப்படாத... இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்; என் மனைவிக்கு தெரிஞ்சா உன்னோடு சேர்த்து என் பாடும் திண்டாட்டமாகிடும்...' என சொல்லியபடியே, 10 ஆயிரம் ரூபாய் எடுக்க, உள்ளே போக எழுந்தேன்.
அப்போது, மீண்டும் வாசற்கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்தேன்.
பக்கத்து தெரு, பத்மநாபன் நின்றிருந்தார்.
'சார்... ராதாம்மா இல்லயா...' என்று கேட்டார்.
'சரியா போச்சு... இவனும், ஏதோ பணமுடைக்கு தான் வந்துருப்பான் போல... இல்லன்னா அவளத் தேடி யாரு வருவா...' என நினைத்தேன்.
என் மனைவியைத் தேடி ஒருவர் வந்தால், ஒன்று பணம் வாங்க வரணும் அல்லது வட்டி கொடுக்க வரணும். ரெண்டையும் தவிர, அவளை பார்க்க, யாரும் வர்றதில்லை. ஏன், அவளது பெற்றோரே வர்றதில்லன்னா பார்த்துக்கங்க!
'அவ சாயந்திரம் தான் வருவா; உங்களுக்கு என்ன வேணும்... ஏதும் விஷயம் இருந்தா சொல்லுங்க; வந்ததும் சொல்லிடுறேன்...' என்றேன்.
'ஒண்ணுமில்ல; என் மனைவி, பொண்ணு காலேஜ் அட்மிஷனுக்காக, இரண்டு லட்ச ரூபாய், ராதாம்மாகிட்ட கடன் வாங்கி இருந்தா; அதில வட்டியும், அசலுமாக சேர்த்து, 50 ஆயிரம் ரூபா கொண்டாந்திருக்கேன். இதை, அவங்ககிட்ட கொடுத்துடுறீங்களா... அப்புறம் அவங்கள பாத்து பேசிக்கிறேன்...' என்றவர், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளாக, 25 தாள் அடங்கிய, பணப்பையை, என்னிடம் தந்தார்.
பணத்தை வாங்கிய நான் மகிழ்ச்சியில் குதித்தேன்.
'டேய் பாருடா... உன் நல்ல மனசுக்கு லட்சுமி தேவியே, தேடி வந்துட்டா. இந்தா... இதை கொண்டு போய், ஆக வேண்டிய வேலைய கவனி; நான், என் பொண்டாட்டிய எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்...' என்று சொல்லி, அவனது தயக்கத்தை போக்கி, அனுப்பி வைத்தேன்.
அதன்பின், அந்த கிராதகி ராதா வந்தால், என்ன பொய் சொல்லி சமாளிக்கலாம் என்று ஆழ்ந்து, யோசிக்க துவங்கினேன்.
வழக்கம் போல ஒரு, 'பெக்' போட்டால், ஐடியா தானே வந்து விட்டு போகிறது என்று எண்ணி, வண்டியை எடுத்து, டாஸ்மாக் கடைக்கு சென்றேன்.
அன்று, என்ன காரணத்தாலோ, 'மப்பு' தலைகேறி விட்டது போலும். என், இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போது, இரவு, 8:00 மணி. கொஞ்ச தூரம் தான் பயணித்திருப்பேன்; கண் இருட்டியது. பின், என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
வேலை முடிந்து அந்த வழியாக வந்த சாமண்ணா, என்னை பார்த்திருப்பான் போலும். அவன் தான் என்னையும், வண்டியையும் பத்திரமாக, வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்திருந்தான். அரை மயக்கத்தில், இதையெல்லாம், என்னால் உணர முடிந்தது.
வீட்டிற்கு வந்த போது, ராதா, பத்ரகாளியா கத்துவது என் காதில், துல்லியமாக விழுந்தது.
'இந்த மனுஷனுக்கு, இதே பொழப்பா போச்சு; நேரம், காலம் இல்லாம குடிச்சிட்டு வர்றது... என் அப்பாகிட்ட சொல்லி, இதற்கு ஒரு வழி செய்தே ஆகணும்...' என்று சாமண்ணாவிடம் சொல்வதையும், அதை, அவன் மவுனமாக கேட்பதையும் அரை மயக்கத்தில் உணர முடிந்தது.
மெதுவாக, என்னை படுக்கையில் கிடத்தியவள், சட்டென திரும்பி, 'ஆமாம்... பத்மநாபன் கொடுத்த பணத்தை, எங்க வைச்சுருக்கீங்க...' கனலாய் தெறித்தது அவள் குரல்!
'அதற்குள், பத்மநாபன், விஷயத்தை இவள் காதில் ஊதிட்டானா... அடக் கடவுளே... என்ன சொல்லி சமாளிப்பது...' என, தடுமாறிய வேளையில், மீண்டும் அக்னி பிழம்பாய், அவள் கேட்க, 'மப்'பில் இருந்த நான், பயத்தில் போலீஸ்காரர்களிடம், குற்றவாளிகள் உளறுவது போல, உண்மைகளை கக்கி விட்டேன் என்பது, காலையில், அவள் சொல்லி தான், எனக்கே தெரிந்தது.
சாமண்ணாவுக்கு, அவசரமாக பணம் தேவைன்னு, அவன், மூணு நாளாக நச்சரித்ததாகவும், அதனால், அந்த பணத்தை, அவனுக்கு தந்து விட்டதாகவும், இன்னும், மூன்று மாதத்தில், வட்டியுடன் சேர்த்து தந்து விடுவதாகவும் கூறியுள்ளேன்.
யாரிடம் சொல்லக் கூடாது என்று, தலைப்பாடாய், சாமண்ணாவிடம் முட்டிக் கொண்டேனோ, அவளிடமே, நானே எல்லாத்தையும் உளறி கொட்டியுள்ளேன். இந்த பாழும் குடியால், எந்தவொரு நல்ல காரியமும் செய்ய முடியவில்லை.
சாமண்ணா இறந்து விட்டான் என, அவனது மகள் வந்து சொன்ன போது, நல்லவேளையாக, என் மனைவி வெளியே போயிருந்தாள். கொஞ்ச நேரத்தில் வந்து விடுவாள்... அதன்பின் என்ன நடக்குமோ நினைத்துப் பார்க்கவே, பயமாக இருந்தது.
பணம் தான் அவளுக்கு முக்கியம்; சாவு வீடு என்று கூட பார்க்க மாட்டாள். பணம் செட்டில் செய்யா விட்டால், சாமண்ணா பிணத்தை எடுக்க கூட, சம்மதிக்க மாட்டாள்.
சவ ஊர்வலமும் எங்கள் வீட்டை தாண்டி தான் போக வேண்டும்; சாமண்ணா மனைவி பரம சாது; அவள் கணவனை இழந்த துக்கத்தில் பிணத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வாளா, பணத்துக்கு ஏற்பாடு செய்வாளா... 'கடவுளே என்ன செய்வேன்... புரட்டக் கூட, என்னிடம் அவ்வளவு பணம் இல்லயே... இறைவா... நீ தான், ஏதாவது வழி காட்டணும்...' என்று புலம்பித் தவித்தேன்.
நான் பயந்த மாதிரியே, அரக்க பரக்க உள்ளே வந்த ராதா, நான் சோகமாக இருப்பதை பார்த்ததும், ''உங்க நண்பர் சாமண்ணா, இறந்துட்டாராமில்ல... ஆமாம், உங்க கிட்ட வாங்கின, 50 ஆயிரம் ரூபாய கேட்டீங்களா... பத்திரமும் கிடையாது; பாண்டும் இல்ல. எந்த ஆதாரமும் இல்லாம, கொடை வள்ளல் பரம்பரை போல, அள்ளி கொடுத்துட்டீங்களே... சீக்கிரம் போய் கேளுங்க; அப்புறம், கூட்டம் சேர்ந்துட்டால், காரியம் கெட்டுப் போயிடும்,'' என்றாள்.
'அடி பாதகி... இறந்தவன், என் நண்பன்; துக்கத்தில் இருக்கும் அந்த குடும்பத்தினருக்கு, ஆறுதல் சொல்றத விட்டு, எப்படிடீ என்னால பணத்தை போயி கேட்க முடியும்... கடவுளே... இந்த ராட்சசி கிட்ட இருந்து தப்பிக்க எனக்கு சக்தி கொடு...'என எண்ணியவனுக்கு, திடீரென்று அந்த ஐடியா வர, சட்டென்று எழுந்தேன்.
'இப்ப தான் நீங்க சிங்கம்... சீக்கிரம் போங்க; எவ்வளவு தந்தாலும், வாங்கிட்டு வந்துருங்க,'' என்றவளை, முறைத்து, பின், அவள் காலடியில், 'தொபுக்கடீர்' என விழுந்தேன்.
''என் கால்ல எதுக்கு விழுறீங்க...'' என்று சிடுசிடுத்த அந்த வட்டி புயல், புரியாமல் என்னை பார்த்து, ''உங்க நண்பர் இறந்தது சோகம் தான்; அதுக்காக, நமக்கு வர வேண்டியத கேட்காம இருக்க முடியுமா... உங்களுக்கு, சங்கடமாக இருந்தா, நானும் கூட வர்றேன்; புறப்படுங்க,'' என்றவளை தடுத்து, ''ராதா... என்னை மன்னிச்சுடு; நான் இப்போ, சொல்லப் போறதை கேட்டு, நீ ஆத்திரப்பட்டாலும் சரி, என்னை, என்ன வேணும்ன்னாலும் செய்துக்க...
''அன்னைக்கி உண்மையில என்ன நடந்ததுன்னா... பத்மநாபன் கொடுத்த பணத்த, பீரோவில் வைக்க மறந்து, பேன்ட் பாக்கெட்டில் வைச்சுருந்தேன். அளவுக்கு மீறி குடிச்சிருந்ததால, நான் அசந்த நேரத்தில, எவனோ அந்த பணத்தை களவாடிட்டான். அந்த சோகத்தில் தான், கண்மண் தெரியாமல் குடிச்சு, ரோட்டுல விழுந்து கிடந்தேன். நீ திட்டுவேன்னு பயந்து, சாமண்ணாவுக்கு கொடுத்ததாக, பொய் சொல்லிட்டேன்.
''நீ வேறு, அன்னைக்கு ரொம்ப கோபத்தில இருந்தியா... அப்புறமா, மெல்ல உண்மைய சொல்லி, உன்னை சமாதானபடுத்தலாம்ன்னு நினைச்சிருந்தேன். ஆனா, அதற்குள், சாமண்ணா திடீரென்று இறந்து, இந்த உண்மைய சொல்ல வைச்சுட்டான்,'' என்றேன்.
கடுஞ் சீற்றத்துடன் திரும்பிய ராதா, ''பாழா போன உங்க குடி பழக்கத்தால, அந்த நல்லவரை சந்தேகப்பட்டேனே... ஒண்ணா, ரெண்டா... 50 ஆயிரம் ரூபாய் ஆச்சே... என் வயிறு பற்றி எரியுதே... இன்னும், இதுமாதிரி எத்தனை விஷயங்கள, என்கிட்ட இருந்து மறைச்சு வச்சுருக்கீங்க... காசு அருமை தெரியாத, எருமை மாட்டு ஜென்மம்.
''என் அப்பாவை வரவழைச்சு, முதல்ல, உங்கள விவகாரத்து செய்துட்டு தான், மறுவேலை. பாவி மனுஷா... என்னவொரு பொய், பித்தலாட்டம் அதுவும், கட்டின பொண்டாட்டி கிட்ட... அதுதான், என் வயித்துல ஒரு புழு, பூச்சி கூட தங்க மாட்டேங்குது,'' என்று கத்தி, படாரென்று, அவள் அறை கதவை சாத்தி, படுக்கையில் விழுந்தாள்.
'இதுமாதிரி அவள், இன்னும் எத்தனையோ நாட்கள் ஏன் மாதங்கள் கூட, வசை பாடுவாள்; கரித்து கொட்டுவாள்; சினத்துடன் சீறுவாள்; வார்த்தைகளை, அக்னி குழம்பாக கரைத்து, என் மீது வீசுவாள்; ஏன், விவாகரத்தே ஆனாலும் பரவாயில்லை... இறந்து போன என் நண்பனுக்காக சகித்துக் கொள்வேன்.
'நான் சொன்ன பொய், அவன் குடும்பத்தாரை, என் மனைவியின் கொடூரமான பண பார்வையிலிருந்து காப்பாற்றி விட்டது; அது போதும்...' என நினைத்துக் கொண்டேன்.
தெருவில், தாரை, தப்பட்டை சத்தம் கேட்கத் துவங்கியது. தன், இறுதி பயணத்தை துவங்கி விட்டான், சாமண்ணா. சத்தம், வீட்டிற்கு அருகே வந்த போது, ராதாவின் அறை கதவு திறந்தது. வெளியே வந்து, சாமண்ணாவின் உடல், தன் வீட்டை கடந்து போவதை, கண்ணீர் மல்க, பாசத்தோடு பார்ப்பதை பார்த்து, என் உள்ளம் பரவசமடைந்தது. இதை தானே, எதிர்பார்த்தேன்.
இதுதான், சமயம் என்று, சாமண்ணாவின், சவ ஊர்வலத்துடன், சங்கமித்து ஒன்றினேன், மனநிறைவோடு!
டி.கே.சுகுமார்
ஆக்கியோனுக்கு அன்பு நன்றி ஐயா............
courtesy of Varamalar.
===============================================
அன்புத்தோழமைகளே.............................
படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்.......................
உங்கள் விருப்பத்தையும் அறிய ஆவல்...
.நன்றி.
அழகிய இனிய காலை வணக்கம்அன்பு நெஞ்சங்களே!!
இறைவன் நினைவே இனிய நாள்!
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!!
-என்றும் அன்புடன் சகோதரன்,
Vickna sai.
===========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...