Followers

Tuesday, March 3, 2020


Image may contain: 2 people, people standing and outdoor

அடையை சாப்பிட்டவாறே, ''நல்லாயிருக்கும்மா... உங்கம்மா, ஒருநாள் கூட இப்படி ருசியா செய்ததில்ல,'' என்றார். ''ஆமாம்... என்னைக்காவது ஒருநாள் மகள் செய்தா உங்களுக்கு அதிசயமாத்தான் இருக்கும்,'' என்ற, அம்மாவைப் பார்த்து, 'கலகல' வென்று சிரித்தாள் ஆர்த்தி...............


எல்லோர்க்கும் என்றும் இனிய அன்பு வணக்கங்கள் சகோ தோழமை களே.....................


மனமது செம்மையானால்!................


''அப்பா... வரகரிசி அடை செஞ்சுருக்கேன்; சாப்பிட்டு பாருங்க. உடம்புக்கு ரொம்ப நல்லது,'' ஓய்வாக உட்கார்ந்திருந்த அப்பாவிடம் தட்டை நீட்டினாள் ஆர்த்தி.
அடையை சாப்பிட்டவாறே, ''நல்லாயிருக்கும்மா... உங்கம்மா, ஒருநாள் கூட இப்படி ருசியா செய்ததில்ல,'' என்றார்.


''ஆமாம்... என்னைக்காவது ஒருநாள் மகள் செய்தா உங்களுக்கு அதிசயமாத்தான் இருக்கும்,'' என்ற, அம்மாவைப் பார்த்து, 'கலகல' வென்று சிரித்தாள் ஆர்த்தி.


மகளை யோசனையோடு பார்த்த குணாளன், 'பிடித்த பாடமாக ஹோம்சயின்ஸ் எடுத்துப் படித்து, வீட்டை பார்த்து பார்த்து அலங்கரிக்கிறாள். விதவிதமாக சமைக்கிறாள். பிரமாதமாக கைவேலை செய்கிறாள்; காலேஜ் முடித்து, மூணு வருஷம் ஆகிருச்சு. இந்த வருஷமாவது எப்படியாவது கல்யாணம் செய்து வைத்திடணும்...' என, நினைத்தார்.


ஆர்த்தி நல்ல அழகு, நிறம்; அசப்பில் நடிகை சிநேகாவை நினைவுபடுத்தும் முகம். இவளுக்கு பொருத்தமாக மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே!
தன் புரோக்கர் நண்பருக்கு போன் செய்து, ''ஆர்த்திக்கு பொருத்தமான, நல்ல ஜாதகமா கொண்டு வாய்யா,'' என்றார்.


மாலையிலேயே ஜாதகத்தோடு வந்தார் புரோக்கர்.
''பையன் பேர் பிரதீப்; இன்ஜினியரிங் முடிச்சிட்டு, ஐ.டி., கம்பெனியில வேலை பாக்குறான். நல்ல சம்பளம்; ஒரே பையன். கூடப் பிறந்தவங்கன்னு எந்த பிக்கல், பிடுங்கலும் இல்ல; நம்ம ஆர்த்திக்கு பொருத்தமா இருப்பான்,'' என்றார்.
ஜாதகம் பார்த்ததில் பொருத்தம் சரியாக இருந்ததால், பெண் பார்க்க வரச் சொன்னார் குணாளன்.


காரில், பெற்றோருடன் வந்திறங்கிய பிரதீப்பை பார்த்ததுமே, எல்லாருக்கும் பிடித்து விட்டது. அவனும் நல்ல நிறம், உயரம். நிக்கோட்டின் கறை இல்லாத, மெல்லிய ஆரோக்கியமான உதடுகள்; அளவான மீசை, தலைமுடியை ஒழுங்காக வெட்டி, வாரி இருந்தான். மெல்லிய நீலக்கலர் சட்டை போட்டிருந்தான்.
தட்டில் பாதாம் அல்வாவை எடுத்து வந்து எல்லாருக்கும் கொடுத்தாள் ஆர்த்தி.


'எங்களுக்கு சுகர் இருக்கும்மா; வேணாம்...' என்றனர் பிரதீப்பின் பெற்றோர்.
காரமும் வேண்டாமென்று மறுத்து, காபியை மட்டும் பாதி குடித்தனர். ஸ்பூனால், நாசூக்காக ஸ்வீட்டை சிறிது எடுத்து சாப்பிட்டான் பிரதீப்.
''தினமும் பைவ் ஸ்டார் சாப்பாடு... அடிக்கடி பார்ட்டின்னு போயிடுவான்; வீட்டு சாப்பாடே எப்போதாவது தான்,'' என்றாள் அவன் அம்மா பெருமையோடு!


''வருஷத்துக்கு ஒருமுறை பாரீன் டூர் போகலாம்; உங்க பெண் கொடுத்து வைச்சவ,'' தன் பங்குக்கு கூறினார் அவனுடைய அப்பா.


ஆர்த்திக்கு, விளம்பரங்களில் வரும் பெண்களைப் போல அழகழகாக, மாடர்னாக உடையணிந்து பிரதீப்புடன் ஸ்விஸ், பாரிஸ் என்று ஊர் சுற்றும் கனவு, கண்களில் விரிந்தது.


அடுத்து, வரதட்சணை பற்றிய பேச்சு வந்தபோது. பிரதீப்பின் அம்மா, ''எங்களுக்கு ஆர்த்தியை ரொம்ப பிடிச்சிருக்கு; நூறு பவுன் நகை போட்டு, 10 லட்சம் ரூபா ரொக்கமும், காரும் தர்றதா நிறையப் பேர் வர்றாங்க... உங்களுக்கும், ஒரே பொண்ணு, குறைவாகவா செய்யப் போறீங்க,'' என்று தன்னுடைய எதிர்பார்ப்பை கூறினாள்.
குணாளனுக்கு, 'திக்'கென்றது. 'இருக்கும் வீட்டையும், ஊரிலிருக்கும் நிலத்தையும் விற்றால் கூட, அந்த அளவு செய்ய முடியுமா...' என, நினைத்தவர், யோசித்து சொல்வதாகக் கூறி, அவர்களை அனுப்பி வைத்தார்.
''குணாளா... இது ரொம்ப பெரிய இடம்; உன் பொண்ணு மகாராணியாட்டம் இருப்பா. எப்படியாவது முடிக்கப் பாரு,'' என்றார் புரோக்கர்.


மனைவி, மகளிடம் பேசிய போது, இருவருக்குமே இந்த இடம் ரொம்பப் பிடித்து விட்டது தெரிந்தது. அதனால், 'நிலத்தை விற்று விடலாம்; வீட்டுக்கு எவ்வளவு லோன் கிடைக்கும்...' என்று கணக்கு பார்க்க ஆரம்பித்தார். அத்துடன், 'இன்னும், ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு; இப்பவே வி.ஆர்.எஸ்., வாங்கினால், கல்யாணத்திற்கு கணிசமான அளவு கையில் பணம் சேர்ந்து விடும்...' என முடிவு செய்தவராக, நிலத்தை விற்பதற்காக கிராமத்திற்கு புறப்பட்டார் குணாளன்.


கிராமத்தில் உள்ள தன் நண்பரிடம் பொறுப்பை ஒப்படைத்தால் போதும்; நல்ல விலைக்கு நிலத்தை விற்று தந்து விடுவார் என்று குணாளன் நினைக்க, நண்பரின் யோசனையோ வேறு மாதிரியாக இருந்தது.


''குணாளா... நாம அவசரப்படுறோம்ன்னு தெரிஞ்சாலே, நிலத்தை அடிமாட்டு விலைக்கு கேப்பானுங்க. நான், ஒண்ணு சொல்லட்டுமா... இப்படி இருக்கறதெல்லாம் வழிச்சுக் கொடுத்திட்டா நாளைக்கு, நீயும், உன் பொண்டாட்டியும் நடுத்தெருவில தான் நிக்கணும். விரலுக்கேத்த வீக்கம் தான் வேணும். எனக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தன், மதுரையில இருக்கான். நல்ல குடும்பம்; தங்கமான பையன். எலக்ட்ரானிக் உதிரி பாகங்களை தயாரிக்கிற கம்பெனியில், மேனேஜரா இருக்கான். பேங்க்ல லோன் போட்டிருக்கான்; சீக்கிரமே தனியா கம்பெனி ஆரம்பிச்சிடுவான். அவங்க வீட்ல பேசிப் பாக்கட்டுமா... இந்த இடம் முடிந்தால், உன் அதிர்ஷ்டம் தான்,'' என்றார்.


மறுவாரமே, ஆர்த்தியை பெண் பார்க்க, குடும்பத்துடன் வந்திருந்தான் கந்தசாமி.


மாப்பிள்ளையை பார்த்து, அதிர்ந்து போனாள் ஆர்த்தி. கந்தசாமி நல்ல கறுப்பு, அவளை விட குள்ளம். 'பெயரைப் பாரு கந்தசாமி... படிப்பாவது இருக்கா... வெறும் டிப்ளமா தான்...' என மனதிற்குள் பொருமினாள். அத்துடன், மாப்பிள்ளையுடன் வந்திருந்த அவன் அப்பா, அம்மா, அக்கா, அக்கா மாப்பிள்ளை, தம்பி, தங்கை என்ற பெரிய பட்டாளத்தையே, வெறுப்புடன் பார்த்தாள். அவள் கொண்டு வந்து வைத்த பலகாரத்தை, நாசூக்கு பார்க்காமல், எல்லாரும் அள்ளி அள்ளி சாப்பிட்டதை பார்த்து, அந்த வெறுப்பு இன்னும் அதிகமாயிற்று.


''அம்மா... உன் மருமக கையால இப்படி ஆக்கிப் போட்டு, நீ சாப்பிட ஆரம்பிச்சா, நம்ம வீட்டு வாசப்படியை இடிச்சு, பெரிசா கட்டணும்,'' என்ற கந்தசாமியின் கமென்ட்டுக்கு, விழுந்து விழுந்து சிரித்தனர்.


'பெரிசா ஜோக்கடிக்கிறானாக்கும்...' என, மனதிற்குள் சலித்துக் கொண்டாள் ஆர்த்தி.
அவர்கள் போன பின், தன் மனைவி, மகளிடம்,


''ஆர்த்தி... இனி நீ தான் முடிவு செய்யணும். பிரதீப் தான் மாப்பிள்ளையா வரணும்ன்னு நீ ஆசைப்பட்டா, நம்ம சொத்தையெல்லாம் வித்தாவது, உனக்கு அவனை கல்யாணம் செய்து வச்சிடுறேன்,'' என்று தன் நிலைமையை எடுத்துச் கூறினார் குணாளன்.


அப்பா கூறிய யதார்த்தம், ஆர்த்தியை தாக்கியது. பிரதீப்புடன் கனவில் டூயட் பாடிக் கொண்டிருந்தவள், நனவுலகுக்கு திரும்பி, வேறு வழியில்லாமல், கந்தசாமியை மணக்க சம்மதித்தாள். ஆனால், திருமண நாள் நெருங்க நெருங்க, 'இவனா எனக்கு கணவன்... இவனுடனா குடும்பம் நடத்துவது... தன் அழகு, படிப்பு எல்லாம் இப்படி வீணாவதற்கா...' என, முகத்தில் சுரத்தேயில்லாமல் வளைய வந்தாள் ஆர்த்தி.
புடவை, நகை என்று எது வாங்குவதிலும் ஆர்வம் இல்லை. கந்தசாமியின் பெற்றோர், முகூர்த்தப் புடவை வாங்க அழைக்க வந்த போது, பிடிவாதமாக உடன் போக மறுத்தாள்.


சம்பந்தி சந்தேகமாகப் பார்த்ததும், 'நாங்க எது சொன்னாலும், செஞ்சாலும் ஆர்த்தி தட்ட மாட்டா; மாப்பிள்ளை பார்த்து எது, 'செலக்ட்' செய்தாலும் சரி தான்...' என்று சமாளித்தார், குணாளன். ஆனால், மனதுக்குள், 'மணமேடையிலும், ஆர்த்தி இப்படியே இருந்தால் என்ன செய்வது...' என, பயந்தார். பத்திரிகை வைப்பதற்காக அக்கா வீட்டுக்குப் போனவர், தன் கவலையை அக்காவிடம் கூறி, புலம்பினார்.
'இவ்வளவு தானே... விடு; நான் எப்படி சரி செய்றேன் பாரு...' என்று சவாலாக கூறவும், ஓரளவு மனச் சமாதானம் அடைந்து வீடு திரும்பினார்.
கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு, நிச்சயதார்த்தம் என்பதால், காலையிலேயே உறவினர்கள் எல்லாரும் வீட்டுக்கு வந்து விட்டனர். காலை சாப்பாடு முடிந்ததும், 'கலகல'வென பேச்சு ஆரம்பித்தது.


குணாளனின் அக்கா, ''தம்பி... நல்ல வேளை... நான் செய்த தப்பை நீ செய்யல... என் ஒரே பெண்ணை, ஒத்தப் பையனா இருக்கற வீட்ல கட்டிக் கொடுத்தேன்; இப்ப என் மக, 'ஏம்மா... என்னை இந்த மாதிரி அத்தை, மாமா, சித்தி, சித்தப்பான்னு, எந்த உறவும் இல்லாத குடும்பத்துல கட்டிக் கொடுத்து, எம்பிள்ளைக்கு எந்த உறவும் இல்லாம செய்துட்டிங்களே'ன்னு புலம்பறா... ஆர்த்திக்கு நாத்தனார், கொழுந்தன்னு நிறைய சொந்தம் இருக்கு. ஒரு விசேஷம்ன்னா ஆர்த்தி வீட்டு மனுஷங்களே போதும்; திருவிழாக் கூட்டமாயிடும்,'' என்றாள்.


அத்தையின் மாப்பிள்ளையோ, ''ஆர்த்திக்கு வரப்போற கணவரை பாத்தேன்; கறுப்பா இருந்தாலும், நல்ல களையா இருக்காரு. குடும்பத்தில, எல்லாருக்கும் சாமி பேரா வச்சிருக்காங்க; கடவுள் பக்தி நிறைய இருக்கும் போல... அப்பறம் இந்த சர்க்கரை வியாதி, பிரஷர்ன்னு எதுவுமே அவங்க குடும்பத்துக்கு கிடையாதுன்னு நினைக்கிறேன்... சாப்பாட்டை வெளுத்து வாங்குறாங்க. நீ கொடுத்து வச்சவ ஆர்த்தி... உன் பிள்ளைகளுக்கும், இந்த பரம்பரை வியாதியெல்லாம் வராது. நீ காலேஜ்ல படிச்ச சமையல் கலைய வச்சு, விதவிதமா சமைச்சுப் போடலாம்,'' என்றார்.
இதைக் கேட்டதும், ஆர்த்தியின் பெரியம்மா பையன்,


''கந்தசாமி காலேஜ்ல எனக்கு ஜூனியர்; காலேஜ் செஸ் சாம்பியன். அதோட, எல்லா கிரிக்கெட் மேட்சிலும் கலந்துக்குவான்; ரொம்ப புத்திசாலி,'' என்றான்.
சித்தப்பாவோ, ''எங்களுக்கு மாப்பிள்ளை குடும்பத்தை, ரொம்ப நல்லாத் தெரியும். ஒவ்வொரு வருஷமும் நாங்க போற டூர்ல வந்திடுவாங்க... ஜாலியா பேசி, டூரையே களை கட்ட வச்சிடுவாரு, என்ன யாமினி...'' என, தன் மனைவியை சாட்சிக்கு அழைத்தார்.
அவளும், ''ஆமாம்'' என்று தலையாட்டியவள்,


''மாப்பிள்ளை, தனியா கம்பெனி ஆரம்பிக்கப் போறாராம்ல, ஒருத்தன் கிட்ட கையைக் கட்டி நிக்காம, நாலு பேருக்கு வேலை கொடுக்கறது நல்ல விஷயம் தானே... ஆர்த்திக்கு பரபரப்பில்லாத, நிதானமான வாழ்க்கை அமைஞ்சிடுச்சு,'' என்றாள்.


மாலை நிச்சயதார்த்தத்திற்கு, ஆர்த்தியின் கல்லூரித் தோழிகள் வர, மண்டபம் களை கட்ட துவங்கியது. ஆர்த்திக்கு அலங்காரம் நடந்த போது, பக்கத்திலிருந்த தோழி தீபிகா, ''நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி...'' என்றாள். தீபிகாவின் அப்பா, பேங்க் மேனேஜர், அம்மா, காலேஜ் புரொபசர். நல்ல வசதியான குடும்பம்; அழகிலும் தீபிகா, ஆர்த்தியை விட ஒரு படி மேல்.


''ஆர்த்தி... உன் உட்பி, எங்க அப்பா பேங்க்ல தான் தொழில் துவங்க, லோன் அப்ளை செய்திருக்கார். இன்னும், ஒரு மாசத்துல லோன் கிடைச்சிடுமாம்... 'பையன் நல்ல கேரக்டர்; சீக்கிரம் முன்னுக்கு வந்திடுவான்'னு அப்பா எனக்கு பேசி முடிக்கலாம்னு கேட்டிருக்கார். ஆனா, அவங்கப்பா ஏற்கனவே உன்னை பேசி முடிச்சிட்டோம்ன்னு சொல்லிட்டாராம். நல்ல வரன் கை நழுவிப் போயிடுச்சேன்னு எங்க அப்பா ரொம்ப வருத்தப்பட்டார்,'' என்றாள்.


அவள் கண்களில் தெரிந்த பொறாமை, ஆர்த்தியை ஆச்சர்யப்பட வைத்தது. மாப்பிள்ளை அழைப்புக்கு கோட்டும், சூட்டுமாக வந்த கந்தசாமியை, அவள் பார்த்த பார்வையில் இப்போது வித்தியாசம் இருந்தது.
மறுநாள் கல்யாணத்தில், ஆர்த்தியின் முகத்தில் தெளிவு. கலகலப்பாக எல்லாருடனும் பேசினாள். தன் கையைப் பிடித்த கந்தசாமியின் கையை, இறுகப் பற்றினாள். அவளைப் பார்த்து கந்தசாமி சிரித்த போது, கறுப்பு முகத்தில் வெண்முத்துக்களாக விரிந்த பற்கள், அவளை மயக்கின. கல்யாணம் முடிந்து, மறுவீட்டுக்கு ஆர்த்தியை அழைத்து சென்றனர்.
குணாளன், தன் அக்கா கையைப் பிடித்து, ''அக்கா... நீங்க சொன்னபடியே ஆர்த்தி மனசை மாத்திட்டீங்களே... என்ன மாயம் செய்தீங்க...'' என்றார்.


''ஒரு மாயமும் இல்ல... மாப்பிள்ளைகிட்ட எதெல்லாம் மைன்ஸ்ன்னு ஆர்த்தி நினைச்சாளோ, அதெல்லாம் மைனஸ் இல்ல, பிளஸ்ன்னு அவளுக்குப் புரிய வைச்சோம். நாங்க யாருமே பொய் சொல்லலயே... உண்மையை, சரியான நேரத்தில, சரியான இடத்தில் சொன்னோம். முதல்லயே வெறுப்பா பாத்தா, கணவனே அன்னியமாயிடுவான். நாலு பேர் அவனை பாராட்டும் போது தான், பொண்டாட்டிகாரிக்கு அவன் மீது ஆசையும், அந்த கணவரைக் கொடுத்த புகுந்த வீட்டையும், நேசிக்கத் தோணும். எப்படியோ நாங்க சொன்ன, 'பாசிட்டிவ்' விஷயங்களினால், ஆர்த்திக்கு மாப்பிள்ளை மேல் இருந்த கசப்பு போயிடுச்சு. அவ புத்திசாலி பொண்ணு; போகப் போக புரிஞ்சு நடந்துக்குவா,'' என்றாள்.


ஆர்த்தியின் சித்தி ''அத்தான்... நாங்க ஆர்த்திக்கு கொடுத்த, 'ட்ரீட்மென்ட்டுக்கு' எங்களுக்கு, 'டிரீட்' கிடையாதா?'' என்று கேட்டாள்.


''ம்... டிரீட் தானே... உன் பொண்ணுக்கு, ஆர்த்திக்கு பாத்த மாப்பிள்ளை மாதிரியே, ஒருத்தனை பாத்திடுவோம்,'' என்ற குணாளளின் பதிலில் எழுந்த சிரிப்பொலி, மண்டபத்தை நிறைத்தது.


என்.சாந்தினி........


அன்பு நன்றி சகோ


================================================


ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !


I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba


When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba


உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். பாபா


Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam


ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே............... "


விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....! முடியும் என்று உன்னை நம்பு...!!"


ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!


அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
====================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...