Followers

Monday, January 20, 2020

யாழ்ப்பாணத்தை அரசாண்ட தமிழ் மன்னன்! இன்றும் வரலாறு சொல்லும் மந்திரி மனை..................


தனக்கே உரித்தான பல இயற்கை கொடைகளையும், வரலாற்றுச்சின்னங்களையும் தன்னகத்தே காத்துவருகின்றது யாழ்ப்பாணம்.
முப்பது வருட கால கோர யுத்தத்தில் பல வரலாற்றுப் பொக்கிஷங்கள் அழிவடைந்திருந்தாலும்கூட அதையும்தாண்டி பல தொன்மையான அம்சங்களை இன்றும் யாழ். மண்ணில் காணக்கூடியதாகத்தான் உள்ளது.
இவ்வாறு, யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் அமைச்சருக்காக கட்டப்பட்ட மாளிகையே மந்திரிமனை என அழைக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலுக்குக் கிழக்கே 900 மீற்றர் தூரத்தில் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோயிலின் தென்திசையில் சங்கிலியன் தோப்பும் அதற்கு எதிர்ப்புறமாக பழைய கட்டடமாகத் தோற்றமளிக்கும், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய புராதன அரசவாசஸ்தலமான மந்திரி மனையும் யாழ்ப்பாணத் தமிழரசின் சின்னமாக இன்றும் விளங்குகின்றன.
மந்திரிமனையும் அதனுடன் அமைந்துள்ள வளவுமாக 9 பரப்பு 10.60 குழி நிலப்பரப்பைக் கொண்ட ஆதன மானது, 02.03.2007 திகதியிடப் பட்ட 1486 இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் தொல் பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு உரியதாக உள்வாங்கப்பட்டிருந்தது.
1519 இல் செகராசசேகரன் முடிக்குரிய அரசானாக முடிசூடியதும், அவனுடைய பிரதம அமைச்சராக பரநிருபசிங்க முதலி பொறுப்பேற்றார். அவருக்கான அரச வாசஸ்தலமாகவே இந்த மந்திரி மனை அமைச்கப்பட்டுள்ளது.
சிங்கைப் பரராஜசேகரனினதும் ( 1478-1519) வள்ளியம்மை அரசகேசரியினதும் புதல்வனான பரநிருபசிங்க முதலி ஒரு இளவரசனாக இருந்தபோதிலும்,வேறு வழியின்றி பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக இது இருந்ததால், இங்கேயே அரச சபையின் புலவர்களும், அறிஞர்களும் தங்கியிருந்தனர்.
அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த நுழைவாயிலைக் கொண்ட மந்திரி மனை ஐரோப்பிய மற்றும் திராவிடக் கட்டட வடிவமைப்பைக் கொண்டதாக விளங்கும் இது. இரட்டைத் தன்மையான கட்டடக் கலை நிபுணத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது.
இதன் பின்பகுதி திராவிடக் கட்டட வடிவமைப்பையும் முன் பகுதி பின்னர் டச்சுக் காரரால் நல்லூர் இராசதானி கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களது காலத்திற்குரிய டச்சுக் கட்டிட வடிவமைப்பையும் கொண்டு திருத்தி அமைக்கப்பட்டதால், இன்றைய இரட்டைத் தன்மையானதோற்றத்தைக் கொண்டுள்ளது.
இக்கட்டடத்தில் காணப்படும் மரவேலைப்பாடுகளும், கபோத அமைப்பும் திராவிடக் கட்டட அமைப்பின் பின்னணியையும், வட்டவடி வான தூண்கள், மற்றும் வாசல் வளைவுகள் போன்றன ஐரோப்பிய கலை மரபுகளையும் கொண்டதாக விளங்குகின்றது.
மந்திரி மனை இரண்டு மாடிகளைக் கொண்ட அழகிய பாரம்பரியமான கட்டட வடிவமைப்பைக் கொண்டு விளங்குகின்றது. அதன் உட்பகுதி, மரவேலைப்பாடுகளினாலும், ஏனைய அலங்கார வேலைப்பாடுகளை உடையதாக வும் காணப்படுவது இம் மனைக்கு அழகூட்டுகின்றது..
இம்மாளிகையின் வெளிப்புறமாக கிணறும் அதன் அருகே கொங்கிறீற்றினால் ஆன நீர்த் தொட்டியும் உள்ளது. அதன் உட்பகுதியில் இரகசிய சுரங்கப் பாதையும் இருந்ததுடன், இம்மனையின் பின்புறமாக மூடப்பட்ட நிலையில் உள்ள நிலவறை மண்டபமும் இருந்திருக்கின்றன. இவை பின்னர், முற்றாகவே அழிவடைந்து விட்டன.
யாழ்ப்பாணத் தமிழரசர்கள் நல்லூரில் அரசிருக்கைகள் அமைத்து கோட்டை கொத்தளங்களுடன் ஆட்சி நடத்தினர் என்பதற்கு இன்றும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் சங்கிலித் தோப்பு, யமுனா ஏரி, மந்திரிமனை,வீரமாகாளி அம்மன் கோயில்,கோப்பாய் கோட்டை, பண்டாரக்குளம் ஆகியன சான்றுகளாக விளங்குகின்றன.
ஆனால் இன்று மந்திரிமனையும், சங்கிலியன் தோப்பும், யமுனா ஏரியும் மற்றும் அவற்றோடு சார்ந்த ஏனைய அரச சின்னங்களும் படிப்படியாக அழிவைடைந்து பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இவை மரபுரிமைச் சின்னங்களாகப் பிரகடனப் படுத்தப்பட்டு ஓரளவு பராமரிக்கப்பட்டு வந்தது.
அதேவேளை பிற்காலத்தில் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி செகராசசேகரனின் கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட சிலை அன்று நல்லூருக்கு அழகூட்டிக் கொண்டிருந்தது. ஆனால் பின்னர் அதன் வடிவமைப்பும், தோற்றமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னர் இருந்த சிலையின் கம்பீரமான தோற்றத்தை இன்று காணமுடியவில்லை.
தற்பொழுது பொறுப்பேற்றுள்ள யாழ். மாநகர சபை சுற்றுச் சூழலைப் பேணி வருவதுடன் அவற்றைப் பிறரின் ஆக்கிரமிப்பில் இருந்தும் பாதுகாப்பதில் மாகாண சபையுடன் இணைந்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மந்திரிமனை அமைந்துள்ள காணியை அதன் தற்போதைய உரிமை யாளராகிய சீனிவாசகம்பிள்ளை தம்பிப்பிள்ளை சமாதி நிதியத்தினர் வர்த்தகர் ஒருவருக்குக் குத்தகை அடிப்படையில் வியாபார நோக்கத்திற்காக வழங்கியுள்ளார்.
இந்த வர்த்தகர் மந்திரிமனை அமைந்திருக் கும் அக்காணியை கனரக வாகனங்கள் தரிப்பதற்குப் பாவிப்பதால் அம் மந்திரிமனையின் சூழல் பாதிக்கப்படுவதோடு மந்திரிமனையின் கட்டடமும் சேதமடையும் நிலையிலுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் அவற்றின் உரிமம் தொடர்பாக மந்திரி மனையும் அதனைச் சேர்ந்த காணியும் என்று குறிப்பிடப்படாமை யினால் இக்காணியின் தர்மகர்த்தாக்கள் வியாபார நோக்கததிற்காக இவ்வாறு நடந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது துர்ப்பாக்கியமானது.
இவ்வாறு தமிழ் இராட்சியத்தின் எச்சங்களாக விளங்கும் மரபுரிமைச் சின்னங்களை வேறு எவரும் உரிமை கொண்டாடாத வகையில் மாகாண சபை அவற்றைப் பொறுப்பேற்று வடமாகாணத்தின் மரபுரிமைச் சின்னங்களாகப் பிரகடனப் படுத்தி அவற்றை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேவேளை இத்தகைய வரலாறுகளை எமது குழந்தைகளுக்கும் எடுத்துக் கூறிவர வேண்டியதும், அவற்றை அச்சுருவிலும், இறுவட்டுக்களிலும் பாதுகாத்து வருவதும் நம் ஒவ்வொருவரினதும் கடமையுமாகும்.

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...