Followers

Tuesday, October 19, 2021

 May 10, 2015 at 1:39am  QuotePost OptionsPost by Amritha Varshini on May 10, 2015 at 1:39am

 

Raga – Kalyani – Lyrics by Sri Vaalee – Music & Singer Sri Ilayaraja

 

Shivah Shakthya Yukto Yadi Bhavati Shaktah Prabhavitum

Na Chedevam Devo Na Khalu Kusalah Spanditumapi

Atas tvam Aaradhyam Hari-Hara-Virinchadibhir api

Pranantum Stotum Vaa Katham Akrta-punyah Prabhavati

 

(Soundarya Lahari – Verse 1)

 

Lord Shiva, only becomes able, to do creation in this world along with Shakthi. Without her, Even an inch he cannot move. And so how can, one who does not do good deeds, Or one who does not sing your praise, Become adequate to worship you. Oh, goddess mine, Who is worshipped by the trinity.

 

 

ஸிவ: ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும்

ந சேதேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திது-மபி

அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி

 

சிவன் எனும் பொருளும் ஆதி சக்தியொடு சேரின் எத்தொழிலும் வல்லதாம்; இவள் பிரிந்திடின் இயங்குதற்கு அரிதரிது என மறை இரைக்குமால் நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில், நடத்தி யாவரும் வழுத்து தாள், அவனியின் கண், ஒரு தவம் இலார், பணியல் ஆவதோ பரவல் ஆவதோ

 

பொருள்:

 

அன்னையே! பராசக்தியான உன்னுடன் பரமசிவன் சேர்ந்திருந்தால்தான் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் (ஆக்கல், காத்தல்,அழித்தல்) என்னும் முத்தொழில்களையும் செய்ய முடியும். அவ்வாறில்லையேல் அவரால் அசையவும் இயலாது. எனவே ஹரி, ஹரன், பிரம்மன் ஆகியோர் அனைவரும் போற்றித் துதிக்கும் பெருமை பெற்றவளான உன்னைத் துதிக்க முற்பிறவிகளில் புண்ணியம் செய்யாதவனால் எப்படி முடியும்?

 

 

 

ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

 

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்

சடைவார் குழலும் இடை வாகனமும்!

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே

நின்ற நாயகியே இட பாகத்திலே!

 

ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

 

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்

ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்

தொழும் பூங்கழலே! மலை மாமகளே!

 

அலை மாமகள் நீ! கலை மாமகள் நீ!

ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

 

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த

லிங்க ரூபிணியே மூகாம்பீகையே!

பல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்

பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்!

 

சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!

ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

 

 

 

Last Edit: Feb 27, 2016 at 3:01am by Amritha Varshini

Amritha Varshini

Administrator

*****

 

=================

Sunday, October 17, 2021

 



ஒளவையார் தனிப்பாடல்கள்
புலியூர்க் கேசிகன்

auvaiyAr tanippATalkaL
by puliyUrk kEcikan
In tamil script, unicode/utf-8 format


 


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


ஒளவையார் தனிப்பாடல்கள்
புலியூர்க் கேசிகன்


Source:
ஒளவையார் தனிப்பாடல்கள்
புலியூர்க் கேசிகன்
மங்கை வெளியீடு, சென்னை - 600 018.
நூல் கிடைக்குமிடம் :
கௌரா புத்தக மையம், செயிண்ட் ஜான் சர்ச் வணிக வளாகம்
4.
வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு, சென்னை - 5.
விலை : ரூ. 70.00
*
முதற் பதிப்பு : டிசம்பர் 2010 *
©
உரிமை : பதிப்பகத்திற்கே
-------------

ஒளவையார் தனிப்பாடல்கள்

அகர முதல எழுத்தெல்லாமாகி, சொல்லும் பொருளுமாக விரிந்து, இலக்கியங்களாகவும் இலக்கணங்களாகவும் மலர்ந்து என்றும் இளமையும் இனிமையும் செழுமையும் நிலைபேறாகப் பெற்று விளங்கும் உயர்தனிச் செம்மொழி, நம்முடைய அருமைச் செந்தமிழ் மொழியாகும்! என்று பிறந்ததென்று உணர முடியாததாய், காலத்தால் பழமையும் கருத்தின் ஆழத்தினாலே காலத்தையும் வென்று சிறந்த புதுமையும் உடையதாகத் திகழ்வதும், நம் கன்னித்தமிழ் மொழியாகும்.

மக்களிடத்தே, மக்களின் உள்ளத்து உணர்வுகளைப் புலப்படுத்தும் கருவியாகத் தோற்றம் பெற்று, மக்களின் உள்ள உணர்வும், அவர்களது சிந்தனையும், அவர்களது நாகரிகச் செவ்வியும் அவர்களது வாழ்க்கைச் செப்பமும், படிப்படியாக வளரவளரத் தானும் வளர்ந்து, வளமார்வண்தமிழ்' என்னும் புகழுடன் திகழ்வதும் நம் தமிழ்மொழி ஆகும்.

உலகத்துப் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நாடோடி வாழ்வினராகவும், விலங்குகளோடு விலங்குகளாகவும், அறிவுத் தோற்றம் அற்றவராகவும் வாழ்ந்த அந்தப் பழைய நாளிலேயே, பல்லாயிரம் ஆண்டுகட்கும் முற்பட்ட அந்தத் தொன்மைக் காலத்திலேயே, இலக்கண அமைதியுடையதாகவும், இலக்கியச் செறிவு உடையதாகவும், ஏற்றம் பெற்றிருந்ததும் நம் செந்தமிழ் மொழி ஆகும்.

முடியுடைய மன்னர்கள் போற்றிப் புரந்துவர, முத்தமிழ்ப் பாவலர்கள் பாடிப் பரவிப் பண்படுத்திவர முத்தமிழ் நாட்டினரும் முழு ஆர்வத்துடன் ஏற்று இன்புற்று பாசத்துடன் எழில் பெருக்கிக் காத்துவரக், காலப்போக்கிலே அழிந்தும் ஒழிந்தும் சிதைந்தும் சீர்கெட்டும் போன பற்பல தொன்மைக்கால மொழிகளைப்போல் அல்லாது, அன்றும் இன்றும் ஒன்றுபோல, உயரிய செல்வமாக, என்றும் தன் எழில் நலம் குன்றாது நிலைபெற்றிருப்பதும், இனநலம் காப்பதும் நம் தமிழ்மொழி ஆகும்.

இத்தகைய செழுந்தமிழ்த் தாயின் திருத்தொண்டிலே தம்மை ஈடுபடுத்திச் சிறந்தோர், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த குமரவேளும், இந்திரனும், அகத்தியரும், நக்கீரரும், கபிலரும், பரணரும் மற்றும் பலருமாவர். இவர்களுள், தெய்வங்க ளாகத் திகழ்ந்த சிறப்பினரும், முனிவர்களாகி முற்றறிவுடையவராக
உயர்ந்த நிலையினரும், குலத்தாலும் குடியாலும் தொழிலாலும் நிலையாலும் தம்முள் வேறுவேறாக இருந்தோரும் பலராவர். எனினும், 'தமிழ்' என்ற தாயின் திருப்பணியிலே, இவர்கள் எல்லாரும் ஒன்றாகி உயர்ந்து பணி செய்து போற்றியிருக்கின்றனர்; தாம் போற்றுதலைப் பெற்று இருக்கின்றனர்.

முதலிடைகடை என்ற முச் சங்கங்களால் ஆய்ந்து தெளிந்து பேணப்பட்ட செழுந்தமிழ், அந்தச் சங்கங்களின் மறைவுக்குப் பின்னரும், அவ்வப்போது தோன்றிய சான்றோர் பலரால் பேணப்பட்டு வளர்ந்திருக்கிறது. தமிழ் வளர்ச்சியின் இந்தத் தொடர்ந்த வரலாறு, தமிழ் இலக்கியச் செல்வங்களிலே ஊடாடி உணர்ந்து இன்புற நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

தமிழ் வளர்த்த புலமைச் செறிவுடன் திகழ்ந்தவர்களுள், ஆண்களைப் போலவே பெண்களும் பலராவர். கடைச்சங்க நூற்களில் ஒளவையார், வெள்ளிவீதியார், ஆதிமந்தியார், பூதப்பாண்டியன் தேவியார் போன்ற பலரைக் காணுகின்றோம். நா மகளைக் கல்வியின் தெய்வமாக ஏற்றிக்கூறும் பாரத நாட்டிலே, சிலர் பெண்களுக்கு ஞானத்தை அறிவுறுத்தல் கூடாது; அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்கள் அல்லர்; அவர்கள் பாவப் பிறவிகள்; ஆண்களை ஒட்டி வாழ்ந்து மடிய வேண்டியவர்கள், ஆண்களின் இன்ப சுகத்துக்காகவே ஏற்பட்டவர்கள்' என்றெல்லாம் கூறி, அவர்களைப் பெரிதும் புறக்கணித்திருக்கின்றனர். ஆனால், நம் அருமைத் தமிழகத்திலோ, அந்த நிலை என்றுமே இருந்ததில்லை. தாயான தமிழ், தாய்மார்களிடமிருந்து ஒதுங்கவுமில்லை; அவர்களால் ஒதுக்கப்படவுமில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் மூதாட்டியான ஒளவைப் பிராட்டியாரின் அழகுதமிழ்ச் செய்யுட்கள் விளங்குகின்றன. மக்கள் மனமுவந்து போற்றவும், மன்னர்கள் மனம் விரும்பிப் பேணவுமாக, எளிமையும் அஞ்சாமையும் கொண்டு, இணையற்ற பெரும் புலவராக, மக்கள் தலைவராக ஒளவையார், அந் நாளிலேயே நம் தமிழகத்தில் விளங்கியிருக்கின்றார்.

வள்ளல் பாரியும், மலையமான் திருமுடிக்காரியும், மழவர் கோமான் அதியனும், காஞ்சித் தலைவன் தொண்டைமானும், சோழனும், சேரனும், பாண்டியனும் ஒளவையாரின் சொல்லுக்குக் காட்டி வந்த அளவற்ற பெருமதிப்பினை எண்ணும் பொழுது, பெண்மை அறிவொளியோடு ஒளிக்கதிர் பரப்புங்கால், அந்தப் பேரொளியின் முன்னர், ஆண்மையால் ஆற்றல் மிகுந்தோரும் எளியராகி, அதற்கு அன்பராகி விடுகின்றனர் என்ற உண்மை புலனாகிறது. இப்படி நாடு போற்ற வாழ்ந்த நற்றமிழ்ச் செல்வியரான ஒளவையார், சங்ககால ஒளவையார் என்று குறிப்பிடப் பெறுபவர் ஆவார்.

சங்ககாலத்திற்குப் பின்னால், தமிழகத்தின் அரசியலிலும் வாழ்வியலிலும் பல நூற்றாண்டுகள் பற்பல மாறுதல்களோடு கழிந்தன. அதன் பின்னர், ஏறக்குறையப் பன்னிரண்டாம் நூற்றாண்டின் அளவில், மீண்டும் ஓர் ஒளவையாரைப்பற்றி அறிகின்றோம். கம்பநாடரும், புகழேந்தியாரும், ஒட்டக்கூத்தரும், செயங்கொண்டாரும் மற்றும் புலவர் பெருமக்களும் நிலவிய நாளிலே, அவர்கள் அனைவரும் போற்றும் அறிவுத் திட்பத்துடன் இந்த ஒளவையார் விளங்கினர். இவர் பாடியவையாக நமக்குக் கிடைப்பனவெல்லாம் தனித்தனிச் செய்யுட்களேயாகும். 'பந்தன் அந்தாதி' என்ற ஒரு நூலும், அசதிக்கோவை' என்றொரு கோவையும் இவரால் இயற்றப்பட்டதாகக் கூறுகின்றார்கள். அவற்றுள் கிடைப்பன மிகச்சிலப் பாடல்களே. இந்த ஒளவையார் சிறந்த சிவபக்தராகவும் விநாயகப் பெருமானைப் போற்றி வழிபட்டவராகவும் கூறப்படுகின்றார். இவர் இரண்டாவது ஒளவையார் ஆவார்.

இந்த இரு ஒளவையார்கள் அல்லாமலும், குழந்தை களுக்கென்று ஆத்திசூடி, நல்வழி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற நீதி நூல்களையும், விநாயகர் அகவல் என்ற தோத்திர நூலினையும் ஒருவர் செய்துள்ளார். இவரும் 'ஒளவையார்' என்ற பெயருடன் தமிழ்ப் பெருமாட்டியாகத் திகழ்ந்தவராவார். உயரிய ஒழுக்கங்களையும், சிறந்த நீதிகளையும், எளிதாகவும் இனிதாகவும் படிப்படியே பயிற்றும் ஒரு நல்ல குழந்தைக் கல்வித் திட்டத்தை, முதன் முதலில் உலகிலேயே வகுத்து உருவாக்கியவர் இவர் என்று கூறலாம். இவர் மூன்றாவது ஒளவையார் ஆவார்.

மற்றும், வேதாந்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாக, 'ஒளவைக் குறள்' என்னும் பெயரால் ஒரு நூலும் நம் நாட்டில் நிலவுகிறது. இதனை அமைத்தவர் மேலே குறிப்பிட்ட எந்த ஒளவையாரினும் சேர்ந்தவரல்லர் என்பதனை அந்நூலின் அமைப்பே நன்கு காட்டுகின்றது.

நம் தமிழகத்தில் அறிவுச் செழுமையுடைய சான்றோர்களை ஒட்டி வழங்கும் தெய்விகப் புனைகதைகள் ஒளவையார் வரலாற்றையும் விட்டுவிடவில்லை. ஆதி' என்பவளுக்கும் பகவன்' என்பவருக்கும் பிறந்த குழந்தையாகவும், பிறந்த இடத்திலேயே
பெற்றோரால் கைவிடப்பட்ட மகவாகவும், பாணர் குடியிலே வளர்ந்து பைந்தமிழ் பரப்பிய பெருமாட்டியாகவும் ஒரு கதை நிலவுகிறது.

பாரி மகளிரைத் திருக்கோவலூர் மலையமான் மக்கட்கு மணமுடிக்கக் கருதி சேர, சோழ, பாண்டியரை வரவழைத்து அரிய பல அற்புதச் செயல்களையெல்லாம் செய்தவராகவும், வெட்டப்பட்ட பலாமரம் தழைத்துப் பூத்துக் காய்த்து மீண்டும் நிலைபெறச் செய்தவராகவும், பேயினை வெருட்டியவராகவும், மற்றும் பலவாறாகவும் பலகதைகள் ஒளவையாரின் பெயராலே நிலவுகின்றன. சில தனிப்பாடல்கள் இக் கதைகளின் எதிரொலி யாகவும் அமைந்திருக்கின்றன. இந்த நிலையிலே, ஒளவையாரின் தனிப்பாடல்களைத் தொகுத்து விளக்கத்துடன் தனி நூலாக வெளியிட வேண்டும் என்ற முயற்சியிலே ஈடுபட நேர்ந்தபோது, ஒளவையாரின் பெயரால் விளங்கும் தனிப்பாடல்கள் பலவற்றையும் தொகுத்தபோது, அவற்றால் அறியக்கூடிய செய்திக் குறிப்புக்கள் எந்த ஒளவையாரைக் குறிப்பன என்று எளிதிலே வரையறுக்க முடியாதவைகளாகவே விளங்கின. ஒளவையாரின் வரலாற்றை ஒரு நெறியாக உணர முடியாமல், அங்கங்கே புலப்படும் சிற்சில செய்திகளுடன் மட்டுமே மனநிறைவு அடைய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

ஆகவே, அந்தந்தப் பாடலுக்கு உரியதாக வழங்கப்பட்டுவரும் குறிப்புக்களை, அங்கங்கு அப்படியப்படியே தந்து செல்வதுடன், என் பணியை ஒருவாறு நிறைவேற்றி இருக்கிறேன்.

புலவராக மட்டுமன்றி, மக்களால் போற்றிப் பரவும் தெய்வங்களுள் ஒருவராகவும் ஒளவையார் விளங்குவதை, தென்பாண்டி நாட்டிலே விளங்கும் 'ஒளவையார் கோயில்' களாலும், தென்பாண்டித் திருநாட்டு இல்லுறை தெய்வங்கள், 'ஒளவையார் நோன்பு ' எனத் தமக்கே (பெண்களுக்கே உரித்தாகக் கொண்டாடும் நோன்பினாலும் நாம் அறியலாம்.

'
ஒளவையார்' என்ற பெயராற் பலகாலத்தும் பலர் நிலவியிருந்தனரோ, அன்றி அறிவிலே திருவுடைய பெண்பாலர் எல்லாரும் ஒளவையார் என்னும் ஒரு பெயரால் அழைக்கப் பட்டனரோ நாம் அறியோம். 'ஒளவை' என்ற சொல் மூதாட்டி யென்ற நினைவையும் தருவதாகும். இந்த முதுமை, ஆண்டின் முதிர்ச்சியைக் குறித்ததோ, அல்லது அறிவின் முதிர்ச்சியைக் குறித்ததோ நாம் அறியோம்.

நாம் அறிந்தனவெல்லாம் தமிழ் ஆர்வமிக்க சான்றோர்கள் திரட்டிச் சேர்த்துப் பாதுகாத்து வைத்த தனிப்பாக்கள் மட்டுமே ஆகும். அவற்றைப் பொருளுடன் அறிந்து, சிந்தித்து, அவற்றால் அறியலாகும் ஒளவையாரின் செவ்வியினையும், குண நலன்களையும் உளங்கொண்டு போற்றுவது மட்டுமே நம்மால் இயல்வதாகும். இந்த நூலைப் பயிலுகின்ற அன்பர்கள், இதனை மனத்திற் கொண்டே கற்க வேண்டும் என விரும்புகிறேன்.

எந்தச் செய்யுள் எந்த ஒளவையாரால் பாடப்பெற்றது? அஃது எழுந்த காலம் என்ன? அந்த ஒளவையாரின் வரலாறு யாது? அவரோடு தொடர்பு உடையவர் யார்? அவர் செய்த செயல்கள் எல்லாம் என்னென்ன? இப்படிப்பட்ட சிந்தனைகளையெல்லாம் ஆராய்ச்சித் துறையிலே அயராது ஈடுபட்டு இன்பம் காணுவோரான அறிவுசால் பெருமக்களுக்கு விட்டுவிட்டு, நாம் இனிய தமிழ்ச்சுவையில் மட்டுமே மனஞ்செலுத்தி மகிழ்வோமாக.

சங்க நூற்களில் பயின்று வரும் ஒளவையாரின் பாடல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெறவில்லை. அவற்றைத் தெளிவுரை அமைப்போடு வெளிவந்துள்ள எனது சங்கநூற் பதிப்புக்களுள் கற்று இன்புறுக.

தமிழ் நலத்தைக் கனிவாக்கும் இனிதான இச்செய்யுள் தொகுப்பு நூலைத் தமிழன்பர்கள் விருப்புடன் வரவேற்று இன்புறு வார்கள் என்பதில், எப்பொழுதுமே எனக்கு நம்பிக்கையுண்டு.

வாழ்க தமிழ் ஆர்வம்!
சென்னை. 1988 புலியூர்க் கேசிகன்
-------------------

உள்ளே.....

 

1. பரமனுக்குப் பாரம்.

32. என்றும் கிழியாது!..

2. குதிரையும் கிழவியும்

33. பூதனின் விருந்து

3. இடம் எங்கே ?.

34. நன்று எது?

4. பகட்டுக்கு மதிப்பு.

35. தேய்ந்த கொடை

5. எல்லார்க்கும் எளிது.

36. சேடன் வாழ்வு

6. பழக்கமும் குணமும்.

37. நல்லான் முல்லான்..

7. பூனை கண்ட கி

38. எண் சாண்!..

8. அழகு எது?.

39. அரசுக்கு நல்ல து!...

9. நல்காத செல்வம்.

40. நான்கு பிறை..

10. பண்டுபோல் நிற்க.

41. நான்கு கோடி.

11. என் உள்ளம்!

42. இல்லை இனிது...

12. சாடினாள்!.

43. ஈயார் தனம்..

13. அமுதும் அன்பும்!

. 44. மனத்தின் தன்மை...

14. திருகிப் பறிப்பேன்!

45. கோடிக்கு ஒருவன்!.

15. சந்நியாசம் கொள்!.

46. எச்சம் அறும் குடி

16. என்ன செல்வம் ?

47. கைக்கூலி வாங்குபவன்

17. சிலம்பியின் சிலம்பு!

அழிவழக்குச் செய்தவன்!...

18. ஆரையடா?

49. மன்று உழுது உண்பான்

19. சிற்றாடைக்கு நேர்

50. நகைக்கப் பெற்றாள்

20. கடகஞ் செறியாதோ?

51. ஈயாதானைத் தாக்கு..

21. வாராயேல் சபிப்பேன்

52. சோம்பரைத் தாக்குக!..

22. சேரலன் வருக.

53. இல்லறம் ஆற்றாதார்

23. புகார் மன்ன ன் வருக

54. உறங்காது கண்!....

24.. பாண்டியன் வருக.

55. கொடியது எது....

25. பொன்மாரி பெய்க!.

56. இனியது எது?.

26. பாலும் ! நெய்யும்

57. பெரியது எது?.

27. ஓங்கும் கோவலூர்!

58. அரியது எது?

28. பழம் தந்த பனந்துண்டம்

59. முடியாத செயல்கள்

29. பொன் ஆடு

60. சோமன் பெருமை.

30. இன்றுபோல் என்றும் இரும்!

61. வெண்பா அரிது

31. மூவகை மனிதர்.

62. நான்கு


---------------------

63. எவையும் போம்!.

89. கோபாலனான குணம்!

64. துரும்பு..

.... 90. மறப்பித்தாய்

65. கெட்டு விடும்.

91. வாழைத் தோற்றம்

66. வீடும் விழல்.

92. கொதிக்கும் அருஞ்சுரம்

67. பாராட்டும் இடம்

93. பெண் பிறந்தேன்!.

68. யாரால் கெடுவது?.

94. வெட்டுண்டன.

69. காலமும் தனமும்.

95. கோதினள்.

70. இலை உதிர்த்த மரம்

96. புறங்காட்டல் தகுமோ ?

71. வீரம் எது?.

97. விலக்குதல் அரிது.

72. புலிக்கு உழன்றீர்

98. நிலவு புறப்பட்டது

73. கொடாத செல்வர்

99. இபக் கோடு

74. திருமண விருந்து

100. அவளாகத் தோன்றும்

75. வடுகனும்! வரதனும்!

101. சுற்றத்தாரின் இயல்பு

76. நுண்பொருள்

102. பொன் பெற்றேன்!

77. குறிப்பு விளக்கம்

103. பொய்ம் மகள்!........

78. கொள்ளேன் மதித்து

104. உழவே இனிது

79. கல்வியின் பயன்

105. பாவையர்க்குத் தோற்றான்!.

80. தாய்மொழியது

106. என் குற்றம்

81. வாய் மொழிகள்!

107. உகுத்தேன்

82. நாட்டின் வளம்!

108. தேர்க்கால்

83. காக்கை கரிது

109. நெல்லித் தீங்கனி!

84. அனுபவித்தல்!.

110. அரிசியும் களிறும்

85. ஏற்பித்தானே

111. நல்ல நாடு

86. ஓட்டைச் செவி

112. புகழ் சாகாது!..

87. தமிழ் உடையது

113. மடந்தை நட்பு

88. ஆயர் குலம்!.

பாடல் முதற்குறிப்பு


--------------------------

ஒளவையார் தனிப்பாடல்கள்
1.
பரமனுக்குப் பாரம்

அருமைமிகு தமிழ்நாட்டிலே ஒரு வேடிக்கையான மரபு எப்படியோ புகுந்துவிட்டது. சிறப்புடைய சான்றோர்களைத் தெய்வப்பிறப்பினர் என்றே கருதினர். அதனால், அவர்களின் வரலாறு வியப்பான முறையிலே விளங்க வேண்டும் எனவும் எண்ணினர். இந்த எண்ணம் பற்பல புனைவுகளுக்கு மக்களைத் தூண்டின. ஒவ்வொரு பெரும்புலவரின் பிறப்பைப் பற்றியும் வழங்கி வருகின்ற புனைகதைகளுக்கும் இந்த நம்பிக்கையையே காரணமாகக் கொள்ள வேண்டும். இந்தப் புனைவுகளைக் கழித்தே அவைகளை நாம் உளங்கொள்ள வேண்டும்.

சிறந்த பெரும்புலவர்களாக ஒளவையார்கள் விளங்கினர். சங்ககாலப் பெரும் புலவர்களிடையே ஒருவர் இருந்தார். கம்பர் முதலானவர்களின் காலத்தில் மற்றொருவர் இருந்தார். மற்றும் சிலர் வேறு பல காலங்களில் வாழ்ந்திருந்தனர். ஒளவையார்' என்ற பெயரின் பொதுமையினால், அவர்கள் அனைவரும் காலப் போக்கில் ஒருவரேயாகிவிட்ட அதிசயமும் நடந்திருக்கிறது. ஒளவையார் சிரஞ்சீவித்தன்மை பெற்றவர் என்ற விநோதமான நம்பிக்கையும் இதன்பின் நிலைபெறலாயிற்று.

'
ஒளவையார் ' ஆதி என்பவளுக்கும் பகவன் என்பவருக்கும் பிறந்த மக்கள் எழுவருள் ஒருவர். பாணர்களின் வீட்டில் ஆதியும் பகவனும் தங்கியிருந்தபோது பிறந்தவர். அவர்களுடைய ஒப்பந்தப்படி, அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிடுமாறு பகவன் பணித்தார். அந்த அம்மை கலக்கமுற்றனர். அப்போது, அந்தச் சிறு குழந்தை தன் வாயைத் திறந்து ஒரு வெண்பாவைப் பாடியது.

அதனைக் கேட்ட தாயான ஆதியும் தன் மயக்கத்தினின்றும் நீங்கினாள்; மனத்தெளிவு கொண்டாள். அதனை அவ் விடத்தேயே விட்டுவிட்டுச் சென்றனர். ஒளவையார் பிறந்த கதை இப்படி வழங்கி வருகிறது. அந்தக் குழந்தை பாடியதாக ஒரு வெண்பாவும் காணப்பெறுகின்றது. அந்த வெண்பா இதுவாகும்,

'
உலகத்து உயிரினங்களைத் தோற்றுவித்தவன் சிவபெருமான். உயிர்கள் அதனதன் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளை அவன் கவனிப்பான். அவற்றிற்கு ஏற்றவாறு அதனதன் வாழ்வின் போக்கையும் வகுத்து நிர்ணயிப்பான். இந்த நிர்ணயம் மாற்ற முடியாதது. அதனை முறையே உயிர்களுக்கு ஊட்டுவதற்கு அவன் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது, தவறியதும் கிடையாது.'

'
இங்ஙனமாகப் பிறப்பிலேயே வாழ்வுக்கதியை வகுத்து விட்ட சிவன், ஆதிபரம்பொருள் ஆவான். அவன், என்றும் உள்ளவன்; அவன் செத்துவிடவில்லை ; அவன் வகுத்த நியதி மாறுபடப் போவதும் இல்லை.

'
இந்த உண்மையை உணர்ந்தவர்கள், தன் மக்களின் வாழ்வினைக் கருதிக் கவலைப்படமாட்டார்கள். எத்துணைத் துயரம் வந்தாலும், காக்கும் பொறுப்புக் கடவுளுடையது' என்ற நினைத்து, அவர்கள் மன அமைதி கொள்வார்கள்.

இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னும் செத்து விட்டானோ - முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரம் அவனுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ.

ஒளவைக் குழந்தை வெண்பாவைச் சொல்லி, 'அன்னையே! நீ நெஞ்சம் வருந்த வேண்டாம்' என்று, தன்னைப் பெற்றவளுக்குத் தேறுதலும் கூறிற்று என்பார்கள்.

"
அன்னையே! என்பால் விருப்பமுடன், என் வாழ்வின் போக்கு இன்னபடியாக அமைவதாக என்று என் தலையிலே எழுதி, என்னைப் பிறப்பித்த சிவபெருமானும் செத்துப் போய் விட்டானோ? இல்லை அல்லவோ! அதனால், மிகவும் கொடிய பஞ்சமே நாடெங்கும் ஏற்பட்டாலும், என்னைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்கே அல்லவா! ஆகவே, நீ உன் நெஞ்சத்தே என்னைக் குறித்த எவ்வகையான, அச்சத்தையும் கொள்ளாது நிம்மதியாகச் சென்று வருக" என்பது இதன் பொருள்.

'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது'

என்றவாறு, இதே கருத்தினைத் திருக்குறளும் கூறும். அதனையும் இத்துடன் நோக்கிப் பொருள் உணர்தல் வேண்டும்.

'
குழந்தை பாடுமா?' என்று கேட்கலாம். பாடும். அது பூர்வ ஞானம்' என்று சான்றோர் கூறுகின்றனர். சிவனன்றித் துணை இல்லை' என்று அறிவுறுத்தும் சிறந்த வெண்பா இது.
----------

2. குதிரையும் கிழவியும்

ஒளவையார் சிறந்த சிவபக்தர். சிவபெருமானை மனங்கனிந்து வழிபட்டு வந்ததுடன், அவருடைய மூத்த குமாரரான பிள்ளையார்ப் பெருமானையும் பூசித்து வந்தார். விநாயகரைப் பூசிக்கும் போது, தம்மையும் மறந்து, தியானத்தில் முற்றவும் ஈடுபட்டு விடுவது, இவரது இயல்பாக இருந்தது.

ஒருநாள், ஒளவையார் விநாயக பூஜை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது சேரமான் பெருமாளும் சுந்தரரும் கயிலாயம் செல்லப் புறப்படும் செய்தி அவருக்கு கிடைத்தது.

ஒளவையாருக்குத் தாமும் அவர்களுடன் கயிலாயம் போக வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. பூசையை விரைவாக முடித்துவிட்டுத் தாமும் அவர்களுடன் சென்று பயணத்தில் கலந்துகொள்ள எண்ணினார். அந்த எண்ணத்தால், பூசையை விரைவாகச் செய்யவும் தொடங்கினார்.

ஒளவையாரின் எண்ணத்தை அறிந்து கொண்டான் விநாயகப் பெருமான். 'ஒளவையே! அவசரம் ஏதும் வேண்டாம் அவர் களுக்கு முன்னதாக நின்னைக் கயிலாயத்திற் சேர்த்துவிடுகின்றேன். நீ வழக்கம் போலவே நின் பூசையைச் செய்க' என்றான்.

ஒளவையாரும் விநாயகப் பெருமானின் ஆணைப்படியே நடந்து கொண்டார். பூசை முடிவு பெற்றது. விநாயகப் பெருமானின் அருளினை நினைந்து ஒளவையார் அகமகிழ்ந்தார்! 'சீதக்களபம்' என்னும் அகவலைப் பாடி, அப் பெருமானை மனங்கனிந்து துதித்துப் போற்றினார்.

தமிழ் உவக்கும் பிள்ளையார்ப் பெருமானின் உள்ளமும் அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தது. அவன் தன்னுடைய பேருருவை எடுத்து நின்றான். வானகம் வரை உயர்ந்து நின்றது அவன் திருமுடி; பாதலம் வரை சென்று நின்றன பாதங்கள், உலகெங்குங்கும் வியாபித்தது அவன் திருமேனி. ஒளவையார் அந்தத் தெய்வக்காட்சியிலே சித்தம் கலந்து மகிழ்ந்தார். வாக்களித்தபடியே அவரைத் தன் துதிக்கையால் எடுத்துக் கைலாயத்திற் சேர்த்து விட்டான் அந்தப் பெருமான்.

சேரமான் பெருமாள் அழகிய குதிரைமீது சென்று கொண்டிருந்தார். சுந்தரமூர்த்திகள் யானையின் மீதமர்ந்து சென்று கொண்டிருந்தார். இருவரும் வழியனைத்தும் கடந்து கைலை சென்று சேர்ந்தனர். தம்முடன் ஒளவையாரும் வந்தனரில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்குள்ளே இருந்தது.

கைலைக்கு வந்ததும், தங்களுக்கும் முன்பாக அங்கே வந்ததிருந்த ஒளவையாரைக் கண்டு வியப்புற்றனர். அந்த வியப்பினைச் சேரமானால் கட்டுப்படுத்த முடியவில்லை!
'
எங்கட்கு முற்பட நீங்கள் வந்து சேர்ந்தது எவ்வாறோ?' என்று கேட்டான் அவன். அப்போது, அவனுக்கு ஒளவையார் சொன்னதாக வழங்குவது இந்தச் செய்யுள்.

மதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை
முதிரநினை யவல் லார்க்கரி தோமுகில் போன் முழங்கி
அதிரவருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும்
குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே!

"சேரர் குடியாகிய உயர்குடியிலே தோன்றிய மன்னனே! இனிதான சொற்களைக் கூறுகின்ற நன்மையைத் தருகின்ற உமையம்மையின் குமாரன் விநாயகப் பெருமான். அவனுடைய திருவடித் தாமரைகளை அழுத்தமாக நினைந்து தமக்குரிய பற்றுக்கோடாகக் கொள்வதற்கு வல்லமையுடையவர் யாம். எமக்கு, நுமக்கு முன்பாக இவ்விடம் வந்து சேர்தலும் அரிதாகுமோ? மேகத்தின் இடிமுழக்கத்தினைப் போல முழங்கிக் கொண்டு, தாம் நடக்கும் நிலமும் அதிரும்படியாக வருவன் நீங்கள் வந்த யானையும், தேரும், அதன் பின்னாகவே வந்து கொண்டிருந்த குதிரையும் எல்லாம். அவை நாழிகைக்குக் காதவழி நடந்தால், வழி நடக்கவியலாத இந்தக் கிழவியும், கணபதி கருணையால் காதவழி கடந்துவிடுவாள் என்பதனை அறிவாயாக" என்பது பொருள்.

முதிர நினைய வல்லார்க்கு' என்றதால், அவர்களிடம் அத்தகைய அன்பின் முதிர்ச்சி நிலைபெறவில்லை என்றும் அதனாலேயே அவர்கள் தாம் முன்னாக வந்ததற்கு வியந்தனர் என்றும் கூறினார். பக்திமையில் தம்மை முற்றவும் இழந்த தனிநிலையே சிறந்த பெருநிலை என்பதைக் காட்டுவது இதுவாகும்.

'
இறையருள் எதனையும் எளிதாக அடைவிக்கும்' என்ற கருத்தும் இச் செய்யுளால் வலுப்பெறும்.
------------

3. இடம் எங்கே ?

அந்த நாளிலே சோழன் பெரிதும் தமிழார்வம் உடையவ னாக இருந்தான். கம்பர், புகழேந்தியார், செயங்கொண்டார், ஒட்டக் கூத்தர் ஆகிய பல புலவர்மணிகள் - அவன் அவையில் இருந்தனர். அவன் அவை, மீண்டும் ஒரு தமிழ்ச்சங்கம் உருவானதுபோலத் தமிழ் நலத்தால் மாண்புற்று விளங்கியது.

ஒரு சமயம், அந்தச் சோழன் சோலைவளம் கண்டு மகிழ்வதற்காகச் சென்றான். அங்கே, காவிரிக்கரையோரத்தில் ஒரு சங்கு வாயைத் திறந்தபடியே வானத்தை நோக்கியபடி இருக்கக் கண்டதும் அவன் வியப்புற்றான். அப்போது கரையோரத்து மரத்தின் பூக்களிலிருந்து ஒரு துளி தேன் அதன் வாயில் கொட்டிற்று. அவன் உள்ளம் அதனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தது.

இயற்கையின் கருணையாகிய அரிய ஆற்றல் அவனுக்குப் புலனாயிற்று; அனைத்தையும் பேணிக் காக்கின்ற பேராற்றலின் உயர்வை உளங்கொண்டு போற்றினான். அறிவற்ற சங்கினையும் அங்கு வந்து அண்ணாந்திருக்கச் செய்து, அதன் வாயில் தேன் துளியினையும் வீழச்செய்து இன்புறுத்திய பெருங்கருணை அவனை ஆட்கொண்டது. அந்த நினைவிலே திளைத்தவனாகத் தன் அரண்மனைக்குச் சென்றான். இரவெல்லாம் அந்தக் காட்சி அவன் மனத்தை விட்டு அகலவேயில்லை.

மறுநாட்பொழுதும் விடிந்தது. சோழனின் நாளோலக்க அவையும் கூடிற்று. மன்னன் அவைநாயகனாக அமர்ந்திருந்தான் புலவர்களும் அமைச்சர்களும் தளபதியருமாக அனைவரும் அங்கே ஒருங்கே திரளாகக் கூடியிருந்தனர்.

அப்பொழுது ஒளவையார் சோழனின் அவையுள் மெல்ல நடந்து வந்தார். அவரைக் கண்டதும் வருக!' என்று வரவேற்றான் மன்னன். அமர்க' எனவும் சொன்னான். ஆனால் அங்கே அமர்வதற்கு இருக்கை எதுவும் இல்லாததனைக் கவனிக்கவில்லை; அதுபற்றி எவரும் கவலைப்படவுமில்லை.

ஒளவையாரோ நெடுந்தொலைவினின்றும் நடந்து வந்தவர்; பல நாட்களாக நடந்து சோர்ந்து போயிருந்தவர், சோழனைக் காணவேண்டுமென்ற ஆர்வத்தின் மிகுதியினாலே தம் களைப்பையும் மறந்து உடனே சென்றவர். அவரை அவன் முறையாகக் கவனிக்காது, எவரையோ வரவேற்பது போல் வருக அமர்க!' என்று சொன்னது அவருக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது.

கால்நொந்தேன் நொந்தேன் கடுகி வழிநடந்தேன்
யான்வந்த தூரம் எளிதன்று - கூனல் கருந்தேனுக்
கங்காந்த காவிரிசூழ் நாடா
இருந்தேனுக் கெங்கே இடம்?

என்று பாடினார் அவர்.

சோழன், வந்தவரை ஒளவையார் என்று அறிந்து கவனித்தானில்லை. அவன் மனமோ முந் நாளிற் கண்ட அந்த அதிசயக்காட்சியில் முற்றவும் நிலைத்திருந்தது. அதனாலே தான், அவருக்கு இருக்கை தருமாறு எவரையும் ஏவினானில்லை. எனினும், அவருடைய இப்பாடலைக் கேட்டதும், அவன் உள்ளம் தெளிந்து பூரிப்படைந்தது.

'
தெய்விக சக்தி உடையவர் போலும்! யான் நேற்றுக் கண்ட காட்சியை அங்ஙனமே உரைத்தனரே!' என வியந்து, அவரை அன்புடன் வரவேற்று உசாவினான். அவரே ஒளவையார் என்று அறிந்ததும், அவனுள்ளம் அளவிலா உவகை அடைந்தது. தான் கண்ட அந்த இனிய காட்சியைத் தன் அவையினர்க்கு உரைத்து, அதனையே அறிந்து உரைத்த ஒளவையாரின் ஞானச் சிறப்பையும் போற்றினான்.

"
சங்கானது மிகுதியான தேனைப் பருகுவதற்காகத் தன் வாயைத் திறந்து மேல் நோக்கியபடி இருக்கின்ற வளமுடைய காவிரியாற்றாற் சூழப்பெற்ற நாட்டிற்கு உரியவனே! நின்னைக் காணும் ஆர்வத்தாலே விரைவாக வழியினை எல்லாம் நடந்து கடந்தேன். என் கால்களும் மிகவும் நோவுற்றன. யான் கடந்து வந்த தூரமோ கடத்தற்கு எளிதல்லாத மிக்க நெடுந்தூரம் ஆகும். அங்ஙனம் வந்து நின் அவைக்கண் நின்றிருக்கும் எனக்கு, அமர்வதற்கு ஏற்ற இடம்தான் எங்கேயோ ?" என்பது செய்யுளின் பொருள்.

கூனல் - சங்கு, நத்தை எனலும் ஆம்.

'
கூனலுக்கும் கருந்தேன் கிடைக்கின்ற நாட்டிலே, புலவரான எனக்கு மட்டும் இருக்கவோர் இடம் கிடையாதோ? நின் அன்புப் பரிசிலும் வாயாதோ?' என்ற குறிப்பையும் பாடல் கொண்டிருக்கிறது.
------------

4. பகட்டுக்கு மதிப்பு!

ஒளவையார் சிறந்த நாவலர். எனினும், எளிமையினையே விரும்புகின்ற பண்பும் உடையவர். தம் கவிதையைப் போற்றிச், செல்வர்கள் உவந்து தமக்குப் பரிசளித்துப் பாராட்ட வேண்டும் என்ற ஆடம்பர நினைவு அறவே இல்லாதவர். மக்களொடு கலந்து தம்முடைய உள்ளத்திலே எழுகின்ற உணர்வுகளைக் கவிதைகளாக வடிக்க வேண்டும்; அதுதான் தமக்கு உவகை தருவது என்ற எண்ணம் உடையவர்.

அரசர்களால் உபசரிக்கப் பெற்றாலும், பரிசுகள் வழங்கிப் பாராட்டப் பெற்றாலும், அவர் மனம் உவப்படைவதில்லை. அதேசமயம், ஏழையின் குடிலில் அன்புடன் இடுகின்ற உப்பற்ற கூழ் அவர் நெஞ்சிலே இடம் பெறும்! அங்கே கவிதையும் மலர்ந்து இலக்கிய நிலைபெறும்!

சோழனின் அவையிலே கம்பர் பெரிதும் போற்றப்பெற்று விளங்கியவர். அரசவைக் கவிஞருள் ஒருவராக அதற்குரிய ஆடம்பரங்கள், அணிவகைகள் முதலியவற்றுடன் விளங்கியவர். அரசனிடம் தனிப்பட்ட செல்வாக்கும் அவருக்கு இருந்தது. அதனால், கம்பரைச் சுற்றிப் பலர் அவரைப் போற்றியபடியே இருந்தனர். அவர் எது சொன்னாலும் அதனைப் பாராட்டினர். அதன் சிறப்பை ஆராய்வதுகூட இல்லை. "கம்பரின் வாக்கு! அதன் இனிமையே இனிமை! அதன் பொருள் வளமே வளம்?" என்று வாயோயாது வியந்து வியந்து பாராட்டி வந்தனர்.

ஒளவையாருக்கு, கம்பரின் அந்த அளவற்ற ஆடம்பரமும், அவரைச் சுற்றியுள்ள போலிப்புலவர் கூட்டமும் வெறுப்பையே தந்தன.

ஒரு சமயம், கம்பரின் பாட்டொன்றை மன்னன் வியந்து பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டில் அத்துணைச் சிறப்பு எதனையும் காணாத ஒளவையார், அந்த உரைகளைக் கேட்டுச் சிரித்தவண்ணம் இருந்தார்.

தற்செயலாக அவர் பக்கம் திரும்பிய மன்னன், அவரது முகபாவத்தை நோக்கினான். தன் கருத்தை அவர் ஏற்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. "தங்கள் கருத்து யாதோ?" எனக் கேட்டுவிட்டான். அப்போது, ஒளவையார் சொன்னது இச்செய்யுள்

"
கவிதை ஒன்றைப் பாராட்டும் போது, அதன்கண் அமைந்துள்ள சொல்நயம் பொருள் நயம் ஆகியவற்றையே கருதுதல் வேண்டும். இங்கேயோ 'கம்பரின் பாட்டு' என்பதற் காகவே அனைவரும் அதனைப் புகழ்கின்றீர்கள். அந்த நிலைமையை நினைத்துத்தான் நான் சிரித்தேன்"

"
எளிமையும் புலமை நலமும் பெற்றவர்கள் இங்கே எளிதில் பாரட்டுப் பெறுவது நிகழாது. இந்த அவையின் மதிப்புக்கு உரியவராவதற்குப் பிறபிற ஆரவாரத் தகுதிகளும் நிறைய வேண்டியதிருக்கின்றது" என்றார் ஒளவையார்.

"விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிரைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

"அரசவைக்குப் பரிசினை நாடி வந்துள்ள புலவரின் அருகே, தந்திரக்காரர்களாக இருவர் அமர்ந்துகொண்டு, அவரைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தப் புலவரது விரல்களுள் நிறைய மோதிரங்கள் விளங்க வேண்டும். அவர் இடுப்பிலே பஞ்சாடையோ பட்டாடையோ கவினுற விளங்குதல் வேண்டும். அங்ஙனமாயின், அவருடைய கவிதை நஞ்சுபோலப் பிறருக்குக் கேடு விளைவிப்பதானாலும், வேம்பினைப் போலக் கசப்புச் சுவையுடையதாக இருந்தாலும், அதுவே நல்லதென்று இந்த அவையில் ஏற்றுப் போற்றப்பெறும்" என்பது பாடலின் பொருள்.

'
விரகர் புகழ்ந்திட' எனவே, அது உண்மையான புகழ்ச்சி யாகாது என்றார். சோழனின் அவை புலமைக்கு மதிப்புத் தரவில்லை; புலவரின் புறத்தோற்றத் தகுதியை நோக்கியே மதிக்கிறது என்றும் உரைத்தார். அதனைக் கேட்ட மன்னன் சிந்தனையில் ஆழ்ந்தான்.
அந்த நிலையே இன்றைக்கும் நிலவுகின்றது. வெளிமயக்கும், விளம்பரப் பெருக்கும், பிறவுமே இன்றைக்கும் ஒருவருக்குச் சிறப்பைத் தருகின்றன.
--------------

5. எல்லார்க்கும் எளிது!

ஒளவையார் பாடிய பாடலும் பேசிய பேச்சும் சோழனைப் பெரிதும் வருத்தின. கம்பரிடத்தே அளவற்ற அன்பு கொண் டிருந்தவன் அவன். தன் அவையிலேயே, ஒருவர் கம்பரைப் பழிப்பதைக் கண்டு கலங்கினான். பழித்துக் கூறியவரோ நாடனைத்தும் கொண்டாடும் ஒளவையார், அதனால் அவரைச் சினந்து கொள்ளவும் முடியவில்லை. அவரைத் தெளிவுபடுத்தவே அவன் விரும்பினான்.

"
கம்பர் எனக்கு வேண்டியவர்; இதில் ஐயமில்லை. ஆனால், அவரைப் பாராட்டியது அவருடைய புலமை நுணுக்கத்தை அறிந்து உரைத்ததே ஆகும். மற்றுத் தாங்கள் கருதுவதுபோல அவருடைய ஆடம்பரங்களை நினைத்து அன்று. அவரைப் போலப் பெரிதான காவிய நூலைச் செய்து சிறப்புற்றவர் வேறு யார்தாம் இருக்கிறார்கள்?" என்றான் அவன்.

கம்பருக்கு ஆதரவாகவும் அதேசமயம் ஒளவையார் பாரகாவியம் எதுவும் பாடவில்லை என்பதைச் சுட்டியதாகவும் அவன் பேச்சு அமைந்தது. அதனைக் கேட்டார் ஒளவையார்.

"
சோழனே! தூக்கணாங் குருவியின் கூட்டினைக் கண்டிருப்பாய். அதனைப்போல எவராலாவது ஒரு கூடு கட்ட முடியுமா? குளவிகள் கட்டும் வலிய அரக்குக் கூட்டினைப்போல எவராலாவது செய்வதற்கு இயலுமா?

பழமையான கரையானின் புற்று எவ்வளவு அழகுடனும் நுட்பமுடனும் அமைந்திருக்கிறது ! தேனீக்கள் - கட்டும் கூடுகளிலேதான் எத்தனை அமைப்பு நுட்பம் விளங்குகிறது!

சிலந்தியின் வலையைப்போல எவராலாவது ஒரு வலை பின்னிவிட முடியுமோ?
இவற்றை யாராலுமே செய்யவியலாதுதான். அதனால், அவற்றையே தொழில் நுட்பத்தில் தலைசிறந்தவை என்று பாராட்டலாமோ? அதற்கு அதனதன் கூட்டினைக் கட்டுதல் எளிது; அஃதன்றி, வேறு எதுவுமே அவற்றுக்குத் தெரியாது.

அதனைப்போலவேதான் கவிதையும். ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாயிருக்கும். கம்பர் விருத்தப் பாவில் வல்லவரானால், வெண்பாவில் புகழேந்தியார் இருக்கிறார். உலாவில் நம் ஒட்டக்கூத்தர் வல்லவர். இப்படி ஒவ்வொரு துறையிலும் வல்லவர் உளர். அந்தந்த வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும்! அதுதான் சிறப்பு.

"
அஃதல்லாமல், ஒரு துறையிற் சிறந்தவரையே எல்லாம் அறிந்தவராகக்கொண்டு, அளவுக்கு மீறிப் பாராட்டுதல் கூடாது. அவரும் அனைவரினும் பெரியவர் என்று செருக்குறுதலும் தவறு. ஒவ்வொருவருக்கும் பிறராற் செய்யவியலாத ஒன்றை எளிதாகச் செய்வதற்கு இயலும். இதனை உணர்ந்து அடங்கியிருப்பதுதான் புலமை உடையவரின் பண்புஎன்றனர்.

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

"தூக்கணாங்குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக" என்பது பொருள்.

ஒளவையாரின் பாடற்கருத்தினை அந்த அவையாலும், கம்பர், சோழன் ஆகியோராலும் மறுக்க முடியவில்லை. எப்படியோ தன்பால் வளர்ந்துவிட்ட கம்பர் மீதுள்ள அளவற்ற அன்புதான், அவரை அளவுக்கு மீறிப் போற்றுமாறு செய்தது என்பதனைச் சோழனும் உணர்ந்தான். அதனால் புலவர்கள் பலர் புண்பட் டிருப்பர் என்பதனையும், தன் மீதுள்ள அச்சத்தாலேயே அதுவரை ஏதும் கூறாதிருந்திருக்க வேண்டும் என்பதையும், அதன்பின் அவன் தெரிந்து கொண்டான்.
--------------

6. பழக்கமும் குணமும்!

நிலைமையைச் சோழன் உணர்ந்தான். எனினும், புண்பட்ட கம்பரின் உள்ளத்தைச் சிறிதேனும் மாற்றுதற்கும் விரும்பினான். அதனால், மேலும் சிறிது அவரைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.

'
கம்பநாடரின் இராமாயணப் பெருமையை நம்மால் மறக்கவே முடியவில்லை. கம்பர் பிறவிக்கவிஞர் என்ற பெருமைக்கு உரியவர். ஒளவையார் சொல்வதில் உண்மை இருந்தாலும், அவர் கம்பரின் மீது வேண்டுமென்றே குறை காண்கின்றனர். அந்தக் குறை கம்பர்பால் இல்லை என்பதனை நாமும் அறிவோம்; நம் நாடும் அறியும்' என்றான்.

கம்பரைப் பிறவிக் கவிஞர்' என்று சொன்னது, பிறரை அவரினும் தாழ்ந்தவர் என்று கூறியது போல எதிரொலித்தது. அதனால் அந்த நினைவை மாற்றவும், சோழனுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தவும் ஒளவையார் கருதினார்.

அதனால், உலகியல் உண்மைகளாக விளங்கும் சில செய்திகளை எடுத்து உரைப்பவரும் ஆயினார்.

சிறந்த சித்திரக்காரன் ஒருவனைப் போற்றுகின்றோம். அவனுடைய ஆற்றல் அவனுடைய தளராத கைப்பயிற்சியினாலே வந்தது. அந்தப் பயிற்சிக்கு வாய்ப்பும் வசதியும் இருந்தால் மேலும் பலர் சிறந்த சித்திரக்காரர்களாக ஆகியிருப்பர்.

செந்தமிழ் வல்லார் சிலரைக் காண்கிறோம். முறையான தமிழ்ப்பயிற்சி அளித்தால், நாட்டிலே செந்தமிழ் வல்லார்கள் திரளானபேர் உருவாகி விடுவார்கள்.

சிறந்த கல்வி ஞானம் உள்ளவர்கள் என்கின்றோம். அந்த ஞானம் மனத்தை ஒன்றின்பால் உறுதி பெற நிறுத்திப் பழகிய பழக்கத்தால் அமைந்ததாகும். அந்த மனப்பழக்கம் பலருக்கும் ஏற்பட வழி செய்தால், அவர்களிலும் மிகப்பலர் ஏற்படுவர்.

சிலருடைய நடைகள் நமக்குச் சிறப்பாகத் தோன்றும். அது அவர்கள் நாள்தோறும் நடந்து வருகிற ஒழுகலாற்றின் பழக்கத்தால் அமைந்தனவாகும்.

இவையெல்லாம், இப்படிப் பழக்கத்தாலும் வாழும் சூழ்நிலையாலும் வந்தமை-வனவாம். இவற்றைப் பிறவிக்குணமாகக் கொள்ளுதல் பொருந்தாது. ஆனால், பிறவிக் குணமாக ஏதும் கிடையாதோ என்று கேட்டால், உண்டு; அவை நட்பு, தயை,
கொடை முதலியன.

பிறரோடு நட்புடையவராகவும், பிறர்பால் இரக்கங் கொள்ளு கிறவராகவும், பிறருக்குக் கொடுத்து உதவுகிற மனமுள்ளவராகவும் ஒருவர் விளங்கினால், அவரை பிறவியிலே திருவுடையார்' என்று போற்றலாம்.

இந்தக் கருத்துக்களை அழகிய வெண்பா வடிவில் அமைத்துப் பாடினார் ஒளவையார்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

"சித்திரம் எழுதும் ஆற்றல் கைப்பழக்கத்தால் அமைவது. செந்தமிழின் தேர்ச்சி நாவின் பழக்கத்தால் வருவது. சேமித்து வைத்த ஒப்பற்ற கல்விச் செல்வம் மனப் பழக்கத்தால் உருவாவது. நாள்தோறும் நடத்தையில் முறையாகப் பழகுவது நடையில் திறமையைத் தருவதாகிறது. ஆனால் நட்பும், இரக்க குணமும், கொடுக்கும் இயல்புமோ பிறவியிலேயே படிந்துவரும் நற்குணங்களாகும்என்பது இதன் பொருள்.

இது, கம்பரின் புலமையினைப் பழக்கத்தால் படிந்தது எனக் கூறியும், பிறவிக் குணங்களான நட்பு, தயை, கொடை முதலியன அவர்பால் காணப்படாதவை எனச் சுட்டிப் பழித்ததாகவும் அமைந்தது.

இதனால், இந்த விவாதம் மேலும் சிறிது சூடுபிடித்துத் தொடரலாயிற்று.
-------------

7. பூனை கண்ட கிளி

சோழ மன்னனின் நிலைமையோ தர்மசங்கடமாயிற்று. ஒளவையாரின் பேச்சிலே உண்மை ஒலிப்பதை அவனும் அறிவான். எனினும், கம்பரை அவர் அடியோடு மட்டந்தட்டி வருவதனை அவனால் ஏற்கவும் முடியவில்லை, அதனால் அவரை எதிர்க்கவும் மனமில்லை.

'
பொறுமையே வடிவானவர்' என நாடு போற்றும் பெரும் புலவரான ஒளவையார், இப்படிக் கம்பரை வம்புக்கு இழுப்பதானால், அந்த அளவுக்குக் கம்பரின் பேச்சோ, செயலோ அவருள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி இருக்க வேண்டும் எனவும் அரசன் உணர்ந்தான்.

அவைக்கண் இருந்த பிற புலவர் பெருமக்களும் ஏதும் பேசாராய் வாளா இருந்தனர். அவர்களின் மௌனநிலை, அவர்களும் ஒளவையாரின் கருத்தை ஆதரிப்பதாகக் காட்டியது. கூத்தர் இயல்பாகவே கம்பரை விரும்பாதவர். அவர் முகத்திற் படர்ந்த புன்சிரிப்பு பிற புலவர்களுக்கும் புரிந்திருந்தது.

நிலைமையை மேலும் வளர்க்க விரும்பாத சோழன், இறுதியாகக் "கம்பரை வெல்பவர் யார்?" என்றான், ஒரு சவால் போல.

அஃது, ஒளவையாரை மீண்டும் சினம் கொள்ளத் தூண்டுவது போலவே இருந்தது.

"
சோழனே! கிளி வளர்ப்பார்கள் பெண்கள். அதற்குப் பாலும் பழமும் வைத்துப் பேசவும் கற்றுக் கொடுப்பார்கள். அதுவும் ஒன்றிரண்டு சொற்களைப் பேசக் கற்றுக்கொள்ளும்.

அந்த ஒன்றிரண்டு சொற்களைப் பேசத் தெரிந்ததும் அதற்கு அளவுகடந்த மகிழ்ச்சி பிறந்துவிடும். தனக்கு எல்லாமே தெரிந்துவிட்டது போலத் தன் அறியாமையை உணராமல் வெட்கமின்றிப் பேசிக் கொண்டே இருக்கும்.

ஆனால் அவ்விடத்தே பெரிய பூனையொன்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். கிளியின் பேச்சு அறவே நின்றுவிடும். தன் நிலைமை அப்போதுதான் அதற்கு வெளிப்படும். தன் பேச்சு பூனையைக் கொண்டு வந்தது என்பதும் புரியும். உடனே, தன் இயல்பான தன்மை தோன்றக் 'கீச்சுக் கீச்சு' என்று உயிருக்குப் பயந்து கதறத் தொடங்கிவிடும்.

கல்வியின் சிறப்பு என்பது அடக்கத்திலேதான் இருக்கிறது. இதனை அறியாமல் சிலர் மனம் விரும்பியபடி எல்லாம் பேசுகின்றனர். அது அவர் அறியாமையைத்தான் காட்டும். கற்றோர் அவை முன்னர் பணிவு வேண்டும். பணிவின்றி வாய் திறந்தால் வருவது இழிவுதான். இதனை அறிந்து கொள்க" என்றனர் அவர்.

கம்பர் அயர்ந்து போயினர். தம் புகழ்மயக்கமே ஒளவை யாரைக் கொணர்ந்து தம்மை இழித்துப் பேசச் செய்தது என்று உணர்ந்தனர். சோழன் மௌனியானான். அவையோ ஆர வாரித்தது. ஒளவையாரைப் போற்றியது.

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர் முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தாக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி.

"கற்ற பெரியோரைக் காணாவிடத்தில் அரைகுறை அறிவுடையோர் தாம் விரும்பியபடியெல்லாம் கூச்சல் இடலாம். ஆனால், படித்தவர்கள் முன்பாகப் பணிவின்றி எவருமே தம் வாயைத் திறத்தல் பொருந்தாது. வெட்கமின்றிப் பேசிக் கொண்டேயிருக்கும் கிளியானது, பெரிதான பூனை அந்தப் பக்கமாக வந்தால், தன் பேச்சை மறந்து உயிருக்கு நடுங்கிக் கீச்சுக்கீச்சென்று கதறும். ஆன்றோர் அவையிடத்து, அறியாமல் பேசும் செருக்குடையவர் கதியும், அந்தக் கிளியைப் போன்றது தான்" என்பது பொருள்.
------------------

8. அழகு எது?

ஒரு சமயம், சோழன் ஒளவையாரிடம் உரையாடிக் கொண்டு இருந்தான். திடுமென அவனுக்கு ஓர் ஐயம் பிறந்தது. உலகில் அழகியவை எனக் கூறப்படுபவை யாவை? அதனை அறிந்து கொள்ள அவன் கருதினான். ஒளவையாரிடம் வினவ, அவர்
அழகின் உண்மையை விளக்குகின்றார்.

"
ஓர் இளம்பெண் தன் நாயகனோடு கூடி வாழ்ந்து இன்புற்று மகிழ்கின்றாள். அவளுடைய கூட்டத்தினால் அவனும் நிறை வெய்துகின்றான். இறுதியில், அவள் களைத்துப் போய்ப் படுத்திருப்பாள். அப்பொழுது, இன்பக் கிளர்ச்சியிலே மலர்ந்த தளர்ச்சியும் அவள் பால் தோன்றும். அப்படித் தோன்றும் பெண்மையின் பொலிவான நிறைவான அழகு இருக்கிறதே, அதுதான் இல்வாழ்வார் போற்றும் சிறந்த அழகாகும்.

இறைவனை நாடிப் பணிந்து போற்றும் பக்தியை உடையவர், விரதங்கள் பலவற்றையும் தம்முடைய உள்ளத் தூய்மையினைக் கருதியே மேற்கொள்வார்கள். அவர்கள் அதனால் மெலிதலும் கூடும். அங்ஙனம், இளைத்துத் தோன்றுகின்ற மேனி, இறைபக்தி உடையவர் மனமுவந்து போற்றும் அழகாக விளங்கும்.

வறியவர்க்கு உதவுவது மிகச்சிறந்த பண்பாகும். உதவி உதவி ஒருவன் மிகவும் பொருள் குறைந்தவனாகவும் போயினால், அவனுடைய அந்தப் பொருள் குறைந்த நிலையும் சான்றோர்க்கு மிகமிக அழகியதாகவே தோன்றும். இஃதன்றிக் கஞ்சப் பிரபுவின் வளத்தை அவர்கள் அழகிது என்று ஒருபோதும் உரைப்பதில்லை.

வீரனுக்கு அழகு போர்க்களத்தில் தான் அடைந்த விழுப் புண்ணாக இருக்கும். கொடிய களத்தில் போர் இயற்றிப் பெற்ற வடு பெறற்கரிய பேறாகக் கருதி மதிக்கவும் படும். வடுப்பட்ட உடல் என்னாது அதனை அழகியதாகக் கருதுவதே சான்றோர் இயல்பு.

பொது நன்மைக்காகப் போராடுகிறார்கள் சிலர். அவர்களின் போராட்டத்தில் வெற்றியும் பெறுகின்றனர். ஆனால், அவர்களுள் சிலர் களத்தில் உயிர் இழக்கின்றனர். அவர் நினைவாக அவர்களுடைய பீடும் பெயரும் பொறித்த நடுகற்கள் நிறுத்தப் பெறுகின்றன. தம் உயிரை தம்முடைய இன நன்மைக்கு ஈந்தவரின் நினைவாகிய அந் நடுகற்கள், அந்த இனத்தவர் உள்ளவரை, அவர்கட்கு மிகவும் அழகியதாகவே விளங்கும்.

இவ்வாறு அழகு அவரவர் பண்புச் செவ்வியாலேயே அமையும். அழகெனப் பொதுப்பட்ட ஒன்றைக் கவர்ச்சி இனிமை கருதி மட்டும் கூறுதல் பொருந்தாது. இதனை அறிவாயாக" என்றனர் ஒளவையார். அந்த வெண்பா இது.

சுரதந் தனில் இளைத்த தோகை ; சுகிர்த
விரதந் தனில் இளைத்த மேனி; - நிரதம்
கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல் அபிரா மம்.

"நாயகனோடு கூடி இயற்றிய சுரத அனுபவத்தாலே களைத்திருக்கின்ற நாயகியும், நன்மைதரும் விரதங்களை மேற்கொண்டதனால் இளைத்த பக்தரின் மேனியும், எக்காலமும் வறியவருக்குக் கொடுத்துக் கொடுத்துத் தன் செல்வம் இழந்து போன கொடையாளியும், கொடுமையான போரினிடத்தே பெற்ற வீரனின் வடுக்களும், பீடும் புகழும் குறித்துப் போரில் வீழ்ந்தோருக்கு நாட்டப்பெற்ற நடுகல்லும், சான்றோர் போற்றும் அழகான பொருள்களாகும்என்பது பொருள்.

இதனால், ஒன்று அழகியதாகக் கொள்ளப்படுவது, அதனைக் கொள்பவரின் மனநிலையினை ஒட்டியும், செய்தவரின் சால்பினைக் கருதியும் அமைவதாகும் என்ற உண்மை விளங்கும்.
------------

9. நல்காத செல்வம்!

செல்வம் சிலரிடம் தானாகவே சேருகின்றது. பலரிடம் முயற்சியின் அளவாலே தொழில் பெரிதானாலும் கூடச் செல்வம் மிகுதியாக வந்து சேர்வது இல்லை. செல்வத்தின் இத்தகைய நிலையினை நம் முன்னோர்கள் உணர்ந்தவர்கள்.

இதனால், செல்வம் சேர்வது பிறருக்குக் கொடுத்து அவரையும் நல்வாழ்வினராகச் செய்வதற்கே என்பதனை அவர்கள் வற்புறுத்தினர். கொடுக்கும் பண்பு சிறந்த மனிதப் பண்பாகவும் ஆயிற்று. கொடுப்பவரினும், மேம்பட்ட வள்ளல்களாகப் பலர் இருந்தனர்.

கொடையினால் நாட்டின் கண் பரவுகின்ற புகழையும் அதனால் தமக்கு உயர்கின்ற பேற்றையும் கருதி, கொடுக்கும் குணமற்ற சிலரும் கூடக் கொடுக்கும் வழக்கம் உடையவராக மாறினர்.

சோழன் கொடையின் மரபினை அறியாதவன் அல்லன். மரபினை அறிந்ததுடன் அதனைப் பேணி நிகழ்த்தியும் சிறப்புப் பெற்றிருந்தான். எனினும், ஒருநாள் அவனுக்கு ஓர் ஐயம் எழலாயிற்று. அருகிலிருந்த ஒளவையாரிடம் அதற்கு விளக்கமும் கேட்கலானான்.

"
அம்மையே! வாழ்வில் இச்சை உடையவர்கள் மனிதர்கள். அவர்கட்குப் பொருளினால் பயன் உண்டாகும். அவர்கட்குப் பொருளை வழங்குவதும் தகுதியுடையதாகிறது. ஆனால், சிவனடியார்கள் சிலரும் வந்து பொருள் கேட்கின்றனரே? உலக இச்சையை ஒழித்து இறையின்பத்திலே திளைக்கும் அவர்கட்குப் பொருள் வழங்குவது முறையா? அந்தப் பொருள் அவர்களுடைய சிவ ஒழுக்கத்தையே மாற்றிவிடாதா?" என்றான்.

சோழனின் அறிவுநுட்பம் ஒளவையாரைச் சிந்திக்க வைத்தது. அவர் விளக்கம் கூறலானார்.

"
மன்னவ! செல்வத்தைச் சிவனடியார்க்கு வழங்க வேண்டுமோ என்கிறாய்? அவர்கள் அதனைச் சிவகாரியங்க ளாகிற பொது நன்மைக்கு உதவுகிறவற்றிலே தான் செலவிடுவர். அதனால், அவருக்கு அளிக்கும் கொடை அளவற்ற பலருக்கும் அளித்த கொடையாகிப் பரந்த புகழினை நினக்குத் தருகிறது. இதனை எண்ணினால், அவருக்கு மனமுவந்து வாரி வழங்குதலே செய்ய வேண்டியதாகும் என்பேன் யான்.

அவருக்கு வழங்காத செல்வங்கள் வேறு என்ன வகைக்குப் பயனாகப் போகின்றன? பில்லி சூனியக்காரர்களுக்குப் பயன் படலாம். பேயூட்டுகளுக்குப் பயன்படுத்தப் படலாம். பரத்தையர் கட்கு வழங்கி அவரைக் கூடி இன்புற்றுக் கெடலாம். வீண் செலவுகள் செய்யலாம். கொள்ளைக்காரர்களுக்கு விருந்தாகலாம். மனத்தை மயக்கும் கள்ளுக்கு விலையாகத் தரலாம். அல்லது பகை அரசரால் எடுத்துக் கொள்ளப்பட்டும் போகலாம். கள்ளருக்குக் கவர்ந்து போவதற்கும், நெருப்பிற்கு உணவாவதற்கும் கிடைக்கலாம்.

இவற்றால் ஆகும் சிறப்பென்ன? அதனால், இவற்றிற் பாழாகிற பணத்தை தடுத்து நம்பன் அடியவர்க்கு நல்குவதே சிறப்புடைய செயலாகும்."

ஒளவையாரின் விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. சோழனும் மகிழ்ந்து அவரைப் போற்றினான்.

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்.

"நம் பெருமானான சிவனின் அடியவர்களுக்கு மனமுவந்து வழங்காத செல்வங்கள், சூனிய வித்தைகட்கும், பேய் வழிபாடு கட்கும், பரத்தையர்களுக்குக் கொடுத்தற்கும், வீண் செயல் களுக்கும், கொள்ளை கொடுத்தற்கும், மதுவுக்கும், பகை அரசரால் பறிமுதல் செய்யப்படுவதற்கும், அவனுடைய சாவுச் செலவிற்கும், கள்வரால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும், நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்குமே உரியவாகும்" என்பது பொருள்.

அடியார் உலக நலம் கருதுபவர். உலகம் உய்வதற்குப் பாடுபடும் உயர்ந்தோருக்கு உதவுவது மிக உயர்வுடையதாகும் என்பது கருத்து.

சிறந்த செயலைச் செய்பவர்க்கு உதவாதவர்களின் மனநிலை இழிந்ததாகவே இருக்கும். அதனால் தான் அவர்களின் செல்வம் பல வழிகளிலும் பாழாகும் என்கிறார்.

சிவ காரியங்களுக்குப் பயன்படுத்தாத செல்வம் அவகாரியங் களிலே வீணாகிக் கரையும் என்பதும் இது.
-------------

10. பண்டு போல் நிற்க!

இந்நாளில், ஒருவன் இரண்டு மனைவியரை மணஞ்செய்து கொள்ளல் இயலாது. சட்டப்படி இது தடை செய்யப்பட்டு விட்டது. முன்காலத்தில் அப்படியில்லை. இரண்டு மூன்று மனைவியரை ஒருவன் மணந்து கொள்வது என்பது மிகவும் சாதாரண நிகழ்ச்சியாகவே கருதப்பட்டது.

அக் காலத்தில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. கட்டுடல் கொண்ட காளையர்கள் பலர் போர்க்களத்தில் வீழ்ந்துப்பட்டனர்.

இதனால் பெண்கள் மிகப் பெருக்கமாக இருந்தனர். ஒருவனுக்கு இருவர் மூவர் என்பதும், அதனால் சமுதாயத்தின் மரபாகவே விளங்கிற்று.

அந்த நாளிலே, ஒரு குறவன் இரண்டு மனைவியரை மணந்து கொண்டிருந்தான். மூத்தவட்குக் குழந்தையில்லாமற் போனதே இரண்டாமவளை அவன் மணந்ததற்குக் காரணமாக இருந்தது. அவளுக்கும் குழந்தை பிறக்கவில்லை. இருவரும் ஒருவருக் கொருவர் தீராத பகை கொண்டு சண்டையிட்டு வந்தனர்.

அவன் ஒரு பலா மரத்தை மிகவும் பேணி வளர்த்து வந்தான். பலாவும் செழித்து வளர்ந்து காய்களும் கனிகளுமாக விளங்கிற்று. அவனுக்கு அளவற்ற பெருமை!

அவன் மனைவியர்களுள் இளையவள், ஒரு நாள் மூத்தாளை ஒழிக்க எண்ணமிட்டாள். பலாவை வெட்டி விட்டுப் பழியை மூத்தவள் மீது சுமத்தினால், தன் கணவனே அவளை அடித்து விரட்டி விடுவான் என்ற கரவான எண்ணம் அவளிடம் உருவாயிற்று. அவன் வெளியே சென்றிருந்தபோது, அவளுடைய மூத்தாளும் வீட்டில் இல்லாத வேளையில், அவள் தன் எண்ணத்தைச் சுலபமாக நிறைவேற்றி விட்டாள்.

குறவன் திரும்பி வந்தான். பலாவின் நிலையைக் கண்டு கொதித்தான். சூதுக்காரி, தன் மாற்றாள் மீது பழி சுமத்தினாள். அவன் சினங்கொண்டான். அவளைக் கொன்று விடுவதாகச் சீறினான்.

அவள் எதிரேயே வந்து கொண்டிருந்தாள். பலாவின் கதியும், தன் கணவனின் சினமும், தன் மாற்றாளின் வஞ்சமும் அவளுக்குப் புரிந்தது. நடுக்கத்துடன் கணவனருகே மெல்ல வந்தாள். குறவன் அவள் மீது பாய்ந்து, எதுவும் கேளாமலே அவளை அடித்து வதைக்கத் தொடங்கினான். அவள் அடி தாங்காமல் கதறினாள்.

அந்தக் கதறலை அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த ஒளவையார் கேள்வியுற்றார். அவ்விடத்துக்கு விரைந்தார். குறவனின் கொடுமைச் செயல் அவரை மிகவும் வாட்டிற்று. மாற்றாளின் முகம் அவளுடைய சூதினைப் பறைசாற்றியதனையும் அவர் கண்டார்.

"
இவளை ஏனப்பா, பாவம் இப்படிப் போட்டு அடிக்கிறாய்? இவளோ ஏதும் அறியாதவளாக இருக்கிறாளே? இவளை அடிப்பதை விட்டு விடுஎன்றார்.

"
ஆசையோடு வளர்த்த பலாவை அநியாயமாக இவள் வெட்டிவிட்டாள். இவளையும் இப்போதே கொன்றுவிடப் போகிறேன்" என்றான் அவன், மிகுந்த சீற்றத்துடன்.

"
கொன்றால் பலா பழையபடி ஆகிவிடுமா?" என்றார் ஒளவையார். " கொல்லா-விட்டால் பலா வந்துவிடுமா?" என்றான் அவன். "வரும்" என்று கூறினார் ஒளவையார். இறைவனை வேண்டிப் பாடினார். அந்தப் பாடல் இது.

கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா
ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய் - சீரிய
வண்டு போற் கொட்டையாய் வன்காயாய்ப் பின்பழமாய்ப்
பண்டு போல் நிற்கப் பணி.

"கூர்மையான அரிவாளினாலே வெட்டப்பெற்ற வளைந்த இந்தப் பலா மரமானது, ஓர் இலை துளிர்த்ததாகிப் பின் கிளைகள் விட்டதாகிப் பின் உயரிய மரமும் ஆகிப், பின் சிறந்த வண்டு போலத் தோன்றும் கொட்டையாய்ப் பின் வன்மையான காயாகிப் பின் பழமும் ஆகி, முன் நின்றது போல முழுப் பலா மரமாகவே நிற்பதாக" என்பது பொருள்.
--------------

11. என் உள்ளம்!

பலா மரம் மீண்டும் பழையபடியே வளர்ந்து பசுமையாக நின்றது. குறவன் அவர் காலடிகளில் வீழ்ந்தான். 'தன்னைக் காப்பாற்ற வந்த தெய்வம்' என்று அடிப்பட்டவள் போற்றினாள். சூது செய்தவள் அஞ்சிச் சரணடைந்தாள். தன் பிழைக்கு வருந்தி மன்னிக்குமாறு மன்றாடினாள். ஒளவையார் மிகவும் உருகிப் போனார். ஒன்றுபட்டு வாழும்படியாகக் கூறி அவர்களை வாழ்த்தினார்.

குறவனும் அவன் மனைவியரும் ஒளவையாரைப் போற்றி விருந்தளித்து, தன் இனத்தோடும் ஒருங்கு கூடி விழாக் கொண்டாடினார்கள். ஒளவையாரும் அந்தக் கள்ளங்கபடமற்ற மக்களின் தூய்மையான அன்பிலே திளைத்து உவந்தார்.

அவர்களிடம் விடைபெற்று, மீண்டும் சோழனிடம் செல்ல ஒளவையார் விரும்பிய-போது, குறவர் குடியினர் வருத்தமுற்றனர். பிரியா விடைதந்து பணிந்து நின்றனர். குறச் சிறுவர்கள் தம் காணிக்கையாக ஒரு படி தினையரிசியை அவருக்கு வழங்கினார்கள்.

அந்த அன்பின் சின்னத்தைத் தம் மடியிற் கொண்டவராகச் சோழனிடம் வந்து கொண்டிருந்தார் ஔவையார்.

சோழன் ஒளவையார் பால் தோன்றிய பெருமிதத்தைக் கண்டு வியந்தான். அவர் மடியின் கனம் அவன் கண்ணிலும் பட்டது.

"
அம்மையே! எங்கிருந்து வருகிறீர்கள்? மடியின் கனம் மிகுதியாயுள்ளதே? அது என்னவோ?" சோழன் ஆர்வத்துடன் கேட்டான்.

ஒளவையார் சிரித்தார். " அது அன்பின் பெருஞ்செல்வம்!" என்றார்.

"
சோழனே! காட்டிலே குறவர் வீட்டிலே வெட்டுப்பட்டுப் போன ஒரு பலா மரத்தினைச் சுற்றி ஒரு பெரிய பூசல் நிகழ்ந்து கொண்டிருந்தது. பூசலைப் போக்கக் கருதி அந்த வெட்டுண்ட மரம் பண்டு போல் தளிர்த்து நிற்குமாறு பாடினேன்."

சோழன் வியப்புடன், "அது மீளத் தழைத்ததோ?" என்றான்.

"
இறையருள் ! அது மீளப் பழையபடியே பொலிவுடன் நின்றது. குறவர்கள் மகிழ்ந்து என்னை உபசரித்தனர். அப்போது அங்குள்ள சிறுவர்கள் உவந்து வழங்கியதுதான் இந்த ஒரு படி தினையரிசி."

"
ஒரு படி தினையரிசியா? செயற்கரிய செயலைச் செய்த தங்கட்குப் பரிசு அதுதானா?" சோழன் கேட்டான்.

"
தருபவர்களின் அன்பினைத்தான் நான் மதிப்பேன். தருகின்ற பொருளினைப் பெரிதாகக் கொள்வதில்லை. உப்புக்கும் ஒரு கவிதை பாடுவேன். புளிக்கு ஒரு கவிதை பாடவும் என் உள்ளம் இசையும். அதுதான் என் உள்ளத்தின் தன்மை" என்றனர் ஒளவையார்.

சோழன், அவரது உள்ளத்தின் தெளிவாகிய அந்த மெய் யுரையைக் கேட்டதும், மெய்மறந்தவனாக வியந்து நின்று விட்டான். ஒளவையார் ஏழை மக்களிடம் கொண்டுள்ள அன்பு அவருடைய பாடலிலேயும் எதிரொலித்தது.

அவருடைய உள்ளச் செவ்வியைச் சோழனும் அறிந்து, மனங் கலந்து போற்றினான். ஒளவையாரின் புகழ் அவன் மூலம் பலருக்கும் பரவிற்று.

கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறச்சிறார்
மூழக் குழக்குத் தினைதந்தார் - சோழாகேள்
உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம்.

"சோழ ராசனே! கேட்பாயாக; வெட்டுப்பட்டுப்போன பலா மரத்தைத் தழைக்கும்படிப் பாடினேன். குறச்சிறுவர்கள் ஒரு படி தினையைத் தந்தனர். அதுதான் இது. என் உள்ளம் உப்புக்கும் பாடும்; புளிக்கும் ஒரு கவிதை சொல்லும், அந்தத் தன்மை யுடையது" என்பது பாட்டின் பொருள்.

கூழைப்பலா என்பது பலா வகையுள் ஒன்று அல்லது மிக உயரமாக வளராத பலா மரம் என்பதும் ஆம். தாம் வைத்த பலா காய்த்துப் பலன் தரும் போது தமக்கும் பிள்ளை பிறக்கும் என்பது குறவர் நம்பிக்கை.
-----------

12. சாடினாள்!

வழிநடந்த களைப்பும், பசியின் களைப்பும் சேர்ந்து வருத்த, ஒரு சமயம் ஒளவையார் ஓரிடத்தில் சோர்ந்து அமர்ந்திருந்தார். அவ் வழியாக வந்த ஒருவன் அவர் நிலையைக் கண்டு மிக மனம் வருந்தினான். அவருடைய தோற்றம் அவன் உள்ளத்தை உருக்கியது. அவரை அணுகி அன்போடு விசாரித்தான். அவருடைய பசியைப் போக்கக் கருதித் தன் வீட்டிற்கும் அவரை விரும்பி அழைத்துச் சென்றான்.

அதுவரை அவன் தன் மனைவியைப் பற்றி அடியோடு மறந்துவிட்டான். அவள் நினைவு அப்போதுதான் எழுந்தது. அவன் உள்ளம் கவலையுற்றது. ஒளவையாரை அழைத்து வந்த தன் அறியாமைக்கு வருந்தினான். எனினும், அவரை அப்படியே திரும்பிப் போகச் சொல்வதற்கும் அவன் மனம் இசையவில்லை. அவரைத் தன் வீட்டுத் திண்ணையில் அமரச் சொல்லிவிட்டு வீட்டினுள் மெல்லச் சென்றான்.

மனைவியிடம் விருந்துக்கு ஆள் வந்திருப்பதை எப்படிச் சொல்வது? அவள் சீறுவாளே? அவன் அவளருகே சென்று மெல்ல அமர்ந்தான். அவள் முகத்தை அன்புடன் வருடித் தடவிக் கொடுத்தான். அவள் தலைவாரிக் கொண்டிருந்தாள். அவனே தலையை வாரிவிட்டு, ஈரும் பேனும் எடுத்து, அவள் கூந்தலைப் புனைந்தான். அவள் முகத்தையும் பொட்டிட்டு ஒப்பனை செய்தான். அவள், தன் கணவனின் செயலுக்குக் காரணமறியாமல் சிரித்தாள். அவள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவன் நினைத்துக்
கொண்டான்.

"
வாசலில் ஒரு வயதான கிழவி இருக்கிறாள். நம் வீட்டிற்கு விருந்தாக வந்திருக்கிறாள். அவளுக்கு நம் வீட்டில் உணவு படைக்க வேண்டும்" என்றான்.

அதனைக் கேட்டதும் அவள் சினங்கொண்டாள். தன் உடல் வருத்தமுறும் அளவுக்கு எழுந்து நின்று சினக் கூத்தாடினாள். அவன் மீது வசையாகப் பெரிதும் பாடினாள். பழமுறத்தை எடுத்து, வெறிகொண்டவளைப்போல ஓட ஓட விரட்டி அவனைப் புடைத்தாள். அவன் என்ன செய்வான்? வெளியிலோ விருந்துக்கு வந்தவர் ! உள்ளே நடக்கும் கூத்தோ வெளியே தெரியக் கூடியதன்று! வாய் திறந்து எதுவும் கூறாமல், அவள் கொடுமையை எல்லாம் சகித்துக்கொண்டு, வீட்டினுள் வளையவளைய வந்தான்.

உள்ளே நடப்பதை அறிந்த ஒளவையார், அவன் நிலைக்குப் பெரிதும் பரிதாபப்பட்டார். அவளுடைய நடத்தை அவர் உள்ளத்தில் வெறுப்பை விளைத்தது. அதனைத் தாம் அறிந்துகொண்டதை அறியச் செய்தால் ஊர் பழிக்குமே என்று கருதியாவது அவள் சீற்றத்தை நிறுத்துவாள் என்று நினைத்தார்.

இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக ஆ
டினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்.

என்று அவளும் கேட்குமாறு உரத்த குரலிற் பாடினார்.

அந்தப் பாட்டினைக் கேட்டதும், அந்தப் பழிகாரி அப்படியே செயலற்று நின்று-விட்டாள். "எவரோ பெரியவர் போலிருக்கிறது! சாபம் ஏதாவது கொடுத்துவிட்டால் என்ன செய்வது?" என்று நினைத்து நடுங்கினாள்.

"
அவரை உள்ளே அழைத்து வா, சோறு போடுகின்றேன்" என்று தன் கணவனிடம் கூறினாள்.

கணவனும் சற்றுமுன் நடந்ததை எல்லாம் மறந்தவனாக மகிழ்வுடன், ஒளவையாரை உண்ண அழைப்பதற்கு வந்தான். பின்னும் நடப்பதை அறிய விரும்பிய அவரும் உள்ளே சென்றார்.

"
அருகே அமர்ந்து அவளுடைய முகத்தைச் சீர் செய்து விட்டான். ஈரோடு பேனையும் தலையினின்றும் எடுத்தான். விருந்து வந்திருக்கிறது என்றும் சொன்னான். சொல்லவும், அவள் மிகவும் வருந்தினாள். சினத்தால் கூத்தாடினாள். அவன் மீது வசை பாடினாள். வெறிகொண்டவளாக ஆடி, அவனைப் பழ முறத்தால் ஓடஓடப் புடைத்தாள் என்பது பாட்டின் பொருள். இப்படியுமா ஒரு பெண்' என்பது ஒளவைத்தாயின் ஏக்கம்.
----------

13. அமுதும் அன்பும்!

பசித்தீ மிகவும் கொடியது. 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்' என்பார்கள். ஒளவையாரையும் பசித்தீ அப்போது பெரிதாக வாட்டிக் கொண்டிருந்தது. அதனாலும், அந்தக் கணவனின் நல்ல உள்ளத்திற்குக் கட்டுப்பட்டும், அவர் அவன் வீட்டினுள் சென்று அமர்ந்தார்.

அந்தக் கணவனுக்கு ஒரே மகிழ்ச்சி, எப்படியோ இந்த அம்மையை உண்ணச் செய்துவிட்டோம் என்ற மனநிறைவு அவன் முகத்தில் ஒளி வீசியது. அந்த அகங்காரி உணவு பரிமாறினாள். அவள் உணவு இட்ட முறையும், நடந்து கொண்ட தன்மையும், வெறுக்கத்தக்க விதமாகவே இருந்தது.

ஒளவையார் அன்புக்கு எளியராவார். ஆனால் அகம்பாவத் திற்கு அவர் என்றும் பணிந்ததில்லை. அவர் உள்ளம் அனலாகக் கொதித்தது. சோற்றையும் அகங்காரியின் முகத்தையும் ஒரு முறை நோக்கினார். அப்படியே எழுந்து வெளியே போய்விட்டார்.

அந்த அப்பாவிக் கணவன் அவரின் பின்னாகத் தொடர்ந்து ஓடினான். "அம்மையே! உங்களுக்குக் கடுமையான பசியென் பதனை நான் அறிவேன். ஏதோ அவள் குணம் அப்படி என்று கருதி விட்டுத் தள்ளுங்கள். அதற்காக நீங்கள் உண்ணாமற்போவது கூடாது" என்று மிக வேண்டினான்.

"
தம்பி ! அந்த உணவைப் பார்க்கவே என் கண்கள் கூசுகின்றன. அன்பில்லாத அவள் படைத்த அமுது அது. அதைக் கையில் எடுக்கவே நாணம் கொள்ளுகின்றேன். என் வாய் தமிழ் பாடிப் பெருமை பெற்றது. அந்த உணவை ஏற்கத் திறக்க மாட்டேன் என்கிறது. நான் என்ன செய்வேன்?"

"
என் உடலெல்லாம் வேதனையால் பற்றி எரிகின்றது. என்னால் அதனை உண்ணவே முடியாது" என்றும் கூறினார்.

அவன் மனைவியின் கொடுமைகளுக்குப் பழக்கப்பட்டவன். அதனால் மீண்டும் மன்றாடினான். அப்போது, அவர் வாயினின்றும் எழுந்த செய்யுள் இது.

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.

"ஐயையோ! அன்பில்லாத நின் மனையாள் இட்ட அமுது அது! அதனைக் காணவும் கண்கள் கூசுகின்றன! கையால் எடுக்கவும் வெட்கமாகின்றது. பெருமை நிறைந்த என் வாயும் திறக்க மாட்டேன் என்கிறது. பயனின்றி என் எலும்பெல்லாம் பற்றி எரிகின்றது" என்பது செய்யுளின் பொருள்.

செய்யுளை இரண்டு முறை படியுங்கள். ஒளவையாரின் உள்ளக் கொதிப்பு நமக்கே புலனாகும். பெண்பாலரான அவர், பெண்களின் பால் அதிக அன்புடையவர்தாம். எனினும், பெண்ணுருவில் அந்த மனையுள் பேய் இருப்பதனைக் கண்டதும் கொதிப்படைந்தார்.

அன்போடு அளிக்கும் கூழையும் வியந்து உண்டு பாராட்டும் அந்தக் கனிவான உள்ளமும் கனன்றது. அதனை நோக்கினால், அந்தக் கொடியவளின் தன்மை நமக்குத் தெளிவுபடும்.

'
மாணொக்க வாய்' என்றது, தமிழ்ப் பாடும் புனிதமான வாய் என்பதனாலாகும்.
-----------------

14. திருகிப் பறிப்பேன்!

ஒளவையாரை உபசரித்த கணவனின் நிலைமை மிகப் பரிதாபமாக இருந்தது. அவன் அவரைப் போகவிடுவதாக இல்லை. இறைஞ்சியபடி கண்களில் நீர் மல்க அவரைப் பணிந்து வேண்டி நின்றான்.

அவள் பிறந்த வேளைப் பயன் அப்படி! என் கதியும் இப்படியாயிற்று. அவளை மறந்துவிடுங்கள். எனக்காக மனம் இரங்குங்கள்' என்றான்.

'
அவள் பிறந்த வேளை' என்ற சொற்கள் ஒளவையாரைச் சிந்தனைக்கு உள்ளாக்கின. இப்படிப்பட்ட பெண்களையும் படைத்தானே? அந்தப் பிரமனை என்ன செய்வது?'

'
அவர் சினம் அந்தப் படைப்புக்கு நாயகன் மீது சென்றது. பெண்மையின் இலக்கணம் மென்மையும் அன்பு செறிந்த பண்பும் அல்லவோ! அங்ஙனமிருக்கவும், இந்த அகங்காரியையும் அவன் எங்ஙனம் படைத்தான்?'

'
படைத்ததுதான் செய்தான், அது போகட்டும், அவள் அகம்பாவத்தை அடக்கும் உள்ளத்திண்மையுடைய ஒருவனை யாவது அவளுக்குக் கணவனாக வகுத்திருக்கக் கூடாதா? உணர்வற்ற மரமாக இருக்கிறானே இவன்! இவனுக்கு அவளை வகுத்துப் பெண்மையைப் பிறர் கைகொட்டி நகைக்கச் செய்துவிட்டானே?

அவனை, அந்தப் பிரமனை இப்போது கண்டால்.... ?

சிவனோடு தருக்கிப் பேசி முறைகெட்டு நடந்த அவனுடைய தலைகளில் ஒன்று, அந்தச் சிவனாலே அன்று அறுக்கப்பட்டுப் போய்விட்டது என்பர். அதுபோக எஞ்சி அறுபடாமல் இருக்கும் நான்கு தலைகளையும் பற்றித் திருகி நானே பறித்து எறிந்துவிட மாட்டேனோ?'

இவ்வாறு குமுறினார் ஒளவையார். படைப்புக்கு இறையவன் அவருடைய சினத்துக்கு உள்ளாகின்றான். அவள் பிறந்த வேளை' என்ற கையாலாகாத கணவனின் சொற்கள், அவரை இவ்வாறு கூறச் செய்தது. அந்தப் பாடல்,

அற்றதலை போக அறாததலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ - வற்றன்
மரமனையா னுக்கிந்த மானை வகுத்த
பிரமனையான் காணப் பெறின்.

"வற்றல் மரத்தினைப் போன்றவனான இந்த மனிதனுக்கு இத்தகைய பெண்ணை மனையாட்டியாக விதித்தவன் பிரமன் என்கிறான். அந்தப் பிரமனை யான் நேராகக் காணப்பெற்றால்...

முன்னால் சிவபெருமானாற் கிள்ளப்பட்டுப்போன ஒரு தலை நீங்கலாக அறுபடாமல் இருக்கும் நான்கு தலைகளையும் பற்றித் திருகி, யான் பறித்துவிட மாட்டேனோ?" என்பது பொருள்.

'
மரமனையாளுக்கு இந்த மகனை வகுத்த' எனவும் மூன்றாவது அடி வழங்கும். அது வற்றல் மரம்போல் அன்பற்ற இவளுக்கு இவனைக் கணவனாக விதித்த' என்று பொருளைத் தரும், அதுவும் பொருந்துவதே !

முதல் அடி, 'அற்ற தலையின் அருகின் தலையதனை' எனவும் வழங்கும். அறுபட்ட தலைக்குப் பக்கத்திலுள்ள தலையை என்று அப்போது பொருள்படும்.

அந்தக் கணவனின் உள்ளத்தில் அவர் சொற்கள் ஆழப் பதிந்தன. அவன் துணிவு பெற்றான். இல்லற வாழ்வை வெறுத்து வெளியேறிவிடத் துணிந்தான். அதனை அடுத்த செய்யுள் கூறும்.

திருவள்ளுவரும் ஒரு குறளில் படைப்புக்கு நாயகனை நொந்து கொள்ளுகின்றனர்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.'

என்பது அது.
-----------------

15. சந்நியாசம் கொள்!

வாழ்வு இருவகையானது. ஒன்று இல்லறம்; மற்றது துறவறம்.

இல்லறம் என்பது, இல்லிலிருந்து தக்க மனையாளுடன் கூடி இன்புற்று இல்லறக் கடமைகளை ஆற்றிச் சிறப்படைவது.

துறவறம் என்பது, அனைத்தையும் கைவிட்டு ஒதுங்கிக் காட்டில் சென்று தவம் பூண்டு ஒழுகுவது.

இல்வாழ்வினர் அதை வெறுத்தால் துறவறத்தை நாடுவார்கள். துறவு நெறியினர் நெறி பிறழ்ந்தால் இல்லறத்தை மேற்கொள்ளத் தொடங்குவார்கள்.

இப்படிப்பட்ட வாழ்வு நெறிகளில் அந்தக் கணவன் இல்லறத்தை மேற்கொண்டான். அதுவோ கொடுமையான நரகம் ஆயிற்று. அவன் தனக்கு விதித்த விதி அதுவென்று எண்ணி யிருந்தான். அந்த மயக்கம் தெளியவும், அவன் மனிதன் ஆனான்.

"
என் வாழ்வு கசந்துவிட்டது. இவளோடு வாழ்ந்து இதுவரை பட்ட பாடுகள் போதும். இனி, நான் இவளோடு ஒரு நொடியும் வாழ மாட்டேன். சந்நியாசம் ஏற்கப் போகின்றேன். என்னை ஆசீர்வதியுங்கள்" என்றான்.

பொதுவாக இல்லற வாழ்வில் இருப்பவன் ஒருவனைச் சந்நியாசம் கொள்ளத் தூண்டுவது முறையாகாது. 'அறம் எனப்படுவதே இல்வாழ்க்கை' என்ற ஆன்றோர் வாக்கினை அது மறுப்பதும் ஆகும். ஆனால், இங்கு உரைத்துள்ள கணவனின் நிலைமையோ முற்றிலும் வேறானது.

இன்பம் செழிக்க வேண்டிய வாழ்வில், துன்பம் பேய்க் கூத்தாடியது. அன்பு காட்ட வேண்டிய இல்லாள் அகங்காரியாக ஆட்டிப் படைத்தாள். ஆகவே, அவனுடைய முடிவிலும் நியாயம் இருந்தது. ஒளவையாரும் அதனை உணர்ந்தார். 'இல்லவள் மாட்சியில்லாதபோது அந்த வாழ்வில் உள்ளது என எதுவுமே இல்லையல்லவா?' அவனை அவர் மனப்பூர்வமாகவே ஆதரித்தார்; ஆசீர்வதித்தார்.

பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலுங் கூடி இருக்கலாம் - சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகிற்
கூறாமற் சந்நியாசம் கொள்.

என்று அவன் முடிவை ஆதரித்துப் பாடினார் அவர்.

"
கணவனுக்கு ஏற்றவளாக நடந்து கொள்ளும் கற்புடைய மனைவி கிடைத்திருந்தால், எந்த நிலையிலும், அவளோடு கூடி இல்வாழ்விலே ஒருவன் ஈடுபட்டிருக்கலாம். மனைவி கொஞ்சமேனும் முறைகேடு உள்ளவளாக இருந்தாளானால் எவரிடமும் கேளாமல் சந்நியாசம் கொள்வாயாக" என்பது பொருள்.

பதிவிரதை - பதியின் கருத்துக்கு இசைய நடப்பதனையே தான் மேற்கொள்ளும் விரதமாக உடையவள். எத்தாலும் - எந்த நிலையிலும், நிலையாவது வளமையும் வறுமையும் இன்பமும் துன்பமும். ஏறுமாறு - முறைகேடு, பதிவிரதைத் தன்மைக்கு எதிரான வகையில் நடப்பது. 'கூறாமல்' என்றது, பலரிடம் கூறினால், அதனால் மனவுறுதி தளர்ந்து விடுதலும் நேரலாம் என்பது பற்றி, அவளிடம் எதுவும் பேசாமலும் ஆம்.
----------------

16. என்ன செல்வம் ?

ஒளவையாரிடம் சந்நியாசம் மேற்கொள்வதாகச் சொன்னான் அந்த மனிதன். என்றாலும், அவன் மனத்தில் ஒரு சபலமும் எழுந்தது. தன்னுடைய செல்வங்கள் அனைத்தும் பாழாய்ப் போகுமே; அதற்கொரு நல்ல ஏற்பாடு செய்ய வேண்டுமே என்று அவன் கவலைப்பட்டான்.

"
சந்நியாசம் கொள்வதற்கு முன்பாக என் சொத்துகளுக்கு ஒருவகையான ஏற்பாடு செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றான் அவன்.

அவனுடைய நிலைமையைக் கண்டதும் அவர் மனம் வேதனைப்பட்டது. அவனுக்குக் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்லத் தொடங்கினார்.

"
நின் மனைவியோ இழிந்த குணம் உள்ளவளாக இருக்கிறாள். சூர்ப்பனகை தாடகை என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? அந்த அரக்கிகளைப்போல மூர்க்க குணம் உள்ளவளாகவும் இருக்கிறாள். அவர்களைப் போன்ற கொடூரமான உருவினளும் ஆவாள். இவளைப்போய் மனைவி என்று மணந்து கொண்டாயே? நின்னை என்ன சொல்வது?"

"
உன் செல்வம் என்ன பெரிய செல்வமோ? அடியார்களின் காற்செருப்புச் சுவட்டின் மதிப்புக்கூட அதற்குக் கிடையாது. அதற்குப் போய்க் கவலைப்படுகிறாயே? உன் அறியாமையை என்ன சொல்வது? உன் போன்றவர் உள்ளத்தை அடக்கிச் சந்நியாசம் கொள்வது எளிதன்று. எல்லாம் நீங்கள் நெருப்பில் வீழ்ந்து உயிர்விடுதல் தான் நல்லது."

இப்படிச் சொன்னார் அவர். அவன் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. துறவுக்கோலம் மேற்கொண்டு வெளியேறி விட்டான். அவன் மனைவி ஏதேதோ பேசினாள். அவனோ எதுவும் பேசாது வெளியேறிப் போனான்.

சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப் போல்வடிவு
கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே - தொண்டர்
செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!

"சண்டாளித்தனம் கொண்டவள்; சூர்ப்பநகை தாடகை போன்ற மேனி உடையவள்; இவளைப்போய் மனைவியென மணந்தனையே? தொண்டரின் செருப்புச் சுவட்டின் மதிப்புக்கூடப் பெறாத நின் செல்வம் என்ன செல்வமோ? நீ நெருப்பிலே வீழ்ந்து இறப்பதே நன்றாகும்என்பது செய்யுளின் பொருள்.

"
தொண்டரின் செருப்புச் சுவட்டைப் போற்றினாலாவது செய்த பாவம் போகும். நல்ல கதியைப் பெறலாம். நின் செல்வம் அத்தகைய பயனைத் தருவதோ?

பயன் தருவதாயின், நின் இல்வாழ்விற்கு ஏற்ற துணை இருக்க வேண்டும். அஃதில்லாதபோது பொருளால் வருகிற பயனை நீயும் அடைய முடியுமோ?

பொருட்பற்று உடைய நின்னால் சந்நியாசத்தில் உறுதியுடன் இருப்பதும் இயலாததாகும். அதனால், நிலையற்ற உள்ள முடைய நின்போல்வார் நெருப்பில் விழுந்து செத்துப்போதலே நன்று."

இவ்வாறு கடுமையாக உரைத்தனர் ஔவையார்.

இல்லற நெறி நிற்பவர்கள் இணைந்த மனங்கலந்த உறவினைப் பேணுதல் வேண்டும். அஃதான்றி இருவர்க்கிடையே முரண்பாடு நிலவுமானால், அது வாழ்வே ஆகாது. இந்த உண்மையைத் தெளிவுபடுத்துவன இந்தச் சில செய்யுட்கள் ஆகும்.

இச்செய்யுளின் இறுதியடி, நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்' எனவும் வழங்கும். அந்தச் செல்வத்தை நெருப்பில் விட்டுப் பொசுக்குக என்பது கருத்து.
--------------

17. சிலம்பியின் சிலம்பு

ஒருநாள் ஒளவையார் தெருவூடே போய்க் கொண் டிருந்தார். ஒரு வீட்டுச் சுவரில் ஒரு வெண்பாவின் முதல் ஏழு சீர்கள் மட்டுமே எழுதியிருப்பதைக் கண்டார். சொற்களின் இனிமை அவரைக் கவர்ந்தது. எஞ்சிய பகுதியையும் அறிந்து கொள்ள விரும்பினார். அந்த வீட்டினுள்ளே சென்றார்.

அங்கே ஓர் இளம்பெண் சோர்வுடன் இருக்கக் கண்டார். ஒளவையாரின் உள்ளம் அவளைக் கண்டு இரக்கம் கொண்டது. "மகளே, நின் வீட்டுச் சுவரிலே பாதிப்பாடல் எழுதியிருப்பதைக் கண்டேன். பாடலின் சொற்சுவை எஞ்சிய பகுதியையும் அறிந்து கொள்ளத் தூண்டியது. அதனால், உள்ளே வந்தேன்" என்றார் அவர்.

அந்தப் பெண் ஏதும் பதில் சொல்லவில்லை. அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவளுடைய வேதனையின் காரணமாக அழுகுரலும் தோன்றியது.

ஒளவையார் திடுக்கிட்டார். அப்பெண்ணின் உள்ளத்திற்கு வேதனையூட்டும் ஒரு சம்பவம் அந்தப் பாதிப்பாடலுடன் புதைந்து கிடப்பது அவருக்குப் புரிந்துவிட்டது. "அழாதே அம்மா! நின் மனம் இப்படிப் புண்படும் என்பதனை அறியாது கேட்டுவிட்டேன். என்னைப் பொறுத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு, வெளியே செல்லத் தொடங்கினார்.

அந்தப் பெண், அவரை உள்ளே அழைத்தாள், தன் சோகக் கதையைக் கூறத் தொடங்கினாள்;

"
என் பெயர் சிலம்பி. தாசித் தொழில் செய்து வந்தேன். நான் ஏழையானாலும், என் உள்ளம் தமிழ்ப்பாக்களை விரும்பியது. தமிழ்ச் செய்யுட்களை ஆர்வமுடன் கற்று மகிழ்வேன். அந்த ஆர்வத்தால், ஒரு மடமையான செயலையும் செய்துவிட்டேன்.

"
கம்பரின் செய்யுட்கள் இப்போது நாட்டில் பெரிதும் மதிக்கப் பெறுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் வாயால் என்னைப் பற்றி ஒரு செய்யுளைப் பாடச் செய்து கேட்க வேண்டும் என்று விரும்பினேன். விருப்பம் வளர்ந்து, தீராத ஆசையாகவும் உருவெடுத்தது.

என்னிடமிருந்த பொன்னையும் பொருளையும் எடுத்துக் கொண்டேன். ஐந்நூறு பொன்கள் தேறின. அவற்றைக் கொண்டு கம்பர் பாதங்களில் காணிக்கையாகச் செலுத்தி, அவரிடம் என் விருப்பத்தைக் கூறிப் பணிந்தும் நின்றேன்.

அவர் ஆயிரம் பொன்னுக்கு ஒரு பாட்டுப் பாடுகிறவராம். ஐந்நூறு பொன்னுக்கு ஓர் அரைப்பாட்டினை எழுதித் தந்து, எஞ்சிய தொகையைக் கொடுத்தால், செய்யுளை முடித்துத் தருவதாகக் கூறிவிட்டார். என் வேண்டுகோள் எதுவும் பயன் தரவில்லை. அந்தப் பாதிப்பாடல் தான் அது. என்னைப் பற்றி அதில் ஒரு சொற்கூட இல்லை !

என் தோல்வி என் உள்ளத்தைச் சிதைத்து விட்டது. என் உடலும் உள்ளமும் மிகவும் சோர்ந்து போயிற்று. இன்னமும் ஐந்நூறு பொன்னுக்கு நான் எங்கே போவேன்?"

சிலம்பியின் கதை ஒளவையாரையும் கண் கலங்கச் செய்தது. அவளைத் தேற்றி அந்தச் செய்யுளின் பாதியைத் தாமே பாடி அவளை மகிழ்வித்தார். அவளுடைய அன்பும் உபசரிப்பும் அவரைத் திணறும்படிச் செய்தன. அந்தச் செய்யுள் இது.

தண்ணீருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே
மண்ணா வதுஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு.

"தண்ணீய நீர் எனப் போற்றப்பெறுவது வளமுடைய காவிரியின் நீரேயாகும். வெற்றிமாலை பூண்ட வேந்தன் எனப் பெறுவானும் சோழனே யாவான். நல்ல நிலவளம் உடையதாகப் புகழப்படுவதும் சோழ மண்டலமே ஆகும். பெண் என்னும் பெயருக்குரிய தகுதி நிரம்பியவளும் மிக்க அழகியான சிலம்பியே ஆவாள். அவளுடைய கமலம் போன்ற தாள்களில் அணிந் திருக்கும் செம்பொன்னாலாகிய சிலம்பே போற்றத்தக்க சிலம்பும் ஆகும்என்பது பொருள்.

இச்செய்யுளின் ஒரு பாதி பொய்யாமொழியாராற் பாடப் பெற்றது எனவும், பிற்பாதியை ஒளவையார் பாடி முடித்தனர் எனவும் சிலர் கூறுவர்.

'
அம்பொற் சிலம்பி ' என்பதற்குப் பதில், 'அம்பர்ச் சிலம்பி' எனப் பாடபேதம் கொள்பவரும் உளர். அப்போது அம்பர் என்னும் ஊரினளான சிலம்பி' என்று பொருள் கொள்ள வேண்டும்.

பொன் பெற்றுப் பாடிய பாதிப்பாட்டு காவிரியையும் சோழனையும் சோழ நாட்டையும் போற்றுவதுடன் நின்றது. ஒளவையார் அருள் கொண்டு பாடியதோ சிலம்பியைப் போற்றியதுடன் அமையாது, அவள் காற்சிலம்புகளையும் சேர்த்துப் புகழ்ந்ததாக அமைந்தது. அந்த அளவுக்கு அவள் வாழ்வு செழிக்க வாழ்த்தியதாகவும் விளங்கியது. இந்த நயத்தை நுட்பமாக அறிந்து இன்புறல் வேண்டும்.
----------------

18. ஆரையடா?

"சிலம்பி வீட்டிற்கு ஒளவையார் சென்றிருந்ததும், தம்முடைய செய்யுளை முடித்து அவளை வாழ்த்தியதும் கம்பருக்குத் தெரிந்ததும் அவர் சினம் கொண்டார். ஒளவையாரை எப்படியேனும் இழிவுபடுத்த வேண்டும்" எனவும் நினைத்தார்.

ஒருநாள், சோழன் அவையிற் புலவர் பெருமக்கள் பலரும் குழுமியிருந்தனர். அப்போது தம்முடைய சொற்குறும்பினைத் தொடங்கினார் கம்பர்.

ஆரைக்கீரை ஒரு தண்டின் மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும். அதனை மனத்தே கொண்டார்.

ஒளவையாரை நோக்கி, 'ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ' என்று சிலேடையாக ஒரு தொடரைச் சொன்னார். எஞ்சிய வற்றைச் சொல்லி ஒளவையார் செய்யுளை முடிக்க வேண்டும்.

கம்பரின் குறும்பினை ஒளவையார் புரிந்து கொண்டார். அதே பாணியில் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.

எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா?

"அவலட்சணமே! எமனின் வாகனமான எருமையே! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே! முழுவதும் மேற்கூரை இல்லாது போன வீடாகிய குட்டிச்சுவரே! குலதிலகனான ராமனின் தூதனாகிய அனுமனின் இனமே! அடே! ஆரைக் கீரையைச் சொன்னாயடா!" என்பது பாடலின் பொருள்.

'
யாரையடா சொன்னாய்?' என்பது போலவும் செய்யுள் ஒலிப்பது காண்க.
-------------

19. சிற்றாடைக்கு நேர்!

ஒளவையார் ஒருவரா? இருவரா? மூவரா? இதுபற்றிய விவாதம் நெடுங்காலமாக ஆன்றோர்களிடையே நிலவி வருவதுதான். ஒளவையார் என்ற பலகாலத்துப் புலவர் வரலாறுகளும் காலப்போக்கில் கலந்து போய்விட்டன. இதனை முன்னரே சொல்லியிருக்கிறோம். எவர் பாடியது? காலத்திற்கும் செய்யுளின் அமைதிக்கும் பொருத்தம் உண்டா? இப்படிக் கேட்பதனால் ஏற்படும் முடிவுகள், சில சமயங்களில் விபரீதமாகவும் போய்விடுகின்றன.

வள்ளல் பாரியின் மறைவுக்குப்பின், அவன் பெண் மக்களான சங்கவை அங்கவை என்பாரைக் கபிலர் திருக்கோவலூர் மலையமானின் மக்களுக்கு மணமுடித்ததாக ஒரு வரலாறு நிலவுகின்றது. கால ஒற்றுமையும் பிறவும் அதனை அரண் செய்கின்றன. எனினும், கபிலர் அவர்களைப் பார்ப்பார்பால் ஒப்பித்துவிட்ட பின், தாம் வடக்கிருந்து உயிர் துறந்தனர் என்றவொரு செய்தியும் அதனுடன் கேட்கப்படுகின்றது.

ஒளவையார் பாரி மகளிரை மலையமானின் மக்கட்கு மணமுடித்தனர் என்பது மற்றொரு வழக்கு. அதற்குச் சான்றாக விளங்குவன சில செய்யுட்கள். அவற்றை நாம் காணலாம்.

இந்தச் செய்தியும் பாடலமைதியும் பொருத்தமற்றதெனக் கருதிய அறிஞர்கள் சிலர், பாரி என்பான் ஓர் இடையன் எனவும், அவன் மக்கட்கே ஒளவையார் முன்னின்று மணமுடித்து வைத்ததாகவும் உரைப்பார்கள்.

இந்தச் செய்திகளை மனத்தே கொண்டு, இதன் தொடர்பாக வரும் செய்யுட்களை மட்டுமே கற்று இன்புறுவோம்.

ஒரு சமயம், ஒளவையார் நடந்து சென்று கொண்டிருந்தார். மாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம். பெரிய மழையும் பெய்யத் தொடங்கிற்று. மழையில் நனைந்தவராக குளிரால் நடுங்கியபடியே ஔவையார் சென்று கொண்டிருந்தார்.

அவர் எதிரிலே ஒரு சிறு குடிசை தோன்றவே, அவர் கால்கள் தாமே அதனை நோக்கிச் சென்றன. அந்தக் குடிசையில் இருந்தவர்கள், தம் குடிசையை நோக்கி வருகின்ற மூதாட்டியைக் கண்டனர். அவரை ஏற்று அவருக்கு உதவ ஆவலுடன்
எதிர்பார்த்து நின்றனர்.

ஒளவையார் குடிசைக்குள் நுழைந்ததும், அந்தப் பெண்கள் தம்முடைய நீலச்சிற்றாடை ஒன்றை அவருக்கு அளித்து, அவருடைய நனைந்த உடைகளை மாற்றச் செய்தனர்.

அந்த இரு பெண்களின் அன்பான உபசரிப்பு ஒளவையாரின் உள்ளத்திலே பலவித நினைவுகளை எழச் செய்தன.

பாரியைக் காணச் சென்றிருந்தார் ஒளவையார். பாரியின் அளவற்ற தமிழன்பு அவரை ஆட்கொள்ள, அங்கே பல நாட்கள் தங்கிவிட்டார். ஒருநாள், அவனிடம் விடைபெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தார். பாரிக்கு அவரைப் பிரிவதற்கு மனமே இல்லை. மேலும் சில நாட்களாவது அவரை இருக்கச் செய்ய வேண்டுமென நினைத்தான். தானே குதிரை மேற்சென்று ஒளவையாரின் கையிலிருந்த மூட்டையைப் பறித்துக் கொண்டு போய்விட்டான். 'பாரியின் நாட்டிலும் திருடனோ!' என்று வெதும்பிய ஒளவையார், அவனிடம் அதனை உரைத்துக் கண்டிக்க நினைத்து, அவனிடத்திற்கே மீண்டும் வந்தார். அவன் அவரிடம் தன் செயலைக் கூறிப் பொறுத்தருள வேண்டினான். அவனுடைய அன்பின் செயல் அவரை ஆட்கொண்டது.

அந்த நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டார். அந்த அன்பின் சாயலை இந்தப் பெண்களின் செயலிலும் கண்டு உவந்தார்.

அடுத்து மற்றொரு நிகழ்ச்சி அவர் உள்ளத்தே எழுந்தது.

பழையனூரில் காரி என்றொரு வள்ளல் இருந்தான். அவன் ' தமிழார்வத்தில் தலைசிறந்தவன். அவனைக் காணச் சென் றிருந்தார் ஒளவையார். அவன் ஒளவையாரைத் தன் குடும்பத்தாருள் ஒருவராகவே நினைத்து அன்பு காட்டி வந்தான். ஒருநாள் அவன் குடும்பத்தார் நிலத்திற்குக் களை வெட்டுவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். காரி ஒளவையார் கையிலும் ஒரு களைக்கொட்டைத் தந்தான். விருந்தாக நினையாது தன்னையும் அவருள் ஒருவராகவே மதித்த காரியின் அன்புச் செயல் ஒளவையாரின் மனத்தில் ஆழப் பதிந்து இருந்தது.

உரிமையுடன் தம் ஈர உடையை மாற்றி, அந்தச் சிறு பெண்கள், அவர்களுடைய நீலச் சிற்றாடையைத் தமக்கு அணிவித்த செயலை எண்ணினார். காரியைக் காட்டினும், இவர்களின் உரிமைப் பாசம் அவரை மெய்சிலிர்க்க வைத்தது.

சேரமான் ஔவையாரின் மீது அளவற்ற அன்புடையவன் ஒரு சமயம் அவரை அழைக்க நினைத்த அவன், அவரை மரியாதை யுடன் அழைக்க வேண்டும் என்பதைக்கூட மறந்து விட்டான். ஒளவையே! வாராய்?' என்று உரிமையுடன் அழைத்தான். அந்த அன்புக் கலப்பும் அவரிடம் நிலைபெற்றிருந்தது.

அதனினும் உரிமையுடன் தம்மைப் "பாட்டி! உடையை மாற்று ! நனைந்து விட்டாயே?" என்றெல்லாம் ஏகவசனத்தில் அழைத்து, வலிந்து தமக்கு நலம் செய்த அந்தப் பெண்களின் செயல் அவரைப் பெரிதும் கவர்ந்தது. அவர் பாடினார் :

பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி அன் றீந்த களைக்கொட்டும் - சேரமான்
வாராயோ என்றழைத்த வார்த்தையும் இம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்.

"அந்நாளிலே பாரியானவன் வழிப்பறி செய்துபோன அந்தக் கொள்ளைச் செயலும், பழையனூர்க் காரி என்பவன் கையிலே களைக்கொட்டினைக் கொடுத்த அந்தச் செயலும், சேரமான் வாராய் என்று அழைத்த உண்மையான உரிமையும் ஆகிய இவை மூன்றும், இந்தப் பெண்கள் அளித்த நீலச் சிற்றாடைக்குச் சமமான அன்புச் செயலாகும்" என்பது பொருள்.

ஒளவையார் மிகவும் முதியவர், நீலச் சிற்றாடை உடுத்தற்குரிய பருவத்தை எப்போதோ கடந்தவர்; எனினும் அப்பெண்கள் தம்மிடம் உள்ளதை அன்புடன் வழங்கினர். அன்பின் மிகுதியால் செய்வதன் தன்மையினையும் மறந்து மடம்பட்ட அவர்களின் தன்மையினைக்கூறி வியந்தது
---------------

20. கடகஞ் செறியாதோ?

மழைக்குப் புகலிடம் தந்தனர். உடையை மாற்றி ஈர உடையை உலர்த்தவும் செய்தனர். அத்துடனும் அந்தப் பெண்கள் நிற்கவில்லை.

ஒளவையாரின் பசியையும் போக்குவதற்கு முனைந்து, விரைவிலே உணவும் சமைத்தனர். அவரை உபசரித்து உண்ணவும் அழைத்தனர்.

அவரும் அமர்ந்து சூடான அந்த உணவினை உண்டு பசி தீர்ந்தார். இட்டது கீரைக்கறியும் சோறுந்தான். எனினும் அன்பின் வெள்ளம் அவற்றையே அமுதமாக்கின. அவர் மனம் பெரிதும் அவர்களுடைய அன்பில் கலந்துவிட்டது. அந்த உணவை வியந்து பாடினார்.

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து - பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகஞ் செறியாதோ கைக்கு.

"சூடாகவும், நறுமணம் கொண்டதாகவும், விரும்பும் அளவுக்குத் தின்பதற்குத் திகட்டாததாகவும் நெய்விட்டு அளாவிப் பசுமை நிறமுடையதான இதனைப் பொய்யாகக் கீரைக்கறி என்று சொல்லி அமுதத்தையே படைத்தார்கள் இங்ஙனம் ஆக்கிப் படைத்த இவர்களுடைய கைகள் கடகஞ் செறியப் பெற்றவை ஆகாவோ?" என்பது பொருள்.

கேழ்வரகுக் களியும் முருங்கைக் கீரையும்தான் அவர்கள் ஆக்கிப் படைத்தனர். அந்த எளிய உணவும் அவர்களுடைய அன்பின் சிறப்பால் அமுதாகத் தோன்றுகிறது ஒளவையாருக்கு அதனை வியந்ததுடன், அவர்களின் ஏழைமை தீராதோ எனவும் வாழ்த்துகின்றார். தம் வாழ்த்தை அவரே பின்னர் உண்மையாக்குவாராக நிறைவேற்றியும் மகிழ்கின்றார்.

இச்செய்யுளின் இறுதி அடி, கடகஞ் செறிந்த கையார்' எனவும், கடகஞ் செறிந்த கையால் ' எனவும் வழங்கும்.
---------------

21. வாராயேல் சபிப்பேன்!

அந்தப் பெண்களுடைய அன்பினை வியந்து பாடினார் ஒளவையார். அவர்களைப் பாரியின் மகளிர்' என்று அறிந்ததும் பெரிதும் கவலை கொண்டார். அவர்களின் எளிய நிலையைக் கண்டு கண் கலங்கினார். அவர்களை வாழ்விக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்.

அவர்களுடைய காதலர்கள் திருக்கோவலூர் மலையமானின் மக்கள் என்று தெரிந்து கொண்டார். அவர்களின் விருப்பப்படி அவர்களுக்கு மணமுடித்து வைக்கவும் திட்டமிட்டார்.

அவரை 'ஒளவையார் ' என்றறிந்த அந்தப் பெண்களும் பெரிதும் மகிழ்ந்தனர். அவருடன் திருக்கோவலூர் செல்லவும் இசைந்தனர்.

திருக்கோவலூர் வந்து மலையமானின் மக்களிடம் கலந்து பேசி, திருமண உறுதியும் செய்துகொண்டார் ஒளவையார். அதன்பின், திருமண ஓலையினை எழுதுவதற்கு விக்கினங்களைப் போக்கியருளும் விநாயகப் பெருமானையே அழைக்கின்றார்.

எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன்னால், அச்செயல் இடையூறின்றி முடிவதன் பொருட்டாக விக்கினங் களைப் போக்கிக் காக்கின்ற விநாயக் கடவுளைத் தவறாது வேண்டி வழிபட வேண்டும் என்பார்கள். அந்த விநாயகரோ ஒளவையாரின் வழிபடு தெய்வமாகவும் இருந்தார். தாம் அன்பு கொண்ட அங்கவை சங்கவை ஆகியோருக்கு மணமுடிக்க உறுதி செய்ததும், அவர்களின் திருமண ஓலையை எழுதுமாறு அவ் விநாயகரையே வேண்டுகிறார் அவர்.

விநாயகர், முன்னர் வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கப் பாரதத்தை எழுதினார். அப்போது, தம் எழுத்தாணியாகத் தம்முடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து வைத்துக்கொண்டு எழுதினார். அதனால், அவர் ஒற்றைக் கொம்பனாகவும் விளங்குபவராவர்.

"
அன்று பாரதம் எழுதினாய். இன்று இந்தப் பெண்களின் துயரைத் தீர்த்து நல்ல நிலையிலே மணமுடித்துக் காண்பதற்கு விரும்பும் எனக்கும் நின் உதவியைத் தருக பெருமானே! நீயே வந்து இவர்களின் திருமண ஓலையினை எழுதித் தருக" என்று துதித்து வேண்டுகின்றனர் ஒளவையார்.

ஒரு கொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்க்
கரியரிவைக் கங்காளன் காளாய் - பரிவுடனே
கண்ணால வோலை கடிதெழுத வாராயேல்
தன்னாண்மை தீர்ப்பான் சபித்து.

"ஒற்றைக் கொம்பனே! இரு செவிகளையும், மும்மதங் களையும், தொங்குகின்ற வாயினையும் உடையவனே! யானைத் தோலைப் போர்த்தும், எலும்பு மாலைகளை அணிந்தும் விளங்கும் சிவபிரானின் திருக்குமாரனே! இப் பெண்களிடத்து
இரக்கம் உடையவனாக இவர்களின் கல்யாண ஓலையினை எழுதுவதற்கு விரைந்து வருவாயாக! நீ வராதிருந்தால், நின் ஆற்றல்கள் அனைத்தும் நீங்கிப்போக நின்னைச் சபித்து விடுவேன் நான்" என்பது பொருள்.

விநாயகன் அடியவர்க்கு எளியவன். ஒளவையார் அழைத்தாலே போதுமானது. அவன் அவர்க்கு அருள்புரிந்து நிற்பான். எனினும், அவருடைய ஆசையின் தீவிரம் அவருடைய செய்யுளில் எதிரொலிக்கின்றது. நிலை தளர்ந்தாரிடையே உலகினர் காட்டும் அலட்சிய மனோபாவத்தைத் தெளிவாக உணர்ந்தவர் ஒளவையார். அதே மனோபாவம் விநாயகனுக்கும் இருந்துவிடக் கூடாதே என்றுதான், 'வாராயேல் சபிப்பேன்' என்கின்றனரோ!

ஒருகை யிருமருப்பு மும்மதத்து நால்வாய்க்
கரியுருவக் கங்காளன் செம்மல் - கரிமுகவன்
கண்ணால வோலை கடிதெழுத வாரானேல்
தன்னாண்மை தீர்ப்பன் சபித்து.

எனவும் இச்செய்யுள் வழங்கப்பெறும்.

"
ஒற்றைக்கையும், இரட்டைக் கொம்புகளும், மூன்று மதங்களும், தொங்குகின்ற வாயும், யானை உருவமும் கொண்டோன்! எலும்பணியும் சிவனின் சிறந்த மகன்! யானை முகவன்! அவன் கல்யாண நாளோலை எழுதுவதற்கு விரைந்து வாராதிருந்தான் என்றால், அவனைச் சபித்து, அவன் அற்றலையே போக்கிவிடுவேன்" என்பது பொருள்.

இது விநாயகரை வேண்டிய ஒளவையாரை நோக்கி, 'விநாயகர் வராதிருந்தால்?' என்று வினவின ஒருவரிடம் சொல்லியது என்பர்.

கடவுளரையும் சபிக்கும் ஆற்றல் உடையவர் உண்மைத் தொண்டர்கள். அந்த ஆற்றலைக் குறிப்பிட்டுக் காட்டுவதும் இச்செய்யுள் ஆகும்.
-----------------------

22. சேரலன் வருக!

விநாயகர் ஒளவையின் வேண்டுகோளை ஏற்று விரைந்து வந்தார். திருமண ஓலையினையும் எழுதித் தந்தார். திருமண நாளும் வகுத்தாயிற்று.

சேர சோழ பாண்டியராகிய மூவரும் பாரியை வஞ்சகமாகப் போரிட்டுக் கொன்ற பகையாளிகள். அதனால், பாரியின் மக்களை மணக்கும் திருக்கோவலூர் அரசர்கள் மீதும் அவர்கள் சினந்து பகை கொள்ளக்கூடும். அவ்வாறு ஒரு துயரம் அந்தப் பெண்களின் கணவர்கட்கு வரக்கூடாது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை முதலிலேயே செய்துவிட வேண்டும். இதனை நினைவிற் கொண்டார் ஒளவையார். அந்த மூவேந்தர்களையும் திருமணத் திற்கு வருமாறு அழைத்துத் தாமே அழைப்பு விடுக்கின்றார்.

'
சேரலர்களின் கோமானே! சேரல் என்னும் பெயரையும் உடையவனே! பேரழகினை உடைய திருக்கோவலூர் வரையும் வருவாயாக, உள்ளத்தில் அச்சம் எதுவும் வேண்டாம். பாரியின் மகளிர் அங்கவை, சங்கவை ஆகியோரை மணந்துகொள்ள, இந்தத் திருக்கோவலூர் அரசர்கள் இசைந்துள்ளார்கள்.' என்றபடி அந்த அழைப்-போலை அமைந்தது.

சேரலனை 'உட்காதே' என்று கூறி அழைக்கிறார் ஒளவையார். பாரியைக் கொன்றதற்குப் பழி வாங்கும் எண்ணமுடன் பிறர் செய்த சூதாகவும், அவன் அந்த அழைப்பைக் கருதலாம் அல்லவா? மேலும் மலையமான்கள் தமக்குப் பேரூதியம் தருபவர்க்குப் படைத்துணை செல்லும் இயல்பினராகவும் இருந்தனர். அதனால் அவன் தன் நாட்டைவிட்டு அவ்வளவு தூரம் வருவது என்பதும் சிந்திக்கக் கூடியதே. அதனால் ஒளவையும் அவனுக்கு எவ்வகை இடையூறும் நேராதென உறுதி கூறுகின்றார்.

சேரலர்கோன் சேரல் செழும்பூந் திருக்கோவல்
ஊரளவும் தான்வருக உட்காதே - பாரிமகள்
அங்கவையைக் கொள்ள அரசர் மனமிசைந்தார்
சங்கவையை யுங்கூடத் தான்.

"சேர நாட்டவர்களின் கோமானாகிய சேரவனே! செழுமையும் அழகும் உடைய திருக்கோவலூர் அளவிற்கும் நீ வருவாயாக. நடந்ததனை எண்ணி மனம் உளையாதே ! பாரி மகளான அங்கவையை மணந்து கொள்ள அரசர் மனம் இசைந்துவிட்டனர். சங்கவையையும் கூட மணந்து கொள்ள இசைவு தந்துவிட்டனர்" என்பது பொருள்.
--------------

23. புகார் மன்னன் வருக!

சேரலர் கோனை வருமாறு ஓலை அனுப்பியதுடன் பிற முடி வேந்தர்களுள் ஒருவனான புகார் மன்னனையும் திருமணத்துக்கு அழைத்து ஓலை விடுக்கின்றார், ஒளவையார்.

சோழன் வளமான நாட்டிற்கு உரியவன். தான் முடியுடை மூவேந்தரினும் சிறந்தோன் என்ற நினைவும் அவனிடத்தே இருந்தது. அதனால் அவன் பாரி மகளிர் திருமணத்திற்கு வருவது என்பது ஐயமானது என்றனர் சிலர்.

சோழன் வந்து பாரியின் மகளிருடைய திருமணத்தில் கலந்து கொள்வதாவது? குறுநில வேந்தனின் மகளிர் அவர்! தன்னால் கொன்றொழிக்கப்பெற்ற பகைவனின் மக்கள் அவர் ! மணந்து கொள்பவரோ மலையமானின் மக்கள் ; மலையனும் சோழ நாட்டிற்கு நட்பினன் அல்லன். எனவே, அந்தத் திருமணத்திற் கலந்து கொள்வது தகுதி உடையதன்று என்று சோழன் நினைப்பான். எனவே, 'அங்ஙனம் நினைத்து வராமல் இருந்துவிடாதே' எனவும் தம் ஓலையிற் குறிப்பிடுகின்றனர் ஒளவையார்.

'புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன்
தகாதென்று தானங் கிருந்து - நகாதே
கடிதின் வருக கடிக்கோவ லூர்க்கு
விடியல் பதினெட்டாம் நாள்'

"புகார் நகரத்தே இருந்து அரசியற்றும் மன்னவனே! பொன்னி நதிவளம் பெருக்கும் வளநாட்டிற்கு உரியவனே! சோழ மன்னனே! பாரி மகளிர்க்குத் திருமணம் உறுதியாயிற்று. அதற்கு வருவது தகுதியுடையதன்று என்று கருதி, அங்கிருந்து நகையாடி இருந்துவிடாதே ! விரைந்து இன்றைக்குப் பதினெட்டாம் நாள் பொழுது விடிவதற்குள்ளாக காவலை-யுடைய கோவலூர்க்கு வருவாயாக" என்பது பொருள்.

இந்தச் செய்யுள், திருமணம், நாளோலை எழுதியதன் பின்னர் பதினெட்டாவது நாளில் நிகழ்ந்ததென்பதைக் காட்டு கின்றது. சேரனை 'உட்காதே' என்றவர், சோழனை 'நகாதே' என்றனர். இதனால் அந்நாளில் சேரன் வலுக் குறைந்திருந்தான் என்பதும், சோழன் வலுவுடையவனாக இருந்தான் என்பதும் விளங்கும்.
--------------

24. பாண்டியன் வருக!

பாண்டியனும் சேர சோழரைப் போன்று பாரியைக் கொன்றதில் பங்கு கொண்டவன்தான். எனினும், பாரியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவன் உள்ளம் பெரிதும் வேதனைப்பட்டது. முறையற்ற ஒரு போரினை அறந்தவறாத பாண்டியர் குடிப்பிறந்த தான் நிகழ்த்தியதனை நினைந்து அவன் வருத்தம் கொண்டான். தன்னுடைய பிழையை உணர்ந்து வருந்தும் பெருந்தன்மை உடையவனாக விளங்கிய தென்னவனுக்கு, 'அதற்குப் பரிகாரமாக இப்பெண்களுக்குத் தருவதற்கான சீர்வரிசைகளுடன் வருவாயாக என்று ஓலை விடுக்கின்றனர் ஒளவையார்.

வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே - தையலர்க்கு
வேண்டுவன கொண்டு விடியவீ ரொன்பானாள்
ஈண்டு வருக வியைந்து.

"வையைத் துறைக்கு உரியவனே! மதுராபுரியில் இருந்து அரசியற்றும் தென்னவனே! பாரி மகளிருக்கு வேண்டிய சீர்வரிசைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு இன்றைக்குப் பதினெட்டாம் நாள் இங்கே அடையும்படியாக வந்து சேர்வாயாக. செய்யத்தகாத செயல் என்று கலங்கி, வராதிருந்து விடாதே!" என்பது பொருள்.

சேர, சோழரின்பால் எதுவும் கொணரப் பணிக்காதவர் பாண்டியனிடம் மட்டும் சீர்வரிசைகள் கொணருமாறு கேட்கின்றார். இதனைக் கவனிக்க வேண்டும். பாரியின் வீழ்ச்சிக்குப் பின்னர் பறம்பு நாடு பாண்டிய நாட்டுடன் இணைக்கப்பட்டு விட்டது. அதனால் முறையாகப் பாண்டிய நாட்டவரான அவர்கட்குச் சீர் வழங்கும் பொறுப்பும் பாண்டியனுக்கே உளதாகும். இதனை மனத்துட்கொண்டே அவனுக்கு ஒளவையார் 'வேண்டுவன கொண்டு வருக' எனவே எழுதினார் போலும்!

'
விடியல் பதினெட்டாம் நாள்' எனவும், 'வருக விசைந்து' எனவும் பாடபேதங்கள் காட்டுவர், இறுதி அடிகளில்.
----------

25. பொன்மாரி பெய்க!

திருமண ஏற்பாடுகளில் ஒளவையார் மிகவும் ஈடுபட்டனர். மூவேந்தர்களுக்கும் அழைப்பு விடுத்த பின்னர், தம்முடைய பிற வேலைகளையும் கவனிக்கலாயினர்.

'
பாரி மகளிர்' என்ற பெருமை அந்தப் பெண்களுக்கு இருந்தது. ஆனால், பாரி மடிந்துவிட்டான். பாரிக்குப் பின்னர் அவர்களைப் பேணும் கடமையினைக் கபிலர் ஏற்றனர். அவரும். அவர்களைப் பார்ப்பார்கள் பால் ஒப்பித்து, வடக்கிருந்து உயிர் நீத்தனர். அவர்கள் நலனைக் கவனிக்க ஒளவையாரையன்றி வேறு யாரும் அப்போதைக்கு இல்லை.

அவர்களைக் காப்பது மட்டுமன்றித் திருமணமும் செய்வித்துக் களிக்க எண்ணினார் ஒளவையார். அவருடைய நல்ல உள்ளம் அந்தப் பொறுப்பை மேற்கொண்டதும், தெய்வமும் துணைக்கு வந்தது. விநாயகப்பெருமான் திருமண நாளோலை எழுத, எல்லாம் சிறப்பாக நடந்து வந்தன.

சேர, சோழ, பாண்டியரை அழைத்த ஒளவையாருக்கு, அவர்களைத் தக்கபடி வரவேற்று உபசரிக்கும் பொறுப்பும் இருந்தது. அவர்களுடன் வரும் பெரும்படைகளையும் பிற அரசச் சுற்றங்களையும் உண்பித்து வழியனுப்புவது என்பது எளிதன்று. அதனால், அவர் அதற்கும் தெய்வத் துணையினையே நாடினார்.
ooo
மழைக்கு இறைவன் வருணன். அவனை அழைத்தார் ஒளவையார். 'வருணனே! இந்தப் பெண்கள் திருமணத்தை நடத்துவதற்கு ஏராளமான பொன் வேண்டும். நின் மழையைச் சற்று மாற்றிப் பொன் மழையாகப் பொழிந்து உதவுக' என்றனர்.

கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
வருணனே மாமலையன் கோவற் - பெருமணத்து
முன்மாரி பெய்யும் முதுவாரியை மாற்றிப்
பொன்மாரி யாகப் பொழி.

"உலகத்து உயிர்கள் உண்டு உயிர் வாழ வேண்டும் என்ற கருணையினால் நீர்வளம் பெருக்கிக் கடல் சூழ்ந்த உலகினைக் காத்தருளும் வருணனே! சிறந்த மலையமானின் திருக்கோவ லூரில் பாரி மகளிரின் பெருமணம் நிகழப் போகிறது. முன்பெல்லாம் மழை பொழிந்து இவ்வூரை வளப் படுத்துவாய். பழைய நின் பெயலைச் சற்றே மாற்றிக் கொண்டு, பொன்னையே மழையாகப் பொழிவாயாக" என்பது பொருள்.

வள்ளல் பாரியின் மக்கள் அவர். அவர்க்குத் துனணயோ தமிழ்ப் பெருமாட்டியான ஒளவையார். வருணனும் உதவுதற்கு உடனே மனமிசைந்தான். பொன்மாரியும் பொழிந்தது. திருமணத்துக்கு வேண்டிய பொன்னுக்கும் கவலையில்லை.

பொன்னைக் கொடுத்து வேண்டிய பற்பல பொருள்களை எல்லாம் வாங்கிக் குவித்தனர். எங்கும் பாரி மகளிரின் திருமணப் பேச்சே எழுந்து முழங்கிற்று.

இப்பாடலின் பிற்பகுதி, 'திருமணத்து, நன்மாரி தாழ்க் கொண்ட நன்னீர் அது தவிர்த்துப் பொன்மாரியாகப் பொழி' எனவும் வழங்கும்.
----------

26. பாலும்! நெய்யும்!

பொன்னைப் பற்றிய கவலை நீங்கியது. பொன்னாலும் பெறமுடியாத சில பொருள்களும் இருந்தன. அவை பால், மோர், தயிர், நெய் ஆகியன. அவற்றை எப்படிப் பெறுவது?

நாடெல்லாம் தேடினாலும் வேண்டும் அளவுக்குக் கொணர முடிவதில்லையே! அதனால், ஒளவையார் அதற்கும் தெய்வத் துணையினையே நாடினார்.

பெருகிவரும் பெண்ணையை அழைத்தார். அதனைப் பாலும் நெய்யும் ஆகியவற்றைத் தந்தருள வேண்டினார்.

பெண்ணை நதியும் அப்படியே பாலாகவும் நெய்யாகவும் பெருகி வந்தது. ஒளவையாருக்கு அந்தக் கவலையும் நீங்கிற்று.

முத்தெறியும் பெண்ணை முதுநீர் அதுதவிர்ந்து
தத்திய நெய்பால் தலைப்பெய்து - குத்திச்
செருமலைத் தெய்வீகன் திருக்கோவ லூர்க்கு
வருமளவும் கொண்டோடி வா.

"முத்துக்களைக் கொணர்ந்து கரையிடங்களிலே எறிகின்ற பெண்ணையாறே! பழைமையாக நீ கொண்டுவரும் நீரினை அல்லாமலும், நெய்யும் பாலும் குதித்தோடி வரப்பெருகி வருவாயாக.

பகைவரைக் குத்திக்கொன்று களத்தே போர் செய்யும் ஆற்றல் உடையவன் தெய்வீகன். அவனுடைய திருக்கோவலூருக்கு வருமளவும் அங்ஙனமே பெருகி வருவாயாக" என்பது பொருள்.
-------------

27. ஓங்கும் கோவலூர்!

வருணன் பொன்மாரி பெய்தான். பெண்ணை நெய்யும் பாலுமாகப் பெருகி வந்தது. மூவேந்தர்களும் தம் பரிவாரத்துடன் வந்து மணவிழாவிற் கலந்துகொண்டனர்.

பருத்திகள் ஆடைகளை வந்தவர்க்கெல்லாம் உவப்புடன் வழங்கின. வயல்கள் அரிசியை வழங்கின. திருமண விழாவும் நாடு வியக்க நன்முறையில் நடந்தேறியது.

பாரியின் காலத்தும் நடந்திருக்க முடியாத அளவு சிறப்புடன், அங்கவையும் சங்கவையும் தத்தம் நாயகன்மாரைக் கைப்பிடித்தனர்.

அந்த ஒப்பற்ற நிகழ்ச்சி நடந்த ஊரும் புதுப்பொலிவு பெற்று விளங்கிற்று. அதன் ஆரவாரப் பெருமிதம் ஒளவையாரையும் கவர்ந்தது. அவர் அதனைப் போற்றி வாழ்த்துகின்றனர்.

பொன்மாரி பெய்யும் ஊர் பூம்பருத்தி யாடையாய்
அந்நாள் வயலரிசி யாகுமூர் - எந்நாளும்
தேங்குபுக ழேபடைத்த சேதிமா நாடதனில்
ஓங்கும் திருக்கோவலூர்.

"எக்காலத்தும் நிறைந்த புகழ் படைத்தது இந்தச் சேதிமா நாடு. இதன்கண் விளங்குவது திருக்கோவலூர். இது பொன் மாரியாகப் பெய்கின்ற ஊர். அழகிய பருத்தி ஆடை வழங்கும் ஊர். இத் திருமண நாளில் வயல்கள் அரிசியை வழங்கிய ஊர். இது என்றும் புகழால் உயரும்என்பது பொருள்.

இந்தத் திருக்கோவலூர் இன்றும் தென்னார்க்காடு மாவட்டத்துள் ஓரூராக விளங்குகின்றது. அந்த ஊரும், அங்கு ஓடும் பெண்ணையாறும் இந்தப் பழம் புகழினைப் பெற்ற பெருமையினால், இன்றும் ஓரளவு புகழுடனேயே விளங்குகின்றன.
---------

28. பழம் தந்த பனந்துண்டம்!

திருமணத்திற்கு வந்திருந்த மூவேந்தர்களும், தம் பகைமையை மறந்து அங்கே கூடியிருந்தனர். தமிழ்க் காத்த பாரியின் மக்களுடைய திருமணம். தமிழகம் ஒருங்கே கொண்டாடிய ஒப்பற்ற பெருவிழாவாக அமைந்தது.

ஒளவையாரின் தெய்விக சக்தியினைக் கண்ட அவர்கள், தம்முடைய அகந்தையையும், தம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளையும் மறந்துவிட்டனர். பாரியின் மக்களைத் தங்கள் மக்களாகவே பாவித்து வாழ்த்தினர். பரிசுகள் பலவும் வழங்கிப் பாராட்டினர்.

தம் படை வலுவாலும், தம் பொருள் வளத்தாலும் சாதிக்க முடியாத செயலை, ஒளவையாரின் தெய்வத் தமிழ் சாதித்த செவ்வியை அவர்கள் கண்டனர். அவர்களுக்கு, ஒளவையாரின் மீதிருந்த பெருமதிப்பும் அந்த அளவிற்கு உயர்ந்தது.

மாலையில், அங்கு ஒரு புறமாக மூவேந்தரும் உலவியபடி இருந்தனர். அங்கு கிடந்த ஒரு பனந்துண்டத்தில் களைப்பாறு வதற்கு அவர்கள் அமர்ந்தனர். அப்போது, அம் மூவேந்தர்களுள் ஒருவன்,

"
பனந்துண்டம் உட்கார உதவியது. பனம்பழமும் கிடைத்தால் உண்ணலாம் அல்லவா?" என்றான்.

"
பனம்பழத்திற்கு உரிய காலம் அல்லதே இது" என்றான் மற்றொருவன்.

மூன்றாமவன், ஒளவையாரின் முகத்தை நோக்கினான். அவன் தமிழ் வீற்றிருக்கும் மதுரைக் கோமான் பாண்டியன்.

அவன் முகக் குறிப்பை ஒளவையார் அறிந்து கொண்டார். அவர் வாய் தமிழால் மணக்கத் தொடங்கியது.

திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக்கு அருகிட வந்துநின் றார்மணப் பந்தலிலே
சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்துக்
கொங்கிற் குறத்தி குவிமுலை போலக் குரும்பைவிட்டு
நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே!

"பனந்துண்டமே! சந்திர வட்டக் குடையினை உடைய சேரனும், சோழனும், பாண்டியனும் பாரி மகளிர்க்கு அறுகிட்டு வாழ்த்துதற் பொருட்டாக, அவர்தம் மணப் பந்தலிலேயும் வந்து நின்றார்கள். அவர்கள் தின்று உவக்குமாறு

வெண்சங்கினைப் போன்ற குருத்தினைத் தோற்றுவித்துப் பச்சோலைகள் சலசலக்க விளங்கி, மணம் நாறும் குறத்தியின் குவிந்த முலைகளைப் போலக் குரும்பைவிட்டு, நுங்குக் கண்களும் முற்றி, அடிக்கண் கருப்பாகி, நுனிப்பகுதி செந்நிறம் பெற்று, ஒவ்வொருவர் பங்குக்கு மும்மூன்று பழங்களாக நீ தந்திட வேண்டும்" என்பது பொருள்.

அவர் வேண்டியபடியே பனந்துண்டம் நிமிர்ந்து நின்று மரமாகிப் பழங்களைத் தந்தது. மூவேந்தரும் கண்டு மெய்மறந்து நின்றனர். அவர்கள் உள்ளம் ஒளவையாரின் தெய்வீக ஆற்றலை எண்ணி வியந்து கொண்டிருந்தது.
------------

29. பொன் ஆடு!

மணப்பெண்களுக்கு மூவேந்தரும் மற்றும் பலரும் வாழ்த்துரை கூறிக் கணக்கற்ற பரிசுகளை நல்கினர். ஒளவையார் தம்முடைய நினைவாக ஒரு பால் தரும் ஆட்டினைத் தருதற்கு விரும்பினார்.

பொன்னும் பொருளும் அளிப்பதினும், ஒரு பாலாடு அளிப்பதில் ஒரு தத்துவம் அமைந்திருந்தது. 'குட்டியுடன் விளங்கும் ஆட்டினைத் தருவது ' அவர்களும் பெற்றுப் பெருகி வாழ வேண்டும் என வாழ்த்துவதாக இருக்கும்.

அவரிடம் ஆடு ஏது! அவர், அருகே இருந்த சேரமானிடம் "சேரலனே! என் பரிசாக இந்தப் பெண்களுக்கு ஒரு கரப்பாடு தரலாமென்று கருதுகின்றேன். நின்னால் கொடுத்து உதவ முடியுமோ?" என்றார்.

சேரனும் இசைந்தான். தன் ஏவலர்களுக்குக் குறிப்பாக உணர்த்தினான். அவர்களும் விரைந்து சென்றனர்.

சென்றவர்கள் மீண்டு வருவதற்கு நெடுநேரம் பிடித்தது. ஒளவையார் சேரனை வினவினார். அவனோ, கொண்டு வருவார்கள்' என்று சொல்லிப் புன்னகை பூத்தான். ஏவலர்கள் கொண்டு வந்து வைத்ததும், ஒளவையார் வியப்பால் மெய் மறந்தார். பொன்னாற் செய்த ஆடும் குட்டியும் அங்கே இருந்தன. சேரனின் கொடைச்சிறப்பு அவரைப் பெரிதும் களிப்புக் கொள்ளச் செய்தது.

சிரப்பான் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்பாடு யான் கேட்கப் பொன்னாடொன் றீந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவார் தம்கொடையின் சீர்.

என்று அச் சிறந்த செயலைப் பிறரும் அறியுமாறு பாடினார் ஒளவையார்.

"
தலைமேலாக மணிகள் இழைத்த கிரீடத்தைச் சூட்டி யிருக்கும் சேரமானிடத்தே பால் தரும் ஆடு ஒன்றினை யான் கேட்டேன். அவனோ, பொன்னாற் செய்த ஆடொன்றைத் தந்தான். இரப்பவர்கள் என்ன கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தம் கொடையின் சிறப்பு எங்ஙனமாக இருக்க வேண்டும் என்பதனைக் கொடுப்பவர்கள் தாம் அறிந்து செய்வார்கள்" என்பது பொருள்.

கொடையாளர் தம் தகுதியைத்தான் கருதி வழங்குபவர்களாக இருப்பார்கள். வந்து இரப்பவர்களின் தகுதியை ஆராய்வதும், அதற்கேற்ப வழங்குவதும் அவர்களின் இயல்பாக இருப்பதில்லை. இந்த அரிய உண்மைக்கு இலக்கணமாக விளங்கினான் சேரமான்.

இந் நாளினும் மணவீடுகளிற் சிலர் தம் பெண்ணுக்குப் பாற்பசு ஒன்று வழங்குகின்றனர். இது இவ்வாறு தொன்று தொட்டே வழங்கிவரும் பழக்கத்தால் வந்தது போலும்!
--------------

30. இன்றுபோல் என்றும் இரும்!

திருமண வீடுகளிலே மணமக்களை வாழ்த்துபவர்கள், 'இன்று போல் என்றும் இருப்பீர்களாக' என்று கூறுவார்கள். புதிய மணமக்களிடையே அளவற்ற ஆர்வமும், ஈடுபாடும் நிலவும். அவை காலம் கழிய, உருவத்திலே முதுமை படியப்படியக் குறைந்து போவதும் ஏற்படலாம். அங்ஙனம் குறைதல் ஆகாது. உருவ எழிலால் மாறுபட்டாலும் உள்ளத்தால் என்றும் ஒருவரேயாக அவர்கள் வாழ்தல் வேண்டும். அதுதான் தலைசிறந்த இல்லற வாழ்வாகும்.

அங்ஙனம் வாழுமாறு, பாரியின் பெண்களை மணந்து கொண்ட இளைஞர்களை ஒளவையார் வாழ்த்துகின்றார். மணப்பெண்களை வாழ்த்தாமல், மணப் பிள்ளைகளைத்தான் வாழ்த்துகின்றார். இதிலும் நியாயம் இருக்கிறது.

தன்னை நேசித்து மணந்துகொண்ட மணாளனிடம் பெண் கொள்ளுகின்ற காதல் என்றும் நிலையானது. அதன் உறுதியை முதுமையும் பிற ஏதும் தளரச் செய்துவிட இயலாது. ஆனால் ஆணின் நிலைமை வேறு. அவன் அழகுக் கவர்ச்சியை நாடிப் பிற மாதரையோ அல்லது பரத்தையரையோ தேடுதல் - கூடும். இதுபற்றியேஒளவையார் உலகியலை நன்றாக அறிந்தவராதலினால், அந்த மணப் பிள்ளைகளை வாழ்த்தி, அறிவுரையும் கூறுகின்றார்.

ஆயன் பதியில் அரன்பதிவந் துற்றளகம்
மாயனூ துங்கருவி யானாலும் - தூயமணிக்
குன்றுபோல் வீறு குவிமுலையார் தம்முடனீர்
இன்றுபோல் என்றும் இரும்.

"அரச குமாரர்களே! உங்கள் மனைவியாரின், திருமால் தங்குமிடமான ஆலிலை போன்ற வயிற்றில், அரன் வாழிடமான குன்றினைப் போன்ற சூலானது வந்து அடைந்தாலும், அவர்களின் கூந்தலானது மாயவனூதும் பாஞ்சசன்னியம் என்னும் சங்கினைப் போன்று வெண்மை அடைந்தாலும் அவர்களைக் கைவிட்டுப் பிரியாதீர். குற்றமற்ற மணிக்குன்று போல வீறுபெற்றுக் குவிந்துள்ள கொங்கைகளை உடைய இவர்களுடன் நீர் இன்று இன்புற்று இருப்பது போலவே என்றும் இருப்பீராக" என்பது பொருள்.

இவ்வாறு அறிவுரை சில கூறிய பின்னர், தம் கடமையை நிறைவேற்றிய மனநிறைவுடன், ஒளவையார் பிரியாவிடை பெற்றுச் சென்றார். திருமணத்திற்கு வந்திருந்த மூவேந்தரும் பிறரும் தத்தம் நாடுகட்குத் திரும்புகின்றனர்.

இந்தப் பாக்கள் அனைத்தும் சங்ககாலச் செறிவுடன் தோன்றவில்லை. எனவே, இவற்றைப் பிற்பட்ட ஒளவையார் பாடியதாகவும் கொள்வார்கள். அந்தக் கொள்கைக்குத் தக்கபடி அவர்கள் 'பாரிமகளிர்' என்பதற்கு வேறு ஒரு விளக்கமும் தருவார்கள்.

'
மலையமானின் திருக்கோவலூர்க்கு அருகாமையில் 'பாரி' என்னும் ஓர் ஆட்டு இடையன் இருந்தான். அவனுக்கு அங்கவை சங்கவை என்னும் இரு பெண் மக்கள் இருந்தனர். அவர்களைக் குறித்து எழுத்தவையே இந்தப் பாடலின் நிகழ்ச்சிகள்'. என்பார்கள் அவர்கள்.

இந்தப் புதிய கதையிலும் ஐயப்பாடுகள் இல்லாமல் இல்லை. இடையனின் மக்களைத் தெய்வீகன் ஆகியவர் மணந்து கொள்வதும், மூவேந்தர் வந்து கலந்து கொள்வதும் பொருத்தமாக இல்லை.

இதனால், நாம் பாட்டிற்கு ஏற்பவே நிகழ்ச்சிகளை உருவாக்கிக் கொள்வதுடன் அமைதியடைய வேண்டியவர்கள் ஆகின்றோம். காலக்கணக்கை ஆராய்ச்சிப் பற்றாளர்கள் கவனிக்கட்டும்.
------------

31. மூவகை மனிதர்!

ஒருவருக்கு ஒருவர் நன்மை செய்ய வேண்டும். இதுவே மனிதப் பண்பு. பலர்பால் இது அமைவதில்லை. இப்படிப்பட்ட மனிதர்களையும் மூவகையினராகப் பிரித்து காட்டுகின்றார் ஒளவையார்.

ஒரு சாரார் உயர்ந்தவர்கள். அவர்களிடம் வறுமையுற்றோர், 'எங்கட்கு இப்படி உதவுங்கள்' என்று வாயைத் திறந்து சொல்லக்கூட வேண்டியதில்லை. அவர்களாகவே, வந்தவர்களின் முகத்தைப் பார்த்ததும், அவர்களின் துயரத்தைப் போக்கி, நல்வாழ்வு அளிப்பார்கள். இவர்கள் பூவாது காய்க்கும் பலாவைப் போன்றவர்கள். காய்க்கப் போவதான முன்னறிவிப்பாகிய பூவினைப் பொறாததால், பலா பயனை மட்டும் முனைப்பின்றி நல்குகிறது; அதனைப்போல் என்று சொல்லலாம்.

இன்னொரு சாரார், ஒருவர் சென்று தங்களுடைய துயரங்களை எடுத்துச் சொல்லி வேண்டினால், அவர்களுக்கு உதவுகிற இயல்பு உடையவர்கள். இவர்கள் மாமரம் போன்றவர்கள். மா, பூத்துக் காய்த்து மாம்பழம் நல்குவதுபோல, இவர்களும் எதனையும் ஆர அமர யோசித்துத் தம்மை அடைந்தவர்கட்கு உதவி செய்து வருவார்கள்.

சிலரிடம் எவ்வளவு கெஞ்சினாலும் கூத்தாடினாலும் அழுதாலும் அரற்றினாலும் எதுவுமே செய்யமாட்டார்கள். அவர்களுடைய பணத்தையே பெரிதாக நினைத்துப் பூட்டிப் பூதத்தைப் போலக் காத்து வருவார்கள். இவர்கள் கீழ்மக்கள் பாதிரி மரத்தைப் போன்றவர்கள். பாதிரி பூக்கும்; காய்த்துப் பயன் தருவதில்லை.

இந்த மூவகையினரும் மீண்டும் தம்முள் வேறுபடுகிறவர் களாக இருப்பார்கள். உயர்ந்தவர்கள் தாம் செய்தோம் என்று சொல்லிக்கொள்ளவே மாட்டார்கள். ஈகைச் செயலிலே உவக்கும் அவர்கள் அதனைச் சொல்லிப் பெருமை கொள்ள விரும்பாதவர்க ளாகவும் இருப்பார்கள்.

சிறியோர்கள் சொல்லி, அதனால் வரும் புகழுக்கு ஆசைப்பட்டு, அதன் பின்னரே ஒரு நன்மையைச் செய்பவர்கள். ஒன்றைச் செய்யும் போதே அதற்கான தடபுடலான விளம்பரங் களைச் செய்வித்துத் தங்களைப் பறைசாற்றிக் கொள்பவர்கள் இவர்கள்.

கயவர்கள், 'செய்வோம் செய்வோம்' என்று சொல்லுவார்கள். 'செய்தோம் செய்தோம்' என்று கூறுவார்கள். செய்திருக்க மாட்டார்கள்; செய்யவும் மாட்டார்கள்.

இந்த உண்மைகளை அமைத்துப் பாடிய பாடல் இது.

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வர்சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்.

"அசைகின்ற அழகியதான மாலையினைச் சூடிய வேற் படை போன்ற கண்களையுடைய பெண்ணே! சொல்லாமலே செய் பவர்கள் பெரியவர்கள். சொல்லிச் செய்பவர்கள் சிறியவர்கள். சொல்லியுஞ் செய்யாதவர்கள் கயவர்கள். இவர்களுக்குச் சொல்லக் கூடிய உவமையினை ஆராய்ந்தால், பலாவையும் மாவையும் பாதிரியையும் பார்த்து அறிவாயாக என்பது பொருள். குலாம் - குலவும்; அசையும்.

இதனால், உள்ளன்புடன் உதவி செய்கிறவர்கள் பிறரின் துயரங் கண்டவிடத்து, தாமே வலியச் சென்று உதவுகிறவர்களாக விளங்குவார்கள் என்று அறிதல் வேண்டும். தலைவர்கள் தலைமை வகிக்கப் பரிசுதரும் விழாக்களும் நன்கொடை நிகழ்ச்சிகளும் நாடெல்லாம் இந் நாளில் நிகழ்கின்றன. இந்தச் செய்யுளின் பொருளோடு அவற்றையும் சேரக் கருதிப் பார்க்க வேண்டும். அந்த ஆரவாரத்தையும் நினக்க வேண்டும்.
-----------

32. என்றும் கிழியாது!

ஒரு சமயம், ஒளவையார் பல நல்ல செய்திகளைப் பற்றி விளங்க உரைத்துக் கொண்டிருந்தார். அவையினர் அனைவரும் கேட்டு இன்புற்றுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஒரு துணிவணிகன் அந்த அவைக்கு வந்தான். மிக அழகிய நூற்சேலைகளை அவன் கொண்டு வந்திருந்தான். எல்லாம் உயர்ந்த வேலைப்பாடு உடையவை. அவற்றின் கவர்ச்சியில் மன்னனும் மயங்கினான்.

சோழனுக்குத் தன் மனைவியான பாண்டியகுமாரிமீது அளவற்ற பேரன்பு உண்டு. அவளுக்கு எது பொருந்தும் என்ற நினைவிலே ஈடுபட்டு, அவன் ஒளவையாரின் சொற்களைக் கவனியாமலும் இருந்தான்.

ஒளவையார் அவன் நிலையைக் கண்டார். ஒரு பக்கம் தன் பாடலையும் மறந்துவிடும் அளவிற்கு அவன்பால் அமைந்திருந்த மனைவியின் மீதுள்ள அன்பிற்கு உவந்தார். எனினும், அவனுடைய அந்தச் செயலை ஒட்டியதாக ஓர் உண்மையினை உரைக்கவும் விரும்பினார்.

"
சோழனே! நூற்றுப் பத்தாயிரம் பொன் பெறுகின்ற நூற் சேலையே ஆனாலும், அது நான்கு மாத காலத்திற்குள் நைந்து கிழிந்து போய்விடவே செய்யும். என் பாட்டு அங்ஙனம் நைந்து கிழிந்து போகின்ற தன்மை உடையதன்று என்றும் கிழியாத ஏற்றம் உடையது" என்றார்.

சோழன் தன்னுடைய செயலை உணர்ந்து நாணி நின்றான். அவன் நாணத்திலே அவனுடைய அழியாத தமிழார்வம் ஒளி செய்தது.

நூற்றுப்பத் தாயிரம் பொன்பெரினும் நூற்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும் - மாற்றலரைப்
பொன்றப் பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா
என்றும் கிழியாதென் பாட்டு!

"பகைவர்களை அவர் இறந்து போகும்படியாகப் போர் செய்வதிலே வல்லமை உடைய பரந்த கைகளைக் கொண்ட களங்கமில்லாத மன்னவனே!

நூற்சீலையானது நூற்றுப் பத்தாயிரம் பொன் பெறுமானம் உடையதேயானாலும், நான்கு மாத காலத்தில் அதன் அழகுக்கோப்பு நைந்து போய்விடும். ஆனால், என் பாட்டு என்றும் அழியாதது. இதனை அறிவாயாக" என்பது பொருள்.

தமிழ் மணக்கும் அந்தத் திருவாயினின்றும் எழுந்த உறுதி வீண் போகவில்லை. ஒளவையார் பாடல் இன்றும் தன் அழகிற் குறையவில்லை. காலம் அதனைக் கட்டழிக்கவில்லை. ஏற்றமுடன் அது இன்றும் நிலவுகிறது; என்றும் நிலவும்.
--------------

33. பூதனின் விருந்து!

'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்.' இது பழமொழி. இந்தப் பழமொழியின் அருமையினைப் பசியினால் துயரப்படுகிறவர்கள் தாம் நன்றாக அறிவார்கள். வயிற்றிலே பற்றி எரிகின்ற நெருப்பு உடலையும் உள்ளத்தையும் வாட்டுகின்ற வெம்மையினை அவர்களால் தான் உணர முடியும்.

ஒரு சமயம் ஒளவையார் கால்நடையாகச் சென்று கொண்டிருந்தார். புல் வேளூர் என்னும் ஊரிடத்தே சென்றபோது, அவருடைய கால்நடை தளர்ந்துவிட்டது. பசியும் பற்றிக் கொண்டு வருத்தியது. சோர்ந்து போய் ஒரு பக்கமாக அயர்ந்து இருந்துவிட்டார்.

அவ்வூரிலே பூதன்' என்ற ஒருவன் இருந்தான். அவன் பெரிய செல்வன் அல்லன். தனக்குரிய சிறுநிலத்திலே கிடைப்பதைக் கொண்டு வாழ்ந்து வந்தவன். உழைப்பிலே அவன் தளர்ச்சி கொள்வதில்லை. அதனால், அவனுக்கு உணவுப் பஞ்சமும் ஒருபோதும் வந்ததில்லை.

'
பூதன் ' நல்ல உள்ளம் உடையவன். பசி ' என்று தன்னை நாடி வந்தவர்களுக்கு உணவு அளித்து வருவதில் தவறவே மாட்டான். அவன் மனைவியும் தன் நாயகனுக்கு எது விருப்பமோ அதனைத் தானும் உள்ளன்போடு விரும்புகின்ற இயல்பினள். அதனால், அவர்கள் வீட்டில் எப்போதும் உணவு உண்பவரின் ஆரவாரம் கேட்டவாறே இருக்கும்.

பூதன் வீட்டிற்கு ஒளவையார் சென்றார். அவன் அவரை அன்புடன் உபசரித்தான். அவன் மனைவி ஆர்வமுடன் உணவு படைத்தாள். அருகே அமர்ந்து பூதன் விசிறிக் கொண்டிருந்தான்.

ஒளவையாரின் உள்ளம் பெரிதும் உவப்படைந்தது. தம்மை யாவரென்று வினவுதலையுங்கூடக் கருதாமல், தம்மிடம் அன்பு காட்டும் அந்தத் தம்பதிகளை வியந்தார். உணவுண்டு கைகால் கழுவியபின், உண்ட களைப்புத் தீர்வதற்குச் சற்று உறங்குமாறு பூதன் சொன்னபோது, ஒளவையார் அவனைக் குறித்து அருமையான வெண்பா ஒன்றைச் சொன்னார்.

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேபுளித்த மோரும் - திறமுடனே
புல்வேளூர்ப் பூதன் புரிந்து விருந் திட்டான் ஈ (து)
எல்லா வுலகும் பெறும்.

என்பது அந்தச் செய்யுள்.

"
வரகரிசிச் சோற்றையும், வழுதுணங்காய் வதக்கலையும், முரமுரென்று புளித்திருந்த மோரையும், புல்வேளூர்ப் பூதன், உறுதியுடனே விரும்பியவனாக எனக்கு விருந்தாகப் படைத்தான். இந்த விருந்து எல்லா உலகங்களையும் தரக்கூடிய அளவிற்குச் சிறப்பு உடையதாகும்" என்பது பொருள்.

உணவு மிகவும் சாதாரணமானதுதான். அதை ஒரு விருந்து என்று சொல்வதற்குக்கூடச் சிலர் கூசுவார்கள். வரகு அரிசிச்சோறு, வழுதுணங்காய் வதக்கல் ; மோர்; இவற்றை மிகவும் வியந்து பாடுகிறார் ஒளவையார்; அவருடைய உவப்பு, அதனை 'எல்லா உலகும் பெறும்' என்று கூடச் சொல்லுமாறு செய்கின்றது. அந்த அளவுக்குப் பூதனின் அன்பான உபசாரம் இருந்ததென்பது இதன் விளக்கமாகும்.
---------

34. நன்று எது?

இருவர் கொடையிலே புகழ்பெற்று விளங்கினர். ஒருவன் குறைவாகக் கொடுப்பவன்; மற்றையவன் வாரி வழங்கி வருபவன். வாரி வழங்கும் நல்ல பண்புடன் அவனுக்கு ஒரு கெட்ட பழக்கமும் உண்டு. தன்னிடம் வந்து இரந்து நிற்பாரைப் பிழைக்க ஏலாதவர்கள், உழைக்க விரும்பாதவர்கள் என்று பலபடியாக வைத பின்னேயே கொடுப்பவன். இந்த இருவர் கொடையினும் சிறந்தது எது? நன்மை உடையது எது? ஏசிக்கொண்டு தருபவன்தான் சிறந்தவன்; ஏசினாலும் பேசினாலும் தாராளமாகத் தருகிறான் அல்லவா? என்றனர் சிலர்.

அங்கிருந்த ஒளவையார், "ஏசிக்கொண்டே கொடுப்பதை காட்டினும் அவன் ஏதும் கொடுக்காமல் இருந்து விடுவதே உத்தமம்" என்றனர்.

அடுத்தபடியாக, மனைவியரைப் பற்றிய ஒரு கேள்வி எழுந்தது. "என் மனைவி மிகவும் நல்லவள். ஆனால் எதிர்த்து நின்று பேசுகிற பழக்கம் உடையவளாக இருக்கிறாள். அவளைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று ஒருவர் கேட்டார்.

"
எதிரில் நின்று கணவனின் பேச்சுக்குப் பேச்சு எதிர்ப்பேச்சு பேசுகின்ற மனையாளைக் காட்டினும், பேய் மிகவும் நன்மை தருவது?" என்றார் ஒளவையார்.

"
ஒருவன் என் நண்பனாக இருக்கின்றான். என்னுடன் அடிக்கடி அன்புடன் பேசுகின்றான். அவனை நண்பனாக என்னால் ஏனோ கருத முடியவில்லை. அவனுக்கு என்பால் உள்ளன்பு கிடையாது என்பது மட்டும் புலனாகின்றது. இதனைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்றான் ஒருவன்.

"
சொல்வதற்கு என்ன இருக்கிறது? உண்மையான அன்பு தானே நட்பின் அஸ்திவாரம். அஃது இல்லாத நண்பன் நண்பனே அல்லன். அவனுடைய நட்பினைக் காட்டிலும் பகைமையே மிகவும் மேலானது" என்றார் ஒளவையார்.

வாழ்வு என்பது, இன்பமாக மகிழ்வுடன் வாழுகின்ற வாழ்வு தான். அஃதின்றி, வாழ்வு துன்பமுடையதாகவும் இன்பமற்றும் இருக்குமாயின், அந்த வாழ்வினால் பயன் யாதும் இல்லை.

வாழ்வு இன்பமாக நிகழ்தற்குப் பொருள் வேண்டும். பொருள் குறைந்தால் வாழ்வில் இனிமையும் குன்றும். வாழ்வின் இனிமை குறையும்போது துயரங்கள் அங்கே குவிந்துவிடும். இதுபற்றியே, 'பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகில் நல்வாழ்வு கிடையாது' என்று திருக்குறள் கூறுகின்றது.

இவ்வாறு, வாழ்வற்றுப்போய் அடுத்தடுத்து வரும் சங்கடங்கள் ஒருவனுடைய வாழ்விலே மிகுமானால், அவன் அவற்றை ஏற்று நொந்து கழிவதைவிடச் சாதலே நன்மையாக இருக்கும்.

இந்தச் செய்யுளில், ஒளவையார் சில அரிய செய்திகளை உலகுக்கு உரைக்கின்றார்.

ஏசியவாறு கொடுப்பது ஒன்று. கொடையின் பயன் இரந்தவனுக்குக் கிடைப்பதாயினும், அது கொடுப்பவன் மனம் விரும்பிக் கொடுக்காத தன்மையைக் கொண்டிருக்கிறது. ஆகவே, அப்படிக் கொடுத்துக் கொடையின் பயனான புகழினை இழந்து பழியை மிகுப்பதைவிட, அவன் கொடாத கருமியாகப் போவதே நல்லது என்கின்றனர்.

அடுத்து, கணவன் மனைவியரின் கலந்த ஒருமை வாழ்வினை எடுத்துக் கொள்கின்றார். மனைவி கணவனை எதிர்த்து நின்று பேசும்போது, அந்த ஒருமை வாழ்வு சீர்குலைந்து சிதறியதைத்தான் அது காட்டும். அப்படிச் சிதறிய பின்னர் அவளுடன் கூடி வாழ்வது தீராத வேதனையைத்தான் தரும். அந்த வேதனையைவிடப் பேயுடன் கூடி வாழ்வதே நன்றாயிருக்கும் என்கிறார். கொடிய குணமுடைய பேயினை எதிர்நின்று பேசும் மனைவியினும் நல்லது என்பதன் மூலம், மனைவியரின் வாயடக்கத்தினை வற்புறுத்தி உரைக்கின்றார் ஒளவையார்.

'
நட்பு' உள்ளக் கலப்பிலேதான் உருவாவது. உள்ளக் கலப்பில்லாமல், சூழ்நிலைகளின் காரணத்தால் வருகிற சில பல ஊதியங்களை மனத்துட்கொண்டு நட்பினர் போலப் பழகுவர் பலர். அத்தகையவரின் நட்பு நட்பு அல்ல; தீமை தருவதும் அதுவாகும். அதனைவிடக் கொடிய பகையே நன்றானது என்றனர். உள்ளங்கலவாத நட்பினால் வருகின்ற துயரம் மிகுதியாகும் என்பதையும் உணர்த்தினார்.

'
சாதல் ' வாழ்வின் முடிவு. வாழ்வு கைகூடாத போதும், அதிற் சங்கடங்கள் சூழும் போதும், அந்த வாழ்விலே கிடந்து கழிவதினும் சாவே மேலானது என்கின்றனர். இதனால் வாழ வசதி இழந்துவிட்டவர் செத்துவிடல் வேண்டும் என்பது பொருளன்று. அவர்கள் முயன்று அதனைச் சீராக்கிக் கொள்ளல் வேண்டும் என்பதே பொருளாகும்.

ஏசி யிடலின் இடாமையே நன்றெதிரில்
பேசும் மனையாளில் பேய்நன்று - நேசமிலா
வங்கணத்தின் நன்று வலிய பகை வாழ்விலாச்
சங்கடத்தில் சாதலே நன்று.

"ஒருவர் வந்து இரந்து நிற்கின்றார். அவரை ஏசிக் கொண்டே ஒருவன் கொடுக்கின்றான். அப்படி அவன் கொடுப்ப தினும் கொடாமல் இருப்பதே வந்தவனுக்கு நன்மையாக இருக்கும். கணவனுக்கு எதிரிட்டு நின்று பேசுகிற மனையாளை விடப் பேயே ஒரு கணவனுக்கு நல்லதாக இருக்கும். அன்பற்ற நட்பினைக் காட்டிலும் கொடிய பகையே மேலானது. வாழ்விற்கு வேண்டிய பொருளற்ற வறுமை நிலையினும், சாவதே நன்மை தருவதாக இருக்கும்" என்பது பொருள்.

'
எதிரில்' என்பதை 'எதிர் இல்' எனப் பிரிக்கலாம். அப்போது எதிர்வீட்டிலே போய்க் கதையளக்கும் அடக்கமற்ற மனைவியர் என்று பொருள் தரும்.
--------------

35. தேய்ந்த கொடை!

கோரைக்கால்' என்னும் ஊரில், ஆழ்வான்' என்னும் பெயரினையுடைய ஒரு செல்வன் இருந்தான். அவன் மிகவும் கருமி. ஒரு செப்புக்காசினையும் வறியவர்க்கு வழங்கி அறிய மாட்டான்.

ஆனால், அவனுடைய செல்வமிகுதியினைக் கண்டு பலரும் மயங்கினார்கள். அவனை நாடிச் செல்வதும், அவனைப் போற்றிப் புகழ்வதும், அவன் மனம் உவக்கப் பழகுவதுமாகப் பலர் இருந்தனர்.

அவனுக்கு, இப்படி வலிய வரும் புகழை விட்டுவிடவும் விருப்பமில்லை. அதனால் வருகிறவர்களுக்கு பெரும் பரிசு தருவதாக வாக்களித்துத் தன்னைப் புகழுமாறு செய்து கேட்டு இன்புறுவான். முடிவில் ஏதாவது காரணங்களைப் புனைந்து, அவர்களைப் பல நாள் இழுத்தடித்து, அவர்களாகவே அவனிடம் ஏதும் எதிர்ப்பார்ப்பதைக் கைவிட்டு விடுமாறும் செய்து விடுவான்.

இந்த ஏமாற்றுக்காரனிடம் பல புலவர்கள் சென்று, இவனைப் புகழ்ந்து பாடி, ஏதும் பரிசில் பெறாது மனம் நொந்து சென்றனர். அவனை எதிர்த்து உரையாடுதற்கோ, குறைத்துப் பேசுதற்கோ வேண்டிய துணிவை எவரும் பெறவில்லை.

ஒரு சமயம், ஒளவையார் அவ்வூருக்குச் சென்றார். அவனைச் சென்று கண்டார். ஒளவையாரைப் பற்றி அவன் கேள்வியுற்று இருந்தான். அரசர்க்கு வேண்டியவர் அவரைப் பகைத்துக் கொள்வது கூடாது. அவரை நயமாகப் பேசியே அனுப்பிவிட வேண்டும்' இப்படி அவன் நினைத்தான்.

"
உங்களுக்கு ஒரு யானையைப் பரிசுதரப் போகிறேன். நாளைக்கு வந்து பெற்றுக் கொள்ளுங்கள்என்று சொல்லி முதல் நாள் அவரை வழியனுப்பினான்.

மறுநாள், "யானைக்குத் தீனி போடுவது மிகச் சிரமம். ஒரு குதிரை தருகிறேன். ஏறிச் செல்வதற்கு உதவும். நாளைக்கு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினான்.

அடுத்த நாள், "குதிரையைவிட எருமை மாடு மிகவும் உபயோகமாக இருப்பது. அதனையே தரலாம் என்று நினைக்கிறேன்" என்று சொல்லி அனுப்பினான்.

அதற்கும் அடுத்த நாள், எருமை எருதாயிற்று.

ஒளவையாரும் சளைக்காமல் சென்றார். எருதும் போய், புடவையாக ஆயிற்று. அதனைக் கேட்டதும் ஒளவையார் சொன்னார். "நாளைக்குச் சேலை திரிதிரியாகப் போகுமோ?" என்று. அத்துடன், அவன் வீட்டில் தாம் பெற்ற அனுபவத்தைச் செய்யுளாகப் பாடி, அதனை அவன் வீட்டுச் சுவரிலேயே எழுதிவைத்தும் சென்றார்.

அந்தச் செய்யுள் ஊர் முழுதும் பரவலாயிற்று. அவனுடைய உண்மையான தன்மையினை அனைவரும் உணர்ந்து பழித்தனர். அவன் புலவர்க்குச் செய்த கேடும் அன்றுடன் நின்றது. அந்தச் செய்யுள் இது :

கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய்
எருதாய் முழப்புடவை யாகித் திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்து கால் ஓய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை.

"கோரைக்காலிலே இருக்கும் ஆழ்வான் என்பவனின் ஈகை யானையாகி, குதிரையாகி, கருநிற எருமையாகி, எருதாகி, ஒரு முழப் புடவையாகி, முடிவில் அந்தப் புடவை திரிதிரியாய்க் கிழிந்து கந்தலாவது போல, எதுவும் இல்லாததாயிற்று. என் கால்கள் தேரைக்காலின் தன்மையடைந்தன. மிகவும் தேய்ந்து நடந்து நடந்து ஓய்ந்தும் போயின. (அதுதான் நான் பெற்றது)" என்பது பொருள்.

இந்நாளிலும் இப்படித் தாராளமாக வாக்களித்துக் கொண்டே, ஏதும் செய்யாமல் இருப்பவர் பலர். ஆனால் அவர்களைப் பாடிப் பழிப்பதற்கு ஒளவையார்தான் இல்லை.
-------

36. சேடன் வாழ்வு!

கோரைக்கால் ஆழ்வானைப் போலவே, 'சேடன்' என்னும் பெயரோடு ஒருவன் இருந்தான். இவனும் ஏராளமாகச் செல்வத்தைச் சேமித்து வைத்திருந்தான். இவனும் எவருக்கும் எதுவும் வழங்கி அறியாதவன்.

ஒளவையார் அவனை ஒரு சமயம் சென்று கண்டார். அவனுடைய கருமித்தனம் அவரை மிகவும் வாட்டியது. ஆனால், ஒரு வகையில் இவன் நல்லவன். ஆழ்வானைப் போல இவன் எவரையும் தருவதாகச் சொல்லி வரவழைத்து ஏய்த்ததில்லை. 'இல்லை' என்ற சொல்லை மிகவும் அழுத்தமாகவே சொல்லி விடுவான்.

பாவாணராக வருவார்க்கு அவன் யாதும் வழங்கியதில்லை. அவராற் பாடப்பெற்ற பெருமையும் அவனுக்குக் கிடையாது. அதற்காக அவன் கவலைப்படவும் இல்லை.

பலரும் மெச்சும்படி ஆர்ப்பாட்டமாக வாழ்வதும் அவனுக்குப் பிடிக்காது. அதனால் அவன் மிகவும் சாதாரண மாகவே ஓர் ஏழைபோலவே வாழ்ந்து வந்தான்.

'
நாடெங்கும் நற்செயல்கள் செய்தவன் அவன்' என்ற பேச்சினை எழுப்புதற்கும் அவன் முயலவில்லை. ஆனால், அவன் வாழ்க்கையில் எவ்வகைப் பொருளுக்கும் குறைவு இல்லாமல் நிறைந்திருந்தது.

அவனைப் பற்றிப் பழி தூற்றினர் பலர். அவன் வாழ்வு கவிழ்ந்துவிடும் என்றனர் சிலர். "அது எங்கே கவிழப் போகிறது? நாளுக்கு நாள் செழிக்கிறதே" என்றனர் மற்றுஞ் சிலர்.

ஒளவையார், அவனைப் பற்றிப் பாடினார் ஒரு செய்யுள். அதுவே இதுவாகும்.

'
பெருங் கடலாற் சூழப்பெற்றது இந்த உலகம். இதன்கண் இவன் வாழும் வாழ்க்கை எப்படிப் போனால் தான் என்ன? கவிழ்ந்தால் தான் என்ன? மலர்ந்தால் தான் என்ன? எல்லாமே ஒன்றுதான்' என்றனர்.

செல்வம் சேர்வது பூர்வத்துப் புண்ணியப் பயனால் ஆகும். அப்படிச் சேரும்பொழுது, அதனைக் கொண்டு முறையாகப் பெறக்கூடிய நல்ல பயன்களையெல்லாம் பெறுதல் வேண்டும். அதுவே, அதனைப் பெற்றதனால் ஒருவன் அடைகின்ற பயன்.

பாடல் பெறுதல், பலர் மெச்ச வாழுதல், நாடறிய நல்ல செயல்களைச் செய்வதில் ஈடுபடுதல் என்பவை செல்வத்தால் பெறக்கூடியவை. இவற்றின்பாற் செல்வரின் கருத்துச் செல்லுதல் வேண்டும். அப்படிச் செல்லாதவர் உலகிற் பிறந்ததன் பயனையே இழந்தவராவர்.

இந்த உண்மையின் சிறந்த விளக்கமாக விளங்கும் செய்யுள் இதுவாகும்.

பாடல் பெறானேல் பலர்மெச்ச வாழானேல்
நாடறிய நன்மணங்கள் நாடானேல் - சேடன்
இவன்வாழும் வாழ்க்கை இருங்கடல்குழ் பாரில்
கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண்.

"நல்ல பாவலரால் பாடப் பெற்றுப் புகழடையானேல், பலரும் மெச்சுமாறு வாழ்ந்து வருவதும் செய்யானேல், நாடு அனைத்தும் தெரிந்து போற்றுமாறு நற்காரியங்களைச் செய்வ தற்கும் விரும்பானேல், சேடனாகிய இவன், செல்வத்தோடு வாழும் வாழ்வானது, பெருங் கடலாற் சூழப்பெற்ற இவ்வுலகிலே அழிந்தாலென்ன, செழித்தால் என்ன? அதனால் யாதும் பயனில்லை " என்பது கருத்து.

கவிழ்தல் - இருப்பதும் அழிதல். மலர்தல் - இருப்பது மேலும் பெருகுதல். நன்மணம் - நற்காரியங்கள்.
-----------

37. நல்லான் முல்லான்!

மனித வாழ்விலே சிறு பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என மூன்று முதன்மையான பகுதிகள் உள்ளன. ஒருவனே சிறு பருவத்துக்கு வாலிபப் பருவத்திலும், வாலிபப் பருவத்துக்கு முதுமைப் பருவத்திலும் வேறுபடுகின்றான். இந்த வேறுபாடுகள் இயல்பான உடலமைதி மாற்றத்தினாலும், அவன் வாழ்க்கை நிலைகளாலும் அமைகின்றன என்பார்கள்.

மற்றுஞ் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் பண்பு ஒருநாள் முழுவதுங்கூட ஒன்றுபோல் இருப்பதில்லை. காலையில் ஒரு நிலையாக இருப்பார்கள்; நண்பகலில் ஒரு நிலையாக விளங்குவார்கள், மாலையில் மற்றொன்றாக அவர்கள் மாறி விடுவார்கள். இவ்வாறு மாறிக்கொண்டே போகின்ற மனித சுபாவம் உடையவர்களை 'நிலைகெட்டவர்கள்' என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு சமயம், ஒளவையார் 'முல்லான்' என்றொருவன் வீட்டிற்குச் சென்றிருந்தார். முல்லான் அவரை மிகவும் அன்புடன் உபசரித்து வந்தான். அவனுடைய அன்பு அவரைக் கவர்ந்தது. அவருடைய தமிழ் அவனையும் ஆட்கொண்டது. பல நாட்கள் தன்னுடன் இருந்து செல்லுமாறு, அவன் ஒளவையாரை வற்புறுத்தினான். அவரும் அவனுடைய அன்புக்கு அடிமையானார்.

'
விருந்தும் மருந்தும் மூன்று நாள்' என்பார்கள். பல நாட்களாகியும் முல்லான் முதல் நாளிற் போலவே அன்புடன் அவரைப் பேணி வந்தான். நாளுக்கு நாள் முல்லானின் அன்பு உபசாரம் பெருகிற்றேயன்றிக் குறையவில்லை.

ஒளவையாரின் உள்ளம் குளிர்ந்தது. அவனது விருந்தோம்பும் நல்ல குணத்தை வியந்தார். அவருடைய உள்ளத்தில் எழுந்த களிப்பினாலே அரிய செய்யுள் ஒன்றும் எழுந்தது.

'
மனிதர்கள் காலையில் ஒரு தன்மையாகவும், கடும் பகலில் மற்றொரு தன்மையாகவும், மாலையில் வேறொரு தன்மையாகவும் விளங்குவதனைத்தான் கண்டிருக்கின்றோம். அகமும் முகமும் மலர்ந்து, எந்நேரமும் ஒரே தன்மையுடன் உபசரிக்கிறான் முல்லான். இவனைப் போல இதுவரை யாம் கண்டறியோம்' என்ற பொருளுடன் அச் செய்யுள் அமைந்தது.

இது ஒரு வேடிக்கையான செய்யுளும் ஆகும். 'முல்லை' என்று பெண்களுக்குப் பெயரிடுவது உண்டு. ஆனால், முல்லான்' என்று ஆண்களுடைய பெயரும் வழங்கும் என்று இச் செய்யுளால் அறிகின்றோம். இதனை நன்றாகக் கவனிக்க வேண்டும்.

இதனால், விருந்தினரை அகமும் முகமும் மலர உபசரித்தல் வேண்டும் என்பதும், முதல் நாளைப் போன்றே அவர் திரும்பிச் செல்லும் நாள் வரையும் உபசரிக்க வேண்டும் என்பதும் உலகோர்க்கு உணர்த்தினார். அந்த உபசரிப்பு, புலவர் வாயாற் புகழ்பெறும் சிறப்பைத் தரும் என்பதற்கு இச் செய்யுளைச் சான்றாகவும் வைத்தார்.

காலையி லொன்றாவர் கடும்பகலி லொன்றாவர்
மாலையி லொன்றாவர் மனிதரெலாம் - சாலவே
முல்லானைப் போல முகமுமக மும்மலர்ந்த
நல்லானைக் கண்டறியோம் நாம்.

"மனிதர்கள் எல்லாரும் காலை நேரத்தில் ஒரு தன்மையாக இருப்பார்கள். கடும்பகலான வேளையில் மற்றொரு வகையாக இருப்பார்கள். மாலை வேளையில் மற்றொன்றாக இருப்பார்கள். அங்ஙனமன்றி, எந் நேரமும் முல்லானைப்போல முகமும் அகமும் மலர்ந்து உபசரிக்கும் நல்லானை யாம் இதுவரை கண்டறியோம்" என்பது பொருள்.

கடும்பகல் - நண்பகல்; வெயிலின் கடுமை குறித்துக் கடும்பகல் என்றனர்.
-------------------

38. எண் சாண்!

ஒளவையாரின் புகழ் தமிழகம் எங்கணுமே பரவி இருந்தது. அவர் வாயினாற் பாடப் பெறவேண்டும் என விரும்பினோர் பலர். அவருடைய வாக்கினைத் தமிழ்த் தெய்வத்தின் வாக்கு எனக் கொண்டு போற்றி மகிழ்ந்தோரும் மிகப் பலர்.

ஒளவையாரிடம் ஒரு சிறப்பான தனித்தன்மை இருந்தது. அரசரைப் பாடி, அரசரிடம் பரிசில் பெற்றுப் புலவர்கள் இருந்த காலம் அது. அந்த நாளில், அரசரையும் மக்களையும் அன்பு என்னும் அளவுகோல் ஒன்றினாலேயே அளந்து, அதற்காகவே பாடிப் புகழ்பெற்ற மானுடப் பெருங் கவிஞராகவும் ஒளவையார் திகழ்ந்தனர்.

தாசி சிலம்பியும், குறவனும், பூதனும், முல்லானும் மற்றும் பலரும் ஒளவையாரால் பாராட்டிப் பாடும் நிலை பெற்றனர். இவற்றை நாம் கண்டோம்.

ஆனால், 'ஒளவையார் பெரும் புலவரோ? தெய்விக ஆற்றல் உடையவர் என்பதும் உண்மையோ ? எம் போன்று சொற்களைக் கவினுற யாத்தமைப்பவரோ?' என்றெல்லாம் அவரைக் குறித்து ஏளனமாகக் கருதினவர்களும் இல்லாமல் இல்லை.

ஒரு புலவர், இந்த எண்ணத்துடன் ஒருநாள் ஒளவையாரைச் சந்தித்தார். அவருடைய கையில் மண் இருந்தது. குறிப்பால் தன் கையினைக் காட்டி, அதனுள் இருப்பதனைக் குறிக்கும் வகையாற் செய்யுள் ஒன்று இயற்றுமாறு கேட்டனர்.

ஒளவையார் அந்தப் புலவரின் குறும்புச் செருக்கினை உணர்ந்தார். அந்தப் புலவருடைய குறும்பினை ஒடுக்க வேண்டும் என்ற நினைவும் எழுந்தது. பிறருடைய தகுதியைச் சரியாக உணராமல் அவசரப்பட்டு வம்பு செய்ய முன்வந்த அவருடைய
அறியாமையினை எண்ணினார்.

அவர் அங்ஙனம் கேட்டது தம்மை இழிவுப்படுத்தும் கருத்துடன் என்பதையும் புரிந்து கொண்டார். அந்தப் புலவரை நோக்கிக் கூறத் தொடங்கினார்.

"
நும் கையிலிருக்கும் மண்ணின் அளவே தான் கற்றதெனக் கொண்டவளாகவும், கல்லாதது உலகளவு பரந்தது எனக் கருதியவளாகவும், கலைமகள் இன்னமும், ஓதிக்கொண்டே இருக்கின்றாள். அங்ஙனமிருக்கவும் நீரோ வீணாகப் பந்தயம் இட்டு வருகின்றீர். இது மிக மிக நன்று" என்று கூறி, அவரின் செருக்கினை அடக்கினார் ஒளவையார்.

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்
றுற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும்பந் தயங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்.

"புலவரே! நான்முகனின் நாவிலே வீற்றிருக்கும் கலைக்குத் தெய்வமான கலைமகள், தான் கற்றது ஒரு கைம்மண்ணின் அளவே எனவும், கல்லாதது உலகளவு பரந்தது எனவும் கருதி, இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறாள். அதனால், வீணாகப் பந்தயம் கூறி வாதிட முயலல் வேண்டாம். எறும்பும் தன் கையால் எண்சாண் அளவே என்பதை உணர்ந்து, பிறர்பால் அடக்கங்காட்டி வாழ்வீராக" என்பது பொருள்.

நீர் இன்னும் அறிவு பெறவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.
--------------

39. அரசுக்கு நல்லது!

ஒரு சமயத்தில் சோழனுக்கு ஒரு தீவிரமான எண்ணம் எழுந்தது. அவனுடைய நாடு பரந்து கிடந்தது. பலப்பல சிறுசிறு அரசர்கள் அங்கங்கே ஆட்சியைச் செலுத்தி வந்தனர். இவர்களை எல்லாம் கண்காணிக்கவும், தனக்கு அரசியல் காரியங்களில் தக்க ஆய்வுரைகள் கூறி உதவியாக இருக்கவும் சிலரை நியமிக்க விரும்பினான். எவரை நியமிப்பது நல்லது? இதற்கு ஒரு முடிவு காண அவனால் எளிதில் இயலவில்லை.

தளபதிகள் பலர் தருக்கோடு போர் செய்வதில் வல்லவர் களாக வெற்றிக்கொடி நாட்டி வந்தனர். உறவினரும் வீரருமான அவர்களையே நீதி நிருவாகப் பொறுப்பாளர்களாக ஆக்குவதற்கு அவன் விரும்பவில்லை. போரில் சிறப்புற்ற அவர்கள் குடிமக்களிடமும் கடுமையாக நடந்து கொண்டு விடுவார்களோ என அஞ்சினான். எனவே, அதுபற்றிய சிந்தனையிலே அவன் உள்ளம் சில நாட்களாகச் சுழன்று கொண்டிருந்தது.

ஒருநாள், ஒளவையார் சோழனைக் காணச் சென்றிருந்தார். இருவரும் மனங்கலந்து பல செய்திகளைப் பற்றி உரையாடினர். முடிவில், "ஏன் மன்னா ! நின் உள்ளத்தில் ஏதோ ஒரு நினைவு புகுந்து நின் பேச்சில் உள்ளத்தை நாடவிடாது தடுக்கிறதே? அஃது என்னவோ?" என்றனர்.

சோழன், தன் உள்ளத்தை வாட்டிய கவலையை அவருக்குக் கூறினான். "நாட்டிலே நிருவாகப் பொறுப்பிற்குச் சிலரை நியமிக்க விரும்புகிறேன். நான்கு வகுப்பினருள்ளும் கற்றவர் உள்ளனர். எவரைத் தேர்ந்தெடுப்பது என்பதை என்னால் முடிவு செய்ய இயலவில்லை " என்றான்.

"
நின் கருத்து நன்றுதான். ஆனால், அதனைப் பற்றிய செய்திகளை நினக்குச் சொல்லுகின்றேன். பிறகு நீயே முடிவு செய்க" என்று ஔவையார் கூறலானார் :

"
முதலில் பிராமணர்களை நியமிக்கலாம். அவர்கள் படித்தவர்கள். ஸ்மிருதிகளை நன்றாக அறிந்து வியாக்யானம் செய்கிறவர்கள். அவர்கள் நியமிக்கப் பெறுவார்-களானால் நின் செங்கோன்மை பிறண்டுபோம். அவர்கள் பண்டிதராக இருப்பார்களே அல்லாமல், நிருவாகப் பொறுப்பிற்குத் தகுதியுடையவர் ஆக மாட்டார்கள்.

நின் உறவினர்களாயின் போர் மறம் உடையவர்களாதலால், எளிதாகப் பேசி முடிவுகாணும் சிறுசிறு மாறுபாடுகளுக்குங்கூடப் போரிடற்கு எழுந்துவிடுவர். அதனால், நாட்டில் கொடிய போர்களே மலிந்துவிடும்.

வணிகர்கள் பொன்னைத் தொகுப்பதில் கருத்து உடையவர்கள். அந்த எண்ணம் வரிகளைக் கூட்டுவதிலும், பலபடியாக பொருள்களைச் சேர்ப்பதிலும் அவர்களை இழுத்துச் செல்லும். அதனால், குடியினர் துயருற்று நலிவர்.

இம் மூவர்களும், இதனால் நின் கருத்திற்கு உகந்தவராக மாட்டார்கள். நான்காமவரான வேளாண் மக்களோ நாணயம் உள்ளவர்கள், நேர்மையாளர்கள். சிறந்த மந்திரிமார்களாக விளங்குவதுடன், நின் அரசியல் நெறிக்குச் சிறந்த துணைவர்களா கவும் அமைவார்கள், அவர்களைக் கொண்டிருக்கும் அரசே சிறந்த
அரசும் ஆகும்."

ஒளவையாரின் அரசியல் நுணுக்கம் சோழனை வியப் படையச் செய்தது. அங்ஙனமே வேளாளர்களை அமர்த்தி அவன் மனவமைதி பெற்றான்.

நூலெனிலோ கோல் சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான்
அந்த அரசே அரசு!

"முப்புரி நூல் அணிந்தவன் மந்திரியாக அமைந்தால், அந்த அரசின் செங்கோல் பிறழ்ந்து கொடுங்கோலாக ஆகிவிடும். நின் உறவினரான அரச குலத்தவரை மந்திரியாகக் கொண்டாலோ கொடிய போரினில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். தராசுக்கோல் பிடிப்பவரான வணிகக் குடியினரை மந்திரியாகக் கொண்டால், குடிமக்கள் கேட்டினை அடைவார்கள். நாலாவ தாகிய வேளாள வகுப்பினனோ நினக்கு நல்ல மந்திரியாகவும் இருப்பான்; நின்னுடைய அரச நெறிக்கு உற்ற துணையாகவும் விளங்குவான். அவனைத் துணையாகக் கொண்டதே நல்ல
அரசாகவும் இருக்கும்" என்பது பொருள்.

நூல் - முப்புரி நூல். கோல் - செங்கோல்; துலாக்கோல்.
----------

40. நான்கு பிறை!

ஒரு சமயம் சோழனுடைய புலவரவையிலே கம்பர், ஒளவையார், புகழேந்தியார், ஒட்டக்கூத்தர் ஆகிய புலவர்கள் கூடியிருந்தனர். மற்றும் பலப்பல தமிழறிந்தார்களும் குழுவி இருந்தனர்.

அவ்வமயம், ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்த காலம். அதனால், கூத்தர் சமயம் கிடைத்தபோதெல்லாம் புகழேந்தியாரைக் குறை கூறுவதையே தொழிலாகக் கொண்டார்.

கூத்தர் முதியவர்; சிறந்த புலவர். அரசனுக்கு மிக வேண்டியவர். அந்த அவையின் தலைவராகவும் விளங்கினார். எனினும், புகழேந்தியாரைக் கண்டால் ஏனோ அவர் உள்ளம் குமுறியது. அவரை மடக்கி விடுவதிலேயே எப்போதும் கவனம் செலுத்தினர்.

புகழேந்தியும் நற்றமிழில் வல்லவர். அரசிக்குக் குருவாக இருந்து அவருடன் சோழ நாட்டிற்கு வந்தவர். கூத்தரின் சொல்லம்புகளை எல்லாம் தம் பொறுமையினால் தாங்கிக் கொண்டு வென்று வந்தார்.

அன்றும், விவாதம் எங்கோ சென்று, இறுதியில் கூத்தரும் புகழேந்தியாரும் ஒருவரோடு ஒருவர் கடுஞ்சொல் நிகழ்த்தும் அளவிலே வளர்ந்து கொண்டிருந்தது. மற்ற புலவர்கள் அது என்றும் காணும் காட்சியாதலால், எதுவும் பேசாது அந்தப் புலமைச் சண்டையிலே எழுகின்ற தமிழ் வெள்ளத்தைச் சுவைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒளவையாரால் அந்தப் போக்கைப் பொறுத்துக் கொண்டிருக்க இயலவில்லை.

"
கூத்தரே, இத்துணைப் பெரிதுபடப் பேசும் நீர் மூன்று பிறை வருமாறு ஒரு செய்யுள் இயற்றும் கேட்போம்' என்றனர்.

கூத்தர் புன்சிரிப்புடன், 'வெள்ளத் தடங்காச் சினவாளை' என்ற செய்யுளைச் சொன்னார். அதில் இரண்டு மதியே வர, ஒளவையார் "ஒட்டா மதிகெட்டாய்!" என்று கூற, கூத்தர் தலைகவிழ்ந்தார்.

பின்னர் புகழேந்தியார், பங்கப்பழனத்து' எனத் தொடங்கும் பாடலைச் சொல்லி மூன்று பிறை முறையே வரச்செய்து, அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.

தாம் தோற்றுப் புகழேந்தி பாராட்டப் பெற்றதைக் கண்ட கூத்தர் சினங்கொண்டார். "எம்மைப் பாடச் சொன்ன தாமே பாடுதற்கு இயலுமோ?" என்றார்.

மூன்றென்ன? நான்கு பிறையே வருமாறு பாடுவேன்என்று உரைத்து, ஒளவையார் பாடிய செய்யுள் இது :

செம்மான் கரத்தனருள் சேயா நெடியோனை
அம்மான் எனப்பெற்ற அருள்வேலா - இம்மான்
கரும்பிறைக்கும் வெண்பிறைக்கும் கண்ணம் பிறைக்கும்
அரும்பிறைக்கும் கூந்தல் அணை.

"செவ்விய மானினைக் கையில் ஏந்திய சிவபிரான் பெற்றருளிய சேயோனாகிய முருகப்பிரானே! நெடியோன் ஆகிய திருமாலைத் தாய்மாமன் எனப்பெற்று அருள்புரியும் வேலாயுதனே! மான் போன்ற இந்த மாது, கரும்பினை வில்லாக உடைய மன்மதனின் செயலாலும், வானத்தே வெண்பிறை தோன்றலாலும், கண்கள் நீர்த்துளிகளைச் சிதறும் நிலையினள் ஆயினாள். மலரரும்புகளை உதிர்த்துக் கொண்டிருக்கும் இவள் கூந்தலே நின் அணையாகக் கொண்டு, இவளைக் கூடி இன்புறுத்துவாயாக" என்பது பொருள்.

கூத்தர் பாடியது

வெள்ளத் தடங்காச் சினவாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்து மழைத்
துளியோ டிறங்கும் சோணாடா!
கள்ளக் குறும்பர் குலமறுத்த
கண்டா வண்டர் கோபாலா
பிள்ளை மதிகண் டெம்பேதை
பெரிய மதியும் இழந்தாளே!

புகழேந்தி பாடியது

பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்தென்று
சங்கிட் டெறியக் குரங்கிளநீர்
தனைக் கொண் டெறியுந் தமிழ்நாடா!
கொங்கைக் கமரா பதியளித்த
கோவே ராஜ குலதிலகா!
வெங்கட் பிறைக்கும் கரும்பிறைக்கும்
மெலிந்தம் பிறைக்கும் விழிவேலே!
-------------

41. நான்கு கோடி!

ஓரூரில் ஒரு போலி வள்ளல் இருந்தான். அவன் பெயருக்குத் தான் வள்ளல். எவருக்கும் அரைக்காசுகூடக் கொடுத்தறிய மாட்டான். தான் வாரி வழங்கியதாகப் பலரிடமும் சொல்லிப் பெருமை பேசிக்கொள்வது அவன் வழக்கமாக இருந்தது.

வள்ளலுக்குத் தமிழ்ப் புலமையும் அரைகுறையாக இருந்தது. எவராவது புலவர்கள் வந்து அவனை நாடிப் பரிசில் பெற விரும்பிச் செல்வார்கள். அதற்கு இயலாதபடி எதையாவது சொல்லி அவர்களை மடக்கித் திருப்பி அனுப்பி விடுவான். அவர்களும் தம் போதாத காலத்தை நொந்தபடி போய் விடுவார்கள்.

ஒரு சமயம், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எளிதில் முடியாத ஒரு திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுபவர்க்கு ஆயிரம் பொன் தருவதாக அறிவிக்கலாமென நினைத்தான்.

அதன்படி, நாலுகோடிக் கவி செய்தால் அவர்க்கு ஆயிரம் பொன் தருவதாக அறிவித்தான். நாலுகோடிக் கவிகளை எவரால் பாடுதற்கு முடியும் ! பாடுதற்கு முடிந்தாலும் வாழ்நாள் அதற்குப் போதாதே! அவனும் தெரிந்துதான் இதனை அறிவித்தான்.

ஒளவையார் அந்த ஊருக்கு வந்தார். தாம் நாலுகோடிக் கவி பாடுவதாகத் தெரிவித்தார். பெருங்கூட்டம் அதனைக் கேட்க வந்து கூடிவிட்டது.

போலி வள்ளல் திகைத்தான். ஒளவையார் பாடிவிடக் கூடுமென்று பயந்தான். ஆனால், 'எவ்வளவு காலம் ஆகும்? அதுவரை அவர் எப்படிப் பாடுவார்? அதையும் தான் பார்ப்போமே' என்று கருதி இசைந்தான்.

புலவர்கள் பலர் கூடினர். ஒளவையாரும் கலங்காமல் அவைமுன் எழுந்தார். வியப்புடன் அவரை அனைவரும் நோக்கினர். அவர் பாடினார் :

"
இது நாலு கோடி கவி அன்றுஎன்றான் அவன். நாலு கோடிக் கவிதான் என்று அந்த அவை கூறிற்று. அவன் மிக வருத்தத்துடன் ஆயிரம் பொன்னையும் கொடுத்தான். அதுமுதல், பிறரைத் தன் சூழ்ச்சியால் ஏமாற்றலாம் என்ற எண்ணமே அவனிடமிருந்து போய்விட்டது.

மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண் ணீரென் றுபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுவதே கோடி பெறும்;
கோடனுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.

"தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் பொருளாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிப் பொன் பெற்றதைப் போன்றதாம். 'உண்ணீர் உண்ணீர்' என்று உபசரி யாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு கூடியிருப்பது கோடி பெறுவதாகும். எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவானது கோணாதிருக்கும் தன்மையும் கோடிப் பொன் பெறுவதாகும்" என்பது பொருள்.

'
என் றூட்டாதார்' என்பதும் பாடம். 'கோடியுறும்' என்பதும் பாடம்.
--------------

42. இல்லை இனிது!

பழையனூரில் காரி என்ற பெயருள்ளவன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் எளியவன். ஆனால், மிகவும் நல்ல குணம் உடையவன். அவனுக்கு உதவ நினைத்தார் ஒளவையார். வாதவன் வத்தவன் யாதவன் என்பாரை நாடினார். அவர்கள் யாதும் தாராது போக, அது குறித்துப் பாடியது இது.

கொடை சிறந்த குணம் ஆகும். ஆனால், செல்வர்களுக்கு எளிதில் கொடைக் குணம் வாய்த்துவிடுவது இல்லை. பெரிதாக இல்லாமற் போனாலும் சிறிதளவேனும் கொடுத்து உதவலாம். அதற்கும் பலர் விரும்புவதில்லை.

ஒளவையார் காரிக்கு உதவ நினைத்துச் சென்றார். அவனுக்கு வேண்டியது எல்லாம் ஒன்றிரண்டு ஆடுகள் தாம். அதனை வளர்த்து அவன் தன்னைப் பேணிக் கொள்வான். அதனை நிறைவேற்றுவதும் அவ்வளவு எளிதாயில்லை.

முதலில் வாதவர் கோனைக் கண்டார். அவன் " இப்போது தருவதற்கு இல்லை ; பின்னர் ஒரு சமயம் தருகின்றேன்" என்றான். அது, தருவதற்கு விரும்பாமல் சொன்னது. அதனை ஒளவையார் அறிந்து, வத்தவர் கோனிடம் சென்று முயன்றார். அவனும் அப்படித்தான் "நாளைக்கு வாருங்கள்" என்றான். அவனை விட்டு யாதவர் கோனிடம் சென்று கேட்டார். அவனோ தருவதற்கு "இல்லை" என்றான். தான் கொடுக்க விரும்பாததனை வெளிப் படையாகவே அவன் சொல்லிவிட்டான். பிறர் கொடுக்க விரும்பாததுடன், ஒளவையாரை வீணாக அலைக்கவும் முயன்றனர்.

அதனால் ஒளவையார் மனம் நொந்து போனார். அந்த நிலையிலே எழுந்த பாட்டு இது.

கொடுக்கும் குணமுடையவன் ஒருபோதும் நாளைக்கு என்றோ, பின்னைக்கென்றோ கூற மாட்டான். அப்படிக் கூறுவது கொடுக்க விரும்பாததற்கு அறிகுறியே. இதனை உணர்த்துவது இச்செய்யுள்.

வாதவர்கோன் பின்னையென்றான்
வத்தவர்கோன் நாளையென்றான்
யாதவர்கோன் யாதொன்றும்
இல்லையென்றான் - ஆதலால்
வாதவர்கோன் பின்னையிலும்
வத்தவர்கோன் நாளையிலும்
யாதவர்கோன் இல்லை இனிது.

"வாதவர் கோமான் பின்னொரு சமயம் வருக என்றான். வத்தவர் கோமான் நாளை வருக, நாளை வருக என்று நாட் கடத்தினான். யாதவர் கோமானோ யாதொன்றும் தருவதற்கு இல்லை என்றான். இவர்கள் அனைவரும் கொடுக்க மனமின்றியே இப்படிக் கூறியதனால், வாதவர்கோன் பின்னை என்றதிலும், வத்தவர்கோன் நாளை என்றதிலும், யாதவர்கோன் இல்லை என்றதே எனக்கு இனிதாக இருந்தது" என்பது பொருள்.

இப்பாடல் பலவகையாக வழங்கும்! பொருளும் பலபடியாக உரைக்கப்படும். அவற்றைப் பிறவற்றான் உணர்க.
---------------

43. ஈயார், தனம்!

ஒருவனிடம் செல்வம் ஏராளமாகக் குவிந்திருந்தது. அவன் உதவுகின்ற மனமில்லாதவன். அதனால், அந்தப் பணம் பயனற்று, அவன் வீட்டினுள் துருப்பிடித்துக் கிடந்தது.

ஒருநாள், இப்படிப்பட்ட ஈயாத உலோபியாகிய அவனை ஒளவையார் காண நேர்ந்தது. அவனுடைய அளவற்ற செல்வத்தைப் பிறர் சொல்லக் கேட்டறிந்த அவர், அவனுக்கு
அறிவுரை சொல்ல விரும்பினார்.

"
ஓர் இடத்திலே பெரிதான தேன்கூடு ஒன்று இருக்கிறது. அதனைச் சூழவும் கருங்குளவிகள் எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும். அருகே சென்றவரை வளைத்துத் தாக்கும்.

போகிற இடமோ நெட்டிப்புல் தூறுகள் நிறைந்தது. எளிதில் சென்று சேர்ந்துவிட முடியாதது. ஆரியப் பிசாசும் அங்கே குடி கொண்டிருக்கிறது. செல்பவரைத் தாக்கி வருத்தும் தன்மையது அது. அதன் தாக்குதலுக்கு மீண்டவரோ எவரும் இலர்.

அந்தச் சுடுகாட்டின் ஒருபுறத்தே கரை இடிந்து கொண்டிருக்கும் ஒரு பகுதி; எந்நேரமும் முற்றவும் இடிந்து விழுமோ என்று அச்சம் விளைவிக்கும் இடம்; அந்த இடத்திலே ஒரு பாம்புப் புற்றும் இருக்கிறது; அந்தப் புற்றுக்கு நடுவில் ஒரு பனை மரம் நிற்கிறது; அதன் ஓலை கழிக்கப் பெறாதது, கருக்கு மட்டைகளால் நிறைந்திருக்கும் மரமாகவும் இருப்பது.

அந்தப் பனைமரத்தின் மீதுதான் அந்தத் தேன்கூடு இருக்கிறது. அந்தத் தேன்கூடு எவராலாவது எடுத்துப் பயன் படுத்தக் கூடியதோ? யார்க்கும் பயனற்று அப்படியே இருந்து அழிந்து போவதுதானே அதன் கதி!

அந்தத் தேன்கூடு இருப்பதைப் போலத்தான் இவனிடம் செல்வம் இருப்பதும், அதனைப்பற்றி நாம் ஏன் பேசுதல் வேண்டும்" என்றார் ஒளவையார்.

பயனற்ற செல்வத்தைப் பற்றி இவ்வளவு கடுமையாகச் சுவையோடு வருணித்தவர் வேறு எவருமில்லை. தனத்தைப் பயன்படத்தக்க வழிகளிற் செலவு செய்யாமல் சேர்த்து வைக்கும் தவறான பாதையிற் போகிறவர்களுக்குச் சிறந்த ஒரு உபதேசமாக இச்செய்யுள் விளங்குவதாகும்.

சுற்றும் கருங்குளவி சூரைத்தூற் றாரியப்பேய்
எற்றும் சுடுகாட் டிடிகரையின் - புற்றில்
வளர்ந்த மடற்பனைக்குள் வைத்ததேன் ஒக்கும்
தளர்ந்தோர்க்கொன் றீயார் தனம்.

"வறுமையுற்று வாடியவர்களுக்கு யாதும் கொடுக்கா தவர்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வமானது, கருங்குளவி சுற்றுவதாகவும், நெட்டிப்புல்லின் தூறுகள் உள்ளதாகவும் விளங்கும், ஆரியப்பேய் தாக்கும் சுடுகாட்டின் இடிகரையில் உள்ள பாம்புப் புற்றின் நடுவில் வளர்ந்துள்ள, ஓலை கழியாத பனை மரத்துள் வைக்கப்பெற்றதாக இருக்கின்ற தேனைப் போன்றது ஆகும்" என்பது பொருள்.
-----------

44. மனத்தின் தன்மை !

உலகம் ஒரு சிறந்த தன்மையினை உடையது; இதன்கண் நாளும் பிறப்பவர் பல்லாயிரவர் ஆவர். பிறக்கும் உயிரினமோ பல கோடியாக இருக்கிறது. எனினும், பிறக்கும் இவை அனைத்திற்கும் வேண்டிய உணவுப் பொருள்களைத் தடையின்றிப் பெற்றிருப் பதாகவும் உலகம் விளங்குகின்றது.

உலகம், இவ்வாறு தேவையான அனைத்தையுமே உடையதாக இருக்கும் போது, சிலர் ஏராளமான செல்வ சம்பத்துக் களை உடையவராகவும், பலர் ஏழ்மை கொண்டவராகவும் விளங்குவது எதனால்? அது மனிதர்கள் சுயநலவாதியராக ஆகிவிட்ட கொடுமையினால் என்பார்கள். ஓரளவிற்கு அதுவே உண்மையும் ஆகும்.

இயற்கையில் அமையாது கிடைப்பது என்பது எதுவுமில்லை. பலருக்கும் பயன்படுகின்ற பொருள்களை ஒருவன் தனக்காகப் பதுக்கிக் கொள்ளும் போதுதான் பஞ்சம் ஏற்படுகின்றது. பதுக்குகிறவர்கள் அதிகமாகும் போது பஞ்சமும் அதிகமாய்ப் பரவுகின்றது. சிலர் உணவினை வீணடிக்கப் பலர் ஒருவேளை உணவுக்கும் வகையற்று வாடுகின்றனர். இந்த நிலைமை மாறுதல் வேண்டும்.

இந்த எண்ணம் வள்ளுவருக்கும் ஏற்பட்டது. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' எனவும், 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பறந்து கெடுக உலகியற்றியான்' எனவும், அவர் நெஞ்சம் குமுறினார்.

அவரைப் போலவே ஒளவையாரும் மக்கள் கவியாகி, மக்களோடு கலந்து, அவர்களுடைய இன்ப துன்பங்களில் உறவு கொண்டு வாழ்ந்தவர். இதனால், அவரும் அந்தப் பசியினைக் கண்டு பதைக்கின்றார்.

'
உலகம்' அனைத்தும் விளைவயலாக ஆக வேண்டும். வானவர் வாழும் தெய்வத் தன்மையுடைய உயர்ந்த இமய மலையின் முகடுகளைப் போல எங்கணும் நெல்மணிகள் குவிந்திருத்தல் வேண்டும். பொன்னும் முத்தும் மணியும் கலந்து கோடானு கோடியாகக் கொடுத்தல் வேண்டும். இவை அனைத்தையும் யான் பெற்றாலும் என் மனம் நிறைவு பெறுவதில்லை.

'
ஒருநாள் ' ஒருவன், ஒரு பொழுதைக்கேனும் உணவின்றிப் பட்டினி கிடக்கும் அந்தக் கொடிய காட்சியைக் கண்டதும் என் மனம் நிலைதடுமாறிப் போய்விடுகின்றது. நேர்மையை மறந்து விடுகின்றது. நிறையையும் இழந்து விடுகின்றது.'

ஒளவையாரின் மனித உள்ளம் இது! இந்த உள்ளம் ஆட்சியாளருக்கும், மக்கள் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். குறிப்பாகப் பொருள்களைப் பதுக்கி வைக்கும் பதுக்கல் காரர்களுக்கு உண்டாக வேண்டும். அப்போதுதான் நாட்டில் இன்பம் மலரும்!

வையகம் எல்லாம் வயலாய் வானோர்
தெய்வமா முகடு சேரி யாகக்
காணமும் முத்தும் மணியும் கலந்தொரு
கோடானு கோடி கொடுப்பினும், ஒருநாள்
ஒருபொழுது ஒருவன் ஊண் ஒழிதல் பார்க்கும்
நேர்நிறை நில்லா தென்னுமென் மனனே!

"வையகம் அனைத்துமே வயலாகவும், வானவர்க்கு உரித்தாகிய தெய்வத்-தன்மையுடைய பெரிய மலையுச்சிகளே சேர்ந்திருக்கும் இடமாகவும், பொன்னும் முத்தும் மணியும் கலந்து கோடிக்கணக்காகவும் எனக்குக் கொடுத்தாலும், என் மனம் நிலை தடுமாறுகின்றதே!

'
ஒருநாள், ஒருபொழுது, ஒருவன் உணவின்றி இருப்பதனைப் பார்க்கும் தன்மை நேர்மையுமன்று; நிறைவும் அன்று. அவ்விடத்து அவை நிலைபெறா என்று என் மனம் சொல்லுகின்றதே ! நேர்நிறை நில்லாதது அத்தகைய நாடு என்று என் மனம் கூறுகின்றதே!" என்பது இதன் பொருள்.
--------------

45. கோடிக்கு ஒருவன்!

தென்னாடுடையோனாகிய பாண்டியன் தமிழார்வம் மிக்கவன். தமிழ்ப்புலமை உடையவரைத் தாங்கிக் காத்துத் தமிழ்ச்சங்கம் நிறுவித் தமிழாய்ந்து சிறந்தவன் அவன்.

ஒரு சமயம், அவனுடைய அவைக்கண் புலவர்கள் என்று கூறிப் பலர் வந்து நிறைந்தனர். அவர்களுட் சிலர் உண்மையாகவே கற்றறிந்த சான்றோர் என்பதனை அவனும் அறிவான். எனினும் தமிழ்ச் செய்யுள் யாத்தல், கொற்றன் ஒருவன் செங்கற்களை அடுக்கிச் சுவர் எழுப்புவது போன்ற செயல் அன்று; அது தெய்விக சக்தியுடன் உள்ளத்தில் தோய்ந்து உயிரிற் கலந்து வெளிவருவது; இந்த உண்மை மெய்ப்பிக்கப்படல் வேண்டும் என நினைத்தான் அவன். அதனால், ஒரு போட்டியினையும் ஏற்படுத்தினான்.

தன் கோயிற்கூடத்து ஒரு புறமாக ஐந்து பொன் முடிப்புக் களைக் கட்டி வைத்தான். அவற்றுள் ஒவ்வொன்றிலும் ஆயிரம் பொன் இருந்தன. அவற்றை அற்று விழுமாறு பாடுதல் வேண்டும். அப்படிப் பாடுகிறவர்கள், அந்த முடிச்சுகளைத் தாமே எடுத்துக் கொள்ளலாம்' என்று எங்கும் பறையொலிக்கச் செய்தான். புலவர்கள் ஆர்வத்தோடு சென்றனர். பாடிப்பாடி ஓய்ந்தனர். ஆனால் பொன் முடிச்சுகள் ஏதும் அற்று விழவேயில்லை.

மதுரைக்குச் சென்ற ஒளவையார் அதனைக் கண்டார். அது அற்று விழாதிருப்பது தமிழ் பாடும் தம் போன்றோர்க்குப் பழியாகும் என நினைத்தார். பொன்னின் அதிதேவதையான திருமகளைத் தியானித்தவாறு ஒரு செய்யுளைப் பாடலானார்.

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்த மலர்த்
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயின் உண்டென் றறு.

"குளிர்ச்சியான இதழ் விரிந்து மலர்ந்த செந்தாமரை மலரிடத்தே வீற்றிருக்கும் திருமகளே ! நூற்றுக்கு ஒருவர்தாம் தக்க அவையில் இருக்கத்தக்கவர். ஆயிரத்தில் ஒருவர்தாம் புலமையாளராக இருப்பார்கள். அவருள் பேச்சுத்திறனும் உடையவர் பதினாயிரத்துக்கு ஒருவராகவே விளங்குவர். கொடை வள்ளலாகத் திகழ்பவரோ கோடிக்கு ஒருவரைத்தான் காணலாம். இஃது உண்மையாயின், உண்மையென்று காட்டுவதுபோல் நீயும் அற்று வீழ்வாயாக" என்பது பொருள். இதனைப் பாடியதும் ஒரு முடிப்பு அறுத்து வீழ்ந்தது. அவையும் அரசனும் வியந்து மகிழ்ந்தனர்.
---------------

46. எச்சம் அறும் குடி!

அடுத்த பொற்கிழியின் முன் வந்து நின்றார் ஒளவையார். ஈயாதான் குடியானது வாரிசு அற்றுப் போகும் என்று பாடினார். அந்தச் செய்யுள் இது.

"
வளமான ஒருவன், வாடியவன் தன்னை எதுவும் கேளா திருந்தபோதும், தானே வலியச் சென்று அவனுக்கு மனமுவந்து உதவுகின்றான். இது தாளாண்மை ஆகும்.

அவன் சென்று கேட்கும் போது மட்டும் ஒருவன் வழங்குகின்றான் என்றால், அது வள்ளன்மை' எனப்படும்.

பலநாட் பின் தொடர்ந்து சென்று சென்று கேட்டுவர, இறுதியில் அவனுக்கு உதவுகின்றான் என்றால், அது அவனுடைய நடைக்கு கிடைத்த நடைகூலி' என்றுதான் சொல்லப்படும்.

மற்றொருவன், இரக்கமற்ற செல்வன், பலகாற் சென்று இரந்தும், தருபவன் போலக் காட்டிக் காட்டிப் பொய்த்தான். அவனது செயல் பழிச்செயல் ' ஆகும். அஃது அவனை மட்டும் வாட்டுவதுடன் நின்றுவிடாது; அவன் குடியே தொடர்பு அற்றுப்போகும். இது நடப்பது இவ்வுலகில் உண்மையானால், அற்று வீழ்க" என்று பாடினார் ஒளவையார்.

தண்டாமல் ஈவது தாளாண்மை - தண்டி
அடுத்தக்கால் ஈவது வண்மை - அடுத்தடுத்துப்
பின் சென்றால் ஈவது காற்கூலி - பின்சென்றும்
பொய்த்தான் இவனென்று போமேல், அவன்குடி
எச்சம் இறுமேல் இறு.

"கேளாத போது ஒருவனுக்குத் தாமே வலிய வழங்குவது சிறந்த கொடையாகும். கேட்டு அடைந்தபோது ஒன்றைக் கொடுப்பது வள்ளன்மையாகும். மீண்டும் மீண்டும் தொடர்ந்து போய்க் கேட்பின் தருவது கால்நடைக்குத் தருகின்ற கூலியாகும் ! 'அப்படிப் பின்னாகச் சென்றனிடத்தும் கொடாது ஏமாற்றினான் இவன்' என்று ஒருவன் போய்விட்டால், அப்படிப் பட்டவனின் குடி சந்ததி அற்றுப்போகும் என்பது உண்மை யானால், நீயும் அறுந்து வீழ்வாயாக" என்பது இதன் பொருள்.

உடனே இரண்டாவது முடிச்சும் அறுந்து வீழ்ந்தது. அந்த அவையும் மகிழ்வுடன் ஆரவாரித்தது.
-------------

47. கைக்கூலி வாங்குபவன்!

கைக்கூலிக்கு லஞ்சம்' என்ற சொல் இன்று வழக்கி லிருக்கிறது. இந்நாளில் இந்தக் கைக்கூலி வாங்கும் வழக்கம் எங்கும் வேரூன்றிக் கிளைத்து வளர்ந்து காடாகப் படர்ந்திருக்கிறது.

கைக்கூலி வாங்குவது தவறு; அது பழியையும் பாவத்தையும் கொண்டு வருவது' என்ற நினைப்பே இல்லாமற் போய்விட்டது. இதனை, இந்தக் காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

'
கைக்கூலி பெறுபவன் மிகச் சீக்கிரமே பணக்காரனாகி விடுகிறான். வாழ்க்கையின் பல வசதிகளையும் விரைவிலேயே அவன் தேடிக்கொள்ளுகிறான். அவனது ஆடம்பர வாழ்வு, முதலில் கைக்கூலியை வெறுத்த பலரையும் அதை நோக்கிச் செல்லுமாறு விரட்டுகிறது. இப்படிச் சிலர் சமாதானம் கூறுகிறார்கள். சட்டம் தடை செய்திருக்கிறது; ஆனால், அது செயற்படுவதில்லை. தெரிந்தும் தெரியாமலும் அது வாளா இருந்து விடுகிறது' என்பவர் சிலர். நமக்காக ஒன்றைச் செய்பவனுக்கு நாமும் ஏதாவது தருவதுதானே நியாயம் என்பவர்களும் உள்ளனர்.

அந்த நாளில் 'கைக்கூலி வாங்கியவன் பிள்ளையற்றுப் போவான்' என்று மக்கள் நம்பினார்கள். தன் குடிவழி தொடர்பற்றுப் போவதை யார்தான் வரவேற்பார்கள்? இந்த அச்சமே பலரையும் கைக்கூலி வாங்கவிடாமல் தடுத்திருக்கிறது. இந்த உண்மையை உரைக்கிறார் ஒளவையார்.

"
ஒரு வழக்கின் உண்மை ஒன்றாக இருக்கிறது. பொதுவாள் ரான ஊரவர்களும் அந்த உண்மைக்கு ஆதரவாகத் துணை நிற்கின்றனர். எனினும், அதனை ஒதுக்கி விடுகிறான் ஒரு நீதியாளன். எதிர்வழக்காளியின் பொய் வாதத்தைச் சார்ந்து அவன் பக்கமாக நின்று நீதி பேசுகிறான். இப்படிப் பேசிக் கைக்கூலி வாங்கி அவன் அதனைக் கொண்டு உவக்கின்றான். அவன் குடும்பம் பரம்பரைத் தொடர்பற்றுப் போவது உறுதி. அஃது உறுதியானால் நீயும் அறுவாயாக."

இந்தக் கருத்துப்பட ஒளவையார் பாடியதும், மூன்றாவது பொற்கிழியும் அறுந்து வீழ்ந்தது. அந்தப் பாடல் இது.

உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்கத்
தள்ளி வழக்கதனைத் தான் பேசி - யெள்ளளவும்
கைக்கூலி தான்வாங்கும் காலறுவான் தன்கிளையும்
எச்சமிறும் என்றால் இறு.

" உண்மையான வழக்கானது ஒரு புறம் இருக்கவும், ஊராரின் அவை அதற்கு ஆதரவாக இருக்கவும், அவ்வழக் கினைத் தள்ளிவிடும் முறையிலே தான் எடுத்துச் சொல்லி, கொஞ்சமேனும் கைக்கூலியினைத் தான் வாங்குகின்ற பிள்ளை யற்றுப் போவானின் சுற்றமும், வமிசமற்றுப் போவது உண்மையானால், நீயும் அற்று வீழ்வாயாக" என்பது பொருள். கைக் கூலியோடு பொய்சாட்சி சொல்வதையும் இச்செய்யுள் பழிக்கின்றது.
-------------

48. அழிவழக்குச் செய்தவன்!

ஒரு வழக்கு ஏற்படுகிறது. எவன் பக்கம் நியாயம் இருக் கிறதோ அவன் சமூகத்தில் மிகச் சாதாரணமானவன். ஆனால், அவனுக்கு எதிர்வழக்கு தொடர்ந்திருப்பவனோ பெரிதும் வலியவன்.

இந்தச் சமயத்தில், நியாயம் தீர்ப்பவன் முறையாக நடந்து கொள்ள முடியாமல் பல சூழ்நிலைகள் ஏற்பட்டு விடலாம். வலியவன் தன் பக்கமாக நியாயத்தை திருப்பிக் கொள்ள இடையறாது முயலுவதும் இயல்பு. அவனுடைய வலிமைக்கு ஆட்பட்டு, நியாயம் கோணாமல், முறையாகவே நீதி வழங்குவதுதான் அறமாகும்.

ஆனால், முறைமை' என்று ஒன்று ஏற்பட்டால், அதிலிருந்து தவறுவது என்பதும் சிலரின் இயல்பாகி விடுகிறது. வலியோனின் பக்கமே அவர்கள் சார்ந்து நிற்கின்றனர். வலியிழந்தோன் தம்மை எதுவும் செய்ய இயலாது என்ற நிலைமையும் வலியவனின் பகைமையால் விளையும் இடையூறுகளைக் கருதி எழுகின்ற அச்சமும், அவர்களை நீதியற்றவர்களாக்கி விடுகின்றன.

அழுது அழுது கண்ணீர் பெருக்குகின்றான் வலியற்றவன். அவன் சுற்றமும் அவனுடைய கண்ணீர்ப் பெருக்கில் கலந்து கொள்ளுகின்றது. அவர்கள் அழுது வடித்த கண்ணீர் வீண் போகாது. அது நீதி பிழைத்தவனின் குடியையே வேரறுத்துவிடும்.

நீதி பிழைப்பவர்க்கு எச்சரிக்கையாக இந்த அறநெறியை அன்று கூறினார் ஒளவையார். 'உண்மையானால் கிழியே நீயும் அற்று வீழ்க' என்றார். அதனை உண்மை என்று உறுதியுரைப்பது போல நான்காவது முடிச்சும் அற்று வீழ்ந்தது. அந்தப் பாடல் இது:

வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடி
வழக்கை யழிவழக்குச் செய்தோன் - வழக்கிழந்தோன்
சுற்றமும் தானும் தொடர்ந்தழுத கண்ணீரால்
எச்சமிறும் என்றால் இறு.

"வழக்கிலே உண்மை உடையவன் இருக்கவும், வல்வழக்கு ஆடுபவனோடு கூடிக்கொண்டு, அந்த வழக்கினைத் தோல்வி அடையுமாறு செய்தான் ஒருவன். வழக்கினை இழைத்தவனும், அவன் சுற்றமும் இடைவிடாது வடித்த கண்ணீரால் அப்படி அழிவழக்குச் செய்தவன் சந்ததியற்றுப்போவது உண்மை என்றால், நீயும் அற்று வீழ்வாயாக" என்பது இதன் பொருள்.
---------------

49. மன்று உழுது உண்பான்!

உழுது பயிரிட்டு, அதனால் வரும் விளைவினைக் கொண்டு உயிர் வாழ்வது சிறந்தது. ஆனால், இது மிகவும் உழைப்புச் செலுத்த வேண்டிய ஒரு தொழில் ஆகும். அதனால் உழைக்கச் சோம்பிய சிலர், இதனை மேற்கொள்ளாமல் போகின்றதும் உண்டு. அவர்கள் உழுது பயிரிட்டு அதனால் வருவதை உண்பதற்கு மாறாக, ஊர் மன்றங்களில் சோம்பிக் கிடந்து வீண்பொழுது போக்கி வருவார்கள். நாளடைவில், அவர்களுடைய சோம்பல் அவர்களுடைய வாழ்க்கையைக் குலைத்துவிடும். ஆகவே, பசியின் கொடுமை தலைவிரித்து ஆடத்தொடங்கும். கண்ணீரும் அழுகையும் கால்கொள்ளும்.

உழைப்பதற்குச் சோம்பிய குடும்பத் தலைவன் ஒருவனுடைய செயலால், அக் குடும்பத்தவர் அனைவருமே துயருக்கு உட்பட்டு நலிவர். அவர்கள் அழிவதும் நேரலாம். அவன் குடும்ப வாழ்வு பயனற்றுப் போகும். அது தொடர்ந்து நிலைபெறுதலும் இல்லையாகும்.

இந்த உண்மையைக் கூறிப் பாட்டொன்றைப் பாடினார் ஒளவையார். ஐந்தாவது முடிச்சும் அப்போது அற்று விழுந்தது. புலவர் அவை பெரிதும் ஆரவாரித்தது. தமிழின் ஆற்றலை உணர்ந்தனர் அனைவரும். ஒளவையாரையும் அவர்கள் மனம் விரும்பிப் போற்றினார்கள். அந்த இறுதிப் பாடல் இது.

இதனால், உழுதுண்டு வாழும் உழைப்பின் சிறப்பு கூறப்பெற்றது. உழைக்கச் சோம்பி நேரத்தைப் பாழடிப்பவன், தன் குடும்பத்துடன் முற்றவும் அழிந்து கெடுவான் என்பதும் உரைக்கப் பெற்றது.

பாண்டியனின் மகிழ்விற்கு ஓர் எல்லையில்லை. ஔவையாரை அகமலர்ந்து உபசரித்து இன்புற்றான் அவன்.

சென்றுழு துன்பதற்குச் செய்வ தரிதென்று
மன்றுழு துண்பான் மனைவாழ்க்கை - முன்றிலில்
துச்சில் இருந்து துடைத்தெழுகண் ணீராலேழ்
எச்சம் இறுமேல் இறு.

"வயலுக்குச் சென்று உழுது விளைவித்து உண்பதனைச் செய்வதற்கு அரிதானதென்று மயங்கி, மன்றிலே சோம்பிக் கிடந்து உண்டு வாழ்பவனின் வாழ்க்கை கெடும். அவன் மனைவி, வீட்டு முற்றத்தின் குடிலிலே இருந்து அழுகின்ற கண்ணீரைத் துடைக்கத் துடைக்க அது பெருகிக்கொண்டே இருக்கும். அவள் அழுகிற கண்ணீரால் அக் குடும்பம் தொடர்பற்று அழியுமேல், நீயும் அறுந்து வீழ்வாயாக" என்பது பொருள்.
-------------

50. நகைக்கப் பெற்றாள் !

ஓர் அரசகுமாரி, ஒருநாள் அழகியனாகிய இளைஞன் ஒருவனைச் சோலையிடத்தே கண்டு, கண்டதும் காதலும் கொண்டாள். தன் காதலை ஓர் ஓலை நறுக்கில் எழுதித் தன் தோழியிடம் கொடுத்து அனுப்பினாள். அன்றிரவு நகருக்குப் புறத்தேயுள்ள ஒரு மண்டபத்தில் தன்னைச் சந்திக்குமாறு அந்த இளைஞனை அவள் அந்த ஓலையில் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவனோ அறவே படிக்கத் தெரியாதவன். அந்த ஓலையைக் கொண்டு போய் ஒரு கயவனிடம் காட்டினான். அவன் இராச குமாரியைத் தானே அடையத் திட்டமிட்டான். "உனக்கு ஆபத்து; இன்று மாலைக்குள் ஊரைவிட்டு ஓடிப்போய்விட வேண்டும்" என்று எழுதியிருப்பதாக மிகக் கவலையோடு சொன்னான்.

அந்த முட்டாளும், அதனை உண்மையென்று நம்பினான். அப்போதே ஊரைவிட்டு ஓடிப் போய்விட்டான். இரவில், அரசகுமாரி மண்டபம் சென்றாள். காத்திருந்த கயவன் அவளைக் கெடுக்க முனைந்தான். அவள் உள்ளம் பதைபதைத்தாள். காதலனைக் காணாத ஏமாற்றமும் கயவனின் தீய எண்ணமும் அவளைத் தற்கொலைக்குத் தூண்டின. தன் உடைவாளால் குத்திக்கொண்டு செத்துப் போனாள்.

அவளுடைய ஆவி நெடுநாள் அந்த மண்டபத்தைச் சுற்றிக்கொண்டே இருந்தது. எவரும் அங்கு இரவில் தங்குவது கிடையாது. காலப்போக்கில் அந்த மண்டபமும் பாழ் மண்டபமாயிற்று. பேய் வாழும் மண்டபம்' என்ற பெயரையும் அது பெற்றது.

ஒளவையார், ஒருநாள் அந்தப் பக்கமாக வந்தார். பொழுதும் இருட்டிக் கொண்டிருந்தது. இரவில் அந்த மண்டபத்தில் தங்குவதற்கு முடிவு செய்தார். இரவில் வழக்கம்போலப் பேய் வந்தது. அவரைப் பயமுறுத்த முயன்றது.

அப்போது அதன் முற்பிறப்பினை உய்த்து அறிந்த அவர், இவ்வாறு அதற்கு அறிவுரையாகப் பாடுகிறார்.

"
பேயே! நீ காதலித்தவனோ படிக்கத் தெரியாதவன். படித்துக் காட்டினாலும் புரிந்து கொள்ள இயலாதவன். பிறர் நகைக்குமாறு, அப்படி ஒரு முட்டாளைப் பெற்றாளே ஒருத்தி, அவளைப் போய்த் தாக்கு. என்னிடம் வந்து ஏன் தொல்லை செய்கிறாய் என்ற முறையில் பாட்டு அமைந்தது.

வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

"இருமுறை எடுத்துச் சொல்லியும் வெண்பாவின் பொருளை அறியாமற் போனவனை, வெள்ளிய ஓலையில் கண்ணால் பார்த்துச் செய்தியை அறிந்து கொள்ளச் செய்யும் படியாகத் தன் கையால் எழுத அறிந்திராதவனை, பாவஞ் செய்த ஒரு பெண் தானும் பெற்றுவிட்டாளே? பிறர் கண்டு நகைக்கும்படி அப்படி அவனைப் பெற்றுவிட்டாளே! பேயே! அவளைப் போய்த் தாக்குக! தாக்குக! தாக்குக!" என்பது பொருள்.

இதனைக் கேட்ட பேய், தான் தொடர்ந்து செய்துவரும் முட்டாள் தனத்தை உணர்ந்து கொண்டது. எனினும், பேய்க்குணம் போகுமா? மீளவும் அது தன் குணத்தைக் காட்டத் தொடங்கியது.
-------------

51. ஈயாதானைத் தாக்கு!

பேய், ஔவையாரின் பாடலால் தான் ஏமாற்றம் அடைந்ததற்கான உண்மையைத் தெரிந்து கொண்டதும், அது தன் வினைக்கு நொந்து, கோவென்று அழத் தொடங்கியது.

"
பேயே! நல்லவர்களைத் தாக்குவது தவறு. ஈச்சங்கனி உண்பதற்கு ஏற்றதுதான். ஆனால், நெட்டிப்புல் சூழ்ந்த புதரிடையே இருந்தால், அதனால் எவருக்காவது பயனுண்டா ? சுற்றும் கருங்குளவிகள் சூழ்ந்து கொண்டிருந்தால் அதனை யாரேனும் நெருங்க முடியுமா?

"
அதுபோலப் பணத்தைச் சேர்த்தும் பசித்து வந்த விருந்தினருக்கு உதவாது சிலர் இவ்வுலகில் வாழுகின்றனர். அந்தக் கொடியவர்களைச் சென்று தாக்குவாயாக! அவர்களுடைய தாயத்தாராவது அவர்களுக்குப்பின் செல்வம் உடையவர்களாகிச் சிறப்பு அடைவார்கள் என்று கூறினார்.

கருங்குளவி சூரைத்தூற் றீச்சங் கனிபோல்
வருந்தினர்க்கொன் றீயாதான் வாழ்க்கை - அரும்பகலே
இச்சித் திருந்தபொருள் தாயத்தார் கொள்வரே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

"பேயே! கருங்குளவிகள் சூழ்ந்திருக்க, நெட்டிப்புல் புதரினிடையே விளங்கும் ஈச்சங்கனியைப்போல, வறுமைப் பட்டவர்களுக்கு யாதும் கொடாது, பயனற்ற செல்வத்தை சேமித்து வைத்தவனின் வாழ்க்கையில், அவன் இச்சித்திருந்த பொருளை, அந்தப் பகல் வேளையிலேயே அவன் மாண்டு போக, அவன் தாயத்தார் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளலும் நேரலாம்! அத்தகைய கஞ்சனைப் போய்த் தாக்குக! தாக்குக! தாக்குக!" என்பது பொருள்.
-----------

52. சோம்பரைத் தாக்குக!

உலகிலே வேண்டிய வளம் இருக்கிறது. வானம் மழையினைப் பெய்கிறது. எங்கும் விளைவுகள் பெருகின்றன. தான தர்மங்கள் நிகழ்கின்றன. வருந்துபவருக்கு இரங்கும் இரக்ககுணமும் மனிதரிடையே உண்டாகிறது.

இவை எல்லாம் நல்லன எனப்படுபவை. முயற்சியெடுத்துப் பயன்பெற்று இவற்றைத் துய்த்து இன்புறலாம். ஆனால், சிலர் மிகவும் சோம்பேறிகளாகவே இருக்கின்றனர். இயற்கை தரும் இந்தச் செல்வ நலங்களை அவர்கள் விரும்பாமல் இல்லை. ஆனால், களைப்புற்றோம் நலிந்தோம்' என்று ஏதாவது போக்குக் காட்டிக் கொண்டு, பிறரை உழைக்கச் செய்து, தாம் அதனாற் பயன்பெற்று வாழ்ந்து வருகின்றனர்; வாழவும் நினைக்கின்றனர்.

உழைப்பதற்குச் சோம்பித் திரியும் இந்த மனிதர்களைக் 'கயவர்கள்' என்றே ஆன்றோர் கருதுவார்கள். பிறரின் உழைப்பி னாலே உண்டு திரியும் இவர்களை, அவர்களின் உழைப்பினைத் திருடும் கொடியவராகவும் கொள்வார்கள்.

"
பேயே ! வானமும் உள்ளது ! மழையும் உள்ளது! மண்ணுலகில் தானமும் உள்ளது! இவை எல்லாம் உள்ளபோதும், சிலர் எய்த்தோம், இளைத்தோம்' என்று சொல்லித் தம்மை உணராமல் ஏமாந்து போய் இருக்கிறார்களே! அத்தகைய, வாழும் வகையறியாத மக்களைச் சென்று நீ தாக்குவாயாக!" என்று, மீண்டும் அப் பேய்க்குக் கூறினார் ஒளவையார்.

வானம் உளதால் மழையுளதால் மண்ணுலகில்
தானம் உளதால் தயையுளதால் - ஆனபொழுது
எய்த்தோம் இளைத்தோமென் றேமாந் திருப்பாரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

"வானமும் அழியாதே இருக்கின்றது. அவ் வானத்தினின்று மழையும் பெய்கிறது. மண்ணுலகில் தங்குவதற்கு இடமும் உளதாயிருக்கிறது. மக்களிடத்தே சிலரிடம் இரக்க குணமும் இருக்கிறது. இவை எல்லாம் இருக்கிறபொழுதும் இவற்றால் வாழ்வினைச் சீராக்க முனையாது, 'நாங்கள் களைத்துப் போயினோம்; இளைத்துப் போயினோம்' என்று சொல்லியபடி ஏமாந்து இருப்பவர்கள் சிலர். பேயே! நீ அத்தகையவரைச் சென்று தாக்குக! தாக்குக! தாக்குக!" என்பது பொருள்.
----------

53. இல்லறம் ஆற்றாதார்!

'இல்லறம் வெறுத்துவிட்டது' என்று கூறிக்கொண்டு, துறவற நெறியைப் பூணுகின்றனர் சிலர். அவர்களுள் உயர்ந்த கல்விமான்கள் சிலரும் விளங்குவர். அவரைக் கண்ட உலகம், துறவியரைப் பொதுவாகவே அறிவாளரெனப் போற்றிவரத் தொடங்கியது.

துறவு வாழ்வுக்கு இப்படிக் கிடைத்து வருகிற போற்றுதலைச் சுயநலக்காரர்கள் தம் சொந்த நலத்திற்கு உதவும் வஞ்சக வேடமறைப்பாகவும் மேற்கொள்வாராயினர். கபடத் துறவியர் எங்கணும் பெருகினர்.

துறவு வாழ்வினும், இல்லற நெறியினையே சிறப்பாகக் கருதவும் பலர் தொடங்கினர். மேலும், அதுவே பிறபிற நெறியாளர்க்கு உதவும் அமைப்பாகவும், உலகின் இனப் பெருக்கத்தை நிகழ்வித்துக் கொண்டுபோகும் அறமாகவும் விளங்கியது. இதனால் அதனைச் சிறப்புடையதாகக் கொள்வ துடன், அதனை வெறுத்தது போலப் பேசும் கபடர்களை இழித்துரைப்பதும் சில சான்றோர்க்கு இயல்பாயிற்று.

பேயினை, முன் பாடல்களால் தெளிவித்த ஒளவையார், இறுதியாக இந்தப் பாடலைச் சொல்லி, அதனை வாழ்த்துகின்றார்.

பெண்ணே! எண்ணாயிரத்தாண்டு நீருட் கிடந்தாலும் தக்கைப் பூண்டின் உள்ளே நீர் ஈரம் பற்றுவதில்லை. அதனைப் போலவே, இவ்வுலகிலும் பற்றின்றி வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ளுதல் வேண்டும். அதுவே சிறப்பாகும். அத்தகைய பெண்ணாக நீயும் இனி விளங்குவாயாக. பாசத்திற்கு ஆட்பட்டு இந்தப் பேய்நிலை அடைந்ததை என்றும் மறவாதே!

"
இனி எவரையாவது தாக்குவதற்கு நீ நினைத்தால், பொன் தொடியணிந்த தம் கற்பு மனைவியரைத் தழுவிக் கூடி இன்புற்று வாழாமல், பரத்தையர்பாற் கிடந்து உழல்பவர்களையும், மனைவியரை வெறுத்துக் காடு செல்லும் அறம் பிறழ்ந்தோ ரையுமே சென்று தாக்குவாயாக!" என்றார்.

இதனைக் கேட்டதும் பேய் வடிவு ஒழிந்து, அது மீண்டும் பெண்ணாயிற்று. அதனை வாழ்த்தி, மீண்டும் பிறந்து, தான் காதலித்தவனை மணந்து கூடி இன்புறுமாறு வாழ்த்தினார், ஒளவையார்.

எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணீரம் பற்றாக் கிடையேபோல் - பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற் சாராரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

"பெண் வடிவைக் கொண்டவளே! எண்ணாயிரம் ஆண்டுகள் நீரிற்குள் கிடந்தாலும் உள்ளே ஈரம் பற்றுதல் இல்லாதிருப்பது கிடைப்பூண்டு. அதனைப்போல, இவ்வுலகில் பற்றில்லாமல் வாழும் பெண்ணாக ஆவாயாகுக! இவ்வுலகிற் பிறந்தும் பொன்வளை பூணும் கற்பு மனைவியரின் இணைந்த முலைகளின் மேற் கிடந்து, அவரோடு கலந்து மகிழாதவர் சிலர் உள்ளனரே! அவரைப் போய் நீயும் தாக்குக! தாக்குக! தாக்குக!"
என்பது பொருள்.

ஒளவையாரால் அந்த மண்டபமும் பேய் ஒழிந்த நல்ல மண்டபமாயிற்று. பலருக்குப் பயன்படும் இடமும் ஆயிற்று. அந்தப் பெண்ணின் பேய் வடிவமும் ஒழிந்து, அவளும் மனத்தெளிவு பெற்றாள் என்பது கதை.
-----------

54. உறங்காது கண்!

ஒருசமயம், ஒளவையார் காட்டு வழியிலே போய்க் கொண்டிருந்தார். அவ்வேளை முருகப்பெருமான் அவரைச் சோதிக்க நினைத்தான். மாடு மேய்க்கும் சிறுவனைப்போல வடிவெடுத்தான். வழியிலிருந்த நாவல் மரத்தின் மீதமர்ந்து, அதன் பழங்களைச் சுவைத்துத் தின்று கொண்டிருந்தான்.

ஒளவையாரும், அம் மரத்தின் அடிப்புறமாக நிழலுக்காக வந்தார். 'பாட்டி' என்று அழைத்த இனிமையான மழலைக் குரலைக் கேட்டு மேலே நிமிர்ந்தார்.

முருகச் சிறுவன் மரத்தின் மேல் தோன்றினான். அவனைச் சாதாரணச் சிறுவனாகவே கருதிவிட்டார் ஒளவையார்.

"
பாட்டி! பாட்டி! பழம் வேண்டுமா உனக்கு?" என்றான் அவன். அவன் குரலில் அன்பு நெகிழ்ந்தது.

"
கொஞ்சம் போடு அப்பா!" என்றார் ஒளவையார்.

'
சுட்ட பழமா? சுடாத பழமா? உனக்கு எவை வேண்டும்?" என்று கேட்டான் சிறுவன்.

"
சுடுகிற பழமா? சுடாத பழமா? பழமும் சுடுமா? சரி! சரி! எனக்குச் சுடுகிற பழந்தான் கொஞ்சம் போடேன்" என்றார் ஒளவையார் சிரித்தபடி.

சிறுவன் நாவற்கிளையை நன்றாக உலுக்கினான். பொல பொலவெனக் கனிந்த பழங்கள் உதிர்ந்தன. ஒவ்வொன்றாகப் பொறுக்கி, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணை ஊதிப் போக்கிவிட்டுத் தம் வாயில் இட்டுக் கொண்டிருந்தார் ஒளவையார்.

"
பழம் நிரம்பச் சுடுகிறதா பாட்டி! நன்றாக ஊதி ஊதிச் சாப்பிடு!" என்று சொல்லிக் கலகலவென எள்ளற் சிரிப்புச் சிரித்தான் சிறுவன்.

ஒளவையார், ஒரு கணம் திகைத்தார். சிறுவனின் குறும்பான புத்திநுட்பத்திற்குத் தாம் தோற்றதை நினைத்தார். தம் தலையை மேலே நிமிர்த்தினார். "நான் உனக்குத் தோற்றேன் தம்பி! நீ நன்றாக வாழ்க! என்று வாழ்த்தினார்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்
ஈரிரவும் துஞ்சாதென் கண்.

"உறுதி மிகுந்த கருங்காலிக் கட்டையைப் பிளப்பதற்குப் பின்னிடாத கோடாரியானது, எளிதாக ஒடியும் வாழைத் தண்டினைப் பிளப்பதற்கு முடியாமல் தோற்றுப் பின்னடையும். அதனைப் போலப் பெரிய இந்தக் காட்டிடத்தே, எருமை மாடு மேய்க்கின்ற இச் சிறுவனுக்கு நான் தோற்றுவிட்டேனே! என் கண்கள், இனி, இரண்டிரவுகளுக்கு உறங்க மாட்டாவே" என்பது பாட்டின் பொருள்.

தம்முடைய அந்த அறிவுத் தோல்வியை ஒளவையாரால் எளிதாக மறக்க முடியவில்லை. அந்த வேதனை அனுபவத்தை அவராகவே உரைத்தது இச் செய்யுள்.

அப்போது, அங்கே மயில்வாகனன் மந்தகாச நகையுடன் தோன்றினான். அவனைப் பணிந்து போற்றினார் ஒளவையார். அவனும் மகிழ்ந்து, அவரை வாழ்த்தி நிற்கின்றான்.
----------

55. கொடியது எது!

முருகன் ஞான பண்டிதன், தமிழ் தந்த தயாபரன்! அவன், தமிழ் மூதாட்டியான ஒளவையாரைத் தனக்குச் சில உண்மைகளை விளக்கிக் கூறுமாறு கேட்கிறான். அவன் கேள்விகளுள் முதலது, "உலகிற் கொடியது எது?" என்பது.

"
வாழ விரும்புகிறவன் மனிதன். அவன் வாழ்விற்குத் தேவையான வளம் எல்லாம் அவனிடத்து நிரம்பியிருக்க வேண்டும். அவன்பால் ஏதுமற்ற வறுமை என்பது நிலவுமானால், அது மிகவும் கொடுமையானது.

வறுமை மிகக் கொடிது! அதனிலும், வாழ்க்கை இன்பங்களை வெறுத்த முதுமையிலாவது, அவற்றை அறியாத பிள்ளை மையிலாவது ஒருவனை அது பற்றினால், அதனை அவன் ஒருவாறு பொறுக்கலாம். ஆனால், அனுபவத்திற்கு உரித்தான கட்டிளமைக் காலத்திலே வறுமை வந்தால், அது மிகவும் கொடியதாகும்.

எந்த மருந்தாலும் தீர்க்க முடியாத தீராத கொடிய நோயிலே கிடந்த ஒருவன், காலமெல்லாம் துடித்துக் கொண்டிருக்கின்றான். அவன் நிலைமை இளமையில் படும் வறுமையைவிடக் கொடுமையானது.

ஆற்ற முடியாத கொடுநோய்தான் மிகமிகக் கொடியது என்றால், அதனிலும் கொடியது, அன்பற்ற ஒருத்தியுடன் ஒருவன் கூடி வாழ்கின்ற துயரமான மனைவாழ்க்கை.

அத்தகையவள் கையால் உணவிட, ஒருவன் அதனையும் உண்டு தானும் உயிர் வாழ்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவனுடைய ஆண்மையற்ற அந்தத் தன்மை இருக்கிறதே, அதுதான் உலகத்தில் கொடியதாகும் !"

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிதே இளமையில் வறுமை
அதனினுங் கொடிதே ஆற்றொணாக் கொடுநோய்
அதனினுங் கொடிதே அன்பில்லாப் பெண்டிர்
அதனினுங் கொடிதே
இன்புற அவள் கையில் உண்பது தானே!

"நெடிதான வெம்மையுடைய வேலினை ஏந்திய பெருமானே! கொடியது யாதென நீ கேட்பாயானால், ஏழ்மையே மிகவும் கொடியதாகும். அதனினும் இளமைப் பருவத்தே நிலவுகிற வறுமை மிகவும் கொடியது. அதனினும் போக்குதற்கு முடியாத கொடிய நோய், கொடுமை உடைய தாகும். அதனினும் அன்பில்லாத ஒருத்தியை மனைவியாகக் கொண்டிருப்பது கொடுமையாகும். அதனினும், அவள் கையால் இடப்பட்ட உணவினை உண்பது கொடுமை உடையதாகும்" என்பது பொருள்.

இதனால், உலக வாழ்வில் மிகுதியான கொடுமை என்பது, அன்பற்ற ஒருத்தியை மணந்து அவளுடன் வாழ்ந்து படும் அல்லற்பட்ட அவல வாழ்வே என்று அறிதல் வேண்டும். மக்களை நன்கு உணர்ந்த ஒளவையாரின் வாக்கு இது. பெண்மைக்கு உயர்வு தந்த பெருமாட்டி, பெண்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையும் இதுவாகும். இதனைப் பெண்கள் அவசியம் உணர்தல் வேண்டும். ஆண்களும் நினைவிலே கொண்டு போற்ற வேண்டும்.
-------------

56. இனியது எது?

கொடுமையைப் பற்றி ஒளவையார் கூறிய விளக்கத்தைக் கேட்டான் குமரன். பின்னர் " இனியது எது?" என்று அவரை வினவினான். மிகக் கொடியது என்பது அன்பற்ற மனைவி இடுகின்ற உணவினையும் விருப்பத்துடன் உண்டு உயிர் வாழ்கின்ற ஆடவனின் நிலைமைதான்' என்பதனை, முருகனும் ஏற்றுக் கொண்டான்.

'
இனியது எது?' என்பதனைப் பற்றியும் ஒளவையார் முருகப் பெருமான் உவக்குமாறு தெளிவுபடுத்துகின்றார்.

'
இன்பம்' என்பது அவரவர் மனத்தின் அனுபவமே ஆகும். ஒருவன் ஒன்றை இன்பமாக நினைக்கலாம். அதனை இன்னொருவன் துன்பமாகக் கருதலாம். இன்ப துன்பங்கள் ஆகிய இரண்டும் கலந்து வருவதே உலக வாழ்க்கை. இவற்றைத் தருவன புலனிச்சைகள். அதனால், புலன்களை ஒடுக்கித் தனிமையாக இருந்து மனத்தைச் செவ்விதான நெறியில் செலுத்தினால், அது இன்பமானது எனலாம். இதனை 'ஏகாந்த நிலை' என்றும் சொல்வார்கள். ஆகவே, ஏகாந்தம் இனிது' என்று சொல்லல் ஒருவாறு பொருந்தும்.

அந்த ஏகாந்த நிலையில், ஆதியாகிய பரம்பொருளைத் தொழுதல் அதனினும் இனிதாகும்; அஃது ஒருவனின் உயிர்க்கு இன்ப நலத்தை மிகுவிப்பது ஆகும்.

ஆதியே தூய அறிவினன். அதனால், அறிவுடையாரை ஆதிபரம்பொருளின் அம்சம் பெற்றவர் எனலாம். காண முடியாத ஆதியைத் தொழுதலினும், அவனருள் பெற்றவரும், கண்ணாற் காணக் கூடியவருமான அறிவினரைத் தொடர்பு பெற்றவராகச் சேர்ந்து வாழ்தல் மிக இனிதாகும்.

அறிவினரோடு சேர்ந்து வாழ்ந்தாலும், நிலையற்ற மனம் வேறுவேறு சிந்தனைகளிற் செல்லலாம். அது சிறப்பு ஆகாது. அதனால், அறிவினரைச் சேர்ந்து வாழ்வதினும், அறிவுள்ளவரைக் கனவிலும் நனவிலும் வழிகாட்டுவோராகக் கொண்டு வாழ்வது மிகவும் இனிமையுடையது. 'தூய அறிவினைப் பெறுவதே மனிதனுக்கு இன்பம்' என்ற கருத்தினை ஒளவையார் எடுத்துச் சொன்னார். சொன்னதும், அறிவே வடிவான ஆறுமுகன் மிகவும் மகிழ்ந்தான். அந்தச் செய்யுள் இது.

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனியது இனியது ஏகாந்தம் இனியது
அதனினும் இனியது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனியது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனியது அறிவுள் ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே.

"ஒப்பற்ற நெடிய வேற்படையினை உடையோனே! ஏகாந்த நிட்டையிலே இருப்பது மிகவும் இனிதானது. அதனினும் ஆதியைத் தொழுதல் இனிதானது. அதனினும் அறிவுடையவ ரோடு சேர்ந்திருத்தல் இனிதானது. அதனினும் அறிவுடை யவரைக் கனவினும் நனவினும் காட்சியிற் கொண்டிருப்பது இனிதானதாகும்" என்பது செய்யுளின் பொருள்.
-----------

57. பெரியது எது?

"உலகிற் பெரியது எது?" இது முருகனின் அடுத்த கேள்வி. இதற்கு மிகவும் நுட்பமாக விளக்கம் கூறுகிறார் ஒளவையார்.

"
நாம் கண்ணாற் காணுகின்ற இந்தப் புவனம் மிகவும் பெரியது. இதனைப் படைத்தவனோ நான்முகன். அதனால், அவன் இதற்கும் பெரியவன் ஆகிறான்.

அந்த நான்முகனோ கரிய திருமாலின் உந்தியிடத்திலே பிறந்தவன். திருமாலோ அலைகடலிலே துயில்பவன். இதனால் நான்முகனிலும் திருமால் பெரியவன்; அவனினும் அலைகடல் பெரிதாக எண்ணத்தக்கது.

அலைகடலோ, ஒரு காலத்தில் அகத்தியரின் கையிலே அடங்கியதாயிற்று! அகத்தியரோ கலயத்தில் பிறந்தவர் !

கலயமோ புவியிடத்துச் சிறிதளவான மண்! புவியோ ஆதிசேடனுக்கு ஒரு தலைச்சுமை அளவே.

ஆதிசேடனோ, உமையவளின் ஒரு சிறு விரலிடத்தே மோதிரமாக இருப்பவன். உமையோ, இறைவனின் ஒரு பாதியுள் அடங்கி விடுபவள். இதனால், இறைவனே அனைத்தினும் பெரியவன் ஆகின்றான்.

பெரியவனான அப் பெருமான், அன்பர்களின் உள்ளத்தே நிலவி வருபவன். இதனால், எல்லாம் வல்ல சிவபெருமானைத் தம் உள்ளத்தில் கொண்டவரான தொண்டர்கள் தாம் உலகில் மிகவும் பெரியவர்கள். அவர்களின் பெருமை சொல்லிக்காட்டவும் முடியாத அளவிற்கு மிகமிகப் பெரியது ஆகும்என்றார்.

பெரியது. கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரியது பெரியது புவனம் பெரியது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவன் பாகத்து ஒடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!

"வெம்மை பரவிய வேலோனே! உலகமோ மிகவும் பெரியது. அது நான்முகனால் படைக்கப்பெற்றது. நான்முகனோ திருமாலின் உந்தியிற் பிறந்தவன். திருமாலோ பாற்கடலில் பள்ளி கொள்பவன். பாற்கடல் குறுமுனியின் உள்ளங்கையில் அடங்கியது. குறுமுனியோ கலசத்தில் பிறந்தவன். கலசமோ புவியிலுள்ள சிறிதளவு மண்ணினால் உருவானது. புவியோ ஆயிரம் தலைகளுடைய ஆதிசேடனுக்கு ஒரு தலைச்சுமையாக மட்டுமே இருப்பது. அவனோ உமையவள் சிறுவிரலின் மோதிரமாக விளங்குபவன். உமையோ இறைவரின் ஒரு பாகத்தே ஒடுங்கியிருப்பவள். இறைவரோ தொண்டர்களின் உள்ளத்தே அடங்கியிருப்பவர். அதனால், தொண்டர்களின் பெருமைதான் சொல்லிலடங்காத அளவுக்குப் பெருமை உடையதாகும்" என்பது பொருள்.
------------

58. அரியது எது?

சிலவற்றை அரியதென்று கருதுகின்றோம். அரிய அவற்றை முயன்று அடைவதனைப் பெரிதான பேறாகவும் கருதுகின்றோம். அந்த முயற்சியிலே தளராதும் தயங்காதும் ஈடுபடுகின்றோம். இவ்வாறு அரியதெனக் கருதும் பொருள்களும், குணங்களும் அவற்றைக் கொள்பவரின் கருத்துக்களுக்கு ஏற்ப மாறுபடுவதும், வேறுபடுவதும் உண்டு.

முருகப் பிரானாகிய வேலன், அடுத்தபடியாக ஒளவையாரை வினவியது, 'அரியது எது?' என்பதாகும். அதற்கு விடை கூறுகிறவர், சிறந்த சில உண்மைகளையும் விளக்குகின்றார்.

ஒன்று முதலாகிய அறிவுடன் விளங்கி வருகிற கோடானு கோடி உயிர் வகைகளுள், மானுடராகப் பிறவி எடுத்திருக்கும் அந்தப் பாக்கியம் ஒன்றே, நாம் அரியதாகக் கொள்ள வேண்டியது.

மானிடப் பிறப்பினும் ஊமை, கூன், குருடு, அலி என்றவாறு குறைப் பிறவிகளாகப் பிறந்துவிட்டால், அது பெரிய வேதனையாகப் போய்விடும். அப்படி இல்லாமல், நல்ல உடல் வளத்துடன் பிறப்பது அதனினும் அரிதாகும்.

நல்லுடல் அமைந்தாலும், மனிதனை மனிதனாக உயர்த்துவதும், நன்மை தீமைகளை உணர்ந்து, உயர்வுக் கானவற்றில் மனிதனைச் செலுத்துவதும் ஆகிய, ஞானமும் கல்வியும் முதன்மையானவை என்று உணர்தல் வேண்டும். உணர்ந்து, அவற்றில் விருப்புடன் ஈடுபடுதல், அதனினும் அரிதாகும்.

ஞானமும் கல்வியும் அடைய விரும்பினால் மட்டும் போதாது, அவை கைவரப்பெறினும், 'உயிர்கட்கு உதவ வேண்டும்' என்னும் தானம் செய்கிற பண்பும், தன்னிச்சைகளை ஒடுக்க வேண்டும் என்னும் தவம் பேணுகிற உறுதியும் ஒருவனிடம் படிவது மிகவும் அரிதாகும்.

இவையும் ஒருவனிடம் படிந்து விடுமானால், அவனே பெறற்கு அரிதான பேற்றினைப் பெற்றவன். அவனுக்கு, வானவர் நாடு வழி திறந்திருக்கும். அவன், பிறவி நீத்த பெற்றியனும் ஆவான். இந்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்தது ஒளவையாரின் செய்யுள்.

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
மக்கள் யாக்கையிற் பிறத்தலும் அரிதே
மக்கள் யாக்கையிற் பிறந்த காலையும்
மூங்கையும் செவிடும் கூனும் குருடும்
பேடும் நீங்கிப் பிறத்தலும் அரிதே
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நன்குறல் அரிதே
ஞானமும் கல்வியும் நன்குறும் ஆயினும்
தானமும் தவமும் தரித்தலும் அரிதே
தானமும் தவமும் தரித்தார்க் கல்லது
வானவர் நாடு வழிதிற வாதே.

"குருதிக் கறை தோய்ந்த வடிக்கப்பெற்ற வேலினை உடையவனே! மக்கள் யாக்கையில் வந்து பிறவி எடுத்தல் அரியதாகும். அப்படிப் பிறவி எடுத்தபோதும், ஊமையும், செவிடும், கூனும், குருடும், அலியுமாகிய குறைகள் நீங்கிப் பிறத்தல் அரிதாகும்.

அப்படியே குற்றமற்றுப் பிறந்தாலும், ஞானமும் கல்வியும் நன்றாக வந்தடைதல் அரிதாகும். அவையும் நன்றாக வந்தடைந்தாலும், தானமும் தவமும் மேற்கொள்ளல் அரிதாகும். அவற்றை மேற்கொண்டவர்க்கு அல்லாமற் பிறர்க்குச் சுவர்க்கம் வழி திறவாது போய்விடும். எனவே, தானமும் தவமும் மேற்கொள்ளலே அரிய பேறு ஆகும்" என்பது பொருள்.
------------

59. முடியாத செயல்கள்!

சிலர், தாமே சகலத்தினும் வல்லவர்' என்று செருக்குற்றுத் திரிகின்றனர். இது மிகமிகத் தவறான மனப்போக்கு. செருக்கு ஒருவனின் அறிவைக் கெடுக்கும். நன்மை தீமைகளை உணருகின்ற தன்மையைப் போக்கிவிடும். முடிவில், செருக்குடன் விளங்கினான் சீரழிந்து போயினான்' என்ற நிலைமையையும் தந்துவிடும்.

இப்படிப்பட்ட செருக்கினை ஒவ்வொருவரும் முயன்று தவிர்க்க வேண்டும்; இதனை வற்புறுத்த நினைக்கிறார் ஒளவையார். மனித சக்தியாற் செய்ய முடியாத சிலவற்றைக் கூறி, இதனை விளக்குகிறார். முடிவில் 'மூர்க்கனைச் சீராக்குவது முடியாத்து' என்ற உலகத்து உண்மையினையும் எடுத்துக் கூறுகின்றார்.

ஆலமரம் ஒருவகை மரம். அதனைப் பலா மரமாக ஆக்க முடியுமா? அது இயலாத செயல்.

நாய் வால் வளைந்து இருக்கும். அதனை நிமிர்த்து விடுவது முடிகிற காரியமோ? முடியாத செயல்தான்.

கிளியைப் பேச வைக்கலாம். காக்கையைப் பிடித்துப் பழக்கிப் பேசச் செய்துவிட முடியுமோ? முடியவே முடியாது.

இவையெல்லாம், மனிதராகிய நம்மால், நம் சக்தியால் செய்வதற்கு முடியாதவை. இதுபோலவே, 'மூர்க்கனை நல்லவனாக மாற்றி விடலாம்' என்பதும் நம்மால் நம் சக்தியால் முடியாதது ஆகும்.

'
மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' என்பார்கள். மூர்க்கன், தான் நினைத்ததே சாதிப்பவன். எப்போதும் திருந்த மாட்டான். அவனை அழிப்பதுதான் செய்யத்தகுந்தது. இந்த நீதியை வலியுறுத்துகின்ற செய்யுள் இது.

ஒட்டக்கூத்தரின் போக்கைக் கண்டித்துக் கூறியது இது எனவும் சிலர் உரைப்பார்கள். பொதுவாக மூர்க்கரைப் பழித்தது' இது என்று சொல்லுவதே சிறப்பு.

ஆலைப் பலாவாக்க லாமோ அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்க்க வசமாமோ - நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச் சீராக்க லாமோ?

"ஆலமரத்தை பலா மரமாக ஆக்குவதற்கு இயலுமோ? நாயின் வாலை நிமிர்த்து விடுவதற்கு முடியுமோ? கருநிறக் காக்கையைப் பேசுவிக்கக் கூடுமோ? கருணையில்லாத மூர்க்கனைச் சீர்படுத்த முயன்றால், அதுவும் இயல்வதாகுமோ? இயலவே இயலாது" என்பது இதன் பொருள்.
---------------

60. சோமன் பெருமை!

அந்த நாளிலே, 'சோமன்' என்னும் பெயருடன் ஒரு வள்ளல் இருந்தான். அவன் கருணை உள்ளம் உடையவன். இரவலர்க்கு வழங்கி வழங்கி ஏற்றம் பெற்றுத் திகழ்ந்தவன்.

இரவலரின் வறுமையைப் போக்குவதற்கு உரிய மனப்பண்பு இல்லாத, செல்வச் செழுமையுடைய கொடியவர்கள் அன்றும் சிலர் இருந்தனர். அவர்களுடைய செல்வ வளத்தினைக் கண்டும், போலிப் புகழைக் கேட்டும், அவர்களை நாடிச்சென்று பலர் ஏமாந்து மனவேதனையுற்று வருந்தினர். அவர்களுடைய இழிசெயலால் சோமனின் கொடைப் பெருமை மேலும் உயர்வு உடையதாயிற்று.

நிழல் அருமை உடையது. அந்த அருமையினை அறிய வேண்டுமானால், சற்றுக் கொடிய வெய்யிலிலே போய் நின்றால் தான், நன்கு உணர முடியும்.

கடுமையான தீவினையினாலே ஒருவன் வாட்டமுற்று நலிகின்ற பொழுதுதான், அவனுக்கு ஈசனின் திருவடி நிழலிலே நினைவு செல்லும் அவன்தான் ஈசன் கழல்களைச் சேருவதனால் உண்டாகும் பேரின்பப் பயன்களைப் பற்றி நன்கு அறிய முடியும்.

பழகு தமிழ்ச் சொற்கள், அருமையாக அமைந்துள்ளதனைக் காண விரும்பினால், நாலடியாரும் திருக்குறளுமே அதற்கு உதவுவன.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது பொருந்தும். ஒன்றுக்கொன்று எதிரான தன்மை. இவை போலவே, சோமனின் கொடை அருமையானது என்று சொன்னால் மட்டும் போதாது. அதனைச் சரியாக அறிந்து உணர வேண்டுமானால், கீழ்-மக்களிடத்தே சென்று பழகினால் தான், அதனைச் செவ்விதாக அறிய முடியும்.

வெயிலுக்கு நிழல் போலவும், வெவ்வினைக்கு ஈசன் திருவடி நிழல் போலவும், சொல்லருமைக்கு நாலிரண்டு போலவும், கொடைக்குச் சிறந்தோனாக விளங்கியவன் சோமன் என்கிறது செய்யுள்.

பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என்றால் நாலும் இரண்டும் சொல்லருமைக்கு எதிரானதா? இல்லையே! இங்கே நேராகவே உரைப்பதாகக் கொள்ள வேண்டும்.

நிழல் அருமை வெய்யலில் நின்றறிமின் ஈசன்
கழல் அருமை வெவ்வினையின் காண்மின் - பழகு தமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை
புல்லரிடத் தேயறிமின் போய்

"நிழலின் அருமையினை வெய்யலிலே நின்றபோது எண்ணிக் காணுங்கள். கொடிய தீவினையிற் சிக்கி உழலுங் காலத்தே, இறைவனின் திருவடிகள் தரும் அரிய பயனைக் காணுங்கள். பயின்று வரும் தமிழ்ச் சொல்லின் அருமையினை நாலடியினும் திருக்குறளினும் காணுங்கள். சோமனின் கொடை அருமையைக் கீழோரான செல்வரிடத்தே போவதனாலே அறிந்து கொள்ளுங்கள்" என்பது பொருள்.
--------------

61. வெண்பா அரிது!

கவிஞர்கள், சொற்களை நயமுற யாத்துப் பலவகையான செய்யுள்களைச் செய்து தமிழன்னையைச் சிறப்பிக்கின்றனர். என்றாலும், வெண்பா இயற்றுதல் இவற்றுள் மிகவும் கடினமான ஒரு முயற்சியாகும்.

அந்நாளில் புகழேந்தியார் வெண்பாப் பாடுவதில் சிறப்புடன் விளங்கினார். அவர், கூத்தரால் பற்பல கொடுமைகளுக்கும் ஆளானவர். அவருடைய புலமைச் சிறப்பைப் போற்றும் வகையினால், இச் செய்யுளை ஒளவையார் இயற்றியதாகவும் கருதலாம்.

'
பிள்ளைத்தமிழ்' என்ற பாவகை மிகவும் சுவையானது. அதிற்பாட வேண்டிய பருவங்களுள், அம்புலிப் பருவத்தைப் பாடுதல்' என்பது அரிதான கவிச் செயலாகும்.

'
உலா' என்னும் பிரபந்த வகையினைச் செய்யும் போது, பெதும்பைப் பருவத்தினைப் பாடுதல் மிகவும் முயற்சி உடையதாக விளங்கும். அது நன்றாக அமைவதைப் பொறுத்தே அந்த உலாவும் மதிக்கப்பெறும்.

நினைத்ததை உடனே பாட வல்லவர்களை ஆசு கவிகள் என்பார்கள். இவர்கள் சிறந்த சொல்லாட்சி உடையவராகவும் பலவகை யாப்புகளையும் நொடிக்குள் பாடும் திறன் படைத்தோராகவும் இருப்பார்கள். இவர்கட்கும் வண்ணப்பாட்டுப் பாடுதல் மிகக் கடினமான செயலாக விளங்கும்.

வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் இத் துறையில் பிற்காலத்தில் உயர்ந்து விளங்கியவர்கள்.

இந்த மூவகைப் பாடல் பாடுவோரேயன்றிப் பிறவகைச் செய்யுட்களைச் செய்பவரும் உள்ளனர். இவ்வாறு விளங்கும் புலவர்கள் அனைவருக்குமே வெண்பாப் பாடுதல் மிகவும் முயற்சியுடைய செயலாகும்.

புலவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகைத் தனித்த திறமை இருக்கும். அதனை மதித்து அவரைப் போற்ற வேண்டுமே அல்லாமல், அவரை அது தெரியுமோ? இது தெரியுமோ?' எனக் கேட்டுப் புண்படுத்த முயலுதல் கூடாது. இதனை வற்புறுத்துவது இந்தச் செய்யுள்.

காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலி புலியாம்
பேசும் உலாவிற் பெதும்பைபுலி - ஆசு
வலவர்க்கும் வண்ணம் புலியாம் மற்றெல்லாப்
புலவர்க்கும் வெண்பாப் புலி.

"உலகத்தில் பிள்ளைத்தமிழ் நூல் செய்வோர்க்கு அம்புலிப் பருவம் பாடுவது அரிய முயற்சியாயிருக்கும். சிறப்பாகச் சொல்லப்படும் உலாவிலே, பெதும்பைப் பருவத்தை பாடுவது அரிய முயற்சியாயிருக்கும். எண்ணியவுடன் பாடுதலில் வல்லவரான ஆசுகவிகட்கு வண்ணப்பாட்டுப் பாடுதல் அரிய முயற்சியாக விளங்கும். ஆனால், புலவர் அனைவர்க்கும் வெண்பாப் பாடுதல் மிகவும் அரிய முயற்சியாக இருக்கும்" என்பது பொருள். 'புலி' என்றது வல்லமையைக் குறித்துக் கூறியது ஆகும்.
--------------

62. நான்கு!

உலக வாழ்வில் மனிதரின் செயல் முயற்சிகள் பலபடியாக அமைகின்றன. இவற்றையெல்லாம் அறம் பொருள் இன்பம் வீடு' என்னும் நான்கினுள் ஆன்றோர் அடக்கிக் காண்பார்கள்.

நான்கான இவற்றை விளக்கி உரைக்க எழுந்த அறநூல்கள் கணக்கில் அடங்கா. இவை நான்கின் தத்துவப் பொருளை ஒரே செய்யுளில் அடக்கி, அனைவரும் எளிதாகப் புரிந்து மேற்கொள்ளும்படியாக உதவுகின்றார் ஒளவையார்.

நம்மிடம் நிரம்பப் பொருள் இருக்கிறது. அதனை நாடி வந்து இரக்கின்றனர் இரவலர் சிலர். அப் பொருளை நாமே அனுபவிக்கலாமே என்று கருதி முடக்கி வைப்பது தர்மமா? செல்வம் நமதன்று; உலகிலே பெறும் இது, உலகினராகிய அனைவருக்குமே உரியது என்பதனை உணர்ந்து, வந்தவர்கட்கு மனமுவந்து ஈதல் வேண்டும். இவ்வாறு மனமுவந்து ஈதலே 'அறம்' எனப்படுவதாம்.

பொருள்களைத் தேடுவது கடமை. பொருளில்லாதவர்க்கு இவ்வுலக வாழ்வும் சிறப்பாக வாயாதன்றோ! இப் பொருளைத் தேடும் முறையில் தான் நீதி குறுக்கிடுகிறது.

தீய வழிகளால் சிலர் பொருளைச் சேர்ப்பார்கள். 'நாய் விற்ற காசு குரைக்குமோ?' என்று அதற்கு நியாயமும் பேசுவார்கள். இவர்கள் அறியாமையாளர்கள். பொருள் என்பது தீவினைகளைக் கைவிட்டுச் சம்பாதிப்பதுதான்.

பிறவெல்லாம் பொருளாக மாட்டா. 'தீவினை' என்பது இன்று வியாபார தந்திரம்' என்று புனைவுக்குள் பதுங்கி உள்ளது. கலப்படம் ' 'ஏமாற்று' கைக்கூலி ' ஆகியவற்றையும் குறிப்பது.

அன்பினாலே இணைந்த இருவரும் தம் மனத்தாலும் ஒன்றுபட்டவர்களாக, ஒருவருக்கொருவர் ஆதரவாகக் கூடி இன்புற்று வாழ்வதே, இல்லற இன்பம்' ஆகும்.

'
அறம், பொருள், இன்பம்' ஆகிய இம் மூன்றையும் கைவிட்டு விட்டுப் பரமனையே நினைத்திருக்கும் அந்த ஒரு நிலைப்பட்ட மனத்தோடும் கூடியதான தியானமே, வீடு அடைதற்குரிய வழியாகும்.

இதனால் வீடு' அடைய விரும்புகிறவர்கள் அறம் பொருள் இன்பங்களை அனுபவித்து முடிவிலே அவற்றிலே கொள்ளும் பற்றைத் துறந்துவிடல் வேண்டும் என்பது தெளிவாகும்.

ஈதலறம் தீவினைவிட் டீட்டல் பொருள் எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே யின்பம் பரனைநினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

"அறம் என்பது உவப்போடு பிறருக்கு ஈதல். பொருள் என்பது தீவினைகளை நீக்கிவிட்டுத் தன் முயற்சிகளால் தேடிக் கொள்ளுதல். காதல் கொண்ட இருவர் எந் நாளும் தம்முடைய கருத்துக்களிலே இணைந்தவராக ஆதரவுபட்ட நிலையில்
வாழ்ந்து வருதலே இன்பம். பரம்பொருளை நினைவிற்கொண்டு அறம் பொருள் இன்பமாகிய இவற்றின் பால் கொள்ளும் பற்றினை விட்டுவிடுவதே வீடு ஆகும். அதுவே நிலையான பேரின்பம் தருவதும் ஆகும்.
--------------

63. எவையும் போம்!

சின்னஞ்சிறு மகவாக உலகிலே பிறக்கின்றோம். தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்து பெரியவர்களும் ஆகின்றோம். அந்தத் தாயின் அன்பு அளவிடற்கும் அரியது. தன் குழந்தையைப் பேணி வளர்ப்பதில் அவளுடைய கருத்து முழுவதும் சென்றிருக்கும்.

உணவு உடலுக்கு ஆக்கந்தருவது, அறுசுவையோடும் கூடிய உணவில், எது உடலுக்கு நலந்தரும் என்றறிந்து கொள்வது நல்லுடலுடன் வாழ்வதற்கு உதவும். தாயோடு இந்த உணவும், இதனால் பெறுகின்ற பயனும் இல்லாமற் போய்விடும்.

உடலை வளர்க்கும் தாயன்பு என்றால், உள்ளத்தை வளர்க்கும் கருவியான கல்வி நலத்தைத் தருவது தந்தையின் செயலாக இருக்கிறது. தந்தையின் பராமரிப்பு இல்லாமற் போனால் ; கல்வி பெறும் வாய்ப்பும் அறவே போய்விடும்.

'
செல்வம்' என்று போற்றத்தக்கது மக்கட்பேறு ஒன்றுதான். பிற செல்வங்கள் நிலையாமை உடையன. மக்கட்பேறோ தொடர்ந்து நிலைபெற்று நிலையான சிறப்பைத் தருவது. அதனை இழந்தால், செல்வ நலனை இழந்ததாகவே கருதுதல் வேண்டும்.

'
சமூகம்' உற்றார் உறவினருடன் கூடிக் கலந்து வாழ்வது. கூடிக்கலந்த வாழ்வு இல்லையானால், வாழ்வில் சுவை என்பதும் இல்லாமல் போகும். இதனால் மாயமான வாழ்வு நலனும் உற்றாரை இழந்தபோது ஒழிந்து போய்விடும்.

உற்றவிடத்து உறுதுணையாக உதவுவது 'தோள்வலி' எனப்படும். உடன்பிறந்த சகோதரர் இருக்கும் வரைதான் ஒருவனுக்கு தோள்வலி உளதாயிருக்கும். சகோதரர் இல்லாது போனால், தோள்வலியும் இல்லாமற் போகும்.

ஒருவனுடைய வாழ்வின் பிரியாத் துணையாக, இல்லத்து அரசியாக, இன்பத்து நாயகியாக விளங்குபவள் அவனுடைய மனைவியாகும். அவள் அப்படி இல்லையானால், எத்தகைய இன்ப நலனும் அவன் வாழ்விலே இல்லாது போய்விடும். இந்த உண்மைகளை எல்லாம் கூறுகிற செய்யுள் இதுவாகும்.

தாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான் பெற்ற செல்வம்போம் - மாயவாழ்வு
உற்றா ருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்.

"அறுசுவையோடு உண்கின்ற இன்பம், பெற்ற தாயின் மறைவோடு போய்விடும். தந்தையின் பிரிவோடு கல்வி கற்பதற் கான வசதிகள் இல்லாது போய்விடும். பெற்ற குழந்தையின் மறைவோடு, ஒருவன் பெற்ற செல்வம் என்பதும் இல்லாதே போய்விடும். மாயமான வாழ்வு நலம் என்பதெல்லாம் உறவினரைப் பிரிந்ததும் போய்விடும். உடன் பிறந்தவர் இல்லாதபோது பக்கத்துணையான வலிமை போய்விடும். பொற்றாலி அணிந்த மனையாளின் மறைவோடு எல்லா நலனுமே ஒருவனுக்கு இல்லாமற் போய்விடும்" என்பது பொருள்.

'
பொற்றாலியோடு எவையும் போம்' என்றதனால், தாலி போவதோடு எல்லாமே இல்லாமற் போய்விடும் எனப் பெண்ணைக் குறித்துச் சொல்லியதாகவும் இதனைக் கொள்ளலாம்.
---------------

64. துரும்பு!

பலரும் ஒன்றைப் பெரியதாகப் பாவித்துப் பேணி வருகிறார்கள். ஆனால் சிலர் அங்ஙனம் பலரும் பெரிதாகப் பாவிப்பதையே மிகவும் சர்வ சாதாரணமானதாகக் கருது கின்றார்கள். இது அவரவர்களின் மனப்பாங்கைப் பொறுத்தது.

உதார குணம் உள்ளவன் ஒருவன் பொன்னைத் துரும்பாகவே மதிப்பான். பிறருக்கு அதனை வழங்குவதில் மகிழ்வான். தனக்கெனக் குவித்து வைக்க விரும்பமாட்டான். வீரன் ஒருவன், தன் நாட்டுக்காகப் போர்க்களத்தில் மடிவதை எளிதானதாகக் கருதுகிறான். உயிர் பலருக்கும் பெரிதாகத் தோன்றும். ஆனால், அவனுக்கோ அது சிறு துரும்பாகத் தோன்றுகின்றது.

ஆய்ந்து தெளிந்த அறநெறியாளர் இருக்கிறார்கள். அவர்கள் இன்பம் எதுவென உணர்ந்தவர்கள். அழகிய பெண்களைக் கண்டால் அவர்கள் மதி மயங்குவதில்லை. பெண்களைத் துரும்பாகக் கருதி ஒதுக்கி விடுகிறார்கள்.

காட்டிடத்தே சென்று, ஆசைகளை ஒடுக்கித் தவநெறி பூண்ட துறவியர் வேந்தனையும் ஒரு துரும்பாகவே கருதுகிறார்கள். அவனைக் கண்டு அவர்கட்கு அச்சம் இல்லை; அவனிடம் அவர்கள் எதனையும் எதிர்பார்ப்பதும் இல்லை.

முற்றத் துறந்த துறவோர்கள் வேந்தனையும் துரும்பாகக் கருதுகிற மனபரிபக்குவ நிலையினை உடையவர்களாக இருக்கிறார்கள்.

வேந்தன் ஒருவன் துறவியின் ஏழைமையையும், தன்னுடைய ஆடம்பரத்தையும் சுட்டிக் கூறியபோது அவனுக்கு அறிவுரை பகருகின்றார் ஒளவையார் என்று இதனைக் கூறுவர்.

போந்த வுதாரனுக்குப் பொன் துரும்பு சூரனுக்குச்
சேர்ந்த மரணம் சிறுதுரும்பு - ஆய்ந்த
அறவோர்க்கு நாரி யருந்துரும்பாம் இல்லத்
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.

"ஈகைக் குணத்தோடு பிறந்தவனுக்குப் பொன்னும், சாவைப் பொருட்படுத்தாத வீரனுக்கு வந்தடையும் மரணமும், ஆய்ந்து தெளிந்த அறவோர்களுக்குப் பெண் மயக்கமும், வீட்டைத் துறந்து சென்ற துறவியர்க்கு வேந்தனின் செல்வச் செல்வாக்கும் துரும்பாகவே தோன்றும்" என்பது பொருள்.
-----------------

65. கெட்டு விடும்!

வாழ்வு பலப்பல திறத்தது. அதனிடையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையினை ஒட்டியபடியே வாழ்கின்றோம். அவரவர் அவரவருடைய நிலைக்கு ஏற்பச் செய்யும் காரியங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையானால் அவ்வாழ்வு கெட்டுவிடும்.

வேந்தன் மக்களிடம் வரி வாங்கும் உரிமை உடையவன், ஆனால் தன் உரிமையை எல்லைமீறிச் செயற்படுத்தினால், மக்களை வாட்டி வதைத்து அநியாயமாக வரி வாங்கினால், அவன் கெட்டழிந்து போவான்.

இரவலன், பிறரிடம் சென்று யாசித்து நிற்பவன். அவர்கள் மனமுவந்து தருவதனை நன்றியுடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் செயலைப் பாராட்டவும் வேண்டும். இட்டதனைப் பெற்றும் மெச்சத் தெரியாத இரவலன் கெட்டழிந்து விடுவான்.

கற்புடைய பெண்ணுக்கு நிறைந்த நாணமே அணிகலன் ஆகும். முற்றவும் நாணமுடையவளாகத் தன் கணவன் ஒருவனையன்றிப் பிறனை ஏறெடுத்தும் காணாத குணமுடன் விளங்குதல் வேண்டும். அப்போதுதான் அவள் கற்பு சிறக்கும்; நாணத்தை மறந்தால், இக் காலத்துப் போலக் கிளப் லைவ்' வாழத் தொடங்கிவிட்டால், அவள் கெட்டு அழிவாள்.

வேசியின் தொழில், பொருள் தருகின்ற ஆடவரை இன்புறுத்தி மகிழ்விப்பது. அவர்களை மயக்கி தன்பால் வரச்செய்து, அவள் வெட்கம் உடையவளாக விளங்கினால், அவள் வருமானம் ஒழிந்து போக, அவளும் நிலைகெட்டுச் சீரழிவாள்.

இந்த உண்மைகளைத் தெரிவிப்பது இந்தச் செய்யுள் :

நிட்டூர மாக நிதிதேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரவலனும் - முட்டவே
கூசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
வேசியும் கெட்டு விடும்.

"கொடுமையான முறையிலே பொருள் சேர்க்கின்ற மன்னவனும், இட்ட பிச்சையினைப் பெற்றும் புகழ்ந்து உரையாத யாசகனும், முற்றவும் கூசியவளாகத் தன் கற்பு நிலையில் நில்லாதுபோன குலமகளும், வெட்கிய வேசியும் விரைவிலே கெட்டு விடுவார்கள்" என்பது இதன் பொருள்.
------------

66. வீடும் விழல்!

வாழ்விற் சில பயனுள்ளவைகளாக இருக்கின்றன; சில பயனற்றவைகளாக ஆகிவிடுகின்றன. பயன்தர வேண்டிய சிலவும், சிலபல குறைபாடுகளால் பயனற்றுப் போய்விடுவதும் நிகழலாம்.

வாழ்வு வாழ்வதற்கு உரியது. இன்ப நலன்களைத் துய்த்துப் பெற்றுப் பெருமையோடு இருப்பதற்கு உரியது. அந்த வாழ்விற்கு உறுதுணையாக அமைவது செல்வம், செல்வம் இல்லாத வாழ்வு சீரழிந்த வாழ்வாகப் போய்விடும். திருவள்ளுவர், 'பொருளி லார்க்கு இவ்வுலகமே இல்லை' என்று கூறுவர். ஒளவையார், 'மாடில்லான் வாழ்வு விழல்' என்கிறார்.

வாணிபத்திற்குப் புத்தி நுட்பம் மிகுதியாக இருக்க வேண்டும். குறைந்த விலைக்குக் கிடைக்கும் இடங்களிற் பொருள்களை வாங்குவதற்கும், அவற்றைக் கூடுதல் விலை கிடைக்கும் இடங்களில் கொண்டு சென்று விற்பதற்கும் புத்தி நுட்பம் இல்லாமல் முடியாது. மதியில்லாதவன் செய்யும் வாணிபம் பயனற்றுப் போய்விடும்.

அரசன், தன் அறக்காவலின் சின்னமாகக் கையிற் கொண்டிருப்பது செங்கோல், நாடற்றுப்போன மன்னன் ஒருவன் செங்கோலை வைத்து கொண்டிருப்பது வீணாகும். அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. அதனால் பயன் யாதுமில்லை. அவன் நீதியாக ஆட்சிபுரிவது, நாடு அவனுடைய பொறுப்பில் இருந்தால் தான் இயல்வது ஆகும்.

கல்வியறிவு கைகூட வேண்டுமானால், நல்ல குருவின் துணை வேண்டும். குருவில்லாமல் தானே கற்கும் கல்வி பயனற்றது; செறிவும் இல்லாதது.

பெண்கள் குணநலத்தால் சிறப்பவர்கள். குணநலமற்ற பெண்ணுடன் கூடி வாழ்வது மிகவும் துன்பந்தருவது. அந்த வாழ்க்கை பயனற்றது.

வீடு என்றால், அதன் நோக்கங்களுள் முதன்மையானது விருந்தினரைப் பேணுதல். விருந்தினரின் வரவில்லாத வீடு ஒரு வீடே ஆகாது.

வாழ்வு சிறப்பதற்கு செல்வம் வேண்டும்; வாணிபஞ் சிறப்பதற்கு மதிநுட்பம் வேண்டும்; செங்கோல் நடத்துவதற்கு நாடு வேண்டும்; வித்தை கைகூடுவதற்குக் குருவின் துணை வேண்டும்; குடும்பம் நன்றாயிருக்கக் குணமுள்ள மனையாள் வேண்டும்; வீடு புகழ்பெற விருந்தினர் மிகல் வேண்டும். இவை அமையாதபோது, அவையும் வீண் முயற்சி-களாகிக் கழியும் எனலாம்.

மாடில்லான் வாழ்வு மதியில்லான் வாணிபம் நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவது - கூடும் கு
ருவில்லா வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லான் வீடு விழல்.

"செல்வம் இல்லாதவன் வாழ்வு; புத்தி நுட்பம் இல்லாதவன் வாணிபம்; நல்ல நாடு இல்லாதவன் நடத்தும் செங்கோல் ; குருவில்லாமல் கைகூடும் வித்தை; குணமில்லாத மனைவி; விருந்தினரை உபசரியாத வீடு; இவை அனைத்தும் பயனற்றவை ஆகும்" என்பது பொருள்.
---------------

67. பாராட்டும் இடம்!

ஒருவரின் சொல்லினாலோ செயலினாலோ நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களைப் பாராட்டவும் விரும்புகின்றோம். அவர்களை அப்போதைக்கப்போது பாராட்ட லாமா என்றால் கூடாது. ஒருவரைப் பாராட்டுவதற்குக்கூடத் தகுந்த நேரத்தை அறிந்தே பாராட்ட வேண்டும். இதனைப் பற்றிக் கூறுகின்ற அறவுரையே இந்தச் செய்யுள்.

நண்பனை நேரிற் புகழ்ந்து பாராட்டுவது சிறப்பன்று. முகஸ்துதி என்று அவன் தவறாகவும் கருதலாம். அவனைப் பாராதபோது, நெஞ்சாரப் போற்றிப் பேசுதலே சிறந்தது.

கல்வி கற்பித்த ஆசிரியனை நேரிலும் போற்ற வேண்டும்; காணாத இடத்தும் போற்றுதல் வேண்டும்.

மனையாளை மணம் கமழும் பஞ்சணையில், அவளுடன் கலந்து உறவாடி இருக்கும்போதுதான், போற்றுதல் வேண்டும்.

பிள்ளைகளை உள்ளத்துள் பாராட்டிக் கொள்ளலாம், நேரில் பாராட்டுவது கூடாது. அதனால், அவர்களுடைய ஊக்கம் கெட்டுவிடும்.

வேலைக்காரர்களை வேலை முடிந்த பின்பே பாராட்டுதல் வேண்டும். வேலை நடுவில் பாராட்டினால், எஞ்சியுள்ள வேலை சரிவர நடைபெறாமற் போய்விடும். இல்லை-யானால் அதிகமான கூலியிலே மனம் செல்ல, அதற்காக அவர்கள் வம்பு செய்தலும் கூடும்.

நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச
மனையாளைப் பஞ்சணையில் மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலைமுடி வில்.

"நண்பனை அவனைக் காணாத இடத்திலும், ஆசிரியனை எல்லா இடங்களிலும், மனங்கொண்ட மனையாளைப் பஞ்சணையிலும், பிள்ளைகளைத் தம் உள்ளத்திலும், வேலை யாட்களை வேலையின் முடிவிலுமே மனமாரப் போற்றுதல் வேண்டும் பிற சமயங்களில் போற்றுவது சிறப்பன்று" என்பது பொருள்.
-----------

68. யாரால் கெடுவது?

பெண்கள் கற்பு நெறியுடன் வாழ்தல் வேண்டும். அவர்கள் அதனாற் சிறப்பு அடைவார்கள். அவர்களை மணந்த கணவருக்கும், அவர்கள் விளங்கும் குடும்பத்திற்கும், அதனால் பெரிதும் நன்மை உண்டாகும். இப்படிச் சொல்லுகிறார்கள் பெரியவர்கள்.

பெண்கள் மெல்லியல்பு பெற்றவர்கள். அவர்கள் கற்பு நெறியைப் பேணுவது என்பது, ஆண்களின் ஒழுக்கமும் ஒத்துழைப்புமின்றி இயலாது. பெண்களுக்குக் கற்பு நெறியை விதித்துவிட்டு, ஆண்கள் தடம் புரண்டு போய்விடும் நிலைமை மிகவும் மோசமானது. இதனைத் தமிழறிஞரான ஒளவையார் நினைவிற் கொண்டார்.

'
பெண்கள் எல்லாரும் நல்ல பண்பு உடையவர்கள் தாம். வலிமையுடைய ஆண்கள் தாம் அவர்கட்குக் கேடு செய்கின்றனர். கேட்டையும் செய்துவிட்டுக் கெட்ட பெயரையும் தந்துவிட்டுத் தாங்கள் உத்தமர்போல உலவுகின்றனர். வன்மையாளரான ஆண்களால் இயல்பாகக் கெடுக்கப் படாதவரானால் தான் பெண்கள் நல்லவராக இருக்க முடியும். அவர்கள் கற்புப் பேணுவது என்பது ஆண்களைப் பொறுத்ததே ' இவ்வாறு தம் கருத்தை விளக்குகிறார்.

இதேபோல, ஆண்கள் அறிவுடையவர்களாகும் ஆர்வமும் முயற்சியும் உடையவர்கள் தாம். பெண்கள் அவர்களுடைய சிறந்த தன்மையைக் கெடுக்காமலிருக்க வேண்டும். அப்போதுதான் இது அந்த ஆண்கட்கும் இயலுவதாகும். பெண்கள் பால் காமுற்று மயங்கிக் கிடத்தல் கூடாது; அவர்கள் பேச்சைக் கேட்டு வாழும் பெண்பித்தராகிவிடக் கூடாது' என ஆண்களையும் அவர் எச்சரிக்கிறார்.

இவ்வாறு பெண்களின் கற்பழிவுக்கு ஆண்களையும், ஆண்களின் அறிவுச்சிதைவுக்குப் பெண்களையும் காரணமாகக் காட்டிக் கூறினார் ஒளவையார்.

நல்லார்கள் எல்லாரும் நல்லவரே தன்மையால் வ
ல்லாராற் கேடு படாராயின் - நல்லறி
வாண்மக்கள் பற்பலர்க்கே உண்டாகும் பெண்டீரும்
மாண்பு கெடுக்கா விடின்.

"பெண்கள் அனைவரும் இயல்பினால் வலிமையுடைய ஆடவர்களால் கெடுக்கப்படாமல் இருந்தனராயின், கற்பு நெறி தவறாதவர்களாகவே இருப்பார்கள். பெண்களும் ஆண்களின் மாண்பினைக் கெடுக்காமலிருந்தனரானால் ஆண்மக்களுள் பற்பலருக்கும் நல்லறிவு உண்டாகி, அவர்களும் சிறப்படை வார்கள்" என்பது செய்யுளின் பொருள்.
-----------------------

69. காலமும் தனமும்!

செல்வம் வாழ்விற்கு முதன்மையானது. இதனை எல்லாரும் உணர்கின்றோம். செல்வத்தைத் தேடி அடையவும் பலப்பல முயற்சிகளை எடுத்துக் கொள்ளுகின்றோம்.

ஆனால், எவ்வளவுதான் முயற்சி எடுத்துக்கொண்ட போதும், செல்வநலம் அனைவருக்கும் எளிதாக வந்து வாய்த்துவிடுவதில்லை. சிலருக்கு முயற்சி இல்லாதே கூட அது தானாக வந்து சேருகின்றது. பலரின் முயற்சிகள் வீணாவதுடன், துன்பமும் துயரமும் நட்டமும் இழப்பும் அவரை வந்து சூழுகின்றன.

ஒரே தொழிலில் இருவர் ஒரே சமயத்தில் ஒரே முதலீட்டுடன் ஈடுபடுகின்றனர். சில ஆண்டுகள் கழிகின்றன. முயற்சியின் செம்மையில் இருவரையும் நிகராகவே கொள்ளலாம். எனினும், ஒருவன் தன் முதலீட்டைப் பன்மடங்கு பெருக்கியுள்ளான். மற்றவனோ முதலையும் இழந்து, அதன் மேற் பல மடங்கு கடன் தொல்லையிலும் சிக்கியுள்ளான்.

இந்த நிலை எப்படி ஏற்படுகின்றது? இதற்குக் காரணம் யாது? இதனைக் கருத்திற் கொள்ளுகின்றார் ஒளவையார். பிறவிகளுள் அவரவர் செய்த வினைகட்கு ஏற்பவே, நலன்கள் ஒருவனை வந்து அடைகின்றன என்பது ஆன்றோர்களின் முடியு.

இந்த முடிபின்படி, ஒருவனிடத்து இந்தப் பிறவியில் நல்ல செல்வனாக விளங்குவதற்கான வசதிகளும் மனப்போக்கும் காணப்படுகின்றன என்றால், அவன் அதனை எளிதாகப் பெறுவதற்கான சூழ்நிலைகளும் தாமே ஏற்பட்டு விடுகின்றன என்பது கருத்து.

இவ்வாறு சூழ்நிலைகள் ஒருவனுக்குச் சாதகமாக அமைவதை ஆகுங் காலம்' எனவும், பாதகமாக விளங்குவதைப் போகுங் காலம்' எனவும் உரைப்பார்கள்.

இந்த 'ஆவதும் போவது மாகிய ஊழின் பயன் வந்து வாய்த்தலை மனத்தேக் கொண்டு, இச் செய்யுளை உரைக்கின்றார் ஒளவையார்.

தேங்காயின் உள்ளே இளநீர் எப்படிச் சென்று சேருகின்றது? மரத்தின் அடிப்புறத்தே கொட்டிய தண்ணீர் எப்படி தென்னையால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இதனைக் காரணங்காட்டி எவரானும் விளக்க முடியுமோ? அது இயற்கையின் அமைவு என்றுதானே சொல்வோம்.

விளாங்கனிக்கு ஒரு நோய் உண்டு. அதற்கு 'யானை' என்றுதான் பெயர். இந்த நோய் பற்றினால், மேலுள்ள ஓடு அப்படியே இருக்க, உள்ளே எதுவும் இல்லாமற் கெட்டுப் போய்விடும். 'யானையுண்ட விளாங்கனி' என்பார்கள் இதனை.

செல்வம் ஒருவனிடம் வந்து சேர்வதும் போவதும் இவை போன்றே நிகழ்வனவாம். நற்காலத்துப் பெருமுயற்சியின்றியே செல்வம் எளிதாக வந்து கைகூடும்; கெட்ட காலத்திலோ உள்ள செல்வமும் விரைவில் ஒழிந்துபோம். இதனை உரைப்பது இச் செய்யுள்.

ஆங்காலம் மெய்வருந்த வேண்டாம் அஃதேதென்னில்
தேங்காய்க் கிளநீர்போற் சேருமே - போங்காலம்
காட்டானை யுண்ட கனியது போல் ஆகுமே
தாட்டாளன் தேடும் தனம்.

"செல்வம் ஆகிவருகின்ற காலத்திலே உடல் வருந்தும்படி உழைக்கக்கூட வேண்டாம். அஃது எதனால் என்றால் தேங்காய்க்கு இளநீர் அமைவதுபோல, அதுவும் தானே வந்து சேரும். செல்வம் போகின்ற காலம் வந்தால், முயற்சியாளன் உழைத்துத் தேடிய செல்வமுங்கூடக் காட்டு யானை உண்ட விளாங்கனிப் போலப் போய்விடும்என்பது பொருள்.
-------------

70. இலை உதிர்த்த மரம்!

ஒரு சமயம் ஒளவையார் ஒரூரின் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தார். களைத்துப்-போன அவர், அவ்வூரின் மன்றத்திடத்தே சென்று அமர்ந்தார்.

மன்றத்தே அப்போது இருந்தவர்கள் அவரைக் கற்றறிந்த பெருமாட்டியார் என அறிந்து கொண்டனர். அதனால் அவரைப் போற்றி உபசரித்தும் நின்றனர்.

அப்போது, அங்கே வந்த ஒருவனைக் கண்டார் ஒளவையார். அவன் 'தீயவன்' என்பதையும் முகக்குறிப்பினால் அறிந்தார். ஆனால், அவன் அம் மன்றத்தே நீதிமானாகப் பணியாற்றி வந்தவன். அவனைக் கண்ட பிறர் எல்லாரும் எழுந்து நின்றனர்.

ஒளவையார் அவன் வந்ததைக் கவனியாதவரைப்போல, எதிரே இலையுதிர்ந்துபோய் நின்ற ஒரு நெல்லி மரத்தையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்து இருந்தார்.

வந்தவன் தன்னை அவர் மதியாததைப் புரிந்துகொண்டான். 'கல்வி உடையவரே! பெரிதான இந்தக் காட்டூரினிடத்தே, நெல்லி மரமானது இலையுதிர்ந்து மொட்டையரக நிற்பதுதான் எதனாலோ?' என்றும் கேட்டான்.

பிற மரங்கள் இலைச்செறிவுடன் விளங்க, நெல்லிமரம் மட்டும் மொட்டையாக நிற்பதுதான் ஒளவையார் அதையே உற்றுப் பார்ப்பதற்குக் காரணமாக வேண்டும் என்பது அவன் கணிப்பு ஆகும்.

'
வெற்றி பெறாத வழக்கினை, அதனை வெற்றிபெறச் செய்வதற்குக் கைக்கூலி வாங்கிக்கொண்டு, வெற்றி பெறவும் செய்விக்கின்ற வல்லாண்மையுடையவன் சுற்றம் கெட்டழியும், வல்லவனே! நெல்லிமரம் பட்டுப்போய் இப்படி விளங்குவது, கைக்கூலி வாங்கியவனின் சுற்றம் மாண்டு போகின்ற அதனைக் காட்டவேதான்.'

ஒளவையாரின் விடையைக் கேட்ட அவன் தலை கவிழ்ந்தான். அதன் மேல், அழிவழக்குப் பேசுவதையும் அறவே விட்டுவிட்டான்.

கல்வி யுடையீர் கருங்கான கத்திடையே
நெல்லி யிலையுதிர்ந்து நிற்பதெவன் - வல்லாய்கேள்
வெல்லா வழக்கை விலைவாங்கி வெல்விக்கும்
வல்லாளன் சுற்றம் போல் மாண்டு.

"கல்வி அறிவு உடையவரே! அடர்ந்த காட்டினிடையே நெல்லி மரமானது இலையுதிர்ந்து பட்டுப்போனதாக நிற்பது எதனாலோ?

வல்லவனே! கேட்பாயாக; வெல்லுதற்கு உரியதல்லாத வழக்கினை விலை பெற்றுக்கொண்டு வெற்றி பெறச் செய்விக்கும் வல்லமை கொண்டவனின் சுற்றத்தைப்போல, அதுவும் மாண்டு போயிருக்கிறது."

இது செய்யுளின் பொருள். இதனால் அழிவழக்குச் சொல்பவன் குடும்பத்தோடு தானும் அழிவான் என்பது எடுத்துச் சொல்லப்பட்டது.
-------------

71. வீரம் எது?

கண் பெற்றவர் எல்லோருமே காண்கின்றோம். ஆனால், காண்பது அனைத்துமே நல்ல காட்சியாகுமா? காட்சி என்பது, காண்பவற்றின் உண்மையான தன்மையினைக் கண்டறிவதே ஆகும். இங்ஙனம் கொண்டால், அனைத்தும் இறைவனின் சொரூபமே என்பார்கள் ஆன்றோர்கள். உயர்வென்பதும் தாழ்வென்பதும் காண்பவற்றில் இல்லை. அழகென்பதும் குரூரம் என்பதும் பொருளில் இல்லை. நல்லதென்பதும் தீயதென்பதும் நாட்டில் இல்லை. எல்லாம் ஈசுவர சொரூபமாகிய ஒன்றே; எல்லாம் சமமே. இதனைக் காண்பதுதான் உண்மையான தெளிவான காட்சியாகும் என்பார்கள்.

வீரம் என்பது எதிர்த்தோர் பலரையும் வென்று அழிப்பது ஆகாது. அடங்காத ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதே உண்மையான வீரமாகும்.

கல்விக்கு எல்லை கிடையாது. சாகுந்துணையும் கற்பதுதான் உண்மையாகக் கற்பது ஆகும். இடையில் கற்று முடித்தோம் என நினைப்பது பேதைமையாகும்.

'
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். பிறரெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' என்று, திருக்குறள் கூறும். பிறருக்கு ஏவல் செய்து அதன் பயனால் வருவன கொண்டு உயிர் வாழ்வது இழிந்தது. அது உணவே ஆகாது.

ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்
வென்றான் தன் வீரமே வீரம் - என்றானும்
சாவாமற் கற்பதே கல்வி தனைப்பிறர் ஏ
வாமல் உண்பதே ஊண்.

"அனைத்தையும் இறைவனின் சொரூபம் என்றபடி ஒன்றாகக் காண்பதே மெய்க் காட்சியாகும். ஐம்புலன்களையும் அடக்கி வென்றவனுடைய வீரமே உண்மையான வீரமாகும். எக் காலத்தாயினும் சோம்பி மடிந்து போகாமல் உயிருள்ள வரைக்கும் அயராது கற்பதே கல்வியாகும். தன்மைப் பிறர் ஏவிப் பணிகொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல், தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும்' என்பது பொருள்.
------------------

72. பலிக்கு உழன்றீர்!

நன்னிலத்திலுள்ள திருக்கோயில் இறைவன் மீது பாடிய நிந்தாஸ்துதி இச்செய்யுள். இறைவன் பிச்சை ஏற்று உண்ட அந்த திருவிளையாட்டை மனத்தே கொண்டு, அவனைப் பழிப்பது போல் போற்றுகின்றார்.

ஒருவன் இரந்து உயிர் வாழ்வதற்கு வேண்டியதொரு இக்கட்டான நிலைமையில் இருந்தான் என்றால், அவன் அந்த அளவிற்கு வறுமையினாலே உழலுகின்றவன் என்றுதான் பொதுவாகக் கொள்ளுதல் வேண்டும். சில சமயங்களில் சிலர்பால் இந்தப் பொதுவிதிக்கு முரண்பாடான நிலைமைகள் தோன்றுதலையும் காணலாம். வாழ்க்கை செவ்வையாக நிகழுவதற்கு வேண்டிய எல்லா வகையான வசதிகளுடனும் இருந்திருப்பார்கள் என்றாலும், ஏதோ மனவேறுபாடோ குழப்பமோ அவர்களை அனைத்தினின்றும் பிரித்துவிடும். இரந்து உயிர் வாழ்தலான ஓர் இழிநிலைக்கும் கொணர்ந்துவிடும்.

'
இரந்து உயிர் வாழ்தல்' என்ற நிலையைச் சமூகத்தில் நிலவக்காணும் திருக்குறள் ஆசிரியர் உள்ளம் குமுறுகின்றார். 'பரந்து கெடுக உலகு இயற்றியான்' என்று உலக முதல்வனையே சபிக்கின்றார்.

இங்கே இறைவனே, உலக முதல்வனே இரக்கின்றான். பிட்சாடன மூர்த்தியாக வரும் பெருமான்! அவனுடைய திருக்கோலம் ! ஒளவையாரின் உள்ளத்தில் அதனையே நிரந்தரமாகக் கொண்டிருக்கும் இரவல்மாக்களின் நினைவை எழுப்புகின்றது.

"
பெருமானே! நின் சொத்துக்களைக் கண்காணிக்க நினக்கு இரண்டு குமாரர்கள் உள்ளனரே! என்றும் மூப்படையாத தன்மையினை உடைய எருதும் உமக்கு உரியதாக இருக்கின்றதே!

விளக்கமுறத் தோன்றும் கங்கை நதியின் நீர்ப்பாய்ச்சலுக்கான வசதியும் இருக்கின்றதே! இவற்றுடன் நல்ல நில வசதியும் உண்டே !

மேலும், நும்மிடத்தில் பாற்பாக்கியவதியும் நீங்காது எப்போதும் உள்ளனளே!

இங்ஙனம் எல்லாமே இருந்தும், நீர் ஏன் ஐயனே பலிக்குச் சென்று வருந்தினீர்? அதன் காரணத்தை அறிவீரோ? அது நும்மிடத்து இரந்து நிற்பவர்களுக்கு நீர் அவர் கேட்பதை வழங்காததனால் அல்லவோ ஏற்பட்டது!

பெருங்கோயில் இறையவனே! இனியேனும் இரந்து மனமுருகிப் பணியும் அடியவர்களுக்கு அருள் செய்யீரோ”.

இவ்வாறு அமைகின்றது பாடல்.

மேற்பார்க்க மைந்தரும் மூவா எருதும் விளங்குகங்கை
நீர்ப்பாய்ச்சலும் நன்னிலமும் உண்டாகியும் நின்னிடத்தில்
பாற்பாக் கியவதி நீங்கா திருந்தும் பலிக்குழன்றாய்
ஏற்பார்க் கிடாமலன் றோபெருங் கோயில் இறையவனே!

"பயிரிடுதலை மேற்பார்க்க இரண்டு குமாரர்கள் உள்ளனர். உழவுக்கு என்றும் மூப்படையாத எருது உளது. நிலைபெற்று விளங்கும் கங்கை நீரின் பாய்ச்சலும் வாய்த்துள்ளது. நன்கு விளையும் நிலமும் உளது. இவை இருந்தும் நீர் உழுது விளைவித்து உண்டு மகிழாது. ஏனோ பலிக்குச் சென்று உழன்றீர்?

அதுதானில்லை! நும்மிடத்தில் பாற்பாக்கியவதி நீங்காது உள்ளனள். பாலருந்தியாவது வாழ்ந்திருக்கலாமே? நும்மிடத்தில் வந்து இரப்பவர்களுக்குக் கொடுத்துதவும் குணம் இல்லாததால் அன்றோ எல்லாம் இருந்தும் நீர் அப்படி இரந்து வருந்தினீர்" என்பது பொருள்.

மைந்தர் - கணபதியும் குமரனும். மூவா எருது - நந்தீசர். கங்கை - சடையில் விளங்கும் கங்கை. நன்னிலம் - நன்னிலம் என்னும் ஊரைக் குறிக்கும்; புவனத்தையும் குறிக்கும். நின் இடத்தில் பால் பாக்கியவதி - நின் இடப்பாகத்தில் நின்னில் ஒரு பகுதியாக விளங்கும் புண்ணியவதியான உமையம்மை. பலி - பிச்சை ஏற்று உண்டல். இவற்றையும் பொருத்திப் பொருள் கண்டு இன்புறுக.
--------------

73. கொடாத செல்வர்!

ஒளவையார் மிக நல்ல பண்பினைக் கொண்டவர். மக்களின் துயரங்களைக் கண்டால் அவர் மனம் உருகும். மக்களின் இன்பத்தைக் கண்டால் அவர் உள்ளம் உவக்கும். அன்பினுக்கு அவர் எளியவர். ஆனால், அதிகாரத்திற்கோ, அல்லது போலிச் செருக்கிற்கோ அவர் பணிபவர் அல்லர்.

ஒளவையாரின் இந்தப் பண்புகளை நாடெங்கணும் அறிந்தவர் பலர். அதனால், அவருக்கு ஏற்பட்டிருந்த புகழும் பெரிது!

ஒரு சமயம் ஒளவையார் ஓர் ஊரிடத்தே சென்றிருந்தார். அவ்வூரில் சிலர் செல்வர்களாக இருந்தனர். ஈவதற்கு மனம் வராத உலோபியர் அவர்கள். என்றாலும், ஒளவையாரின் வாயால் தம்மையும் பாடும்படியாகச் செய்து கேட்க வேண்டும் என்ற அவா அவர்கட்கும் ஏற்பட்டது.

ஒளவையாரிடம் சென்று பணிந்து நின்று, தம்முடைய ஆர்வத்தை வெளியிட்டனர். ஒளவையார் அவர்களுடைய உள்ளப் போக்கினை அறிந்தார். அதற்கேற்ப ஒரு செய்யுளையும் சொன்னார். அஃது அவர்களின் இயல்புகளைப் புலனாக்கி
அவர்களை இடித்துரைத்ததாக அமைந்தது.

மேலும், நற்குணங்கள் அமையாதவரையும், நல்ல செயல்களை நாடாதவரையும் புலவர்கள் பாடுதல் பொருந்தாததென்ற உண்மையினை வலியுறுத்துவதாகவும் அது அமைந்தது.

"
அயன், அரன், அரி என்பவர் முக்கடவுளர். அவர்கட்கும் நாயகனாக விளங்குபவன் பரம்பொருள். அவனைப் பாடினேன்!

சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் தமிழகத்தே உள்ளனர். இளமை நலமுடைய அவர்களின் சிறப்பையும் பாடினேன்.

என் வாய் செய்யுள் மணம் கமழ்ந்து கொண்டிருப்பது. அத்தகைய முப்பெரும் வேந்தரையும், மூவர்க்கும் முதலையும் பாடிப் போற்றிய பெருமை உடையது.

அத்தகைய என்னுடைய வாயினால், 'எம்மையும் பாடுக' என்று நீங்களும் வந்து கேட்டீர்கள். நும்மை இவ்விடத்தே யான் எவ்வாறு பாடுவேன்? அது செந்தமிழ் மொழிக்கே பழியாக அமையுமே!

நீங்கள் வீரர்களாக இருந்து, அடுபோர் இயற்றிச் சிறந்த ஆண்மையாளர்களாக இருப்பவர் ஆனால், உங்களைப் போற்றிப் பாடலாம். நீங்களோ வெம்மையான சினம் ததும்பும் கண்களையுடைய போர்க்களிறுகள் வெட்டுண்டு வீழுகின்ற, குருதி வெள்ளத்தாற் சிவந்த போர்க்களத்தினைக் கண்ணாற் காணவும் இயலாத பெருங்கோழைகளாக இருக்கின்றீர்கள் !

உங்கள் பால் கலையார்வம் உளதென்றால், அதனை நோக்கி நும்மிடத்தே குற்றம் நீங்கிய நல்ல யாழிலே இசையினை எழுப்பி, நும்மை மகிழ்வித்துப் பாடவும் செய்யலாம். அந்த நல்ல யாழிசையினை விருப்பமாகக் கேட்கின்ற தன்மையினைப் பெற்றிராதவர்களாகவும் உள்ளீர்கள்.

நும் மனைவியரையன்றிப் பிற மாதரை நினையாத ஒழுக்கம் உடையவர்கள் என்றிருந்தால், அதற்காக யான் நும்மைப் போற்றிப் பாடலாம். நீரோ முருக்கம் பூப்போலும் சிவந்த வாயிதழ்களை உடையவரான நும் மனைவியரின் இளமைத் தன்மை கொண்ட மார்பைத் தழுவியிருக்கும் அந்த இல்லொழுக்கமும் இல்லாதவர்களாகத் தோன்றுகின்றீர்கள்.

புலவர்களின் வாய்ச்சொற்களில் கலந்து வருகிற அவர்களுடைய வறுமையினாலே எழுகின்ற புலம்பலைக் கேட்டு, அதற்கு இரங்கி அவருக்கு உதவுகின்றவர்களும் நீங்களும் அன்று. அதனாலும், யான் உங்களைப் பாடுதற்கில்லை.

பக்குவமாகச் சமைத்த உணவுகளின் சுவையினை அறிந்த வர்களே அன்றித் தமிழ்ச் சுவையினை அறிந்த தமிழன்பர்களாக உங்களைக் கொள்ளுதற்கும் இயலாது!

நன்றாக உடுக்கவும் மாட்டீர்கள். வயிறார உண்ணவும் மாட்டீர்கள். பிறருக்குக் கொடுக்கவும் மாட்டீர்கள். பிறர் கூறும் நல்ல பொருளமைந்த சொற்களைக் கேட்டு மேற்கொள்ளவும் மாட்டீர்கள்.

மரச்செறிவு நீங்காத காட்டினிடையே, உயரமாக வளர்ந்த மரத்தினிடத்தே விளங்கும் உண்ணுதற்காகாத பழத்தினைப் போல, நீங்களும் பயனற்றவர்களாக இவ்வுலகில் பிறந்துள்ளீர்கள்.

உங்களை யான் எப்படிப் பாடுவேன்?" இந்தக் கருத்துக் களுடன் அமைந்தது செய்யுள். அவர்கள் தலை தாழ்ந்தனர். அத்தகையோரைப் பாடுவது என்ற நிலைமையும் ஒளவையாருக்கு அதன்பின்னர் அவ்வூரில் ஏற்படவில்லை.

இது, செய்யுள் பாடுவது என்பது புலவர்களின் செயல் மட்டுமாக இல்லை; எவரைக் குறித்துப் பாடுதல் வேண்டுமோ அவருடைய பண்புகளைக் குறித்தே அமைவதாகும், அமைய வேண்டுவதாகும் என்பதனையும் உணர்த்தும்.

மூவர் கோவையும் மூவிளங் கோவையும்
பாடிய வென்றன் பனுவல் வாயால்
எம்மையும் பாடுக வென்றனீர் நும்மையிங்கு
எங்ஙனம் பாடுகென் யானே வெங்கட்
களிறுபடு செங்களம் கண்ணிற் காணீர் வெ
ளிறுபடு நல்யாழ் விரும்பிக் கேளீர்
புலவர் வாய்ச்சொற் புலம்பலுக் கிரங்கீர் இ
லவு வாய்ச்சியர் இளமுலை புல்லீர்
அவிச்சுவை யல்லது தமிழ்ச்சுவை தெருளீர்
உடீர் உண்ணீர் கொடீஇர் கொள்ளீர்
ஒவ்வாக் கானத்து உயர்மரம் பழுத்த
துவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே!

முத் தேவர்களின் கோமானான பரம்பொருளையும், இளமைச் செவ்வியுடைய மூவேந்தர்களையும் பாடிய என்னுடைய பாமணக்கும் வாயினால் 'எம்மையும் பாடுக' என்றீர்கள் ! நும்மை யான் எவ்வாறு பாடுவேன்? சினங் கொண்ட போர்க்களிறுகள் வெட்டுப்பட்டு வீழ்தலையுடைய குருதிப் பெருக்காற் சிவந்த போர்க்களத்தினை நீங்கள் கண்ணாற் காணவும் மாட்டீர்கள்; குற்றமற்ற நல்ல யாழினின்றும் எழுகின்ற இசையினை விரும்பிக் கேட்கவும் மாட்டீர்கள்; புலவரின் வாய்ச்சொற்களாக வெளிப்படும் புலம்பலுக்கு இரங்கவும் மாட்டீர்கள்; முருக்கம்பூப் போன்ற இதழ்களையுடைய நும் மனைவியரின் இளைய முலைகளைத் தழுவி இருக்கவும் மாட்டீர்கள்; சமைத்த உணவின் சுவையின்றித் தமிழ்ச்சுவை யாதும் தெளியமாட்டீர்கள்; உடுக்கமாட்டீர்கள்; உண்ண மாட்டீர்கள்; கொடுக்கமாட்டீர்கள்; கொள்ளவும் மாட்டீர்கள். தொலையாத காட்டின் நடுவே உயரமான மரத்தில் பழுத்துள்ள உண்ணற்காகாக் கனியென நீங்கள் தோன்றினீர்களே!' என்பது
பொருள்.

இச் செய்யுள், உலகுக்கு உதவி வாழாதவரைப் புலவர்கள் பாடமாட்டார்கள் என்பதையும் உணர்த்தும்.
----------

74. திருமண விருந்து!

பாண்டியன் தமிழன்பு மிகுந்தவன். தமிழைப் பேணிப்புரந்து வளர்ந்தவன். தமிழ்ப் பாவலர்கட்கு வாரி வழங்கி மகிழ்ந்தவன். இவற்றுடன், அவனே வளமையான தமிழறிந்த புலமையினனாகவும் விளங்கினான்.

ஒரு சமயம், அவனுடைய வீட்டில் ஒரு திருமண வைபவம் நடைபெற்றது. தமிழ்ப்பெரும் புலவரான ஒளவையாரையும் அவன் மிகவும் விரும்பி அழைந்திருந்தான். அவனுடைய அன்பின் மிகுதியை எண்ணிய ஒளவையாரும், அத் திருமணத்திற்குச் சென்றிருந்தார்.

பாண்டிய மன்னன் வீட்டுத் திருமணம் அல்லவா? நாடெங்கும் உள்ள மன்னர்கள் பலரும் தத்தம் பரிவாரப் பெருக்குடன் அங்கே வந்து நிறைந்திருந்தனர். ஒளவையார் அந்தக் கூட்டத்தின் நடுவே பட்ட தொல்லைகள் மிகுதியாக இருந்தன. திருமண விழாவும் ஒருவாறாக முடிந்தது. ஒளவையாரும் பாண்டியன் உவப்புடன் அளித்த பல பரிசில்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.

பசியோ வயிற்றை வாட்டியது. ஒரு வீட்டுத் திண்ணையிலே அமர்ந்தார். அந்த வீட்டுத் தலைவி அவர் சோர்வைக் கண்டு உணவுண்ண அழைத்தாள். 'ஏன் பாட்டி, திருமண வீட்டிலே உண்ணவில்லையோ?' என்றும் கேட்டாள்.

அவளுக்கு அந்தக் கல்யாணத்தின் சிறப்பைக்கூற நினைத்த ஒளவையார், தாம் உணவுண்ணக்கூட இயலாது போன அந்த நிலையினைக் கூறுகின்றார். அவர் கூறிய அந்தப் பாடல் இதுவாகும்.

வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள் பசியி னாலே
கருக்குண்டேன் சோறுண்டி லேன்.

"தமிழ் வளமையானது, அதனைக் கற்றுத் தெளிந்தவன் பாண்டியன். அவன் வீட்டுத் திருமணத்தில் யான் உண்டு மகிழ்ந்த சிறப்பினைச் சொல்லுவேன் கேட்பாயாக!

கூட்டத்திற் சேர்ந்து நெருக்கமுண்டேன். தள்ளுண்டேன். நெடிதாக வருத்திய பசியினால் உடல் சுருக்கண்டேன். இவற்றை உடையவளானேனே அல்லாமல், யான் சோறு உண்டவள் அல்லேன்" என்பது பொருள்.

சோறுண்ணாததைச் சொன்னாலும், அதற்குப் பாண்டியன் மீது ஏதும் தவறில்லை என்றும் நயமாகக் கூறுகின்றார் ஒளவையார்.
------------

75. வடுகனும்! வரதனும்!

அந்த நாளில் செங்கலங்கை வடுகநாத முதலியார் என்றொரு செல்வர் இருந்தார். அவர் தமிழபிமானம் மிகுந்தவர். தமிழறிந்த புலவர்களை உபசரித்துப் பரிசில் பல வழங்கும் இயல்பினரும் ஆவர்.

அவருடைய இளைய சகோதரன் வரதன். அவன் திடுமென்று இறந்து போனான். அவன் பிணத்தை வந்தவர்கள் அறியாதபடி மூடிவைத்துவிட்டு, விருந்தினர்களை உபசரித்த சிறப்பினர் இவர். இதனால், இவர் புகழ் எங்கணும் பரவியது.

இவரும் இறந்துபோன காலத்தில், இவருடைய மரணத்தையும், இவர் தம்பியின் மரணத்தையும் நினைந்து வருந்திய ஒளவையார், எமதர்மனை நடுநிலை பிறழ்ந்தவன் எனக் கூறிப் பழித்துப் பாடுகின்றார். அந்தப் பாடல் இது.

ஒட்டக்கூத்தரும் இந்த வடுகநாத முதலியாரின் சிறப்பைப் பாடியுள்ளனர்.

"
செல்வத்தை இறுக முடிந்து கொண்டு இருப்பார்கள். தம்மிடம் வந்து இரப்பவர்களுக்கு யாதும் கொடுக்கமாட்டார்கள். இத்தகைய பணப்பித்தரை நீ சென்று கொல்லக் கூடாதோ?"

வடுகன் சிறிய பருவத்தான். அதன் தம்பி வரதன் பேதைமை கொண்டவன். அவர்களைப் போய்க் கொன்றாயே? எமனே! இதுதான் நீ நடுநிலைமையோடு நடப்பதோ?

எமன் நடுநிலை தவறிவிட்டான். உலகிற்குப் பாரமாக இருக்கிறவர்களைக் கொல்லலாம். அவர்களை வாழ்ந்திருக்க விட்டுவிட்டு, உலகிற்கு உபகாரமாக இருப்பவர்களைக் கொன்று விட்டானே? இது, எமன் நீதியின் தேவன் என்ற வார்த்தையைப் பொய்ப்படுத்தியது ஆகுமே?" இப்படி வருந்துகிறார் ஔவையார்.

இறுக முடிந்தே இரப்பார்க்கொன் றீயாத்
தறுகணரைக் கொல்லத் தகாதோ - சிறுகை
வடுகனையும் பேதை வரதனையும் கொன்றாய்
நடுவாமோ வீது நமா?

"நமா ! பணத்தை இரப்பவர்க்கு ஒன்றும் கொடாமல் இறுக முடிந்து வாழும் கொடியவர்களைக் கொல்லுதல் கூடாதோ? சிறு கையனான வடுகனையும் பேதையான வரதனையும் கொன்றாயே? இது நினக்கு நடுவாமோ!" என்பது பொருள்.

'
சிறு கை' பருவத்தை குறித்தது 'பேதை' இயல்பைக் குறித்தது. செங்கலங்கை வடுகநாத முதலியாரும் அவர் இளவலும் ஒருங்கே மாண்டபோது பாடியது இதுவென்பார் சிலர்.
--------------

76. நுண் பொருள் !

ஊனக்கண்ணால் காண முடியாத பொருள்கள் நுண் பொருள்கள் எனப்படுவன. இது, மேற்போக்காகக் கற்பார்க்குப் புலனாகாது, நுணுகி உணர்வார்க்கே புலனாகும். செறிந்த சொற்பொருளையும் உணர்த்தும்.

இப்படியே வாழ்வியற் கூறுபாடுகளில் மிகவும் முயற்சியுடன் அடைந்து அனுபவிக்கும் தன்மைத்தான பொருள்களையும் நுண்பொருள் என்பார்கள்.

பெண் ஓர் ஆடவனை மணந்ததும் அவனுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றாள். அவனோடு கூடிக் கலந்து கொஞ்சி இன்ப நலத்தைப் பெருக்குகின்றாள் ; பெறுகின்றாள். அவன் அவளுடையவனாகி விடுகின்றான்; அவள் அவனுடையவள் ஆகிவிடுகின்றாள்.

இந்த நிலையிலும், பெண்கள் சிலபோது தங்கள் கணவன்மாருடன் ஊடிக்கொண்டு, அவர்களைத் தம்மருகே நெருங்கவிடாது சினந்து ஒதுக்குவதும் நிகழ்கின்றது.

அங்ஙனம் ஆசை மனைவி அருகே வரவிடாது தடுக்கின்ற போது, அவளைத் தழுவும் அந்த இன்பம், எளிதாக இருந்த அந்த நலம், மிகவும் அரிதாகிப் போகின்றது. ஆனால், அவள் உவக்கும் செயலைச் செய்து அந்த ஊடலைத் தணித்து நிற்கும் அவனை, அவளும் தெளிந்த பின்னர் உவப்புடனே ஆரத்தழுவி நிற்கும் போது, அந்த இன்பம் நுண்பொருள் செறிந்ததாய் இருவரையும் இன்புறுத்துகின்றது.

இப்படி, மனைவியரின் தோள் நலம் நுண்பொருள் பயக்கின்ற ஒரு நிலையினைத் தெளிவுபடுத்துகின்றார் ஒளவையார். செழியனிடம் கூறுகின்ற பாணியிலே அமைந்தது பாடல்.

'
பகைவரைப் போர்க்களத்தே எதிர்த்து நின்று அறப்போர் இயற்றிச் சிறப்பதே ஆண்மையுடைய செயலாகும். அந்தச் செயலைச் செய்தவராக, வெற்றி மிடுக்குடன் வீடு திரும்பி வரும் வீரர்களுக்கு மனைவியரின் தோள் நலம் நுண்மை நலம் செறிந்ததாக விளங்கும்.

வீரர்க்கு இங்ஙனம் விளங்கும் என்னவே, கோழைகட்கு இன்பம் தருவதாக இராது என்பதும் சொல்லப்பட்டது.

காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச் சேர்ப்ப
போதுசேர் நார்மார்ப போர்ச்செழிய - நீதியாய்
மண்ணமுத மங்கையர்தோள் மாற்றாரை யேற்றார்க்கு
நுண்ணிய வாய பொருள்.

"காதுகளிற் பொருந்தியிருக்கின்ற தொங்கலான குண்டலங் களை உடையோனே! குமரியின் கடற்றுறைக்கு உரிமையுடைய கடல் நாட்டவனே! மலர்ப்போதுகள் சேர்ந்துள்ள மாலையினை அணிந்தோனே! போர்வல்ல பாண்டியனே! மண்ணில் அமுத மாக விளங்கும் மங்கையரின் தோள் நலமானது, பகைவரை அறத்தோடு எதிரேற்று வெற்றி பெற்றுவரும் வீரர்களுக்கே நுண்மையான இன்பநலப் பொருள் செறிந்ததாக அமையும்" என்பது பொருள்.

'
நுண்ணிய வாய பொருள்" என்றது, அளவிட்டுக் கூற முடியாத, அறிய அறியச் செழிக்கும் இன்பப்பொருள் என்பதற்காம்.
------------

77. குறிப்பு விளக்கம்!

ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழனுடைய அவையில் சிறப்புடன் திகழ்ந்தவர். அரசனுக்கு மிக வேண்டியவராகவும், 'கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழன்' என, அவனே போற்றுமாறு அவனுடைய குருநாதராகவும், அமைச்சராகவும் வாழ்ந்தவர் அவர்.

பெருமையும் சிறப்பும் பேரளவிற்குப் பெருகியதாயினும், புலமையின் நிறைவு குடி கொண்டதாயினும், அரசனிடத்தேயுள்ள தம்முடைய அளவிறந்த செல்வாக்கின் காரணமாகக் கூத்தர் சிலபோது செருக்குடையராகவும் விளங்கினார்.

இவருடைய இந்த ஒரே ஒரு குறையின் காரணமாக, இவருக்கும் புகழேந்தி, கம்பர் முதலியோருக்கும் நிகழ்ந்த வாக்குவாதங்கள் மிகப் பலவாகும். இவற்றைத் தனிப் பாடல்கள் பலவும் எடுத்துரைக்கின்றன.

ஒரு சமயம் ஒளவையார், கூத்தரின் செருக்கினைக் கண்டதும் ஆத்திரங்கொண்டார். அவரைத் தலைகவிழச் செய்வதற்கும் முடிவு செய்தார். அவையின்கண் கூத்தரை விளித்துச் சில முத்திரைகளைத் தம் கைகளால் காட்டி, 'இவை குறிக்கும் மெய்ப்பொருள்கள் யாவோ?' என்று வினவினார். அப்போது கூத்தர் பாடியது இச் செய்யுள்.

இவ்வளவு கண்ணினாள் இவ்வளவு சிற்றிடையாள்
இவ்வளவு போன்ற விளமுலையாள் - இவ்வளவாய்
நைந்த உடலாள் நலமேவ மன்மதன்றன்.
ஐந்துகணை யால்வாடி னாள்.

"இவ்வளவு என்னும்படி சிறுத்த கண்களை உடையவள்; இவ்வளவு என்னும்படியான சிறுத்த இடையினை உடையவள்; இவ்வளவு என்னும்படி பருத்த இளைய முலைகளை உடையவள்; நின்மேற்கொண்ட காமத்தால், தான் நைந்த உடலினளாகி, நின்னால் நலத்தை அடையும்படிக்கு ஏங்கி, மன்மதனுடைய பஞ்சபாணங்களால் வாடிப் போயினாள்; அவளுக்கு உதவாயா?" என்பது பொருள்.

ஒட்டக்கூத்தரின் இந்தச் செய்யுள் மிகவும் நயமானதுதான் என்றாலும், அதன்கண் ஒரு பெரிய குறைபாடும் இருந்தது தாம் குறித்த அடையாளங்களைக் கொண்டு அவை விளக்கும் மெய்ப்பொருள்களைப் புலப்படுத்திப் பாடுமாறு கேட்டிருந்தனர் ஒளவையார்.

அவருடைய கேள்வியிலே, 'மெய்ப்பொருள்' என்றிருந்த சொல்லினைக் கவனியாது. கூத்தர் மேற்கண்டபடி சிற்றின்ப நயத்தோடு செய்யுளைப் பாடிவிட்டார்.

மெய்ப்பொருளாவது பேரின்பப் பொருள். சிவநேயரான கூத்தர் அதனை அறியாதவர் அல்லர். எனினும், செருக்கு எழுகின்றபோது எத்துணை அறிவு நலமும் கெட்டுவிடுகின்ற தன்மைக்கு, அந் நேரத்தில் அவரும் உரியவராயினார்.

'
கூத்தரே! தங்கள் செய்யுள் மேற்போக்காகப் பார்ப்பதற்குப் பொருந்துவதுதான். எனினும், யாம் குறித்தவை மெய்ப் பொருள்கள். அதனைத் தாம் அறியாமற் போயினீர். அரசியல் சூழலில் இருக்கின்ற நீர், அதன் ஆடம்பரத்தில் மயங்கியிருக்கும் நீர், காதற்பிரிவிலே சிற்றின்பத்தைக் குறிப்பிட்டதாகக் கருதிச் சொல்லிவிட்டீர். 'மெய்ப்பொருள்' என்ற சொல் நுமது கவனத்திற்கு வரவில்லை போலும்?' என்று முழங்கினார் ஒளவையார்.

அவையினர் மீளவும் சிந்தனையில் ஆழ்ந்தனர். பெரும் புலவரான கூத்தரும் தம்முடைய பிழையினை உணர்ந்தவராகத் தலை கவிழ்ந்தார். சோழன் அவருடைய நிலையைக் கண்டு வருந்தினான். அவையின் அமைதியை ஊடறுத்துக் கொண்டு அவனுடைய குரல் எழுந்தது.

'
அம்மையே! தாங்களே அக் கருத்துக்களைத் தெளிவு படுத்துங்கள். எங்கள் ஆர்வம் மிகுதியாகின்றது' என்றான் அவன். அப்பொழுது ஒளவையார் சொன்னதாக விளங்கும் செய்யுள் இது.

'
ஏற்பார்க்கு இல்லை என்னாது இட்டு உதவுங்கள். வாழ்வில் மறநெறியை ஒழித்து அறநெறிகளையே கைக்கொள்ளுங்கள். உணவுண்ணும் காலத்துச் சிறிதேனும் சோற்றினைப் பிறருக்கு இட்டு, அதன் பிறகே உண்ணுதலைச் செய்யுங்கள்.

இத்துணையும் செய்து வருவதுடன், தெய்வம் ஒருவனே எனவும் உணர்வதற்கு நீங்கள் வல்லமை பெறுதல் வேண்டும். பெற்றீர்களாயின், அறுதற்கரிய வினைகள் ஐந்தும் நும்மிடத்தி னின்றும் அறும். நும் பிறவியும் பயனுடையதாகும்.'

ஒளவையார், இவ்வாறு தாம் கருதியவற்றை மிகவும் அருமையாக எடுத்து விளக்கினார். 'அரிதான உண்மைகள்' என அவையும் அதனை ஏற்று இன்புற்றது.

ஐயம் இடுமின் அறநெறியைக் கைப்பிடிமின்
இவ்வளவே னுமனத்தை இட்டுண்மின் - தெய்வம்
ஒருவனே யென்ன உணரவல் லீரேல்
அருவினைகள் ஐந்தும் அறும்.

* "பிச்சை இடுங்கள்; அறநெறியைக் கைக்கொள்ளுங்கள். சிறிதேனும் அன்னத்தைப் பிறருக்கு இட்டு அதன்பின் உண்ணுங்கள்; இவற்றுடன், தெய்வம் ஒருவனே எனவும் உணர வல்லீர்களானால், அரிதான வினைகள் ஐந்தும் அற்றுப்போகும்" என்பது பொருள்.

அருவினைகள் ஐந்து - புலனிச்சைகளால் வருகின்ற வினைகள் ஐந்தும். இவை அறும் எனவே, வீட்டின்பம் கிட்டும்' என்பதும் கூறினார்.
--------------

78. கொள்ளேன் மதித்து!

ஒரு சமயம் கலைவாணர் பலரும் ஒருங்கே அவைக்கண் கூடியிருந்தனர். அந்த அவையிடத்தே ஒளவையாரும் இருந்தார். ஒளவையார் கூறிய ஒரு கருத்தின்மேல் கருத்து மாறுபாடு எழுந்தது. அனைவரும் அதனை மறுத்துப் பேசினர்.

தாம் சொல்லியதன் உண்மையினைத் தெளிவாக அறிந்தவர் ஒளவையார். பலரும் தம்முடைய கருத்தினை ஏற்காது மறத்து உரைகின்றனரே எனக் கருதி, அவர் மலைத்துவிடவில்லை. பொறுமையுடன் அவற்றைக் கேட்டபடியே வீற்றிருந்தார்.

அப்போது, அவையின் தலைவர், 'அம்மையே! அனைவரும் உரைத்தவற்றைக் கேட்டீர்கள். இனியாவது, தங்களுடைய கருத்தினை மாற்றிக் கொள்ளுங்கள்' என்றார். அப்பொழுது ஒளவையார் சொல்லியதாக வருகின்ற செய்யுள் இது.

'
புலமை என்பது மிக எளிதானதன்று. எழுந்த பல பிறவிகள் தோறும் ஓதி உணர்ந்த முன்வினைப்பயன் உடையவர்க்கு வந்து வாய்க்கும் பிற்பட்ட பிறவிகள் தோறும், அந்த அறிவும் வலிமை உடையதாகத் தொடர்ந்து வந்தடைந்திருக்கும். இதுவே உலகத்தின் நியதி.

இதனை அறியாது, இங்குள்ள கலைவாணர்கள் பலர், பலவற்றையும் என்னுடைய அறியாமை அகலும்படியாகச் சொன்னார்கள். அவர்களுடைய பேச்சினை யானும் கேட்டேன். அதனை மதித்து எனக்கு மலைப்புத் தரும்படியான நிலையில் ஒருபோதுமே கொள்ள மாட்டேன். இதனை அறிக' என்றனர் ஒளவையார். அந்தச் செய்யுள் இதுவாகும்.

எழுபிறவி யோதி யுணர்ந்தார் தமக்கே
வருபிறவி தோறும் வலிதே - இருள்தீர்
கலைவாணர் எல்லாம் கழறினர்காண் நெஞ்சின்
மலைவாகக் கொள்ளேன் மதித்து.

எழுபிறவி - முற்பட்டு எழுந்தவான பிறவிகள். வருபிறவி - வருகின்ற பிற்பட்ட பல பிறவிகள். இருள் - அஞ்ஞான மயக்கம் மலைவு - மயக்கம். மதித்தல் - போற்றுதல்.

இதனால், தாம் பிறவியிலேயே தமிழ் அறிவு வாய்க்கப் பெற்றவர் என்னும் கருத்தினைத் தெளிவுபட எடுத்துரைத்தனர் ஒளவையார். தாம் மலைவாகக் கொள்ளாமை கூறினார், தம் கருத்தே முறையானது என்று வலியுறுத்துவதற்கு
மலைவு - மயக்கம்.
-------------

79. கல்வியின் பயன்!

'கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக' என்று குறளாசிரியர் கூறுவர். கசடறக் கற்காத கல்வி பயனற்றது. கசடறக் கற்றும் அதற்கிசைய நிற்காதவனின் கல்வியும் பயனற்றது. கல்வியின் இந்த நிலையினை மேலும் நன்கு தெளிவு படுத்துகின்றார் ஒளவையார்.

'
ஒரு நூலினை ஏட்டிலே பெயர்த்து எழுதுதல் என்பது அரிதான செயலாகும். அந்த அரிய செயலைச் செய்தாலும் அப்படி எழுதியுள்ளதனைக் குற்றமின்றிப் படிப்பது அதனினும் அரிதான ஒரு செயலாகும்.

பழுதற வாசிக்கும் தன்மையைப் பெற்றுவிட்டாலும், பண்புடன் முற்றவும் அந்த நூலைக் கற்பது அரிதான செயலாகும். அதற்கேற்ற நேரமும் வசதிகளும் பலருக்கும் எளிதில் வாய்ப்பதில்லை.

கற்றாலும், பிறவியின் தன்மையினை உள்ளபடியே உணர்ந்து வாழ்விற்கான நற்பயனைக் கண்டுணர்வது மிகவும் அரிதான செயலாகும்.

அங்ஙனம் கற்றதன் பயனாக நற்பயனைக் காணுகின்ற தெளிவினைப் பெற்றவர்களே மிகச் சிறந்தவர்கள். அவர்கள் நிலையில் தளராது நிலைபெறும் உறுதித் தன்மையினையும் பெறுதல் வேண்டும். இங்ஙனம் நிலையினிற் உறுதியாக நிற்பாரானால், அதுவே கல்வியின் பயனை அடைந்ததாகும்.'

எழுதரிது முன்னம் எழுதிய பின்னர்
பழுதறவா சிப்பரிது பண்பாய் - முழுதுமதைக்
கற்பரிது நற்பயனைக் காண்பரிது கண்டக்கால்
நிற்பரிது தானந் நிலை.

"எழுதுதல் அரிதான செய்கையாம் ; முன்னம் எழுதியதன் பின்னர் அதனைப் பழுதின்றி வாசிப்பது அரிய செயலாம்; வாசித்தாலும், பண்புடன் அதனை முற்றவும் கற்றல் அரிதாகும்; கற்றாலும் நற்பயனைக் காணல் அரிது; அதனையும் கண்டு விட்டாலும், அந்த நிலையில் தளராது நிற்கும் அந்தத் திண்மை நிலை மிகவும் அரியதாகும்" என்பது பொருள்.

இதனையே, 'கற்க கசடறக் கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக' என்பார் குறள் நூலார்.
-----------------

80. தாய் மொழியது!

இறைவனை வணங்குவதில் அவரவர் தத்தம் தாய் மொழியினைப் பயன்படுத்த வேண்டுமா, அல்லது வழக்கில் புகுந்துவிட்ட வடமொழியையே தொடருதல் வேண்டுமா என்றவொரு விவாதம் நடைபெறுகின்றது. தாய்மொழியையே ஆதரிப்பாரும், வழக்கத்தை மாற்ற வேண்டாம் என்பாரும் பலர். இறைவன் அனைத்துமே அறிந்தவன்; அவனுக்கு எந்த மொழியும் ஒன்றே. இவ்வாறு பட்டும்படாமலும் கூறி ஒதுங்குவார்கள் சிலர். இப்படி ஒரு சர்ச்சை ஒளவையாரின் காலத்திலும் நடந்துள்ளது. அதற்கான ஒரு நல்ல முடிபினை அவரும் வகுத்துக் கூறியுள்ளார். அதனை நாமும் காணலாம்.

ஒளவையார், குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரித் திருமால் திருப்பதிக்குச் சென்றிருந்தபோதுதான் இந்தச் சர்ச்சை எழுந்தது. திருக்கோயிலிலே 'அந்நிய மொழியான வடமொழியினைப் பயன்படுத்துவது கூடாது' என்று சிலர் வாதிட்டனர். பழக்கத்தை மாற்றமாட்டோம்' என்றனர் கோயிலார். ஒளவையார் இருவரின் வாதத்தையும் கேட்டு அறிந்த பின் பாடுகிறார்.

'
வான் வளி தீ நீர் நிலம் என்பன பஞ்சமகா பூதங்கள். அறம் பொருள் இன்பம் வீடு என்பன வாழ்க்கைப் பேறுகள் அரன் அரி அயன் என்பவர் மூன்று கடவுளர்கள். இவை யாவும் பெய்து அமைந்த செம்பொருளாக விளங்குபவன் இறைவன்.

இவன் எந்த வேதங்களுக்கும் தொலைவாகி, அவற்றைக் கடந்து நிற்பவனும் ஆவான். தண்மை பொருந்திய குருகூரினிடத்தே இவனை வணங்குவதற்குப் பயன்படுத்துவது அந்நிய மொழியே என்று சிலர் சொல்லுகின்றனர். அதுதான் முறையெனவும் சொல்லுகின்றனர். ஆனால், யானோ, வழிபாட்டின் சிறப்பு தாய்மொழியினைப் பயன்படுத்துவதனால் தான் அமையும் என்று, அவர் கருத்தை மறுத்து உரைப்பேன்.'

ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்தமைத்த
செம்பொருளை எம்மறைக்கும் சேட்பொருளைத் தண்குருகூர்ச்
சேய்மொழிய தென்பர் சிலரியான் இவ்வுலகில்
தாய்மொழிய தென்பேன் தகைந்து.

"ஐவகைப் பெரும் பூதங்களும், நால்வகைப் பேறுகளும், மூவகை மெய்ப்பொருள்களும் ஆகியவற்றைப் பெய்து அமைத்த செம்பொருள் தண் குருகூரின்கண் கோயில் கொண்டிருக்கும் இறைவன். அவன் எந்த வேதங்களாலும் அறிந்துணரவியலாதபடி
அவற்றைக் கடந்தும் நிற்பவன்.

அவனை வழிபடும் மரபு வேதமொழியாகிய அந்நியமொழி என்பார்கள். யானோ, இவ்வுலகில் அவரவரின் தாய்மொழியே வழிபாட்டிற்கு உகந்தது என்பதனை வலியுறுத்திச் சொல்வேன்' என்பது பொருள்.

தாய்மொழி வழிபாட்டை ஆதரித்து, இவ்வளவு தெளிவாக வேறு எவருமே கூறவில்லை. குருகூர், நம்மாழ்வார் பிறந்த ஊர்; ஆழ்வார் திருநகரி என வழங்குவது.
--------------

81. வாய் மொழிகள் !

ஒளவையாரின் கருத்து கோயிலைச் சார்ந்தவர்க்குப் பொருந்துமாறில்லை. இன்றைக்கு நாலாயிரம் ஆகிய தமிழ் வேதம் திருப்பதிகளிலே முழங்குகின்றது. எனினும், அன்று வடமொழியை விரும்புவோரும் பலர் இருந்தனர். தாய்மொழிதான் வழிபாட்டிற்கு உகந்தது என்றவர், மேலும் அதனையே வலியுறுத்தி மற்றொரு செய்யுளையும் சொல்லுகின்றார்.

அந்நிய மொழியானாலும் சரி, தாய்மொழியானாலும் சரி, சொல்லப்போனால் இறைவனுக்கு இரண்டுமே ஒன்றுதான்.

வேதங்கள் வடபுலத்து ஆன்றோரின் வாய்மொழிகள்; அவர்களுடைய தாய்மொழியும் கூட. அது மக்கட்குப் புரியாதபடி இருப்பதனால், அதனை மறை என்றும் சொன்னார்கள்.

அவர்களுடைய தாய்மொழியான வடமொழியைப் போல, மற்றும் சிறந்த பல மொழிகளும் காலந்தோறும் இறைவனைத் துதிக்கப் பயன்பட்டுள்ளன.

இப்படித் துதிக்கப் பயன்பட்ட மொழிகள் பலவாக உள்ளன என்றாலும், அனைத்தும் ஒழித்தற்கு உரியவை என்பேன் நான். தாய்மொழியே பிற அனைத்திலும் சிறந்தது. இதனை வலியுறுத்தியும் யான் உரைப்பேன்.

ஒளவையாரின் தமிழ்ப்பற்றும் புலமையும் நல்ல நோக்கமும் பாடலிலே திருநடனம் செய்கின்ற சிறப்பை நாமும் கண்டு களித்துத் தெளிவு பெறலாம்.

சேய்மொழியோ தாய்மொழியோ செப்பில் இரண்டு மொன்றே
வாய்மொழியை யாரும் மறையென்பர் - வாய்மொழிபோல்
ஆய்மொழிகள் சால உளவெனினும் அம்மொழியும்
சாய்மொழிய வென்பேன் தகைந்து.

"தூரத்து மொழியோ தாய்மொழியோ சொல்லப் போனால் இறைவனுக்கு இரண்டுமே ஒன்றுதான். முனிவர்களின் வாய்மொழியான வேதங்களை எவரும் மறை என்று சொல்லு கின்றார்கள். அவர்கள் வாய்மொழிபோல மேலும் காலந் தோறும் ஆய்ந்துரைத்த மொழிகள் பலவாக உள்ளன. எனினும், அம் மொழிவகை அனைத்தும் தள்ளப்பட வேண்டியன எனவே வலியுறுத்தி உரைப்பேன்" என்பது பொருள்.
---------------

82. நாட்டின் வளம்!

ஒளவையார் வாழ்ந்த காலத்தில் தமிழகப் பரப்பில் சேர சோழ பாண்டியரும் காஞ்சித் தொண்டைமானும் சிறப்புற் றிருந்தனர். அவர்களது நாட்டின் சிறப்பினை விளக்கிக் கூறக் கருதிய ஒளவையார், அவ்வவற்றின் தனித்தன்மை தோன்ற, இந்தச் செய்யுளைச் சொல்லியிருக்கின்றனர்.

வேழம் உடைத்து மலைநாடு; மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து; தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து.

"மலைப்பகுதி நாடான சேரனுடைய நாடு யானைகளைச் சிறப்பாக உடையதாகும்.

மேன்மை நிரம்பிய சோழனுக்கு உரித்தான வளநாடோ சோற்றுப் பெருக்கத்தினை உடையதாகும்.

பூழியர்களின் கோமானான பாண்டியனின் தென்னாடு முத்துப் பெருக்கத்தை உடையதாகும்.

தெளிந்த நீர் நிரம்பி நிற்கும் வயல்களையுடைய தொண்டை நன்னாடு சான்றோர்-களைச் சிறப்பாக உடையதாகும்" என்பது பொருள்.
------------

83. காக்கை கரிது!

நால்வர் நாடுகளையும் போற்றுவது இந்தச் செய்யுள். இதன்கண் அந்தந்த நாடுகளின் வேறு சில தனிப்பண்புகளும் உரைக்கப்படுகின்றன.

'
வஞ்சி' கடற்கரையூர். அதனைக் குறிக்க அதன்கண் உள்ள நீர்ப்பறவை எல்லாம் வெண்மை நிறம் என்றனர்.

'
நான்மாடக் கூடல்' பாண்டியனுக்கு உரியது. அவனுக்குப் பஞ்சவன் எனவும் பெயர். அவன் தமிழ்ப் பேணிய தலைவன். அதனால் அவன் நாட்டிற் கல்வி வல்லமை உடையதாகத் திகழும் என்றனர்.

சோழநாட்டவர் சோற்றுக்கு நெல்மட்டும் விளைத்தவர் அல்லர். கரும்பினையும் பயிரிட்டு வந்தனர். அதன் சாறு மிகவும் இனிமையானது.

தொண்டைமானுக்கு உரியது காஞ்சி நகரம். அதன் கண் காக்கைகள் மிகுதி. அவை கருநிறம் உடையன.

இந்தக் கருத்துக்கள் கொண்டதாகச் செய்யுள் அமைந்தது; அது இது :

வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன்றன்
நான்மாடக் கூடலில் கல்வி வலிது
சோழன் உறந்தைக் கரும்பினிது தொண்டைமான்
கச்சியுட் காக்கை கரிது.

"வஞ்சிக்கண் குருகெல்லாம் வெள்ளை நிறத்தன. பாண்டியனின் நான்மாடக் கூடலிற் கல்வி வலியது. சோழனின் உறந்தையிடத்துக் கரும்பு இனியது. தொண்டைமானின் கச்சியுள் காக்கை மிகவும் கரியது" என்பது பொருள்.

காக்கை கரிது' என்பதற்குக் காவல் கடுமையானது எனவும் பொருள் கொள்வர்.
--------------

84. அனுபவித்தல்!

காவியமோ கவிதையோ அதனை அனுபவிக்கின்றவரின் தன்மையினைப் பொறுத்தே இனிதாகவும் வேம்பாகவும் தோன்றுகின்றன. இப்படி அனுபவிப்பவர், தம் குறையினை மறந்து, தாம் கற்கும் நூலிற் குறைசொல்லப் புகும் பேதைமை பெரிதும் வெறுத்தற்கு உரியது.

நல்ல சொற்சுவை நிரம்பிய கவிதைகளைக் கொடியோர் சிலர் பழித்துத் தூற்ற, அதனைக் கேட்டு மனம் வெதும்பிய ஒளவையார், இந்தச் செய்யுளைச் சொல்லுகின்றார்.

'
உலகில் மணமுள்ள தாமரை மலரும் இருக்கிறது; ஒதுக்கத் தகுந்த மலரும் உள்ளது. வண்டு தாமரையின் தேனை விரும்பிச் செல்லுகிறது. ஈயோ மலத்தை நாடி ஓடுகிறது.

இரசிகர்களிலும் வண்டைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் நல்ல பாடல்களின் அமைதிகளை அறிந்தவர்கள். நல்ல கவிஞர்கள் சொல்லும் பாடல்களின் சொற்சுவை பொருட்களை நாடி அடைந்து அவர்கள் இன்புறுவார்கள்.

ஈயைப் போன்றவர்கள் புல்லறிவு கொண்டவர்கள். அவர்கள் மட்டமான சொற்களையே நாடி இன்புறுவார்கள்.

இதனால் கவிஞர்கள், உயரிய பண்பு உடையவர்கள் உவக்கும்படியான பாடல்களையே சொல்லுதல் வேண்டும். புல்லறிவினர் பாராட்டினை ஒதுக்குதல் வேண்டும்' என்றனர்.

இலக்கணக் கவிஞர் சொல் இன்பம் தேடுவர்
மலக்குசொற் றேடுவர் வன்க ணாளர்கள்
நிலத்துறுங் கமலத்தை நேரும் வண்டதீ
தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல்.

"பாடல்களின் இலக்கணத்தை அறிந்த கவிஞர்கள் சொல்லினிமையினைத் தேடுவார்கள்; புல்லறிவினரோ கலக்க முண்டாக்கும் சொற்களைத் தேடுவார்கள். இது உலகிலுள்ள தாமரை மலரை வண்டு விரும்பியடைவதனையும், ஈ மலத்தினைச் சென்றடைதலையும் போன்றதாகும்" என்பது பொருள்.

பாடலைச் செய்பவரின் தன்மையினைக் குறித்துச் சொன்னதாகவும் இதனைக் கொள்ளலாம். ஒட்டக்கூத்தரைப் பழித்து உரைத்ததாகவும் இதனைச் சிலர் உரைப்பார்கள்.
-----------------

85. ஏற்பித்தானே!

ஒரு சமயம் பாண்டியன் மிக வலிமையுடன் விளங்கினான். கொற்கைத் துறையினின்று வஞ்சிவரைக்கும் அவனுடைய ஆதிக்க எல்லை பரவியிருந்தது. அவனுடைய விருந்தினராக ஒளவையார் சிலகாலம் தங்கியிருந்தார். அவன் அவரை மிகவும் அன்புடன் உபசரித்துப் போற்றினான். பின்னர், அவனிடம் விடைபெற்றவ ராகத் தம்முடைய சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் ஒளவையார்.

கால்நடையாகவே அவர் நடந்தார். வழியிடையில் மக்கள் படுகின்ற துயரம் அவரை வாட்டியது. உணவுக்கு எவரிடமாவது கேட்பார், அங்கே கஞ்சியும் கூழுமே அவருக்குக் கிடைத்தன.

மன்னனின் அரண்மனை உணவை நினைத்துக் கொண்டார். மக்களின் உணவையும் கருதினார். அவர் உள்ளம் வெதும்பியது. அவற்றோடு தம்மையும் ஈடுபடுத்தி இந்தச் செய்யுளைச் சொன்னார்.

சிறுகீரை வெவ்வடகுஞ் சேதாவின் நெய்யும்
மறுப்படாத் தண்தயிரும் மாந்தி - வெறுத்தேனை
வஞ்சிக்கும் கொற்கைக்கும் மன்னவனேற் பித்தானே
கஞ்சிக்கும் புற்கைக்கும் கை.

"சிறுகீரையை வதக்கிச் சூடாக வைத்த கறியுடனும், பசுவின் நெய்யுடனும், குற்றமற்ற குளிர்ந்த தயிருடனும் உணவுண்டு. அது வெறுத்துப் போனதால் பிரிந்தும் வந்தேன். வஞ்சிக்கும் கொற்கைக்கும் மன்னவன் அது பொறுக்காமற் போலும், என்னைக் கஞ்சிக்கும் கூழுக்கும் கையேந்தி நிற்கும்படியாகச் செய்துவிட்டான்!" என்பது பொருள்.
---------------

86. ஓட்டைச் செவி

அந்த நாளில் ஏழிற்குன்றப் பகுதியினை ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் தமிழ் நலம் அறியாதவன். அதனால் தமிழ்ப் புலவர்களை அவன் விரும்புவதுமில்லை; வரவேற்பது மில்லை. அப்படி யாராவது அவன்பாற் சென்றாலும் அவர்களைச் சாதாரண இரவலர்களாகவே அவன் கருதுவான்.

அந்த வழியாகச் சென்ற ஒளவையார், அவனைச் சென்று கண்டார். அவனைத் தம் வாயால் வாழ்த்தினார். அவனோ, அவரைத் சற்றும் மதியாதவனாக இருந்தான். ஒளவையாருக்குச் சினம் உண்டாயிற்று ! அவனுடைய செயலைக் குறித்து இப்படிப்
பாடுகின்றார்.

இருள்தீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே
குருடேயும் அன்றுநின் குற்றம் - மருள்தீர்ந்த
பாட்டும் உரையும் பயிலா தனவிரண்டு
ஓட்டைச் செவியும் உள.

"
இருளினும் சிறந்த நீலமணியின் ஒளிச்சிறப்பினைக் கொண்டு விளங்கும் ஏழிற்குன்றத்துக்கு உரிய மன்னவனே! எம்மை மதியாத நின் குற்றமானது நின் கண்கள் குருடாயின தனால் ஏற்பட்டது மட்டுமன்று. குற்றமற்ற பாட்டினையும் உரையினையும் கேட்டுப் பழகாதனவான இரண்டு ஓட்டைச் செவிகள் நினக்கு இருப்பதனாலும் ஏற்பட்டாகும்" என்பது செய்யுளின் பொருள்.
--------------

87. தமிழ் உடையது!

ஒரு சமயம் பாண்டியனைக் கண்டார் ஒளவையார். அம்பர்' என்னுமிடத்திலிருந்து, சித்தன் வாழ்வு' என்னும் இடத்தையும் பார்த்தவராக அவர் சென்றிருந்தார். அப்போது அம்பர், சித்தன் வாழ்வு, பாண்டிய நாடு ஆகிய மூன்றையும் சிறப்பித்து ஒளவையார் பாடிய பாடல் இதுவாகும்.

நல்லம்பர் நல்ல குடியுடைத்து ; சித்தன்வாழ்வு
இல்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப்
பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்.

"நன்மையுடைய அம்பர் என்னுமூர் நலமாக வாழும் குடிகளை உடையதாம்; சித்தன் வாழ்வு என்னும் ஊரோ வீடு தோறும் அந்தணர்களால் காக்கப்படும் முத் தீயினை உடைய தாகும். நன்மை தரும் ஒலியின்பம் என்பது பாட்டிடத் தேயே உளதாகும்; சந்திரன் வழியிலே வந்த பாண்டியனே! நின்னுடைய நாடுதான் நல்ல தமிழ் வளத்தினை உடையதாகும்" என்பது பொருள்.

அம்பர் - அம்பர் மாகாளம் என வழங்கும் தலம். சித்தன் வாழ்வு - தென்பழனி.
-------------

88. ஆயர் குலம்!

யாரோ சிலர் ஆயர் குலத்தினைக் குறித்துச் சற்று இழிவாகப் பேசியிருக்கிறார்கள் போலும்! அவர்களும் வைணவர்கள் தாம். எனினும், தாம் உயர்வானவர் என்ற செருக்கு அவர்களை அப்படிப் பேசச் செய்திருக்கிறது.

அவர்கள் பேச்சினைக் கேட்டார் ஒளவையார். அவர்கட்கு அறிவு தெளிவிக்கக் கருதியவராக இந்தச் செய்யுளைச் சொன்னார்.

மெய்வந்த கோவலர் தங்குலத் தாரை வெறுங்குலத்தோர்
கைவந்த நஞ்சொலின் வாய்வெந் திடுமந்தக் காரணங்கேள்
ஐவந்த வேள்வியில் ஐவர்க்குத் தெய்வமும் ஆகிநின்ற
தெய்வம் பிறந்த குலங்காணும் நந்தன் திருக்குலமே!

"உண்மை நெறியிலே வந்த கோவலர்களுடைய குலத்தினரை, அந்தச் சிறப்பில்லாத சில குலத்தவர்கள் வாய்க்கு வந்தபடி பழிசொன்னால், அப்படிச் சொன்னவர்களின் வாய்கள் வெந்துபோம். காரணத்தைக் கேட்பாயாக, அவர்கள் நந்த கோபனின் குலத்தினர்கள். சிறப்பமைந்த இராஜசூய வேள்வியிலே, பஞ்சபாண்டவர்க்குத் தெய்வமாக விளங்குகின்ற கண்ணபிரான் பிறந்த குலமாகும் அந்தக் குலம்" என்பது
பொருள்.
-----------------

89. கோபாலனான குணம்!

பராந்தகச் சோழனைப் பாடியதாக ஒளவையார் பெயரால் வழங்குவது இந்தச் செய்யுள்.

ஒருமுறை, அவன் சென்று கொண்டிருந்த வழியினை, எதிரில் வந்த பசுமந்தை அடைத்துக் கொண்டிருந்தது. ஒரு கொம்பினை எடுத்து அவன் அந்த மாடுகளை ஓட்டிவிட்டு, அதன்பின் தன் வழிமேற் சென்றான்.

இந்தச் சம்பவத்தை அறிந்த ஒளவையார், அவனைப் போற்றி உரைத்த செய்யுள் இதுவாகும்.

கோலெடுத்துக் கோத்துரத்துங் கோகனகச் செங்கைவடி
வேலெடுத்துக் கோத்துரத்தல் விட்டிலனே - சீதமிகு
பூபால னானாலும் போமோ புரந்தகற்குக்
கோபால னான குணம்.

"தன் செம்பொன் கையிலே வடித்த வேலினை எடுத்துப் பகையரசரைத் துரத்தும் பணியினைச் செய்யும் கோமானான இவன், இப்போது, கொம்பினை எடுத்து இந்தப் பசுக்களையும் வருட்டுகின்றான் பாரீர்!

ஒழுக்கமிகுந்த உலகினைக் காப்பவனாக இருந்தாலும், பராந்தகனுக்கு ஆநிரைகளை மேய்க்கின்றதாகிய அந்தத் தன்மையும் போய்விடுமோ?" என்பது பொருள்.

மன்னர்களைத் திருமாலின் அமிசமாகப் பிறந்தவர்கள் என்பார்கள். பராந்தகன் திருமாலின் அமிசமாகத் தோன்றியவர் என்பர். திருமால் கண்ணனாகி ஆநிரை மேய்த்த அந்தத் தன்மை அவனைவிட்டுப் போய்விடுமோ? என்கின்றார்.
--------------

90. மறப்பித்தாய்!

அதியமான் தருமபுரியில் இருந்து அரசாண்டவன். அதியர் கோமான் எனவும், மழவர் கோமான் எனவும் போற்றப் பெறுபவன். அத்துடன் ஒளவையார் பால் அளவு கடந்த நட்பும் அவருடைய தமிழ்ப் பாக்களிடத்தே அளவிறந்த ஈடுபாடும் உடையவன்.

ஒரு சமயம், நெடுநாள் உயிர்வாழ உதவும் அரிதான கரு நெல்லிக்கனி ஒன்று அவனுக்குக் கிடைத்தது. தான் உண்டு தன் வாணாளைப் பெருக்குவதற்கு நினையாமல், அதனைத் தன் அவையிலிருந்த ஒளவையாருக்கு வழங்கி மகிழ்ந்தான் அவன். அவனுடைய அந்தச் செயற்கரிய செயலை வியந்து ஒளவையார் பாடியதாக வழங்கும் செய்யுள் இது.

புள்வேளூர் என்றொரு ஊரில் பூதன் என்பவன் இருந்தான். வந்தவர்களுக்கு வாரி வழங்கிச் சிறந்திருந்தான். அவனால் உபசரிக்கப்பெற்று இன்புற்றவர் ஒளவையார். அவனுடைய அந்தச் சோற்றுக் கொடையின் நினைவு எழுந்தது. அவனுடைய ஊர் அழகிய தாமரை மலர்கள் செறிந்த குளங்களாற் சூழப்பெற்ற வளம் உடையது என்பதனையும் நினைத்தார்.

அந்தப் புள்வேளூரிடத்தே பால்போன்று இனிதான நீருடன் வருகின்ற பெண்ணையாற்றினையும் உளங்கொண்டார். 'உலகுக்கு உறும் பசியினைப் போக்கும் ஆற்றையும் பூதனையும் இவ்விடத்தே மறக்கச் செய்தாய் அதிகமானே' என்று வாழ்த்தினார். 'வலிதான கூற்றினையும் என் உயிரைப் பற்றி வருவதற்கு ஏவுவதற்கு இல்லாது நின் செயலால் நாக்கை அறுப்பித்தாய் ' என்றும் போற்றினார்.
அந்தச் செய்யுள் இது.

பூங்கமல வாவிசூழ் புள்வேளூர்ப் பூதனையும்
ஆங்குவரு பாற்பெண்ணை யாற்றினையும் - ஈங்கு
மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றின் நாவை
அறுப்பித்தாய் யாமலகந் தந்து.

"வாளாற்றல் மிக்க அதிகமானே! இவ்விடத்தே கரு நெல்லிக்கனி தந்தாய். வன்மையுடைய கூற்றினது நாவையும் அதன்மூலம் அறுந்து போகச் செய்தாய். அழகிய தாமரைத் தடாகங்கள் சூழ்ந்த புள்ளூரின் கண் இருந்து சோறூட்டு நடத்தி வரும் பூதனையும், இனிதான நீருடன் அவ்விடத்தே வருகின்ற பெண்ணையாற்றினையும் மறக்குமாறு செய்துவிட்டாய் (நீ வாழ்க" என்பது பொருள்.
--------------

91. வாழைத் தோற்றம்!

ஒளவையார் ஒரு சமயம் திருக்குடந்தை நகருக்குச் சென்றிந்தார். அங்குச் செல்வனான ஓர் உலோபி இருந்தான். ஈயாத அவனுடைய தன்மைக்கு இரங்கினார் அவர். அதே ஊரில் வந்தவர்க்கெல்லாம் இல்லையென்னாது உணவளித்து உவக்கின்ற பண்பாளன் ஒருவனும் இருந்தான். ஒளவையாரை வரவேற்று அவன் விருந்தூட்டி இன்புற்றான்.

இந்த இருவரின் தன்மைகளையும் ஒளவையார் நினைத்துக் கொண்டார். அவர்கள் வீட்டின் முற்றத்தே நின்றிருந்த வாழை மரங்களையும் கண்டார். இவ்வாறு பாடுகின்றார்.

திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்
மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்தும்
இலையுமிலை பூவுமிலை காயுமிலை என்றும்
உலகில் வருவிருந்தோ டுண்டு.

"செல்வம் குறையாது தங்கியிருக்கும் அந்த உலோபியின் வீட்டு வாழை மரம் இனிதான பழக்குலையுடன் நிற்கின்றது. திருக்குடந்தை நகரிலுள்ள மருதன் என்பானுடைய வாழையிலோ குருத்தும் இல்லை, இலையுமில்லை, பூவுமில்லை; காயும் இல்லை. உலகில் எந்நாளும் வருகின்ற விருந்தினரோடு அவன் உண்ட தன்மையினால் அது எப்படி விளங்கும்; (எனினும் அதுவே சிறந்தது" என்பது பொருள்.
----------------

92. கொதிக்கும் அருஞ்சுரம்!

ஐவேல் அசதி என்பவன் யாதவர் குலத்தினன். அந் நாளையிற் சிறந்த வள்ளலாகவும் விளங்கினான். 'ஐவேல்' அவன் தாங்கிய அழகிய வேற்படையினைக் குறிக்கும் எனவும் சொல்வார்கள். வேற்போரில் வல்லவனாக இருந்த அவனை 'ஐவேல் அசதி ' என அனைவரும் குறிப்பிட்டு வழங்கினர்.

அவனுடைய அன்பின் சிறப்பினையும், பண்பின் நலத்தினையும் கண்ட ஒளவையார், அவன் மீது ஒரு கோவைப் பிரபந்தமே பாடினார். அந்தப் பாடல்களுள் மறைந்தன போக எஞ்சிக் கிடைத்த பாடல்கள் இவை. 'செந்தமிழ்' என்னும் மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் திங்களிதழில் இவை முன்னர் வெளிவந்தன. தமிழ்ச் சுவையுள்ள அவற்றை இங்கே காண்போம்.

ஒரு தாய், தன் மகள் காதலனுடன் கூடியவளாகத் தன் வீட்டைவிட்டுப் போய்விட்டதனை அறிந்து வேதனைப் படுகின்றாள். தன் மகள் கடந்து போவதற்குரிய வழியின் கொடுமை அவள் நினைவில் எழுகின்றது; அந்தத் துறையிலே அமைந்த செய்யுள் இது.

அற்றாரைத் தாங்கிய வைவே லசதி யணிவரைமேல்
முற்றா முகிழ்முலை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ் நூல்
கற்றார் பிரிவுங்கல் லாதவர் ஈட்டமும் கைப்பொருள்கள்
அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே.

"முத்தமிழ் நூற்களையும் கற்றிருந்த சான்றோருடன் பழகினவாக்கு, அவருடைய பிரிவின் வெம்மையைப் பொறுத்தல் இயலாது. கல்லாதவர் கூட்டத்துச் சீக்கிய கற்றவர்க்கு அதன் வெம்மையைச் சகித்தல் இயலாது. கைப்பொருள் இல்லாத ஒருவன் இளமைப் பருவத்தினனாகவும் இருந்துவிட்டால், அதனால் தாங்க முடியாத வேதனைகளுக்கு உள்ளாவான். இவர்களுடைய வேதனையைப் போலக் கொதிப்பது கடத்தற்கு அரிதான சுரநெறி. கதியற்றவரைத் தாங்கிப் பேணும் ஐவேலசதியின் அழகிய மலைநாட்டின் மேல் வாழும் முற்றாத முகிழ்த்த முலையுடையவளான என் மகளும், எவ்வாறு தன் காதலனான அவனுடன் அந்நெறியைக் கடந்து சென்றனளோ?" என்பது பொருள்.
-------------

93. பெண் பிறந்தேன்!

ஓர் இளங் கன்னி ; தன்னுடைய மனங்கவர்ந்த காளையுடன் களவுறவு பூண்டு இன்புற்று ஒழுகிவந்தனள். அவன் விரைவில் பொருள் தேடி வந்து அவளை முறைப்படி மணந்து கொள்வதாகக் கூறி வேற்று நாடு சென்றிருந்தான். அவனுடைய பிரிவால் அவள் பட்ட வேதனை சொல்லுந்தரமன்று. அவளுடைய புலம்பலாக அமைந்த செய்யுள் இது.

அருஞ்சஞ் சலங்கொண்ட வைவேல் லசதி யகல்வரையின்
இருஞ்சஞ் சலஞ்சொல்ல வேண்டுங்கொ லோவென தன்னைமொழி
தருஞ்சஞ் சலமுந் தனிவைத்துப் போனவர் சஞ்சலமும்
பெருஞ் சஞ்சலங்கொண்டு யானிருந் தேனொரு பெண்பிறந்தே.

"அற்றாரைக் காப்பவன் ஐவேலசதி. அதனால், அவனை நாடி வருபவரின் துயரங்களையெல்லாம் அவன் தன் துயரமாகக் கொண்டு வருந்துவான். இப்படி நாளும் அரிதான கவலைகள் பலவும் கொண்டு விளங்கும் அவனுடைய அகன்ற மலை யிடத்தே வாழ்பவள் நான். ஆகவே, யானும் கொண்ட பெரி தான துயரக் கதையினை எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ?

என் அன்னையின் கடுமையான பேச்சுக்கள் தருகின்ற மனக்கவலை ஒருபுறமும், என்னைத் தனியே வைத்துப் போனவர் வராததால் ஏற்பட்ட மனக்கவலை ஒரு புறமுமாகப் பெரிதான கவலை கொண்டவளாக, யான் இன்னமும் ஒரு பெண்ணாகப் பிறந்தும் சாகாது உயிர் வாழ்ந்திருக்கின்றேனே? அதுதான் எனக்கு வேதனையாய் இருப்பது" என்பது பொருள்.

சஞ்சலம் - மனக்கவலை.
-------

94. வெட்டுண்டன!

இளைஞன் ஒருவன் தன்னுடைய உளங்கவர்ந்த நங்கை நல்லாளைக் காணும் பொருட்டாகக் குறித்த இடத்தினை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றான். செல்லும் வழியில், தென்னையிலிருந்து இளநீர்க் காய்களைப் பறித்து வெட்டிக் குடித்துக் களித்தான். அவன் மனக்கண் முன் அவன் காதலியின் தனபாரங்கள் அப்போது எழுந்தன. அவன், அந்த மயக்கிலே தன்னுட் சொல்லிக் கொள்வதாக அமைந்த செய்யுள் இது

அலைகொண்ட வேற்கரத் தைவே லசதி அணிவரைமேல்
நிலைகொண்ட மங்கைதன் கொங்கைக்குத் தோற்றின நீரினங்கள்
குலையுண் டிடியுண்டென் கையினி லெற்றுண்டு
குட்டுமுண்டு விலையுண் டடியுண்டு கண்ணீர் ததும்பவும் வெட்டுண்டவே.

"ஐவேலசதியின் கையிடத்து வேல் பகைவரை நோக்கி அசைந்து கொண்டிருக்கும் தன்மையும் கொண்டது. அவனுடைய அழகிய மலை மேல் குடியிருப்பினைக் கொண்ட மங்கை நல்லாள் என் காதலி. இந்த இளநீர்க் காய்கள் அவளுடைய கொங்கைகளின் உருவ எழிலுக்கு ஒப்பாகாமல் தோற்றுப் போயின. அதனால் தான் தம் நிலைகுலைந்து, தம்முள் இடியுண்டு, என் கையால் எற்றும் உண்டன. பின் குட்டுதலையும் பெற்று, விலை கூறலையும் பெற்று, அடிகளையும் பெற்றுக் கண்ணீர் ததும்புமாறு வெட்டுண்டும் போயின' என்பது பொருள்.

வேல் அலைகொள்ளல், பகைவரை நோக்கிச் செலுத்தப் படும் போது, நிலை கொண்ட மங்கை என்றது நிலையான காதல் கொண்டவளையும் குறிப்பிடும். 'விலையுண்டு' என்றது, அவன் அக் காய்களை விலைக்குப் பெற்றுதான் குடித்ததனையும் காட்டும்.
---------------

95. கோதினள் !

ஒரு மங்கை நல்லாள் தன்னுடைய மாளிகையின் நிலா முற்றத்திலிருந்து தன்னுடைய தலைமயிரைக் கோதிக் கொண்டிருக்கின்றாள். தெருவூடே சென்று கொண்டிருந்த ஒருவன் அந்தக் காட்சியைக் கண்டான். அவளுடைய அழகிலும், அவள் மயிர் கோதுகின்ற அந்த நளினத்திலும் தன் மனத்தைப் பறி கொடுத்தான். அவன் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.

அழற்கட்டுக் கட்டிய வைவே லசதி யணிவரையின்
மழைக்கட்டுக் கட்டிய மாளிகை மேலொரு மங்கை நல்லாள்
உழக்கிட் டுரியிட்டு முவ்வழக் கிட்டுரி நாழியிட்டுக்
குழற்கட் டவிழ்த்துட னங்ஙனின் றேமயிர் கோதினளே.

ஐவேலசதியின் மலை நாட்டில் கொடு விலங்குகளும் உள்ளன. ஆதலால் எப்புறமும் நெருப்பிட்டுக் காவல் செய்திருப் பார்கள். இப்படி அழற்கட்டுடன் விளங்குவது அவனுடைய அழகிய மலை.

அந்த மலையிடத்தே மேகத்திரள்கள் வந்து படிந்துள்ளதான ஒரு பெரிய மாளிகை ஒன்றின் மேல் தளத்திலே ஒரு சாரிகை வந்து நின்றாள்.

ஒயிலாக வந்து நின்ற அவள் தன்னுடைய கொண்டையை அவிழ்த்துவிட்டுத் தன்னுடைய தலைமயிரை அம் மாளிகை இடத்தில் இருந்தபடியே கோதவும் தொடங்கினாள்.

'
அவளிடத்தே யான் நெஞ்சினைப் பறிகொடுத்தேன்!'

உழக்கு என்பது கால்படி ; உரி அரைப்படி ; மூவுழக்கு முக்காற்படி, நாழி படிக்கு ஒரு பெயர். அனைத்தும் கூட்டினால், முந்நாழி ஆகும்; மூன்று நாழி மூன்று நாழிகையும் ஆகும். காலை மூன்று நாழிகை அளவில் எனலாம். மேகம் தோன்றத் தன் தோகையை விரித்து ஆடத் தொடங்கும் மயில்; அதனைக் குழல் கோதும் அவளுடன் உவமித்தனர்.
----------------

96. புறங்காட்டல் தகுமோ?

ஒரு காதலன் தன் அன்புக் காதலியை நாடி ஆவலுடன் வருகின்றான். குறித்த காலத்து வாராது போயின அவனுடைய பிழையினை நினைத்து அவள் வருந்தியிருந்தனள். அதனால், அவள் மனத்தே கூடலின் விழைவைக் காட்டிலும் ஊடலின் சினமே மிகுதியாக இருந்தது. அவனும் அதை உணர்ந்தான். அவளுடைய ஊடலைத் தெளிவித்துக் கூடுவதற்கான பல முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தான்.

இந்நிலையிலே, இரவு வேளையும் வந்தது. இருவரும் பஞ்சணையிற் சேர்ந்தும் இருந்தனர். அவன் ஆர்வமுடன் அணைக்க, அவள் அவன் கைகளை ஒதுக்கியவளாகப் புறமுதுகை அவன் பக்கம் காட்டியவளாகப் படுத்துக் கொள்கிறாள் அப்போது, அவன் அவளைத் தெளிவிக்கக் கூறுகின்ற துறையிலே அமைந்த செய்யுள் இது.

அறங்காட் டியகரத் தைவே, லசதி யகன் சிலம்பில்
நிறங்காட்டுங் கஞ்சத் திருவனை யீர்முக நீண்டகுமிழ்த்
திறங்காட்டும் வேலும் சிலையும் கொல்யானையும் தேருங்கொண்டு
புறங்காட் டவுந்தகு மோசிலைக் காமன் தன் பூசலிலே?

"ஐவேல் அசதி, அறம் இதுவென அறத்தின் தன்மை தோன்றுமாறு வழங்கிக் காட்டிய கரங்களை உடையவன். அவனுடைய அழகியதான இம் மலை நாட்டிடத்தே, எனக்கு முதுகினைக் காட்டியபடியே படுத்திருக்கும் பெண்ணே ! தாமரையிடத்துத் தங்கியிருக்கும் திருமகளைப் போன்றவளே! அவள் போன்ற முகமும், அதனிடத்தே நீண்ட குமிழ மலரைப் போன்ற மூக்கும், என்பால் தம் தொழில் வரிசையைக் காட்டும் வேல் போன்ற கண்களும், சிலை போன்ற புருவமும், கொல்லுந் தன்மையுடைய யானையின் மத்தகங்கள் போன்ற தன பாரங்களும், தேர் போன்ற அல்குல் தடமும் கொண்டவளே!

இவை அனைத்தும் இருந்தும், கரும்பு வில்லியான காமனுடைய இந்தப் போராட்டத்திலே, எதிர்நின்று வெற்றி கொள்ளாமல், புறமுதுகிட்டு ஒதுங்குதல் நினக்குத் தகுதியாகுமோ?" என்றான்.

'
வேற்படையும், வில்லும், களிறும், தேரும் கைக்கொண் டிருந்து பூசலில் புறங்காட்டலாமே?' என அவளைப் புகழ்ந்து கூறிக் களிப்புறச் செய்து, அவளைத் தெளிவிக்கின்றான் அக் காதலன்.
---------------

97. விலக்குதல் அரிது!

ஒரு காதலன், தன்னுடைய காதலியின் நோக்கினிற்பட்டுத் தன் காமமிகுந்து செயலிழந்து நின்ற நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.

ஆலவட்டம் போன்ற முழுநிலவு தங்கியிருக்கும் அழகிய மலைப் பகுதிக்கு உரியவன் ஐவேல் அசதி என்பவன். அவனுடைய மலைச்சாரலில்.....

நீலவட்டம் போன்று விளங்கும் கண்கள் நேராக ஒத்து நோக்குகின்ற அந்த நேரத்தில், அந்த நேரிய இழைகளை அணிந்த அவள்....

என்பால் மயக்கத்தை எழச்செய்து என் மனத்தைச் சுழலவும் செய்தனள். பின் என்னிடமிருந்து தான் வட்டமிட்டு ஓடவும் செய்தனள். மீளவும் என்னைத் தானிருந்த இடத்திற்கே வரவழைக்கவும் செய்தனள்.

இன்றும் அவள் தன் வேல் போன்ற கண்களை என்பால் செலுத்தி என்னை வெட்டுவாளானால், என்னால் அதற்கு இலக்காகி அழிவதன்றி, அதனைத் தடுத்து வெற்றி பெறுதல் அரிதாயிருக்குமே?" என்பது பொருள்.

ஆலவட் டப்பிறை யைவே லசதி யணிவரைமேல்
நீலவட் டக்கண்கள் நேரொக்கும் போதந்த நேரிழையாள்
மாலைவிட் டுச்சுற்றி வட்டமிட் டோடி வரவழைத்து
வேலைவிட் டுக்குத்தி வெட்டுவ ளாகில் விலக்கரிதே.

ஆலவட்டம் - ஒருவகை விசிறி. மால் - மையல். வேல் வேல் முனை போன்ற கண்கள். விலக்கல் - தடுத்து நீக்கல்.
-------------

98. நிலவு புறப்பட்டது!

ஒரு காதலன் தன் மனங்கவர்ந்த நேரிழையாளைக் கண்டு மயங்கினும், அவள் இசைவும் உறவும் அடையப்பெறாது நாளும் வருந்தி நலிந்தான். அவளுக்கும் அவன்பாற் காதல் இருந்தாலும், அதனை வெளியிட்டு உறவினை மேற்கொள்ள நாணியவளாக, ஒதுங்கிச் சென்று கொண்டிருந்தாள்.

ஒருநாள் மாலையில், அவன் சுனைக்கு நீராடச் சென்றபோது, அவள் நீராடிய பின் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தாள். இருவரும் எதிரெதிராக நெருங்கி வந்தனர். மிகவும் நெருங்கியதும் நின்றனர். அவன் சிறிது நேரம் ஊமையாகி நின்றான். அவள் தலைகவிழ்ந்து கால்விரலால் தரையைக் கிளறினாள். அவன் துணிந்தான், அவள் துவண்டாள். ஆனால் விடுபெற்றுப் புன்சிரிப்புடன் அவனைத் தழுவியபின் பிரிந்து போய்விட்டாள்.

அவன் இன்ப மயக்கத்தில் நின்றான். பொழுது சாய்ந்து நிலவும் வானத்தே எழுந்தது. அவன் காமமும் அதனால் மிகுதியாயிற்று.

அவள் புன்சிரிப்பும், தழுவிய தகைமையும், அவன் கண்முன் நின்றன. அவளை எப்படியும் தான் அடைய வேண்டும் என்று முடிவு செய்தான்.

அவர்கள் காதலுறவு கடிமணமாகவும் மலர்ந்தது. அதன்பின், ஒருநாள் நிலவில் அவர்கள் களித்திருக்கும் பொழுதில் அவன் தங்களின் அந்தச் சந்திப்பை நினைத்துக் கொள்ளுகின்றான். தான் கொண்ட மனோவேகத்தையும் சொல்லி உவக்கின்றான்.

ஆரா யிரங்கொண்ட வைவே லசதி யகன்கிரியில்
நீராடப் போகும் நெறிதனி லேயந்தி நேரத்திலே
சீரான குங்குமக் கொங்கையைக் காட்டிச் சிரித்தொரு பெண்
போராள் பிடிபிடி யென்றே நிலாவும் புறப்பட்டதே.

"ஆத்தி மரங்கள் ஆயிரக்கணக்காக விளங்கும் ஐவேல் அசதியின் அகன்ற மலைச்சாரலிலே, நீராடப்போகும் வழியிலே, அந்திப்போதிலே, சிறப்புப் பொருந்திய குங்குமச் சிமிழ் போன்ற தன் மார்பகங்களைக் காட்டிச் சிரித்தபடியே ஒரு பெண் போகின்றாள்; அவளைப் பிடித்துக்கொள் என்று தூண்டுவது போல, நிலவும் புறப்பட்டது" என்பது பொருள்.
-------

99. இபக் கோடு!

இளைஞன் ஒருவன் தன்னை ஆட்கொண்ட தன் காதலி யுடன் களவு உறவிலே சந்தித்துக் களித்து வருகின்றான். ஒருநாள், அவளுக் காகக் குறித்த இடம் நோக்கி வந்து கொண்டிருந்தான். இடை வழியில், ஓரிடத்தில், ஒருவன் காளை மாட்டுக் கொம்புகளைச் சீவிச் செதுக்கிப் பலபொருள்களைச் செய்து கொண்டிருந்தான்.

அந்தக் கொம்புகள் அவன் நினைவை அவள் தனபாரங்களிற் கொண்டு செலுத்தின. ஒரு சமயம், அவள் தனபாரங்களை, 'இபக்கோடுகள்' எனத் தான் வருணித்ததை நினைத்துச் சிரித்து கொண்டான். அவை அவள் தனபாரங்களின் அழகுக்குத் தோற்றுத்தான் இப்படி அழிகின்றன என்றும் கருதினான். அவன் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.

ஆய்ப்பாடி யாயர்தம் ஐவே லசதி யணிவரையில்
கோப்பா மிவளெழிற் கொங்கைக்குத் தோற்றிபக் கோடிரண்டும்
சீப்பாய்ச் சிணுக்கரி யாய்ச் சிமிழாய்ச் சின்ன மோதிரமாய்க்
காப்பாய்ச் சதுரங்க மாய்ப்பல்லக் காகிக் கடைப்பட்டவே.

"ஆயர்பாடிகளுள் வாழ்கின்ற ஆயர் குலத்தவரின் தலைவர் ஐவேலசதி. அவனுடைய அழகான மலைச்சாரலில், கட்டுக்கோப்பாக அமைந்தவை இவளுடைய கொங்கைகள் இரண்டும்.

இவளுடைய கோப்பான கொங்கைகட்குக் காளைக் கொம்புகள் இரண்டும் சமமாக நிலைபெற மாட்டாது தோற்றன. சீப்பாகவும், சிணுக்கரியாகவும், சிமிழாகவும், சின்ன மோதிரமாகவும், காப்பாகவும், சதுரங்கக் காய்களாகவும் பற்பல துண்டுகளாகி, அதனால் தாம் இழிநிலை பெற்றும் போயின" என்பது பொருள்.

கோப்பு - செம்மையுற அமைந்த நிலை. இபம் - இடபம்; காளைமாடு; யானையும் ஆம். பல் + அக்கு + ஆகி - பல்லக்காகி.
------------

100. அவளாகத் தோன்றும்!

ஒரு காதலன், மலைச்சாரலிடத்தே ஒரு கன்னிகையைக் கண்டான். அவள் மீது இவன் கொண்ட ஆசை அளவு கடந்த தாயிற்று. அவன், ஒரு சமயம் அந்த ஆசைப் பெருக்கினைத் தன்னைக் கடிந்து விலக்க முயன்ற தன் தோழனிடம் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.

"
கடைவாயிலில் மணியோசை ஓயாது எழுந்து கொண்டிருக்கும், வள்ளல் தன்மையினை உடையவன் ஐவேல் அசதி என்பவன். அவனுடைய அழகான மலைப்பகுதி-யினிடத்தே....

நீண்ட கயல்மீனைப் போன்ற கண்களையுடையவளான இவள் எனக்குத் தந்த ஆசையின் பெருக்கத்தினை, என்னால் எடுத்துச் சொல்வதும் அரிதாகும்.

மலையுச்சிகளும், குளமும், குளத்து அருகே நிற்கும் குன்றுகளும், காடும், செடியும் ஆகிய அனைத்துமே என் கண்களுக்கு அவளாகத் தோன்றுமே!"

என்கிறான் அவன். காண்பவை அனைத்திலுமே அவளைக் காணுகின்ற அரிய காதற்செல்வன் அவன் !

ஆடுங் கடைமணி யைவே லசதி யணிவரைமேல்
நீடுங் கயற்கண்ணி டந்த வாசை நிகழ்த்தரிதால்
கோடுங் குளமும் குளத்தரு கேநிற்கும் குன்றுகளும்
காடுஞ் செடியும் அவளாகத் தோன்றுமென் கண்களுக்கே.

'கடைமணி ஆடல் - வருகின்ற விருந்தினர் பற்றிய அறிவிப்பு. கயல் - கெண்டை மீன்.
-------------

101. சுற்றத்தாரின் இயல்பு!

ஒளவையார், ஒரு சமயம் ஒரு சத்திரத்தில் இளைப்பாறும் பொருட்டாக அமர்ந்திருந்தார். அப்போது அவருடைய உள்ளம் உலகத்தின் பல்வகைப் போக்குகளையும் எண்ணி, ஒரு நன்னெறியைப் பேணி மேற்கொள்ளாது சிதறிக் கிடக்கும். தன்மையினை நினைந்து வருத்தமுற்றதாக இருந்தது. எதிரே சற்று நோக்கினார். அங்கே கோலூன்றிக் கொண்டே முடவன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். தள்ளாடிச் சோர்ந்து மெலிவுற்று நலிந்து வந்து சேர்ந்த அவனை ஒளவையார் கூர்ந்து நோக்கினார். அவனை அதற்கு முன்பு எங்கோ கண்டிருக்கின்றார். அவன் முகம் அவருக்குப் பழக்கமானது. அவர் மனம் பழைய நினைவுகளில் சென்றது. அவனைப் பற்றிய ஆராய்வில் அவர் ஈடுபட்டார்.

அவரை நெருங்கி வந்துவிட்ட அவன், அவரை மிகவும் அன்புடன், 'தாயே! என்னை உங்கட்கு நினைவிருக்கிறதா? நீங்கள் நலந்தானா? எங்கிருந்து வருகின்றீர்கள்?' என வினவினான்.

நின்னைப்பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஆமாம்! நின்னைப் புரிந்துகொண்டேன். உனக்கு ஏனப்பா இந்த நிலை?' என்றார் ஒளவையார்.

'
தாயே! நன்றி மறந்த உலகம் இது. அன்று நல்லுடலுடன் இருந்தேன். என்பாற் செல்வ வளம் பெருகி இருந்தது. என்னைக் காண்பதற்குக் காத்திருந்தோர் பலர். என் உறவினர் என்று பெருமைப்பட்டுக் கொண்டவரும் பலர்.

இன்றோ ! என் செல்வங்கள் போயின. என் போதாத வேளை! என் காலும் நொண்டியாகப் போயிற்று. என்னைக் காணக் காத்திருந்த உறவும் சுற்றமும், நான் சென்று காண முயன்ற போதும் கதவடைத்துத் தாளிடுகின்றனர்.

அன்று உலகைப் புரியாதவன் நான். செல்வச் செருக்கால் தலை நிமிர்ந்து நடந்தேன். இன்றோ, உலகினைப் புரிந்து கொண்டேன். அதனைவிட்டு ஒதுங்கி நிற்கின்றேன் என்று தன் கதையைக் கூறினான் அவன். அவன் கண்கள் கலங்கின. ஒளவையாரின் உள்ளமும் கசிந்தது.

அவருடைய நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது உலகத்தின் போக்கு. அதன் போலித்தகைமையை நினைந்து வருந்தினார்.

உடையராய்ச் சென்றக்கால் ஊரெல்லாம் சுற்றம்
முடவராய்க் கோலூன்றிச் சென்றக்கால் சுற்றம்
உடையானும் வேறு படும்.

என்று சொல்லி அவனைத் தேற்றினார். இவனும் மனத்தெளிவு கொண்டு அவரைப் போற்றினான். பின்னர், ஒளவையாரின் முயற்சியினால், அவனுடைய வாழ்வுக் கவலை ஒழியவும் செய்தது.

"
வளமும் நலமும் உடையவர்களாகச் சென்றனரானால் ஊரெல்லாம் சுற்றமாகத் திகழ்ந்து அவரை உபசரிப்பார்கள். முடவர்களாகக் கோலூன்றியபடி இரவலராகச் சென்றால், சுற்றத்தினை உண்மையாகவே உடையவனும்கூட, வேறு நிலைக்கே உட்பட நேரும்" என்பது பொருள்.
------------

102. பொன் பெற்றேன்!

புகார் வணிகர்களுள் பந்தன் என்னும் பெயரினன் ஒருவன் இருந்தான். இவன் வணிகம் பெருக்கிப் பொன்னினை நிறைத்த தோடு மகிழ்ந்தவன் அல்லன். தமிழ்நலம் துய்த்துத் தமிழறிந்த சான்றோர்களின் ஏழ்மையைப் போக்கி, அவரைப் பொன்னுடையவராகத் செய்து புகழ் பெற்றவனும் ஆவான்.

ஒரு சமயம், ஒளவையாருக்குப் பொன் வேண்டியதிருந்தது. பந்தனின் சிறப்பினைப் பலர் சொல்லக் கேட்டிருந்த அவர், அவனைக் கண்டு வருகின்ற நினைவுடன் சென்றார். ஒளவையாரின் புகழினைக் கேட்டு, அவரைக் காண்பதற்கு முன்பாகவே அவர்பால் பேரன்பு உடையவனாகத் திகழ்ந்தவன் பந்தன்.

ஒளவையாரைக் கண்டதும், 'நீவிர் யாவிரோ? யாது காரியமோ?' என்றான் பந்தன். 'யான் அவ்வை; பொன்னை நாடி நின்னிடம் இரப்பதற்கு வந்தேன்' என்றார் ஒளவையார். அதைக் கேட்டு வருந்தினான் பந்தன், பொன்னை அவர் வேண்டியபடி கொடுத்து உவக்கச் செய்து இன்புற்றான்.

அதனாற் களிப்புற்ற ஒளவையார், பந்தனைத் தலைவனாகக் கொண்டு 'பந்தன் அந்தாதி' என்றோர் இனிய நாலினை இயற்றினார். அது காலத்தால் மறைந்து போயிற்றாயினும், அவர் பாடிய இந்தப் பாடல் பந்தனின் தகுதியை நமக்குக் காட்டுகின்றது.

யானவ்வை யென்றிரந் தேத்தினேன் ; மற்றவனும்
எனவ்வே யேனென் றிரங்கினான் - நானும் கேள்
மன்னும் புகார்வணிகன் மாநாய்கன் பந்தனெனும்
பொன்னினருள் பெற்றேனிப் போது.

"யான் ஒளவை என்று சொல்லி இரத்து நின்றவளாக அவனைப் போற்றிப் பாடினேன். அவனும், 'ஏன் அவ்வே?' எனக் கேட்டவனாக, எனக்கு இரக்கங் கொண்டான் வளம் செறிந்த புகார் வணிகனான மாநாய்கன் பந்தன் என்பவனால் நானும் இப்போது பொன்னின் அருள் பெற்றவளானேன்.
இதனைக் கேட்பாயாக" என்பது பொருள்.
-----------

103. பொய்ம் மகள்!

பொய் சொல்லாத ஒரு வாய்மை நிலை உலகத்தில் என்றுமே இருந்ததில்லை. எனினும் பொய்யைக் கலையாகப் பேணி அதற்கு உண்மை வேடத்தையும் நன்றாகப் புனைந்து உலகினை ஏய்க்கின்றவர்களும் பலர் உள்ளனர். இவர்களின் பொய்ம்மைத் திருவிளையாடல்கள் ஒளவையாரின் உள்ளத்தை வாட்டவே, அவர் பாடிய செய்யுள் இது.

ஆயத் துறைப்பிறந்து அந்தணர் பால்குடித்து ஐயிருநாள்
மாயக்கண் வேசை யிடத்தே வளர்ந்துவண் ணானொருநாள்
ஏய புலவரிடத் தெட்டுநாள் செட்டி ஏன் என்றபின்
போயக்க சாலை புகுந்தனள் காண் அந்தப் பொய்ம்மகளே.

"பொய்ம் மகள் ஆயத்துறையிலே பிறந்தாள். அந்தணரின் பால் குடித்து வளர்ந்தாள். பத்து நாள் மாயஞ்செய்யும் கண்களை யுடைய வேசையிடத்தே சென்றிருந்து மேலும் வளர்ந்தாள். வண்ணானிடம் ஒருநாள் தங்கினாள். புலவர்களிடத்தே எட்டு நாட்கள் சென்றிருந்தாள். செட்டிகளிடம் அவர்கள் இனி நமக்கு இவள் துணை ஏன் எனக் கேட்கும் வரை இருந்தாள். அதன்பின், அக்கசாலையிற் சென்று புகுந்து கொண்டாள்" என்பது பொருள்.

ஆயத்துறை - வரித்துறை. அக்கசாலை - நாணயச்சாலை. இவர்கள் எல்லாம் பொய்யினை வளர்த்துப் பெருமை கொண்டவர்கள் என்பது கருத்தாகும்.
-----------------

104. உழவே இனிது!

உழவுத்தொழில் மிகவும் உயர்ந்தது. ஏனெனில் அதுவே உலகின் பசி போக்கி உயிர்களைக் காத்து நிற்கும் அறத்தொழில் ஆகும். எனினும், அத் தொழிலினிடத்தேயும் பற்பல தொல்லைகள் இருந்தன. அவற்றால் மனம் வெதும்பிய சிலர். 'இதுவும் ஒரு தொழிலா?' என்று அதனை வெறுத்துப் பேசுவதற்கும் முற்பட்டனர்.

ஒளவையார் உழவின் சிறப்பை உணர்ந்தவர். எனினும், உழவுத்தொழில் செய்துவந்த மக்கள் பட்டுவந்த தொல்லை களையும் அவர் கண்டார். அதனால் அத் தொழில் இனிதாயிருக்க வேண்டுமானால், அமைய வேண்டிய நல்ல சூழ்நிலைகளைக் குறித்தும் சொன்னார். அந்தச் செய்யுள் இதுவாகும்.

ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
நீரறுகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குட்
சென்று வரவணித்தாய்ச் செல்வாரும் சொற்கேட்டால்
என்றும் உழவே இனிது.

"இரண்டு ஏர்களாவது உளதாக வேண்டும். வீட்டின் கண்ணேயே வித்து இருக்க வேண்டும்! அருகேயே நீர்வளம் உடைய நிலமாக இருத்தல் வேண்டும். சென்று வருவதற்கு ஊருக்குப் பக்கமான இடத்தேயும் விளங்க வேண்டும். இத்துணையும் அமைந்து, தொழில் செய்யும் பண்ணை யாட்களும் ஏவிய சொற்களின்படியே நடந்து வந்தனரானால்) என்றும் உழவே இனிய தொழிலாகும்" என்பது பொருள்.
-----------------

105. பாவையர்க்குத் தோற்றான்!

அம்பி என்றொரு தாசி இருந்தாள். அவளுக்குத் தமிழ்ப் பாடலில் மயக்கம் ஏற்பட்டது. பொய்யாமொழியாரிடம் சென்றாள். அவர் ஆயிரம் பொன் கேட்டார்.

அம்பிக்கு ஒரு நம்பிக்கை. ஐந்நூறு பொன்னைக் கொடுத்துப் புலவர் பாடும் புகழினைத் தான் அடைந்துவிட நினைத்தாள். அப்படியே சென்று பொன்னைப் பொய்யாமொழியாரிடம் வைத்து வணங்கி நின்றாள்.

அவரும், அவளுடைய கருத்தைப் புரிந்து கொண்டார். ஐந்நூறு பொன்னைப் பெற்றுக்கொண்டு,

பத்தம்பிற் பாதி யுடையான் இரண்டம்பிற்
கொத்தம்பி என்பாள் கொளப்புக்கு -

என்று, வெண்பாவின் முதலிரண்டு அடிகளை மட்டும் பாடினார். அவள், தன் செயலுக்கு நாணினாள். மீண்டும் அவள் பொன் தர முன்வந்தாள். தன்னை மன்னிக்குமாறும் வேண்டினாள். புலவரோ மறுத்துவிட்டார்.

அம்பிக்கு ஒரே வருத்தமாகப் போயிற்று. அவள் தேம்பித் தேம்பி அழுதாள். புலவரை ஏமாற்ற முயன்ற தன் செயலுக்கு தானே மனம் உளைந்து நலிந்தாள். அவளுடைய தொழிலும் சிதைவுற்று நின்றது.

ஒளவையார் அந்தச் செய்தியைக் கேட்டார். அவருள்ளம் பெண்ணுள்ளம்! அதனால், இரக்கங் கொண்டது. மேலும், தமிழ் நாவலர்கள் பொன்னைப் பெரிதாக மதித்தல் கூடாது என்ற கருத்தினையும் அவர் கொண்டிருந்தவர். ஆகவே, அந்தச் செய்யுளை அவரே பாடி முடித்தார்.

அவருடைய அருளுக்கு, அம்பியின் உள்ளம் இணையற்ற நன்றியைக் கொண்டதாகக் களித்ததொன்றே போதுமானதாய் இருந்தது. அவள் கொடுத்த பொன்னையும் மறுத்துவிட்டு, அவளை வாழ்த்திவிட்டுச் சென்றார் ஒளவையார். அந்தப் பாடல் இது!

பத்தம்பிற் பாதி யுடையான் இரண்டம்பிற்
கொத்தம்பி என்பாள் கொளப்புக்குச் - சுத்தப்
பசும்பொன் அரவல்குற் பாவையர்க்குத் தோற்று
விசும்பிடைவைத் தேகினான் வில்.

"பத்து அம்புகளிற் பாதியான ஐந்து மலரம்புகளை உடையவன் மன்மதன். அவன் கண்களாகிய இரண்டு அம்புகளையே உடைய கொத்தாக மலர்சூடி நின்ற அம்பி என்பவள் எதிர்கொள்ள, அவளோடு போரிற் புகுந்தான். தூய பசும்பொன் போன்றதும், அரவுப்படம் போன்றதுமான அல்குல் தடத்தினையுடைய அந்த அம்பிக்கு அவன் தோற்றுப் போயினான். தன் வில்லை வானத்தே வீசி எறிந்துவிட்டு, அவன் போய் விட்டான்!என்பது பொருள்..

அவள் அழகிற்கு மதனனும் தோற்றான். எனவே, அவளுடைய எழிலின் ஏற்றத்தை மிகவும் சிறப்பித்துப் பாடியதாயிற்று. அம்பியும், அதன்பின் பொலிவுற்றுச் சிறந்தனள்.
-----------------

106. என் குற்றம்

தொண்டை நாட்டில் சோழகுளம் என்றொரு ஊர் உள்ளது. இதன் பண்டையப் பெயர் சோழி சொற்கேளோம்" என்பது என்பார்கள் ஒளவை துரைசாமி பிள்ளை அவர்கள்.

இந்த ஊரிலே செல்வன் ஒருவன் இருந்தான். இவன் தமிழ்ப் புலவர்களுக்கு ஓரளவு கொடுத்து வந்தவன்தான். எனினும், சோழ நாட்டவரைக் காணவும் பிடிக்காத ஒரு தன்மை உடையவனாகவும் இருந்தான். அவர்கள் பாடினாலும் அவன் எதுவும் தருவதில்லை.

அவனுடைய இந்த உறுதியை அறியாத ஒளவையார், அவன்பாற் சென்று அவனை போற்றிப் பாடிப் பரிசிலும் வேண்டினார். அவன், "இல்லை" என்று கூறி மறுத்துவிட்டான்.

ஒளவையார் மனம் வெதும்பியவராக வெளியேறிச் சென்றார். எதிர்ப்பட்ட மற்றொரு புலவர், "ஏதாவது பெற்றீர்களோ?" என வினவினார். அவருடைய கேள்வி ஒளவையாரின் உள்ளத்தைக் குமுறச் செய்தது. அவர் அப்போது பாடிய செய்யுள் இது.

கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்
காடேறித் திரிவானை நாடா என்றேன்
பொல்லாத ஒருவனையான் நல்லாய் என்றேன்
போர் முகத்துக் கோழையையான் புலியே றென்றேன்
மல்லாரும் புயமென்றேன் தேம்பற் றோளை
வழங்காத கையனையான் வள்ளால் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!

மல்லார்தல் - மற்போர் ஆற்றுதல். தேம்பல் தோள் - மெலிவான தோள். இச்செய்யுளின் பொருள் வெளிப்படை ஆனது. " அவனிடம் இல்லாதவைகளை நான் இருப்பனவாகச் சொன்னேன். இல்லாது சொன்ன குற்றத்தால் அவனும் எனக்கு எதுவும் இல்லை என்றான் போலும். ஆகவே நான் ஏதும் பெறாது போகின்றேன்" என்கின்றார், ஒளவையார்.
------------------

107. உகுத்தேன்!

ஒளவையார் ஒரு சமயம் சிற்றரசனாக இருந்த ஒரு அறிவற்றவனைச் சென்று பாடினார். அவனோ, புலவரைப் போற்றுதலை அறியாத புன்மையாளன். அதனால், அவன் பொருள் வழங்கி அவரை உபசரிக்கவில்லை என்பதோடு, அவரை இகழ்ந்தும் பேசினான். அப்போது, ஒளவையார் சொல்லிய செய்யுள் இது.

எம்மிக ழாதவர் தம்மிக ழாரே
எம்மிகழ் வோரே தம்மிகழ் வோரோ;
எம்புகழ் இகழ்வோர் தம்புகழ் இகழ்வோர்;
பாரி யோரி நள்ளி எழிளி
ஆஅய் பேகன் பெருந்தோள் மலையனென்று
எழுவருள் ஒருவனும் அல்லை ; அதனால்,
நின்னை நோவது எவனோ? உறுவட்டு
ஆற்றாக் குறைக் கட்டி பேல
நீயும் உளையே நின்னன் னோர்க்கே;
யானும் உளனே எம்பா லோர்க்கே;
குருகினும் வெளியோர் தேஎத்துப்
பருகுபால் அன்னவென் சொல்லுகுத் தேனே.

"எம்மை இகழாதவர் தம்மையும் இகழாதவர் ஆவர். எம்மை இகழ்வோரோ தம்மையே இகழ்ந்தவர்கள் ஆவர். எம் புகழினை இகழ்பவர், தம்முடைய புகழினையும் இகழ்கின்றவர் ஆவர்.

பாரி, ஓரி, நள்ளி, எழினி, ஆய், பேகன், மலையன் என்ற வள்ளல்கள் எழுவருள் நீ ஒருவன் அல்லை. அதனால், என்னை இழித்து உரைத்த நின்னை நோவதும் எதற்கோ?

பொருந்திய வட்டினுக்கு உடைந்து பண்படாது கிடக்கின்ற குறைக்கட்டியைப் போல, நீயும் பண்பாடு அற்றவனாக உள்ளனை. நின்னைப் போன்றவர்கள் மத்தியில் நின் நிலைமை இதுதான்.

யானும் என்னை ஆதரிக்கும் இயல்புள்ள மன்னர்க்குச் சிறந்த புலவராகவே உள்ளேன். இதனையும் தெரிவாயாக.

கடற் பறவையினும் வெள்ளையான புத்தியை உடையவனே! நின் நாட்டிடத்துப் பருகும் பாலைப்போன்று இனிக்கின்ற என் சொற்களைச் சொரிந்தேனே! யானே தவறு செய்தவள்" என்பது பொருள்.

தொல்காப்பியச் செய்யுளியல் உரையுள் காட்டப்பெறும் செய்யுள் இதுவாகும். இது, தமிழ் அறிந்தவரைப் பழிக்கும் அறிவற்ற செல்வர் சிலரும் இருந்தனர் என்பதனைக் காட்டுவது மாகும்.
---------------

108. தேர்க்கால்!

அதியமான் நெடுமான் அஞ்சி' என்பவன், தகடூரில் இருந்து, தகடூர் நாட்டை அரசாண்டு வந்தவன். இவன் மழவர் குடியினரின் கோமகனாக, மங்காத வீரமும், நீங்காத பேராற்றலும் கொண்டிருந்தவன் ஆவான்.

இந்த அதியமானுக்கும் ஒளவையாருக்கும் நெருக்கமான பெரு நட்பு ஏற்பட்டிருந்தது. அதியமானின் பேராற்றலையும் பெருந்தன்மைகளையும் கண்டு வியந்து, அந்த வியப்பின் பயனாக அவனுடனேயே நெடுங்காலம் வாழ்ந்திருந்தவர் ஒளவையார் எனலாம்.

ஒரு சமயம் பகைவர்கள் சிலர் அதியமானை எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்று சதி செய்யத் தொடங்கினர். சேரர் கோமகனான பெருஞ்சேரல் இரும்பொறையும் அதியமானை அழிப்பதற்கான காலத்தை எதிர்நோக்கியபடியே காத்திருந்தான். பகைவரின் சதிச் செயல்களில் அவன் நேரடியாகக் கலந்து கொள்ளாவிட்டாலும், அவனுடைய மனப்பூர்வமான ஆதரவு அவர்கட்கு இருந்தது. அதனால் சதிகாரர்களுக்கு துணிவும் வலிமையும் அதிகமாயின.

"
அதியன் சில போர்களில் எதிரிகளை வென்றிருக்கலாம். நிலைமை அவனுக்கு சாதகமாக அவ்வேளையிலே இருந்திருக்கக் கூடும். எதிரிட்டு நின்றவரிடையே உள்ளத் துணிவும் உரமான உணர்வும் குன்றிப்போயிருத்தலும் கூடும். ஆனால், நாம் நினைத்தால், அதியமானை அழிப்பது என்பது மிகவும் எளிது!" இப்படி, ஒரு குறுநிலத்தான் வீராவேசமாகப் பேசினான்.

அவன் பேச்சைக் கேட்டதும், அந்தச் சதிகார அவை ஆரவாரித்தது. சிலர் மட்டுமே அந்தக் கருத்தை ஆதரிக்கத் தயங்கினார்கள். எதிரிகளின் கூட்டத்தைக் கண்டதும், ஏற்பட்ட உற்சாகத்தினாலே அப்படிச் சொன்னவர்கள் தாம் ஆதரித்தவர் களுள் பலர் ஆவர். அவர்களுடைய உள்ளார்ந்த மனத்தின் அடித்தளத்திலே அதியனை நினைத்தபோது எழுந்த பேரச்சம், இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்கு முன் பசகவே அவர்களின் உடலை நடுநடுங்கச் செய்தது.

"
அதியன் மாவீரன் அவனோடு நாம் கொண்ட பகையுணர்வு, அவன் நமக்குச் செய்த தீங்கினாலே ஏற்பட்டதன்று. அவனுடைய வளர்ந்துவரும் புகழைக் கேட்கக் கேட்க, நம் உள்ளத்திலே எழுந்து பெருகிய பொறாமை உணர்வினாலே ஏற்பட்டதே நம்முடைய பகைமை. ஆகவே, நம் பகைமையும் சினமும் நம்மைக் கவிய, அதனால் அறிவிழந்து, எந்தப் பேச்சையும் துடுக்காகப் பேசுதல் கூடாது. அதியனின் ஒற்றர்கள் இப்படிப்பட்ட சதி வேலையில் நாம் ஈடுபட்டிருக்கும் செய்தியை அவனிடம் தெரிவித்தனராயின், அடுத்த கணமே, நாடாளும் நாம் வானாளும் பேற்றைப் பெற்றுவிடுவோம் ! இப்படி உண்மையினைத் தெளிவாக எடுத்துக் கூறினான் ஒருவன்.

அவனுடைய பேச்சு நியாயமானது. அந்தச் சினங்கொண்ட கூட்டத்தினரிடையே அது எடுபடவில்லை. அவர்கள், தாம் கொண்டதே முற்றவும் சரியென்று நம்பினார்கள்.

"
இவன் ஒரு கோழை; அதியனின் அந்தரங்கக் கையாள்!" என்ற குரல்களை அவர்கள் எழுப்பினார்கள்.

"
எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அதைப்பற்றி எல்லாம் நான் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உங்கட்குச் சொல்லுவேன். அதியனோடு நெருங்கிப் பழகி அவனையும் அவனுடைய படைவலுவையும் நன்றாக அறிந்தவன் நான். அதனால் உங்களுடைய அவசரக் கோலத்தைக் கண்டதும், பின் வரப்போகின்ற விளைவுகளைக் குறிப்பிட்டு உங்களை எச்சரித்தேன். என் கருத்து உங்கட்கு ஏற்பதாக இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் காலம் என் கருத்தே சரியானது என்பதைக் காட்டும்" என்று சொல்லியவனாக, அவன் அந்தக் கூட்டத்தினின்றும் வெளியேறினான்.

வெளியேறியவன், தன் நாட்டை நோக்கி மிகவும் விரைவாகச் சென்று கொண்டிருந்தான். இடைவழியிலே ஒளவையார் அவனுக்கு எதிராக வந்து கொண்டிருந்தார். அவர் அதியனுக்கு மிகவும் வேண்டியவர் என்பதை அவன் நன்றாக அறிவான் அறிந்தாலும், அவருடைய தமிழ் நலத்தினை மதிப்பதற்கு அவன் என்றும் தவறினவன் அல்லன் !

"
அம்மையே! இந்தப் பக்கமாகத் தாங்கள் ஏகுவது எதற்காகவோ" என்று மிகப் பணிவுடன் அவன் கேட்க, ஒளவையாரும், "சிற்றரசர் பலரும் அடுத்த சிற்றூரில் கூடியிருப்ப தாகக் கேள்வியுற்றேன். அனைவரையும் ஒருங்கே காண்பதற்கு நல்லதொரு வாய்ப்பாயிற்றே என்றும் நினைத்தேன். அதனால் புறப்பட்டு விட்டேன்" என்றார்.

ஒளவையாருக்கும் அதியமானுக்கும் இடையேயுள்ள நெருக்கமான பிணிப்பை அவன் அறிவானாதலால், அதியனுக்கு எதிராகச் சதி செய்வதைக் கருதிக் கூடியிருக்கும் அரசர் கூட்டத்திலே ஒளவையார் செல்வது, அவருக்கே ஒருசமயம் இடையூறாதலும் கூடுமெனக் கருதி, அச்சம் அடைந்தான். அந்த அச்சத்தை அவன் முகம் தெளிவாகக் காட்டினாலும், அவன் வாய் வெளியிட விரும்பாதிருந்ததையும் ஒளவையார் கண்டார்.

"
ஏனப்பா உன் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் நிழலாடு கின்றனவே! அவற்றால் நீ குழம்புவதையும் நான் அறிகின்றேனே! அதனை வெளிப்பட உரைத்தால், யானும் கேட்டு, நினக்குச் சில அறவுரைகளைக் கூறலாம் அன்றோ ?" என்றார் அவர்.

அவன் மனம் பெரிதும் வேதனைப்பட்டது. "தாயே! அங்கு கூடியிருப்போர் அனைவரும், உங்கள் அதியனுக்கு எதிராகச் சதி செய்தபடியே இருக்கின்றனர். அங்கு நீங்கள் செல்வது முறையாகாது. ஒருவேளை தங்கட்கே அதனால் இடையூறு உண்டாதலும் கூடும்" என்றான் அவன்.

ஒளவையார் சிரித்தார். "யான் தமிழன்னைக்குத் தொண்டாற்றிவரும் ஓர் ஏழைப் பாண்மகள். உங்கள் பகையையும் உறவையும் பற்றி எனக்கேன் கவலை? ஏதோ எல்லாரும் பகையை மறந்து நட்புறவோடு பழகினால் நல்லது என்பது இந்த முதியவளின் கருத்து, உங்கள் இளமையும் அரச நிலையும் இந்தக் கருத்தை ஏற்காதென்பதும் எனக்குத் தெரியும். ஆனால், என் கடமை, நான் சொல்ல வேண்டியது. நீ நலமாகச் சென்று வருக! யானும் சென்று வருகின்றேன்" என்றார் ஒளவையார்.

ஒளவையார் தம்முடைய நடையைத் தொடர்ந்தார். அந்தச் சதி செய்வோர் இருக்கும் இடத்தையும் அடைந்தார்.

ஒளவையாரைக் கண்டதும் அவர்கள் திடுக்கிட்டனர். அவர்கள் பால் அச்சம் நிரம்பியது. தங்களுடைய சதியை ஒளவையார் அதியனிடம் வெளியிட்டால், தமக்கு அழிவு உறுதி என்பதை உணர்ந்தனர். அதனால், பேச்சை மாற்றத் தொடங்கினர். "வருக! பெருமாட்டியே! தமிழ் வளர்ச்சிக்குக் கூட்டாக முயலுவது பற்றி எண்ணமிட்டுச் செயலாற்றுவதைக் கருதியே, யாங்கள் இங்கு கூடியிருக்கின்றோம். இவ் வேளையிலே தமிழ்த் தெய்வமே வந்து தோன்றி, எங்கட்கு வாழ்த்து உரைப்பது போலத் தாங்களே நேரில் வந்துள்ளீர்கள். தங்கள் அறவுரை எங்கட்கு வழிகாட்டுமாக" என்றான் ஒருவன்.

"
உங்களுடைய பேச்சு மிகவும் நன்றுதான். ஆனால், உங்களுடைய பேச்சு உங்களது உள்ளத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லையே? எப்படியோ, நல்லதற்கோ கெட்டதற்கோ, நீங்கள் ஒன்றுகூடி இருக்கின்றீர்கள். அதுவே சிறப்பானதுதான்."

மேலும் நீங்கள் அதியனின் பகைவர் என்பதும் எனக்குத் தெரிந்ததே! ஆகவே ஒன்று சொல்வேன், கேட்பீராக :

"
ஒரு தச்சன், தேர்த் தொழிலிலே பேராற்றலுடையவன். ஒரு நாளைக்குள் எட்டுத் தேர்களைச் செய்து விடுவான். அவன் நுட்பமாக ஒரு தேரைச் சமைக்கக் கருதினான். ஒரு திங்கள் முழுதும் வேலை செய்தான். ஒரு தேர்க்கால் தான் அவனுடைய கருத்துப்படி வேலை முடிந்திருந்தது.

அவ்வளவு நுட்பமான வேலைப்பாடுகள்! அவ்வளவு செவ்வையான அமைப்பு! அந்தக் காலின் மதிப்பை ஈடு சொல்வதானால், ஒரு நாளைக்கு எட்டுத்தேர் செய்பவன் ஒரு திங்களாகச் செய்தது என்பதை மனத்துட்கொண்டு, 210 தேர்க்கால்களின் மதிப்புக்குச் சமமென்றுதானே நாம் சொல்லல் வேண்டும்.

அந்தத் தேர்க்காலைப் போன்ற சிறப்புடன் விளங்கும் போர் மறவன் ஒருவன் எம்மிடமும் இருக்கின்றான். அவன் நுட்பமான போராற்றலையும் உடையவன்.

அதனால் அவனுக்குப் பகைவரான நீங்கள், அவனுடனே போரிடற்கு எதிரிட்டவராகப் போர்க்களத்திற்குச் செல்ல நினைப்பதைக் கைவிடுவீராக. மீறிச் சென்றால் அழிவு உமக்கே என்பதையும் அறிவீராக."

ஒளவையாரின் பேச்சைக் கேட்ட அவர்களின் முகம் நாணத் தால் இருண்டது. அவர்கள், தம்முடைய சதியை அறிந்து கொண்ட ஒளவையாரின் சொற்களைச் சிந்திக்கத் தொடங்கி னார்கள். சிந்தனையில் மூழ்கிய அவர்கள், எதுவும் வேண்டா மென்ற ஒரு முடிவுக்கே வந்துவிட்டனர். அதற்குள் ஒளவையாரும், அவ்விடத்தைவிட்டு வெளியேறிவராகத் தம் பயணத்தை தொடர்ந்தார்.

களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்! போர் எதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன் னோனே.

என்பது அந்தப் புறநானூற்றுச் செய்யுள்.
---------------

109. நெல்லித் தீங்கனி!

அதியமான் தமிழார்வத்தோடு, தமிழ் மருத்துவ முறைகளுட் பலவற்றை அறிந்தவனாகவும் இருந்தான். அவனுடைய தகடூர் மலைச்சாரலும், அந் நாளிலே வளமுடனும் செறிவுடனும் திகழ்ந்தது.

அந்த மலைச்சாரலிலே, ஒரு பாறைப் பிளப்பின் உச்சியிலே, ஒரு கருநெல்லி மரம் இருந்தது. அதனை, ஒருநாள் மலைவளம் காணக் கருதிச்சென்ற அதியன் கண்டுவிட்டான். அவன் உள்ளத்திலே அளவற்ற மகிழ்ச்சி பிறந்தது.

காடு காவலரை அதியன் அழைத்தான். இந்தக் கருநெல்லி மரத்தை நன்றாகப் பேணி வாருங்கள். இதனுடைய கனி மிகவும் சிறப்பானது. பல ஆண்டுகட்கு ஒரு முறைதான் இம்மரம் காய்ப்பது இயல்பு. அதனால், இதன் கனிகளை எல்லாம் விழிப்புடன் சேகரித்து எனக்கு அனுப்புவீராக" என்றான் அவன்.

காடு காவலரும் அரசனாணையை ஏற்று, அப்படியே செய்வதாக உறுதியும் கூறினார்கள்.

பல மாதங்கள் கழிந்தன. ஒருநாள், அதியமான் அவையில் அமர்ந்திருந்தபோது, காடு காவலர்களுட் சிலர் அங்கே வந்தனர். அரசனைப் பணிந்து சில நெல்லிக்கனிகளை அவன் முன்பாக வைத்தனர்.

"
அரசே! தாங்கள் குறித்த மரத்திலே கிடைத்தவை இவை. இவற்றைச் சிதையாமற் கொய்வதற்கு மிகவும் இடருற்றோம். தங்கள் ஆர்வம்தான் எங்களை ஊக்கியது. எப்படியோ கொய்து கொணர்ந்து விட்டோம், ஏற்றருள்க" என்றனர்.

அவர்களைப் பாராட்டிச் சில பரிசுகளையும் வழங்கி விடுத்த பின்னர், அதியமான் கனிகளுடன் அரண்மனையும் சென்றான். ஓரிடத்திலே அமர்ந்து, அவற்றை உண்ணக் கருதியவனாக, ஒன்றைக் கையில் எடுத்தான். அவன் கை அப்படியே மேலெழாமல் தடைப்பட்டது. கனியைக் கீழே வைத்துவிட்டுக் காவற்காரனை அழைத்தான் அவன்.

நீ சென்று, ஒளவையாரைக் கையோடு அழைத்து வருக" என்றான்.

ஏவலனும் சென்று, அரசனாணையை ஒளவையாரிடம் சொல்லி, அவரையும் அழைத்துக் கொணர்ந்து அதியனிடம் சேர்ப்பித்தான்.

"
சுவையான இந்த கனிகளை உண்ணுக" என்று கூறி, அவற்றை ஒளவையாரின் முன்பாக நீட்டினான் அதியன்.

"
நீயும் நின் மனைவி மக்களும் உண்டாயிற்றோ ?" என்றார் ஒளவையார்.

"
யாங்கள் உண்டாயிற்று, இது தங்களின் பங்கு" என்றான் மன்னன்.

ஒளவையாரும் அந்தக் கனிகளை உண்டபின், நீர் அருந்தி விட்டு, அதன் இனிமையை வியந்தவராக, அதியன் அருகே அமர்ந்தார்.

"
அரசே! இந்தக் கனியை உண்பதற்கோ என்னை விரைந்து வரச் செய்தனை?" என்று ஒளவையார் கேட்டனர்.

"
ஆமாம்! இது கருநெல்லியின் கனி. இதனை உண்பவர் நெடுநாள் வாழ்க்கையினர் ஆவர். இதனை அறிந்த யான் மிக முயற்சியுடன் இவற்றைக் கொணரச் செய்தேன். ஆனால் உண்ண எடுத்தபோது தங்களின் நினைவு வந்தது. யான் போரே தொழிலாகிவிட்ட நாடு காவலன். இதனை உண்டு என் உடலை வலிமையாக்குவதாற் பயன் யாதுமில்லை. தங்களை உண்ணச் செய்தால், நெடுநாள் தாங்கள் தமிழ்ப்பணியைத் தொடரக் கூடுமென்று கருதினேன். நான் உண்பதை நிறுத்திவிட்டுத் தங்களை அழைத்து வரச்செய்து உண்ண வைத்தேன்" என்றான் அதியன்.

அதியனின் அளவற்ற அன்பை அறிந்ததும், ஒளவையாரின் உள்ளம் பெரிதும் கனிந்தது. தாம் நெடுநாள் வாழக் கருதுவதுதான் உலகினரின் இயற்கை. அதற்கு மாறாகத் தன்னினும் தமிழறிஞர் வாழ்வதே சிறப்பானது' என்று கருதினான் அதியன். அவன் அன்பு வியக்கத்தக்கது! அவன் செயல் போற்றத்தக்கது!

'
தேவர்கள் ' அமுதம் கடைந்தபோது, அதனிடையே கொடிய நஞ்சும் எழுந்தது. அதனால் தேவர்கள் நடுநடுங்கினர். அப்போது சிவபிரான் நஞ்சை அள்ளித் தானே உண்டான். அது அவன் கழுத்திலே நின்று, செம்மேனிச் செல்வனின் கண்டத்தை நீலகண்டமாக ஆக்கிற்று. தேவர்கள் அதன்பின் அமுதைக் கடைந்து எடுத்து, உண்டு, சாவை வென்றவராயினர்.

தேவர்களை வாழ்விக்கக் கருதித் தான் நஞ்சையுண்டு அருளாளனாக நின்ற அந்த நீலமணிமிடற்றனின் செயலையும், அதியனின் செயலையும் ஒன்றாகவே எண்ணி இன்புற்றார். அவர் முகத்திலே வியப்பும் மகிழ்ச்சியும் இணைந்து நிழலாடின.

"
யான் சொன்னவை அனைத்தும் உண்மையே. இதனை யுண்டவர் நீண்ட நாள் வாழ்வர். அதனைத் தாங்கள் தாம் அடைதல் வேண்டும். அதற்கே தங்கட்கு ஊட்டினேன், முதலிற் சொல்லியிருந்தால் தாங்கள் உண்ணாது என்னை உண்ணுமாறு வற்புறுத்தியிருக்கவும் கூடும்! அதனையும் விலக்கவே, இவ்வாறு செய்தேன்" என்று அதியன் மீண்டும் கூறினான்.

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை,
ஆர்கலி நறவின் அதியர் கோமான்,
போரடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும் நீயே! தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே!

இவ்வாறு தமிழ் மணக்கும் செய்யுளால், அந்தச் செயற்கரிய செயலை வியந்து பாடிப் பரவசமுற்றார் ஒளவையார். அந்தச் செய்யுளைக் கேட்டுப் பெருமிதங் கொண்டான் அதியன். அவன் காலத்தையும் கடந்த புகழ் வாழ்வைப் பெற்றுவிட்டான்!

"
பார்த்தீர்களா! இப்பொழுது யானும் நெடுநாள் என்ன, என்றைக்கும் வாழும் நிலைபேற்றை அடைந்து விட்டேன். தங்கள் செய்யுள் தமிழுள்ளவரை வாழும்; அது வாழும்வரை யானும் வாழ்வேன்" என்று கூறிக் களிப்பிலே திளைத்தான் அதியமான்.

அவனது பேரன்பின் முதிர்ச்சியையும், வள்ளன்மையின் உயர்ச்சியையும் உன்னியபடியே, ஒளவையாரும் களிப்பு அடைந்தார்.

இந்த நெல்லிக்கனி, உண்டாரை நெடுநாள் வாழவைக்கும் சக்தி படைத்தது என்றும், இதனை உண்டதனாலேயே ஒளவையார் நெடுநாளைய வாழ்வினராயினர் என்றும் கூறுவார்கள். இதனைப் பற்றிய மற்றொரு செய்யுளை முன்னர்க் கற்றிருப்பீர்கள் (செய்யுள் 90). அதனையும் இங்கே நினைக்கவும்.
---------------

110. அரிசியும் களிறும்!

நாஞ்சில் நாடு தமிழகத்தின் தென்கோடியிலே, இந் நாளிற் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரோடு விளங்குகின்றது. எனினும், நாஞ்சில் என்ற அதன் பழைய பெயரும் வழங்காமல் இல்லை. நாஞ்சில் நாடு என்று குறிப்பிடுவோர் பலர் இன்றைக்கும் இருக்கின்றனர்.

இந்த நாஞ்சில் நாட்டிலே, முன் ஒரு காலத்திலே வள்ளுவன்' என்னும் ஒருவன் அரசனாக வீற்றிருந்து, புகழுடன் விளங்கி வந்தான். நாஞ்சில் வள்ளுவன் எனவும், நாஞ்சிற் பொருநன் எனவும் ஆன்றோர் இவனைப் போற்றினர்.

ஒருசமயம் ஒளவையார், தம்மைச் சார்ந்தோருடன் குமரித்துறைக்குச் சென்றவர், நாஞ்சில் நாட்டின் ஒருசார் வந்து தங்கியிருந்தார். 'இருந்த அரிசி தீர்ந்துவிட்டது. உணவாக வேண்டிய அரிசியைப் பெறுவது எப்படி?' இந்தக் கவலை அவருக்கு உண்டாயிற்று.

நாஞ்சிற் பொருநனை அப்போது நினைத்தார், ஒளவையார். அவனுடைய தமிழார்வத்தையும் ஈகைப்பண்பையும் கேள்விப் பட்டிருந்தவராகையால், மிகவும் நம்பிக்கையுடனேயே அவனிடம் சென்றார்.

ஒளவையாரைக் கண்டதும், நாஞ்சிற் பொருநன் அளவுகடந்த மகிழ்ச்சியினன் ஆனான். "அம்மையே! தங்களை வரவேற்க இந் நாடு பெரிதும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். தாங்கள் என் விருந்தினராகச் சில நாட்களாவது தங்கிச் செல்லுதல் வேண்டும்" என வேண்டினான்.

அவனுடைய தமிழன்பைக் கண்டு பெரிதும் உவந்த ஒளவையார், "அரசே! முதற்கண் சிறிது அரிசி தருவதற்கு ஏற்பாடு செய்க. யாங்கள் பசியாற வேண்டும்" என்றார்.

ஒளவையாரின் வேண்டுதலைக் கேட்ட பொருநன் சிரித்தான். அவன் கண்ணோட்டம் எதிரே நின்ற ஒரு பணியாளன் மேற் சென்றது. அவன் அருகே வந்து நிற்க, அரசனும், அவனுடைய காதோடு ஏதோ சொல்லி அவனை அனுப்பி வைத்தான்.

வேண்டுவன வேலையாட்கள் செய்தனர். ஒளவையாருடன் உரையாடி இனிய தமிழமுதத்தை நுகர்ந்தபடியே, வள்ளுவனும் வெளியே வந்தான். " இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.

ஒளவையார் திகைத்தார். அவர் எதிரே ஒரு வலிய களிற்றியானை நின்றது.

"
பொருந!யான் நின்னை நாடிச் சிறிது அரிசி பெற்றுச் செல்வதற்காகவே வந்தேன், நீயோ குன்றைப் போன்ற இக் களிற்றினை நல்குகின்றனை. இதற்கு எப்படி யான் உணவளிப்பது" என்றார்.

"
அவற்றுக்கு வேண்டியனவும் இதோ பெற்றுக் கொள்க" என்று, அளவற்ற பொற்காசுகளை வழங்கி உபசரித்தான் நாஞ்சிலான். "தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அரிசியும் முன்பாகவே அனுப்பப் பெற்றிருக்கிறது" என்றும் கூறினான்.

வியப்பும், நாஞ்சிலானின் பெருந்தன்மையைக் கண்டு இறும்பூதும் மேலெழ, ஒளவையார் உளங்கசிந்து பாடுதற்குத் தொடங்கினார். அந்தச் செய்யுள் இது.

'
வானைத் தடவும் அளவுக்கு உயர்ந்திருக்கின்ற பலா மரங்களையுடைய நாஞ்சில் நாட்டின் தலைவனாகிய இவன் மடமையினை உடையவன் போலும்! செவ்விய நாவினையுடை யீரான புலவர்களே! வளையணிந்த கையினரான விறலியர்கள் தோட்டக் காட்டிலே கொய்த கீரைகளின் மேல் இட்டுச் சமைப்பதற்குச் சிறிது அரிசியினை வேண்டியே யாம் இவனை அடைந்தோம்.

இவனோ பிற வரிசை மரபுகளை அறிந்தவன், அங்ஙனம் அறிதலால், தன்னுடைய உயர்ச்சியையும் ஆராய்ந்தவனாக, பெரிய பாலை நிலம் சூழ்ந்த குன்றத்தைப் போன்றதான பெரிதான களிறு ஒன்றினை எனக்கு அளித்தான்.

இப்படிப்பட்டதொரு தெளிவில்லாத ஈகையும் உளதாமோ? பெரியோர்தம் கடனை முறைப்படச் செய்தலைப் போற்ற மாட்டாரோ?'

தடவுநிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாம் சில
அரிசி வேண்டினெம் ஆகத், தான்பிற
வரிசை அறிதலால், தன்னும் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன
பெருங்களிறு நல்கி யோனே அன்னதோர்
தேற்றா ஈகையும் உளது கொல்
போற்றார் அம்ம பெரியோர்தம் கடனே!

நாஞ்சில் வள்ளுவனின் பெருமிதம் இந்தச் செய்யுளால் நிலைபெறுகின்றது. ஒளவையாரின் உள்ளச்செவ்வியும் இதனாற் புலனாகின்றது.

கேட்பவர், தமது சிறிய அளவான தேவை நிறைவேறினாற் போதுமென்று நினைக்கலாம். ஆனால், கொடுப்பவரின் நினைவு வேறு. அது அவர்களின் தகுதியோடு ஒட்டியது. அந்தத் தகுதியை அறிந்துதான், அதற்கேற்றபடிதான், அவர்கள் வழங்கு கின்றனர்; வழங்குதல் வேண்டும். இந்த உண்மையை ஒளவையார் இச் செய்யுளால் நிலைபெறுத்துகின்றார்.
--------------

111. நல்ல நாடு!

எது நல்ல நாடாக விளங்கும்? நல்ல நாடு என்ற பெருமையைப் பெற வேண்டுமானால் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்!

மிகவும் சிக்கலான கேள்வி இது.
மிகவும் சிந்திக்க வேண்டிய கேள்வியும் இது.
ஆழமாக நுணுகி ஆராய்வதற்குரியதும் இது.
'
பொருள் நிலையிலே வளமான நாடுதான் நல்ல நாடு'
'
தொழில் வளம் சிறந்த நாடுதான் நல்ல நாடு'
'
படைவலுவிற் பெருக்கமான நாடுதான் நல்ல நாடு'
'
ஒழுக்க நெறியிற் செம்மை உடையதுதான் நல்ல நாடு'
அறிவாற்றல் மிகுந்தோரால் ஆளப்படுவதுதான் நல்ல நாடு'
ஆன்மீகத் துறையிலே உறுதியுடைத்தாயிருப்பதுதான் நல்ல நாடு'

இப்படிப் பலபடியாகப் பலரும் சொல்லுகின்றார்கள். நல்லதொரு நாட்டிலே இவை எல்லாம் இருப்பதும் இயல்புதான். ஆனால், இவையே நல்ல நாட்டிற்கான அடிப்படை ஆகிவிட முடியுமா?

இவ்வாறு சிந்திக்கத் தொடங்குவாரும் பலர். இதே கேள்வி ஔவையாரிடமும் கேட்கப்படுகின்றது.

ஒரு நாடு, மக்கள் தொகை வாழும் பண்பட்ட சமவெளிப் பிரதேசங்களை மிகுதியாகப் பெற்றிருக்கலாம். அம் மக்கள், நிலத்தைப் பயன்படுத்தி விளைவித்து வளமான வாழ்வின ராகவும் விளங்கலாம்.

ஒரு நாடு, காட்டுப் பகுதியை மிகுதியாகப் பெற்றதாக இருக்கலாம். மக்கள் காடுபடு பொருள்களைக் கொண்டு வாழ்வோராகவும் விளங்கலாம்.

ஒரு நாடு, மேட்டுப் பிரதேசமாக இருக்கலாம். ஒரு நாடு பள்ளத்தாக்குப் பகுதியாகவும் அமைந்து விடலாம்.

இப்படி நிலத்தின் அமைவை ஒட்டி, ஒரு நாட்டை நல்ல நாடென்றும், மற்றொன்றைக் கெட்ட நாடென்றும் கூறிவிட முடியுமா?

இப்படிக் கூறுவதுதான் பொருத்தமாகும்.

'நாடானால் என்ன? காடானால் என்ன?'
'
மேடானால் என்ன? பள்ளமானால் என்ன?'

'எவ்விடத்தே, அந் நிலத்தில் வாழும் ஆடவர் நல்லவர் களாக அமைகின்றனரோ, அவ்விடத்தேதான் நிலனும் நல்ல தாகப் புகழடைகின்றது.'

இவ்வாறு, நல்ல நாடு என்பதற்கு மூலமாக அமைபவர், அந் நாட்டில் வாழும் ஆடவரே என்கின்றார் ஒளவையார். மிகச் சிறந்த உண்மை இது!

ஆடவர் சிந்திக்க வேண்டிய உண்மையும் இது.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

இப்படி வாழ்த்துகின்றார் ஒளவையார். நிலவுலகத்தே ஆடவரின் பொறுப்பு எத்துணை முதன்மையானது என்பதையும் இது நன்றாகப் புலப்படுத்தும்.
----------------

112. புகழ் சாகாது!

ஒளவையார் இந் நாளிலே நம்மிடையே இல்லை. அவருடைய பருவுடல் அழிந்துவிட்ட போதும், அவருடைய உயிர்ப்பான செய்யுட்கள் பலவும் நம்மிடையே நிலவுகின்றன. அவற்றை படிக்கும் நாம் அவரை நினைக்கின்றோம். அவர் வாயாற் பாடவும், நாம் கேட்கவுமாக ஒரு மனக்காட்சியே நம்பால் உண்டாகின்றது. புகழால் அவர் என்றும் வாழ்கின்றார்.

வாழ்வு இரு நிலையது. ஒன்று பிறந்தவன் உண்டும் உடுத்தும் மணந்தும் பெற்றும் வாழ்ந்து மறைந்து போவது. இது நல்ல வாழ்வெனக் கூறுதற்கு உரியதன்று. மற்றொன்று புகழோடு வாழ்வது. புகழால் நிலை பெறுகின்ற வாழ்வுதான் நல்ல வாழ்வு. புகழ் பேசப்படும் இடமெல்லாம், அவனும் இருக்கின்றான். அந்தக் காலம் வரைக்கும் அவனும் வாழ்கின்றான்.

இந்த உண்மை ஒளவையாரால் சொல்லப்படுகின்றது. அது அவருக்கும் பொருத்தம் உடையதாகும்.

"
புனத்தை எரித்த குறவனின் செயலாலே குறைப்பட்டுப் போனதாய் கிடைக்கும் கட்டைகளைப் போன்ற கரிந்த புறத்தையுடைய விறகினாலே அமைக்கப் பெற்றது இந்த ஈம்மாகிய ஒள்ளிய அழல்.

இந்த அழல் அந்த உடலை நெருங்கினாலும் நெருங்குக; அல்லது நெருங்காமற் சென்று நீங்கியிருக்கலாம் எனினும் நீங்கியிருக்க!

இவை அனைத்தும் எப்படியிருந்தாலும், இவற்றால் அவனுடல் எரிந்து சாம்பலாக ஆகிவிட்டாலும், அவன் வாழ்வான்! புகழ் உடம்போடு அவன் என்றும் நிலைத்திருப்பான். அவன் புகழ் மாயக் கூடியதும் அன்று."

இவ்வாறு, அதியனின் உடலை ஈமத்தீ பற்றி உண்ணக் கண்ட ஒளவையார், மிகவும் தெளிவுபட நெஞ்சம் கலங்கிக் கூறுகின்றார்.

எரிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்ளழல்
குறுகினும் குறுகுக குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே!

அதியனின் புகழைப் பற்றிய ஔவையாரின் இந்த உறுதி அவருடைய புகழுக்கும் பொருந்துவதாகும். இப்படிப் புகழோடும் வாழ்ந்த சிறப்பினராக, நாம் சங்ககால ஒளவை யாரைக் காண்கின்றோம்.

சங்க இலக்கியங்களுள், ஒளவையார் பாடிய செய்யுட்கள் பலவும் மிகவும் நுட்பமான பொருளமைதியுடன் விளங்கு கின்றன. அவையனைத்தையும் கற்று, நாம் இன்புறுதற்கு முற்படல் வேண்டும்.
-----------

113. மடந்தை நட்பு !

நட்பு என்பது சிரித்து விளையாடியும், உண்டு களித்து உறவாடியும் மகிழ்தற்கு மட்டுமே உரியதாகாது. இவை நட்பினரின் இயல்பாயினும், இவற்றினும் மேலாக, என்றும் இன்பத்தினும் துன்பத்தினும் ஒன்று கலந்தவராக உறவு பூண்டிருக்கும் நட்பினை உடையவரே சிறந்த நட்பினராவர்.

இப்படிப்பட்ட சிறந்த நட்பிற்கு எடுத்துக்காட்டாகத் தமிழ் ஆசிரியர்கள் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் கொண்டிருந்த நட்புச் செறிவைக் கூறுவார்கள்.

சோழன் வளவாழ்வினனாக ஆட்சிப் பீடத்திலே அமர்ந்திருந்தபோது, தம்முடைய நட்பினைக் கொண்டு, அவனை அடைந்து களித்திருக்கப் பிசிராந்தையார் கருதினார் அல்லர். அவனைக் காணாதேயே அவனுடைய உள்ளன்பைப் பிறர் சொல்லக் கேட்ட அளவாலேயே, அவனை நட்பாகக் கொண்டு விட்ட வர் அவர்.

இப்படியே சோழனும், பிசிராந்தையாரின் தமிழ்ச் செவ்வியினைக் கேட்டும், உளப்பண்பினை அறிந்தும் அவர்பால் நட்புக் கொண்டான். இருவரது நட்பும் வளர்ந்தது. அதற்கு இருவரது நேரடியான சந்திப்புக்கூட வேண்டியிருக்கவில்லை.

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்து, அதனை மேற்கொண்டும் விட்டான். பொத்தியார் போன்ற புலவர்கள் பலர், அதனைக் கண்டு கலங்கினர். சிலர் அவனைப் பிரிந்து வாழ்வதற்கு மனமற்றவராகத் தாமும் அவனுடன் வடக்கிருக்கலாயினர்.

"
பிசிராந்தை வருவாரோ?" என்றார் ஒருவர்.

"
தவறாமல் வருவார். என் நல்ல காலத்தில் வராதிருந்தாலும், என்னுடைய அல்லற் காலத்தில் வராதிருப்பார் அல்லர்" என்று உறுதியுடன் சொன்னான் சோழன்.

சொன்னபடியே அவரும் வந்தார். அவருடைய உள்ளம் சோழனுக்குத் துயரஞ்சூழ்தலை அவருக்கு உணர்த்த, அவர் தாமே விரைந்து நடந்து, சோணாட்டை அடைந்தார்.

"
பிசிராந்தையார் வந்தார் " என்றதும், பலரும் வியப்புடன் மெய்மறந்து அவரைப் போற்றினர். அவர் சோழனை உவகையோடு கண்டார். அவனருகே தாமும் அமர்ந்தார். இருவரது உயிரும் ஒரே வேளையிற் பிரிந்தது. சாவின் செயல் அவர்களை ஒன்றுபடுத்தியது.

இப்படியே, காதல் கொண்ட தலைவன் தலைவியராகிய இருவரும் தமக்குள் பிரிக்கவியலாத நட்புப் பூண்டு ஒழுகுவது பண்டைத் தமிழகத்தில் இயல்பாயிருந்தது.

இளைஞன் ஒருவனுக்கும் கன்னி ஒருத்திக்கும் இடையே காதல் முகிழ்கலாயிற்று. அது மலர மலர, அவர்களது நெருக்கமும் உறுதியாகத் தொடங்கியது. பெற்றவரை அறியாதே அவர்களின் களவுறவும் நிகழத் தொடங்கிற்று.

கன்னியின் செவிலித்தாய் தன் மகளது மேனியில் தோன்றிய புதுப் பொலிவுகளைக் கண்டாள்! அவள் மனம் சிதறியது. தெய்வக் குற்றமோ என ஐயுற்றாள். வேலனை அழைத்து, வெறியாட்டு அயர்வதற்கும் ஏற்பாடு செய்தாள்.

வாயாடிப் பெண்கள் சிலருக்குக் கன்னியின் களவு உறவைப் பற்றிய செய்திகள் காற்றுவாக்கிற் கிடைத்து விட்டன. அவர்களின் வாய்மடை திறந்தது; வார்த்தைகள் வரை கடந்து வெளிப்பட்டன.

"
ஒன்றுமறியாத கன்னியைப் பாருங்கள் ! இவள் உறவுக்குச் சோலை மரங்கள் சான்று சொல்லுமே!"

"
இவள் காதலன் எவனோ? இவளை மயக்கிய அவனது எழில்தான் எத்துணைப் பேரழகோ?"

இப்படிப் பேச்சுக்கள் மலிந்தன. இதனால், அவர்களுடைய களவுச் சந்திப்புக்கள் குறைந்தன. பகற் போதில் அவளை தனியாகப் பார்ப்பதே அவனுக்கு அரிதாயிற்று. அவள் குளிக்கச் சென்றாலும், மலர் கொய்யாப் போனாலும், ஆடற்கு ஏகினாலும், அவளைத் தோழியர் சூழ்ந்து மொய்த்தபடி கண்காணிக்கத் தொடங்கினர்.

இரவு வேளையிற் சந்திக்கும் வாய்ப்புஞ் சில நாட்களே கை கூடிற்று. அதன்பின் காவல் கடுமையாயிற்று.

அவளை மறக்க முடியாமல் அவன் மெலிந்தான். அவனை அடைய இயலாமல் அவள் தவித்தாள்.

அவன், தன் பெற்றோரிடம் நிகழ்ந்ததைச் சொன்னான். அவர்கள் அவனுடைய எண்ணத்தை மறுக்கவில்லை. சான்றோர் சிலரைக் கன்னியின் வீட்டிற்கு, உரிய பரிசுப் பொருள்களுடன் அனுப்பி வைத்தனர்.

அவர்கள் சென்று மணம் பேசினர். கன்னியின் பெற்றோர்க்கு அவர்களின் களவுறவு தெரியாது. அவர்கள் அவளைத் தம் உறவில் ஓரிளைஞனுக்கு மணமுடிக்கக் கருதியிருந்தனர். அதனால், சான்றோரின் வேண்டுதலை ஏற்காது மறுத்தனர்.

தலைவியின் உள்ளம் படாதபாடு பட்டது. தான் காதலித்தவனை மறந்து, மற்றொருவனுடன் வாழ்வதென்பதை, அவளால் நினைக்கவும் முடியவில்லை. அவள் புழுவாகத் துடித்தாள். அவள் கண்கள் கண்ணீர்க் குளமாயின.

"
ஏனடீ! இந்தப் பிடிவாதம்? எவனையோ கண்டாளாம்? காதல் பிறந்ததாம்? அவனையே மணக்க வேண்டுமாம்? இது நடக்கக் கூடியதா? நீ பிறந்த போதே உன் கணவன் என்று நாங்கள் உறுதி செய்தவன், உனக்காகக் காத்திருக்கின்றான். அவனை விட்டு, இன்னொருவனை எப்படியடீ நீ நினைத்தாய்?

இப்படிப்பட்ட கண்டனக் கணைகள் பல அவளைத் தாக்கின. பிரிவுத் துயரம் ஒரு புறமும், இல்லத்தாரின் காவற் கடுமையும், கடுஞ்சொற் கொடுமையும் மற்றொரு புறமுமாக அவளைத் தாக்கின. அவள் கண்கள் நீரூற்றுக்கள் ஆயின. அவள் பூச்சும் மறந்தாள்; புனைவும் துறந்தாள் ! ஊணும் மறந்தாள்; உறக்கமும் இழந்தாள் !

அவளுடைய ஆருயிர்த் தோழி ஒருத்திக்கு இந்த அவலமான போக்கை நினைக்க நினைக்கப் பெரிதும் வேதனையாக இருந்தது. அதனை எப்படியும் போக்கி விடுதற்கு அவள் திட்டமிடலானாள்.

கன்னியின் காதலனைக் கண்டு பேசினாள். "எப்படியாவது வீட்டிலிருந்து அவளைக் கடத்திக் கொண்டு வந்து விடுகின்றேன். உன்னுடன் அவளை அழைத்துப்போய் விடு. உன்னுடைய ஊருக்குச் சென்று இருவரும் மணந்து கொள்ளுங்கள்" என்றாள்.

அவனும் அதற்கு இசைந்தான். அவளுக்காகக் குறித்த இடத்திற்குச் சென்று காத்துக் கிடக்கலானான்.

ஒரு நாள் இரவின் கடைசிச் சாம வேளையில், அவனை யாரோ எழுப்ப, அவன் திடுக்கிட்டு விழித்தான். உறக்கத்தின் அணைப்பிலே, தன் காதலியோடு உறவாடியிருந்த கனவு கலைந்து போனதை நினைந்த வருத்தத்துடன், தோழியை நிமிர்ந்தும் நோக்கினான்.

"
இதோ பார். சீக்கிரமாக எழுந்திரு. உன் காதலி அந்த வேங்கை நிழலில் உனக்காகக் காத்திருக்கின்றாள். உடனேயே சென்று விடுங்கள்" என்றாள்.

அவன் காதுகளில் அச் சொற்கள் விழவும், அவனிடம் புதுக் கிளர்ச்சியும் வலிமையும் தோன்றின. தோழிக்கு நன்றி சொல்லக் கூட அவன் நிற்கவில்லை. வேங்கை மரத்தடிக்கு விரைந்தான்.

அவர்களின் நினைவை மீண்டும் உலகிற்குத் திருப்பத் தோழி பட்டபாடு பெரிதாயிருந்தது. அவர்கள் சென்று விட்டனர்.

பொழுது விடிந்ததும், தலைவியின் இல்லத்திலே ஒரே பரபரப்பு உண்டாயிற்று. அவளைத் தேடியவாறு ஆட்கள் நாலாபுறமும் சுற்றித் திரிந்தனர்.

செவிலித்தாய்க்கு ஒரு நிலைப்படவில்லை. அவள் தன் மகளான, கன்னியின் காதற் தோழியைத் தன்னருகே அழைத்தாள். தலைவியைக் கண்டனையோ எனவும் கேட்டாள்.

"
இதற்குள் அவர்களின் மணம் நிறைவேறியிருக்கும், அவர்கள் ஊரில்" என்றாள் மகள்.

தோழியின் கவலையற்ற முகபாவம், அவள் சொற்களின் உறுதியைக் காட்டின. செவிலித்தாயின் கவலைகள் மறைந்தன. அவளது ஏக்கம் நீங்கிற்று. அவள் நேராகத் தலைவியின் தாயிடம் சென்றாள்.

"
மிகப் பழையதான ஆல மரத்தின் அடிக்கண்ணுள்ள பொதுவிடத்தே தோன்றிய, நாலூர்க்கோசரின் நன்மொழி பின்னர் உண்மையாகியதை நாம் கண்டுள்ளோம். அதைப் போலவே, அழகிய வீரக்கழலையும், செவ்விய வெள்வேலையும் கொண்ட தலைவனோடு, தொகுவளை முன்கையினளான நம் மடந்தை கொண்ட நட்பும் பொய்யாகிப் போகவில்லை மணப்பறை ஒலிக்கவும், சங்கம் முழங்கவும் மணவினை நிகழ, உண்மையே ஆயிற்று."

அவள் இப்படிச் சொன்னாள். அவள் உள்ளம் மகளின் மணவினைக் காட்சிகளைத் தன்னுட்கண்டு, மகளை வாழ்த்துவதாயிற்று! பெற்ற தாயும், மகளின் நல்வாழ்வைக் குறித்து வாழ்த்தத் தொடங்கினாள் ! பிறரும் அவர்களுடன் கலந்து கொண்டனர்.

தந்தையும் பிறரும் முதலில் ஆத்திரம் அடைந்தாலும், அடுத்து அவள் கற்புச் செல்வி; அதனால் அவள் காதலை அவள் நிறைவு செய்து வெற்றி கண்டாள்' எனத் தெளிவுற்றனர்.

அனைவரும் அந்த மணவிழாவிற் கலந்துகொள்ளப் புறப்பட்டனர். அவளை வாழ்த்தவும் அவள் மணக் கோலத்தைக் கண்டு களிக்கவும், ஒருவருக்கொருவர் முந்திச் செல்வாராயினர்.

இவ்வாறு, நிகழ்ந்த அறவாழ்வின் செப்பத்தைத் தாய்க்குச் செவிலித்தாய் சொன்ன செய்தியைக் கொண்டு காட்டுகின்றார் ஒளவையார்.

பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி - ஆய்கழல்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே! (குறுந். 15)

பறை - மணப்பறை. இறை கொள்ளல் - தங்கியிருத்தல். தொன்மூதாலம் - மிகப் பழைய ஆல மரம். பொதியில் - பொது விடம் ; ஊர் மன்றம். நாலூர் - ஓரூர்; கோசர் - ஒரு சாதியார்; மறமாண்பினும், சொல் தவிராமையினும் சிறந்தவர். இவர் தாம் வாக்களித்தபடி மோகூர்ப் பழையனைத் தாம் காத்து நின்றனர். சேயிலை - சிவந்த இலைப்பகுதி; சிவப்பு, குருதிக் கறையால் உண்டாயது; அது வீரத்தின் அடையாளம். விடலை - இளைஞன். கழல் - வீரக்கழல்.

இவ்வாறு, சமுதாயத்தின் மரபுகளையும் ஒளவையார் மிகவும் நுட்பமாக உரைத்துள்ளார். இத்தகைய செய்யுட்கள் பலவற்றையும், அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய அகத்துறை நூல்களுட் காணலாம்.
-------------


ஒளவையார் தனிப்பாடல்கள் -- பாடல் முதற் குறிப்பு

(எண் - செய்யுள் எண்)

அற்ற தலை போக -14

ஐம்பொருளும் 77

அரியது கேட்கின் 58

ஐயம் இடுமின் 78

அற்றாரைத் தாங்கிய 92

ஒன்றாகக் காண்பதே 71

அருஞ்சஞ் 93

ஒருகையிரும்ருப்பு 21

அலை கொண்ட 94

ஒருகொம்பிரு 21

அழற்கட்டுக் 95

கருங்காலிக்கட்டைக்கு 54

அறங்காட்டி 96

கருணையாலிந்த 25

ஆயன் பதியில் 30

கரியாய்ப் 35

ஆர்த்த சபை 45

கற்றது கைம் 38

ஆலைப் பலாவாக்க 59

கருங்குளவி 51

ஆங்காலம் 69

கல்வியுடையீர் 70

ஆலவட்டப் பிறை 97

கல்லாத ஒருவனை 106

ஆராயிரங்கொண்ட 98

களம்புகல் 108

ஆய்ப்பாடி யாயர் 99

காதுசேர் 76

ஆடுங் கடைமணி 100

காசினியில் 61

ஆயத்துறை 103

காலையில் ஒன்றாவர் 37

இட்டமுடன் 1

காணக்கண் 13

இருந்து முகந்திருத்தி 12

காணாமல் 7

இனியது 56

கால்நொந்தேன் 3

இறுக முடிந்தே 75

கூரிய வாளால் 10

இலக்கணக் கவிஞர் 84

கூழைப் பலா 11

இருள் தீர்மணி 86

கொடியது 55

இவ்வளவு கண் 77

கோலெடுத்து 89

ஈதலறம் 62

சண்டாளி 16

உள்ள வழக்கு 47

சித்திரமும் 6

உடையராய் 101

சிரப்பான் மணிமவு 29

எட்டேகால் 18

சிறுகீரை 85

எண்ணாயிரத்தாண்டு 53

சுரதந்தனில் 8

எரிபுனக் 112

சுற்றுங் கருங்குளவி 43

எழுபிறவி 78

சென்றுழுதுண்பதற்கு 49

எழுதரிது 79

செம்மான் கரத்தன் 40

எம்மிகழாதவர் 107

சேரலர்கோன் 22

ஏருமிரண்டு 104

சேய்மொழியோ 81

ஏசியிடலின் 34

சொல்லாமலே 31

---------

தடவுநிலைப் 110

போந்தவுதா 64

தண்டாமலீவது 46

மதுரமொழி 2

தண்ணீருங் காவிரி 17

மதியாதார் 41

தாயோடறுசுவை 63

மாடில்லான் 66

திங்கட் குடையுடை 28

முத்தெறியும் 26

திருத்தங்கி 91

மூவர் கோவையும் 73

நம்பன் அடியவர்க்கு 9

மெய்வந்த கோவலர் 88

நல்லம்பர் 87

மேற்பார்க்க 72

நல்லார்கள் 68

யானவ்வை 102

நாடா கொன்றோ 111

வரகரிசிச் சோறு 33

நிழலருமை 60

வஞ்சி வெளிய 83

நிட்டூரமாக 65

வண்டமிழைத் தேர்ந்த 74

நூற்றுப்பத் தாயிரம் 32

வலம்படு 109

நூலெனிலோ 39

வழக்குடையானிற்ப 48

நேசனைக் காணா 67

வானமுளதால் 52

பத்தம்பிற் பாதி 105

வாதவர் கோன் 42

பத்தாவுக் கேற்ற 15

வான் குருவி 5

பறைபடம் 113

விரகர் இருவர் 4

பாரி பறித்த 19

வெண்பா விருகாலிற் 50

பாடல் பெறானேல் 36

வெய்தாய் நறுவிதாய் 20

புகார் மன்னன் 23

வேழம் உடைத்து 82

பூங்கமல 90

வையக மெல்லாம் 44

பெரியது 57

வையைத் துறைவன் 24

பொன்மாரி 27

----------- x--------x-----ccccv

 


This file was last updated on 21 Sept. 2020.
Feel free to send the corrections to the webmaster. courtesy;  https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0745.html  tq

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...