"NATHTHAARPADAI"("நத்தார்படை")~SUNDHARAR DHEVARAM ~ SUNG BY KARUR SRI KUMARA.SWAMINATHAN & OTHERS........
திருச்சிற்றம்பலம்.
நத்தார்படை* ஞானன்பசு
வேறிந்நனை கவுள்வாய்
மத்தம்மத யானையுரி
போர்த்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு
பாலாவியின் கரைமேல்
செத்தாரெலும் பணிவான்திருக்
கேதீச்சரத் தானே. 1.
(*நத்தார்புடை - என்பதும் பாடம்.)
சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறை கீளும்
கடமார்களி யானையுரி
யணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
திடமாஉறை கின்றான்திருக்
கேதீச்சரத் தானே. 2.
அங்கம்மொழி யன்னாரவர்
அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
பாலாவியின் கரைமேல்
செங்கண்ணர வசைத்தான்திருக்
கேதீச்சரத் தானே. 3.
கரியகறைக் கண்டன்நல
கண்மேல்ஒரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும்
மாதோட்டநன் னகருள்
பரியதிரை யெறியாவரு
பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்திருக்
கேதீச்சரத் தானே. 4.
அங்கத்துறு நோய்கள்ளடி
யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்
கேதீச்சரத் தானே. 5.
வெய்யவினை யாயவ்வடி
யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பையேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
செய்யசடை முடியான்திருக்
கேதீச்சரத் தானே. 6.
ஊனத்துறு நோய்கள்ளடி
யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல்
மாதோட்டநன் னகரில்
பானத்துறு மொழியாளொடு
பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்திருக்
கேதீச்சரத் தானே. 7.
அட்டன்னழ காகவ்வரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பட்டவ்வரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேல்
சிட்டன்நமை யாள்வான்திருக்
கேதீச்சரத் தானே. 8.
மூவரென இருவரென
முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பாவம்வினை யறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல்
தேவன்எனை ஆள்வான்திருக்
கேதீச்சரத் தானே. 9.
கரையார்கடல் சூழ்ந்தகழி
மாதோட்டநன் னகருள்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
தொண்டன்னுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே. 10.
திருச்சிற்றம்பலம்.
தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர்
வரலாறு தட்டச்சுத் தேடல்
நன்கொடையாளர் நன்கொடை வழங்குக
பண்களும் இசையும்
திருமுறைக்
கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு
பின் செல்க
திருக்கேதீச்சரம்
பண் :நட்டபாடை
பாடல் எண் : 1
நத்தார்படை
ஞானன்பசு
வேறிந்நனை
கவுள்வாய்
மத்தம்மத
யானையுரி
போர்த்தமண வாளன்
பத்தாகிய
தொண்டர்தொழு
பாலாவியின்
கரைமேல்
செத்தாரெலும்
பணிவான்திருக்
கேதீச்சரத் தானே
பொழிப்புரை :
விரும்புதல்
பொருந்திய பூதப் படைகளையுடைய ஞான உருவினனும் , இடபத்தை ஏறுகின்றவனும் , நனைய ஒழுகுகின்ற இடங்களில் மயக்கத்தைத் தரும்
மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்த மணவாளக் கோலத்தினனும் ஆகிய , திருக்கேதீச் சரத்தில் எழுந்தருளிய பெருமான் ,
அன்பர்களாகிய அடியவர்கள்
வணங்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல் , இறந்தவர்களது எலும்பை அணிபவனாகக் காணப்படுகின்றான் .
குறிப்புரை :
` நத்தார் படை `
என்றதனை , ` நத்தார் புடை ` என ஓதி , ` சங்கினை ஏந்திய திருமாலை ஒரு பாகத்தில் உடைய `
என்று உரைப் பாரும் உளர்
. ` நனைய ` என்பதன் இறுதிநிலை எஞ்சி நின்றது , ` செய் தக்க ` என்றாற்போல ( குறள் -466.) ` போர்த்த ` என்ற பெயரெச்சம் , ` மணவாளன் ` என்றதன் இறுதிநிலையொடு முடிந்தது . ` மழுவாளன் என்பதும் பாடம் . ` பற்று ` என்பது , எதுகை நோக்கி , ` பத்து ` எனத் திரிந்து நின்றது . ` அணிவான் ` என்பது , ` அணிபவனாகின்றான் ` என ஆக்க வினைக்குறிப்பாயிற்று . நிகழ்காலம் ,
முந்நிலைக் காலமும்
தோன்றும் இயற்கையைக் குறித்தது . வருகின்ற திருப்பாடல்களிலும் இவ்வாறே கொள்க .
பண் :நட்டபாடை
பாடல் எண் : 2
சுடுவார்பொடி
நீறுந்நல
துண்டப்பிறை
கீளும்
கடமார்களி
யானையுரி
யணிந்தகறைக்
கண்டன்
படவேரிடை
மடவாளொடு
பாலாவியின்
கரைமேல்
திடமாஉறை
கின்றான்திருக்
கேதீச்சரத் தானே
பொழிப்புரை :
சுடப்பட்ட
நுண்ணிய பொடியாகிய நீற்றையும் , நல்ல பிளவாகிய
பிறையையும் , கீளினையும் ,
மதம் நிறைந்த
மயக்கத்தையுடைய , யானையினது
தோலையும் அணிந்த கறுத்த கண்டத்தை உடையவனாகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான்
, பாலாவி யாற்றின் கரைமேல் ,
பாம்பு போலும் இடை
யினையுடைய மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான் .
குறிப்புரை :
` பிறை , உரி ` என்றவற்றின் பின்னும் எண்ணும்மை விரிக்க . ` படம் `, ஆகுபெயர் . இடைக்கு , பாம்பையும் உவமை கூறுதல் மரபாதல் அறிக .
பண் :நட்டபாடை
பாடல் எண் : 3
அங்கம்மொழி
யன்னாரவர்
அமரர்தொழு தேத்த
வங்கம்மலி
கின்றகடல்
மாதோட்டநன்
னகரில்
பங்கஞ்செய்த
பிறைசூடினன்
பாலாவியின்
கரைமேல்
செங்கண்ணர
வசைத்தான்திருக்
கேதீச்சரத் தானே
பொழிப்புரை :
பிளவு செய்த
பிறையைச் சூடினவனாகிய , திருக்கேதீச்சரத்தில்
எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , வேதத்தின்
அங்கங்களைச் சொல்லுகின்ற அத்தன்மையையுடைய அந்தணர்களும் , தேவர்களும் வணங்கித் துதிக்க , மரக்கலம் நிறைந்த கடல் சூழ்ந்த , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல்
, சினத்தாற் சிவந்த
கண்ணையுடைய பாம்பைக் கட்டி யுள்ளவனாய்க் காணப்படுகின்றான் .
குறிப்புரை :
` பங்கு ` என்பது , ` பங்கம் ` என வந்தது . இனி , ` பங்கம் - குறை ` எனலுமாம் .
பண் :நட்டபாடை
பாடல் எண் : 4
கரியகறைக்
கண்டன்நல
கண்மேல்ஒரு
கண்ணான்
வரியசிறை
வண்டியாழ்செயும்
மாதோட்டநன்
னகருள்
பரியதிரை
யெறியாவரு
பாலாவியின்
கரைமேல்
தெரியும்மறை
வல்லான்திருக்
கேதீச்சரத் தானே
பொழிப்புரை :
கருமையாகிய ,
நஞ்சினையுடைய கண்டத்தை
யுடையவனும் , நல்ல
இருகண்கள்மேலும் மற்றொரு கண்ணை யுடையவனும் ஆகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற
பெருமான் , கீற்றுக்களையுடைய
சிறகுகளையுடைய வண்டுகள் யாழின் இசையை உண்டாக்குகின்ற , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் , பருத்த அலைகளை வீசிக்கொண்டு வருகின்ற பாலாவி
யாற்றின் கரைமேல் , ஆராயத்தக்க
வேதங்களை வல்லவனாய்க் காணப்படுகின்றான் .
குறிப்புரை :
ஞாயிறும் ,
திங்களும் உலகினைப்
புரப்பனவாகலின் , அவைகட்கு அமைந்த
கண்களை , ` நல்ல கண் `
என்று அருளினார் . தீக்கு
அமைந்த நெற்றிக்கண் , உலகினை
அழிப்பதாதல் அறிக . ` மேலும் ` என்னும் சிறப்பும்மை , தொகுத்தலாயிற்று . ` யாழ் `, ஆகுபெயர் .
பண் :நட்டபாடை
பாடல் எண் : 5
அங்கத்துறு
நோய்கள்ளடி
யார்மேலொழித்
தருளி
வங்கம்மலி
கின்றகடல்
மாதோட்டநன்
னகரில்
பங்கஞ்செய்த
மடவாளொடு
பாலாவியின்
கரைமேல்
தெங்கம்பொழில்
சூழ்ந்ததிருக்
கேதீச்சரத் தானே
பொழிப்புரை :
தன் அடியார்கள்
மேலனவாய் , அவர்களது
உடம்பிற் பொருந்துகின்ற நோய்களை முற்றக் களைந்தருள்பவனாகிய சிவபெருமான் , மரக்கலங்கள் நிறைந்த கடல் சூழ்ந்த , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் , தனது திருமேனியின் ஒரு கூற்றை அழகு செய்கின்ற
மங்கை ஒருத்தியுடன் , பாலாவி யாற்றின்
கரைமேல் , தென்னஞ் சோலை
சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருப் பவனாய்க் காணப்படுகின்றான் .
குறிப்புரை :
` அடியார்மேல்
அங்கத்துறு ` என்றதனை ,
` மாடத்தின் கண்
நிலாமுற்றத்திருந்தான் ` என்பதுபோலக்
கொள்க . உயிரின்கண் உறும் நோயை ஒழித்தலையன்றி , ` ஈண்டு , உடற்கண் உறும் நோயை ஒழித்தலை
விதந்தோதியருளினார் ` என்க . ஒற்றுமை
பற்றி , உடல் , உயிர்க்கு உறுப்பாய் நிற்குமாறு உணர்க . `
அருளி ` என்றது பெயர் .
பண் :நட்டபாடை
பாடல் எண் : 6
வெய்யவினை
யாயவ்வடி
யார்மேலொழித்
தருளி
வையம்மலி
கின்றகடல்
மாதோட்டநன்
னகரில்
பையேரிடை
மடவாளொடு
பாலாவியின்
கரைமேல்
செய்யசடை
முடியான்திருக்
கேதீச்சரத் தானே
பொழிப்புரை :
திருக்கேதீச்சரத்தில்
எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தன் அடியவர்மேல்
உள்ள கொடிய வினைகளாய் உள்ளன வற்றை முற்ற ஒழித்துநின்று , நிலவுலகத்தில் உள்ளார் உணர்ந்து மகிழ நிற்கின்ற
, கடல் சூழ்ந்த , ` மாதோட்டம் ` என்னும் நகரத்தில் , பாம்பு போலும் இடையினை உடையவளாகிய ஒருத்தியோடு ,
பாலாவி யாற்றின் கரைமேல் ,
சிவந்த சடைமுடியை
உடையவனாய்க் காணப் படுகின்றான் .
குறிப்புரை :
` ஒழித்தருளி `
என்ற வினையெச்சம் ,
` சடைமுடியான் ` என்னும் வினைக்குறிப்பிற்கு அடையாய் நின்றது . `
மலிகின்ற ` என்ற பெயரெச்சம் , ` நகர் ` என்ற ஏதுப் பெயர்கொண்டது . ` பை `, ஆகு பெயர் .
பண் :நட்டபாடை
பாடல் எண் : 7
ஊனத்துறு
நோய்கள்ளடி
யார்மேலொழித்
தருளி
வானத்துறு
மலியுங்கடல்
மாதோட்டநன்
னகரில்
பானத்துறு
மொழியாளொடு
பாலாவியின்
கரைமேல்
ஏனத்தெயி
றணிந்தான்திருக்
கேதீச்சரத் தானே
பொழிப்புரை :
திருக்கேதீச்சரத்தில்
எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தன் அடியார்கள்
மேலனவாய் , உடம்பிற்
பொருந்தும் நோய்களை முற்ற ஒழித்துநின்று , அலைகளால் வானத்தைப் பொருந்து கின்ற , நீர் நிறைந்த கடல் சூழ்ந்த , ` மாதோட்டம் `
என்னும் நல்ல நகரத்தில் ,
பாலும் விரும்பத்தக்க
மொழியை யுடையவளாகிய ஒருத்தி யோடு , பாலாவி யாற்றின்
கரைமேல் , பன்றியின் கொம்பை
அணிந் தவனாய்க் காணப்படுகின்றான் .
குறிப்புரை :
உடம்பினைக்
குறிக்க வந்த , ` ஊன் ` என்பது , அத்துப் பெற்றது . ` அலைகளால் ` என்பதும் , ` நீர் ` என்பதும் ஆற்றலால் வந்தன . ` வானத்து `
என்றதனை , ` வால் நத்து ` எனப்பிரித்து , ` வெள்ளிய சங்குகள் பொருந்திய ` என்று உரைத்தலும் ஆம் .
பண் :நட்டபாடை
பாடல் எண் : 8
அட்டன்னழ
காகவ்வரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண்
டாலும்பொழில்
மாதோட்டநன்
னகரில்
பட்டவ்வரி
நுதலாளொடு
பாலாவியின்
கரைமேல்
சிட்டன்நமை
யாள்வான்திருக்
கேதீச்சரத் தானே
பொழிப்புரை :
அட்ட மூர்த்தமாய்
நிற்பவனாகிய . திருக்கேதீச் சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தனது அரையில் பாம்பினை அழகாகக் கட்டிக்கொண்டு ,
வண்டுகள் தேனை உண்டு ஆர
வாரிக்கின்ற சோலைகளையுடைய ` மாதோட்டம் `
என்னும் நல்ல நகரத் தில் ,
பட்டத்தை யணிந்த அழகிய நெற்றியை
உடைய ஒருத்தியோடு , பாலாவி யாற்றின்
கரைமேல் , மேலானவனாயும் ,
நம்மை ஆளுபவனா யும்
காணப்படுகின்றான் .
குறிப்புரை :
` அரைதன்மேல் `
என்றதில் தன் , சாரியை .
பண் :நட்டபாடை
பாடல் எண் : 9
மூவரென இருவரென
முக்கண்ணுடை
மூர்த்தி
மாவின்கனி
தூங்கும்பொழில்
மாதோட்டநன்
னகரில்
பாவம்வினை
யறுப்பார்பயில்
பாலாவியின்
கரைமேல்
தேவன்எனை
ஆள்வான்திருக்
கேதீச்சரத் தானே
பொழிப்புரை :
மூன்று
கண்களையுடைய மூர்த்தியாகிய , திருக்கேதீச்சரத்தில்
எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , மாமரங்களின்
கனிகள் தாழத் தூங்குகின்ற சோலைகளையுடைய , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் பாவத்தையும் , இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் பலகாலும்
வந்து மூழ்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல் , மூவராகியும் , இருவராகியும் , முதற்கடவுளாகியும் நின்று , என்னை ஆள்பவனாய்க் காணப்படுகின்றான் .
குறிப்புரை :
` தாழ ` என்பது , இசையெச்சம் . தாழத் தூங்குதல் , பெரிதாய் , நிரம்ப இருத்தலின் என்க . பாவத்தை அறுக்க
விரும்புவோர் உலகரும் , இருவினைகளையும்
அறுக்க விரும்புவோர் அருளாளரு மாவர் . ` தேவன் ` என்றதன் பின்னும்
, ` என ` என்பது விரிக்க . ` எனை ஆள்வான் ` என்றது , ` உயிர்களை ஆட்கொள்பவன் ` என்னும் திரு வுள்ளத்தது . எனவே , ` மூவரென ` என்றது முதலிய மூன்றும் , இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் முறையை
அருளியவாறாம் . ` மூவர் ` என்றது . அதிகார நிலை , ` அயன் , மால் , உருத்திரன் `
என மூன் றென்பாரது
கருத்துப்பற்றியும் , ` இருவர் ` என்றது , அஃது , ` அயன் , மால் ` என இரண்டே
என்பாரது கருத்துப்பற்றியுமாம் . ` தேவன் ` என்றது . அதிகார நிலைக்கு மேற்பட்ட போக
நிலையையும் , உண்மை நிலையையும்
குறித்தவாறாயிற்று . இங்ஙனம் , அவரவர்
கருத்துப்பற்றி இறைவன் பல்வேறு நிலையினனாய் நின்று ஆட்கொள்ளுதலை . ` நானாவித உருவாய் நமைஆள்வான் ` ( தி .1 ப .9 பா .5.) என்று ஞானசம்பந்தரும் அருளிச்செய்தார் .
அவ்விடத்தும் , ` நமை ` என்றது உயிர்கள் பலவற்றையும் குறித்து நிற்றல்
அறிக .
பண் :நட்டபாடை
பாடல் எண் : 10
கரையார்கடல்
சூழ்ந்தகழி
மாதோட்டநன்
னகருள்
சிறையார்பொழில்
வண்டியாழ்செயுங்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ்
ஊரன்னடித்
தொண்டன்னுரை
செய்த
குறையாத்தமிழ்
பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே
பொழிப்புரை :
கறுப்பு நிறம்
பொருந்திய கடல் சூழ்ந்த , கழியை யுடைய . `
மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தின்கண் உள்ள , சிறகுகள் பொருந்திய வண்டுகள் யாழிசைபோலும்
இசையை உண்டாக்குகின்ற சோலைகளையுடைய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற
பெருமானை , அவனது அடிக்குத்
தொண்டனாகி , வேதத்தைச் சொல்லுகின்ற , புகழையுடைய நம்பியாரூரன் பாடிய , குறைதல் இல்லாத இத் தமிழ்ப் பாடல்கள்
பத்தினையும் பாட , கொடியனவாகிய
வினைகள் வந்து பொருந்தமாட்டா .
குறிப்புரை :
`பொழில்` என்றதனை, `செயும்` என்றதன் பின் கூட்டியுரைக்க. `மறை` என்றது, வேதத்தையும், திருப்பதிகத்தையும் எனவும், `ஆர்க்கும்` என்றது, ஓதுதலையும், அருளிச்செய்தலையும் எனவும் இவ்விரு பொருள் கொள்க. குறையாமை, புகழினுடையது. அது, மிகுவதனைக் குறிப்பதாம்.