Followers

Friday, July 31, 2020

ரவி அறியாததையும் கவி அறிவான் என்றொரு மலையாளப் பழமொழியைக் கேள்விப்பட்டதுண்டு. அப்படியொரு பெண்ணைப்பற்றிய கவிஞரின் பாடல் இது:

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும் கல்லிலே ஈரமுண்டு கண்களா அறியும்? என்மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?........................

கவியரசர் கண்ணதாசன் பெண்களின் விரகதாபத்தினை குறித்து எழுதும்போது காட்டிய விவேகம்!!!!

கவியரசர் கண்ணதாசன் மறைந்து சிலநாட்களுக்குப் பின், ஒரு கச்சேரிக்கான விமர்சனத்தில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் கலை விமர்சகர் சுப்புடு. "கண்ணதாசனை தமிழில் புதிய சாகித்யங்கள் நிறைய எழுதுமாறு நான் கேட்டுக் கொண்டிருந்தேன். செய்து தருவதாக சொல்லியிருந்தார். அதற்குள் மறைந்து விட்டாரே' என்று ஆதங்கப்பட்டிருந்தார் அவர்.

தமிழ் இசைமரபுக்கு மிகவும் புதிதான அம்சங்களை திரைப்பாடலிலேயே செய்தவர் கண்ணதாசன் என்பதால் தான் அப்படிக்கேட்டுக் கொண்டதாக சொன்ன சுப்புடு, "விரக தாபம் என்கிற விஷயம் இசைப்பாடல்களில் எழுதப்பட்டு வந்த விதத்தையும் கண்ணதாசன் கையாண்ட புதுமையையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

"காலம் காலமாகவே தமிழில் விரகதாபம் என்றால் பால் கசக்கும் பழம் புளிக்கும். இதையே வைத்துக் கொண்டு மன்னன் எப்படி மாற்றுகிறார் பாருங்கள்.

"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது!
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது".
மேற்கண்ட வரிகளை இதயம் பேசுகிறது இதழில் சுப்புடு எழுதியதாக நினைவு. வரிகள் நினைவிருக்கின்றன. வருடமோ இதழோ நினைவிலில்லை . அப்போது நான் பள்ளி மாணவன்.

"கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்-பாதிக்
கனவுவந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டுநிலா வான்வெளியில் காவியம் பாடும்-கொண்ட
பள்ளியறைப் பெண்மனது போர்க்களமாகும்"

என்று நயமும் நளினமுமாய் நகரும் அந்தப் பாடல். கண்ணதாசன் பெண்களின் விரகம் குறித்து எழுதும்போது சில அற்புதமான நியதிகளைக் கையாள்கிறார். வேட்கை மீதூற பெண் பாடுகிற போதுகூட அவள் காமுகியாக சித்தரிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் காட்டும் கவனம் நுட்பமானது "யார் நீ" என்றொரு படம். தான் கைப்பிடித்தவள் பெண்ணா பேயா என்று தெரியாத குழப்பத்தில் நாயகன் விலகியே இருக்கிறான். அவனை மெல்ல ஆசுவாசப்படுத்தி அணைத்துக் கொள்ள முயல்கிறாள் நாயகி

"பொன்மேனி தழுவாமல்
பெண்ணின்பம் அறியாமல்
போக வேண்டுமா
கண்ணோடு கண்சேர
உன்னோடு நான்சேர
தூது வேண்டுமா"
என்பது பல்லவி.

இதில் நாயகி மட்டுமே பாடுகிறாள்.ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையில் நாயகன் தடுமாறுகிறான்.

"இரவென்பதே நம்வாழ்விலே இல்லாமல் போகுமோ
உறவென்பது உன்நெஞ்சிலே இன்றேனும் தோன்றுமோ"

சராசரியான பாடலாசிரியர்களாக இருந்திருந்தால் அடுத்த வரியில் போதையை ஏற்றியிருப்பார்கள். ஆனால், பெண்மையின்மீது கவிஞருக்கிருக்கும் மரியாதை கண் மலர்த்துகிறது.
"நீசொல்வதை நான்சொல்வதா இது நீதியாகுமா?
தாளாத பெண்மை தீண்டும்போது மௌனமாகுமா?
என்று பாடவைத்து விடுகிறார்.

விரகம் வளர்க்கும் சூழல் என்றாலும் அடுத்த சரணத்தில் காதலின் தளும்பலையே கவிஞர் பாடலாக்குகிறார்,

"மழைமேகமே என் தீபமே என்காதல்தெய்வமே
மறுவாழ்விலும் உன்னோடுநான் ஒன்றாக வேண்டுமே
நீயென்பதும் நானென்பதும் ஒருராகம் அல்லவா..
நாமொன்று சேர்ந்து பாடும்போது வார்த்தை வேண்டுமா"
என்று காமக் கடலில் இறங்கிய பாட்டு காதல் கரையில் சேர்கிறது.
இந்த நாசூக்கு பாரதியிடம் உண்டு. குயில்பாட்டில் குயில் காளையைக் காதலிக்கும்.

"காமனே மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே
பூமியிலே மாடுபோல் பொற்புடைய சாதியுண்டோ?
காளையர்தம் முள்ளே கனம் மிகுந்தீர்,ஆரியரே!
நீள முகமும்,நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்
பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்
மிஞ்சு புறச்சுமையும் வீரத் திருவாலும்...'
என்றெல்லாம் நீளப் புகழ்ந்துவிட்டு,

"காளை யெருதரே,காட்டிலுயர் வீரரே
தாளைச் சரணடைந்தேன் தையலெனைக் காத்தருள்வீர்
காதலுற்று வாடுகிறேன்!காதலுற்ற செய்தியினை
மாதருரைத்தல் வழக்கமில்லை யென்றறிவேன்.
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல்கொண்டால்
தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?"

என்று அதற்கான நியாயத்தையும் கற்பிக்கும். காதலை வெளிப்படுத்தும்போதுகூட அதில் கவனமாயிருக்கும் கலையை தன் நாயகியருக்கு கவிஞரும் கற்றுக் கொடுக்கிறார். (இடையில் ஒரு செய்தி .கவிஞருக்கு பாரதியின் குயில்பாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. பாரதி குயில்பாட்டை எழுதும்போது என்ன மனநிலையில் இருந்திருப்பான் என்றொரு கவிதையில் சொல்கிறார்.

"ஓராயிரங் குயில்கள்
உட்காரும் சோலையிலே
ஓர் குயிலைக் கண்டானடி-பாரதி
உடன்குயில் ஆனானடி"
என்பது கவிஞரின் கவிதை)

நாயகியும்,நாயகனும் தங்களுக்குள் ஏற்படும் பிணக்கை பிள்ளையிடம் பாட்டுப்பாடி தீர்த்துக் கொள்கிறார்கள். காத்திருந்த கண்கள் படத்தில்

"வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா-அவள்
வடித்துவைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
என்ற பாடல்.அதில் நாயகன் கேட்பான்,

தினம்தினம் ஏன் கோபம்கொண்டாள் கூறடா கண்ணா-அவள்
தேவையென்ன ஆசையென்ன கேளடா கண்ணா!
அங்கே இருப்பது குழந்தையும் கணவனும்தான்.ஆனால் நாயகி என்ன சொல்கிறாள்?

நினைப்பதெல்லாம் வெளியில்சொல்ல முடியுமா கண்ணா-அது
நீபிறந்த பின்புகூட இயலுமா கண்ணா!
இது, கதாபாத்திரத்தின் கனத்தைக் கூட்ட கவிஞர் சேர்க்கும் தங்கம்.

தமிழிலக்கியத்தில் காலங்காலமாகவே தலைவி - தோழி உரையாடல் மரபு உண்டு.தலைவி என்றால் தோழி முக்கியம் என்பதை
இப்போதுகூட தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். தன் காதல் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியும் தோழியும் உரையாடிக் கொள்வதாக ஒரு பாடலை,கவிஞர் பச்சை விளக்கு படத்தில் எழுதியிருப்பார்.

தூது சொல்லவொரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்றுவந்து மெல்ல சேலைதொட
சுகம் கண்டாயோ தலைவி
என்று கேட்பாள் தோழி.

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
என்பாள் தலைவி.இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு காப்பிய அந்தஸ்தே கொடுக்கலாம்.

முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
என்று தோழி சொன்னதுதான் தாமதம்.....
முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை
மௌனத்தில் அறிந்தாள் தோழி
என்று நாயகி பாடுவாள்.

தன் விரகத்தை அவள் மறந்தும் தன் தோழியிடம்கூட சொல்லவில்லையாம்.
தோழி தானாகக் கண்டுபிடித்துவிட்டால் அதற்கு தலைவி பொறுப்பில்லையல்லவா!!
கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகி தன் பிரிவாற்றாமையை தோழி தேவந்தியிடம் கூடப்பேசவில்லை. சோமகுண்டம், சூரியகுண்டம்
ஆகியவற்றில் நீராடினால் கணவன் திரும்பக்கூடும் என்று பரிகாரம் சொல்கிற தோழியிடம்,"பீடன்று" என்று மறுத்துவிடுகிறாள் கண்ணகி. அப்படி பரிகாரம் செய்தால் தான் துன்பத்தில் இருப்பது தோழிக்கும் ஊருக்கும் தெரிந்துவிடும் என்பது கண்ணகியின் எண்ணம். இந்த நினைவு நமக்கே வருகிறபோது கவிஞருக்கு வராதாஎன்ன?பாடல் தொடர்கிறது.

காவிரிக்கரையின் ஓரத்தில் இவ்விதம்
காத்திருந்தாள் அந்தத் தலைவி
காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி!!

பெண்மையில் இன்னொரு வகையும் உண்டு. வாழ்வையே குடும்பத்திற்காகக் கரைத்துவிட்டு தன் ஆசைகளை அவித்துக் கொண்டு
தவமிருக்கும் பெண்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடி ,பெரிய புராணத்தில் வருகிற திலகவதியார். திருநாவுக்கரசரின் தமக்கை.
நிச்சயிக்கப்பட்ட கணவர் போரில் மாள்கிறார். அந்த அதிர்ச்சியில் பெற்றோரும் மறைகின்றனர். இறந்து போகலாம் என்றால் சிறுவனாகிய தம்பியின் கதி? எனவே திருமணமே செய்து கொள்ளாமல் வீட்டிலேயே தவம்புரிகிறார் திலகவதியார். தம்பி வாழவேண்டும் என்ற தயையுணர்வே காரணம். அதை சேக்கிழார் சொல்கிறார்:

"தம்பியார் உளராக வேண்டுமென வைத்த தயா
உம்பர் உலகு அடையவுறும் நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்"

கவிஞர் வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டிலும் தன்னையே தன் குடும்பத்திற்காக அர்ப்பணித்த முதிர்கன்னிகள் உண்டு. அவர்கள் திலகவதியார்போல் ஆசையை அவித்தவர்களில்லை. ஆனால் அவர்கள் மனதில் ஆசையே கிடையாது என்று கருதி குடும்பத்தினர் தங்கள் ஆசைகளுக்கான வாகனமாய் அவர்கள் உழைப்பை உறிஞ்சுகின்றனர். அவர்கள் மனதில் இருப்பதை அறிந்தவர்கள்யார்? ரவி அறியாததையும் கவி அறிவான் என்றொரு மலையாளப் பழமொழியைக் கேள்விப்பட்டதுண்டு. அப்படியொரு பெண்ணைப்பற்றிய கவிஞரின் பாடல் இது:

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும்
கல்லிலே ஈரமுண்டு கண்களா அறியும்?
என்மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?

இந்த மூன்று வரிகளில், அந்தரங்க வலி,தனிமையின் அழுத்தம், நிராதரவான நிலை எல்லாம் வெளிப்படுகின்றன.
அந்தப் பெண்ணுக்குள்ளும் ஒரு நெருப்பு இருக்கிறது...

"நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான்கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யாரணைப்பாரோ இறைவனின் பொறுப்பு"

கனலும் தவிப்பையும் காத்திருப்பையும் இதைவிட அழகாய் சொல்ல முடியாது. அதேநேரம் அந்தப்பெண்ணை இந்தத் தனிமை
பலவீனப்படுத்தவில்லை.அனுபவங்களும், காயங்களும்அந்தப்பெண்ணுக்குள் ஒரு ஞானத்தை வளர்த்திருக்கிறது.மேனி அழகாய் இருந்தாலும் ஞானம் உள்ளே ஒளிர்கிறது.ஞானிகள் தடுமாறினாலும் தான் தடுமாற மாட்டேன் என்று தருக்கிச் சொல்கிறாள் அவள்.

"சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனம் எனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையின் கேணி
நானொரு ராணி பெண்களில் ஞானி"

அரசர்களில் ஞானி,ஜனகர் என்கிறார்கள். ஜனரஞ்சகமான நாயகி ஒருத்தியை அந்த உயரத்திற்கு உயர்த்திவிடுகிறார் கவிஞர்..
-----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
courtesy ; வாத்தியார் ayya tq.
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!



இந்து - முஸ்லீம் மத நல்லிணக்கம்!!!

மராட்டிய வீர சிவாஜியின் படைகளில் இருந்த 1,50,000 படை வீரர்களில் 60,000 பேர் இஸ்லாமியர்கள். சிவாஜியின் அந்தரங்க காரியதரிசி மவுலி பஷீர்கான்.

* சிவாஜியை எதிர்த்துப் போராடிய பாமினி சுல்தான்களின் படைகளில் பெரும் பான்மையினர் இந்துக்கள்.

* 1857 இல் நடந்த முதல் விடுதலைப் போரில் வீர காவியம் படைத்த ஜான்சி ராணி லட்சுமி பாயின் காலாட் படைத் தளபதி குதாபாகஸ், படைத்தளபதி கவுஸ்கான், அவரது தனிப்பாதுகாப்பு அதிகாரி மன்ஸர் ஆகியோர் இஸ்லாமியர்.

* நாகூர் தர்காவின் கோபு ரத்தைக் கட்டியது சரபோஜி மன்னன்.

* சிதம்பரம் அருகில் உள்ள கிள்ளை தர்கா நிர்வாகம் - திருமுட்டத்திலிருந்து வரும் பூவராகவர் சாமிக்குத் திரு விழா நடத்த, திருவிழா நாள் தோப்பு என்று 15 ஏக்கர் புஞ்சை நிலத்தை அளித்தது. அந்த சாமியின் வருமானத் திற்கு 40 ஏக்கருக்கும் மேற் பட்ட நிலத்தை சாசுவத தானமாக 1891 ஆம் ஆண்டு வழங்கி உள்ளனர். இப் போதும் கிள்ளைக்கு அந்த சாமி வரும்போது, இஸ்லாமியர்கள் வந்து வரவேற்பார்கள்.

* எட்டுக்குடி முருகன் கோவில் திருவிழாக்களில் மின் விளக்குகளைக் கட்டுவது முஸ்லீம்கள்.

* ஆத்தூர் வண்டிக் காளியம்மன் சிகப்பு உடை அணியும்போது காளி, பச்சை உடை அணியும்போது முத்தாளம்மன். கடவுள் புறப்படும் போது நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் தூக்கும் உரிமை முஸ்லீம் மக்களுக்கும், இன்னொரு பக்கம் தூக்கும் உரிமை கிறிஸ்தவர்களுக்கும்; மீதமுள்ள இரண்டு பக்கங்கள் இந்துக்களுக்கும் உண்டு. சாமி வரும்போது முஸ்லீம் தெருக்களில் முறைப்படி தேங்காய் உடைப்பார்கள்; ஆரத்தித் தட்டை வீட்டுத் திரையிலிருந்து கைநீட்டுவார்கள். பூசாரி வாங்கிச் சென்று, அர்ச்சனை செய்து பிரசாதத்தைத் தருவார்.

* வைணவத்தின் தலைமையிடமான ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு கைலி சாத்தப்படுகிறது. துலுக்க நாச்சியார் சன்னதியும் அங்குண்டு.

* பாண்டிச்சேரி மக்களால் பாய் முருகர் என்று அழைக் கப்படுபவர் 1940 இல் பிறந்த முகம்மது கவுஸ் என்ற இஸ்லாமியர். துளசி முத்துமாரியம்மன் ஆலயத்தையும், கௌசிக பாலசுப்பிரமணியர் கோவிலையும் கட்டியது அந்த இஸ்லாமியரே! அந்த முருகன் ஆலயத்தில் முகமது கவுசின் திருவுருவப்படம் உள்ளது.

எடுத்துக்காட்டுகளுக்குச் சிலவே என்று - இவ்வளவையும் எழுதி இருப்பவர் - இந்து அறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி எஸ்.ஜி.ரமேஷ்பாபு! நூலின் பெயர் ‘யார் கைகளில் இந்து ஆலயங்கள்?' என்ப தாகும். (2019, வெளியீடு பாரதி புத்தகாலயம்).

இப்படி இந்துக்களும் - முஸ்லீம்களும் சகோதரர் களாகப் பழகியும், பாவித்தும் வந்த தமிழ்நாட்டில் - இந்து - முஸ்லீம் கலவரங்களை உருவாக்கும் வெறியர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிட வேண்டாமா?

- மயிலாடன் முகநூல் பதிவு.
-----------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
courtesy ; வாத்தியார் ayya tq
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
=========================

Monday, July 27, 2020

மரணம் எப்போது, எப்படி வரும்..? – D-042

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
ஜோதிடத்தில் மாரகாதிபதி, பாதகாதிபதி என்ற இரு அமைப்புகள் இருக்கின்றன. மாரகம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் என்று பொருள் கொள்ளலாம். பாதகம் என்பதன் அர்த்தம் எல்லோரும் அறிந்ததுதான்.
கொலை, கொள்ளை, போன்றவைகளை பஞ்ச மாபாதகங்கள் என்ற வரிசையில் வைப்பதிலிருந்தே பாதகம் என்பது எதிர்பாராத, மிகப் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கும் ஒரு தீங்கான செயல் என்பதை அறிய முடியும்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில், மரணத்தையோ அல்லது மரணத்திற்கு நிகரான துன்பத்தையோ தருபவர்கள் மாரகாதிபதிகள் என்றும், மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவங்களை நிகழ்த்திக் காட்டுபவர் பாதகாதிபதி என்றும் ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறார்கள்.
பனிரெண்டு ராசி வீடுகளும் ஜோதிடத்தில் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று வெவ்வேறு தன்மை கொண்ட வீடுகளாக வகைப்படுத்திக் காட்டப்படுகின்றன. இதில் சர லக்னங்கள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களுக்கும் இரண்டு மற்றும் ஏழாம் பாவகங்களுக்கு அதிபதிகளாக வரும் கிரகங்கள் மாரகாதிபதிகளாவார்கள்.
ஸ்திர லக்னங்கள் எனப்படும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கு லக்னங்களுக்கும் மூன்று மற்றும் எட்டாம் வீடுகளின் அதிபதிகள் மாரகாதிபதிகளாகவும், மீதமுள்ள உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு. மீனம் ஆகிய நான்கிற்கும் ஏழு மற்றும் பதினொன்றாம் வீடுகளின் அதிபதிகளும் மாரகாதிபதிகளாக வருவார்கள்.
பாதகாதிபதி எனப்படுவது சற்று வேறுபட்டது. மாரக வீடுகளைப் போல் ஒரு ஜாதகத்தில் பாதகவீடு இரண்டு எண்ணிக்கைகளைக் கொண்டதல்ல. பாதகாதிபதி என்பவர் ஒருவர் மட்டும்தான். அவர் செய்யப் போகும் ஒரு செயல் அந்த ஜாதகருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியான ஒன்று என்பதால் பாதகம் என்பது தனித்துவமாகி பாதகாதிபதி என்பவர் தனித்த ஒருவர் மட்டுமேயாகிறார்.
மேலே சொன்ன மூன்று வெவ்வேறு இயக்கங்களைக் கொண்ட சர, ஸ்திர, உபய வீடுகளில், சர லக்னங்களுக்கு பதினொன்றாம் வீடும், ஸ்திரத்திற்கு ஒன்பதும், உபயத்திற்கு ஏழாமிடமும் பாதகஸ்தானமாகி, இந்த வீடுகளின் அதிபதிகள் மிகப் பெரிய ஒரு தீங்கினைச் செய்யும் பாதகாதிபதியாக வருகிறார்கள்.
அதேநேரத்தில் ஒரு மனிதனின் ஆயுளையும், அவனது மரணம் எப்படி நிகழும் என்பதையும் ஆயுள் ஸ்தானம் எனப்படும் எட்டாம் பாவகம் குறிப்பிடுகிறது. ஆயுளைக் குறிப்பது எட்டாமிடம் என்றாலும் உயிர் வாழ்வது என்பது லக்னம் லக்னாதிபதி சம்பந்தப்பட்டது என்பதால், ஒரு மனிதனை உயிர் வாழும் நிலையை லக்னம், லக்னாதிபதி, எட்டாமிடம், எட்டின் அதிபதி மற்றும் ஆயுள் காரகனாகிய சனியின் நிலைகொண்டு அறிந்து கொள்ள முடியும்.
ஒருவரின் மரணம் என்பது பாதகாதிபதி, மாரகாதிபதி, அஷ்டமாதிபதி ஆகிய மூவரின் தசா, புக்திகளிலோ அல்லது இவர்கள் மூவரோடு தொடர்பு கொண்ட கிரகங்களின் தசா, புக்திகளிலோ நடக்கும். சில நிலைகளில், தன்னைத் தொடர்பு கொண்ட கிரகங்களின் பலனை ராகு, கேதுக்கள் எடுத்துச் செய்வார்கள் என்ற விதிப்படி ராகு-கேதுக்களின் தசா, புக்திகளில் மரணம் நடக்கும்.  
ஜோதிடத்தில் அற்பாயுள், மத்திம ஆயுள், தீர்க்காயுள் என மூன்று விதமான உயிர் வாழும் நிலைகள் சொல்லப்படுகின்றன. இதில் அற்பாயுள் எனப்படுவது ஒருவர் முப்பது வயதுகளில் இறப்பதையும், மத்திம ஆயுள் என்பது நடுத்தரமான அறுபதுகளில் இறப்பதையும், தீர்க்காயுள் என்பது எண்பது வயதிற்கு மேல் உயிர் வாழ்வதையும் குறிக்கிறது.
ஒருவரின் வாழ்வுநிலை ஆண்டுகள் எவ்விதம் இருக்கும் என்பதை லக்னத்தையும், எட்டாம் வீட்டையும், இதன் அதிபதிகளையும் கொண்டு, மேலே சொல்லப்பட்ட மாரக, பாதக, அஷ்டமாதிபதிகளின் தசா, புக்திகள் அல்லது இவர்கள் சம்பந்தப்பட்ட தசா, புக்திகள் எப்போது வருகிறது என்பதையும் கணித்து உறுதிபடச் சொல்ல முடியும்.
லக்னம், லக்னாதிபதி, எட்டு, எட்டாமிட அதிபதி ஆகியோர் சுபத்துவமாகி, பாபக் கிரகங்களின் தொடர்பில்லாமல் இருக்கும் நிலைகளில், ஆயுள் காரகன் சனியின் சுப, சூட்சும வலுக்களைப் பொருத்து ஒருவரின்  அற்ப, மத்திம, தீர்க்க ஆயுள் அமையும்.
முக்கிய ஒரு நிலையாக மாரகாதிபதி, பாதகாதிபதி என்றவுடன் மரணத்தையும், மிகப் பெரிய பாதகத்தையும் மட்டுமே செய்வார்கள் என்று கருதக்கூடாது. இங்கே பெரும்பாலானவர்களுக்கு பாதகாதிபதி பற்றிய தெளிவின்மை இருக்கிறது. குறிப்பாக பாதகாதிபதி என்பவர் தீங்கினை மட்டுமே செய்வார் என்ற கருத்தையே அதிகமானோர் கொண்டுள்ளனர்.
ஒரு கிரகம் தனக்குரிய கடமையை தனது தசா, புக்திகளில் ஜாதகரின் வயதுக்கேற்ற வகையில் செய்யும் என்பதே உண்மை. உதாரணமாக மேஷ லக்னக்காரர்களுக்கு இரண்டு மற்றும் ஏழாமிடத்திற்கு அதிபதியான சுக்கிரன், மாரகாதிபதி என்றாலும் அவரே ஜாதகருக்கு திருமணத்தை நடத்தி, குடும்பத்தை அமைத்துக் கொடுப்பவர் என்பதால் சுக்கிரன்தான் அவருக்கு இளம் வயதில் திருமணத்தையும் செய்து வைக்க கடமை கடமைப்பட்டவர். திருமண வயதில் இரண்டு ஏழுக்குரிய கிரகம் திருமணத்தை  நடத்தி வைத்தே தீரும்.
அதேநேரத்தில் மாரக, பாதகாதிபதிகள் மாரக மற்றும் பாதகத்தன்மையை அதிகம் கொண்டிருந்தால், அதாவது மரணத்தைச் செய்யக்கூடிய இவர்கள், அதிகமான சுபத்தன்மையோடு இருந்தால் அந்த மனிதரின் ஆயுள் முடியும் காலம் வரும்போது இவர்களது தசா,புக்திகளில் நிச்சயம் மாரகத்தைச் செய்வார்கள். அதாவது நல்லதையும், கெட்டதையும் அந்த மனிதனின் பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப அந்தந்த வயதுகளில் ஒரே கிரகமே நடத்தும்.
சிலநேரங்களில் ஒரே கிரகமே மாரகாதிபதி மற்றும் பாதகாதிபதியாகவும் வருவதுண்டு. இதுபோன்ற நிலையில் அந்தக் கிரகம் அதிகமான சுபத்துவம் பெற்றிருந்தால், அந்தக் கிரகமே மிகப்பெரிய நன்மைகளையும் செய்து முடிவில் மாரக, பாதகங்களையும் செய்யும்.
உதாரணத்திற்கு மிதுன லக்னத்திற்கு ஏழாமதிபதியான குரு, பாதகாதிபதியாகவும் மாரகாதிபதியாகவும் அமைவார். இங்கே ஒரு கூடுதல் நிலையாக ஒரு சுப கிரகம் கேந்திரத்திற்கு அதிபதியாகக் கூடது என்பதன்படி குரு கேந்திராதிபத்திய தோஷம் பெற்று ஆதிபத்திய நன்மைகளையும் செய்ய மாட்டார்.
இதுபோன்ற சூழலில் குரு பாபியர் தொடர்பு பெறாமல், அதிக சுபத்துவம் மட்டும்  அடைந்திருக்கும் நிலையில் தன்னுடைய மாரகம், பாதகம், கேந்திராதிபத்திய தோஷம் ஆகிய மூன்று விஷயங்களையும் அவரது தசையில் ஒருங்கே செய்வார்.
இதனை சுலபமாக விளக்க நம் அனைவருக்கும் தெரிந்த, சமீபத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டோமேயானால், அவருக்கு மிதுன லக்னமாகி, பாதக, மாரக, கேந்திராதிபத்திய தோஷ நிலைகளைப் பெற்ற குரு, ஏழாமிடத்தில், உச்சத்தை அடுத்த மூலத் திரிகோண வலுவுடன் பூரண சுபத்துவம் பெற்றிருந்தார்.
இங்கே குருவுக்கு வக்ரம், கிரகணம், அஸ்தமனம் போன்ற எவ்வித குறை நிலையும் இல்லை. அதேபோல செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற எவ்வித பாபர்களின் தொடர்புகளும் அவரது ஜாதகத்தில் குருவுக்கு இல்லை.
இப்படிப்பட்ட பரிபூரண ஒளித்திறனுடன் கூடிய குருவின் தொடர்பை அவரது லக்னமும், ராசியும் பெற்றதால்தான் அவர் கோடியில் ஒருவராகி, தமிழக முதல்வர் எனும் உயர்நிலையை அடைந்தார். அதிலும் குருவின் தசை ஆரம்பித்ததும் அவர் அடைந்த வெற்றிகள் அவரது எதிரிகளின் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தன. அகில உலகமும் ஜெயலிதாவின் வெற்றிகளை பிரமிப்புடன் பார்த்தது.
ஆனால் வெற்றிகளைக் கொடுத்த அதே குருதான், தமிழக முதல்வராக அவர் இருந்த நிலையிலேயே, அவரது ராசிநாதனான சூரியன் கோட்சார அமைப்பில் கிரகண அமைப்பில் இருந்த ஒரு இருபது நாட்கள், அவருக்கு சிறைவாசம் என்ற பாதகத்தையும் செய்தார்.
மிகப்பெரிய அந்தஸ்துள்ள ஒரு மாநில முதல்வர், தனது பதவியில் இருக்கும் போதே சிறை செல்வது என்பது அவருக்கு எப்படிப்பட்ட மன உளைச்சலைக் கொடுத்திருக்கும் என்பதிலிருந்தே இது எப்பேர்பட்ட பாதகம் என்பது புரிய வரும். அதிலும் இது போன்ற உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் உயிரை விட மானத்தையே பெரிதாக நினைப்பார்கள்.
ஜெயலலிதா சிறை சென்ற அன்று அவர் இருந்த மனநிலையில் நீங்கள் இருந்து அவரது உணர்வுககளை உங்களால் உணர முடிந்தால் கிரகங்களின் விளையாட்டுக்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். முதலில் பாதகாதிபதியாக செயல்பட்டு சிறைவாசம் எனும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கும் தீங்கான செயலை செய்து முடித்த இதே குருதான், அடுத்து சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியையும் கொடுத்து, பின் தனது இன்னொரு நிலையான மாரகாதிபதியாக செயல்பட்டு, அஷ்டமாதிபதி புக்தியில் அவருக்கு நோயால் மரணத்தையும் கொடுத்தார்.
ஏற்கவே ஆதிபத்திய ரீதியில் இதே குரு கேந்திராதிபதியாக செயல்பட்டு அவருக்கு குடும்பம், என்ற ஒரு அமைப்பைக் கொடுக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.  குருவின் இந்த அமைப்பால்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயா வெற்றி பெற்றால், உடனே மருத்துவமனையில் இருப்பார், 2017ல் ஜெயலலிதா உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று நான் கூறியிருந்தேன்.
இதனைக் கணிக்க பெரிதும் உதவியது அவரது ஜாதகத்தில் மாரக, அஷ்டமாதிபதிகளான குருவும், சனியும் தங்களுக்குள் ஆறுக்கு எட்டாக இருக்கும்  சஷ்டாஷ்டக நிலையில் இருந்ததும், சனி தனது வீடான எட்டாமிடத்தை, தானே பார்த்துக் கெடுத்து அவருக்கு அற்பாயுள் அமைப்பை உண்டாக்கியதும்தான்.
தீர்க்காயுளைத் தர வேண்டிய ஆயுள்காரகனான சனி, ஜெயலலிதாவின் ஜாதகத்தில் எவ்வித சூட்சும வலுவினையும் பெற்றிருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர் இங்கே அடைந்த ஒரே சுபத்துவம் பவுர்ணமிச் சந்திரனின் வீட்டில் இருக்கிறார் என்பதுதான். ஆனால் அது மட்டும் எண்பது வயதினைத்  தாண்டும் தீர்க்காயுள் எனும் அமைப்பிற்குப் போதாது.
மேலும் சனி எட்டில் இருப்பதுதான் ஆயுள் பலம் என்று சொல்லப்படுகிறதே தவிர, எட்டாமிடத்தை பார்ப்பதால் இல்லை. எந்த ஒரு நிலையிலும் சனியின் பார்வை பார்க்கப்படும் வீடுகளுக்கு கெடுதலைத்தான் தரும். சனி சுபத்துவ மற்றும் சூட்சும வலுப் பெற்றிருந்தால் மட்டுமே சனியின் பார்வை ஓரளவு நன்மைகளைத் தரும்.
அப்படி இல்லாத நிலையில் தன் வீட்டைத் தானே சனி பார்த்தாலும் அந்த வீடு வலுவிழக்கத்தான் செய்யும். இதற்காகத்தான் லக்னாதிபதியாகவே சனி இருப்பினும், அவர் சுப, சூட்சும வலுவின்றி இருந்தால் லக்னத்தைப் பார்க்கவோ, லக்னத்தில் இருக்கவோ கூடாது என்று சொல்கிறேன்.
ஜெயலலிதாவின் ஜாதகத்தில் சனி இரண்டில், அவரது விரோதியான சந்திரனின் வீட்டில் பகைநிலை பெற்று பாபத்துவமாக அமர்ந்து, தனது எட்டாம் வீட்டை தானே பார்த்தது மிகவும் தெளிவான ஒரு அற்பாயுள் அமைப்பு. சனிக்கு இங்கே குருவின் பார்வையோ அல்லது வேறு விதங்களில் சுபத்துவ, சூட்சுமவலுவோ கிடைத்திருந்தால் ஜெயலலிதா இந்த வயதில் இறந்திருக்க வாய்ப்பு இல்லை.
அதேபோல சஷ்டாஷ்டக தசாபுத்திகள் வயதுக்கேற்ற வகையில் மிகக் கடுமையான பலன்களைச் செய்யும் என்பதும் ஜோதிடத்தின் மிக நுண்ணிய விதி. இங்கே குரு, சனியின் சஷ்டாஷ்டக அமைப்பால் மாரகாதிபதி தசையில், அஷ்டமாதிபதி புக்தியில், சனியின் பாபத்துவ நிலையால் அவருக்கு நோயால் மரணம் நிகழ்ந்தது.
=============================================

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...